Loading

சமுத்திரா – 17:

தன்னை சுற்றி அமர்ந்திருந்த அனைவரின் முகத்தையும் பார்த்தான் அமரன். ‘நீயே சோர்ந்துட்டா எப்படி அமர்?’ என்ற மனதின் குரலிற்கு செவி மடுத்தவன், “எல்லாரும் எதுக்கு இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? கேமை முடிச்சிட்டு நம்ம வீட்டை பார்த்து போக வேணாமா?” என்றான் உற்சாகமாக.

அந்த கடற்கன்னியும் அவர்களை தான் பார்த்தபடி அமர்ந்திருந்தது. மழையில் நனைந்ததனால் பெண்கள் இருவரின் உடையும் உடலோடு ஒட்டி இருக்க அதில் அவர்களுக்கு சற்று சங்கடமாகவும் இருந்தது. இருளில் ஒன்றும் தெரியாதது இப்பொழுது வெளிச்சத்தில் சங்கட்டமாக இருந்தது. விலோவாவது கழுத்தை சுற்றி ஸ்கார்ஃ போட்டிருந்தாள். ஆனால் ஷிவன்யா அணிந்திருந்த வெள்ளை நிற உடை அவளுக்கு கூச்சத்த கொடுத்தது.

இருட்டாக இருந்தால் எதுவும் தெரியாது என்றெண்ணிய ஷிவன்யா, “இந்த லைட் இருக்கட்டுமா அமர்? இந்த வெளிச்சத்தை வெச்சி கடற்கொள்ளைக்காரங்க மறுபடி நம்மளை பின் தொடர்ந்து வந்துட்டா என்ன பண்ணுறது?” என எப்படி சொல்வது என்று தெரியாமல் கேட்டாள்.

“இப்ப இந்த வெளிச்சம் இல்லனா, நம்மளால அந்த போர்டு எடுத்திருக்க முடியாது; ரங்காவையும் காப்பாதிருக்க முடியாது; எல்லாத்துக்கும் மேல அந்த முதலை வந்ததும் நமக்கு தெரிய வந்திருக்காது. சோ, இது இப்படியே இருக்கட்டும் ஷிவ்.” என்றான் அமரன். இதற்கு மேல் எப்படி சொல்வது என ஷிவன்யா கைகளை கட்டியபடி அமைதியாகிவிட்டாள்.

ஆனால் பெண்களின் நிலையை புரிந்துக்கொண்ட ரங்கா அவனின் ஜெர்கினை  கழட்டி விலோவிற்கு கொடுத்தான். விலோ அவளின் ஸ்கார்ஃபை ஷிவன்யாவிற்கு போர்த்தி விட்டாள். ‘இதுக்கு தான் ஷிவ் லைட்டை ஆப் பண்ண சொன்னாளா?’ என்றெண்ணிய அமர் மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டான்.

அனைத்தையும் கவனித்த ப்ரதீப், தனியுலகில் யோசனையுடன் இருந்த சக்தியை பார்த்துவிட்டு, “நீ என்ன சக்தி யோசிக்கிற?” என்றான் சூழ்நிலையை சகஜமாக்கும் பொருட்டு.

“நாம தாமதிக்க கூடாதுன்னு இந்த கடற்கன்னி நம்மகிட்ட சொன்னா தான? நாம இன்னும் லேட் பண்ண பண்ண, ஏற்கனவே க்ளுல வந்தது  எல்லாம் மறுபடியும் ஒன்னொன்னா வர தொடங்கும் போல..” என தெளிவான குரலில் கூறினான்.

“ஐயோ! அந்த வௌவால்லாம் மறுபடி வருமா?” என்று ப்ரதீப் அலற தொடங்கியதும்,

“இப்படி பேசி பேசி தான் நேரம் போகுது. கொஞ்ச நேரம் நீங்க பேசாம இருங்க..” என்று ப்ரதீப்பிடம் ஷிவன்யா கடுப்புடனே சொன்னாள்.

ப்ரதீப் சிரிப்புடன், “நீ அந்த ஏஞ்சலை பற்றி தப்பா சொன்னதை நாங்க நம்பலனு கடுப்புல இருக்க தான?” என்றான்.

மீண்டும் அந்த கடற்கன்னியை ஒரு பார்வை பார்த்த ஷிவன்யா, “உங்க பிரென்ட் சக்தியையும், ரங்காவையும் அவ கப்பாத்துனதுக்காகலாம் என்னால அவளை நம்ப முடியாது. இப்பவும் எனக்கு அது மேல சுத்தமா நம்பிக்கை இல்லை.” என்றவள், “அடுத்து வேற ஏதாவது வரதுக்குள்ள சீக்கிரமா போடு விலோ..” என்று விலோவின் கையை பிடித்து அந்த போர்ட் இருந்த இடத்திற்கு அழைத்து சென்றாள்.

“அதென்ன சக்தியை மட்டும் என்னோட பிரென்ட்னு சொல்லிட்டு போறா?” என்ற ப்ரதீப்பின் கேள்விக்கு, “சும்மா இரு டா.” என்று ப்ரதீப்பை கடிந்துக்கொண்ட அமரன் மற்றவர்களையும் பெண்களிடம் அழைத்துச் சென்றான்.

போர்டை இரண்டாக விரித்து வைத்த ஷிவன்யா விலோவின் கையில் பகடையை திணித்தாள். அதனை பதட்டத்துடன் வாங்கிய விலோ, அனைவரின் முகத்தையும் ஒரு முறை பார்த்தாள்.

“என்ன விலோ? ரொம்ப பீல் பண்ணுற?” என்ற ப்ரதீப்பின் குரலில் பதில் கூட சொல்ல முடியாமல் தவிப்புடன் பகடையை கையிலிருந்து கீழே உருட்டிவிட்டாள். அது உருண்டு நான்கு என்ற இலக்கில் நின்றது. ஏற்கனவே நான்கில் இருந்த விலோவின் சிவப்பு நிற கப்பல் நான்கு கட்டங்களை கடந்து எட்டில் சென்று நின்றது.

நானே பெரிய விளையாட்டு! 

என்னிடமே உன்னுடைய விளையாட்டை காட்டுகிறாயா? 

இதற்கான விளைவை நிச்சயம் நீ சந்திப்பாய்!

என்ற குறிப்பு குமிழுக்குள் மின்னி மறைந்தது. அதனை படித்த அனைவரும் விலோவை தான் கேள்வியாய் பார்த்தனர். ஆனால் பதில் கூற வேண்டிய மங்கையவளோ தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

“இப்படி தான் வரும்னு உனக்கு முன்னாடியே தெரியுமா விலோ? அதுக்கு தான் டைஸை போடாம எங்க எல்லாரோட முகத்தையே பார்த்துட்டு இருந்தியா?” என்று ரங்கா சற்று சத்தமாகவே கேட்டான்.

“என்ன பண்ண விலோ?”

“நிமிர்ந்து பார்த்து சொல்லு?”

என்று ஆடவர்கள் அனைவரும் உரக்க கேட்டனர்.

“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க..” என ஆடவர்களை அமைதிப்படுத்திய ஷிவன்யா, “விலோ என்னை பாரு..” என்று தோழியின் நாடியை பிடித்து நிமிர்த்தினாள்.

கலங்கி தவித்திருந்த விலோவின் கண்களை துடைத்தாள் ஷிவன்யா. “விலோ! நீ என்ன பண்ணியிருந்தாலும் அதை நம்மளால இப்ப மாத்த முடியாது. சோ, என்ன பண்ணனு எங்களுக்கு சொல்லு விலோ..” என்று மென்மையாக கேட்டாள்.

அவளின் கையை இறுக்கி பிடித்துக்கொண்ட விலோ, “நா..நான் நமக்கு ந..நல்லதுன்னு நினைச்சு தான் பண்ணேன் ஷிவ். ஆனா அது இப்படி ஆகும்னு தெரியல..” என்றாள்.

“ஹே. என்ன பண்ணனு தெளிவா சொல்லு..”

 “ச..சக்திக்கு அடிப்பட்டு இரத்தம் வந்துச்சுல? என்னால தான்னு நான் அந்த போர்டுல இருக்க குட்டி கப்பல் எல்லாத்தையும் எடுத்து விளையாட்டை கலைச்சு விட ட்ரை பண்ணேன். அப்படி பண்ணா விளையாட வேணாமேன்னு பண்ணிட்டேன். ஆனா அந்த குட்டி கப்பலை என்னால போர்டுல இருந்து நகர்த்தவே முடியல. அப்பறம் அதை அப்படியே விட்டுட்டேன்.” என்று கூறிவிட்டு அனைவரின் முகத்தையும் பார்த்தாள்.

“அதுக்கு இப்படி பண்ணுவியா? எல்லாத்துலயும் நேர்மை வேணும் விலோ..” என்று ரங்கா விசாரணை கைதியை விசாரிப்பது போல் உருமினான்.

“போதும் விடு ரங்கா, இது ஒன்னும் உன்னோட போலீஸ் ஸ்டேஷன் இல்லை. இந்த விளையாட்டு இப்படி ஒரு வினையா மாறும்னு அவளுக்கு முன்னாடியே தெரியுமா என்ன?” என அமர் விலோவிற்கு ஆதரவாக பேசினான்.

அவளின் சூழ்நிலையை அனைவராலும் புரிந்துக்கொள்ள முடிந்தது. “தன்னால் தான் என்ற எண்ணம் மேலோங்கவே அப்படி செய்திருக்கிறாள்.” என்று உணர்ந்தனர். ஆனால் இப்பொழுது அவளின் நிலையை கண்டு அனைவரும் தவிக்கவும் செய்தனர்.

“இப்ப உனக்கு ஏதாவது ஆகிட்டா.. நாங்க என்ன பண்ணுவோம் விலோ?” என்று ஷிவன்யா கேட்டாள். அதற்கும் அமைதியாக இருந்தவளை தனியாக அழைத்து சென்றான் ரங்கா.

ரங்கா, விலோவை தன் கைவளைவிலே வைத்துக்கொண்டு, “இங்க பாரு விலோ..” என அவளின் கண்ணை பார்க்க முயன்றான். விளக்கின் வெளிச்சத்தில் கண்ணீர் நிறைந்த நங்கையவளின் விழிகள் பளபளத்தது.

“எதுக்கு இப்படி பண்ணனு கேட்க மாட்டேன். ஏதோ ஒரு விசை தான் நம்மள நகர்த்திட்டு இருக்குனு எனக்கு புரியுது. ஆனா, இது மாதிரி எடக்கு மடக்கா மறுபடியும் பண்ணாத டி. இப்படி குறுக்கு வழில போனா நமக்கு விடுதலை எல்லாம் கிடைக்காது. இது நம்மளோட பிரச்சனையை பெருசாக்க தான் செய்யும்.” என அவளின் கன்னம் வருடி சொன்னான்.

“ஹ்ம்ம்..” என்று கண்கலங்க தலையசைத்து அவனை அணைத்துக் கொண்டாள். அவனும் அவளை அணைத்தபடி, “உனக்கு வித்தியாசமா எதாவது தெரிஞ்சா என்கிட்ட உடனே சொல்லணும்.” என்றபடி அவளின் முதுகை வருடியவன், பெண்ணவளின் நுதலில் இதழ் பதித்தான்.

“மம்க்கும்..” என்று கனைத்தப்படியே அவர்களை நெருங்கிய ப்ரதீப், “போதும் சமாதான படுத்தினது. அடுத்து நான் போட போறேன் வாங்க..” என்று இருவரையும் அழைத்துவிட்டு அவர்களுக்கு முன்னாக நடந்து சென்றான்.

“வா போகலாம்.” என விலோவை அழைத்துக்கொண்டு ப்ரதீப்பை பின் தொடர்ந்தான் ரங்கா. “கரடி..!” என்று ப்ரதீப்பின் முதுகை பார்த்தபடியே விலோ சத்தமாகவே முணுமுணுத்தாள்.

அதில் முன்னே சென்றுகொண்டிருந்த ப்ரதீப் நின்று திரும்பி, “நீ கரடினு சொன்னது எனக்கு கேட்டுடுச்சு..” என்று சொன்னான்.

“கேட்கணும்னு தான் சத்தமா சொன்னேன்..” என்ற விலோவிடம் மேலும் எதோ சொல்ல வந்த ப்ரதீப்பை தடுத்த ரங்கா, “டேய் போடா..” என்று அவனின் முதுகைபிடித்து முன்னே தள்ளிவிட்டான்.

விலோவிடம் வந்த சக்தி அவளின் கையை பிடித்து, “உனக்கு எதாவது சின்னதா வித்தியாசமா தெரிஞ்சாலும் எங்ககிட்ட மறைக்காம சொல்லிடனும் விலோ.” என்று அக்கறையை கண்டிப்புடனே வெளிப்படுத்தினான்.

அதற்கு சரி என்று தலையசைத்தவள் கண்களை துடைத்தப்படி ஷிவன்யாவின் அருகில் சென்று அமர்ந்தாள். ஷிவன்யாவும் அவளை அணைத்து விடுவித்தாள்.

**********

மேலே பெய்த மழையின் நீர் அனைத்தும் கப்பலின் உள்ளே தான் வந்தன. படிகளின் வழியும்; அங்கிருக்கும் இண்டு இடுக்குகளின் வழியிலும் அனைத்து நீரும் கப்பலின் கீழ் தளத்திற்கு வந்திருந்தன.

“திடீர்னு இங்க எப்படி ரிச்சார்ட் இவ்வளவு தண்ணி வருது?” என அந்த மழை தண்ணீரை கடந்தபடியே மேல் தளத்திற்கு செல்லும் வழியில் வந்துக் கொண்டிருந்தார்கள் ரிச்சார்ட் மற்றும் டேனியல்.

“எனக்கும் ஒண்ணுமே புரியல டேனி. நம்ம கப்பலே நமக்கு வேற ஒரு உலகம் மாதிரி தெரியுது” – ரிச்சார்ட்.

“எதுவா இருந்தாலும் மேலே போனா தான் நமக்கு முழுசா தெரிய வரும் ரிச்சார்ட்.” என்று ரிச்சார்ட்டின் கையை பிடித்தபடி முழங்கால் வரை இருந்த நீரில் நடந்தான் டேனியல்.

“ஆமா டேனி. ஆனா ஒன்னு மட்டும் என்னால சொல்ல முடியும். இப்ப நாம வேற எந்த ரூம்க்கும் போக கூடாது. எதுல முதலை இருக்கும்னே நமக்கு தெரியாது. சோ, டைம் வேஸ்ட் பண்ணாம எப்படியாவது அப்பர் டெக்(மேல் தலம்) போகணும்.” என்றான் ரிச்சார்ட்.

*********

அடுத்து விளையாடுவதற்கு பகடையை கையில் எடுத்தான் ப்ரதீப். ஏதோ மனதிற்குள் நெருடலாக தோன்ற அவனின் கைகள் நடுங்க தொடங்கியது. நண்பர்களின் முகத்தை பார்த்தவன் அந்த கடற்கன்னியையும் பார்த்துவிட்டு, “டேய் இது போட்டதும் எனக்கு என்ன ஆனாலும் விட்றாதீங்க டா..” என்று அச்சம் நிறைந்த குரலில் சொன்னான்.

அவன் குரலின் பயத்தை உணர்ந்த அமரன், அவனின் தேவையில்லாத பயத்தை போக்கும் பொருட்டு, “சென்டிமென்ட்டா பேசி கேவலமா நடிக்காத. ஒழுங்கா போடு..” என்று கூறியதும் கையில் இருந்த பகடையை உருட்டிவிட்டான் ப்ரதீப்.

இம்முறையும் ப்ரதீப்பிற்கு ஆறு என்றே பகடையில் விழுந்தது. ஆறில் இருந்த ப்ரதீப்பின் பிங்க் நிற கப்பல் ஆறு கட்டங்களை தாண்டி ஈறாராம் பன்னிரண்டில் சென்று நின்றது.

அதனை பார்த்த விலோ, “ப்ரதீப், உனக்கு மறுபடியும் ஆறு வந்திருக்கு! அடுத்து நீ மூணு போட்டா நம்ம கேமே முடிஞ்சிடும். நாமலும் நம்ம உலகத்துக்கு போய்டலாம். என்ன க்ளூ வந்திருக்குன்னு சீக்கிரமா படி டா.” என்று குஷியாக சொல்லிவிட்டு நிமிர்ந்தவள் ப்ரதீப்பை காணாமல் திகைத்து விழித்தாள்.

ஏனெனில், பகடையில் ஆறென்று விழுந்த அடுத்த நொடியே மாயமாய் மறைந்திருந்தான் ப்ரதீப்!

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்