Loading

சமுத்திரா – 3

கடலிற்குள் சூரியன் மறைவதால் சிகப்பும் மஞ்சளும் கலந்து ஒருவித செம்மஞ்சள் நிறத்தில் வானம் பிரகாசமாக காட்சியளித்தது. அந்த புதுமையான நிறம் கடலில் துள்ளி விளையாடும் அலைகளிலும் நன்கு பிரதிபலித்தது. அப்படிப்பட்ட அழகான பின்னனியில், மரப்பாலத்தில் வெள்ளை நிற சட்டை அணிந்து நின்றிருந்த சக்திவேலும் அட்டகாசமாகவே தெரிந்தான்.

தூரத்தில் இருந்தே அவனை கண்டுக்கொண்ட ஷிவன்யா, ‘அன்னைக்கு எவ்வளவு பேசினான்? அவன் பக்கமே போக கூடாதுன்னு தான நீ இருந்த? இன்னைக்கு அவனோட கப்பல்ல போக போறியே?’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல விரும்பாமல் அதனை கொட்டி மனத்திற்குள்ளே தள்ளியவள் அமைதியாக கடலை பார்த்தபடி நடந்தாள்.

ரங்கா மற்றும் விலோவின் பக்கத்தில் கடல் மணலில் கால்கள் புதைய அந்த நீல நிற கடலையே ரசித்தபடி நடந்து வந்துக்கொண்டிருந்த ஷிவன்யாவை ஒரு நொடி பார்த்த சக்தி, அதன்பின் அவனை நெருங்கிய மூவரிடமும் வரவேற்பாக தலையசைத்தான்.

“நீ எப்ப சக்தி வந்த..?” என கேட்டபடியே சக்தியுடன் கைகுழுக்கினாள் விலோ.

“காலையிலேயே வந்துட்டேன் விலோ. நீங்க எல்லாரும் தான் லேட்.” என்று பதிலளித்த சக்திவேல் ரங்காவின் புறம் திரும்பினான்.

“நீ தான் மதியம் வர ஆளா டா?” என ரங்காவின் வயிற்றில் குத்தினான் சக்தி.

“நானென்ன சக்தி பண்ண? பொண்ணுங்க ரெடியாகுறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுது. இவங்க ரெண்டுபேரையும் வெயிட் பண்ணி கூட்டிட்டு வர்றதுக்குள்ள..” என பெருமூச்சுடன் ரங்கா நிறுத்தினான். அதை கேட்ட பெண்கள் இருவரும் அவனை முறைத்தனர். அவர்களின் புறம் திரும்பவே இல்லை ரங்கராஜ்.

அப்பொழுது அவர்களை வந்தடைந்த ப்ரதீப், விலோவின் பின்புறமருந்து அவளின் இரு கண்களை தன்னிரு கைகளால் மூடினான். “எரும மாடு ப்ரதீப்.. நீ தான்னு எனக்கு தெரியும். மரியாதையா கைய எடு” என கடுப்புடன் கூறினாள் விலோ.

ப்ரதீப் கிண்டலுடன் “என்ன எவ்வளவு மிஸ் பண்ணிருந்தா? நான் தான்னு சரியா சொல்லுவ விலோ டார்லிங்” என்க,

“இத மாதிரி கொரங்கு சேட்டையெல்லாம் வேற யாரும் பண்ண மாட்டாங்க ப்ரதீப்” என்று பல்லை கடித்தவள், “டார்லிங்னு சொன்ன கொன்னுருவேன்” என்று மிராட்டவும் செய்தாள். அவளின் முகத்தில் இருந்து கைகளை விலக்கிய ப்ரதீப் அவளின் முன் வந்து நின்றான்.

அவனை மேலும் முறைத்தவள், “இவனலாம் எதுக்கு சக்தி கூப்பிட்ட?” என்று சக்தியிடம் கேட்க,

“அவனுக்கு உன்னைவிட என்னை தான் ரொம்ப பிடிக்கும். அதுனால நானில்லாம பிளான் போட மாட்டானே..” என்றவனை பார்த்த விலோவிற்கு கடுப்பு தான் வந்தது.

“அப்படியா சக்தி? என்னைவிட அவனை தான் உனக்கு பிடிக்குமா?” என்றவளின் கேள்வி காதிலே விழாதது போல் அமரனிடமும் ரங்காவிடமும் பேசிக் கொண்டிருந்தான் சக்திவேல்.

சிறுவயதில் இருந்து சக்தியுடன் நெருங்கிய தோழியாக இருந்த விலோவிற்கு போட்டியாகவே ப்ரதீப்பின் வருகை அமைந்தது. நாட்கள் செல்ல செல்ல சக்தி மற்றும் ப்ரதீப்பின் நட்பின் ஆழத்தை பார்த்து பொறாமை வர, அன்றிலிருந்து ப்ரதீப்பிடம் மல்லுக்கு நிற்க தொடங்கிவிட்டாள் விலோ.

அவளை கண்டுக்கொள்ளாமல், “வாவ்! வாட் எ பியூட்டி!” என சூரியன் மறையும் நிகழ்வை தன் கேமராவில் பதிவு செய்துக்கொண்டிருந்த ஷிவன்யாவை பார்த்தான் ப்ரதீப்.

அவனின் குரலில் அவனை ஷிவன்யா திரும்பி பார்க்க, விலோவும் அவனை கேவலமாக முறைத்தாள். “யார் விலோ இவங்க?” என ஷிவன்யாவை கைகாட்டினான் ப்ரதீப்.

“என்னோட ஃபிரென்ட் ஷிவன்யா” என்று ப்ரதீப்பிடம் கூறியவள், “ஷிவன்யா இது தான் நான் சொன்னது. பேரு ப்ரதீப்” என்று ஒரு அறிமுகப்படலத்தை முடித்தாள்.

ஷிவன்யா, “ஹலோ ப்ரதீப். ஐ யம் ஷிவன்யாஸ்ரீ” என உடனே  முடித்துக் கொண்டாள்.

ப்ரதீப், “ஹலோ ஷிவன்யா. உங்க நேம் உங்கள மாதிரியே நல்லாருக்கு” என அசடு வழிந்தான். அவள் அமைதியுடன் திரும்பிக் கொண்டாள்.

“ரொம்ப வழியாத ப்ரதீப். சகிக்கல. கேவலமா இருக்கு..” என்று விலோ சொன்னதை அந்த உப்பு காற்றில் பறக்கவிட்டவன் ஷிவன்யாயை சைட்டடிப்பதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்தான்.

அவனின் பார்வை எரிச்சலை கொடுக்க அவனை முறைத்துவிட்டு அமரனிடம் சென்றுவிட்டாள் ஷிவன்யா. சக்திவேல் அமரனின் தந்தை அந்தோணியிடம் சென்று கப்பலின் உறுதியை மற்றொருமுறை உறுதி செய்துக் கொண்டான்.

“டேய் காலைல இருந்து நாலைஞ்சு முறை கப்பலை சோதனை பண்ணிட்டோம். ஆல் ஓகே” என்றான் அமரும் உறுதியுடன்.

ரங்கா, “அதான் கப்பலுக்கு சொந்தகாரங்க நியமித்த ஆட்களும் நம்ம கூட வரப்போராங்க தான..? அப்பறம் என்ன?” என்றான்.

இதுவரை கப்பலில் சென்றாலும் பழக்கப்பட்ட மீனவர்களுடன் சென்றது அவர்களுக்கு பாதுகாப்பையே கொடுத்தது. ஆனால் முதல்முறை அவர்கள் அல்லாமல் செல்வது சக்திக்கு சிறிது பதட்டத்தை  கொடுத்தது. “ஓகே. லெட்ஸ் கோ” என்று சக்தியும் சொல்லிவிட்டான்.

ப்ரதீப், “கப்பல் பார்க்கவே செம்மையா இருக்கு சக்தி. என்ன இருந்தாலும் சினிமா தயாரிப்பாளர்னா சும்மாவா? ஒரு கப்பலையே விலைக்கு வாங்கிருக்கீங்க!” என்றான் ஆச்சர்யத்துடன்.

“சொந்தமா வாங்கல டா வென்று. ஷூட்டிங்கிற்கு வந்திருக்கு. அதுல சும்மா ரெண்டு நாளைக்கு ட்ரிப்”, என்றான் சக்தி.

“ஷூட்டிங்கா..? யார் ஹீரோயின்?” என்றான் ப்ரதீவ் ஆர்வமுடன். “அதெல்லாம் சீக்ரட்..” என்றான் சக்தி.

கடலில் அவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்தை பற்றி அறியாமல், “இப்படியே பேசிக்கிட்டு இருந்தா நேரம் போகிட்டே இருக்கும். கிளம்புங்க பசங்களா.. அமர் பொண்ணுங்களும் உங்க கூட வராங்க பார்த்து கூட்டிட்டு போய்ட்டுவாப்பா” என்றார் அந்தோணி.

“சரி ஐயா. நீங்களும் பார்த்து வீட்டுக்கு போங்க..” என்றான் அமரன். அவர்களை கப்பலில் வழி அனுப்பவே மதியத்தில் இருந்து அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டிருந்தார் தேர்ந்த கடலோடியான அந்தோணி.

பின், அந்தோணியிடம் விடைபெற்று கப்பலில் ஏறுவதற்கு அனைவரும் நீண்ட மரபாலத்தில் நடக்க தொடங்கினர். அமரனுடன் நடந்தபடியே, “ஷூட்டிங் வந்த கப்பல்னு சொல்லுறாங்க. ஏதாவது செட் மாதிரி போட்டிருக்க போறாங்க. எல்லாம் பாதுகாப்பானது தான அமர்?” என்று கப்பலை பார்த்துக் கொண்டே கேட்டாள் ஷிவன்யா.

அவளின் கேள்வியில் சிரித்தவன், “ஷூட்டிங் கப்பல் தான். ஆனா, இந்த கப்பல் எப்பவும் ஒரே இடத்துல இல்லாம எப்பவும் சைலிங்ல தான் இருக்கும். நல்ல ரன்னிங் கண்டிஷன் தான். இங்க கூட ஒருமாசம் ஷூட்டிங் முடிஞ்சதும் கிளம்பிடும். கடைசியா ஸ்பெயின்ல இருந்து வந்ததுன்னு சக்தி சொன்னான். எல்லாம் பாதுகாப்பானது தான். ரொம்ப யோசிக்காத ஷிவ்” என அவளின் தலையில் கைவைத்து அசைத்தான்.

“ஹேர் ஸ்டைலை கலைக்காத அமர்” என அவனின் கையை எடுத்துவிட்டாள்.

“எது? இந்த தோள்வரைக்கும் இருக்க முடிய பறக்க விட்டுட்டு வர்றது உனக்கு ஹேர் ஸ்டைலா?” என கேட்டவனை முறைத்தப்படி உடன் நடந்தாள்.

அவர்களை பார்த்தபடியே நால்வரும் பின் தொடர்ந்தனர்.

“இப்படி ஒரு அழகான பொண்ணு உனக்கு ஃபிரண்ட்ன்னு நீ ஏன் என்கிட்டே சொல்லவே இல்லை விலோ? அமருக்கு கூட தெரிஞ்சிருக்கு அவளை பத்தி..” என ப்ரதீப் ஆரம்பிக்க,

“உன்கிட்ட சொல்லியிருந்தா நீ என்ன பண்ணிருப்ப?” என விலோ புருவம் உயர்த்தினாள்.

“நீ மட்டும் சொல்லிருந்தா நான் எப்பவோ அவளை கரெக்ட் பண்ணி கமிட் ஆகிருப்பேன்.”

“கிழிச்ச.. அவளுக்கு டக்குனு கோபம் வந்துடும் டா. வாய வெச்சிக்கிட்டு சும்மா இரு. இல்லனா சேதரத்துக்கு நான் பொருப்பில்லை.” என ப்ரதீப்பை அதட்டினாள்.

“ஆமா உங்க என்கேஜ்மெண்ட்ல கூட நான் அவளை பார்த்த மாதிரி தெரியலையே விலோ?” என்று ஷிவன்யாவை பார்த்தபடியே கேட்டான் ப்ரதீப்.

“அந்த நேரம். ஒரு ஆர்டிக்கல் விஷயமா அவள் பெங்களூர் போயிருந்தா டா. மறுபடி சொல்ற.. அவகிட்ட போய் வழிஞ்சி வாங்கி கட்டிக்காத..” என அவள் முடித்த பொழுது அவர்கள் கப்பலின் அருகில் வந்திருந்தனர்.

“எப்படி கப்பல் உள்ள போக போறீங்க? ரோப் லடர்(கயிற்று ஏணி) இருக்கு. அது வழியா ஏறுனா ஸ்ட்ரயிட்டா டாப் டெக்(கப்பலின் மேல் தளம்) போயிடலாம். இல்லனா சைடுல இருக்க வழியா போனா கிரௌண்ட் டெக்(கப்பலின் கீழ் தளம்) வரும்” என்றான் அமரன் விளக்கமாக.

“ரோப் லடர்ல போகலாம்” என்று பெண்கள் இருவரும் சொல்லிவிட அனைவரும் சரியென்று ஒப்புக்கொண்டனர். அதன்படி, அவர்களின் பயண பொதிகளளை மட்டும் கீழே இருந்த வாயிலில் பத்திரமாக சேர்த்துவிட்டு அனைவரும் கயிறு வழியாக ஏற தொடங்கினர்.

கயிற்றில் முதலில் ஏறி மேலே சென்றான் அமரன். விலோவும் ஷிவன்யாவும் அதில் ஏறுவதற்கு சிரமப்பட்டாலும் முயன்று ஏறிவிட்டனர். பின்பு ஒரு ஒருத்தராக கப்பலின் மேல் தளத்தில் பொத்பொத்தென்று குதித்தனர்.

அவர்கள் அனைவரும் ஒன்றின் பின் ஒன்றாக குதிக்க குதிக்க கப்பலின் அடித்தளத்தில் காத்திருந்தவளும் குதுகளிக்க தொடங்கினாள்.

அங்கிருந்து பார்த்த மொத்த கடற்பரப்பும் அவர்களின் உடலையும் மனதையும் சிலிர்க்க வைத்தது. ஆடவர்கள் அனைவரும் நிறைய முறை கப்பலில் பயணம் செய்திருந்தாலும் அந்த உப்பு கலந்த ஈரக்காற்றும், அலைகளின் ரீங்காரமும் அவர்களையும் கட்டியிழுத்தது.

விலோ, “ஊஊஊ..” என்று கைகளை குவித்து கடல் காற்றில் கத்த, அவளை பார்த்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

“யப்பா இதுங்களை கூட்டிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுது. அவன் வரலனா நான் வரல. அவன் வந்தா நான் வரலன்னு எவ்வளவு பில்டப்.” என்று புலம்பிய ரங்காவை பார்த்து சிரித்தான் அமர்.

அவர்களுடன் பயணிக்க இருந்த வெள்ளைக்காரர்களை அழைத்து வந்த சக்தி அனைவருக்கும் அறிமுக படுத்தினான்.

“இவங்களும் நம்ம கூட டூ டேஸ் இருப்பாங்களா அமர்?” என்று ஷிவன்யா கேட்க,

அமர், “யெஸ். இது முழுசா ஆட்டோமேட்டட் போட் (தானியங்கி கப்பல்) தான். இருந்தாலும் கப்பலை மெயின்டைன் பண்ண நம்ம கூடவே வருவாங்க. ஒருத்தர் கப்பலோட மாஸ்டர் அதாவது கேப்டன். மீதி நாலு பேர் சைலர்ஸ், மாலுமிகள்” என்றான்.

“நம்ம ஆறு பேர், அவங்க ஐந்து பேர். மொத்தம் பதினோரு பேர் தான் இவ்வளவு பெரிய கப்பல்ல இருக்கோம்.” என்று துள்ளலுடன் விலோ கூறினாள்.

மொத்தம் பதினோர் பேர் என்று கூறியவளும் அதனை ஆமோதித்த உடன் இருந்தவர்களும் அறியவில்லை! இவர்களுக்கு முன்னாகவே அந்த கப்பலின் அடி தளத்தில் “சமுத்திரா“வும்  பேராழியின் ஆழத்தை நோக்கிய அவளின் பயணத்தை இவர்களை வைத்தே தொடங்கிவிட்டாள் என்று!

அவர்கள் அனைவரையும் சுமந்துக் கொண்ட உல்லாச கப்பல், மெல்ல மெல்ல கடலலையின் ஆட்டத்தில் ஊஞ்சல் போல் ஆடிக்கொண்டே கடலில் தன் பயணத்தை தொடங்கியது.

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்