Loading

சமுத்திரா – 13

அபாயகாரமான எலும்பு முத்திரை கொண்ட கருப்பு கொடி காற்றில் எட்டுத்திக்கும் பறக்க, அதனை வலுவாக பொறுத்தியிருந்த கொள்ளைக்கார கப்பலில் சிலரின் நடமாட்டம் தெரிந்தது. அதிலும் தொலைநோக்கு கருவியும் அந்த கப்பலில் பொறுத்தியிருக்க அதனையே தான் நம் நண்பர்களின் கூட்டம் கவனித்துக் கொண்டிருந்தனர்.

‘ஏற்கனவே, சக்திக்கு அடிபட்டது; அதோடு ஒரு உயிரும் போயிருக்க.. கொள்ளைக்கார கூட்டத்தின் கண்ணில் பட கூடாது!’ என மனதோடு கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் விலோச்சனா.

அவளின் மன்றாடலை கடவுளும் பரிசீலித்தார் போன்று, இவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்த கொள்ளைக்கார கப்பல் வேறொரு திசைக்கு திரும்ப தொடங்கியது.

கொள்ளைக்காரர்களையே பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்கும் அப்பொழுது தான் நிம்மதியே வந்தது. “அப்பாடா திரும்பிட்டானுங்க. நிஜமாவே அவங்க அப்படியே போய்டுவங்க தான?” என சந்தேகமாகவே சக்தி கேட்டான்.

“அப்படி தான் தெரியுது.” என வேறொரு பக்கம் செல்ல தொடங்கிய கப்பலையே பார்த்தான் ரங்கா.

“நாம அடுத்து போடலாமா?” என பகடையை கையில் வைத்துக் கொண்டிருந்த  ஷிவன்யா கேட்டாள்.

“அவங்க இன்னும் கொஞ்ச தூரம் போகட்டும் ஷிவ். இல்லனா அடுத்து ஏதாவது வரதுல நாம இவங்ககிட்ட திரும்பி மாட்டிக்க போறோம்.” என்று ரங்கா சொல்லிவிட அனைவரும் அமைதியாக கொள்ளைகரர்களின் கப்பலையே பார்த்தனர்.

மார்ட்டினின் அருகில் அமர்ந்திருந்த ஷிவன்யா, “மார்ட்டின்! நம்ம உலகத்துல பைரேட்ஸ் எப்படி பட்டவங்க? உங்க அனுபவத்துல நீங்க அவங்கள பார்த்திருக்கீங்களா?” என்றாள். அவளின் கேள்வி அனைவருக்கும் ஆர்வத்தை தூண்ட அனைவரும் மார்ட்டினின் முகத்தை தான் பார்த்தனர்.

“பைரேட்ஸ் ரொம்ப பயங்கரமானவங்க. அவங்களுக்கு மனசாட்சின்னு ஒன்னு இருக்கவே இருக்காது.” என கொள்ளைக்காரர்களை பற்றி தொடங்கும் பொழுதே அவர்களை பற்றி எதிர்மறையாக தான் கூறினார் மார்ட்டின்.

“நம்ம ரோட்ல நடக்குற வழிப்பறி கொள்ளைக்காரங்க மாதிரி தான் அவங்களும். என்ன! ரோட்ல நடக்குறதுல நமக்கு உதவி கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனா, அவங்க கிட்ட மாட்டுனா வாழ்க்கையே போய்டும். நம்மகிட்ட இருக்க பணம், பொருள்ன்னு மட்டும் வாங்காம.. கப்பலோட கடத்திட்டு போய் நம்மகிட்டயே பேரம் பேசுவாங்க. நாள் கணக்கா பட்டினி போடுவாங்க. அவங்க ரொம்ப சைக்கோ தனமானவங்க..” என்று மார்ட்டின் வருத்தமாக கூறினார்.

அவர் அவருடைய அனுபவத்தை கூறுகிறார் என்று அனைவருமே அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

“அப்படி அவங்க உங்க கப்பலை தாக்க வந்தா.. என்ன பண்ணுவீங்க? அவங்க வர்றது உங்களுக்கு எப்படி தெரியும்..?” மேலும் ஷிவன்யா கேட்க, “இதை தெரிஞ்சி நீ கட்டுரை எழுத போறீயா என்ன..?” என விலோ கேட்டாள்.

ஆனாலும், ஷிவன்யாவின் கேள்விக்கு மார்ட்டின், “கடல் கொள்ளைக்காரங்க எல்லா இடத்துலயும் இருப்பாங்கன்னு இல்லை. அவங்களுக்குன்னு சில முக்கிய இடங்கள் இருக்கும். அங்க தான் இருப்பாங்க. உதாரணமா கல்ப் ஆப் ஏடென்ல இருப்பாங்க. அந்த இடத்தை தாண்டி போறதுக்கு நமக்கு அங்க இருக்க அரசே பாதுகாப்புக்கு ஆட்கள் அனுப்புவாங்க. இருந்தாலும் அவங்களையும் தாண்டி பைரேட்ஸ் தாக்க வருவாங்க..”

“பைரேட்ஸ் வரபோறது நமக்கு சிக்னல் மூலமாவே தெரிஞ்சிடும். அந்த மாதிரி நேரத்துல.. விளக்கு எல்லாத்தையும் அணைச்சிடுவோம். அவங்க முதல்ல நம்ம கப்பல்ல ஏற தான் முயற்சி செய்வாங்க. அதுனால, கப்பலை சுத்தி வலுக்குற மாதிரி ஒரு திரவத்தை ஊற்றி வைப்போம். முள் வேலி அமைப்போம். அப்புறம் அவங்க கண்ணுலயே லேசர் லைட்டால அடிப்போம்.” என கடல் கொள்ளையர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர்கள் கையாளும் முறையை பட்டியலிட்டார்.

“அப்படி இது எல்லாம் முயற்சி பண்ணியும் உங்களால அவங்க கிட்ட இருந்து தப்பிக்க முடியலனா என்ன பண்ணுவீங்க?”, இப்பொழுது விலோவும் ஆர்வத்துடனே கேட்டாள்.

“நம்ம கப்பல்லையே பதுங்கு குழி இருக்கும். விக்டரை அதை சரிபார்க்க தான் கீழ அனுப்பினேன். அந்த குழிகுள்ள போய் அடைஞ்சிடுவோம். நம்ம கப்பலுக்கு சொந்தமானவங்க வந்து கூட்டிட்டு போரவரைக்கும் அதுக்குள்ளேயே இருப்போம். அப்படியும் கொள்ளைக்காரங்க கிட்ட மாட்டிக்கிட்டா பேரம் பேசி தான் மீட்க படுவோம்.”

கப்பலில் வேலை செய்தால் வருமானம் எவ்வளவு அதிகமா அதே அளவு ஆபத்தும் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவாக புரிந்தது. அதற்கு மேல் மார்ட்டினிடம் வேறு கேள்விகள் யாரும் கேட்கவில்லை.

“டேய் மச்சான் அமர், கடற்கொள்ளையர்கள் என்ன இவர் சொல்லுற மாதிரி அவ்வளவு மோசமானவங்களா டா..? இப்ப போனவங்களும் திரும்பி வருவாங்களா?” என பயத்துடன் அமரனின் கரத்தை பற்றிக்கொண்டான் ப்ரதீப்.

“நமக்கு படத்துல காட்டுறது எல்லாமே ஒரு ஹீரோ வர்ஷிப் மாதிரி தான் டா காட்டுவாங்க. ரௌடிய்யா இருக்கட்டும் திருடனா இருக்கட்டும்.. அவங்க மேல நமக்கு பரிதாபம் வர வைக்குற மாதிரி தான் எடுப்பாங்க. அதை பார்த்துட்டு நாமளும் இந்த வேலை இப்படிதான்னு ஒரு முடிவுக்கு வர்றோம்” என்ற அமரனை இடையிட்ட ஷிவன்யா,

“ஆமா. சினிமா காரனுங்க என்னைக்கு உண்மையா மக்களுக்கு தேவையானதை படமா எடுக்குறாங்க? ஒன்னு நடிகன் போலீஸா இருப்பான். இல்லை ரௌடியா இருப்பான். படம் புல்லா சண்டை வரும்..” என சொல்ல அனைவரும் சிரிப்புடன் சக்தியை தான் பார்த்தனர். சமீபத்தில் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த படத்தின் கதையை தான் ஷிவன்யா கூறினாள். அதற்கு எதுவும் கூறாமல் சக்தி அமைதியாகவே இருந்தான்.

“உங்களுக்கு சுனில் ஜேம்ஸ் தெரியுமா..?” என்ற ரங்கா அனைவரையும் பார்த்தான். அமர் மட்டுமே தெரியும் என்று கூறினான்.

“யார் டா அவங்க..?” – ப்ரதீப்.

“அவர் நம்ம நாட்டுல இருக்க சரக்கு கப்பலோட கேப்டனா இருந்தார். 2013ல அவங்க ஆப்பிரிக்க நாட்டுல இருக்க டோகோல போய்க்கிட்டு இருக்கப்ப, அவங்களை கொள்ளைக்கார கப்பல் கூட்டம் தாக்கி அவங்களோட பணம், பொருள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு அவங்களையும் தாக்கிட்டு டோக்கோ கிட்ட நிப்பாட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க.” என்று ரங்கா சொல்ல சொல்ல அனைவரும் கதை கேட்கும் ஆவலில் இருந்தனர்.

“கூட இருந்த ரெண்டு க்ரு மேம்பர்ஸுக்குகு செம்ம காயம். சோ அங்க இருந்த போலீஸ் கிட்ட காம்பலைன்ட் கொடுக்க போயிருக்காங்க. அவங்க நீங்க தான் பைரேட்ஸ்கு உதவி பண்ணிங்கன்னு சொல்லி ஜெயில்ல அடைச்சிட்டாங்க. சரியான உணவு இல்லாம, 20 பேர் இருக்க வேண்டிய இடத்துல 80 பேரை அடைச்சு வெச்சி.. அதுலாம் ரொம்ப கொடுமை..” என்று ரங்கா நிறுத்த, சுற்றியிருந்த அனைவரின் கண்களும் அவனை தான் பார்த்தது.

“இதுல இன்னும் என்ன கொடுமைன்னா..? ஜூலைல நடந்த இந்த சம்பவம் மீடியாவுக்கு தெரியவந்ததே அக்டோபர்ல தான். கிட்டத்தட்ட நாலு மாசமா அங்கயே தான் மாட்டிக்கிட்டு இருந்தாரு.. அப்புறம் அவரோட வைஃப் தான் இந்திய தூதரகம் கிட்ட ரொம்ப போராடினாங்க..” என சொல்லும் பொழுதே இடையிட்ட விலோ,

“அவங்..அவங்க திரும்பி வந்துட்டாங்க தான ரங்ஸ். அவருக்கு எதுவும் ஆகலையே..” என கண்களின் கண்ணீர் கட்ட பயத்துடன் அவனின் கரத்தை பற்றினாள்.

அவளின் நிலையை பார்த்தவனிற்கு ‘ஏன் தான் இதை சொன்னோமோ..’ என்றானது.

“ஹ்ம்ம் வந்துட்டாங்க விலோ. ஹாப்பி எண்டிங் தான்.” என அதோடு நிறுத்திக் கொண்டான்.

“இல்ல.. எதோ இருக்கு. முழுசா சொல்லு ரங்ஸ்” என அவனை உளுக்கினாள்.

“எவ்வளவு போராடியும் அவரை மீட்க முடியல.. டிசம்பர் மாசம் அவரோட ஒரு வயசு கூட முடியாத குழந்தை இறந்ததும் தான் பிரச்சனை ரொம்ப பெருசா மாறுச்சு..”

“கடவுளே..” என விலோ அதிர்ச்சியுடன் கூற,

“அதுக்கு அப்புறம் அவரோட வைஃப் பிரதமர் கிட்ட, ‘என்னோட புருஷன் வரமா குழந்தையை வாங்க மாட்டேன்’ன்னு போராட்டம் பண்ண.. நம்ம நாட்டுல இருந்து கொடுத்த அழுத்தத்தால தான் அவரை விடுவிச்சாங்க..” என்று ராங்க முடித்ததும் அவ்விடத்தை அமைதியே ஆட்கொள்ள அனைவரும் உறைந்திருந்தனர்.

‘எப்படிப்பட்ட சூழலில் அனைவரையும் சிக்கவைத்து விட்டேன்..?’ என விலோ தான் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தாள்.

“இதுலாம் உனக்கு எப்படி டா தெரியும்?” என்ற ப்ரதீப்பின் கேள்விக்கு, “கூகிள்ல இல்லாததே இல்லை டா. அண்ட் போலீஸ்னா சில நியூஸ் தெரிஞ்சிருக்கணும்.” என ரங்கா தோளை குலுக்கினான்.

“ஹ்ம்ம். சுனில் ஜேம்ஸ் கதை இன்னும் எந்த இயக்குனருக்கும் தெரியல போலயே. தெரிஞ்சா இவருக்கும் ஒரு பையோபிக் எடுக்க கிளம்பிடுவாங்க..” என்று ஷிவன்யா கிண்டலுடன் சொன்னாள்.

“நமக்கே இப்ப தான ஷிவ் தெரியும். இதை மாதிரி படம் வந்தா தான மத்தவங்களுக்கும் இப்படிப்பட்ட ஆளுங்க இருக்காங்கன்னு தெரிய வரும். நீ எப்ப பார்த்தாலும் சினிமாவை பற்றி தப்பாவே சொல்லு..” என்று விலோ அவளை அதட்டினாள்.

“ம்ம். கதைலாம் முடிஞ்சிடுச்சு. வாங்க நாம அடுத்த ரவுண்டு விளையாட போகலாம்..” என அனைவரையும் திசை திருப்பினான் அமர்.

“இப்ப போனவங்க திரும்பி வர வாய்ப்பிருக்கா..?” என அவர்களின் கண்ணைவிட்டு மறைந்து, வெகு தொலைவு சென்றிருந்த கொள்ளைக்கார கப்பலை பார்த்தபடியே சக்தி கேட்டான்.

“நீ வேற ஏன் டா?” என்று அவனை பார்த்து கேட்ட ப்ரதீப், “கடவுளே.. இனி இந்த விளையாட்டு முடியுற வரைக்கும் நான் அந்த கொள்ளைக்கார கும்பல் கண்ணுல படவே கூடாது. எப்படியாவது என்னை அவங்ககிட்ட மாட்டிக்காம காப்பாத்து..” என இருண்ட வானத்தை நோக்கி வேண்டினான்.

அவனின் வேண்டுதலை கேட்ட ஷிவன்யா, “எவ்வளவு சுயநலம் ப்ரதீப்?”

“நான் மட்டும் என்ன தனியாவா இருக்கேன். நானும் இந்த கப்பல்ல தான இருக்கேன். எல்லாரையும் சேர்த்து வேண்டிக்கிட்டது தான்!” என சமாளித்த ப்ரதீப்பிற்கு ‘தான் ஏன் தன்னை பற்றி மட்டும் வேண்டிக் கொண்டோம்..?’ என மனதில் உறுத்தியது.

அடுத்து ஆடுவதற்காக பகடையை கேட்டு ஷிவன்யாவிடம் கையை நீட்டினான் சக்தி. ஆனால், அவளோ அவனிடம் கொடுக்காமல் மற்றவர்களின் முகத்தை பார்த்தாள்.

“நீ போட வேண்டாம் சக்தி. ஏற்கனவே உனக்கு அடிப்பட்டிருக்கு தான?” – ப்ரதீப்

“பரவால. உங்க எல்லாரையும் தனியா மாட்டிவிட மாட்டேன். நானும் விளையாடுறேன். எது வந்தாலும் எல்லாரும் சேர்ந்தே ஃபேஸ் பண்ணலாம்.” என்று பகடையை ஷிவன்யாவிடமிருந்து வாங்கிக் கொண்டான்.

“சக்தி சொன்னா கேளு..” என்று அவனை தடுக்க வந்த அமரனை நிமிர்ந்து பார்த்தவன்,

“இப்ப நாம எல்லாரும் ஒண்ணா இந்த உலகத்துக்கு வந்திருக்கோம். இன்னும் போக போக இதை விளையாடுறவங்களை மட்டும் வேற எங்கயாவது கூட்டிட்டு போய்டுச்சினா, என்ன பண்ணுவீங்க..? என்னால நீங்க எங்க இருக்கீங்கன்னு தெரியாம? உங்களை விட்டுட்டு தனியா இருக்க முடியாது!” என சக்தி சொன்னதும் யாராலும் அவனை மறுக்க முடியவில்லை.

இப்பொழுது விளக்கை உபயோகிக்க முடியாது என்பதால் சக்தியின் கைபேசி வெளிச்சத்தில் பகடையை உருட்டிவிட்டான்.

பகடையில் ஒன்று என்று வர பச்சை நிற கப்பல் ஒன்றில் சென்று நின்றது. அங்கிருந்த குமிழிலும் எழுத்துக்கள் தோன்ற தொடங்கியது.

உனக்கான விளையாட்டை மீண்டும் விளையாட ஓர் சந்தர்ப்பம்!

என அதில் வந்ததை வாசித்த விலோ,

“அப்படினா நீ மறுபடி போடணும் போல சக்தி. உனக்கு அடிபட்டிருக்குனு போனஸ் கொடுக்குது. இப்படி எல்லாருக்கும் கொடுத்தா சீக்கிரமா முடிச்சிட்டு நாமளும் நம்ம ஊரை பார்த்து போகலாம்.” என்ற விலோ மறுபடி பகடையை சக்தியின் கையிலேயே கொடுத்தாள்.

அதனை வாங்கி சக்தி மீண்டும் உருட்டுவிட, இம்முறை ஆறு என விழுந்தது. ஏற்கனவே ஆறில் இருந்த ப்ரதீப்பின் பிங்க் நிற கப்பலை தாண்டி ஏழில் சென்று நின்றது சக்தியின் பச்சைநிற கப்பல். அடுத்த நொடி எப்பொழுதும் போல் அந்த குமிழுக்குள் எழுத்துக்கள் தோன்றியது.

சக்தியின் அருகில் அமர்ந்திருந்த ப்ரதீப்பும் விலோவும் அதில் வந்த குறிப்பை வாசிக்க தொடங்கினர்.

– சமுத்திரா வருவாள்

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்