
சக்கரை தழுவிய நொடியல்லவா!
அத்தியாயம் 22
இந்த உலகில் அவனுக்கு முக்கியமான ஆள் யாரென அவனிடம் கேட்டால், தூக்கத்திலிருந்தாலும் யோசிக்காமல் அவளை நோக்கித் தான் கையைக் காட்டுவான். ஆனால் அவளுக்கோ அவன் இரண்டாம் பட்சம் தான் என்று எண்ணும்போது மனதிற்குள் சுறுக்கென வலி பரவுவதை தவிர்க்க முடியவில்லை.
தாய், தகப்பன் குடும்பம் அத்தனையையும் விட்டுவிட்டு அவளொருத்திக்காகத் தான அவன் வாழ்நாள் முழுக்க அவள் வீட்டிலேயே கிடந்தான். அவள் குடும்பத்தைத் தானே தன் குடும்பமாக நினைத்தான். ஏன் அவளுக்காகத் தான் தன் உயிரையும் பணயம் வைத்துக் கொரானாவில் அவளுடனே இருந்தான்.
ஆனால் அவளோ அவளுக்கு முதன்மை அவள் தாயும், தகப்பனும் மட்டும் தானென அவனுக்கு மீண்டும் மீண்டும் பாடமெடுத்துக் கொண்டிருக்கிறாள். தனக்காகத் தன் கோபம் குறையும் வரைக்கும் கூட அவளால் அவர்களை விட்டு இருக்க முடியவில்லை. ஆனால் அவர்களுக்காக வாழ்நாள் முழுவதும் என்னை விட்டுவிட்டு ஆதவனை கட்டிக்க சம்மதம் சொன்னவள் தானேயெனக் கசப்பாக மனதுக்குள் இறங்கியது.
அன்பு “சித்தார்த் உன்னை நல்லா பார்த்துக்கிறானா? ஆனந்தி ரொம்ப பேசுறாளா?”
“சித்தத்து நல்லா பார்த்துக்கிறாங்கப்பா உங்களுக்குத் தெரியாதா அவர பத்தி. ஆனா நம்ம வீட்டு மேல கொஞ்சம் கோபம் இருக்கு. அத கொஞ்ச கொஞ்சமா நான் குறைச்சுட்டு நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரேன்ப்பா. அத்தைய பத்தி நமக்குத் தெரியாதா? நாக்குல தேள் கொடுக்கு தான் இருக்கும். நான் கண்டுக்கிடலப்பா”
“சாப்பிட்டியாடாம்மா”
“ஹ்ம்ம். இப்போ கூட ஹோட்டலுக்கு போய்ட்டு தான்ப்பா வந்தோம். இந்தச் சாக்லெட்ஸ் கூடச் சித்தத்து வாங்கி கொடுத்துதான்”
ஈகை “இனிப்பு திங்காத மது. உனக்கும் அவனுக்கும் எத்தனை தடவை சொன்னாலும் புரியாது”
“இல்லம்மா முழுசா சாப்பிடமாட்டேன். ஃப்ரிஜ்ல வச்சி கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக்குவேன்”
“சித்தார்த் எங்கம்மா காணோம்?”
“கடைக்குப் போனார்ப்பா திங்க்ஸ் வாங்க” எனக்கூறியவளுக்கு அப்போதுதான் தான் சித்தார்த்துடன் இங்கே வந்ததே ஞாபகம் வர, கூடவே பதட்டமும் வந்தது.
‘அய்யோ! சித்தத்து கூடத் தான வந்தோம். இப்போ அப்பா, அம்மாக்கிட்ட பேசுறத பார்த்தா என்ன செய்வாரோ!’ என நினைத்துத் தந்தையிடமிருந்து பிரிந்து சுற்றி சித்தார்த்தை தேட அவனோ கண்களில் கனலோடு , கையில் தரூணுடன் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.
“சித்தத்து” எனப் பயத்துடன் அவனைப் பார்க்க அவனே அவர்களருகில் வந்து ஈகையிடம் தரூணைக் கொடுத்தான்.
அன்பு “சித்தார்த்” என அழைக்க அவனிடமிருந்து பதிலில்லை. திரும்பி நடக்க முயன்றான். அவன் கைகளைப் பற்றிய அன்போ,
“சித்தார்த்! நான் சொல்றத கொஞ்சம் கேளுப்பா”
“எதையும் கேட்குற மனநிலை இல்லை. என்ன இருந்தாலும் என்னைப் பிறந்ததிலிருந்து வளர்த்த உங்களைக் காயப்படுத்த விரும்பல. கைய விடுங்க” என்றான்.
“எங்க சூழ்நிலை அப்படி இருந்ததுப்பா அதான் கொஞ்சம் புரிஞ்சுக்கோயேன். எதையும் உடச்சி பேச முடியாத கட்டாயத்துல இருக்கோம்”
“பரவாயில்ல இப்போ நீங்களே சொன்னாலும் கேட்குற நிலையிலும் நான் இல்லை. காலந்தவறி செய்யுற எந்தக் காரியத்துக்கும் மதிப்பில்லை” எனக் கைகளை அவரிடமிருந்து உருவினான்.
மதுவை ஒரே ஒரு பார்வை தான் பார்த்தான், மனதளவில் செத்தே விட்டாள் பெண். பின் அன்பு மற்றும் ஈகை இருவரையும் பார்த்தவன், அவள் கையிலிருந்த தரூணையும் பார்த்துவிட்டு,
“என்னாதான் பெத்த பிள்ளைபோல வளர்த்தாலும், உங்களுக்கு உங்க புள்ளைகள் நலன் மட்டும் தான் கண்ணுக்கு முன்னாடி நிற்கும் போல. அன்னைக்கு என்னை விட்டீங்க இன்னைக்கு இவன விட்டுட்டிங்க” எனத் தரூணைக் காட்டிக்கூறி, “இவன உங்கள நம்பி தான் அவன பெத்தவங்க விட்டாங்க, அவன பத்திரமா கொண்டு போய் ஒப்படச்சிடுங்க. என் உயிரை வேரோடு பிடிங்கின மாதிரி பிடிங்கிதாதீங்க” எனக்கூற கதறி விட்டார் ஈகை.
“சித்து.. நாங்க அப்படி நினைக்கலப்பா.. எங்க நிலைமை அப்படி.. உனக்காகத் தான் செய்தோம். நீ நிம்மதியா கடைசி வரை இருக்கனும்னு தான் பண்ணினோம். எங்க நோக்கம் உங்கள பிரிக்கிறது இல்லப்பா” என ஈகை அழுக, அவனுக்கும் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
பெத்த தாயைப் போலப் பார்த்தவரல்லவா! தன் தாய் கூடத் தன்னை பாரமெனக் கருதி இவர்களிடம் விட்டுச்செல்லச் சில நாட்கள் தாய்ப்பால் கூடக் கொடுத்து அவனைப் பாதுகாத்தவரல்லவா! அஸ்வந்துக்கும் அவனுக்கும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் வளர்த்தவர்கள் அல்லவா!
இன்று தன் கோபத்தால் அவர்களைக் காயப்படுத்தி விட்டோமென மட்டும் அவனுக்குப் புரிந்துவிட்டது. தன் வார்த்தைகள் அவர்களை எவ்வளவு காயப்படுத்தியிருக்கிறது எனத் தெளிவாகத் தெரிந்தது. இதற்குத் தானே அவர்களைக் காணாமல் தவிர்த்து வந்தான்.. இப்படி எதாவது கூறி அவர்களைக் காயப்படுத்திவிடுவேனெனத் தான அவர்களைத் தவிர்த்து வந்தான்.
ஆனால் இன்று அவன் எதைச் செய்யக் கூடாது என நினைத்தானோ அதை அவனறியாமலே அவன் கோபம் நிறைவேற்றி எதிரிலுள்ளவர்களை வார்த்தை வாள் கொண்டு அறுத்துவிட்டதே!
துடிக்கும் ஈகையை தோளோடு அணைத்து பிடித்து அவளை ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார் அன்பு. எதுவுமே செய்யமுடியாமல் அழுது கொண்டிருந்தாள் மது.
சித்தார்த் “மன்னிச்சிடுங்க.. கோபத்துல ஏதோ சொல்லிட்டேன். மனசு கஷ்டப்படுற மாதிரி பேசிருந்தா மன்னிச்சிடுங்க” எனக்கூறி அவ்விடமிருந்து கிளம்பிவிட்டான். பின்னாலேயே ஓடினாள் மது.
அவன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவன் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான். மதுவை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அவள் தான் தன்னை விட்டுவிட்டு செல்லும் அவனையே கண்ணீர் வடிய பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளை விட்டு விட்டுச் செல்பவனுக்கோ மீண்டும் மீண்டும் அவளுக்குத் தான் இரண்டாம் பட்சமாக இருப்பது கண்ணீரைத்தான் வரவழைத்தது. கண்களை நிறைத்து வழியை மறைக்கும் அந்தக் கண்ணீரை அடியோடு வெறுத்தான் அவன். அதற்குக் காரணமானவள் மீது வருத்தம் தான் மேலோங்கியது.
எனக்கென யாருமில்லையே.. உனக்கது தோணவில்லையே!
எனக்கென யாருமில்லையே.. உனக்கது தோணவில்லையே!
ஆட்டோவில் வந்து இறங்கிய மதுவைப் பார்த்ததும் இளங்கோ
“எந்தாண்டமா போன? நான் பதறிக்கினேன் உன்ன காணாம. அவளாண்ட கேட்டா தெரியாதுன்னுட்டா.. இவன் இப்போ தான் வூட்டுக்கு வந்தான் அவனாண்ட கேட்டாலும் ஒரு பதிலயும் காணோம், என்ன முறச்சிட்டு போய்கினான்.. எங்கம்மா போன?”
“கோவிலுக்குப் போனேன் மாமா”
“இனி எந்தாண்ட போறதா இருந்தாலும் எனக்கு ஒரு போன் போட்டுச் சொல்லிக்கினு போம்மா”
“சரிங்க மாமா” என்றாள். பாவம் அவள் அவசரம் அவருக்குப் புரியவில்லை.
“நாஸ்டா துண்ணுட்டியாமா?”
“இல்ல மாமா”
“அப்போ வாம்மா சேர்ந்தே துண்ணலாம்” என அழைக்க, “இன்னும் ஊசி போடல மாமா போட்டுட்டு அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்” எனக்கூறி அவளறைக்கு ஓடினாள். செல்லும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார் இளங்கோ.
உள்ளே சித்தார்த்தோ அவன் உடைகளை எல்லாம் எடுத்துப் பையில் அடுக்கிக்கொண்டிருந்தான். அதைப் பார்த்தவளுக்கோ நெஞ்சில் நீர் வத்திப்போன நிலை. கதவில் சாய்ந்து நின்றுவிட்டாள் ஒரு கணம். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.
“சித்தத்து! சாரி சாரி சித்தத்து” என அவனைப் பின்னிலிருந்து அணைத்து அழுது கொண்டே கூறினாள். அவனோ ஜடம் போல அமைதியாய் நின்றான்.
“நான் தெரியாம பண்ணிட்டேன். இனி பேசமாட்டேன் சித்தத்து. நீ சொல்லாம யார்கிட்டயும் பேசமாட்டேன். என்னை மன்னிச்சிடு”
அவனிடம் பதிலே இல்லை. அவனிடமிருந்து பிரிந்து முன்னால் வந்தாள். அவன் முகமே கோபத்தில் சிவந்து கிடந்தது. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு,
“சாரி சித்தத்து. இனி இப்படி பண்ணமாட்டேன். துணி எல்லாம் எதுக்கு எடுக்குற.. ப்ளீஸ் என்னை விட்டுப் போயிடாத சித்தத்து. நீ இல்லாம என்னால இருக்க முடியாது. சாரி சாரி சித்தத்து” எனக் கதறினாள்.
உள்ளங்கையை இறுக மூடிக்கொண்டதோடு அவன் மனதையும் மூடிக் கொண்டானோ! அசைவேயில்லை அவனிடம்.
“எதாவது பேசேன் சித்தத்து. இரண்டு அடி கூட அடிச்சிக்கோ ஆனா பேசாம மட்டும் இருக்காத” எனக் கதறினாள்.
அவனோ அவளாகத் தன் கையை விடும்வரை அமைதியாக இருந்து, அவள் கையை விட்டதும் மீண்டும் தன் துணிகளை எடுத்துப் பையில் வைத்தான். அவளோ பையை ஒரு கையால் எடுத்துத் தன் பின்னால் வைத்துக்கொண்டு,
“தரமாட்டேன். உன்னை எங்கயும் விடமாட்டேன்” எனக்கூறி மறுகையால் அவனைக் கட்டி அணைத்தாள். இப்போதும் அவனிடம் அசைவே இல்லை. அவன் கைகள் அவளைத் தழுவவில்லை, சிலைபோல அப்படியே நின்றான்.
அவனுக்கு இப்போது மனதில் ஓடியது அனைத்தும் தன் தாய் என்ன செய்தார்? வெளியில் சொல்ல முடியாத அளவுக்குக் கட்டுப்பட்டு இருக்கிறோம் என அவர்கள் கூறுகிறார்கள் என்றால் எதற்காகக் கட்டுப்பட்டு இருக்கிறார்கள்? என்ன நடந்ததென இன்னமும் என்னிடம் சொல்லாமல் இருக்க காரணம் என்ன? என்ன நடந்தது? எனச் சரியான வழியில் சிந்திக்க ஆரம்பித்தான். அவளைத் தன்னிடமிருந்து பிரித்தான்.
“ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லு, ஏன் ஆதவனுக்கும் உனக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க? காரணம் எங்கம்மாவா தான் இருக்கும்னு எனக்கு தெரியும்.. என்ன பண்ணுச்சு எங்கம்மா?எங்கம்மா வாயில இருந்து எதுவும் வாங்க முடியாதுன்னும் தெரியும் சொல்லு என்ன நடந்துச்சு?” எனக்கேட்க, சலெரென நிமிர்ந்தவள்.
“அத மட்டும் என்னால சொல்ல முடியாது சித்தத்து. உன்கிட்ட சொல்லமாட்டேனு அப்பாக்கு சத்தியம் பண்ணிருக்கேன்”
“அப்போ என்னை விடு” என அவளிடமிருந்த பையைப் பிடிங்கிக் கொண்டு அறையை விட்டு வெளியேறினான். “சித்தத்து” என அழைத்துக்கொண்டே அவளும் பின்னாடியே வந்தாள்.
கூடத்திலிருந்த இளங்கோவோ “இன்னாடா பிரச்சனை? இன்னாத்துக்கு மதும்மா அழுது? நீ பையோட எங்க கிளம்பிக்கின?” எனக்கேட்க, அறையிலிருந்து வெளியே வந்தனர் ஆனந்தியும், சிந்துவும். மது அழுவதைப் பார்க்க அவர்களுக்குக் குளுகுளுவென இருக்க, ஆனாலும் விஷயம் என்னவெனத் தெரியாமல் வேடிக்கை பார்த்தனர்.
“நான் திரும்ப டிரைனிங் கிளம்புறேன்” எனக்கூறினான்.
“புதன்கிழமைக்கு தான டிக்கெட் போட்ட, இன்னைக்கே இன்னாத்துக்கு கிளம்புற?”
“வரச் சொன்னாங்க கிளம்புறேன். எல்லாத்துக்கும் எதுக்கு இப்படி கேள்வி கேட்குறீங்க? என்ன வேணும் உங்களுக்கு?” எனக் குரல் அதிகார தோரணையோடு வர அடங்கி விட்டார் இளங்கோ. அவருக்கு அவர் மகன் வேண்டுமே அவன் என்ன கூறினாலும் சரி சரியென மண்டையை ஆட்டும் நிலைமைக்கு வந்துவிட்டார். முன்னாடி ஆனந்திக்கு மண்டையை ஆட்டினார் இப்போ சித்தார்த்துக்கு ஆட்டுகிறார்.
“ஏன் இப்போவே கிளம்பிகினனு தான கேட்டேன். அதுக்கு இன்னாதிக்கு கோபப்படுற? சரி பார்த்துப் போய்ட்டு வாப்பா” எனக்கூற, சித்தார்த்தின் கையைப் பிடித்தாள் மது. அவள் கையை எடுத்து விட்டவன்,
“அப்பா! நான் கட்டாய கல்யாணம் பண்ணிட்டேனு யாரும் கட்டாயத்துக்காக இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்ல. அவங்க எங்க இருக்கனும்னு நினைக்கிறாங்களோ அங்கயே இருக்கட்டும். அவங்களுக்கு யார் கூட இருந்தா சந்தோஷமா இருக்குமோ அவங்க கூடவே போய் இருக்கட்டும். எனக்காக யாரும் கஷ்டப்படனும்னு அவசியம் இல்லை. அவங்க இஷ்டம் அவங்க எங்க வேணும்னாலும் இருக்கலாம் அவங்கள இங்க தான் இருக்கனும்னு நான் கட்டாயப்படுத்தல. அவங்க விருப்பப்பட்டா அவங்கள அவங்க வீட்டுல கொண்டு விட்டுங்க” எனக்கூறி வீட்டிலிருந்து கிளம்பிவிட்டான்.
செல்லும் அவனையே கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருந்தாள் மது வாயிலில் நின்று. தன் உயிரை வேரோடு பிடுங்கி எடுத்துச் செல்லும் அவனைக் கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தன் பின்னால் நின்று தன்னையே பார்க்கிறாளெனத் தெரிந்தும் மனதை கல்லாக்கிக் கொண்டு சென்றான் அவளின் மன்னவன்.
ஏன் ஏதும் கூறாமல் போனாயோ?
ஏன் நேற்றை பூட்டாமல் போனாயோ?
ஊரை தாண்டி.. போனான் என்றால்.. அங்கும்.. இங்கும்.. கண் தேடும்.
வேரை தாண்டி.. போனான் என்றால்.. உண்மை.. உள்ளே.. பந்தாடும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
12
+1
+1
⬅ Prev Episode
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 21
Next Episode ➡
சக்கரை தழுவிய நொடியல்லவா! – அத்தியாயம் 23
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அய்யோ இதென்ன இப்படி விட்டுட்டு போயிட்டான் … அடப்பாவி சித்தத்து …
Loosu payyan😞😞
மிக்க நன்றி😍😍
சித்தார்த்தின் கோபம், ஆதங்கம் நியாயமானது தான். யாரும் எதையும் வெளிப்படையாக கூறாதபோது அவனும் என்னதான் செய்வான்.
எது எப்படியோ, “ஒருத்தியை மட்டுமே உலகமாக தான் பாவிக்க, அவளோ தன்னை இரண்டாம்பட்சமாக பாவித்ததோடல்லாமல், தன் மனம் காயப்படும், தானும் காயப்படுவோம் என்று தெரிந்தும் கூட அவர்களுக்காக தன்னை அவளது வாழ்வில் இருந்து விலக்கி வைக்க துணிந்து விட்டாலே என்ற ஆதங்கம். தன் மீதே கழிவிரக்கம் சித்தார்த்துக்கு.
பெற்றவர்களை போல் போற்றிவளர்ந்தவர்களை கோவத்தில் உதிர்க்கும் வார்த்தைகளால் காயப்படுத்த மனம் இல்லாமல் அவர்களை காணுவதை தவிர்த்திருந்திருக்கின்றான்.
சிறிது காலம் விலகி இருப்பது எல்லாம் சரி தான். ஆனால் அவளது பாதுகாப்பையும், உடல் நலனையும் உறுதிப்படுத்திக்கொண்டு சென்றிருக்கலாம்.
ஆமா.. கோபம் கண்ணை மறச்சிடுச்சு😔
மிக்க நன்றி😍
ஒழுங்கா பேசி சரி பண்ண வேண்டிய விஷயத்தை ரொம்ப காம்ப்ளிகேட் பண்ணி வச்சிருக்கான்… கொஞ்சம் ஓவரா தான் மூஞ்சிதூக்குறான்…ஒரு எபி ரொமான்ஸ் வந்ததுக்கு அடுத்து எல்லாமே சரவெடியா வரது…
Interesting ❤️
மிக்க நன்றி😍😍