Loading

காலை கனவு 5

ஆர்விக்கிடம் பேசிவிட்டு மீதமிருந்த தேநீரை ஆழ்ந்து ருசித்து பருகிய அன்விதாவிடம், விடுமுறைக்காக… தான் வீட்டிற்கு வந்த அன்று கௌதம் காதலை சொல்லியது நினைவில் குறுகுறுப்பை மூட்டியது.

கேரட் தோட்டம் குன்றின் சரிவில் இருக்க… அங்கிருந்த சிறு பாறையின் மீது நின்றிருந்தாள் அன்விதா.

“என்ன பாப்பா இங்க நிக்கிற? அப்பா இப்போதான போனாங்க.”

தோட்டத்தில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் கேட்டிட,

“அத்தை வீட்டுக்கு போகலாம் வந்தேன் அங்கிள். கேரட் சாப்பிடலாம் தோணுச்சு அதான் பறிக்கலாம் கீழிறங்கினேன்” என்றாள் அன்விதா.

“சரி பாப்பா” என்றவர், மேலிருக்கும் இலையின் நிறம் பார்த்து தானே கேரட் செடி ஒன்றை பிடிங்கி அவளின் கையில் கொடுத்தார்.

“ஆளெல்லாம் கிளம்பியாச்சு பாப்பா. வீட்டுக்கு சீக்கிரம் போ” என்றவரும் சென்றிட, அங்கு பக்கத்தில் சரிவில் சுழித்து ஓடும் சுனை நீரில் கேரட்டை கழுவிட மெல்ல கீழிறிங்கியவளின் பாதம் வழுக்கிட, விழ இறந்தவளை கரம் ஒன்று பற்றி பிடித்தது.

“போச்சு” என கண்கள் மூடி அச்சம் கொண்டவள், தன்னுடைய கை பிடித்து இழுத்த வேகத்தில், தீண்டலில் யாரென உணர்ந்து…

“மாமா” என கண் திறந்திருந்தாள்.

அருகிலிருந்த பாறையில் அன்விதாவை அமர்த்திய கௌதம், தானும் அவளருகில் அமர்ந்தவனாக, அவளின் காலினை ஆராய்ந்தான்.

“சுளுக்கிடுச்சா?” என்றான்.

“இல்லை… வலிக்கலாம் இல்லை” அன்விதா, அவனருகில் தடுமாறினாள்.

“காலேஜ் லீவ் விட்டாச்சா? எப்போ வந்த?” எனக் கேட்ட கௌதமின் பார்வை அவளின் முகத்தில் தவிப்பாய் படிந்தது.

“ம்ம்… காலையில தான் வந்தேன்.”

“இப்போ இந்நேரம் இங்கென்ன பண்ற?”

“உங்க வீட்டுக்குத்தான்” என்ற அன்விதா, அவனின் உருக்கும் பார்வையில் மெல்ல கரைந்து கொண்டிருந்தாள்.

கௌதமிற்கு அன்விதா ஒன்றாக உடனிருந்த வரை ஒன்றும் தெரியவில்லை. ஆனால் தூரம் சென்று பார்க்கக்கூட முடியாத நிலையில் அவள் மீது உண்டான மென் நேசத்தை உணர்ந்திருந்தான்.

போன விடுமுறை வீட்டிற்கு வந்த போதே காதலை சொல்லிட முயன்றான். ஆனால் முடியாது போனது. இம்முறையும் சொல்லிட நினைக்கின்றான்.

அவனது அசையா பார்வையிலும், அண்மையிலும் அவளுள் படபடப்பு. வயிற்றுக்குள் சுழலும் சில்லிப்பிற்கான காரணம் விளங்காது கீழ் உதட்டை கடித்து விடுத்தாள்.

அவனுக்கு மூச்சடைக்கும் உணர்வு.

“உன்னை ரொம்ப பிடிக்குது அன்வி!” என்றிருந்தான்.

“உனக்கு என்னை பிடிக்குன்னு எனக்குதான் தெரியுமே மாமா!” அவன் சொல்லும் பிடித்தம் புரியாது சொல்லியிருந்தாள்.

“இது வேற… ரொம்ப அதிகமா பிடிக்குது” என்ற கௌதம் அன்விதாவின் கரத்தினை மெல்ல பற்றினான்.

அவளின் விரல்களில் நடுக்கம் உண்டான போதும், அவள் கையினை இழுத்துக்கொள்ளவில்லை. அதில் நிம்மதி கொண்டது கௌதமின் மனம்.

“உன்னை லவ் பண்றேன் அன்வி.”

அவளின் விழிகள் அகண்டது. இமை இழைகள் புருவம் தொட்டு அவளின் அதிர்வை அவனுள் பாய்ச்சியது.

“நீ கூட இருந்தவரை ஒன்னுமே தெரியல. ஆனா நீ படிக்க அவ்ளோ தூரம் போனதும் தான் என் மனசு உன்னை எவ்ளோ விரும்புது தெரிஞ்சிக்கிட்டேன். எனக்கு உன்னோடவே இருக்கணும் தோணுது அன்வி. உன்னை என்கூடவே வைச்சிக்கணும். உன்கிட்ட பேசாம இருக்கவே முடியல” என இறுதி ஆண்டு பொறியியல் படிப்பில் நுழையவிருக்கும் கௌதம் கண்கள் ஒளிர காதலாய் சொல்லிட, இதுவரை யாரிடமும் அறிந்திடாத புதுவித உணர்வு தன்னை ஆட்கொள்வதை உணர்ந்திட்டாள் அன்விதா.

அவளுக்கும் மாமன் மகனென்ற முறையில் கௌதமை நிரம்பவே பிடிக்கும். அந்த பிடித்தம் தான் காதலா என்று அவளுக்குத் தெரியவில்லை.

ஆனால் அக்கணம் கௌதம் சொல்லும் காதலை ஏற்றிட அவளின் மனம் பரபரத்தது.

ஏக்கமாக தன் முகம் பார்த்து காதல் சொல்லிடும் கௌதமிற்கு தானும் அக்காதலை வழங்கிட வேண்டுமென அவளின் நெஞ்சம் துடித்தது.

“லவ் யூ அன்வி.”

அன்விதாவின் பார்வை தன்னுடைய விழிகளில் ஊடுருவிக் கொண்டிருக்க…

சற்றும் திணறாது சொல்லியிருந்தான்.

“லவ் யூ கௌதம் மாமா!”

அன்விதாவும் விழிகளை சற்றும் நகர்த்திடாது, தன்னைப்போல் மொழிந்திருந்தாள்.

காதல் வார்த்தைகளை உதிர்த்தப் பின்னரே, அவள் தான் சொல்லியதை உணர்ந்திட்டாள்.

கௌதம் சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்பில் திளைத்திட, வேகமாக இரு கரங்கள் கொண்டு தன் முகம் மூடியிருந்தாள்.

“நிஜமா?” கௌதம் கேட்க,

அவளோ, அவனிடம் நாணம் கொண்டு சிவந்த முகத்தை மறைப்பதற்காக, வேகமாக சரிவிலிருந்து மேலேறியிருந்தாள்.

“ஹேய் அன்வி பார்த்து” என்றவன் உள்ளம், பெரும் கொண்டாட்டத்தில் நீந்தியது.

அன்று போல் இன்றும் இருவரும் காதலை பகிர்ந்திட்ட நினைவோடு சக்தியுடன் கௌதம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள் அன்விதா.

“கௌதம் வந்திருக்கான்” என்று சக்தி, வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திட அன்விதா கீழிறங்கினாள்.

வீட்டு வாயிலில் நின்றபடி யாரிடமோ கௌதம் பேசிக் கொண்டிருந்தான்.

“ஹாய் மாமா” என்ற துள்ளலோடு அழைத்து திரும்பி நின்றிருந்த கௌதமின் முதுகில் அடித்த பின்னரே, தன்னுடன் சக்தியும் வந்திருக்கிறான் என்பதையே அன்விதா நினைவில் கொண்டாள்.

மெல்ல சக்தியை அவள் ஏறிட,

“மாட்னியா” என்று வந்த சிரிப்பை உதட்டை மடித்து கட்டுப்படுத்தினான் கௌதம்.

“இதென்ன அடிக்கிற பழக்கம் அன்வி?” என்ற சக்தி, “எப்போடா வந்த?” என்றான். கௌதமிடம்.

“நான் நேத்து நைட்டே வந்துட்டேன் மாமா” என்ற கௌதமிடம், அப்படியொரு மரியாதை பாவம்.

“ம்ம்…” என்ற சக்தி, “மதியம் வீட்டுக்குப்போகும் போது கூப்பிட்டுக்கிறேன்” என அன்வியிடம் கூறினான்.

“நீங்க வீட்டுக்குள்ள வரலையா?” கௌதம் கேட்க,

“வேலையிருக்கு. அன்வியை விடத்தான் இந்தப்பக்கம் வந்தேன்” என்று சக்தி சென்றிருந்தான்.

சக்தியின் உருவம் மறைந்த பின்னரே அன்விதா கௌதமின் முகம் பார்த்தாள்.

“அவ்ளோ பயம்” என்று சிரித்திட்ட கௌதமிடம், “வரல, லீவ் இல்லைன்னு சொன்னீங்க?” என்றாள் அன்விதா.

“ஒரு பொண்ணு என்னை பார்க்காம இருக்க முடியலன்னு ஃபீல் பண்ணாளே, அவளை பார்த்திட்டு போகலாம் வந்தேன்” என்று கௌதம் புருவங்களை ஒன்றாக ஏற்றி இறக்கிட,

“அப்படி எங்களுக்காக யாரும் ஒன்னும் வந்திருக்க வேண்டாம்” என்று அன்விதா முறுக்கிக் கொண்டவளாக, வீட்டிற்குள் செல்லாது அவர்களின் கேரட் தோட்டமிருக்கும் சரிவை நோக்கிச் சென்றாள்.

“ஹேய் நில்லுடி” என்று அவளின் பின்னால் சென்று, அன்விதாவின் விரல்களோடு தனது விரல்களை கோர்த்துக் கொண்டான்.

அவனின் தோள் மீது சாய்ந்தவளாக நடந்தவள்,

“என்னை பார்க்க வந்த மாதிரி தெரியலையே” என்றாள்.

“நான் நம்ம லவ்வை வீட்டில் சொல்லலாம் இருக்கேன்” என்றான்.

வேகமாக அவனிலிருந்து விலகி நின்றாள்.

“ஷாக் ஆகுற மாதிரி தெரியுது” என்ற கௌதம், முதல் முறையாக இருவரும் காதலை பகிர்ந்துகொண்ட பாறை மீது அமர்ந்திருந்தான்.

சரிவான தோட்டப்பகுதி என்பதால், அங்கு கேரட் பயிரிடுவது மட்டுமே வழக்கம். கதிர்வேலனின் தோட்டமாக முன்னர் இருந்தது, சில வருடங்களாக கௌதமின் தந்தை ரகுபதியிடம் உள்ளது.

அவ்விடத்திற்கு சக்தி வரமாட்டான் என்பதே, இருவரின் சந்திப்பு நிகழும் இடமாக அமைந்தது.

“இன்னும் அண்ணாக்கு மேரேஜ் ஆகலையே?” அன்விதா கேட்க,

“எப்படியும் மாம்ஸ்க்கு வெண்மதி தான். மதி இன்னும் காலேஜ் முடிக்கவே இல்லையே! அதுக்குள்ள கேட்டா மாமா நிச்சயம் ஓகே சொல்லமாட்டார். அவங்களுக்கு கல்யாணமாகி, நமக்கு நடக்கிறதுக்குள்ள… ஊஃப்” என்று பெருமூச்சி விட்ட கௌதம், “நம்ம மேரேஜ் முடிச்சிடலாம் நினைக்கிறேன்” என்றான்.

“இன்னும் கொஞ்சநாள் வெயிட் பண்ணுவோம் மாமா.”

சொல்லிய அன்விதாவுக்கு, சக்திக்கு வெளியில் பெண்ணெடுக்க முடிவெடுத்திருப்பதை எப்படி சொல்வதென்ற தயக்கம்.

அதிலும் தெய்வானை சொல்லக்கூடாதென சொல்லியே அனுப்பியிருக்க திருதிருத்தாள்.

அவளின் விழி அசைவை தவறாக புரிந்துகொண்ட கௌதம்,

“பயமா இருக்கா?” எனக் கேட்டான்.

ஆமென தலையசைத்த அன்விதா வேகமாக இல்லையென அசைத்திருந்தாள்.

அவளின் உச்சியில் கை வைத்து அழுத்தியவன்,

“எதாவது ஒரு பக்கம் தலையாட்டுடி” என்று புன்னகைத்தான்.

‘அச்சோ மாமா என் நிலைமை புரியாம’ என்று மனதில் புலம்பிய அன்விதா,

சக்தியின் முடிவை கௌதமின் வீட்டில் சொல்வதற்கு முன்பு தங்களின் காதலை இருவீட்டுக்கும் சொல்லிவிட்டால், சக்தியின் திருமணப் பேச்சின் மூலம் நேரவிருக்கும் மனஸ்தாபம் இல்லாமல் போகுமோ எனவும் நினைத்திட்டாள்.

“எனக்கு உன்னை என்கூடவே வைச்சிக்கணுன்னு இப்போலாம் ரொம்பவே தோணுது அன்வி” என்று அவளின் கன்னத்தில் கை வைக்க முயன்றான்.

சடுதியில் விலகிய அன்விதா,

“இது வயதுகோளாறு மாமா” என்று சிரித்திருந்தாள்.

“ஏன் சொல்லமாட்ட…” என்ற கௌதம், “ஏழு வருஷ லவ்டி… இப்போதான் கை பிடிக்கவே அலோவ் பண்ற” என்றான். ஏக்கமாக.

“அதுக்கு…” அன்விதா புருவம் சுருக்கிட,

“கல்யாணம் பண்ணிக்கிட்டா மொத்தமா” என்று அவன் முடிக்கும் முன்பு, “நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்று அவனது வாயினை கை வைத்து மூடியிருந்தாள்.

“இப்போ உன் கையில முத்தம் கொடுத்தா என்ன பண்ணுவியாம்?” என்று கௌதம் கேட்டதில், வேகமாக கையை எடுத்திருந்தாள்.

“ரொம்பத்தான்” என்ற கௌதம், “இன்னும் எவ்வளவு நாளுக்கு மறைக்க?” எனக்கேட்க

“சொல்லலாம் மாமா” என்றிருந்தாள் அன்விதா.

“குட்” என்ற கௌதம் அவளின் கரம் பிடித்து முத்தம் வைத்தான்.

அன்விதா சற்றும் எதிர்ப்பார்க்கவிலை. எப்போதும் போல் கை மட்டும் பிடிக்கின்றானென நினைக்க, தன்னுடைய முதல் முத்தத்தை அழுத்தமாகப் பதித்திருந்தான்.

உடல் பரவிய குறுகுறுப்பில் அவனை தவித்துப் பார்த்தாள்.

“கை முத்தத்துக்கேவா” என்ற கௌதம், “பின்னாடி ரொம்ப திண்டாட விட்டுடாதடி” என்றான்.

உண்மையில் அவன் தான் அவளை திண்டாட வைக்க இருக்கின்றான்.

கௌதமின் பேச்சின் உட்பொருளில் நாணம் கொண்ட அன்விதா, இம்முறை எழுந்து ஓடாது அவனது மார்பிலே தன்னை மறைத்திருந்தாள்.

“வாவ் அன்வி” என்ற கௌதம், “இப்படியே உன்னை கூட்டிட்டுப் போயிடனும்” என்றான்.

“ரொம்ப ஆசைதான்” என்ற அன்விதா, “நாளைக்கு கோவிலில் சாமி கும்பிட்டதும் நம்ம விஷயத்தை சொல்லிடலாம்” என்றாள்.

கண்முன் தெரிந்து நடக்கவிருக்கும் பிரச்சினையை, தங்களின் காதல் மூலம் சற்று ஒதுக்கி வைக்கலாமென நினைத்தாள் அன்விதா.

நினைப்பதெல்லாம் நடக்குமாயின் காலம் வகுத்தவைக்கு என்ன மதிப்பு உள்ளது?

நடக்க வேண்டியவை கொஞ்சமும் மிச்சமின்றி இனிதே நடந்தேறியிருக்க… அனைத்திற்கும் காரணமாக்கப்பட்டிருந்தாள் அன்விதா.

அன்றைய இரவு ஆர்விக்கு அழைத்த அன்விதா, வீட்டில் தன்னுடைய காதலை சொல்ல இருப்பதைப்பற்றி பகிர்ந்து கொண்டிருந்தாள்.

இனி தன்னுடைய கனவில் அவள் வந்து செல்வதும் மனதால் தடைவிதிக்கப்படுமென வலித்த இதயத்தை தட்டிக் கொடுத்து, அவளின் காதல் ஈடேற வேண்டுமென மனதார வாழ்த்தியிருந்தான் ஆர்விக்.

“உன்கிட்ட ஷேர் பண்ணாதான் ஆர்வி எல்லாமே ஃபுல்ஃபில் ஆகுது. நீ வாழ்த்தினாவே அது சக்சஸ் தான்” என்று மலர்ந்து கூறியவள், மகிழ்வோடு இரவு வணக்கம் கூறி வைத்திட,

ஆர்விக் காதில் வைத்த அலைபேசியை எடுக்காது மெத்தையில் விழுந்திருந்தான்.

அறையின் குளுமை ஆர்விக்கின் நெஞ்சத்தில் மூட்டிய காதல் தீயின் அடர்த்தியை சற்றும் குறைக்கவில்லை.

“அன்வி” என்றவனின் வலி நிறைந்த அழைப்பு அவனது மனதோடு தேங்கிட, அவனது மூடிய கண்களின் ஓரம் நீர் கசிந்தது.

அன்விதாவிடம் காதலை சொல்லிட நினைத்து காத்திருந்த நாளுக்கு அவனது நினைவு ஊர்வலம் போனது.

ஆர்விக் தன்னுடைய காதல் மனதை அறிந்திட்டதும் அன்விதாவிடம் சொல்லிடத்தான் நினைத்தான். அனிதாவிடம் இது காதலென்று அழுத்தம் கொண்ட பின்னர் பொறுமையாக சொல்வோம் என்றவனால் இரண்டு நாட்களுக்கே தாக்குப்பிடிக்க முடியாது போனது. அவளிடம் சொல்லிவிட்டால் அலைப்புறும் மனம் அமைதியாகிவிடும் என நினைத்தான்.

யாஷ் கூறியதை போன்று, அவளாக தன்னுடைய காதலை உணர வேண்டுமென்றெல்லாம் ஆர்விக் நினைக்கவில்லை.

ஆர்விக் அன்விதாவை விரும்புகிறான் என்பதே யாஷிற்கு படிப்பு முடிந்த பின்னர் தான் தெரிய வந்தது.

ஆர்விக்கின் காதல் இரண்டாம் வருடமே தொடங்கிவிட்டது என்பதை அறிந்திட்ட யாஷ், அவன் முன்பே சொல்லாததால் தான் அன்விதா கௌதமை காதலிக்க ஆரம்பித்துவிட்டாளென்று கோபத்தில் ஆர்விக்கை திட்டிட, அன்று அவனை சமாளிப்பதற்காக ஆர்விக் சொன்ன பொய் தான்,

“என் காதலை உணர்ந்து அவளா வரணும் நினைச்சு வெயிட் பண்ணேன்” என்பது.

“நல்லா நினைச்ச போ” என்ற யாஷ், “லவ் சொல்ல வெயிட் பண்ணோம், நம்மளே வெயிட்டிங் லிஸ்ட் ஆகிடுவோம்” என்று மேலும் பல திட்டுக்கள் வழங்கியிருந்தான்.

விடுமுறை முடிந்து அன்விதா கல்லூரி வர மீதமிருந்த இரு நாட்களும் ஆர்விக்குக்கு யுகங்களாகத்தான் கழிந்தது.

எப்போது விடுமுறை முடியுமென காத்திருந்த ஆர்விக், கல்லூரி தொடங்கும் நாளன்று அனிதா கிளம்புவதற்கு முன்னரே தயாராகி கல்லூரிக்கு புறப்பட்டிருந்தான்.

“இன்னும் நான் கிளம்பலையே!”

தாயும், மகனும் ஒன்றாக செல்வதுதான் வழக்கம், இன்று தனக்கு முன்பு மகன் கிளம்பி நிற்பதைக் கண்டு அனிதா கேட்டிருந்தார்.

“அன்கிட்ட லவ் சொல்லணும் அனி… நான் சீக்கிரம் போகணும். அவளை ரொம்பத்தான் தேடுது” என்றவனாக அனிதா பேசுவதற்கு முன்பு ஓடியிருந்தான்.

கல்லூரிக்கு விரைந்து வந்த ஆர்விக், தன்னுடைய துறை கட்டிடமே ஆளின்றி வெறிச்சென இருந்ததை பார்த்தப் பின்னரே எத்தனை சீக்கிரம் வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து அசட்டுப் புன்னகை சிந்தினான்.

சில நிமிடங்கள் அன்விதாவின் பெஞ்சில் சென்று அமர்ந்தவன்…

“இப்போவே சொல்லணும் தோணுது அன்வி… இந்த பாரத்தை ஒளிச்சு வைக்க முடியாதுங்கிற நிலைக்கு ரொம்பவே சீக்கிரம் வந்துட்டேன். அனிகிட்ட பேசின பக்குவமானப் பேச்செல்லாம் இப்போ எங்கப்போச்சுன்னு தெரியல” என்றவனாக தன்னுடைய இதயத்தை மெல்ல நீவிக்கொண்டான்.

அலைபேசியை எடுத்து அன்விதாவுக்கு அழைத்திட்டான்.

“என்னடா?”

“கிளாஸ்க்கு வா அன்வி!”

“வந்துட்டியா நீ?” என்ற அன்விதா அடுத்த பத்து நிமிடங்களில் அவன் முன் நின்றிருந்தாள்.

“இப்போ தான ஹாஸ்டல் வந்துட்டேன் மெசேஜ் பண்ணேன். அதுக்குள்ள காலேஜ் வந்து நிக்கிற! எதுக்குடா இவ்ளோ சீக்கிரம்?” என்ற அன்விதா அவனருகில் தோள்கள் உரசிட அமர்ந்தாள்.

புதிதான தொடுகை அல்ல… ஆனால் ஆர்விக்கிடம் எல்லாம் இன்று புதிதானது.

இடியும் மின்னலுமாய் உள்ளுக்குள் புரட்டிப்போட்டது.

“இந்தா ஆர்வி” என்று தன்னுடைய பையிலிருந்து சாக்லெட் கட்டிகள் அடங்கிய சிறு டப்பாவை திறந்து நீட்டினாள்.

அவனுக்கு உலர் திராட்சை நிறைந்த வைட் சாக்லெட் பிடித்தம் என்பதால் கொண்டு வந்திருந்தாள்.

“கொடைக்கானல் ஹோம் மேட் ஸ்பெஷல்” என்ற அன்விதா, “உனக்காக அண்ணாவை செய்யச்சொல்லி படுத்தி வைச்சிட்டேன். கடையில் வாங்கிக்கலாம் அண்ணா சொன்னாங்க. ஆனாலும் நான் விடலையே! அண்ணா செமயா பண்ணுவாங்க. உனக்கு ரொம்ப பிடிக்குமே! மொத்தம் உனக்கு தான்” என்றாள்.

“தேங்க்ஸ்” என எடுத்து சுவைத்த ஆர்விக், “இந்த இனிப்போடவே உன்கிட்ட ஒன்னு சொல்லணும் அன்வி” என்றான்.

“ஆமால… அன்னைக்கு போன்ல சொன்னியே, ஏதோ சொல்லணுன்னு” என்ற அன்விதா, “நானும் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்டா” என்றாள்.

அவளின் முகத்தில் அப்படியொரு சிவப்பு. அதில் அவன் குளிர்ந்து போனான். அந்த செம்மை தனக்கானது இல்லையென அறிந்த பின்னர் அவனது நிலை என்னவோ?

ஆர்விக்கின் மனம் துடித்தது. சில
நாள்களாக அடக்கி வைத்த உணர்வுகளைக் கூற மனதோடு வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டிருந்தான்.

தானும் அவனிடம் சொல்லப்போகும் விடயத்தை நினைத்து அன்விதா மென் முறுவலில் திளைத்திருந்தாள்.

ஆர்விக் தொண்டையை செருமிட…

“என்னடா?” என்றாள் அன்விதா.

“சொல்லணும்… எப்படின்னு தெரியல” என அவளின் கண்கள் பார்த்து தடுமாறினான்.

“அப்போ நான் சொல்லட்டுமா?” எனக் கேட்டிருந்தாள்.

ஆர்விக் சிரித்தபடியே,
“சொல்லு… கேட்டுடுறேன்… ஆனால் நானும் சொல்லணும்” என்றான்.

“அப்படியென்ன சொல்லணும் நீ?” அன்விதா கேட்க,

“நீ சொல்லு நான் சொல்றேன்” என்று கண்கள் சிமிட்டினான் ஆர்விக்.

“உன் ரியாக்ஷனே சரியில்லையே” என்ற அன்விதா, குரலில் பரவிய சிறு தயக்கத்தோடு,

“ஆர்விக்… நான்… நான் கௌதம் மாமாவை லவ் பண்றேன்” என்றிருந்தாள்.

காதில் விழுந்த வார்த்தைகள்… அவனுடைய இதயத்திலுள்ள ஒவ்வொரு துடிப்பையும் கிழித்து எறிந்தது.

மெல்ல விழிகள் உயர்த்தி அவனின் முகம் பார்த்தாள்.

ஆர்விக் சிரிக்க முயன்றான்… ஆனால் எந்த சத்தமும் வரவில்லை.
கால் முட்டுகள் பலவீனமாயின, அவன் சற்று பின்னால் சாய்ந்தான்.

அன்விதா தலையை கீழே பார்த்தபடியே தொடர்ந்தாள்.
“மாமா என்னை லவ் பண்றேன் சொல்லிட்டாங்க. எதிர்பார்க்கவே இல்லைடா! எனக்கும் மாமாவை ரொம்ப பிடிக்கும். லவ் அப்படின்னு யோசிச்சது இல்லை. ஆனால் மாமா சொல்லும்போது, செம ஃபீல் டா.
நானும்… ஓகே சொல்லிட்டேன்” என்று முகம் ஒளிர கூறினாள்.

அந்த “ஓகே” என்ற ஒரு வார்த்தை
ஆர்விக்கு அவனது உலகையே மொத்தமாக உடைத்தது.

ஆர்விக்குள் நடந்த போராட்டம்…

அவனுடைய மனதின் ஓலம்…

அவனுக்குள் யாவும் வெடித்து சிதறும் உணர்வு.

ஆர்விக் தன்னைக் கட்டுப்படுத்த முயன்றான். அகத்தின் உணர்வுகளை முகம் பிரதிபலித்திடாது இருக்க வெகுவாக போராடி வெற்றி கண்டான்.

“என்னடா எதுவும் சொல்லமாட்டேங்கிற?”

அசையாது உறைந்துபோனவனை தோள் தொட்டு மீட்டாள்.

“என்ன… என்ன சொல்லணும்?” கண்கள் மலங்க கேட்டான்.

“உன்கிட்ட சொல்லவே பயம். இந்த வயதில் லவ் தப்பு அது இதுன்னு எதுவும் சொல்வன்னு… ஆனால் உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாதே!” என்ற அன்விதா, “எதுவும் திட்டணுமாடா உனக்கு?” என்றாள்.

வலிய புன்னகைத்த ஆர்விக்,

“இதுல திட்ட என்னயிருக்கு? நீ பக்குவமில்லாத பொண்ணில்லை. உனக்கே எப்போ எதை செய்யணும் தெரியும். இந்த காதலில் எவ்வளவு கவனமா இருக்கணும் அப்படின்னும் தெரியும். இதுல நான் உன்னை திட்ட ஒன்னுமே இல்லை” என்றான்.

“ஹ்ம்ம்… அவ்ளோதானா?” அன்விதா முகம் சுருக்கினாள்.

“நீ ஹேப்பின்னா… அதுவே போதும். மறக்காம உன் லவ்வுக்கு ட்ரீட் கொடுத்திடு” என்றான்.

பிளவு கண்ட இதயத்தின் ரணத்தோடு வாழ்த்து கூறியவனின் வார்த்தைகளில் அவளுக்கான சந்தோஷம் நிறைந்திருந்தது.

நேரம் சென்றிருக்க மாணவர்கள் வரத் துவங்கியிருந்தனர்.

“நீ எனக்கு சொல்ல வந்தது?”
அவள் மெதுவாகக் கேட்டாள்.

ஆர்விக் சற்றுநேரம் நிம்மதியாக சுவாசிக்க முயன்றான்,
ஆனால் மூச்சே அவனுள் சிக்கிக்கொண்டது.

“எதுவும் இல்ல… நான்…”
அவன் ஆழமாக மூச்சு விட்டான்.

“சின்ன விஷயம் தான்… உன் அளவுக்கு பெரிசில்லை. அப்புறம் சொல்றேன்” என அவளுக்காக சிரிக்க முயன்றான்.

மனதின் அழுத்தம் கண்களில் கண்ணீராய் நிரம்பிக்கொண்டிருந்தது,
ஆனாலும் வெளியில் வர அனுமதி தரவில்லை அவன்.

அன்று போல் இன்றுமாய்,

ஆர்விக்கின் விழிகளில் கண்ணீரின் தளும்பல்.

கனவில் தோன்றி நிஜத்தில் சுவீகரித்த காதல்… கானலாய் அவனுள் கலங்கி தவித்தது.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 34

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
25
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்