Loading

காலை கனவு 41

‘வலி…
எளிதானதல்ல!
உண்மை நேசித்தலில் கிடைக்கப்பெறுவது.’

இரவின் கருமை படர்ந்த பரந்த வானில் ஒற்றை மலராய் வலம் வந்து கொண்டிருந்த நிலவவளின் வெண்மை மத்தியில் தன்னவளின் முகம் வைத்து ரசித்திருந்தான் ஆர்விக்.

மார்பிற்கு அணைவாய் கைகளைக் கட்டிக்கொண்டு மொட்டை மாடியின் பக்கச்சுவரை ஒட்டி நின்றிருந்தவனிடம் அப்படியொரு இதம்.

இதுவரை காத்திருந்த காத்திருப்புக்கெல்லாம் பலன் சேர்வதில் பெரும் உவகை.

தன்னுடைய காதலை காட்டித்தான் அன்விதாவிடம் தனக்கான காதலை விதைத்திட வேண்டுமென நினைத்தவனின் எண்ணத்திற்கு மாறாக… அவனின் காதல் கொண்ட ஏக்கத்தின் மதிப்பாய், அவள் அவனிடம் காதல் கொண்டுள்ளாள்.

கேட்டுப்பெற வேண்டுமென்ற இடத்தில்… கேட்காமலே கிடைப்பது வரமல்லவா!

ஆர்வியின் காதல் தவத்தினும் உயர்வானது… அவளின் காதலை வேண்டி நின்றதில்லையே தவிர, அவளைத் தவிர ஒருத்தியை நிழலாகவும் மனதில் நிறுத்திட முடியாதெனும் அவனின் காதல் வைராக்கியதோடு தவத்தையும் ஒப்பிட முடியாது. தவத்தின் பலனும் கேட்டுப் பெறுவதிலே அடக்கம் கொள்ளுமாதலால்.

ஆர்விக்கின் காதல்… அவன் கேட்காமலே அன்விதா உள்ளம் சுமந்ததால் தவத்தினும் உயர்ந்திட்ட வரமானது.

அன்விதாவின் பக்கமிருந்து எப்படியென்றெல்லாம் ஆர்விக்குக்கு தெரியாது. அவனுக்கு அந்தப் பக்கங்கள் எல்லாம் வேண்டுமானதாகவும் இல்லை. அவன் வேண்டுவது… வேண்டியதெல்லாம் அன்விதாவின் நேசம் மட்டுமே!

இந்த வேண்டுதலும் சில நாட்களாகத்தான்…

கிடைக்கப்பெறும் எனும் நிலையில் எதிர்ப்பார்பற்ற அவனின் காதலில் தானாக அவனுள் தோன்றிவிட்ட எதிர்ப்பார்ப்பு இந்த வேண்டுதல்.

கிடைக்கப்பெறுதல் அன்விதாவின் பார்வை மாற்றத்தால் ஆர்விக் உணர்ந்தது.

கிடைக்கவே கிடைக்காது எனும் அவனது ஏக்கத்திற்கு அவளது காதல் ஒன்றே ஈடென இப்பிரபஞ்சமே இணைத்திட்ட காதல்.

எதிர்பார்ப்புகளற்று உள்ளத்தால் மட்டுமே சுவீகரித்த ஆர்விக்கின் காதலுக்கான மதிப்பு அன்விதாவாக அவன் மீது கொண்ட காதல்.

வேண்டுமானவையெல்லாம் கரம் சேர்வதில்லை. கரம் சேர்பவையெல்லாம் வேண்டுமானதாக இருப்பதில்லை.

ஆனால் ஆர்விக்கின் நெஞ்சம் நிறைந்த காரணத்தினாலோ என்னவோ, கிடைக்காதென்ற போதும் அவனுடைய மனதில் புள்ளி அளவிலும் இறங்கிடாத, தாழ்ந்திடாத அவனது நேசம் அவனுக்கு வேண்டுமாய் காலம் கரம் சேர்த்திட்டது.

ஆர்விக் நெஞ்சத்தின் ஏக்கங்கள் யாவும் அவனவளின் வார்த்தைகளில் இன்று நீர்த்துப்போயின.

ஆர்விக்கின் காதல் மட்டுமல்ல அவள்…

அவனின் தேடல்… அவனின் ஏக்கம்… அவனின் காத்திருப்பு… அவனின் பெரும் வலி…

“இப்போலாம் உன்னை வேற மாதிரி பார்க்கத் தோணுதுடா!”

அன்விதா தவிப்பாய் மொழிந்த வார்த்தைகள் இந்த நொடியும் செவிகளில் அதிர்வை ஏற்படுத்த, மெல்ல கண்கள் மூடியவனின் இமை தொட்டு மின்னியது துளி நீர்.

‘ஆழ வலி கொள்வதும் எளிதல்லவே! உன் உயிர் உறைவிடம் கொண்டிருக்க வேண்டும், நேசித்தலில்…’

அந்த மூன்று வார்த்தை காதல் மந்திரத்தை அன்விதாவிடம் சொல்லிட, ஆர்விக்கின் ஒவ்வொரு அணுவும் ஆர்ப்பரித்துக் கிடக்கிறது.

ஆனாலும் உணர்ந்திட்ட காதலை அவள் வாய்மொழிக் கேட்டிட காத்து நிற்கின்றான்.

“அன்விக்கு ஆர்வி மேல லவ் வந்தாச்சு…” இரு கைகளையும் சிறகாய் நீண்டு விரித்து, வான் நோக்கி முகம் உயர்த்தி கத்தியவனின் குரல் கேட்டு, அவனுக்கு சில அடிகள் தொலைவில் நடந்தபடி வெண்மதியுடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த யாஷ், நடையை நிறுத்தியவனாக நண்பனை திரும்பிப் பார்த்தான்.

“யாரு கத்துறது, ஆர்வி அண்ணாவா?” தூர ஒலியாகக் கேட்ட சத்தத்தில் வெண்மதி யாஷிடம் கேட்டிருந்தாள்.

“அவன் கத்தினது ஓகே! என்ன சொல்லி கத்தினான் கேட்டுச்சா?” என்ற யாஷ், “சரியா புரியல… எதோ லவ் வந்தாச்சு சொன்ன மாதிரி கேட்டுச்சு” என வெண்மதி யோசனையாகக் கூறவும், “இன்னொரு வெட்டிங்க்கு எல்லாரும் ரெடியாக வேண்டியது தான்” என்றதோடு, “நம்ம மேரேஜ் தான் லேட்டா நடக்கும்போல. நீ கொஞ்சம் முன்னவே பிறந்திருக்கலாம்” என்றான்.

“உங்களை யாரு அவ்ளோ அவசரமா பிறக்க சொன்னா?” என்ற வெண்மதி, “போய் அண்ணா எதுக்கு கத்தினாங்கன்னு கேளுங்க” என்று வைத்திட்டாள்.

அணிந்திருந்த ட்ராக் பேண்டின் பாக்கெட் இரண்டிலும் கை நுழைத்தவனாக, காலால் தரையை எத்தி, ஒரு பாதம் ஊன்றி நின்ற இடத்திலிருந்து சுற்றி சுழன்றவனாக கைகள் விரித்து நிலைபெற்ற ஆர்விக்கின் செயல்களெல்லாம் காதலின் பித்து நிலையில் அவனை காட்டியது.

“ரொம்ப முத்திப்போச்சி” என்று ஆர்விக்கின் அருகில் வந்து, சுவற்றில் சாய்ந்து நின்றான் யாஷ்.

“எப்போ மச்சான் வந்த” என்ற ஆர்விக், யாஷின் இரு கைகளையும் பிடித்து அசைந்தாடிட…

“நான் இவ்ளோ நேரம் அங்க நடந்துகிட்டே போன் பேசிட்டு இருந்ததை நீ கவனிக்கவே இல்லை… அப்படித்தான?” என்றான் யாஷ்.

“இங்கதான் இருந்தியா?” என்று நம்பாது கேட்டிருந்தான் ஆர்விக்.

“முதல்ல இப்படி ஆடுறதை நிறுத்துடா” என்ற யாஷ், “நீ வரதுக்கு முன்னவே இங்கதான் இருந்தேன். நான் போன் பேசிட்டு இருந்ததால என்கிட்ட பேசாம வந்து நின்னுட்டன்னு நினைச்சேன்” என்றான்.

“ஹோ… நிஜமா கவனிக்கல” என்ற ஆர்விக், சுவற்றை பற்றிப் பிடித்தவனாக கால்கள் அசைத்து நின்றான்.

“அன்விகிட்ட லவ் சொல்லிட்டியா?” யாஷ் கேட்க, குறுநகையோடு இல்லையென தலையசைத்தான் ஆர்விக்.

“அப்புறம் என்ன இந்த மாற்றம்?”

“மாற்றமா?”

“ஆமா” என்ற யாஷ், “உன் ஃபேஸ் ஓவர் எக்ஸ்பிரசிவ்வா தெரியுது” என்றான்.

“அப்படியா?” என்ற ஆர்விக், தன்னிலையை மாற்றியவனாக சுவற்றில் சாய்ந்து நின்றான்.

“அப்போ என்னவோ கத்துனியே! உண்மையா?”

“ம்ம்… ஷீ லவ்ஸ் மீ!” என பக்கவாட்டில் யாஷைப் பார்த்தான்.

“சொல்லிட்டாளா?”

“ஓப்பனா சொல்லல… பட் ஐ கேன் ஃபீல்…”

“ஹோ…” என்று யாஷ் ராகம் இசைக்க…

“நம்பலையா?” என்றான் ஆர்விக்.

“உன்னோட சந்தோஷமே சொல்லுதே உண்மைன்னு. நம்புறேன்” என்ற யாஷ், “ஈவ்வினிங் அவள் ஏன் என்ன முறைச்சான்னு தெரிஞ்சிடுச்சு” என்றான்.

ஆர்விக் வாய்விட்டு சிரித்திட…

“எவ்ளோ நாளா இந்த ஹைட் அண்ட் சீக் போயிட்டு இருக்கு?” என்றான் யாஷ்.

“எப்போலேர்ந்துன்னு தெரியல… பட் நாம கொடைக்கானல் போகுமுன்ன தான் நான் ரியலைஸ் பண்ணேன். அன்னைக்கு அம்மாவுக்கும் நான் அன்வியோட சேருறதுல விருப்பமிருக்கு தெரிஞ்சப்புறம்… கொஞ்சம் திங்க் பண்ணேன். அப்போதான் அன்விக்கிட்ட நான் கவனிக்காம விட்டதை தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கு அப்புறம் ஊர்ல கவனிக்க ஆரம்பிச்சேன். சோ, அவளா சொல்லனும்னு நான் சைலண்ட் ஆகிட்டேன்” என்றான் ஆர்விக்.

“நீயா சொன்னா என்ன?”

“லவ்ல கொடுக்கிறதைவிட, பெறுதல் அலாதியானது டா” என்ற ஆர்விக், “அன்வி ஆர்வியோட ஏக்கம்! அவளா சொல்லும்போதுதான் அந்த ஏக்கம் காணாமப்போகும்” என்று கண்களை மூடியபடி, உதடுகளின் மலர்ச்சியோடு கூறி, கீழ் உதட்டை கடித்து இமைகள் திறந்து இரு புருவத்தையும் ஒன்றாக ஏற்றி இறக்கினான்.

ஆர்விக்கின் சிறு சிறு உணர்வுகளும் விவரிக்க முடியா தனித்துவத்தில் மிளிர்ந்தன. அவனது ஏக்கத்தின் விடைபெறுதலால்.

“அப்படியே இங்க சில்லுன்னு இருக்குடா” என்று இதயத்தில் உள்ளங்கையால் தேய்த்தவன், அக்கையாலே முகம் மூடி பாதங்களில் மெல்லிய துள்ளலை காண்பித்தான்.

“ஹேப்பி ஃபார் யூ டா” என்ற யாஷ், “நிஜத்துக்கும் உன்னோட இந்த சந்தோஷம் அப்படியொரு நிறைவை கொடுக்குது. நீ இன்னும் ஹேப்பியா இருக்கணும்” என ஆர்விக்கை இறுக அணைத்து விடுத்தான்.

நண்பனின் வலியை மட்டுமே பார்த்திருந்தவனுக்கு, அவனின் முகத்தில் ஒளிரும் மகிழ்வு எத்தனை பெரும் ஆசுவாசத்தை அளித்திட்டதென்பதை அவனின் அவ்வணைப்புக் காட்டியது.

“அம்மாக்கு தெரிஞ்சா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க.”

“அன்வி சொன்னதுக்கு அப்புறம்… ரெண்டு பேரும் சேர்ந்து சொல்லணும்” என்ற ஆர்விக், “இத்தனை வருஷம் இந்த லவ் எனக்குள்ளதான் இருந்துச்சு. ஆனால் இந்த சில மணிநேரமா கடல் மாதிரி கொந்தளிக்கிற ஃபீல் டா” என்றான்.

யாஷ் சிறு சிரிப்போடு ஆர்விக்கை பார்க்க…

“அவகிட்ட தான் மொத்தமா அடங்கும் போல” என்றான் ஆர்விக்.

அந்நேரம் அன்விதாவிடமிருந்து அழைப்பு வர,

“குட் நைட்…” என்று ஆர்விக்கின் தோள் தட்டி சென்றிருந்தான் யாஷ்.

அலைபேசி ஒலித்துக்கொண்டே இருக்க…

“இந்த நேரத்தில்?” என்று சிந்தித்த நொடியில் தான் இனியா மாலை அவளிடம் பேச வந்த நினைவே ஆர்விக்குக்கு வந்தது. தான்யா இனியா வந்திருக்கிறாள் என்றதுமே, அன்விதா தன்னிடம் பேச வந்தது தடைப்பட்ட கோபத்தில் ஆர்விக் அலுவலகத்திலிருந்து கிளம்பியிருந்தான்.

அன்விதா தன்னுடைய மனதை ஆர்விக்கிடம் வெளிப்படுத்தும் விதமாக, அவன் முகம் பார்த்து சொல்லிட தடுமாற்றம் கொள்வதால் கண்கள் மூடி அவனில் தனது பார்வை மாற்றம் கொண்டதை கூறிட…

“டேய்… இனியா வந்திருக்கா!” என,

தான்யா வந்து கூறியதில், பட்டென்று இமைகள் திறந்து சட்டென்று மனதில் எழுந்துவிட்ட சிறு வலியோடு ஆர்விக்கை ஏறிட்டாள்.

அன்விதா தன்னுடைய மனதை கொஞ்சமே கொஞ்சம் திறந்ததில் பேரிதம் கொண்டவனின் முகம் நொடியில் கடுமைக்கு மாறியிருந்தது.

“மூணு மாசம் கழிச்சு வர்றேன் சொன்னவள் நாலு மாசம் முடிஞ்சும் வரலன்னு நினைச்சேன்… வந்துட்டாள். கடன்காரி” என்று முணுமுணுத்த அன்விதா, “ஆர்வியை பார்க்க முடியாதுன்னு சொல்லி அனுப்பிடு தானு” என்றாள்.

“அவள் உன்னை பார்க்க வந்திருக்காள்… நீ எதோ பிராமிஸ் பண்ணியாமே” என்று தான்யா கூறியதில், ஆர்விக்கின் கடுப்புகள் மொத்தமும் அன்விதாவின் பக்கம் திரும்பியது.

அதில் அன்விதா ஆர்விக்கை முகம் சுருக்கி பார்த்திட,

“அன்னைக்கு மாதிரி எதுவும் என்கிட்ட வந்து அவளுக்காக பேசின… அவ்ளோதான்” என்றவன், “என்பக்கமே இனி அவள் திரும்பாத மாதிரி நீயே எதுவும் பேசி அனுப்பிடு” என்று வேகமாக அலுவலகம் விட்டு சென்றிருந்தான்.

ஆர்விக் செல்வதையே தவிப்போடு பார்த்திருந்த அன்விதா, கைகளால் தலையை தாங்கியவாறு குனிந்திட்டாள்.

ஆர்விக் அன்விதாவிடம் கோபமாக பேசியதை நம்பவே முடியாது நின்றிருந்த தான்யா,

“ஹேய் அன்வி என்னாச்சு?” என்று அவளின் அருகில் செல்ல, தான்யாவின் வயிற்றில் முகம் புதைத்த அன்விதா…

“தப்பு பண்ணிட்டேன் தானு” என்றாள்.

“டேய்… என்ன?” என்று அன்விதாவின் தலை பிரித்து தரையில் குத்திட்டவள், அவளின் முகம் பிடித்து… “அழறியா அன்வி?” என்றாள்.

“இல்லையே” என கண்களை துடைக்க தானாக கைகள் உயர்ந்த பின்னரே அன்விதா கண்ணீரை உணர்ந்தாள்.

நொடியில் எதனால் என யோசிக்கவே செய்திடாது, ஆர்விக் எனும் பதில் முன் நின்றது.

‘மனம் கசிய கரையுடையும் கண்ணீர் எளிதல்லவே! உணர்வுகள் கரைந்திருக்க வேண்டும் நேசித்தலில்!’

இனியாவுக்கு உறுதி அளித்த மடமை உள்ளத்தை அறுத்தது.

“என்னடா?” தான்யா கேட்டிட…

“ஐ லவ் ஆர்வி தானு” என தான்யாவின் கழுத்தினை தாவி பிடித்தவளாக அவளின் தோளில் நாடி பதித்து…

“அவனை ரொம்ப பிடிக்குது தானு. அவன் எனக்கு வேணும் தோணுது. மனசு முழுக்க உட்கார்ந்துட்டான்” என விசும்பினாள்.

“இட்ஸ் ஓகேடா” என்று அன்விதாவின் முதுகை நீவிய தான்யா, “இதுக்கு ஏன் அழனும்?” என்றாள்.

“தப்பு பண்ணிட்டேன். அப்போ எனக்கு ஆர்வி மேல லவ் வரும் தெரியாதே! நான் என்ன பண்ணட்டும்?”

“என்ன தப்பு?” என்ற தான்யா, “அழறதை நிறுத்து அன்வி…” என்றதோடு, “ஆர்விக்கிட்ட லவ் சொல்லிட்டியா?” என்றாள்.

அன்விதா பதில் சொல்லாதிருக்க…

“ஆர்விக் நோ சொல்லிட்டானா?” என்றாள் தான்யா. அதற்கு வாய்ப்பே இல்லையென தெரிந்தும்.

“எதுவும் சொன்னாதான அன்வி தெரியும். அவன் புதுசா உன்கிட்ட கோபப்பட்டுப் போறான். நீயும் அழற! நான் என்னன்னு நினைக்க?” என்ற தான்யா, “அழமா சொல்லு” அன்விதாவை தன்னிலிருந்து பிரித்தாள்.

“நான் இன்னும் லவ் சொல்லவே இல்லை.” சுரத்தின்றி அன்விதா மொழிந்திட,

“ஆர்வி ஏன் கோபமா பேசிட்டுப்போறான்?” என்றாள் தான்யா.

“அது…” என்று இனியா தன்னிடம் பேசியது, அவளிடம் தான் கூறியதென அன்விதா எல்லாம் சொல்ல…

“லூசா அன்வி நீ” என்றிருந்தாள் தான்யா.

“தானு?”

“பின்ன என்ன அன்வி… நீ அவளுக்கு புரிய வைக்கிறதுக்காக அப்படின்னாலும், இனியா கிட்ட இப்படி சொன்னது தப்பு” என்ற தான்யா, “சொன்ன மாதிரி வந்துட்டாள். இப்போ மேடம் என்ன செய்யப்போறிங்க?” என்றாள்.

“ஆர்வியை என்னால விட்டுக்கொடுக்க முடியாது” என்று அன்விதா முகத்தை அழுந்த துடைத்திட…

“ஆர்விக் உங்களுக்குத்தான்” என்று வந்தாள் இனியா.

இனியா வெளியில் காத்து நிற்க, அவளை கடந்து வெளியேறிய ஆர்விக்கின் நிழலும் அவள் புறம் திரும்பவில்லை.

அன்விதாவை அழைத்து வருவதாகச் சொல்லிய தான்யா நிமிடங்கள் பல கடந்தும் வரவில்லையென்றதும், அவர்களிருக்கும் பகுதிக்கு இனியாவே வந்திருந்தாள். அன்விதாவின் பேச்சுக்கள், அழுகையென எல்லாம் கேட்டிருந்தாள்.

“நீயென்ன அவளுக்கு அவனை விட்டுக் கொடுக்கிறது?” என்ற தான்யா, “ஒருத்தங்க பிடிக்கலன்னு சொன்னதுக்கு அப்புறமும் இப்படி வந்து வந்து டார்ச்சர் பண்றது சரியில்லை” என்றாள். தான்யாவின் முகத்தில் அப்பாட்டமான எரிச்சல்.

“உங்க கோபம் புரியுது” என்று சிரித்த இனியா,

“எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. சோ, இவன்ட் மேனேஜிங் புக் பண்ணலாம் வந்தேன்” என நேரடியாக தான் வந்ததன் காரணத்தைக் கூறினாள்.

“இப்பவாவது ஆர்வி மேல உனக்கு வந்தது லவ் இல்லைன்னு புரிஞ்சிக்கிட்டியே” என்று தான்யா சொல்ல…

“நம்மளைத்தேடி வர லவ் தான் நல்லாயிருக்கும் புரிஞ்சிக்கிட்டேன்” என்றாள் இனியா.

காதலென ஆர்விக்கின் பின்னால் சுற்றியதெல்லாம் வெறும் ஈர்ப்பென முதல் ஒரு மாதத்திலே அவனை காணாது உள்ளுணர்வோடு சிந்தித்துப் பார்த்ததில், ஆர்விக்கை பார்க்காமல் இருப்பதால் தனக்குள் எவ்வித வருத்தமுமில்லை என்பதை இனியா உணர்ந்திட… அடுத்தடுத்த நாட்களில் அவனை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் கூட தோன்றாததில், அவன் மீது கொண்ட ஈர்ப்பு காதலெனும் எல்லைக்குள் நுழையவே இல்லையென புரிந்துகொண்டாள். அதன் பின்னர் காதலென்று அவனிடம் பேசியது செய்ததெல்லாம் பக்குவமற்ற செயலாகவேத் தெரிந்திட சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.

அதிலும் ஆர்விக்கை திருமணம் செய்ய நினைத்து செய்தது ஒருவித குற்றவுணர்வை கொடுத்திட மூன்று மாதங்கள் முடிய, தான் செல்லாவிட்டாலும் அன்விதாவாக தன்னை பார்க்க வந்துவிட்டால் என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாது நாச்சி முத்துவின் மகன் பெங்களூரில் தொழில் செய்து கொண்டிருக்க… அங்கு சென்றுவிட்டால். அங்கு சென்ற பின்னர் தான் அவன் இவளை பல ஆண்டுகளாக காதலித்து வருவதை தெரிந்துகொண்டதோடு, அவன் காட்டிய காதலில் காதல் என்பதற்கே அர்த்தம் விளங்கிக்கொண்டாள்.

அனைத்தும் மேலோட்டமாக ஒரே மூச்சில் சொல்லி முடித்த இனியா,

“ஆர்விக்கை மட்டுமில்ல… உங்க எல்லாரையும் கூட ஹர்ட் பண்ணிட்டேன். சாரி” என்றாள்.

“இட்ஸ் ஓகே” என்று அன்விதா கூற,

“என் ஆர்டர் அக்செப்ட் பண்ணிப்பீங்களா?” எனக் கேட்டாள் இனியா.

“நீங்க டேட் சொல்லுங்க… ஃப்ரீயா இருக்கோமா சொல்றேன்” என தான்யா அடுத்து தொழில்முறை பேச்சுக்களாக பேசி முடித்து இனியாவை அங்கிருந்து அனுப்பி வைத்தாள்.

செல்வதற்கு முன்பு,

“நான் இன்னும் லவ் பண்றேன்னு வந்து சொல்லியிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க அன்விதா?” எனக் கேட்டிருந்தாள் இனியா.

“அன்னைக்கே நோ தான சொன்னேன்” என்று அன்விதா அமர்த்தலாக பதில் சொல்லிட…

“அப்போ இந்த அழுகை?” எனக் கேட்டாள்.

“உனக்கு ஹோப் கொடுத்திட்டு… நோ சொல்லப்போறனேன்னு” என்ற அன்விதாவின் பதிலில் வாயடைத்து சென்றிருந்தாள் இனியா.

இனியா சென்ற பின்னர் அன்விதா தான்யாவை பார்ப்பதை தவிர்த்தவளாக,

“யாஷ், பூபேஷ் எங்க?” என வினவினாள்.

“ரெண்டும் கிளம்பிடுச்சு” என்ற தான்யா, அன்விதாவின் முன் இருக்கையை இழுத்துப்போட்டு அமர்ந்து… “இப்போ சொல்லு” என்றாள்.

“என்ன சொல்லணும்?”

“லவ் எப்படி?”

“ஆர்விக்கிட்டவே சொல்லல தானு” என்ற அன்விதா, “அவன்கிட்ட சொன்னா எப்படி எடுத்துப்பான்னு தெரியல… பட் நிச்சயம் தப்பா நினைக்கமாட்டான் தெரியும்” என்றாள்.

“ஹ்ம்ம்… அப்புறம் என்ன தயக்கம்?”

“இது தயக்கமெல்லாம் இல்லை… சொல்றதை சரியா சொல்லிடுவேனான்னு தடுமாற்றம்” என்ற அன்விதா, “அவனுக்கு ஒரு லவ் இருக்குல… அதிலிருந்து அவன் இன்னும் வெளியவே வரல. அது தெரிஞ்சும் நான் சொல்றது சரியான்னு எனக்குள்ளே ஒரு கேள்வி?” என நிறுத்தியவள், “நான்… கௌதம், அதுக்குள்ள எப்படி இன்னொரு லவ் அப்படின்னு சின்னதா யோசிச்சிட்டாலும் என்னால முடியாது தானு” என்று சொல்லும்போதே அன்விதாவின் கண்ணிலிருந்து நீர் இறங்கியிருந்தது.

“ஆர்வி அப்படி திங்க் பண்ணுவான்னு உனக்கு தோணுதா?” என்ற தான்யாவிடம்,

“இப்போ நான் ஆர்வியை லவ் பண்றேன்னு சொன்னதும்… உனக்கு அப்படி தோணலயா?” என வினவினாள் அன்விதா.

“நீ அதிலிருந்து மூவ் ஆன் ஆகி… அடுத்து என்னன்னு வந்து நிக்கிறியே! அது போதும். உன்னை எங்களுக்கு புரியும்” என்ற தான்யா, “லவ் சொல்லாம நிறைய திங்க் பண்ணி ஃபீல் பண்றதுக்கு… சரியோ தப்போ லவ்வை சொல்லிட்டு, கிடைக்கிற பதிலுக்கு ஃபீல் பண்ணலாமே” என்றாள்.

“அப்படி நினைச்சுதான் ஒரு மாதிரி தைரியத்தை வர வைச்சு ஆர்விக்கிட்ட சொல்ல ட்ரை பண்ணிட்டு இருந்தேன். நீ வந்துட்ட…”

“அப்போ நான் தான் சொதப்பிட்டேனா?” தான்யா தலையில் கை வைத்துகொண்டு கேட்க, முகம் சுருக்கியவாறு ஆமென்று தலையை மேலும் கீழும் ஆட்டியிருந்தாள் அன்விதா.

“அதுசரி… இப்போ நீ சொல்லாம விட்டதுக்கு எனக்குதான் கிரெடிட்டா” என சிரித்த தான்யா, “நேர்ல சொல்றதைவிட போன்ல சொல்றது ஈசி… கால் ஹிம்” என்றாள்.

“நான் கொஞ்சம் சொன்னதுக்கே ஆர்வி ரியாக்ட் என்னன்னு தெரியல. இதுல இப்போ எப்படி லவ் சொல்றது?” என்ற அன்விதா, “நான் மாட்டேன்… என்னால முடியாது” என்று இருக்கையைவிட்டு எழுந்திருந்தாள்.

தான்யா பார்த்தப் பார்வையில்,

“உண்மையா முன்ன வந்த கொஞ்ச தைரியமும் இப்போ இல்லை தானு” என மீண்டும் இருக்கையில் அமர்ந்த அன்விதா, “இருட்டிடுச்சு… வீட்டுக்குப்போகல?” என்றாள்.

“பேச்சை மாத்தாத” என்ற தான்யா, “எதனால ஆர்விக்கிட்ட லவ் சொல்ல இவ்ளோ யோசிக்கிற?” என்றாள்.

“தெரியாத மாதிரி கேட்குற” என்ற அன்விதா, “ஹீ லவ்ஸ் சம்வன். அவனோட லைஃப்ல அவங்க இல்லைன்னாலும், அவன் மனசுல இன்னும் இருக்காங்க. சோ, கண்டிப்பா நான் ப்ரொபோஸ் பண்ணா திட்டமாட்டான் அப்படின்னாலும், நோ சொல்லாப்போறான்னு தெரிஞ்சும் எப்படி சொல்றது? அதோட நான் லவ் சொல்வேன்னு அவன் எக்ஸ்பெக்ட் கூட பண்ணியிருக்கமாட்டான். சோ, நான் அவனை ஹர்ட் பண்ணிட்ட மாதிரி ஆகிடும்” என்றாள்.

“இன்னும் இந்த குட்டி மூளைக்குள்ள என்னலாம் போட்டு உருட்டிட்டு இருக்க” என்று அன்விதாவின் தலையில் வலிக்காது கொட்டிய தான்யா…

“ஆர்வியோட மனசுல இருக்க அந்தப்பொண்ணு நீதான் அப்படின்னு தெரிஞ்சா தைரியமா உன் காதலை சொல்லுவியா அன்வி?” என்று பெரும் புயலை அவளின் மனதிற்குள் சத்தமின்றி கிளப்பியிருந்தாள்.

ஆர்ப்பரிக்கும் அலையும், சுற்றி சுழலும் காற்றும், பார்க்கும் காட்சிகள் யாவும் திரைப்படங்களில் வருவதைப்போன்று உறைந்து நிற்கும் தோற்றம். மொத்தத்தில் அக்கணத்தில் அன்விதாவின் சகலமும் உறைந்து போனது.

மூச்சுவிடவும் திணறல் கொண்டவளாக…

“தானு நீ…” என விழித்திரை படர்ந்திட்ட கண்ணீரோடு அன்விதா கேட்டிட…

“இது ஆர்வியோட லவ். இனி அவன் தான் அவனோட காதலை உன்கிட்ட சொல்லணும்” என்ற தான்யா, மேசை மீதிருந்த அன்விதாவின் அலைபேசியை எடுத்து அவளின் கைக்குள் வைத்தவளாக, “பேசு” என்றாள்.

‘ஆர்வி யாரோ ஒரு பெண்ணுக்கானதென தன்னிடம் சொல்லிய வலியெல்லாம் தனக்கானதா?’ அன்று அவனுக்காக உணர்ந்திட்ட வலியெல்லாம் இக்கணம் பன்மடங்கு அதிகரித்தது அவளுள்.

அலைபேசியில் ஒலி சென்றிட…

அன்விதாவின் இதயத் துடிப்பின் ஓசையில் இடியின் முழக்கம்.

சிறு காத்திருப்பில் அவளின் இதயம் உடைய…

“அன்வி” என்றவனின் குரலில் அவளது ஜீவன் அடங்கியது.

‘நேசித்தல்…
ஓர் அன்பில்,
உனையே நீ தொலைத்திருப்பது.
ஓர் காதலில்,
உன் சகலமும் ஜீவித்திருப்பது.’

ஆர்விதா ❤️

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 69

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
12
+1
60
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment