Loading

காலை கனவு 43

பேரழகு…
பேரின்பம்…
நேசித்தலைவிட நேசிக்கப்படுவது.

நேசித்தலில் காத்திருப்புக் கொண்டிருந்த ஆர்விக்கின் காதல் அன்விதாவின் நேசிக்கப்படுதலால் நிறைவு கொண்டிருந்த கணங்கள்.

மனங்களின் தவிப்புகள் கைகளின் அரவணைப்பில் முற்றுப் பெற்றிருந்தன. இனிவரும் அன்புதலுக்கு நீளம் கொண்டிருந்தன.

“ஆர்வியோட ஏக்கம் அன்வி.”

ஆர்விக் மொழிந்த அவ்வார்த்தைகளிலிருந்து அன்விதாவால் வெளிவர முடியவில்லை.

அன்விதாவின் அனைத்து இயக்கங்களும் அவ்வார்த்தைகளில் உறைந்து நின்றன.

காதலின் ஆத்மமாய் ஆர்விக் உரைத்திருக்க… முதல்முறை காதலின் முழு உணர்வுகளையும் இதயத்தில் உள்வாங்கும் உணர்வு.

காதலென கௌதம் கூறிய நொடியும், இதுதான் காதலென அவனுடன் நகர்ந்திட்ட நாட்களிலும் அவள் உணர்ந்திடாத புதுவிதமான மாற்றம் அவளுள்.

காதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக அமைந்திடும். கௌதமிடத்தில் இவ்விதமாக உணர்ந்ததில்லை என்பதால் அது காதலில்லையென சொல்லிவிட முடியாது. கௌதம் மீது வைத்திருந்தது வேறு விதம். தற்போது ஆர்விக்கிடம் கொண்டிருப்பது வேறு விதம். அந்த தெளிவில் அவளுக்கான காதலின் உன்னதம் குடி கொண்டது.

‘ஐ லவ் யூ’ என இருவரும் சொல்லியிருந்தாலும் இப்படியொரு நிறைவு கிடைத்திருக்காதோ என்னவோ?

இருவருக்கும் இடையில் இந்த நெருக்கம் புதிதல்ல… ஆனால் இன்று இந்த நொடி புதுவிதம்.

அன்விதாவின் பிடியில் உணரும் மாற்றம், அவள் தன் தோளில் தலை சாய்த்திருப்பதில் உணரும் மாற்றம் எல்லாம் அவனது ஆன்மாவிற்கு சிறகு முளைத்து விண்ணில் பறக்கச் செய்திருந்தது.

மனதில் உணர்ந்திட்ட நேசத்தின் நிமிடங்களை அமைதியில் தொலைத்திட இருவரிடமும் மௌனம் ஆட்சி செய்தது.

“அவ்ளோ பிடிக்குமா ஆர்வி?”

அவனது கையில் தன்னுடைய பிடியில் அழுத்தத்தைக் கூட்டி வினவினாள்.

“எவ்ளோ?”

“ஏக்கம் சொல்ற அளவுக்கு… நீ என்னோட காதல் அப்படிங்கிறது ஓகே! ஏக்கம்… அதுல எவ்வளவோ இருக்குல” என்றவள், “என்னவோ சொல்லத் தெரியல. உன்னை நிறைய பிடிக்குது” என்றாள்.

“நீ என்னோடவே இருந்தாலும்… எனக்கானவளா இல்லையே! அப்போ உனக்கானது என்னோட காதல் அப்படிங்கிறதைவிட ஏக்கம் சொல்றதுதான சரி” என்ற ஆர்விக், “நீ என்னோட ரகசியமும் கூட” என்றான்.

“ரகசியம்?”

“எஸ்… ரகசியம். யாருக்கும் நான் காட்டாத என்னோட காதல் ரகசியம். மொத்தமா என்னோட அன்பால் நீ மட்டும் தெரிஞ்சிக்க வேண்டிய ரகசியம்.”

ஆர்விக்கின் முகத்திலும், ஓசையிலும் அப்படியொரு பெருங்காதலின் ஜூவாளையின் பிரகாசம்.

“இவ்ளோ லவ்… அப்புறம் எப்படிடா சொல்லாம இருக்க முடிஞ்சது” என்ற அன்விதா, “என்னைப்பாரு நாலு மாசத்துக்கே முடியாம… உன்கிட்ட வந்து அழுது, ஏங்கி, இப்போ உன்கிட்ட நார்மலா பேசிட்டு இருக்கேன்” என்றாள்.

அன்விதா நார்மல் என்பதில் ஆர்விக் சத்தமாக சிரித்திருந்தான்.

அவனிலிருந்து பிரிந்தவள், தோளில் அடித்து…

“எதுக்குடா சிரிக்கிற?” என்றாள்.

“நீ இப்போ என் பக்கத்துல நார்மலா இருக்க… அதை நான் நம்பனுமா?” என மீண்டும் சிரித்தான்.

“இல்லையா?”

அவள் கேட்க… ஆர்விக் இருபுறமும் தலையசைத்தான்.

“தெரியுதா?” முகம் சுருக்கி வினவினாள்.

“நல்லாவே தெரியுது… நார்மலா இருக்க முடியாம, நார்மலா இருக்கமாதிரி காட்டிக்கிறன்னு” என்றான்.

“ஆமா…” என்றவள், “காதல் எனக்கு புதுசில்லை ஆர்வி. ஆனால் நீ, உன்னோட காதல், உனக்கான நான், என்னோட ஃபீலிங்ஸ் எல்லாம் புதுசு. உன் பக்கத்துல உட்கார்ந்திருக்கவே ஒரு மாதிரி உள்ளுக்குள்ள குடையுது. அவஸ்தையா இருக்கு. ஆனாலும் பிடிச்சிருக்கு. உன்னை நான் தொட்டதே இல்லைன்னு சொல்ல முடியாது… ஆனால் இப்போ உன் கை பிடிச்சிருந்த இந்த டச்… வேறென்னவோ! சிலதை இங்க சொல்ல வார்த்தையே இல்லைல” என்றாள்.

“ஹ்ம்ம்…” ஆர்விக்கிடம் உணர்தலுக்கான பிரதபலிப்பாய் முறுவல் மட்டுமே!

“இப்பவும் அமைதியா இருக்க நீ?” என குறைபட்டாள்.

“வேறென்ன பண்ணனும்… கிடைக்காதுன்னு தெரிஞ்ச ஒன்னு… இப்போ என் கைக்குள்ள. ஆர்ப்பரிக்கணும் தோணல. பொத்தி வைச்சிக்கத்தான் தோணுது” என்று அவளின் கரத்தை பிடித்தான்.

மெல்லிய நடுக்கம் கொண்ட அவளின் விரல்களோடு தன்னுடைய விரல்கள் நுழைத்து இறுக்கி மூடினான்.

“என்னோட நிறைவு” என்று அவளின் நெற்றி முட்டியவன்,

“சொல்லணும் அவசியமில்லை. ஆனால் சொல்லலன்னு இருந்திடக்கூடாதுல” என நிறுத்தி…

“லவ் யூ அன்வி” என கண்களை அழுந்த மூடிட, அவனது ஈரம் அவளின் நெற்றியின் மத்தியில்.

காதல், சந்தோஷத்தின் பிம்பம் அன்று… தேடல்கள் நிறைந்தது. வலி சுமந்தது. கிடைக்கப்பெற்ற நிலையில், கொண்டவருக்கு மட்டுமே உரித்தாகும் இன்பத்தின் உடனான வேதனையின் சுகம்.

“ஆர்வி…”

மெல்ல விலகினான்.

“ரொம்ப ஹெவி ஆகுது!” அவனது ஏக்கங்கள் கரையும் ஒவ்வொரு துளியிலும் அவளின் மனதின் சுமை கூடியது.

காதல் கிடைத்த மகிழ்வில் அவன் கத்தி கூச்சலிட்டு துள்ளியிருப்பதைக் காட்டிலும், இந்நேர ஒவ்வொரு மணித்துளியையும் பொக்கிஷமாக அகம் நிறைத்துக் கொள்பவனின் காதல் அவளை கணக்கச் செய்தது.

ஆர்விக் எதிர்பார்த்திராத போதும்… அவனுக்கு இணையான காதலை தன்னால் வழங்கிட முடியுமா எனும் வினா மேலெழும்ப… அவனிடம் கேட்கவும் செய்தாள்.

“காதலுக்கு அளவெல்லாம் கிடையாது அன்வி. நாம எவ்வளவுக்கு உண்மையா இருக்கோம் அப்படிங்கிறதுல அதோட ஆழம் இருக்கு. ஆயுள் இருக்கு…” என்றவன், “அன்வி எனக்குங்கிறது மட்டும் போதும். அவளுக்கான காதலும் என்கிட்ட இருக்கு” என்றான்.

உதடுகள் துடிக்க அவனது பெயரையும் உச்சரிக்க முடியாது தவித்தவள், அவனது மார்பில் சுருண்டிருந்தாள்.

“டேய்… அழ வைச்சிட்டனா?” என்றவனின் ஒற்றைக் கரம் அவளின் முதுகில் அரணாய் படிந்தது. அன்விதாவின் இரு கரங்களும் அவனை சுற்றி வளைத்தது. அவளிடமிருந்து அழுத்தமான அணைப்பு. அவனுக்குள் அவளாய் யாவும். இமைகள் மூடிய அவனின் முகம் இருள் வானோக்கி உயர்ந்தது.

இருவரிடமும்…

உதடு துடிக்கும் பேச்சு இல்லை.
உயிரும் இருக்கு மூச்சு இல்லை.

நிறைந்திருந்தது எல்லாம்… காதல். இரு மனங்களின் பேரின்பப் பெருங்காதல்.

நிமிடங்கள் கரைந்தோடிட… அவளின் உடலில் சில்லிப்பை உணர்ந்தவன்,

“குளிர் அதிகம் ஆகிடுச்சு அன்வி. கீழப்போகலாம்” என்றான்.

“ம்ஹூம்…” என்று மேலும் அவனில் இறுக்கம் கொண்டாள்.

“டேய்… இன்னைக்கே மொத்த லவ்வும் காட்டிடலாம் முடிவு பண்ணிட்டியா?” என சிரித்தவன், “தினம் தினம் அளவுக்கு அதிகமா வேணும்” என்றான்.

“காட்டினா என்னவாம்?” என்றவள், “இப்போ இப்படி மட்டும் தான காட்ட முடியும்” என்றாள்.

“இப்படின்னா?” அவனிடம் விஷமம் தெறித்தது.

“வோர்ட்ஸ், ஹக், ஹேன்ட் ஹோல்ட் பண்றது…”

“அப்புறம்?”

அவனது குறும்பு நகையில் வெளிவந்த குரலில் அவனின் மார்பிலிருந்து பிரிந்து முகம் பார்த்தவள்…

அவனது மார்பிலே இரு கைகளாலும் மாற்றி மாற்றி அடித்தாள்.

“யூ… யூ ராஸ்கல்…” என்றவளின் அடிகளோடு அவனின் சிரிப்பு வான் மிதந்தது.

“இப்போ இப்படின்னா… அப்புறம் அப்படிதான அன்வி?” என்றவன் அவளின் அடிகளுக்கு பின்னால் சாய்ந்தான்.

“ஹேய்… விழுந்துடாத” என்று அவனின் கை பிடித்து இழுத்தவள்,

“அப்புறம் அப்படியா இல்லையான்னு… அப்புறம் பார்ப்போம்” என்றாள்.

“அப்போ இப்போ பார்க்க முடியாதா?”

அன்விதாவின் விழிகள் விரிய, மென் அதிர்வில் அவளின் உதடுகள் திறந்தன.

“அடேய்…” என்று வாய்விட்டு சிரித்த ஆர்விக்…”நான் நீ காட்டுற லவ்வை பார்க்க முடியாதான்னு கேட்டேன்” என்றான்.

“நிஜமாவா?”

“அன்விக்கு ஆர்வியை தெரியாதா?” என்றவனை, அன்விதா ஒருவித ஆராய்வாக மேலும் கீழும் பார்த்து,

“நானும் அப்புறமே தெரிஞ்சிக்கிறேன்” என்றாள். பார்வையில் மிதப்பை காட்டி.

“அடிப்பாவி… எவ்ளோ பேசுற” என்றவன், “உன் மைண்ட் கரப்ட் ஆகிடுச்சு” என்றான்.

“ஆமா… ஆர்விக் அப்படிங்கிற வைரஸ் புகுந்து மொத்தமா கரப்ட் பண்ணிடுச்சு” என்றவள், “ஆன்டி வைரஸ் இன்செர்ட் பண்ணலாமா?” என்றாள். ஒற்றை கண்ணடித்து.

“டேய்… போதும்.” பல வருடங்கள் நெஞ்சின் ஓரம் ஒதுங்கியிருந்த அவனின் மகிழ்வெல்லாம் முகத்தில் கரை சேர்ந்தது.

“வீட்ல சொல்லணும். மேரேஜ் பண்ணனும். அதைதான் சொன்னேன். சார் என்ன நினைச்சீங்க?” என்று புன்னகையோடு கண்கள் சிமிட்டி, இரு புருவத்தையும் ஏற்றி இறக்கியவளை, அதீத உரிமையாய் இழுத்து தனக்குள் அழுத்தம் கொடுத்து அணைத்திருந்தான்.

“இப்போலாம் உன்னோட சிரிப்பை ரொம்ப ரசிக்கிறேன் ஆர்வி…” அவனது சிரிப்பில் லயித்தவளாக கண்கள் இயங்காது தன்னைப்போல் கூறினாள்.

“தெரியும்… மாம்ஸ் வெட்டிங் அப்போ நோட் பண்ணேன்” என்றவன், “உன்னோட பார்வை தான் உன் காதலை எனக்கு காட்டிக்கொடுத்துச்சு” என்றான்.

“உனக்கு என்னை தெரியலன்னா தான் ஆச்சரியம்” என்றாள்.

“ஹ்ம்ம்…”

“ரொம்ப நேரமாச்சு.”

“அனி எதுவும் நினைக்கமாட்டாங்க.”

“மேம் இல்லை… யாஷ். அவனுக்குத் தெரியும்ல. சோ, நிறைய இமேஜின் பண்ணி டேமேஜ் பண்ணிட்டு இருப்பான்” என்று அன்விதா சொல்ல…

“லவ்வை சொல்லியாச்சுன்னா, அதை ஃபீல் பண்ண வேண்டியதுதான. என் பேச்சு எதுக்கு?” என ஒலித்தது யாஷின் குரல்.

“சரியான டெவில். அவனை பேசினதும் வந்துட்டான்” என்று அன்வி வேகமாக நகர்ந்திட… அவளின் பதற்றம் அவனிடம் இல்லை.

“வரலாமா?” யாஷ் கேட்க…

“வாடா” என்ற ஆர்விக், யாஷ் கைகளில் தேநீர் கோப்பை இருந்திட,

“எதுக்குடா?” என்றான்.

“ரொம்ப நேரமா பேச்சுவார்த்தை போகுதே… டீ’ யை மிஸ் பண்ணுவிங்கன்னு கொண்டு வந்தேன். பார்த்தா இவள் உன்னை அடிச்சிட்டு இருக்காள். அதான் பக்கத்தில் வந்தா எனக்கும் விழுந்திடுமோன்னு அப்படியே அங்கவே படியில் ஒளிஞ்சுகிட்டேன்” என இருவருக்கும் நடுவில் வைத்தான்.

“நீ அவ்வளவுக்கு நல்லவன் இல்லையே!” அன்விதா அவனின் தோளில் கைப்போட…

“ஆக்சுவலி… என்ன பேசுறீங்கன்னு ஒட்டு கேட்கத்தான் வந்தேன். பட் நான் ரொம்ப டிசன்ட் கைய் யூ நோ…” என்ற யாஷ், “அப்புறம் மச்சான்… முகத்துல ஒளிவட்டம் மின்னுதே” என்றான்.

“ஆமா… ஆமா… தேஜஸ் கூட ஜொலிக்குது” எனக் கேட்டது தான்யாவின் குரல்.

தான்யாவும், பூபேஷும் வந்திருந்தனர்.

“தானு… யூ டூ…” ஆர்விக்.

“எஸ் டா…” என்ற தான்யா, “அன்வி உன்கிட்ட லவ் சொல்லப்போறான்னு இவன்கிட்ட சொன்னது தான். நான் நம்பமாட்டேன்… நேர்லே பார்த்திடுவோம் வான்னு கூட்டிட்டு வந்துட்டான்” என்றாள்.

“ரொம்ப ஹேப்பியா இருக்கு ஆர்வி” என்ற பூபேஷ், “இனியா பார்ட் முடிஞ்சிதுபோல” என்றான் அன்விதாவிடம்.

“ஆமா… அன்வி அவளுக்கு என்ன சொல்லுவான்னு பார்த்தா… அவள் தான் எங்களை சர்ப்ரைஸ் பண்ணாள்” என்றான் தான்யா.

“ஹ்ம்ம்… கேட்டேன்” என ஆர்விக் சொல்ல… அன்விதா அவனை கேள்வியாய் ஏறிட்டாள்.

அவளின் கேள்வி தான்யாவிடமிருந்து வார்த்தையாக வந்திருந்தது.

“அப்போ அன்வி பேசினதெல்லாம் கேட்டியா?”

“ம்ம்… கேட்கணும் இன்டென்ஷன் இல்லை. நான் வெளிய வந்ததும், இனியா உள்ள போறதை பார்த்தேன். அன்வியை பேசி அனுப்பிடுன்னு சொன்னாலும், அவள் உங்களை எதும் ஹர்ட் பண்ணிடுவாளோன்னு வந்தேன்” என்ற ஆர்விக், “அவள் மேரேஜ் சொன்னதும் வெளியவே நின்னுட்டேன். அடுத்து இவன்ட் பற்றி பேசவும் திரும்பிப் போயிட்டேன்” என்றான்.

“ஹோ…” என்ற தான்யா,

“நீ சொல்லாம நான் சொல்லிட்டேன்னு உனக்கு எதுவும் வருத்தமில்லையே ஆர்வி?” எனக் கேட்டாள்.

“அவளா என்கிட்ட சொல்லணும் நான் நினைச்சது, இனியா வரதுக்கு முன்னாடி அன்வி என்கிட்ட சொல்ல வந்ததுலே எனக்கு ஃபுல்ஃபில் ஆகிடுச்சு. அந்த நேரம் இனியா வராம இருந்திருந்தா, கண்டிப்பா அன்வி சொல்லியிருப்பாள்” என அன்விதாவின் விழிகளை பார்த்துக்கொண்டே ஆர்விக் சொல்ல, அவளின் கண்கள் ஆமென பதில் வழங்கியது.

“இனியா வந்ததுல குழப்பமாகிட்டாள். அதுல அவளோட தைரியம் காணாமப் போயிடுச்சு. சோ அவளை தூண்டிவிட நீ சொல்ல வேண்டியதாகிடுச்சு” என்று புரிந்துணர்வோடு பேசிய ஆர்விக்கின் அனைவருக்குமான, எப்போதுமான இந்த புரிதல் ஆச்சரியம் தான்.

“எப்போ எப்படி சொன்னாலும் அன்வி என்னை லவ் பண்றாள்… அது நிஜம் தான. என்னோட காத்திருப்புக்கு அன்வியோட லவ் தான் மதிப்பு” என்றான்.

“யூ ஆர் அமேசிங் டா” என்ற யாஷ், “இப்படியெல்லாம் பேச எனக்கும் சொல்லித்தாடா. மதிகிட்ட பேசவே வரமாட்டேங்குது” என்று நொடியில் உணர்வுப்பூர்வமான சூழலை மாற்றியிருந்தான்.

“பேசவே தெரியாமலா எந்த நேரமும் போனிலே முகத்தை புதைச்சு வைச்சிட்டு இருக்க?” என்ற பூபேஷ்,

“இவனை நம்பாத ஆர்வி. வேணுன்னா பாரு… லவ்வை கண்ட்ரோல் பண்ண முடியலன்னு உனக்கு முன்ன கல்யாணம் பண்ணிட்டு வந்து நிப்பான்” என்றான்.

“இவன் போற ஸ்பீடுக்கு கண்டிப்பா நடக்கும்” என்று அன்விதாவும் சொல்ல, யாஷ் ஆர்விக்கை பாவமாகப் பார்க்க, அவனோ வந்த சிரிப்பை அடக்கினான்.

“ஆர்வி…”

“பின்ன என்னடா… எப்பவும் லவ் மோட்லே இருந்தன்னா இப்படித்தான் கிண்டல் பண்ணுவோம்” என்றான் ஆர்விக்.

“அப்போ வாங்க மேரேஜ் மோட்க்கு போவோம்” என யாஷ் கூற,

“நான் சொல்லல” என்ற பூபேஷைத் தொடர்ந்து,

“எப்போடான்னு இருக்க நீ?” என்றாள் தான்யா.

“ஹேய் நிறுத்துங்க” என்ற யாஷ், “நான் ஆர்வி அன்வி மேரேஜ் சொன்னேன். கீழ வாங்க போவோம். அம்மாகிட்ட சொல்லி, சீக்கிரமா நடத்தனும்” என்றான்.

“இதுலயும் எதுவோ உள்குத்து இருக்கும் போலவே!” அன்விதா புருவம் உயர்த்த,

“நம்ம மேரேஜ் ஸ்டார்ட் ஆச்சுன்னா மதி கூடவே கொஞ்ச நாளுக்கு சுத்தலாம்ல…” என்றான் ஆர்விக்.

“என்னை புரிஞ்சிக்கிட்டது நீ மட்டும் தான்டா” என்ற யாஷ்,

“வாங்க வாங்க அம்மாகிட்ட சொல்லுவோம்” என அனைவருக்கும் முன்பாக கீழே ஓடினான்.

“இன்னும் எதுவும் பேசணுமாடா?” பூபேஷ் கேட்க, இல்லையென்ற இருவரும் அவர்களுடன் இணைந்து கீழே சென்றனர்.

“என்னவோ இருக்கு.”

ஐவரும் ஒன்றாக இருக்கவே சொல்லியிருந்தார் அனிதா.

யாஷின் பேச்சின் மூலம் அனிதாவுக்கு என்னவென்று ஓர் யூகம் இருப்பினும்… அதனை தானாகக் கேட்காது இருந்தார்.

“அவ்ளோ வேகமா ஓடி வந்தான். எதுவும் சொல்லலையா?” என்ற பூபேஷ், சப்பாத்தியை மென்று கொண்டிருந்த யாஷின் அருகில் அமர்ந்தான்.

“இதுக்கா அவ்ளோ வேகமா வந்த?”

“ஆமா… சோறு முக்கியம் டா…” என்ற யாஷ், “இதுக்குத்தான பக்கத்துல வந்து உட்கார்ந்த” என பூபேஷின் வாயில் உணவினை திணித்தான்.

“மெல்ல சாப்பிடுங்க டா” என்று இருவரையும் அதட்டி…

“நீங்களும் உட்காருங்க… சாப்பிடலாம்” என கூறிய அனிதா, சட்டென்று தன்னை அணைத்த மகனின் செய்கையில் பதறி, அவனுக்கு பின்னால் நின்றிருந்த அன்விதாவின் முகம் காட்டிய பூரிப்பில் இயல்பாகினார்.

அனிதாவின் வெற்று தோள்… மகனின் அழுத்தம் உணர்ந்தது.

“அனி…” அவனின் அக்குரலில், அனிதாவுக்கு கண்கள் பனித்தன.

“அவ்ளோதான்…” அனிதாவின் ஒற்றை வார்த்தை, அவனுக்கான அனைத்துமான ஆறுதலாக அடங்கி நின்றது.

ஆர்விக்கின் அணைப்பும், அவனது உடல் நெகிழ்வும், அனிதாவுக்கு அவன் சொல்லாமலே என்னவென்று அறிய வைத்திட்டது.

அவனுக்குமான காதலின் காத்திருப்பில் மகனுக்கான அனிதாவின் காத்திருப்பும் அடங்கியுள்ளதே!

நெஞ்சம் நிறைய ஆர்விக்கின் கன்னம் தாங்கி, கண்கள் துளிர்க்க நெற்றியில் முத்தம் வைத்தார்.

கரம் நீட்டி அன்விதாவை அருகில் அழைத்தவர், மற்றைய பக்கம் அவளை அணைத்துக் கொண்டார்.

மகனது மகிழ்வில் மனம் கொள்ளும் பேருவகையில் கட்டுண்டு பேச்சின்றி நின்றார்.

“ஹான் போதும் போதும்…” என்ற யாஷ், “சென்ட்டிமென்ட் சீன் அப்படின்னாவே அழுகையா தான் இருக்கணுமா?” என்றான்.

“இப்போ யாருடா இங்க அழுதா?” என்ற அனிதா, அன்விதாவின் முகம் பார்த்து…

“என்கிட்ட நீ சொல்ல நினைக்கிறது புரியுது. ஆர்வியை எவ்ளோ தெரியுமோ… உன்னையும் அவ்ளோ தெரியும். நடந்தது எதையும் பேச வேண்டாம்” என்று அவளின் கன்னம் தட்டினார்.

“மேம்…” என்றவள் தழுதழுப்பாக அவரின் கைகளை இறுகப் பிடித்திருந்தாள். பிடியில் அனிதா அழுத்தமாய் தட்டிக் கொடுத்தார்.

ஆர்விக் அன்விதாவை புரிந்துகொள்வதில் அவனது காதல் உள்ளது. ஆனால் அனிதா?

“தேங்க் யூ மேம்” என்று கண்ணீர் கசிய அன்விதா மொழிய,

“அவனோட சந்தோஷம் நீ… காலம் முழுக்க அந்த சந்தோஷம் அவன்கிட்ட நிறைஞ்சிருந்தா போதும்” என்ற அனிதா, “உன்னை நான் புரிஞ்சிக்க ஆர்வி வழியா உன்னைப் பார்த்தாலே போதும்” என்றார்.

“அப்புறம் மம்மி… ஃபீல் பண்ணதுலாம் போதும். இப்போவே மிஸ்டர் கதிர்வேலனுக்கு போன் போட்டு பொண்ணு கேட்டுடுங்க” என்றான் யாஷ்.

“இவன்… இவன் விஷயத்துல கண்ணா இருக்கான்” என்று பூபேஷ் சொல்ல… அனைவரிடத்திலும் ஆர்விதா காதல் சேர்ந்த மகிழ்வினூடே சிரிப்பும் பரவியது.

“என்ன ஆர்வி பேசிடலாமா?” அனிதா ஆர்விக்கிடம் கேட்க,

அன்விதாவை பார்த்தவாறு பின்னந்தலை வருடி, மேலுதட்டை கடித்து விடுத்தவன்…

“இதெல்லாம் கேட்கணுமா அனி” என்று நாணம் சுமந்த முகத்தை அவர்களுக்கு காட்ட மறுத்தவனாக அங்கிருந்து நகர, சிறியவர்கள் மூவரின் கத்தலும் சுவர் மோதி ஆர்ப்பரித்தது.

ஆர்விக் காட்ட மறுத்த போதும், அவனின் வெட்கச் சிரிப்பை ரசிப்பவளாய் அன்விதாவின் பார்வை அவனைத் தொடர்ந்தது.

இனி அவளின் பார்வை மட்டுமல்ல… காதலும் அவனைத் தொடரும்…

காதலுடன்,
ஆர்விதா ❤️.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 60

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
63
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments