Loading

சமுத்திரா – 36:

பிறப்பு – இறப்பு; இருள் – ஒளி; நட்பு – பகை; நல்லவை – தீயவை என நேர்மறையாக இருக்கும் ஒவ்வொன்றிற்கும் எதிர்மறை என்ற ஒன்றும் இருக்கின்றது.

அவ்வளவு ஏன்? தேவர்களும் அசுரர்களும் ஒன்றாக சேர்ந்து திருபாற்கடலை கடையும் பொழுது வெளிப்பட்ட பொருட்களில் மரணமில்லா வாழ்வை வழங்கும் அமுதமும் கிடைத்தது. வாழ்வை நொடியில் முடிக்கும் வல்லமையுடைய கொடிய விஷமான ஆலகால விஷமும் கிடைத்தது. அதனை போல் தான் அவர்களின் குறிப்பில் நல்லவையாக இருப்பது தீயவையாகும் என வந்திருந்தது.

“நல்லவங்கன்னா யாரை சொல்லுது? நம்மள்ள ஒருத்தவங்களை தான் சொல்லுதா?” என்ற சிந்தனை தான் அனைவரையும் ஆட்க் கொண்டிருந்தது.

“அது நாம இல்லை. கடற்கன்னி!” என ஷிவன்யா தான் சரியாக கணித்து கூறினாள்.

அனைவருமே ஒருநொடி அதிர்ந்து, கடற்கன்னி அமர்ந்திருந்த நீச்சல் குளத்தை தான் கவனித்தனர். நீச்சல் குளத்தில் தன் பிம்பம் விழுமாறு அமர்ந்திருந்தாள் கடற்கன்னி. பின்னிருந்து அவளை பார்த்த அனைவருக்கும் அவளின் முதுகு மட்டுமே தெரிந்தது. அதனை ஒருவித பயத்துடன் தான் அவளை கவனித்தப்படி இருந்தனர்.

“நீ சும்மா அடிச்சு விடாத.. இவளா இருக்காது..” என ஷிவன்யாவை பார்த்து சொன்ன ப்ரதீப், “சக்தி நீ தான் அடுத்து போடணும். மூணு போடு டா கேம் முடிஞ்சிடும்.” என்றான் சக்தியிடம்.

அந்நேரம் ஏதோ ஒரு உறுமல் சத்தம் அங்கே பலமாக கேட்டது. அந்த சத்தம் நிச்சயம் நீச்சல் குளத்தில் இருந்து தான் வருகிறது என அவர்களுக்கு தெரிந்தது. உடனே ப்ரதீப் பயத்தில் சக்தியின் பக்கம் சென்று நின்றுக் கொண்டான்.

“அந்த வருணன் இவளுக்கு இன்னொரு வேலை இருக்குனு சொல்லிட்டு போனானே.. அது இது தான் போல.” என்றான் சக்தி.

“எது? நம்ம கதையை முடிக்குறதா..” என பயத்துடனே கேட்டு வைத்தான் ப்ரதீப்.

மழையின் பொழுது வழுக்கிக் கொண்டு சென்ற

சக்தியையும்; புதைக்குழியாக இருந்த கப்பலின் ஒரு இடத்தினில் மாட்டிக்கொண்ட ரங்காவையும் கடற்கன்னி தான் காப்பற்றி பாதுகாத்தாள். அதே போல், அந்த கடற்கொள்ளைக்காரி இருக்கும் இடத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்லவளாக தான் உதவி புரிந்தாள்.

இவையனைத்தையும் நேர்மையாக செய்த கடற்கன்னி, இப்பொழுது அவர்களுக்கு எதிராகவே திரும்பும் நிலைக்கு தள்ளப்பட்டாள்.

*****

கப்பலின் மற்றொரு பக்கம்,

டிராகனின் தீக்கு இரையாகிய ஆக்டோபஸ் பாதி கருகுகிய நிலையில் அவர்களின் கப்பலை உடும்பு பிடியாக பிடித்தபடி கடலில் மூழ்க தொடங்கியது. ஆக்டோபஸின் இழுவையில் சமநிலையை இழந்த கப்பல் கடலில் ஒரே பக்கமாக மெல்ல சாய துவங்கியது!

அதன் விளைவால், நின்றுக் கொண்டிருந்த அனைவரின் கால்களுமே சறுக்கியது. பக்கத்தில் இருந்த பாய்மரங்களை கெட்டியாக பிடித்தபடி நின்றுக் கொண்டனர். கொஞ்சம் நிலை தடுமாறினாலும் ஆழியாய் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கும் கடலில் விழுவது நிச்சயம் என்ற நிலை தான் அங்கே நிலவியது.

அந்நேரம், கப்பலின் உள்ளிருந்து மீண்டும் வேகவேகமாக படபடவென சிறகுகளை அடித்துக் கொண்டே பறந்து வர துவங்கிய வௌவால்கள் கூட்டம்.

“இதெல்லாம் இப்ப எதுக்கு ரிஎன்ட்ரி கொடுக்குது..” என ப்ரதீப் நிற்க முடியாமல் நின்றான்.

“என்ன வேணா வரட்டும். சக்தி நீ டைசை சீக்கிரமா போடு..” என்றான் ரங்கா.

“சரி டா..” என்ற சக்தி அவனிடம் உள்ள பகடையை வாங்கும் முன், அந்த வௌவால்கள் ரங்காவின் கையில் இருந்த பகடையை தட்டிவிட்டு பறந்து செல்ல, பகடையோ ஒருபக்கமாக சாய துவங்கியிருந்த கப்பலில் உருண்டு ஓட தொடங்கியது. அந்த வௌவாலை கெட்ட வார்த்தையில் திட்டிய அமரனும், ரங்காவும் பகடையின் பின்னே ஓடினர்.

*****

அவர்களின் கப்பலில் அடர்ந்து படர்ந்திருந்த கொடிகளும் அதனின் பங்கிற்கு கப்பலை மெல்ல கடலுக்குள் இழுக்க தொடங்கின.

இவ்வளவு நேரமும் அந்த கொடிகள் சாதாரணமாக அவர்களின் கப்பலில் படரவில்லை. ஒரு ஒரு கொடியும் அவர்கள் கப்பலின் இண்டு இடுக்குகள்; மூலை முடுக்குகள் என அனைத்தையும் அதனின் ஆளுமையில் கொண்டு வந்திருந்தன.

இறுதியில் அவை அனைத்தும் கப்பலையே கடலில் சாய்க்க பார்த்ததை அப்பொழுது தான் அவர்கள் புரிந்துக் கொண்டனர். புரிந்து என்ன பிரயோஜனம்! ஏற்கனவே பாதி கப்பல் கடலில் மூழ்கிவிட்டதே!

கண்ணை பறிக்கும் கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள் அணிந்து எழில்கொஞ்சும் அழகில் மிளிர்ந்த கடற்கன்னி இப்பொழுது பார்ப்பதற்கே அகோரமாகவும் விகாரமாகவும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் துவங்கினாள்.

“நீ..நீங்க எல்..எல்லாரும் இங்க இருந்து விரைவாக போ..போய்டுங்க.. என்னால என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை.. ” என்று சொல்லிக்கொண்டே கடற்கன்னி அவர்களிடம் கைகளை ஊன்றியபடி வந்தாள்.

அவளின் கோரமான உருவத்தை பார்த்து அனைவருமே பயந்து பின்னே நகர்ந்தனர். “என்னடா இவ பேயா மாறிட்டாளா..” என அந்நிலையிலும் கேட்ட ப்ரதீப் சக்தியின் கையை பிடித்துக் கொண்டான்.

“இனி இந்த கப்பலில் யார் இருந்தாலும் அவர்களின் உயிருக்கு நான் பொறுப்பில்லை. விரைவாக இங்கிருந்து சென்று விடுங்கள்..” என சொல்லிய கடற்கன்னியும் ஏதோ ஒரு ஆற்றலை உணர்ந்தபடி உடம்பை வளைத்து முறுக்கினாள்.

“பார்க்கவே ஏதோ ஜாம்பி மாதிரியே இருக்கா..” என ப்ரதீப் வாய்விட்டு சொன்னான்.

அப்படியே கைகளை ஊன்றி தவழ்ந்து வந்தவள் ஷிவன்யாவின் காலை இருக்கரங்களாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு அவளை கொலைவெறியுடன் பார்த்தாள். ஏற்கனவே காலில் அடிப்பட்டிருக்க அதனை மேலும் அழுத்தி பிடித்தாள் கடற்கன்னி.

“என்னை வி..விடு..” என ஷிவன்யா வலியில் துடித்தாள். சக்தி, ப்ரதீப் மற்றும் அவர்களுடன் வந்த மாலுமிகள் அனைவரும் சேர்ந்து ஷிவன்யாவை அவளிடம் இருந்து விடுவிக்க முயன்றனர். ஆனாலும் கடற்கன்னியின் பலத்தின் முன் ஒன்றுமே எடுபடவில்லை.

சக்திக்கு ஒரு யோசனை வர அங்கிருந்த பாய்களை எடுத்து அந்த கடற்கன்னியின் மேல் போர்த்தியபடி வீசினான். எதிர்பாராமல் வந்த தாக்குதலில் கத்திக் கொண்டே அதனை எடுக்க கடற்கன்னி முயல ஷிவன்யாவை இவர்கள் தங்களிடம் இழுத்துக் கொண்டனர்.

இங்கு கடலிலோ, சென்றுவிட்டதாக நினைத்த சுறா அவர்களை பின்தொடர்ந்து வந்து மீண்டும் கப்பலை ஆட்டம் காண செய்தது. அதற்கு எதிர்புறம் அந்த கடற்கொள்ளைக்கார கூட்டமும் மீண்டும் அவர்களை முற்றுகையிட வேகமாக வந்துக் கொண்டிருந்தது.

கப்பலின் ஒரு மூலையில் எரிபொருள் இருந்த டேங்க் வேறு வெடித்து சிதற துவங்கின.

கப்பலின் நிலையை முழுதாக

கவனித்த சக்தி, “நீங்க போய்ட்டு வந்த மீட்பு படகு கீழ கடல்ல தான இருக்கு?” என மார்ட்டினிடம் கேட்டான்.

“ஆமா..” – மார்ட்டின்.

“நாம அதுல தப்பிக்க பார்க்கலாம்.” – சக்தி

“அதுல எதுக்கு டா..” – ப்ரதீப்.

“இந்த கேம்ல இருந்து வெளிய வந்த எல்லாமே இப்ப மொத்தமா வருது டா. அது மட்டுமில்ல கப்பல் வேற பாதிக்கு மேல மூழ்கிடுச்சு. அந்த நெருப்பால ஒரு ஒருபக்கமா வெடிக்க வேற செய்யுது. சோ, இதுக்கு மேல இந்த கப்பல்ல நம்மால நிற்க கூட முடியாது ப்ரதீப்.” என்றவன் அங்கிருந்தே அமரனையும் ரங்காவையும் கத்தி அழைத்தான்.

“அந்த டைஸ் கப்பலுக்கு கீழ விழுந்துடுச்சு டா. அமர் எடுக்க போயிருக்கான்..” என்று ரங்காவும் கத்தினான்.

‘சரி’ என தலையை அசைத்த சக்தி அங்கிருந்த கயிறை எடுத்து மார்ட்டினிடம் கொடுத்தான். அவரும் புரிந்தது போல, கயிறை கப்பலில் கட்டிவிட்டு அதன் வழியே அப்படியே கீழே அவர்களின் கப்பலோடு கட்டி வைக்கபட்டிருந்த மீட்பு படகில் இறங்கினார். அவரை தொடர்ந்து விக்டர் மற்றும் ரிச்சார்ட் இறங்கினர். அவர்களிடம் அந்த சமுத்திரா பெட்டியையும் கொடுத்து விட்டனர்.

“அடுத்து கேர்ள்ஸை அனுப்பலாம் டா..” என சக்தி ஆலோசனை சொன்னான். கீழே கப்பலில் விழுந்திருந்த டைசை எடுத்துக் கொண்ட ரங்காவும் அமரனும் கூட அவர்களிடம் வந்து சேர்ந்தனர்.

அனைத்தையும் அப்பொழுது தான் முழுதாக கவனித்த அமரன், “என்னடா எல்லாமே ஒண்ணா கிளம்பிடுச்சு..”

“அநேகமா நாம கேமை முடிக்க போறோம்ன்னு நினைக்குறேன். அதான் எல்லாமே மொத்தமா வருது..” என ரங்கா சொன்னான்.

“ரங்கா நீ விலோவை தூக்கிட்டு முதல்ல இறங்கு?” – ப்ரதீப்.

“சரி டா..” என்ற ரங்காவின் முதுகில் விலோ ஏறிக் கொண்டாள். அவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்பு கப்பலில் இறக்கிவிட்டனர்.

கடற்கன்னி காலை பிடித்து அழுத்தியதில் வலியில் துடித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் ஷிவன்யா.

நிற்கவே முடியாத ஷிவன்யாவின் இடுப்பில் கயிறை கட்டி மெதுவாக இறக்கினர். மேலிருந்து மெது மெதுவாக கயிறை சக்தியும் ப்ரதீப்பும் இறக்கினார்கள். அப்பொழுதே அமரனுக்கு சற்று தலை சுத்த ஆரம்பித்தது.

ஷிவன்யாவின் கயிறு பட்டென்று அறுந்துவிழ அவளும் கடலில் பொத்தென்று விழுந்தாள். கடலில் இவளுக்காகவே காத்திருந்த சுறா அவளிடம் வர முயன்றது. ஆனால் பட்டென்று கடலில் குதித்த சக்தி அவளை அப்படியே அவர்களின் மீட்பு படகில் ஏற்றிவிட்டு தானும் ஏறிவிட்டான்.

அப்பொழுது தான் அமரனை முழுதாக கவனித்த ப்ரதீப், “உனக்கு என்னாச்சு டா..” என அவனின் கையை பிடித்தான். அது அமரனுக்கு வலியை கொடுக்க அவனிடம் இருந்து கையை பிடுங்கிக் கொண்டான்.

“டைஸ் எடுக்க போனப்ப அங்க இருந்த கூம்பு நத்தை கையை கடிச்சிடுச்சு டா..”

“டேய் பார்த்து எடுக்க கூடாதா..” என்ற ப்ரதீப்பிற்கு பதற்றம் அதிகரித்தது. அமரனின் இரத்த நாளங்கள் அனைத்தும் வெடிப்பது போல் இருக்க அப்படியே அமர்ந்துவிட்டான்.

அவர்களின் நேரம் சரியில்லை போல! அவர்களின் பின்னே மீண்டும் அந்த கொடூர கடற்கன்னி ஊர்ந்துபடியே வந்தாள்.

அதனை கவனித்த ப்ரதீப், “டேய் அது நம்ம கிட்ட வருது டா. வா அமர் போய்டலாம்..” என அமரனின் கையை பிடித்து இழுத்தான். ஆனால் எப்பொழுதோ சுயநினைவை இழக்க துவங்கிவிட்டான் அமரன்.

“டேய்.. டேய் அமர்..” என அவனின் கன்னத்தை அடித்து நிகழ்விற்கு கொண்டுவந்தான் ப்ரதீப்.

அதில் நீண்ட மூச்சினை இழுத்துவிட்டான் அமரன். அந்நேரம் அமரனின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் கடற்கன்னி.

உடும்பு பிடியாக இருந்த கடற்கன்னியின் பிடியிருக்க, அமரனுக்கு என்ன தோன்றியதோ, “நீ..நீ மட்டும் போ ப்ர.. ப்ரதீப்..” என்றான் குளரலாக.

“உன்னை சவடிச்சிடுவேன். வா சேர்ந்தே போகலாம்” என்ற ப்ரதீப் அருகில் இருந்த கட்டையால் கடற்கன்னியை அடித்துவிட்டு அமரனை தூக்கி நிறுத்தினான்.

“டேய் இன்னும் என்ன டா பண்ணுறீங்க.. சீக்கிரமா வாங்க..” என கீழிருந்து சக்தியும் ரங்காவும் கத்தினர்.

அவர்களிடம் அமரனின் நிலையை அழுதபடியே சொன்னான் ப்ரதீப். அவர்களுக்கும் அது அதிர்ச்சி தான். யாராலும் இப்பொழுது மேலே செல்ல முடியாதே!

“அவனை எப்படியாவது கூட்டிட்டு வா டா..” என கீழிருந்து அனைவருமே கத்தினர்.

ரௌத்திரமாக மீண்டும் எழுந்த கடற்கன்னி ப்ரதீப்பை அப்படியே பிடித்து அழுத்தியது. அதில் ப்ரதீப் அலற, அவனை அவளிடமிருந்து பெரும் முயற்சி செய்து அமரன் விடுவித்த அமரனுக்கு அவனின் நிலை நன்கு புரிந்தது. மூச்சு விடவே மிகவும் சிரமமாக உணர்ந்தான் அமரன்.

எனவே, மீண்டும் கடற்கன்னி அவர்களிடம் வருவதற்குள் ப்ரதீப்பை அந்த பக்கம் தள்ளிவிட்டான் அமரன்.

“டேய் நீ இல்லாம நான் போக மாட்டேன்..” என்று கண்கள் கலங்க சொன்ன ப்ரதீப் அமரனின் சட்டை காலரை இறுக்கி பிடித்தான். அமரனின் காலை கடற்கன்னி பிடித்து இழுத்தாள்.

ப்ரதீப்பின் கரத்தை மெல்ல விலக்க முயன்றான் அமரன். “டேய்.. டேய் அமர்.. விடாத டா..”

“என்னால முடியல ப்ரதீப். நா..நான்.. இதுக்கு மேல இருக்க மாட்டேன். நீ..நீயாவது தப்பிச்சி போ..” என்றவன் மொத்தமாக ப்ரதீப்பை கடலில் தள்ளிவிட்டான்.

கடைசி நொடி! அமரனின் உயிர் பிரியும் நிலையில் ப்ரதீப்பின் கண்களை தான் சந்தித்தான். இங்கு கடலில் கீழே விழுந்த ப்ரதீப்பை ரங்காவும் சக்தியும் சேர்ந்து தூக்கிவிட்டனர்.

அந்நேரம், அந்த கடலே அதிரும் வண்ணம் பலத்த சத்தத்தை எழுப்பியபடி அவர்களின் பெரிய கப்பல் மொத்தமாக வெடித்து சிதறியது.

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்