
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 7
மறுநாள் காலையிலேயே அவர்கள் வீட்டுக்கு மாநகராட்சியிலிருந்து ஆட்கள் வந்துவிட்டனர். காரணம் மது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தாள். அவளுக்குத் தேவையான மருந்துகளைக் கொடுத்து அவளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறியவர்கள், கொசுமருந்து வண்டிபோல ஒரு வண்டியில் கிருமிநாசினியை அவர்கள் வீடு முழுவதும் தெளித்து, அந்தத் தெரு முழுக்கவும் தெளித்து, மது வீட்டை அடைத்துக் கூடவே அந்தத் தெருவையும் அடைத்து வைத்துவிட்டனர்.
அதில் அக்கம் பக்கம் உள்ளவர்கள் எந்த உதவியும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் வாய்க்கு வந்தபடி ஏச்சும் பேச்சும் வேற.
சித்தார்த்தின் அம்மாவோ இவர்கள் வீட்டுப்பக்கம் கூட வரவில்லை. சித்தார்த் மதுவுடன் கூடவே இருந்தான் என்னும் விஷயம் இன்னும் அவர் காதுக்குச் சென்றடையவில்லை. அவருக்கு அவர் உயிர் முக்கியம் அதலால் கணவன், மகள் என ஒருத்தரையும் வீட்டை விட்டு வெளியே எங்கேயும் அனுப்பவில்லை.
மதுவின் வீட்டுக்கு முழுக்க முழுக்க உதவி செய்தது அவளின் தாய்மாமனான பூபாலன் தான். ஆதவன், அகிலா இப்பவும்கூட மதுவீட்டில் தான் இருந்தனர், ஆனால் அவர்களைப் பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. மதுவுக்கு சரியாக வேண்டும். தங்கை குடும்பம் எந்தச் சிரமும் இல்லாமல் இருக்க வேண்டுமென அத்தியாவசிய பொருட்களை எல்லாம் வாங்கி வாங்கி கொடுப்பது தான் அவர் வேலையாகவே இருந்தது.
வீட்டில் மதுவுக்கு நோயின் தீவிரம் அதிகரிக்க தொடங்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டாள். கூடவே சித்தார்த்தும் அவனையும் நோய் தாக்கிவிட்டது, ஆனால் மது அளவுக்கு இல்லை.
மதுவுக்கு ஆக்ஸிஜன் அளவு தொன்னூறுக்கும் தொன்னிற்றி இரண்டுக்கும் நடுவிலேயே ஊசலாடிக் கொண்டிருந்தது. மூச்சு விடும் (respiration rate) அளவு பொதுவாக 12ல் இருந்து 18வரை தான் இருக்கும். ஆனால் மதுவுக்கோ முப்பதுக்கு அருகில் இருக்க கூடவே சர்க்கரை அளவும் அதிகமாக அவளைத் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர்.
சித்தார்த்தை கொரோனா பிரிவில் அனுமதித்து அவனுக்கும் சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனாலும் அவ்வப்போது அவளிருக்கும் அறைக்குச் சென்று அவளை வெளியில் நின்றவாறே கண்ணாடி வழியே பார்த்துக் கண்ணீருடன் வருவான்.
என்னை உன்னிடம் விட்டுச் செல்கிறேன் ஏதும் இல்லையே என்னிடத்தில்..
எங்கே போவது? யாரை கேட்பது? எல்லா பாதையும் உன்னிடத்தில்..
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்? என் இரவையும் பகலையும் மாற்றிப் போனாய்..
ஏன் இந்தப் பிரிவைத் தந்தாய்? என் இதயத்தில் தனிமையை ஊற்றிப் போனாய்..
மிகவும் கவலைக்கிடமாகத் தான் இருந்தது அவளின் நிலை காரணம் ஏற்கனவே சர்க்கரை நோயால் அவள் பாதிக்கப்படிருந்ததால். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்ஸிஜன் அளவும், மூச்சு விடும் அளவும் சோதித்து, அதற்கான சிகிச்சை செய்து கொண்டே இருந்தனர்.
கொரோனாவுக்காகக் கொடுக்கப்படும் மருந்து அவளின் சர்க்கரை அளவை வேறு அதிகப்படுத்திக் கொண்டே இருந்தது. அனைவரும் அவளுக்காக வேண்டுதலோடு காத்துக்கொண்டிருந்தனர். சித்தார்த் உயிரைக் கையில் வைத்துக் கொண்டு அவனவளுக்காகக் காத்திருந்தான்.
அவனுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்க, திடகாத்திரமான காளையவன் மருத்து, மாத்திரை உதவியுடன் சீராக இருந்தான். அவனை வீட்டிற்கு செல்லும்படி மருத்துவமனை கூறியும் கூட அவளுக்காக டாக்டரிடம் கெஞ்சி, கூத்தாடி அங்கேயே தங்கி அவளை அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வந்தான்.
தீவிர சிகிச்சையின்காரணமாக ஓரளவுக்கு உடல் தேறி அவள் ஆக்ஸிஜன் அளவும், மூச்சுவிடும் அளவும் கொஞ்சம் சீராகவும், தீவிர சிகிச்சை அறையிலிருந்து கொரோனா அறைக்கு மாற்ற, சித்தார்த் இருந்த அறைக்கு அருகிலேயே அவளுக்கும் இருக்க, அவ்வப்போது அவன் சென்று பார்த்துக்கொண்டான்.
பல நாட்கள் கழித்து இருவரும் குணமாகி வீடுதிரும்பினாலும் மீண்டும் இருவரும் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் கூறி அனுப்பிவிட்டனர். இப்போது மது விவரமாகத் தனியாக இருந்தாள். இருவரும் வெவ்வேறு அறையில் தனிமையாக இருந்து பதினைந்து நாட்கள் கழித்து தான் மீண்டும் இயல்புநிலைக்கு வந்தனர்.
மாதக்கணக்காக மகளின் அருகாமை இல்லாமலிருந்த ஈகை மகளைக் கட்டியணைத்து கதறிவிட்டார். ஏனெனில் அவ்வளவு கவலைக்கிடமாக மகள் இருந்தாள் அல்லவா! அன்பழகனும் கண்ணீர் விட்டார். மதுவின் தாயும், தகப்பனும் சித்தார்த்திடமும் நன்றி கூறினர்.
ஈகை “சித்து தான் அவனைப் பத்திக்கூட கவலைப் படாம மதுவ பார்த்துக்கிட்டான். அவனுக்குத் தான் நாங்க கடமைபட்டு இருக்கோம்” எனக் கண்ணீருடன் உணர்ச்சிவசமாகக் கூறினார்.
சித்து “அத்தை! நம்ம தாராக்கு நான் பார்க்காம யார் பார்ப்பா?”
ஆதவன் “ஏய் மது! நீ இங்க இருப்ப நல்லா எஞ்சாய் பண்ணலாம்னு இங்க வந்தா.. நீ எங்கொருந்தோ கொரோனா புடிச்சுட்டு வந்து ஹாஸ்பிடல்ல போய்ப் படுத்துட்ட.. நான் தனியா எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா?”
மது “அப்படி என்னடா கஷ்டப்பட்ட? உன் கூடத்தான் அஸூ அண்ணா, அகிலா அக்கா எல்லாரும் இருந்திருப்பாங்கல”
ஆதவன் “அவங்க அவங்க வேலைய பார்த்தாங்க. ஆன்லைன் கிளாஸ் அவங்களா அட்டன் பண்ணினாங்க.. அந்த என்.பி சாருக்கு என்மேல என்ன காண்டோ என்கிட்டயே கொஸ்ட்டினா கேட்டாரு தெரியுமா? நீ இல்லாம எனக்கு ஆன்ஸரும் தெரியல.. ஆன்லைன்ல எல்லார் முன்னாலயும் அவ்ளோ திட்டு.. பொண்ணுங்க முன்னாடி அசிங்கமா போச்சு குமாரு” எனப் பாவமாக முகத்தை வைக்க, அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். பல நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் சிரிப்பலைகள்.
மது “இது உனக்கே ஓவரா இல்ல” என அவனை அடிக்க,
ஆதவன் “ஆமா எல்லாரும் சோக கீதம் வாசித்தாங்க.. என்னோட சோக கதைய சொன்னா சிரிக்கிறாங்க.. என் கதை சிரிப்பா சிரிக்குது. ஓஹ் நோ.. என்ன குடும்பம் டா இது?” என நாடகபாணியில் கூற மீண்டும் சிரிப்பலை. வெகுநாட்கள் கழித்து திருப்பிய இயல்புநிலையை இனிப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இத்தனை நடந்தும் சித்தார்த்தின் அம்மாவும், தங்கையும் வரவில்லை போனில் நலம் விசாரித்ததோடு சரி. இளங்கோ மட்டுமே வந்து அவ்வப்போது விசாரித்து விட்டுச் செல்வார். அப்போதும் அவருக்கு அவர் வீட்டில் ஏச்சும் பேச்சும் தான். அவர் வெளியே சென்றால் குளிக்காமல் வீட்டிற்குள் அனுமதிப்பதே இல்லை ஆனந்தி அவ்வளவு பயம் உயிர்மேல்.
கொரோனாவின் கொடூரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியபிறகு ஒரு நாள் சித்தார்த் வீட்டில்,
சிந்து “அம்மா! அம்மா!” எனக்கத்திக் கொண்டே வீட்டிற்குள் வந்தாள்.
ஆனந்தி “ஏண்டி இந்தக் கத்து கத்துற?”
சிந்து “ஆஆஆ.. எனக்கு அவ்ளோ காண்டாகுதும்மா..”
“என்னாத்தீக்கு காண்டாகுது உனக்கு?”
“நான் டெய்லர் கடையாண்ட போனேன்ல அங்கீருக்கும்போது அஸ்வந்த் அத்தான் அந்த அகிலாவ பைக்ல இட்டுகீனு போறாங்கம்மா”
“அவன் மாமா மகள அவன் இட்டுகீனு போனா உனக்கேண்டீ காண்டாகுது?”
“ஹ்ம்ம்.. அவ எப்படி என் அத்தானோட போவா? எனக்கு அழுகையா வருது”
“இதென்னடி உன்னோட பேஜாரா போச்சு. அவளுக்கும் அவன் அத்தான் தானடி”
“இல்ல அஸ்வந்த் அத்தான் எனக்கு மட்டும் தான். அவ கூடலாம் அத்தான் போகக் கூடாது”
“ம்ம்.. அவன் இன்னா உன் புருஷனா கண்டிஷன் போட. போடி அந்தாண்ட”
“அப்போ புருஷனாக்கி வை. எனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் பண்ணிவை”
“ஏய் அவன் இப்ப தாண்டிப் படிப்ப முடிச்சு வேலைக்கே போயிருக்கான். அதுக்குள்ள எப்படி அவனுக்குக் கல்யாணம் பண்ணுவாங்க. கூடவே அந்தச் சீக்காளி புள்ளய வேற என் அண்ணீக்காரவங்க பெத்து வைச்சிருக்காக. அவள கட்டிக்குடுத்துட்டு தான அவனுக்குக் கல்யாணம் வைப்பாங்க”
“எனக்குத் தெரியாது.. நீ போய் மாமாக்கிட்ட பேசு.. எனக்கும் அஸ்வந்த் அத்தானுக்கும் கல்யாணம் பண்ணி வை”
“சரி உன் அப்பாக்கிட்ட கேட்டுகீனு என்னனு பார்ப்போம்”
“இந்த அவுல் குடுக்குற (ஏமாத்துற) வேலை எல்லாம் வேணாம். இன்னைக்கே போய் நீ பேசு. அப்பாக்கிட்ட அப்புறம் சொல்லிக்கலாம். இல்ல நான் இன்னா பண்ணுவேன்னே தெரியாது”
என ஆனந்தியை கட்டாயப்படுத்தி அனுப்பிவிட்டாள் அன்பழகன் வீட்டுக்கு. அன்பழகனின் வீட்டுக்கு வந்த ஆனந்தியை ஈகைச்செல்வி இன்முகமாகவே வரவேற்று குடிக்க குடுத்தார். ஆனந்தியும் அவர் அம்மாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டே கொறிக்க கொடுத்த தின்பண்டங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அன்பழகன் வீட்டுக்கு வந்ததும் தங்கையை வரவேற்றார்.
“வா ஆனந்தி.. மச்சான் என்ன பண்றாங்க? ஏன் வீட்டுப்பக்கம் இப்போலாம் சரியா வரதே இல்ல”
“எங்கண்ணே.. வூட்டுவேலையே சரியா போயிது.. எங்க வூட்டுல என்ன வாஷிங்மெஷினு, கூட்டி பெருக்குற மெஷினுமா இருக்கு? துவச்சி, கூட்டிப்பெருக்கவே நேரம் சரியா இருக்கு” என் சலிப்பாகக் கூறி முந்தாணையால் முகத்தைத் துடைத்தாள்.
அன்பழகன் போன மாதம் தான் வீட்டிற்காகச் சலவை இயந்திரமும் (washing machine), தூசகற்றும் கருவியும் (vacuum cleaner) வாங்கியிருந்தார். அதைப் பார்த்து விட்டு அந்தப்பொருட்கள் தங்களிடம் இல்லை என்று பதியவைக்கவே இப்படியான பேச்சு.
“மதுக்கு கொரோனா வந்ததிலிருந்து தூசி அலர்ஜியா இருக்கு அதான் வேக்கம் கிளீனர் வாங்கினோம். அதோட ஈகைக்கு ரொம்ப குறுக்குவலியா இருக்கு அதான் சேர்த்து ஒரு வாஷிங்மெஷின் வாங்கினேன். உனக்கு வேணா அடுத்த மாசம் வாஷிங் மெஷின் வாங்கி தாரேன்”
“சரிண்ணே! என் அண்ணே என்னைக்கு என்னைய வலிக்க வேலை பார்க்கவிட்டுச்சு. என் புருஷனுக்கு தான் அக்கறை இல்ல என்மேல, அதுக்கு தான் அந்த ஆத்தா என் அண்ணனுக்கு மொத்தமா என் மேல பாசத்தை கொடுத்திருக்கா”
என இனிக்க இனிக்க பேசித் தனக்கு தேவையானதை சாதித்துக் கொண்டார். அத்தோட நிறுத்தாமல் வந்த வேலையையும் கச்சிதமாக ஆரம்பித்து விட்டார்.
“அண்ணே! அஸ்வந்துக்கும் வயசாகிட்டே போகுது.. கல்யாணத்த முடிச்சிடலாம்ல”
“அவன் சித்தார்த்துக்கே சின்னவன் தான. இப்போ என்ன அவசரம் கொஞ்சம் நாள் போகட்டுமே..”
“அதுதாண்ணே நானும் சொல்ல வந்தேன். என் வீட்டு கயிதை படிக்கவும் போக மாட்டேனுட்டா.. அவளுக்குப் பார்த்துகினு தான் நான் சித்தார்த்துக்கு முடிக்க முடியும். அதான் சிந்துவ அஸ்வந்த்க்கு கேட்கலாம்னு வந்தேன்” எனப் படானு பானைய உடைத்துவிட்டார்.
முதலில் கொஞ்சம் தடுமாறினாலும் அன்பழகன் நிதாதனமாகச் சிறிது நேரம் யோசித்தவர்,
“ஆனந்தி! உன் பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வரது எனக்குச் சந்தோஷம் தான் ஆனால்” என அவர் வார்த்தையை முடிக்கும் முன்பே,
“அப்புறம் என்னண்ணே ஒரு நல்ல நாளா பார்த்து நிச்சியம் வச்சிக்கலாம்”
“இரு ஆனந்தி அவசரப்படாத என்னை முழுசா சொல்லவிடு. எனக்குச் சந்தோஷம் தான் ஆனா கட்டிக்கிற போற இரண்டு பேரோட சம்மதமும் முக்கியம்”
“அதெல்லாம் என் மகளுக்குச் சம்மதம் தான்”
“இரண்டு பேர் சம்மதமும் முக்கியம். இரண்டு பேரும் நேரடியா என்கிட்ட சம்மதம் சொல்லிட்டா அடுத்து ஆக வேண்டியத பார்க்கலாம்” எனக்கூற,
“அவ்வளவு தானண்ணே இந்தா இரு” எனக்கூறிவிட்டு மகளை அலைபேசியில் அழைத்து இங்கு வரும்படி கூறினார். அவள் ஏற்கனவே எப்போ எப்போனு இருக்க அழகாகக் கிளம்பி வந்துவிட்டாள்.
“வாம்மா மருமகளே! அதிசயமா தான் இருக்கு உன்னைப் பார்க்குறது”
“இல்ல மாமா. அது வந்து”
“வாக்கப்படுற வீடுக்கு அடிக்கடி வரக்கூடாதுனு நான் தான் விடலண்ணே”
“அது சரி. இங்க வாமா” என அருகில் அழைத்து அமர வைத்தார்.
“அம்மா பேசினா.. உனக்கும் அஸ்வந்துக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு. நீ என்ன நினைக்குற? உனக்கு அத்தான கட்டிக்க சம்மதமா?” எனக் கேட்க,
“எனக்கு அத்தானை கட்டிக்க சம்மதம். அத்தான மட்டுந்தே கட்டிக்க சம்மதம்” எனத் தரையைப் பார்த்துக் கொண்டே கூறினாள்.
இது அனைத்தையும் மதுவின் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த அகிலாவுக்கு நெஞ்சில் இடி விழுந்த உணர்வு தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
8
+1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 6
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா!- அத்தியாயம் 8
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அம்மாவும் மகளும் ஈகைமா மேல் அவ்ளோ பொறாமை வெச்சிட்டு இருக்காங்க ஆனா அவங்க பெத்த பையன் மட்டும் இவங்களுக்கு பொருத்தமா தோணுதோ?
தனக்கு தேவை எனும் போது மட்டும் நாக்கு எப்படி எல்லாம் பேசுது.
சித்தார்த் மதுவின் துணையாகவே இருந்திருக்கிறான். அவன் அன்பு உன்னதமானது.
மற்றவர்களை பற்றி சிறிதும் யோசிக்காமல் தான் தான் என்றே இருக்கின்றனரே அம்மாவும் மகளும்.
இவர்கள் ஆசைப்பட்டால் போதுமா? அது அப்படியே நிகழ்த்துவிட வேண்டுமோ?
Selfish mother and daughter..
Thank you so much
ஓஹோ இதான் பிரச்சனையா … நல்ல எண்ணம் இருந்தா தானே நல்லது நடக்கும் சிந்து … கெட்ட எண்ணத்தை வச்சுக்கிட்டு இருந்தா எப்படி ??
வினை விதைத்தவன் வினை அறுப்பான்..
மிக்க நன்றி😍😍