Loading

சபதம் 1:

நனி பேதையே, நயன் இல் கூற்றம்!

விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை;

இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்;

ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்,

குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய,

நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின்

வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல்

நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்

வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி

இனையோற் கொண்டனைஆயின்,

இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே?

-புறநானூறு 227

பொருள்:

(மிகவும் அறிவற்ற, நடுவு நிலைமையற்ற கூற்றமே! அறிவில்லாததால், நீ விளைச்சளைத் தரும் விதையைச் சமைத்து உண்டாய். இச்சொற்களின் உண்மையை நீ நன்கு அறிவாய். ஒளியுடைய வாளையுடைய வீரர்களும், யானைகளும், குதிரைகளும் போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்தன. அவ்வாறு இறந்தும், அமையாதவனாய், நாள்தோறும் பகைவர்களின் படைகளை வென்று அழித்து உன்னை வாட்டும் பசியைத் தீர்க்கும் பழியற்ற ஆற்றல் உடையவனாகிய, உன்னைப்போல் பொன்னாலான பெரிய அணிகளை அணிந்த வளவன் என்னும் வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்த கிள்ளிவளவனின் உயிரைப் பறித்தாய். இனி உன் பசியைத் தீர்ப்பவர் யார்?)

“சூரா.. தவறிழைத்துவிட்டேன், தப்பிக்க மார்க்கம் இல்லை, நம் நாளைய சந்ததியாவது பிழைக்க வேண்டி இந்த முடிவு.. நீ கொடுத்த உயிரை உன்னிடமே சேர்த்து விடுகிறேன் சூரா.. அக்னி தேவன் என் பாவபட்ட உடலை ஆட்கொள்ளட்டும்.. துரோகம் எனும் வார்த்தைக்குச் சரித்திரம் என் பெயரைச் சொல்லட்டும்.. ஈன்ற குலத்தை தாரை வார்த்துவிட்டேன், வளர்ந்த மண்ணை மாற்றானிடம் அடிமைப் படுத்திவிட்டேன்.. தாய் மண்ணைக் காக்கும் இந்த தீ என் உயிரை பருகி எதிரியை பழிதீர்க்கட்டும்.. வாழ்க போர்வீரர் குலம்! ஓங்கட்டும் அக்னி தேவனின் புகழ்!” என்ற உருவம் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பால் சூழப்பட்டு, அந்த காடு எங்கும் ஜொலிக்க பற்றிக் கொண்ட தீ காட்டையும் சேர்த்து எரிக்கத் தொடங்கியது.

வான்நோக்கித் தூக்கி நின்ற போர் வாளுடன் கருகி எரிந்த அந்த உருவத்தைக் கண்டு பதறி எழுந்தாள் அவள்.

“பாப்பா எழுந்துட்டாளா?” என்று அவளின் தந்தை, தாயிடம் கேட்பது காதில் விழ, கனவில் வந்தது நினைவில் நில்லாமல் குழம்பி படுத்திருந்தாள் பன்னிரண்டே வயதுடைய தடாதகை பிராட்டி எனும் மீனாள்.

மதுரையம்பதியை ஆண்ட மலையத்வஜ பாண்டியன் மகள் மீனாட்சி அம்மனை குல தெய்வமாக கொண்ட குடும்பத்தின் இளைய வாரிசு அவள். அந்த அங்கயற்கண்ணி இவளுக்கு மறு பிறவி கொடுத்து தன் கைக்குள் கொண்டு வந்ததற்கு, என்ன காரணமோ, அதை அந்த தாயே அறிவாள்!

காலை கோவிலுக்குச் சென்று அன்னையின் பிரசாதத்தோடு வீடு வந்த தந்தையின் முன் அன்று பூத்த புது மலராய் நின்றாள் பெண். பச்சை நிறத்தில் குங்குமக் கரையிட்டிருக்க பட்டுப் பாவாடை சட்டையில், நெற்றியில் இட்ட திலகமும், அதற்கு மேல் நீண்டு பூசியிருந்த மீனாட்சி அன்னையின் திருநீறுமாய், நின்ற மகளைக் கண்கலங்க பார்த்திருந்தார் சுந்தரபாண்டியர்.

“என்ன பாப்பா, காலைலயே எங்க கிளம்பிட்டீங்க?” என்ற தந்தையின் கேள்விக்குப் பதில் சொல்லத் தயங்கினாள் மீனாள்.

அன்னையின் பதட்டத்தை ஓரக் கண்ணால் பார்த்த மீனாள் தந்தையை நேராய் பார்த்து, “மீனாட்சி நகர்வலம் போறா ப்பா” என்றவளின் பேச்சை எப்பவும் போல் ரசித்து சிரித்தார் சுந்தரபாண்டியர்.

மனைவியைக் கண்களால் சமாதானப் படுத்தியவர் மகளின் கேசத்தைப் பாசத்தோடு கோதி விட்டபடி எதையோ சொல்ல வந்தவருக்கு , தொண்டையில் வார்த்தை முள்ளாய் சிக்கிக் கொண்ட உணர்வு.

“இன்னைக்கு விளையாட போக வேணாம் பாப்பா, நாம வெளிய போறோம்” என்றவர் மகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், அவளைக் கடந்து சென்று கைகளைக் கழுவினார்.

“வெளியவா? எங்க? என்கிட்ட நீங்க சொல்லவே இல்ல?”

“ம்ம்…சென்னைக்கு போறோம் பாப்பா” என்றவர், மனைவிக்கு உணவை எடுத்து வைக்கும் படி கண்களால் சைகை செய்தவர், மகளையும் அழைத்துக் கொண்டு உணவு மேஜையில் அமர்ந்தார்.

“சென்னைக்கா?” என்று கண்களை விரித்த மீனாள், இதுவரை மதுரையைத் தாண்டி எங்கும் சென்றதில்லை.

“என்னப்பா திடீர்னு? அண்ணன பார்க்க போறோமா?” என்றவளின் ஆர்வம் பெற்றவர்களின் மனதை அறுத்தது.

“ம்ம்..” என்றவருக்கு அதற்கு மேல் வார்த்தை வரவில்லை. உணவோடு சமையல்கட்டில் இருந்து வெளிப்பட்ட மனைவி ராதாவை கெஞ்சுதலாய் பார்க்க, கணவனின் தவிப்பைப் புரிந்துகொண்டவர் மகளை சமாளிக்க கோவத்தை ஆயுதமாக்கத் தொடங்கினார்.

“ஆமா பொல்லாத அண்ணன், நீயும் நானும் தான் அவன நினைச்சு உருகுறோம், அவனுக்கு நம்ம நினைப்பு கூட இல்ல..” என்றவருக்கு சொல்லும் போதே கண்கள் கலங்கி போனது.

மகளின் நிலையை எண்ணி துடித்து, மகனுக்கு அழைப்பு விடுத்தவர்களை, “ம்ம்.. அவள இங்க கூட்டி வந்து, என் தங்கச்சி பைத்தியம்னு காட்டணுமா? ஒன்னும் வேணாம்.. அங்கயே ஏதாவது ஹாஸ்பிடல்ல காட்டுங்க..” என்றதோடு தொடர்பைத் துண்டித்த பாசமிகு அண்ணனை பற்றி மகளிடம் என்ன சொல்லிவிட முடியும்? சொன்னாலும் புரிந்து கொள்ளும் வயதில்லையே மீனாளுக்கு!

“போ ம்மா, அண்ணனும் இங்க வர மாட்டேங்குது.. என்னையும் அத கூப்பிட்டு போய் காட்ட மாட்டேங்குற..” என்றவளின் சோகம் பெற்றவர்களை ஊசியாய் தைத்தது, அதனை மாற்றும் பொருட்டு “பாப்பா நீ ரொம்ப நாளா பீச்சுக்கு போனும்னு சொன்னியே டா” என்ற தந்தையை ஏற இறங்கப் பார்த்து வைத்தாள் மகள்.

“அதுக்கு நீங்க எனக்கு ஸ்கூல்க்கு லீவு போட்டு கூப்பிட்டு போறீங்க?” என்றவளை ஆர்வமாய் பார்த்த தந்தையிடம், “இதை நான் நம்பணும்?” என்றதும் அன்னையும் மகளும் சுந்தரத்தின் முகம் போன போக்கைக் கண்டு சிரித்து விட்டனர்.

“இல்ல பாப்பா..” என்று இழுத்த தந்தையை பார்த்த மீனாள், “பீச்சுக்கு போய்ட்டு அப்புடியே மகாபலிபுரம் போவமா? ஸ்கூல் எக்ஸ்கசன் அப்போ கூட என்னய நீங்க விடவே இல்ல..” என்றவளின் உடனடி மாற்றத்தை எண்ணி சுந்தரமும் ராதாவும் நிம்மதி மூச்சு விட்டுக் கொண்டனர்.

சுந்தரம் மதுரை அருகில் திருச்சுனை கிராமத்தில் மல்லிகைக் கடை வைத்து நடத்துபவர். ராதா காட்டு வேலைக்கும் அரசாங்கம் தரும் நூறு நாள் வேலை வாய்ப்புக்கும் சென்று, கணவனுக்கு உறுதுணையாய் நிற்பவர்.

பாசமான குடும்பம், அதில் தப்பி பிறந்தவன் அவர்களின் மூத்த மகன்  அழகர்சாமி. ஊருக்குள் இருந்தவரையில் நன்றாக தான் இருந்தான். படித்த படிப்புக்கு சென்னையில் நல்ல வேலை கிடைக்க, தங்கள் கஷ்டம் எல்லாம் மகன் தீர்த்து விடுவான் என்று உவகைக் கொண்டனர் பெற்றோர்.

அதில் கூடை மண்ணை அள்ளி போட்டவன், “காலம் பூரா உங்களுக்கே சம்பாதிச்சு கொட்டுனா, நாளைக்கு எனக்கும், என் குடும்பத்துக்கும் என்ன மிஞ்சும்?” என்றவன் பெற்றவர்கள் என்றும் பாராமல், “காலம் போன காலத்துல உங்கள யாரு இன்னொரு புள்ளைய, அதுவும் பொம்பள புள்ளையா பெத்துக்க சொன்னது?” என்று  கேட்டவனின் பேச்சு, பெற்றவர்களால் எதிர்த்து பேசக் கூட முடியாமல் கூசிப் போக வைத்தது.

அழகர்சாமி பிறந்து பன்னிரெண்டு வருடம் கடந்து பிறந்தவள் தடாதகை. வயிற்று வலிக்காக மருத்துவரிடம் சென்றவர்களுக்கு அதிசயமாய் உருவானவள்.

அப்போதும் மருத்துவர் சொன்னது, கரு குழாயில் (fallopian tube) குழந்தை வளர்வதால் அதை உடனே அழித்து விடுவது நல்லது, இல்லை என்றால் குழந்தை வளர வளர, குழாய் பெருத்து வெடிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றதும் சுந்தரம் பதறிவிட்டார்.

இந்த வயதில் குழந்தைப் பெற்றுக் கொள்வதே சிரமம் என்ற நிலையில் மனைவியையாவது பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் தான் அவருக்கு.

ராதாவோ பல தலைமுறையாய் பெண் பிள்ளை பிறக்காத இந்த வம்சத்தினருக்கு, தாய் மீனாட்சி இந்த சிசு மூலம் தங்கள் முன்னோர் செய்த பிழையைப் பொறுத்து மன்னிப்பு வழங்குவதாகவே தோன்ற, பிள்ளையை அழிக்க சம்மதிக்கவே இல்லை.

ராதாவா? குழந்தையா? என்ற நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் மனைவியைக் கொண்டு சேர்த்தார் சுந்தரம்.

அன்று இரவு மனைவிக்கு வலி வருவதற்கு சில மணி நேரம் முன்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டு மதுரை மாநகரமே கொந்தளித்துக் கொண்டிருந்தது.

பல வருடம் தன் குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட சாபம் விஸ்வரூபம் எடுத்து தன் மனைவியை காவு கேட்கிறதோ? அன்னை மீனாட்சி கோபம் குறையவில்லையோ? தீ விபத்துக்கும்? தன் வாரிசுக்கும் ஏதும் சம்மந்தம் இருக்குமோ? என்று புத்தி பேதலித்து தன் மனைவியை வைத்திருக்கும் அவசர சிகிச்சை பிரிவின் வாயிலில் பதைபதைப்புடன் நின்றிருந்தார் சுந்தரம்.

பல வருடங்களுக்கு முன் சுந்தரத்தின் வம்சாவழியினர் தன் குடும்பத்து வித்தை, வீட்டில் பிறந்த மகாலக்ஷ்மியை, தங்களை விட கீழ் பிறப்பில் பிறந்த ஒருவனை காதலித்தற்காக அடித்து துன்புறுத்த, அந்த ஊரின் முச்சந்தியில் தன் உடலுக்கு தீ வைத்த அந்த பெண், “பாண்டி வம்சம் காலம் காலமாக பெண்களுக்கு அநீதி இழைத்து, அன்னை மீனாட்சியின் பெரும் கோபத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கும் இந்த வீட்டின் பிறந்த மகளாகிய நான்.. என்னை ஆட்கொள்ள போகும் இந்த அக்கினியின் சாட்சியாய் சொல்கிறேன்.. இனி ஒரு பெண் மகள் இந்த குடும்பத்தில் பிறக்க மாட்டாள்; வீட்டிற்கு வரும் பெண் மகளும் நெடுநாள் நிலைத்து இருக்க மாட்டாள்; அதைமீறி  ஒரு பெண் சிசு இவ்வீட்டின் குலமகளுக்கு பிறந்தால் அன்று என் அன்னை மீனாட்சி, நான் பிறந்த வம்சத்தை மன்னித்து வாழ வைக்க அவதரிப்பாள்..”

இதுவரை சுந்தரபாண்டியர் குடும்பத்தில் பெண் பிள்ளைகள் பிறக்கவே இல்லை. வீட்டுக்கு வாழவந்த பெண்களும்  நாற்பது வயதைக் கடந்து உயிர் வாழ்ந்ததும் இல்லை.

அந்த சாபத்தை எண்ணி எண்ணி, மனைவிக்காக வெளியே தவம் இருந்தவர் காதுகளுக்கு  மீனாட்சி அம்மன் கோவிலில் தீ பற்றிக் கொண்டு எறிவதாக செய்தி வந்தது. பயம் நெஞ்சைக் கவ்வ, அன்னை மீனாட்சியை நோக்கி கால்நடையாக சென்றார்.

மனமெல்லாம், “ஆத்தா பல வருஷம் என் குடும்பத்த தண்டிச்சது பத்தாதா? பண்ணின தப்ப மன்னிக்க மனசில்லையா? என் பொண்டாட்டியையும் புள்ளையையும் பத்திரமா என்கிட்ட குடுத்துரு தாயி.. தங்க தட்டுல வச்சு தாங்கிகறேன், உன் வம்சத்த நீயே அழிக்கலாமா? உன் கோவத்தை குறைச்சு என் உசுர காப்பாத்த கூடாதா? என் பெண்டாட்டியோட சேர்த்து என்னையும் என் புள்ளையையும் உன்கிட்டையே கூப்பிட்டுக்க ஆத்தா..” என்று எரியும் கூரையின் அடியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்துக் கிடந்தவரை, அங்கு கூடி இருந்தோர் காப்பாற்ற முயல, “அம்மா.. எனக்கு வழி சொல்லு இல்ல.. என்னையும் உன்கூட கூட்டுக்க ” என்று கூட்டத்தை மீறி நெருப்பை நெருங்கியவருக்கு பதிலாய், அன்னை மீனாட்சி மக்களோடு சேர்ந்து மழையைத் தருவித்து, தன் உடைமையையும் தன் மக்களையும் எப்போதும் போல் காத்துக் கொண்டாள்.

அத்தோடு ராதாவும், சுந்தரபாண்டியரும் குடும்பத்தின் சாபம் தீர்க்க அவதரித்த ஒற்றை பெண்மகவுக்கு தன் அன்னை மீனாட்சியின் பெயரை தடாதகை பிராட்டி என்று சூட்டி, உயிராய் வளர்க்கத் தொடங்கினார்.

அந்த குடும்பத்தின் குலவிலக்கை, தான் வணங்கும் தெய்வத்தின் மறுபிறப்பாய் வந்த மகளின் நிலை அறியாது தவித்து நிற்கும் இந்த தம்பதியருக்கு, அருளும் வழியும் அவளாகி போவாளா?

ரணசூரன் வருவான்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. ஆரம்பமே அதகளம் … நல்லா இருக்கு …