Loading

சமுத்திரா – 25:

முதலையிடமிருந்து தப்பிக்க விலோவும், ரிச்சார்டும் ஒன்றாக கப்பலின் உள்ளே  நுழைந்தனர். ஆனால் உள்ளே வந்ததும் முதலையின் விரட்டலில் இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டனர்.

வேகமாக ஓடி வந்த விலோ எதிர்பாராமல் அங்கிருந்த குழிக்குள் விழுந்து விட்டாள். அந்த குழி அவளை மூன்றாம் தளத்திற்கு இழுத்து வந்துவிட்டது.

“ஐயோ! என்னோட இடுப்பு..” என இடுப்பை பிடித்தபடி எழுந்து நின்றவள், கப்பலின் நிலையை கண்டு அதிர்த்துவிட்டாள்.

ஏதோ யாருடைய கவனிப்பும் இல்லாத பாழடைந்த பங்களாவின் நிலையில் இருந்தது அவர்களின் கப்பல். நேற்றிரவு அவள் சுற்றிப்பார்க்க சென்ற பொழுது ஃபைவ் ஸ்டார் ஹோட்டலிற்கு நிகராக இருந்த கப்பலுக்கா இந்த நிலை? என அவ்வறையை சுற்றி பார்த்தாள். கேட்பாரின்றி கிடக்கும் குகையை போல் அங்கங்கே நாள்பட்ட தூசியும், அதனுடன் வௌவால்களின் எச்சங்களும் இருக்க, அவ்விடத்தில் ஒரு வித துர்நாற்றம் வேற வீச துவங்கியது.

“இந்த வௌவாலுங்க இதை அதோட வீடாவே மாத்திடுச்சிங்க போல..” என மனத்திற்குள்ளே சொல்லியவள் வெளியேற அங்கிருந்த அறையின் கதவை திறந்தாள்.

அதற்காகவே காத்திருந்தது போல் உள்ளிருந்து படபடவென சிறகுகளை அடித்தப்படியே கூட்டம் கூட்டமாக பறந்து வந்தன வௌவால்கள்.

அதில் பதறி பயந்தவள் மூச்சினை இழுத்து பிடித்தபடி அங்கிருந்த கதவின் பின்னே ஒழிந்துக் கொண்டாள்.

“க்ரீச் க்ரீச்” என்ற சத்தத்துடன் கத்தியபடியே அனைத்து வௌவால்களும் வெளியேறியதும் தான் விலோவிற்கு உயிரே வந்தது.

‘எல்லாமே போய்டுச்சா?’ என்ற யோசனையில் அந்த அறைக்குள் எட்டி பார்த்தாள். ஆனால், இன்னும் சில வௌவால்கள் அங்கே தலைகீழாக தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்தவளுக்கு மேலும் பயம் உண்டாக பட்டென்று கதவை அடைத்து சாத்திவிட்டாள்.

‘மேலே செல்ல வேறெங்காவது வழி இருக்குமா?’ என்ற யோசனையுடன் திரும்பியவள் ஒரு நொடி அதிர்ந்து நெஞ்சிலே கையை வைத்து நின்றுவிட்டாள்.

*****

மயக்கத்தில் இருந்த ஷிவன்யா சற்று முன் தான் மெல்ல கண்திறந்தாள். உடனே சக்தியிடம், “நா..நான் இங்கேயே இருக்கேன். நீங்க போய் விலோவை கூட்டிட்டு வாங்க..” என கேட்டு பார்த்தாள்.

“உன்னால நிற்கக்கூட முடியல. உன்னை எப்படி தனியா விட்டுட்டு போறது? விலோ கூட ரிச்சார்ட் போயிருக்காங்க. நான் கொஞ்ச நேரம் பார்க்குறேன். அப்படி விலோ வரலனா நானே அவங்களை தேடி போறேன்.” என சக்தி சொன்னான்.

அந்நேரம் கப்பலின் உள்ளிருந்து படபடவென பறந்து வந்த வௌவால்களை பார்த்த சக்தியும் ஷிவன்யாவும் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘முதலையிடம் தப்பிக்க உள்ளே சென்றவர்கள் வௌவாலிடம் மாட்டிக் கொள்வார்களோ?’ என இருவரும் பயந்தனர்.

*****

இங்கு அரூபமாக கொள்ளைக்கார கப்பலுக்குள் நுழைந்தான் ப்ரதீப். அங்கே சில கடற்கொள்ளையர்கள் மது அருந்தியபடி போதையின் பிடியில் இருந்தனர். ‘சரியான குடிகார கூட்டமா இருக்கும் போல..’ என சொல்லிக்கொண்டவன் அவர்கள் இருந்த அறையை கடந்துச் சென்றான்.

‘அந்த கள்ளிராணி எங்க இருப்பா? நம்ம கேம் போர்ட் எங்க இருக்கும்? ஒண்ணுமே புரியலையே..’ என புலம்பியபடி திரும்பியவன் கண்ணில் இருப்பெண்கள் ஒரு ஆடவனிடம் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

‘ஒருவேளை இந்த பொண்ணுங்களுக்கு கள்ளிராணியோட ரூம் தெரியுமோ? கிட்ட போய் என்ன பேசுறாங்கன்னு கேட்கலாம்.’ என அவர்களை நெருங்கி சென்றான்.

“ஒரு ஆண் உன்னுடைய கன்னத்தை பதம் பார்த்தானாமே? நம் இனம் முழுக்க அந்த பேச்சு தான் ஓடி கொண்டிருக்கிறது.” என நகைத்தப்படி ஒரு நங்கை அவளின் முன்னிருந்தவனை பரிகாசம் செய்தாள். அங்கிருந்தவன் வேறு யாருமில்லை. அமரனிடம் அடிவாங்கியவன் தான்.

‘ஆத்தி இவன் அவன்ல?’ என அவனை கண்டுக்கொண்ட ப்ரதீப் அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்டபடி அருகே நின்றிருந்தான்.

கன்னத்தை தடவியபடியே உஷ்ண மூச்சினை எடுத்துவிட்டவன், “இளவரசி மட்டும் அந்நேரம் வரவில்லை என்றால்.. அவனின் உயிர் என் கையாலே பிரிந்திருக்கும்.” என ஆக்ரோஷமாக கூறினான்.

“அப்பொழுது கூட பெண்களிடம் மரியாதையாக நடந்துக் கொள்வேன் என்று உன் வாயிலிருந்து வருகிறதா பார். உனக்கு இது தேவை தான்.” என உதட்டை சுழித்து ஒருத்தி சொல்ல,

“இளவரசிக்கு உணவளிக்கும் நேரம் வந்துவிட்டது. வா நாம் செல்லலாம்.” என மற்றவள் அவளிடம் வலியுறுத்த, இருவரும் ஆரலியின் அறை நோக்கிச் சென்றனர். “அப்பாடா இவங்க அந்த கள்ளிராணியை தான் பார்க்க போறாங்க போல. அவங்க பின்னாடியே போலாம்.” என்ற ப்ரதீப்பும் அவர்களை பின்தொடர்ந்தான்.

கள்ளிராணியின் அறை வாயிலில் நின்ற பெண்கள் இருவரும், அவ்வறை கதவை தட்டினார். “இளவரசியே தங்களுக்கான சிற்றுண்டியை எடுத்து வந்திருக்கிறோம். நாங்கள் உள்ளே வர அனுமதி தாருங்கள்.” என ஆரலியின் அழைப்பிற்காக காத்திருந்தனர்.

என்னதான் ப்ரதீப்பினால் அந்த மரக்கதவை ஊடுருவி உள்ளே செல்ல முடியும் என்றாலும், ‘ஒரு பெண் அவளின் தனிப்பட்ட அறையில் எப்படி வேண்டுமென்றாலும்; எந்த நிலையிலும் இருப்பாள். ஆணாகிய நான் அவளின் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல கூடாது!’ என்ற எண்ணம் தோன்றியது. எனவே, அந்த பெண்களுடன் அவனும் உள்ளே செல்வதற்கு காத்து கிடந்தான்.

“உள்ளே வாருங்கள்!” என அனுமதியை கூட கட்டளையாக பிறப்பித்தாள் ஆரலி.

உள்ளே வந்த பெண்களை பார்த்தவள், “அங்கு வைத்துவிட்டு நீங்கள் செல்லலாம்.” என்றாள். அவர்களும் அங்கிருந்த மேசையில் உணவை வைத்துவிட்டு சென்றார்கள்.

அவர்கள் சென்றதும் அந்த அறையில் அவள் ஒழித்து வைத்திருந்த சமுத்திரா பெட்டியை வெளியெடுத்தாள். ‘ஆஹா! நம்ம கேம் போர்ட். இவளோட ரூம்ல தான் வெச்சிருக்காளா?’ என்ற ப்ரதீப் அதனை பார்த்தான்.

இருகைகளாலும் அந்த “சமுத்திரா” விளையாட்டை எடுத்தாள் ஆரலி.

அங்கிருந்த நிலை கண்ணாடியின் முன்னே சென்று நின்றவள், “என்னுடைய மனதை வென்ற முதல் ஆடவன் நீ தான். ஆனால் நீ என்னை நிராகரிப்பதா?” என கோபமாக உரைத்தாள்.

பின், அந்த சமுத்திரா விளையாட்டை வருடியபடியே, “இது உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை நான் அறிவேன்! இதற்காகவாது நிச்சயம் நீ என்னை தேடி வந்து தான் ஆக வேண்டும்.” என எள்ளல் சிரிப்புடன் கூறிய ஆரலி அந்த பெட்டியை பத்திரமாக மீண்டும் எடுத்த இடத்திலே வைத்தாள்.

******

வௌவால்களின் அறைக்கதவை சாத்திவிட்டு திரும்பிய விலோவின் பின்னே கடற்கன்னி தான் தோன்றினாள். அங்கு அவளை பார்த்து ஒரு நொடி அதிர்ந்தவள், “நீ தானா..” என ஆசுவாசமாக உணர்ந்தாள்.

“என்னை எப்படியாவது மேலே கூட்டிட்டு போயேன் ப்ளீஸ்..” என கடற்கன்னியிடம் விலோ கேட்டாள்.

“உன்னையா?” என கலகலவென அவ்விடம் அதிரும் வண்ணம் நகைத்தவள் மாயக்காரி, “விளையாட்டென்றாலும் ‘நேர்மையென்றால் என்ன?’ என கேட்கும் உன்னை நான் காப்பாற்ற வேண்டுமா?” என குரோதம் வழியும் விழியால் கேட்டாள்.

அவளை அதிர்ந்து பார்த்த விலோ, “நா..நான் பண்ணது தப்பா இருந்தாலும். எங்களோட பாதுகாப்புக்காக தான் அதை பண்ணேன். அதற்கு உன்னிடம் விளக்கம் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை..” என கடற்கன்னியின் முகத்திற்கு நேராக சொன்னவள், “நானே மேலே செல்லும் வழியை கண்டுபிடித்துக் கொள்வேன்.” என காட்டமாக கூறிவிட்டு விருட்டென்று அங்கிருந்து நகர்ந்தாள்.

“ஓ! என்னை தாண்டி செல்கிறாயா? போ போ இவ்வளவு நேரம் நீ கண்ட வலியெல்லாம் ஒன்றுமே இல்லை எண்ணுமளவு உனக்கு வலி உண்டாக போகிறது..” என மனத்திற்குள்ளே எள்ளலாக உரைத்தாள் கடற்கன்னி.

‘கடற்கன்னியிடம் வீம்பாக சொல்லிவிட்டாலும் எங்கு எப்படி செல்வது’ என விலோவிற்கு புலப்படவில்லை. அவளின் முதுகில் மீண்டும் மின்னலென வலி உண்டாக அவளால் நிமிரவே முடியவில்லை.

வலியில் துடித்தவள், “என்ன இது! கூன்விழுந்த பாட்டி மாதிரி என்னோட நிலைமை ஆகிடுச்சு..” என சொல்லிக்கொண்டே குனிந்தப்படி நடந்தவள் அங்கு தேங்கியிருந்த மழை தண்ணீருக்குள் பொத்தென்று விழுந்தாள். “மேல ஒரு குழி. இங்க ஒரு குளம். இதெல்லாம் எப்படி வந்துச்சு” என கேட்டபடியே எழுந்தவள் தொப்பலாக நனைந்திருந்தாள். அவளால் அதற்கு மேல் நிற்க கூட தெம்பில்லாமல் மெல்ல நடந்தாள்.

அந்த நீரிலிருந்தும் அவளின் பின்னே ஒரு முதலை வெளியே வர, “ஐயோ மறுபடியுமா..” என அரற்றியவள் அங்கிருந்த மேசையில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

அதுவரை நிகழ்ந்த அனைத்தையும் நினைத்தவள், “நாம எப்படி மேலே போகலாம்..” என உடல் வலியிலும் யோசிக்க தொடங்கினாள்.

******

“என்னடா இவன் பார்த்துட்டு வரேன்னு போய் எவ்ளோ நேரமாச்சு? இன்னும் ஆளையே காணோம்..” என்று புலம்பிய அமரன் இடுப்பில் கையை வைத்தபடி அந்த சிறு படகில் நின்றுக் கொண்டிருந்தான். அவனையே விழியசைக்காமல் ரங்கா பார்த்துக் கொண்டிருந்தான். அதனை உணர்ந்த அமரன், “என்னடா?” என்றான் தன்னை தானே ஒருமுறை பார்த்துவிட்டு.

ரங்கா சிரித்துக்கொண்டே, “இல்ல.. அப்படி உன்கிட்ட என்ன இருக்குனு உன்னை பார்த்தவுடனே அந்த பொண்ணு உன்கிட்ட மயங்கிட்டா?” என்று நகைத்தப்படியே கேட்க, அமரனுக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

“யாருக்கு தெரியும்..” என்று தோளை குலுக்கி சிரிப்புடன் தலையை கோதிய அமரன், “இதை அந்த தடியன் ப்ரதீப் கிட்ட சொல்லாத டா. ஓட்டியே சாவடிப்பான்..” என்று அவன் முடித்தபொழுது,

“எதை என்கிட்டே சொல்ல கூடாது?” என்ற குரல் காற்றில் வந்து ப்ரதீப் வந்துவிட்டான் என உணர்த்தியது.

“அவ்ளோ பெரிய விஷயம் இல்லை. நீ மேல என்ன பார்த்த? அதை முதல்ல சொல்லு..”

“கேம் போர்ட் எங்க இருக்குனு பார்த்தியா..?” என்று அமரனும் ரங்காவும் அடுக்கடுக்காய் கேள்விகளை கேட்டனர்.

“நான் அந்த கள்ளிராணி ரூம்க்கு போனேன் டா” – ப்ரதீப்.

“டேய். உன்னை கேம் போர்ட் எங்க இருக்குனு பார்க்க சொன்னா. நீ அவளை சைட் அடிச்சிட்டு வந்துருக்க..” என ரங்கா திட்ட துவங்கும் முன்,

“டேய் முழுசா சொல்ல விடுங்க டா..” என அங்கு நடந்த அனைத்தையும் கூறிமுடித்தான் ப்ரதீப்.

“அப்ப ஆரலியோட ரூம்ல தான் கேம் போர்ட் இருக்கு. எங்களை எப்படியாவது அங்க கூட்டிட்டு போ டா.” என அமரன் சொல்ல,

“நீ அடிச்ச தடியன் வேற உன்னை எதிர்பார்த்துட்டு இருக்கான் போலயே! உன்னை எப்படி டா கூட்டிட்டு போறது. பேசாம நான் மட்டும் ப்ரதீப் கூட போய்ட்டு வரவா?” என ரங்கா யோசனை சொன்னான்.

“அவனுக்கு பயந்து நான் வராம இருக்கணுமா? அதுமில்லாம என்னை எதிர்பார்த்து தான் ஆரலி கேமை எடுத்துட்டே போயிருக்கா. சோ, நான் அவளை திசை திரும்பினாலும் நீ அந்த கேமை எடுத்துடலாம் டா.” என அமரன் விளக்கமளித்தான்.

“அமர் சொல்லுறதும் சரி தான் ரங்கா. அவனையும் கூட்டிட்டு போலாம்.” என்று சொன்ன ப்ரதீப் அமரையும் ரங்காவையும் கொள்ளைக்கார கப்பலுக்குள் அழைத்து செல்லும் மார்க்கத்தை பார்க்க துவங்கினான்.

*****

உடல் வலியுடன் குளிரும் சேர்ந்துக்கொள்ள நடுங்கியபடியே மயக்கத்தில் கண்ணை மூடி அங்கிருந்த கட்டையில் சாய்ந்தது அமர்ந்திருந்தாள் ஷிவன்யா.  மயக்க நிலையில் இருந்தாலும் அவளின் மூளை வேலை நிறுத்தம் செய்யாமல் விலோவை பற்றி சிந்தித்தப்படியே இருந்தது. எனவே, அவ்வப்பொழுது கண்ணை திறந்து சக்தியிடம் விலோவை பற்றி கேட்டுக் கொள்கிறாள்.

சக்திக்குமே ஆச்சர்யம் தான். முன்பு சண்டை பிடித்தவளுடன் இப்படி தனியாக ஒரு இரவில் இருவரும் ஒன்றாக அமரும் நிலை வரும் என அவன் கனவிலும் நினைத்ததில்லை! நேற்று வரை இப்படி ஒரு நிகழ்வு உனக்கு நிகழும் என யாரேனும் சொல்லியிருந்தால் சிரித்தபடி அவர்களை கடந்திருப்பான்.

ஆனால், இன்று அது நடந்திருக்க, அவனுக்கே இந்த நிலை புதிராக தான் இருந்தது. கண்மூடி சாய்ந்திருந்தவளையே பார்த்தவனுக்கு அவர்களின் முதல் சந்திப்பு கண்முன்னே படமாக விரிந்தது.

– சமுத்திரா வருவாள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்