
காலை கனவு 4
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் அன்விதா வரும் பேருந்து வருவதற்கு முன்னரே சக்தி வந்து காத்திருந்தான்.
இரவு அன்விதா செல்லும் பேருந்து கிளம்பியதும், ஆர்விக் சக்திக்கு அழைத்திருந்தான்.
“ஹாய் ஆர்வி…” எப்போதுமான சக்தியின் அழுத்தமான குரல், அதே கணம் உரிமையும் கலந்த ஒலி.
‘எப்பவும் விறைப்புதான்’ என மனதில் நினைத்தவனாக புன்னகைத்த ஆர்விக்…
“ஹாய் திரு” என்றான் மலர்ந்து.
“உன்னோட ஸ்மைலிங் ஃபேஸ் நேர்ல பார்க்காமலே உன் வாய்ஸ்ல தெரியுது” என்ற திரு, “எப்படி இருக்கீங்க? அம்மா நல்லாயிருக்காங்களா?” எனக் கேட்டான்.
“ம்ம் ஆல் குட்” என்ற ஆர்விக், “அன்வி கிளம்பியாச்சு. இப்போதான் பஸ் மூவ் ஆச்சு” என்றதோடு, “அவளோட மொபைல் உடைஞ்சிடுச்சு. கண்டெக்டர் நெம்பர் உங்களுக்கு ஷேர் பண்ணியிருக்கேன்” என்றான்.
“ஹ்ம்ம்… ஓகே” என்ற சக்தியின் குரலைத் தொடர்ந்து, அவனுக்கு பின்னால், “அண்ணா இதுல மூணு டன் இருக்கு” என்ற குரலும் ஒலித்தது.
“தோட்டத்துல இருக்கீங்களா?” ஆர்விக் கேட்டிட,
“ஸ்ட்ராபெரி ஹார்வெஸ்ட். பிளம் லோட் ஏறுது” என்றான் சக்தி.
“ஹ்ம்ம்… ஓகே திரு. நீங்க பாருங்க” என்று அழைப்பைத் துண்டித்த ஆர்விக், அதோடு விட்டுவிடவில்லை. சரியாக பேருந்து கொடைக்கானல் சென்று சேர்வதற்கு முன்னரே நடத்துனருக்கு அழைத்து பேருந்து எங்கிருக்கிறது என்பதை கேட்டு சக்திக்கு அழைத்திருந்தான்.
அப்போதுதான் பேருந்து வந்து சேரும் நேரத்தைக் கணக்கிட்டவனாக, ஆர்விக் அனுப்பி வைத்த நடத்துநரின் எண்ணுக்கு சக்தி அழைப்பு விடுக்க முயல, ஆர்விக்கிடமிருந்து அழைப்பு வந்தது.
“பஸ் இன்னும் டுவென்டி மினிட்ஸ்ல ரீச் ஆகிடுமா திரு” என்றான் ஆர்விக்.
“தூங்கவேயில்லையா நீ?” என்ற சக்தி, “வன் ஹவர் முன்ன நான் கால் பண்ணப்போ, உங்க வீட்டு பொண்ணை பத்திரமா கூட்டிட்டு வந்துடுறேன் சார். அக்கறை இருக்க வேண்டியதுதான். அதுக்குன்னு இப்படியா? அரை மணிக்கு ஒருமுறை போன் போட்டு விசாரிப்பீங்க? அவ்ளோ பயமிருந்தா கூடவே வரவேண்டியதுதானன்னு கண்டெக்டர் கேட்டார்” என்று முறுவலித்தான்.
“அது… இந்த மாதிரி டிராவல் டைம்ல அன்வி டெக்ஸ்ட் பண்ணிட்டே இருப்பா! எப்போ எங்க இருக்கான்னு இன்ஃபார்ம் பண்ணுவா! சேஃபா வந்திடுவா தெரியும். இருந்தாலும்” என்று ஆர்விக் என்ன சொல்வதென்று தெரியாது இழுக்க,
“புரியுது…” என்ற சக்தி, “பஸ் ஸ்டாப் வந்துட்டேன். உன் ஃப்ரெண்ட்டையே பேச சொல்றேன்” என்று வைத்திட்டான்.
சக்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றவனாக பேருந்து வருவதற்காகக் காத்திருந்தான்.
சென்னையிலிருந்து வரும் பேருந்து நிற்கும் இடத்திலேயே நின்றிருந்தான்.
ஐந்து நிமிடங்களில் பேருந்தும் உள் நுழைந்தது.
பேருந்திலிருந்து ஒவ்வொருவராக கீழிறங்க, அன்விதா இறங்கும் முன் அவளிடமிருந்த பையை வாங்கிய சக்தி, அவளுக்கு பின்னால் வந்த பெண்ணை பார்த்தும் பார்க்காதவனாக நகர்ந்தான்.
“ஓகே… பை அக்கா. பார்ப்போம்” என்று அப்பெண்ணுக்கு கை அசைத்த அன்விதா, “அவங்க யாருன்னு தெரியுதா அண்ணா?” என சக்தியிடம் கேட்டிருந்தாள்.
சக்தி அப்பெண்ணின் பக்கம் கூட திரும்பவில்லை. ஆனால் வண்டியினருகில் வந்திருந்தவன், கண்ணாடி வழி அவளை பார்த்திருந்தான். அப்பெண் அவனைத்தான் பார்த்துகொண்டு நின்றிருந்தாள். பார்வையை நொடியில் விலக்கிக் கொண்டான்.
“மொபைல் என்னாச்சு?” எனக் கேட்டவாறு சக்தி வண்டியில் அமர்ந்து, அன்வியின் பையை தனக்கு முன் வைத்தவனாக, “உட்காரு” என்றான்.
“நியூ மொபைல் தான் வாங்கணும்போல. மொத்தமா போச்சு” என்ற அன்விதா, வண்டியில் அமர்ந்து, முன்னால் எட்டி சக்தியின் சட்டை பையிலிருந்து அலைபேசியை எடுத்து ஆர்விக்குக்கு வந்துவிட்டதாகவும், வீட்டிற்கு சென்று அழைப்பதாகவும் தகவல் அனுப்பி வைத்திட்டாள். மீண்டும் அலைபேசியை அவனது சட்டை பையில் வைத்திருந்தாள்.
சக்தி வண்டியை உயிர்ப்பிக்காது அலைபேசியை பார்வையிட்டவாறு இருக்க…
“போகலையாண்ணா?” என்றாள் அன்விதா.
“ம்ம்… பீகாருக்கு லோட் போச்சு. வண்டி எங்கயிருக்கு செக் பண்ணிக்கிறேன்” என்ற சக்தி, கண்ணாடி வழி அப்பெண் அவளது தந்தையுடன் செல்வதை பார்த்ததும் வண்டியை உயிர்ப்பித்தான்.
“உங்களுக்கு நிதாஞ்சனி அக்காவை நினைவில்லையா அண்ணா?” என்ற அன்விதா, சக்தி பதில் சொல்லாது இருக்கவே தானே பேசினாள்.
“நம்ம ஸ்கூல் தான். உங்களுக்கு அடுத்த பேட்ச்” என்ற அன்விதா, “அவங்களை பார்த்து டூ இயர்ஸ் ஆகுது. சென்னையில் தான் வொர்க் பண்றாங்களாம். அதுக்கு முன்ன ஊருக்கு வரும் போது, அவங்க எஸ்டேட் பக்கத்திலிருக்க பார்க்கில் அப்பப்போ பார்த்திருக்கேன். ரொம்ப அமைதி. நைட் முழுக்க நான்தான் அவங்ககிட்ட பேசிட்டு வந்தேன். சின்ன ஸ்மைலோட கேட்டுட்டே வந்தாங்க” என்றாள்.
சக்தியின் வண்டிக்கு முன்னால் நிதாஞ்சனி அவளது அப்பாவுடன் சென்று கொண்டிருக்க, அவனின் பார்வை அவளின் மீது தான்.
சக்தியின் பார்வையை உணர்ந்தவளோ கொஞ்சமும் பார்வையை பக்கவாட்டில் அவன் புறம் திருப்பவில்லை.
“நிதா அக்கா நெம்பரிலிருந்து உங்களுக்கு கால் பண்ணேன். அன்னோன் நெம்பர்ன்னு நீங்க எடுக்கலப்போல” என்றாள்.
சக்திக்கு யாரென்று தெரியாத எண்ணா அது?
ஓரிடத்தில் சாலை இரண்டு கிளை பாதையாக பிரிந்திட, நிதாஞ்சனி மெல்ல சக்தியை ஏறிட்டாள்.
அவனது பார்வையில் மாற்றமில்லை. அவள் பார்க்கின்றாலென்று பார்வையை விலக்கவும் இல்லை.
அவளது வண்டியை முந்தியவனாக வலது பக்க கிளை சாலையில் சக்தி பயணிக்க, அவள் இடது பக்கம் சென்றிருந்தாள்.
“வெண்மதியை வேணாம் சொல்ல எதுவும் ரீஸன் இருக்கா அண்ணா?”
அதுவரை அன்விதா பேசிக்கொண்டு வந்ததற்கெல்லாம் பதில் கொடுக்காத சக்தி, இதற்கு வாய் திறந்திருந்தான்.
“என்ன ரீஸன்?”
“எல்லாரோட விருப்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிற நீங்க, பேமிலிக்குள்ள இதனால் ப்ராப்ளம் வரும் தெரிஞ்சும் வேணாம் சொல்றீங்களே… அதான் வேறெதுவும் இருக்குமோ கேட்டேன்” என்றாள்.
“அப்படி எதுவுமில்லை” என்ற சக்தி, “வெண்மதியை எப்பவும் அப்படியொரு எண்ணத்தில் யோசிச்சதே இல்லை. ஏனோ அப்பா மேரேஜ் பத்தி பேசும்போது, எனக்கு அவள் சின்ன பொண்ணாதான் ஃபீல் ஆகிறாள்” என்றான்.
“ஏஜ் டிஃப்ரென்ஸ் பாக்குறீங்களா?”
“அதுவும் தான்” என்ற சக்தி, “வீட்ல எல்லாருக்கும் இருக்க மாதிரி அவளுக்கும் எதுவும் எண்ணமிருக்கா கேளு” என்றான்.
“ம்ம்…” என்ற அன்விதாவுக்கு மேற்கொண்டு இதுகுறித்து என்ன கேட்பதென்று தெரியவில்லை.
சக்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதனை அவனே நினைத்தாலும் மாற்றிக்கொள்ளமாட்டான்.
****************************
அன்விதாவை வீட்டில் விட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்த சக்தி, ஆலைக்கு செல்ல கிளம்பி வந்தான்.
“என்ன சக்தி அதுக்குள்ள கிளம்பிட்ட?” என்று கதிர்வேலன் கேட்க,
“பெர்ரி அறுவடை முடிஞ்சிருக்கும்ப்பா… கிளீனிங் முடிஞ்சு தரம் பிரிச்சிட்டா மார்க்கெட்டுக்கு அனுப்பிடலாம். இன்னைக்கு வேலையை முடிச்சிட்டா, நாளைக்கு கோவிலுக்கு போயிட்டு வரவரை டென்ஷன் இல்லாம இருக்கலாம்” என்ற சக்தி, தெய்வா உணவை எடுத்து வைக்க உண்ணத் துவங்ககினான்.
“நானும் உங்களோட வரேன் அண்ணா. மாமா வீட்ல இறக்கி விட்டுடுங்க” என்று சக்தியின் அருகில் வந்தமர்ந்த அன்விதா, சக்தி ஊட்டிவிட உண்டு முடித்து அவனுடனே எழுந்து கொண்டாள்.
“அண்ணா மொபைல் வேணுமே!”
“வரும்போது வாங்கிட்டு வர்றேன். ஏதும் சாய்ஸ் இருக்கா உனக்கு?” எனக் கேட்டான்.
“அப்படிலாம் இல்லை. நீங்க என்ன வாங்கிட்டு வந்தாலும் ஓகே” என்றவள், “என்னோட சிம் அம்மா மொபைலில் போட்டிருக்கேன். உங்க வேலையெல்லாம் முடிச்சுட்டு பொறுமையாவே வாங்கிட்டு வாங்க” என்றிருந்தாள் அன்விதா.
“அங்க போனமா, அத்தை மாமாவை பார்த்தோமான்னு வரணும். இங்க வீட்டில் நடக்கிற பேச்சு வார்த்தையை எல்லாம் வாய் விட்டுடாத” என்று தெய்வானை சிறு கண்டிப்போடு அன்விதாவிடம் தெரிவித்தார்.
“இப்போ சொன்னா என்ன?” சக்தி கேட்டிட, தெய்வானை வாயினை மூடிக்கொண்டார்.
“ஒரு இடம் வந்திருக்கு சக்தி. பேசி முடிச்சு ஒத்து வந்தா அங்க சொல்லிக்கலாம் உன் அம்மா நினைக்கிறா? இப்போவே ஏன் சொல்லணும்?” என்றார் கதிர்வேலன்.
“அது தப்புப்பா!” சக்திக்கு முன் அன்விதா சொல்லியிருந்தாள்.
“ஏன் தப்பு?” என்ற தெய்வானை, “அங்க பொண்ணு எடுக்கலன்னு ஆகிப்போச்சு. எங்க பையனுக்கு எங்க பொண்ணு எடுக்கணும் அப்படிங்கிறது எங்க விருப்பம். இதை அவங்ககிட்ட ஏன் சொல்லணும்?” எனக் கேட்டார்.
இதனை சொல்லப்போய் அண்ணன் குடும்பத்தோடு உறவு முறிந்துவிடுமோ என்ற பயம் தெய்வானைக்கு. அதனால் அவர்களுக்கு தெரியப்படுத்துவதை ஒத்திப்போட நினைத்தார்.
“நீங்க சொல்றது சரியில்லம்மா” என்ற அன்விதா, “அத்தைக்கும் மாமாக்கும் வெண்மதியை அண்ணாவுக்கு கட்டிக்கொடுக்க விருப்பமிருக்குன்னு நமக்குத் தெரியும். அதனால அண்ணனுக்கு வெளிய பொண்ணு எடுக்கிறோம் அப்டின்னு அவங்ககிட்ட சொல்லிட்டு செய்யுறது தான் சரி. நாளைபின்ன எங்களை ஏமாத்திட்டீங்கன்னு சொல்லிடக் கூடாதுல” என்றாள்.
“இதுல நாம எப்படி ஏமாத்திறோம் வரும் அன்வி. நாம என்ன முறையா பேசி வச்சிக்கிட்டோமா?” என்ற தெய்வானைக்கு அன்விதா சொல்வது புரியவில்லை.
“எப்படியிருந்தாலும் அண்ணாவுக்கு தாய் மாமா அப்படிங்கிற முறையில மாமாவுக்கு சொல்லிட்டு செய்யுறது தான் முறைம்மா. எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டு சொல்றதுக்கு அவரென்ன மூணாவது ஆளா?” என்று அன்விதா கேட்க, கதிர்வேலன் மகளின் கூற்றை ஆமோதித்தார்.
இந்தப் பேச்சு வார்த்தையில் சக்தி உள் நுழையவே இல்லை. தன்னுடைய முடிவை கூறியாயிற்று… இதற்கு மேல் தான் செய்ய ஒன்றுமில்லை எனும் ஒதுக்கம் அது.
“நீ என்னப்பா சும்மா இருக்க?” தெய்வானை மகனின் அமைதி கண்டு நேரடியாகவே கேட்டு விட்டார்.
“நான் என்ன சொல்லணும்?” சக்தி அமைதியாகக் கேட்டதிலே தெய்வானைக்கு அய்யோடா என்றானது.
“வெண்மதியை கட்டிக்க விருப்பமில்லைன்னு எப்படிப்பா போய் சொல்றது?”
“நீங்க ஏன் அப்படி சொல்லணும். சக்திக்கு கல்யாணம் பண்ண முடிவு பண்ணியிருக்கோம்… ஒரு வரன் வந்திருக்கு. பார்க்க போவோம் சொல்லுங்க” என்றார்.
தெய்வானை நெஞ்சிலே கை வைத்துவிட்டார். இதற்கு மகள் சொல்லியதே தேவலாம் என நினைத்தார்.
“நான் இப்படி சொன்னா… வெண்மதி இருக்க எதுக்கு வெளியன்னு கேட்கமாட்டாங்களா?”
“கேட்கத்தான் செய்வாங்கம்மா” என்ற சக்தி, “இது என்னோட முடிவுன்னு சொல்லுங்க” என்றான்.
“உனக்கு ஏன் சக்தி… வெண்மதி வேணாம்?”
“ம்மா…” என்ற சக்தி ஆயசமாக நெற்றியை தேய்த்துக் கொண்டான்.
“வயசு வித்தியாசமா சக்தி” என்ற தெய்வானை, “நம்ம வீட்டு பொண்ணே நமக்குன்னு வந்தா அனுசரிச்சுப் போவும் தங்கம். இதை பண்ணா குடும்பம் உடையும் தெரிஞ்சும் ஏன் அதை பண்ணனும்?” எனக் கேட்டார்.
“அப்பா இவங்க இந்த எண்ணத்துல இருந்து… அதாவது வெண்மதியை எனக்கு மேரேஜ் பண்ணி வைக்கணும் அப்படிங்கிற எண்ணத்திலிருந்து எப்போ வெளிய வராங்களோ அப்போ எனக்கு பொண்ணு பாருங்க” என்று சக்தி கோபமாக பேசிவிட்டு நகர,
“உன் விருப்பம் தான் சக்தி எனக்கு முக்கியம். ஆனா காரணமே இல்லாம வேணாம் சொல்றியேப்பா” என்ற தெய்வானையின் வார்த்தையில் நின்று திரும்பியிருந்தான்.
இதழ் குவித்து காற்றை வெளியேற்றியவன்,
“நான் பிளஸ் வன் படிக்கும் போது அவள் பர்ஸ்ட் ஸ்டாண்டர்ட். பிரேக் டைம்ல அன்வியை அவள் கிளாசுக்கு போய் எப்படி பார்த்திட்டு வருவனோ அப்படித்தான் வெண்மதியையும் பார்த்திட்டு வருவேன். ஸ்நாக்ஸ் எல்லாம் வாங்கி கொடுத்து குழந்தையா பார்த்தவளை எப்படிம்மா” என்ற சக்தி, “புரிஞ்சிக்கோங்க” என்று வெளியில் செல்ல, மகனின் வார்த்தையில் அசைவற்று நின்ற தெய்வானையின் கையினை அழுத்தமாக பிடித்து விடுத்தவளாக அன்விதா வெளியில் ஓடினாள்.
***************************
“என்னடா வொர்க் எதுவுமில்லையா?”
யாஷ் கேட்க, அவனை பார்த்தவாறு அமர்ந்திருந்த சுழல் நாற்காலியை சுழற்றிய ஆர்விக்…
“அன்வி கிட்ட பேசாம ஒரு மாதிரி இருக்குடா!” என்றான்.
“அவள் ஊருக்கு போறது இதுவொன்னும் புதுசில்லையே!” யாஷ் சொல்லிட…
“புதுசில்லை தான். ஆனால் அவகிட்ட இருந்து மெசேஜ் வந்துட்டே இருக்கும். அவள் என்னோட இருக்க ஃபீல் கொடுத்திட்டே இருப்பாள். இப்போ அது மிஸ்ஸிங்” என்ற ஆர்விக், யாஷ் முறைப்பதைக் கண்டு…
“ஜெஸ்ட் ஃப்ரெண்ட்டா டா!” என்றான்.
“எது இதுவா?” என்ற யாஷ், “இன்னைக்கும் கனவா?” எனக் கேட்டான்.
“ஆரம்பத்திலெல்லாம் யாரோ ஒரு பொண்ணு முகம் தெரியாம வந்து போவாள். அது வயது கோளாறு நினைச்சேன். காலேஜில் அன்வியை பார்த்த அப்புறம், எனக்குள்ள அவள் மேல லவ் வந்த அப்புறம், முகம் தெரியாதப் பொண்ணு அன்வியா தெரிஞ்சாள். அவள் கூடவே இருக்கிறதால… என்னோட லவ் அவள்தான்னு தெரிஞ்சதால அதுக்கு அப்புறம் அந்த கனவு வந்தது இல்லை” என்று ஆர்விக் சொல்லிக்கொண்டே போக…
“நிறுத்து!” என்று கை காண்பித்த யாஷ், “இதெல்லாம் ஏற்கனவே எனக்குத் தெரியும். இப்போ நீ வேறென்ன சொல்லவர?” எனக் கேட்டான்.
“இப்போ ரீசண்ட் டேஸ்ல வர கனவு அன்வியே என்னை ப்ரொபோஸ் பண்ற மாதிரி வருது. அது எப்படி பாசிபிள்?” என்றான் ஆர்விக்.
“அவள் உன்னை லவ் பண்ணனும் அப்படிங்கிற உன்னோட ஏக்கம் தான் உனக்கு கனவா வந்திட்டு இருக்கு. திரும்பத்திரும்ப அதுக்குள்ளவே போகாம, வெளியவரப் பாருடா! சும்மா கனவு அது இதுன்னு கூட இருக்க என்னை கொலைகாரனாக்காத” என்று யாஷ் எழுந்து சென்றிட, முதன் முதலாக முகம் தெரியாத கனவு அன்விதாவாக தெரிந்ததை மனதில் அசைபோட்டான் ஆர்விக்.
முதல் வருடத்தில் இரண்டாம் பருவத்தில் கல்லூரி மாறியதன் பலனாகத்தான் ஆர்விக்குக்கு அன்விதாவுடன் நட்பு ஏற்பட்டது.
இருவரும் எப்போதும் ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்க, ஆர்விக்குக்கு அன்விதாவின் மீதான பிடித்தம் கூடத் துவங்கியது.
அந்த பிடித்தத்தின் மிகுதியை ஆர்விக் கண்டுகொண்டது அந்த பருவத் தேர்வு விடுமுறையில் தான்.
எப்போதும் உடனிருந்த அன்விதா விடுமுறைக்கு ஊருக்குச் சென்றிருக்க, அவளில்லாத நாட்களில் அவளுக்கான தேடல் அவனிடம் அதிகமாகியது.
அந்த தேடலின் பிரதிபலிப்பு அவனது கனவாகியது. கனவில் அவனை அழைத்தப் பெண் அன்விதாவாக இருந்திட சற்றும் யோசிக்காது தன்னுடைய காதலை சொல்லியிருந்தான்.
அந்நேரம் மின்சாரம் தடைபட, நல்ல உறக்கத்திலிருந்தவனின் உறக்கம் தொலைந்து கனவு கலைந்தது.
அவனது ஆழ் மனமும் அவனுக்கு விளங்கியது.
“உன்னை நான் லவ் பண்றேனா அன்வி?” என்று உடனில்லாதவளிடம் கேட்டுக்கொண்டவன், நேரத்தைப் பார்த்தான். அதிகாலை ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
அப்போதே அன்விதாவுக்கு அழைத்துவிட்டான்.
“என்னடா இந்த நேரத்தில்” என்று அன்விதா கேட்க…
“நீ எப்போ இங்க வர அன்வி?” எனக் கேட்டவனின் குரலில் அவளை பார்க்கத் துடிக்கும் தவிப்பு கரை மிதந்தது.
“இன்னும் ரெண்டு நாள் லீவ் இருக்கே ஆர்வி” என்ற அன்விதா,
“டூ டேஸா” என ஆர்விக் அதிர்ந்து கேட்டதில், “எதுவும் சொல்லணுமாடா?” எனக் கேட்டிருந்தாள்.
“ஆமா சொல்லணும்” என்ற ஆர்விக்கின் குரலில் சுரத்தே இல்லை.
“என்னடா வாய்ஸ் டல்லடிக்குது?” என்ற அன்விதா, “டீ குடிப்போமா?” என்றாள்.
“இப்போ எப்படி? நீதான் தூரமா இருக்கியே” என்றான் ஆர்விக்.
“அதெல்லாம் குடிக்கலாம்” என்ற அன்விதா, “நீ டீ போட்டு ரெடியா வை. நான் வரேன்” என அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
அவ்வளவு தூரத்தில் இருப்பவள் எப்படி பக்கம் வருவாளென்று புரியாத போதும், எழுந்து தன்னை சுத்தம் செய்துகொண்டு சமையலறைச் சென்றான்.
விடியல் நேரமென்பதால் ஆர்விக் சமையலறையில் உருட்டும் சத்தம் கேட்டு அனிதா வந்திருந்தார்.
“என்ன ஆர்வி, டீ வேணுமா?” எனக் கேட்ட அனிதா, “அதுக்குள்ள எழுந்துட்ட! பசிக்குதா?” எனக் கேட்டார்.
ஆர்விக் மறைக்காது அனிதாவிடம் கூறினான்.
“இந்த டீ உங்க ரெண்டு பேருக்கு நடுவில் படாதபாடு படுதுடா கண்ணா” என்றவர், தேநீரை தயார் செய்து கொடுத்துவிட்டே சென்றார்.
குவளையில் தேநீரை நிரப்பிக் கொண்டு உணவு மேசையில் வந்து ஆர்விக் அமர்ந்திட அன்விதா காணொளி அழைப்பு விடுத்திருந்தாள்.
அன்விதாவின் எண்ணம் ஆர்விக்குக்கு விளங்கியது.
‘இது எனக்கு ஸ்ட்ரைக் ஆகலையே!’ என நினைத்த ஆர்விக், திரை ஏற்று தெரிந்த தன்னவளின் முகத்தில் மலர்ந்து புன்னகைத்தான்.
அன்விதாவும் அங்கு தேநீர் குவளையுடன் அமர்ந்திருந்தாள்.
“இப்படியொரு வே இருக்கிறது எனக்கு தோணவே இல்லை அன்வி… இல்லைன்னா தினமும் இப்படியே பண்ணியிருக்கலாம். டீ டைம் நிறைய மிஸ் பண்ணேன்” என்று ஆர்விக் கூறிட, “அப்போ உங்க ஃப்ரெண்ட்டை மிஸ் பண்ணலையா?” எனக் குரல் காட்டியிருந்தான் சக்தி.
“யாரு அன்வி?”
“அண்ணாடா” என்று அன்விதா திரையில் சக்தியின் முகம் காட்டிட, சக்தி மற்றும் ஆர்விக் இருவரின் முதல் அறிமுகம் அக்கணம் நேர்ந்தது.
“ஓகே நீங்க பேசுங்க” என்று சக்தி சென்றிருந்தான்.
சக்தி அந்நேரம் தோட்டத்திற்கு செல்ல கிளம்பி வந்திருக்கவே தங்கை இந்நேரத்தில் விழித்திருக்க காரணம் கேட்டு அருகில் வந்து, ஆர்விக்கிடம் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொண்டுச் சென்றிருந்தான்.
விடுமுறை ஆரம்பித்த நாட்களாக புலனம் வழி எழுத்துக்களாக உரையாடிய உரையாடல்கள் யாவும் இந்நேரம் வாய்மொழியாக பகிரப்பட, இருவரின் மனம் நிறைய குவளை காலியாகியது.
“சீக்கிரம் வா அன்வி” என்ற ஆர்விக், “நீ வந்ததும் நான் உன்கிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்.
அன்விதாவும் முகம் விகசிக்க…
“நானும் ஒன்னு சொல்லணும்” என்று அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
அவளின் முக ஒளியில், ‘அவளுக்கும் இருவருக்குமான இந்த இடைவெளி தன்னைப்போல் எண்ணம் வைத்திருக்குமோ?’ என தவறாக அர்த்தம் கொண்டு அவளுக்காக காத்திருந்த இரண்டு நாளின் மகிழ்வு இன்றைக்கு பெரும் வேதனையாக நெஞ்சத்தை சூழ, நினைவிலிருந்து தன்னை மீட்வனாக கண்களை அழுந்த மூடியிருந்தான் ஆர்விக்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
25
+1
+1
