
சமுத்திரா – 11
இருளில் மூழ்கி நிசப்தமாக இருந்த கப்பலில் தீடீரென்று படபடவென சத்தம் வந்தன. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை என்றாலும் சத்தம் வந்த திசைக்கு அனைவரின் கவனமும் சென்றது. படபடவென்ற இறைச்சலுடன் சிறகுகளை அடித்துக்கொண்டே கப்பலின் உள்ளிருந்து எதோ பறந்து வருவதை அவர்கள் கவனித்தனர்.
பார்க்க முடியவில்லை என்றாலும் அவர்களை நோக்கி எதுவோ பறந்து வருவதை உணர்ந்த ப்ரதீப், “ஐயோ! வருதே.. வருதே.. எதோ பறந்து வருதே..” என பயத்தில் எச்சில் விழுங்கியபடியே அமரனை மேலும் இடித்துக்கொண்டு அமர்ந்தான்.
பாலூட்டிகளில் பறக்கும் தன்மைக்கொண்ட ஒரே உயிரினமான வௌவால்களின் கூட்டம் தான் அவர்களின் கப்பலின் உள்ளிருந்து படப்படவென சிறகுகளை அடித்துக் கொண்டு வேகமாக வெளியே பறந்து வந்தன. அந்த இருட்டில் கருப்பு நிறத்தில் இருந்த வௌவால்களின் கண்கள் மட்டும் சிவப்பு நிறத்தில் பளபளத்து ஜொலித்தன.
தங்களை நோக்கி பறந்து வருவது வௌவால் என புரிந்துக்கொண்ட ரங்கா, “இரத்தத்தை உண்ணும்னு சொன்னாங்க? ஆனா இங்க வௌவால் தான பறந்து வருது. அது பழத்தை தான சாப்பிடும்?” என கப்பலின் உள்ளிருந்து தொடர்ந்து வெளிவந்துக் கொண்டிருந்த வௌவால்களை பார்த்த ரங்கா சொன்னான்.
“வௌவாலா வருது..?” என்ற அமரனின் கேள்விக்கு “ஆமா டா.” என்றான் சக்தி.
“டேய் கவனிச்சியா அதுங்க நம்ம கப்பல்ல இருந்து தான் வருதுங்க. எனக்கென்னமோ நம்ம கப்பல் வேடந்தாங்கலா மாறிடுச்சி போல தோணுது. ஆமை, முதலை, வௌவால்னு ஒனொன்னா வரிசையா வருது..” என்று ப்ரதீப் கூற,
அவனின் தோளில் கைப்போட்டு வலுவாக அழுத்திய அமரன், “கொஞ்ச நேரம் உன்னோட வாய மூடிட்டு இரு டா. வௌவாலுக்கு நல்லா காது கேட்கும்.” என்றான்.
கூட்டமாக வந்த வௌவால்களில், இப்பொழுது
கூம்பு வடிவ நாசியை உடைய வௌவால்கள் அவர்களை நோக்கி பறந்து வந்ததன.
அது வந்த வேகத்தில் விலோவின் மேல் பாய முயன்றது. அதில், “வீல்..” என்ற அலறலுடன் ரங்காவின் மார்பில் ஒன்றிவிட அவனும் அவளை பாதுகாப்பாய் வேறொரு பக்கம் அழைத்துச் சென்றுவிட்டான்.
அந்த கூம்பு வடிவ வௌவாலை குறுதியுண்ணும் வௌவால் என்றும் அழைப்பர். அது ஒருவகையான காட்டேரி(vampire) வௌவாலின் இனத்தை சேர்ந்தது. விலங்குகள் மட்டுமில்லாமல் மனிதர்களின் இரத்தத்தையயும் உண்டு வாழக்கூடிய தன்மையுடையது அந்த வௌவால்களின் இனம்.
அதனின் கூம்புவடிவ நாசியின் மூலம் மனிதனின் இரத்த ஓட்டத்தை இனம் காண முடியும். அவர்களின் இரத்த ஓட்டத்தின் மூலம் அவர்களை கண்டுபிடித்து அவர்களை முற்றுகையிட வந்தன.
மேலும் மேலும் உள்ளிருந்து தொடர்ந்து.வெளிவந்த வௌவால் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் அனைவரையும் துரத்த தொடங்கியது. நண்பர்கள் கூட்டம் அனைவருமே இருட்டில் ஓடி மறைய தொடங்கினர்.
வேகமாக பறந்து வந்த வௌவால் ஒன்று ஓடிக்கொண்டிருந்த சக்தியின் இடபுற தோள்பட்டை வளைவின் கீழ் மார்பின் மேல் கடித்தது. அது தன் மேல் வந்த உடனே அதனை தன்னிடமிருந்து பிரிக்க முயன்ற சக்தி வெற்றிகரமாக தோல்வியையே தழுவினான். அந்த வௌவால் சக்தியின் உடம்பில் காயத்தை ஏற்படுத்தி அதன் மூலம் வெளியேறும் உதிரத்தை மெல்ல நக்கி உண்ண தொடங்கியது.
வலியில் கத்திய சக்தியின் கத்தலில் அவனை காப்பாற்ற வந்த மற்றவர்களையும் வௌவால்கள் சூழ்ந்துக் கொள்ள சக்தியை யாராலும் நெருங்க கூட முடியவில்லை.
எப்படியோ கப்பலின் உள்ளிருந்து வந்த நூற்றுக்கணக்கான வௌவால்களிடம் சிக்காமல் சில பல கீரல்களுடன் தப்பித்த அனைவரும் சக்தியை இருட்டில் தேடினர்.
அந்நேரம் மாலுமிகளின் உபயத்தால் விளக்குகள் ஒளிர்ந்தது. அவ்வெளிச்சத்தில் அங்கு சக்தி இருந்த நிலைமையை பார்த்த அனைவருக்கும் திக்கென்று இருந்தது. பின் முயன்று அந்த வௌவாலை சக்தியிடமிருந்து பிரித்து அப்படியே தூங்கி வீசினான் ரங்கா.
எழமுடியாமல் எழுந்த சக்தியை ப்ரதீப் பிடித்துக்கொண்டான். தோள்பட்டையில் இரத்தம் கசிய பல்லை கடித்துக்கொண்டு வலியை பொறுத்துக் கொண்டிருந்த சக்தியை பார்த்தவர்களுக்கு வேதனையாக இருந்தது.
மேலேறி வந்த மார்ட்டின், அங்கு பறந்து சென்றுக்கொண்டிருந்த வௌவால்களையும் சக்தியின் நிலையையும் பார்த்தவருக்கு நிலைமை புரிந்தது. அந்த தளத்தில் இருந்த முதலுதவி பெட்டியை எடுத்து வந்து அவரே சக்திக்கு சிகிச்சை அளித்தார்.
சக்தி அணிந்திருந்த வெள்ளை நிற சட்டை செங்குறுதியின் விளைவால் செந்நிறமாக மாற தொடங்கியது. “இரத்தம் நிக்காம போகுது. இவரை உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்..” என்றான் விக்டர் பதட்டமாக.
“வௌவால் இப்படி கடிக்குமா? அதுவும் இப்படி நிற்க்காம இரத்தம் வர அளவுக்கு! எங்க வீட்டு பக்கத்துல இருக்க பழத்தை சாப்பிட வர வௌவால் இப்படிலாம் ஒருநாளும் பண்ணதே இல்லையே?” – ரங்கா.
“சக்தியை கடிச்சது சாதாரணமா வீட்ல இருக்க வௌவால் இல்லை. அது ஒருவிதமான இரத்தகாட்டேரி(vampire) வௌவால். இரத்த காட்டெரியான வௌவாலோட உமிழ் நீர்ல ட்ராகுலின் (Draculin) இருக்கும். அந்த ட்ராகுலின் சுரப்பியால இரத்த ஓட்டத்தை உறையாம பார்த்துக்க முடியும். அதுனால தான் சக்திக்கு இவ்வளவு ரத்தப்போக்கு இருக்கு..” என்ற மார்ட்டின் சக்தியின் ரத்தப்போக்கை ஓரளவு நிறுத்தினார்.
“காட்டேரி வௌவாலா!” என்ற விலோ அதிர்ச்சியுடன் கேட்க,
“ஆமா.. இந்த காட்டேரி வௌவால்களை அடிப்படையா வெச்சி தான் காட்டேரி வரலாறே இருந்தது.” என்றார் மார்ட்டின்.
சிறுவயதில் இருந்து சக்தியுடன் பழகியிருக்கிறாள் விலோ. உடம்பு சரியில்லை என்றாலும் திடமாக இருப்பவனை இப்பொழுது இப்படி இரத்தம் படிந்த சட்டையுடன் பார்த்ததும் கலங்கிவிட்டாள்.
“சாரி சக்தி! என்னால தான இதெல்லாம். நான் அங்க போகாம இருந்திருந்தா உனக்கு இந்த நிலைமை வந்திருக்காது தான?” என விலோ கண்ணீர் சிந்த, “அப்டிலாம் இல்ல விலோ. ஐம் ஓகே. அடுத்து நீ போடுறியா ரங்கா” என ரங்காவை பார்த்தான் சக்தி.
“உனக்கென்ன பைத்தியமா சக்தி. பறந்து போன வௌவால்கள் எப்ப வேணாலும் கப்பலுக்கே திரும்பி வரும். முதல்ல நாம கரைக்கு போகலாம். அப்புறம் எல்லாத்தையும் முடிவு பண்ணிக்கலாம்.” என்றான் ரங்கா.
“ஆமா டா. உன்னை முதல்ல டாக்டர் கிட்ட காட்டனும். இவரு வேற காட்டேரி கதைலாம் சொல்லி ரொம்ப பயமுறுத்துறாரு” என சக்தியின் கையை பிடித்துக்கொண்டான் ப்ரதீப்.
“ஆமா சக்தி. இதுக்கு மேல இதுல இருந்து என்னலாம் வருமோ? நீ ஒருத்தன் இரத்தம் சிந்தனதே போதும் டா.” சக்தியின் தோளை தட்டியபடி அமரனும் உருக்கமாக சொன்னான்.
அவர்களின் பேச்சு புரியவில்லை என்றாலும் அவர்கள் என்ன பேசுவார்கள் என்பதனை ஓரளவு ஊகித்தார் மார்ட்டின். இதில் இருந்து அனைவரும் தப்பித்தால் போதும் என்ற எண்ணத்துடன், “நான் சொல்லுறதை கேளுங்க. இந்த கப்பலையே நம்மகிட்ட ரெண்டு ரெஸ்க்யூ போட்(மீட்பு படகு) இருக்கு. அது மூலமா நாம கரைக்கு போயிடலாம். இந்த கப்பல்லையே இந்த விளையாட்டையும் போட்டு கடல்ல மூழ்கடிச்சிடலாம். யாருக்கும் எதுவும் தெரிய வராது. எது நடந்தாலும் அது இந்த கப்பலோட கடலுக்கடிலயே போய்டும்.” என்றார்.
“ஓகே மார்ட்டின். நீங்க சொல்லுற மாதிரியே செய்யலாம். ஆனா என்னால ரொம்ப நேரமா நாம இருக்க லொகேஷன் கண்டுபிடிக்க முடியல. மேல வந்தப்பவே நான் லைட் ஹவுஸ் பார்த்தேன். ஆனா என்னால இப்ப அதை கூட பார்க்கவே முடியல. என்னோட ஃபோன்ல சுத்தமா சார்ஜ் இல்ல. நீங்க சாட்டிலைட்ல பார்த்துட்டு நாம எங்க இருக்கோம்னு சொல்லுங்க. அதுக்கு ஏற்ற மாதிரி நாம பிளான் பண்ணலாம்.” என அமரன் திட்டம் வகுத்தான்.
“ஓகே அமரன்.” என்ற மார்ட்டின் விக்டரிடம் திரும்பி, கீழ இருக்க மூணு மாலுமிகளையும் அழைத்து வருமாறு சொல்லிவிட்டு கன்ட்ரோல் அறைக்கு சென்றனர்.
“நாம கரைக்கு திரும்ப போறோமா? இதுனால எந்த பிரச்னையும் வராது தான?” என விலோ அந்த விளையாட்டை பார்த்து முழித்துக்கொண்டே தெளிவில்லாமல் கேட்டாள்.
“பிரச்சனை வராதுன்னு நம்புவோம் விலோ. இந்த கப்பலையே மூழ்கடிச்சிட்டா வெளிய எதுவும் தெரியாதுல..” என்றாள் ஷிவன்யா நம்பிக்கையாக. ஆனால் அந்த நம்பிக்கைக்கு ஐந்து நிமிடம் மட்டுமே ஆயுள் இருக்கப்போவதை அறியாமல்.
சுற்றி சுற்றி பார்த்த அமரன், பாய்மரத்தில் இருந்த கயிற்றை பிடித்துக்கொண்டு கப்பலின் கைப்பிடியில் ஏறி நின்று கலங்கரை விளக்கை தேடினான். அவன் தேடியது அவனுக்கு கிடைக்கவே இல்லை.
“என்னடா குரங்கு மாதிரி பண்ணிட்டு இருக்க?” என கேட்ட ரங்காவை பொருள் புரியாத பார்வை பார்த்த அமரன், “லைட் ஹவுஸை தான் டா தேடுறேன். என்னால அதை கண்டுபிடிக்க முடியல”
“நாம ரொம்ப தூரம் வந்துட்டோம் போல அமர். அதான் கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் நமக்கு தெரியல போல..” என்று அமரனை போல் தேடிய ரங்கா சொன்னான்.
“எவ்வளவு தூரம் போனாலும். எங்க இருந்து பார்த்தாலும் லைட் ஹவுஸ் தெரியும் ரங்கா.” என்று அமரன், “என்கூட வா..” என்று அவனின் கையை பிடித்து அழைத்தான்.
“நீங்க நாலு பேரும் இங்கயே இருங்க. வேற எங்கேயும் போகாதீங்க. முக்கியமா கடல்ல என்ன சத்தம் வந்தாலும் எட்டி கூட பார்க்காதீங்க. விக்டர் எல்லாரையும் கூட்டிட்டு வந்தா அவங்களையும் இங்கயே வெயிட் பண்ண சொல்லுங்க.” என்று ரங்காவை இழுத்துக்கொண்டு கப்பலின் உள்ளே செல்ல தொடங்கினான் அமரன்.
“என்ன பிரச்சனை அமர்?” என்று மற்றவர்கள் கேட்டது காற்றிலே கரைந்து போனது.
அமரன் ரங்காவை அழைத்துக்கொண்டு கப்பலின் கன்ட்ரோல் ரூமிற்கு தான் சென்றான். அங்கு தான் மார்ட்டினும் இருந்தார். அவரின் முகத்தில் இருந்த மிரட்சியே அமரனுக்கு ஓரளவு செய்தியை கூறிவிட்டது.
அவரும் இவர்களை பார்த்துவிட்டு பரிதவிப்புடன் அமைதியாகவே இருந்தார். “டேய். என்னடா ஆச்சி? சொல்லி தொலை..” என அமரனை உலுக்கினான் ரங்கா.
உணர்வுகள் அற்ற விழிகளால் ரங்காவை ஏறிட்ட அமரன், “ரங்கா.. நாம இப்ப சென்னை கடல்ல இல்லை.” என்றான் தொண்டை குழி எற இறங்க.
“அப்படினா.. பாண்டி வந்துட்டோம்மா?” என்ற ரங்காவின் கேள்விக்கு, இல்லை என்று தலையசைத்தவன், “நாம இப்ப நம்ம உலகத்துலயே இல்லை. நம்மளோட வைஃபை, சாட்டிலைட் எதுவுமே வேலை செய்யல. அதுனால தான் லைட் ஹவுஸ் கூட நம்ம கண்ணனுக்கு தெரியல..” என்றவனின் குரல் கலங்கி இருந்தது.
“அப்.. அப்படினா..? என்னடா சொல்லுற? கொஞ்சமாச்சும் புரியுற மாதிரி சொல்லுடா?” என ரங்கா கத்த,
“நாம வேற ஏதோ தீவா இல்லை உலகமானு தெரியாத இடத்துல இப்ப மாட்டிக்கிட்டு இருக்கோம் டா.” என்று முடித்தான் அமரன். அவன் கூறியதை நம்ப முடியாமல் ரங்கா மார்ட்டினை பார்த்தான். அவரும் அமரன் கூறியதையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
“அந்த கேம்ல தான் சமுத்திர உலகம்னு போட்டிருந்ததே.. நாம அதுக்குள்ள வந்து மாட்டிக்கிட்டோமா? இப்ப என்ன டா பண்ணுறது?” என்று பதட்டத்துடன் ரங்கா கேட்டான். “எனக்கும் புரியல டா. நாம மேல போய் பேசலாம்.” என மூவரும் மேலே வந்தனர்.
“என்னடா அமர்? போனப்ப நீங்க ரெண்டு பேரும் தனியா போனீங்க இப்ப இவர் கூட வரீங்க?” என்று மார்ட்டினை பார்த்த படி கேட்ட ப்ரதீப், “என்ன பிரச்சனை டா?” என்றான்.
அனைவரின் முகத்தையும் பார்த்து அமரன், “நாம இப்ப பூமிலையே இல்ல..” என்றான்.
“பூமில இல்லையா? அப்படினா எங்க இருக்கோம்?” என்று விலோ பதட்டத்துடன் ரங்காவை பார்த்து கேட்டாள்.
“சமுத்திரா உலகத்துல மாட்டிக்கிட்டோம். நாம முழுசா அந்த விளையாட்டை விளையாடினா மட்டும் தான் நம்மால நாம வாழ்ந்துட்டு இருந்த நம்ம உலகத்துக்கு போக முடியும்.” என்று ரங்கா கூறிவிட, அவர்களின் நெஞ்சுக்கூட காலியானது போல் திக்கென்றனது.
“என்னடா சொல்லுறீங்க? நாம எப்படி வேற ஒரு உலகத்துக்கு வருவோம். இதுக்கு மேல இந்த கேம்ல இருந்து என்னென்ன வருமோ..” என்றான் சக்தியும்.
“நாம எதுக்கு கேம் விளையாடினோம். எதுக்கு இப்படி வந்து மாட்டிக்கிட்டோம். எனக்கு ஒண்ணுமே புரியல டா.” என்ற ரங்கா பொத்தென்று சக்தியின் அருகில் அமர்ந்தான். சக்தி அவனின் ஃபோனை எடுத்து பார்த்தான். ஃபோன் வேலை செய்தது ஆனால் எந்த ஒரு நெட்வர்க்கும் வேலை செய்யவில்லை.
அமரன் மீண்டும் அந்த கைப்பிடியின் அருகில் சென்று கடலை சுற்றி பார்த்தான். ஆனால் கடல் மட்டுமில்லாமல் அவர்களை இருளும் சூழ்ந்து இருந்தது.
அவன் அருகில் வந்த ஷிவன்யா, “வேற வழியே இல்லையா அமர்?” என்றாள் விடைத்தெரிந்தே.
“இல்லை ஷிவ்..” என்று அவளிடம் கூறியவன் அமைதியாக இருந்தான்.
அவர்கள் அனைவருக்கும் இது கனவாக இருக்க கூடாதா என்ற எண்ணம் மட்டும் மனதில் ஓடியது. ஆனால் உண்மை முகத்தில் அறைய, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஸ்தம்பித்த நிலைக்கு சென்றனர்.
அவர்கள் அனைவரும் தற்போது இருப்பது பூமி இல்லையென்றாலும், நூற்றுக்கணக்கான கோள்களால் இயங்கி கொண்டிருந்த பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியாக இருந்தனர்!
– சமுத்திரா வருவாள்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1





