
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 24
சித்தார்த் கோயம்புத்தூர் சென்று இன்றுடன் இரு நாட்கள் கடந்துவிட்டது. யாருடனும் பேசும் மனநிலை இல்லாமல், யாருடைய அழைப்பையும் ஏற்கவில்லை அவன். தன்னுடைய அஜாக்கிரதையால், தன்னுடைய கோபத்தால் அவளைக் கஷ்டப்படுத்திவிட்டோமோ என அனுதினமும் வருந்தினான். அவளுக்கு முடியாமல் போனது பெரிதும் பாதித்தது அதனால் குற்ற உணர்வில் தவித்தான். அவளிடம் பேச ஏதோ ஒன்று தடுத்துக் கொண்டே இருந்தது.
ஆனால் மதுவுக்கு முழு நேர வேலையும் அவனை நினைப்பது மட்டும் தான். நேரம் பார்த்துப் பார்த்து அவனுக்குப் போனில் அழைப்பதும், பல்லாயிரம் தடவை வாட்ஸப்பில் மன்னிப்பு வசனம் அனுப்புவதும் தான் அவளின் பிரதான வேலையே. அவன் அவளுடைய எந்த அழைப்பையும் எடுக்கவில்லை எனவும் ஆதவனிடம் கேட்டுப் புலம்ப ஆரம்பித்தாள், “அவர் என்மேல கோபமா இல்லனு தான நீ சொன்ன ஆனா என் போன், மெஜேஜ் எதுவுமே அவர் எடுக்குறார் இல்ல” என அவனைப் பார்க்கும் போதெல்லாம் கேட்க ஆரம்பித்தாள்.
ஆதவன் அழைக்க அவன் அழைப்பையும் சித்தார்த் எடுக்கவில்லை, ஆதவனிடம் “தான் வரும் வரை அவளைப் பார்த்துக்கொள்” என அன்று கூறியதோடு முடித்துக்கொண்டான். அவன் பேசிய ஒரே ஒரு நபர் என்றால் அது அவன் தகப்பன் மட்டுமே! அதுவும் ஓரிரு வார்த்தைகள் அவ்வளவே! அதுவும் அவனவளின் நலம் மட்டுமே கேட்டு அறிந்து கொள்வான்.
தினமும் காலையும், இரவும் மதுவும் இளங்கோவும் சேர்ந்து தான் உணவு சாப்பிடுவது. மதியம் மட்டுமே தனியாகச் சென்று சாப்பிட வேண்டிய நிலை. முதல் நாள் அவன் விட்டுச் சென்ற அன்று சாப்பிடாமல் முடியாமல் போனது. நேற்று மதியம் அவள் சாப்பாடு எடுக்கச் சென்றால் அங்கு ஒன்றுமே இல்லை. தனக்காக மட்டும் என்ன செய்து சாப்பிடுவதென அவளும் பால் இருந்ததால் அதை மட்டுமே குடித்துவிட்டு வந்தாள்.
இன்று இளங்கோ கடைக்குச் சென்றபிறகு கதவைத் தட்டினார் ஆனந்தி.
“என்னங்கத்தை”
“மஹாராணி ரூம்குள்ளயே குந்திக்கினா வேலைலாம் ஆருபாப்பா? போய்ச் சோறாக்கு போ. மதியத்துக்கு மட்டும் தான் அளவா ஆக்கு. இராவுக்கு புதுசா செய்யனும் ஆமா செல்லிட்டேன்” எனக் கத்திவிட்டு சென்றார் ஆனந்தி. இதற்கெல்லாம் காரணம் சிந்து.
காலையில் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு வந்த ஆனந்தியிடம், “இன்னாம்மா நீயி. வூட்டுக்கு மருமவனு ஒருத்தி வந்தும் நீ வேலை பாத்துத்துக்கீன.. அவள பாக்க சொல்லும்மா”
“எனக்கு அவள பாத்தாலே பத்திக்கின்னு வருது. அவ கையால நான் துண்ணமாட்டேன்”
“இன்னாம்மா நீயி. நான் இன்னா உன்னை அவகையால வாங்கியா துண்ணசொன்னேன்.. அவள வேலைக்காரியா மாத்துனு தான சொன்னேன். நீ ராணிமாதிரி இருந்து வேலை வாங்குங்குறேன். எவ்வூட்டுல எம்மாமியா எப்படி என்னைமிரட்டி உட்காந்தே துண்ணுது அதுமானிக்கே இரு” என்றாள் வன்மத்தோடு.
“அப்டீங்கிற”
“ஆமா. நம்ம இன்னாத்துக்கு அவளுக்குச் சேவகம் செய்யனும்?”
எனக்கூறி ஆனந்தியை கிளப்பிவிட, ஆனந்தி இங்கு வந்து மதுவை விரட்ட ஆரம்பித்தார். அவர் வந்து கூறிவிட்டு செல்ல, எழுத்து சமையலறைக்கு சென்றாள். இவள் சமையலறைக்குள் வரவும்,
“மதியத்துக்கு ஆட்டுக்கறி குழம்பு வச்சி, சிந்துக்கு சுவரொட்டி வாங்கிருக்கேன் அத வறுத்துரு” எனக் கூறிவிட்டு, அம்மாவும் மகளும் சேர்ந்து தொலைக்காட்சி நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சமையலறைக்கு வந்தவளுக்கு அன்னைக்கு சித்தார்த் வாங்கிக்கொடுத்த சாக்லெட்டின் நினைவு வர, குளிர்சாதனப் பெட்டியில் அவள் வைத்த இடத்தில் சென்று தேட, காணவில்லை.
‘இங்க தானே வச்சேன்’ எனக் குனிந்து சுற்றித் தேடினாள் காணவில்லை. ‘யாரும் எடுத்தார்களா? கேட்கலாமா?’என நினைத்தவள், வெளியே வரச் சிந்து அவளைப் பார்த்துக்கொண்டே அதை முழுவதுமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவள் வேண்டுமென்றே மது கண்முன் அதைச் சாப்பிட வேண்டுமென நினைத்து, இப்போது அவள் பார்க்கும் படி அமர்ந்து சாப்பிட்டாள்.
‘வேண்டுமென்றே செய்கிறாள்’ என நினைத்த மது கனத்த மனதுடன் மீண்டும் உள்ளே நுழைந்தவள், யூடூப் உதவியுடன் சமைக்க ஆரம்பித்தாள். அனைத்தும் சமைத்து முடித்து, எடுத்து டேபிளில் வைத்துவிட்டு ஆனந்தியிடம்,
“சாப்பாடு ரெடி ஆகிடுச்சு அத்தை” எனக்கூறிவிட்டு அவளறைக்கு சென்றாள். அடுக்களையில் நின்றது உடலெங்கும் வேர்த்து, கசகசவென இருக்க குளிக்க உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றாள். அதற்குள் இங்கு ஆனந்தியும், சிந்துவும் சாப்பிட ஆரம்பித்திருந்தனர்.
“இன்னாம்மா அவளுக்கு இம்புட்டு நல்லா சமைக்கவருமா?”
“ஆமா என்னத்த சமைச்சா சுமார்தேன்”
“அய்யே பொறாமை உனக்கு. நல்லாக்கீது” என ருசித்துச் சாப்பிட்டாள் சிந்து.
“சரி.. சரி துண்ணு. இந்தா சுவரொட்டிய துண்ணு. டாக்டர்காரி இரத்தமில்லனு திட்டினால”
“ஆமா..” என இருவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்ததும். கிட்சனுக்கு சென்ற சிந்து “ம்மா! என் வூட்டுக்காரருக்கு கறிகுழம்பு பிடிக்கும் நான் குடுத்துத்துண்டு வரவா?”
“இதென்னடி கேள்வி.. போட்டுக்கினு போ” எனக்கூற மீதியிருந்த அத்தனையையும் டப்பாக்களில் அடைத்துக்கொண்டு கிளம்ப, குளித்து முடித்த மது அடுக்களைக்குள் வரச் சரியாக இருந்தது.
“ஏய் மது.. அம்புட்டையும் கழுவி வச்சிடு” எனக்கூறிவிட்டு புருஷனுக்கான சாப்பாட்டுடன் அவள் வீட்டுக்குச் சென்றாள். சட்டியில் ஒட்டிய சாதம் கூட இல்லை. அத்தனை வேலையையும் செய்தும் அவளுக்காக ஒருபிடி சாதம் கூட இல்லை இன்றும் ஒரு டம்ளர் பாலைக்குடித்துவிட்டு சென்று படுத்தாள்.
மறுநாள் மதியத்துக்கு சமையல் செய்தவள் தனக்காக ஒரு தட்டில் எடுத்து அடுக்களையில் மூடி வைத்துவிட்டு மீதியை கொண்டுவந்து டேபிளில் வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள் இன்று. வந்து பார்க்க, அவள் எடுத்து வைத்த சாப்பாடு மேல உப்பு டப்பா விழுந்து கிடந்தது காரணம் யாரென நான் சொல்லனுமா என்ன? சாப்பாடு முழுவதும் உப்பு அதனால் அன்றும் பால் தான்.
இப்படியே மூன்று நாளும் அவள் மதிய உணவை எதாவது செய்து கெடுத்துக் கொண்டே இருந்தனர் அம்மாவும், மகளும் சேர்ந்து. அவளுக்குச் சர்க்கரை நோய் இருப்பதும் தெரியும், சாப்பாடு இல்லையென்றால் அவளால் தாக்கு பிடிக்க முடியாதென்றும் தெரியும். ஆனாலும் அவளைப் பாடாய் படுத்தினர் இருவரும்.
காலையும் இரவும் இளங்கோ அருகில் சாப்பிடுவதால் மட்டுமே அவளுக்கு நல்ல சாப்பாடு சாப்பிட முடிந்தது. அனைத்தையும் அவள் சித்தத்துக்காகப் பொறுத்துக் கொண்டாள். இப்படியெல்லாம் நடந்துவிடக் கூடாது எனத்தானே அன்பும், இளங்கோவும், மொத்த குடும்பமும் சேர்ந்து அவளுக்கு ஆதவனை முடிக்க இருந்தனர்.
இன்று அவர்கள் எதை நினைத்துப் பயந்தார்களோ அது தான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் அவள் தான் அதை யாரிடமும் வெளிப்படுத்த வில்லை. மீண்டும் ஒரு பிரச்சனை வந்துவிடக் கூடாது என அத்தனையையும் அவள் மனதிற்குள்ளேயே அடக்கிக் கொண்டாள்.
இங்கு இவள் இப்படி கஷ்டப்பட்டால் அங்கு ஒருவனோ வேறு விதமாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். அவளை அங்கு விட்டுவிட்டு வந்து அவனுக்கு எதுவுமே ஓடவில்லை. பிறந்ததிலிருந்தே அவள்மேல் பைத்தியமாக இருப்பவன், இன்று குமரியாய் மாறிய அவளை முற்றும் முழுதாகப் பார்த்துவிட்டு அவளுடன் கூடிக்களித்து விட்டு, அவளை உடனேயே உதறி தள்ளிவிட்டு இங்கு வந்துவிட்டானே அதுவே பெரும் மன உளைச்சலாக இருந்தது.
அவளிடமிருந்து அழைப்பும், குறுஞ்செய்தியும் வரும்போது ‘நானே என் கோபத்த விட்டுட்டு வந்து என்ன நடந்ததுனு கேட்டும் நீ பதில் சொல்லலயே! இந்த ஆதவன் லூசும் சொல்ல மாட்றான்.. அப்படி என்னதாண்டி நடந்தது சொல்லித் தொலைச்சிருக்கலாமே! ஒரு நிமிஷம் ஆகாது என்ன நடந்தது என வெளியாட்களிடம் விசாரிக்க, குடும்பவிஷயம் வெளியே செல்ல வேண்டாமெனத் தான் அமைதியாக இருக்கேன்.. தினமும் நீ என்ன பண்றனு இங்குக் கிடந்து தவிக்கிறேன். அப்பாக்கிட்ட பேசி நீ நல்லா இருக்கனு சொல்ற வரைக்கும் நிம்மதியே இருக்க மாட்டிங்குதுடி.
ஒழுங்கா ஊசி, மாத்திரை போடுறியா? சாப்பிடுறியா? அன்னைக்கு உனக்கு முடியலனு சொல்லும்போது.. எல்லாத்தையும் தூக்கிப்போட்டுட்டு வரத்தான் நினைச்சேன் ஆனா உன் ஆசைக்காகத் தான் நான் இங்க இருக்கேன். நான் போலீஸாகனும்னு நீ தான ஆசைப்பட்ட, உனக்காகத் தாண்டி இங்க நிக்கிறேன் இப்போவரை’ என அவளையே நினைத்துக் கொண்டு மனமே இல்லாமல் தான் இங்கு இருக்கிறான். உடல் மட்டுமே இங்கு உயிர் என்றுமே அவளிடத்தில் தான்.
ஆம்! சித்தார்த்தை போலீஸாக வேண்டுமெனக் கூறியது மது தான். அவள் தான் அவனை எஸ். ஐ தேர்வு எழுதக் கட்டாயப்படுத்தியதும் மது தான். அவளுக்காகத் தான் அவன் படித்தான், தேர்விலும் தேர்ச்சி பெற்றான். இன்று அவளை அங்கே தவிக்கவிட்டுவிட்டு அவன் இங்கே துடிக்கிறான்.
கடைசியில் அவனாலும் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. மூன்றுநாட்கள் ஆகிவிட்டது அவன் ஊரிலிருந்து வந்து. அவனே அவள் தகப்பன் வீட்டுக்குச் செல் எனக்கூறியும் அவள் செல்லாமல் இருக்க, மலையேறியிருந்தவன் உச்சி குளிர்ந்து தான் போனதோ! தினமும் அவள் அழைப்பை ஏற்காது தவிர்த்தவன் இன்று அவனே அழைத்தான். தலைகால் புரியவில்லை அவளுக்கு முதல் சத்தத்திலேயே எடுத்துவிட்டாள்.
“சித்தத்து! என்மேல் கோபம் போய்டுச்சா?” என ஆனந்தத்தில் கேட்டாள் மது. அந்தப்பக்கம் அழைத்து விட்டான் தான் ஆனால் மௌனம்.
“பேசு சித்தத்து.. இனி நான் நீ என்ன சொன்னாலும் செய்வேன். நீ மட்டும் என்னோட பேசாம இருக்காத.. என்னால தாங்க முடியல” என அழுக ஆரம்பித்தாள்.
“அழாதடி. முதல்ல அழுறத நிறுத்து”
“சரி நான் அழல. நீ என்ன பண்ற? சாப்பிட்டியா?”
“அதெல்லாம் இங்க நல்லாத் தான் இருக்கேன். நான் தான் மருந்து வாங்கிக்கொடுக்க மறந்துட்டு வந்தா நீ ஊசி போடாம இருப்பியா? அன்னைக்கு அவ்ளோ கோபம் உன் மேல. உன்கிட்ட பேசவே கூடாதுனு இருந்தேன். ஆனா என்னோட கோபம் எல்லாம் உன்கிட்ட மட்டும் எடுபடவே மாட்டிங்குது. உன்னைப் பார்த்தாலே.. பார்த்தா என்ன உன்னை நினைச்சாலே கோபம் எங்க போகுதுனு தான் தெரிய மாட்டிங்குது” எனக்கூறினான்.
அவளுக்குத் தான் தெரியுமே! அவளுக்கு முடியாதபோது ஆதவனை அனுப்பி தன்னை பாதுகாத்தானென. இன்று வரை ஆதவன் மூலமாகவும், இளங்கோ மூலமாகவும் அவளைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறானென. இன்று கோபம் குறைந்து தானே அழைக்கச் சந்தோஷ மிகுதியில் இருந்தாள்.
“லவ் யூ சித்தத்து”
“லவ் யூ டி” என்றவன்,
“சரி. நீ நல்லா இருக்கல.. அம்மா பிரச்சனை எதுவும் பண்ணுதா? எதுவா இருந்தாலும் சொல்லு சரியா? இன்னும் ஒரு இருபதே நாள் தான். முடிச்சதும் எங்கே வேலை கிடைக்குதோ அங்க போய்டலாம். அப்புறம் எனக்கு நீ உனக்கு நான். சரியா”
“ம்ம் சரி சித்தத்து” எனச் சந்தோஷமாகக் கூறினாள். அதற்குப் பிறகு அவர்கள் பேசியது அனைத்தும் ஸ்வீட் நத்திங்ஸ் தான். அவளுக்கு அவன் அவளுடன் பேசியதே போதுமென இருந்தது. இங்கு நடப்பதை அவனுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை அவள், அதனால் அவர்களின் இன்றைய சந்தோஷம் கெட விருப்பமில்லை.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
12
+1
1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 23
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 25
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


இன்னும் என்ன பண்ண காத்திருக்காங்களோ மது மாமியாரும் நாத்தனாரும் ..
ஆமா. இரண்டும் வன்மம் பிடிச்சதுங்க..
மிக்க நன்றி😍😍
அவளுக்காகவே நன்கு படித்து அவள் விரும்பிய வேலையில் சேர நினைத்து என்று அவளையே உலகமாக பாவிப்பவன், தன் அம்மா, தங்கையை பற்றி அறிந்திருந்தும் அவர்களிடம் அவளை தனியே விட்டு சென்றிருக்க வேண்டாம்.
அதிலும் திருமண ஏற்பாடு செய்ய ஏதோ ஒரு வலுவான காரணம் இருக்கின்றது என்று அறிந்த பின்னர் அவர்கள் மீதான கோபம் குறைந்துள்ள நிலையினில்.
அவள் நன்றாக உள்ளாளா என்ற தவிப்பினில் அவனும், அவனை மீண்டும் கோபப்படுத்தி விட்டோமே என்று இவளும் வருந்துகின்றனர்.
எத்தனை கோபம், ஆத்திரம், வன்மம் இருந்தாலும் சாப்பாட்டில் காட்டிட கூடாது. அதிலும் அவள் உடல்நிலையை கருத்தில் கொள்ளாது அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாது நடந்துகொள்கின்றனர் அம்மாவும் மகளும்.
மிக்க நன்றி😍😍
இரண்டு பேரோட காதல் ரொம்ப அழகு… அதனால தான் கஷ்டபடுறாங்க போல…
பிடிச்சவங்ககிட்ட கோபத்தை ரொம்ப நேரம் பிடிச்சு வைக்க முடியாது அதுபோல தான் சித்துக்கும்.. கோபமும் காதலும் மூக்கு நுனில தான் இருக்கு
மிக்க நன்றி😍😍