
காலை கனவு 39
இளமை பட்டாளம் அன்விதாவின் அறையில் கூடியிருக்க… சக்தி மட்டும் அவனின் அறையில் தனித்திருந்தான்.
பழனி அறுபடையானின் சன்னதியில் திருமணம் முடிந்திருக்க, அங்கிருந்து மணமக்கள் நேராக நிதாஞ்சனியின் வீடு சென்று சம்பிரதாயங்கள் முடித்து, சற்று நேரத்திற்கு முன்தான் சக்தியின் இல்லம் வந்திருந்தனர்.
காதல் ஜோடி மணப்பந்தத்தில் இணைந்த மகிழ்வை காட்டிலும், நிதாஞ்சனியின் காதல் கைகூடியதில் பெரும் மகிழ்வுகொண்டு வலம் வந்தது ஆர்விக் தான்.
தன்னைப்போன்ற வலி அவளுக்கு இல்லை எனும் ஆசுவாசத்தின் பிரதிபலிப்பு அவனது மகிழ்வு.
“யாருக்கு கல்யாணம் ஆச்சுன்னே தெரியல மச்சான்” என்று ஆர்விக்கின் கேலி, விளையாட்டுப் பேச்சுக்களென அனைத்தும் ரசித்த சக்தி கேட்டிருக்க…
“அவள் என்னோட அக்கா… நீங்க என்னோட ஸ்வீட் மாம்ஸ். இன்னைக்கு உங்க வெட்டிங். நான் ஹேப்பியா இருக்க இந்த காரணம் போதாதா?” என்றிருந்தான் ஆர்விக்.
பால் பழம் கொடுக்கும்போதும், நிதாஞ்சனியை அன்விதாவின் அறைக்கு ஓய்வெடுப்பதற்காக அனுப்பி வைத்தபோதும், சக்தியிடம் ஆர்விக் செய்த கலாட்டாவில் சக்தியே இருக்குமிடம், சுற்றத்தாரை மறந்து வாய்விட்டு சிரித்திருந்தான்.
அங்கு ஆர்விக் என்பவன் அனைவரின் சிரிப்புக்கும், சந்தோஷத்திற்கும் காரணமாக இருந்தான். ஒருத்தியை தவிர்த்து.
அன்விதா சில நாட்களாக தன்னுடைய மனம் செல்லும் பாதையை அவதானிக்க முடியாது வெகுவாய் தனக்குள்ளே குழம்பியிருந்தாள்.
இப்போதெல்லாம் ஆர்விக்கை பார்க்கும் அவளின் பார்வையில் மாற்றம். அவனை ரசிக்கத் தூண்டியது அவளின் மனம்.
ஒருவன் காதலின் பெயரை வைத்து அவளை ஏமாற்றியிருக்க, இவனோ கை சேராத காதலுக்காக, சொல்லவும் முடியாத காதலென தெரிந்தும் இதயத்திலே தவம் செய்து கொண்டிருக்கிறான் எனும் அவளின் எண்ணம் ஆர்விக் மீதான நேச விதை உயர்த்திட நீர் தெளித்திருந்தது.
அன்றே… அந்த இரவில், கடற்கரையின் அமைதியில், வெண்ணிலவின் சாட்சியில், ஆர்விக் தன்னுடைய வலி காண்பித்து அன்விதாவின் மனதில் காதலுக்கான வழி அமைத்திருந்தான்.
அவன் கொண்டிருக்கும் காதலுக்கு முன்னால் தான் கொண்டதெல்லாம் காதலே இல்லை எனும் எண்ணம்தான் அவளுள்.
வலி தீண்டும் இதயத்தின் ஓசையாய் ஆர்விக் தன்னுடைய பாரம்… பாரம் என்பது அவனது காதலுக்கு மதிப்பாகாதோ? அவனே ஒருபோதும் பாரமென நினைத்ததில்லையே! ரணம் என்பது சரியாக இருக்கும்.
ஆர்விக் தன்னுடைய ரணம் இறக்கி வைக்க, அவளுள் அவன் மீதான உறவு நட்பு எனும் எல்லையை கடந்திருந்தது. அவனது ரணத்திற்கு தன்னையே மருந்தாக்க நினைத்த திடுக்கிடலில் உணர்வுகளிலிருந்து தன்னை மீட்டிருந்தாள்.
அவளுக்கான தெளிவு வேண்டுமாக இருக்க… அமைதியின் பின்னால் தனது உள்ளத்தைக் கட்டி வைத்திட்டாள்.
அன்று முதல் அவளின் மனதில் போராட்டம் துவங்கியிருந்தது. அப்போராட்டத்திற்கு வலுவாய் அமைந்தது சட்டென்று ஆர்விக்கிடம் தென்பட்ட கண்ணுக்குத் தெரியா விலகல்.
அவளுடன் இருக்கின்றான். அவளுடன் நேரத்தை செலவழிக்கின்றான். அவளுடன் பேசுகிறான். அவளுடன் இயல்பாய் இருக்கிறான். ஆனாலும் அவன் அவளுடன் இல்லை.
உணர்வுகளோடு கலந்துவிட்ட ஓர் உறவு… சிறு மாற்றம் கொண்டாலும் மனம் அறிந்திடுமே! அன்விதா அவளின் ஆர்விக்கை அறிந்திடமாட்டாளா?
காதலை பார்வையால் கூட காட்டிடாதவன், விலக நினைத்து முடியா தவிப்புகளை தன்னையறியாது காட்டியிருந்தான்.
காரணம் புரியாது உழன்றவள், தன்னுடைய மனதின் ஆராய்ச்சிக்கான காலநேரமாக அந்நாட்களை பயன்படுத்திக் கொண்டாள்.
அன்றைய இரவு… ஆர்விக் தனது காதல் வலியை சொல்லிய நாள் முதல், தனது பார்வை அவன்மீது முன்பு போன்று இயல்பாக இல்லையென்பதை உணர்ந்தவளுக்கு மனதில் எழுந்த முதல் கேள்வி…
“ஆர்விக்கிட்ட என் மனசு தடுமாறுதா?” என்பதுதான்.
தடுமாற்றத்தின் தள்ளாட்டம் எதனால் என நீண்ட சிந்தனைக்குப் பின்னர்… இதுதான் காதலென விளங்கிக்கொண்டவளுக்கு…
ஒரு காதல் மடிந்த நிலையில் மீண்டுமொரு காதல்… அதுவும் இத்தனை விரைவில் எளிதில் தோன்றிடுமா? என்று எழுந்த கேள்வியின் தேடல் துவங்கிய இடம் கௌதம் காதலை சொல்லிய தருணம்.
தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவள் அந்த நாளுக்கே பயணமாகினாள். கௌதம் காதலை சொல்லியது, சிறிதும் யோசிக்காது தான் சம்மதம் சொல்லியது, அதன் பின்னரான இருவரின் உரையாடல், நெருக்கம் என பயணித்த அதேவேளை… மற்றைய சிந்தனையாக ஆர்விக்குடன் நட்பு கொண்டது, அவனுடனான அன்பு, அக்கறை, எதிலும் தன்னை வைத்து அவனது செயல்கள் அரங்கேறுவதென அதனையும் தீவிரமாக மனதில் நிதானமாக நிறுத்தி ஆராய்ந்தாள்.
இது இருவருக்கு இடையேயான அவளின் ஒப்பீடல் இல்லை. அவள் மனம் அறிய அவள் கொள்ளும் தீர்வு.
முதிர்ச்சியோ பக்குவமோ இல்லாத வயதில், கௌதம் காதலை சொல்லியதும் சரியென ஏற்காது ஆராய்ந்து சிந்தித்திருக்க வேண்டுமென அனைத்தும் முடிந்த நிலையில் எண்ணி வருந்தினாள்.
காதல் கொள்ளாது பிடித்தம் எனும் வரையறையில் நின்றிருந்தவனின் காதல் வார்த்தைகளை ஏற்று காதலென கழித்திட்ட நாட்களை நினைத்து தற்போது அதிகத்துக்கும் கவலை சுமந்தாள்.
நேசமென்றால் என்னவென்றே முழுதாய் அறிந்திடாது, கௌதம் காட்டியது, அவனிடம் தான் கொண்ட அன்பு தான் காதலென மனதோடு வடித்துக்கொண்ட எல்லையால் தான் ஆர்விக்கை வேறு பார்வையாக பார்த்திடாது இருந்துவிட்டோமெனும் மடமை புரிய, தன்னையே நிந்தித்துக்கொண்டாள்.
அதற்காக கௌதம் மீது அன்பு கொள்ளவில்லை… அது காதலில்லை என்ற பொய்க்காரணம் கொள்ளவில்லை. அவன் எப்படியோ? அவன் காதல் சொல்லியதும் இவள் ஏற்றது எப்படியோ? ஆனால் அதற்கு பின்னான நாட்கள் காதல் எனும் உறவோடு தான் இவள் அவனை மனதில் வடித்திருந்தாள். தற்போது ஆர்விக் மீது காதல் உணர்வுகள் வருகிறது என்பதற்காக கௌதம் மீது கொண்டது காதலே இல்லையென தன்னையே அவள் ஏமாற்றிக்கொள்ள நினைக்கவில்லை.
கௌதம் மீது அவள் கொண்டது காதல் தான். அவளளவில். அவன் எப்படியோ? வாய் வார்த்தையாக அலசி ஆராயாது காதலென்று அவனிடத்தில் அடி வைத்திட்டப் பின்னர், கொடுத்த வார்த்தை உறுதிக்கு நம்பிக்கையாகத்தான் நடந்து கொண்டாள். அந்த கர்வம் தான் இல்லையென்றான பின்பு அவளை அதிலிருந்து விரைந்து மீண்டுவர வைத்திருந்தது.
ஆனால் கௌதமிடம் தோன்றிடாத மென் உணர்வுகள் யாவும் ஆர்விக்கிடம் தன்னைப்போல் மேலெழும்புகிறது எனும் வித்தியாசம் புரிந்திட…
“இது சரியா?” எனும் அடுத்த நிலைக்குள் அடி வைத்திருந்தாள்.
இது சரிதானென மனம் சொல்வதற்காக பெரும் ஏக்கத்தோடு காத்திருக்கிறாள். அதற்காக மனதில் ஆர்விக் மீது தோன்றும் நேச உணர்வுகளை ஒதுக்கி வைக்கவில்லை. தன்னைப்போல் தள்ளி நின்று அவனின் ஒவ்வொன்றையும் கவனிக்கத் துவங்கியிருந்தாள்.
இப்போதும் நிதாவுடன் வார்த்தையாடிக் கொண்டிருந்தவன் மீது படிந்த பார்வையை மாற்றாது அமர்ந்திருக்கிறாள்.
யாஷ், வெண்மதி காதல் கதையை நிதாஞ்சனியிடம் நண்பர்கள் மாற்றி மாற்றிக்கூறி, யாஷை கேலி செய்துக்கொண்டிருக்க, அன்விதா மட்டும் அமைதியாக ஆர்விக்கின் சிரித்த முகத்தை தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.
சட்டென்று ஆர்விக் அவள் முகம் காண, வேகமாக இமைகள் படபடக்க அவனை பார்த்து புன்னகைத்திருந்தாள்.
ஆர்விக் என்னவென்று விழிகளால் கேட்டிட, அன்விதா ஒண்ணுமிலையென தலையசைத்திருந்தாள்.
ஆர்விக் யோசனையானான்.
சில நாட்களாக அவளிடம் தென்படும் அமைதி. தன்மீது படியும் அவளின் பார்வை. அதிலிருக்கும் தடுமாற்றம் என எல்லாம் அறிந்திருந்தவனுக்கு ஓர் அனுமானம். அதுவாகத்தான் இருக்குமென்று. இதயத்தின் தடம் புரள்தலை கீழ் பற்களால் மேலுதட்டின் நுனி கடித்து சீர் செய்தான்.
அவளின் வழமையானப் பார்வையில்லை என்பதும் புரிய, அப்பார்வை சொல்லத் துடிக்கும் தவிப்பும் புரிந்தது.
அன்விதாவுக்கு தன்னை அதிகத்துக்கும் பிடிக்குமென்று ஆர்விக் அறிவான். அந்த பிடித்தம் அமைதியான சூழலில் சரியான தருணத்தில் அவளிடம் அடுத்தக்கட்டத்தை கொண்டுச்செல்லுமென்று சிறு நம்பிக்கை அவனிடம். அந்த நம்பிக்கையை அவனுள் விதைத்ததும் அவளின் புதிதான பார்வை தான். அதனை ஆர்விக் உணர்ந்தது ஐந்து நாட்களுக்கு முன்னர் தான்.
இங்கு வருவதற்கு சென்னையில் கிளம்பித் தயாராக இருந்தபோது… அனிதாவின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன என்பதை அறிந்து இதெப்படி சரி வருமென வேதனையில் கண்மூடி அமர்ந்திருந்தவனின் சிந்தனை முழுக்க ஓடியது…
வேண்டாம் என்று தள்ளி வைக்க நினைத்ததை வேண்டுமென நினைத்தால் என்ன? என்பதைப்பற்றிதான்.
அன்னைக்காக மறக்க நினைத்தவன் அன்னைக்காகவே ஏற்கவும் நினைத்தான். தான் காதலிலிருந்து வெளிவர வேண்டுமென்பது தான் அனிதாவின் எண்ணமென நினைத்து முயன்றவனுக்கு, தன்னுடைய காதலை தன் கரம் சேர்ப்பதுதான் அவரின் எண்ணமென அறிந்த பின்னர் அதற்கான முயற்சியை எடுக்காது விட்டுவிடுவானா என்ன?
வாழ் முழுமைக்கும் வலியை ஏற்பதற்கு, ஒருமுறை காதலுக்காக அடி வைத்திட்டால் என்னவென்று யோசித்தான். அதற்காக அன்விதாவிடம் அனிதாவைப்போன்று திருமணத்துக்காக கேட்கவேண்டுமென்று நினைக்கவில்லை. மாறாக அவனது காதலுக்கு நியாயம் செய்திட நினைத்திட்டான்.
“ஒன்னு சொல்லணுமே” என்றவன், நால்வரின் முகத்தையும் அழுத்தமாக பார்த்து வைத்தான்.
“என்னடா… உனக்காக அன்வியை பொண்ணு கேட்கக்கூடாதுன்னு சொல்றியா?” என்றார் அனிதா.
“ஆமா” என்ற ஆர்விக், “நீங்க அப்படி கேட்டா… அங்க என் காதல் காணாமாப்போயிடும் அனி” என்றவனின் மனம் நால்வருக்கும் புரியத்தான் செய்தது.
“அதுக்கு… இப்படியொரு வழியிருக்கு தெரிஞ்சும், நீ காதலை விட முடியாம அல்லாடுரன்னு தெரிஞ்சும் எங்களை அமைதியா இருக்க சொல்றியா?” என்றான் யாஷ்.
“இல்லை… என் காதல், காதலா தான் என்கிட்ட வரணும் சொல்றேன்” என்ற ஆர்விக்கை புரியாது பார்த்தனர்.
“என்னடா சொல்ற?” தான்யா கேட்க,
“அன்வி இல்லாம இருக்கவே முடியாதுன்னு, அவளை முழுசா மறக்கணும் நினைச்ச இந்த கொஞ்சநாளில் நான் புரிஞ்சிக்கிட்டேன். கௌதம் கூட அவள் லைஃப் சேர்ந்திருந்தா… அது வேற. ஆனால் இப்போ எனக்காகத்தான் இப்படியாகிடுச்சோன்னு தோணுது. அவளுக்கான என்னோட ஏக்கம் காதலில் சேரனும் நினைக்குதோ?” என்ற ஆர்விக், “அவகிட்ட என்னோட லவ்வை சொல்லணும் தோணுது” என்றான்.
“நிஜமாவா ஆர்வி?” கேட்ட அனிதாவிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு.
“எஸ் அனி” என்ற ஆர்விக், “அவ என் காதலாதான் எனக்கு கிடைக்கணும். நீங்க அரேஞ்ச் பண்ணி இல்லை” என்றதோடு, “நான் லவ் சொல்லி அவள் அக்செப்ட் பண்ணிக்கல அப்படின்னா… நீங்க எல்லாரும் இதை இத்தோட விட்டுடனும்” என்றான்.
“அதெப்படிடா? இப்போ தான் அவள் லவ்வுன்னு ஒரு ஏமாற்றத்திலிருந்து வெளிவந்திருக்கா? திரும்பவும் லவ்வுன்னு அதை எப்படி நம்புவாள்?” என ஆயாசமாகக் கேட்டாள் தான்யா.
“அதேதான் நானும் சொல்றேன் தானு… வலி கொடுத்த ஒரு விஷயத்தை திரும்பவும் அவளால் ஏற்க முடியும் அப்படின்னா, அங்க என் காதல் அவளுக்கு தனி தானே! உயர்வானது தானே” என்ற ஆர்விக், “என் காதல் மதிப்பிழந்திடக் கூடாது தான்யா” என்றான்.
“இப்போ நாங்க என்ன பண்ணனும் ஆர்வி?” அனிதா கேட்க,
“நீங்க, நான்… நினைக்கிற மாதிரி அன்விதான் என் லைஃப். அவள் காதலாதான் எனக்கு கிடைக்கணும். இப்போ நீங்க போட்டிருக்க பிளான் வேண்டாம் சொல்றேன்” என்றான்.
“நீ அமைதியா இருந்தா அவள் எப்படி உன்னை ஃபீல் பண்ணுவாள்?” என்றான் பூபேஷ்.
“இதுவரை எனக்குள்ள மட்டுமே இருக்க என்னோட லவ்… அவகிட்ட நான் சொல்றேன். என்னை அவளுக்கு புரிய வைக்கிறேன். அதுவரை நீங்க சைலண்ட்டா இருங்க” என்றிருந்தான்.
இறுதி வாய்ப்பாக அவனது காதலுக்கு மதிப்பளிக்க நினைக்கின்றானென ஆர்விக்கின் மனம் புரிய, மகனின் எண்ணத்திற்கு அனிதாவும் சம்மதம் வழங்கினார்.
அவ்வெண்ணங்களில் ஆழ்ந்திருந்த ஆர்விக், தன்னைச்சுற்றி ஒலித்த பேச்சுக்குரலில் நிகழ் மீண்டான்.
“இவ்ளோ ஸ்பீடா யாஷ் நீ?” என நிதாஞ்சனி கேட்க,
“இவன் ஆர்வி சொல்லும்போது பதட்டமாகிட்டான். எப்படியும் சொதப்பிடுவான் நினைச்சோம். பார்த்தால், மதி சொல்றதுக்கு முன்ன இவன் சொல்லிட்டான்” என்று தான்யா கூற… யாஷ் காட்டிய முகபாவனையில் அங்கே சிரிப்பின் ஆரவாரம்.
“என்னடா கலாட்டா” என்று வந்த அனிதா, “நான் நிதா வீட்டுக்குப் போறேன். ரிசப்ஷன்க்கு ரெடியாகனுமே” என யாஷ், தான்யா, பூபேஷை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.
அடுத்து தெய்வானை வந்தவர், “சக்தியை கிளம்பச்சொல்லு ஆர்வி” என அவனை அனுப்பி வைத்து, “நிதாவுக்கு ஹெல்ப் பண்ணு அன்வி” எனக் கூறினார்.
“இன்னும் டைம் இருக்கேம்மா!” அன்விதா சொல்ல…
“கோவிலுக்கு போயிட்டு அங்க போக சரியா இருக்கும் அன்வி” என்ற தெய்வானை, “மேக்கப் பண்ற பொண்ணு வந்துடுச்சு. டீ கொடுத்து உட்கார வைச்சிருக்கேன். நீ குளிச்சிட்டு சொல்லு, அனுப்பி வைக்கிறேன்” என வெளியேறினார்.
“ஆண்ட்டி உங்களை ரெடியாக சொன்னாங்க மாம்ஸ்” என்று சக்தியின் அறைக்குள் நுழைந்த ஆர்விக், மெத்தையில் கால்கள் தரை ஊன்றியிருக்க மல்லாக்க விழுந்தான்.
அப்போதுதான் குளித்துவிட்டு வந்து கண்ணாடி முன்பு நின்றிருந்த சக்தி,
“என்னடா ரொம்ப டயர்டா தெரியுற?” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று எழுந்தமர்ந்த ஆர்விக் அருகிலிருந்த துணியை கண்டு, “இந்த ட்ரெஸ் தான் ரிசப்ஷனுக்கா?” என்றான்.
“நீதானடா எடுத்த!”
“ஆமால” என்ற ஆர்விக்கின் முன் வந்து நின்ற சக்தி,
“என்னாச்சு உனக்கு?” எனக் கேட்டான்.
“எனக்கு என்னாச்சு? ஒண்ணுமாகலையே” என்ற ஆர்விக், சக்தி அசையாது பார்த்தப் பார்வையில்,
“உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும். எப்போ எப்படி சொல்லணும் தெரியல” என்றான்.
“என்கிட்ட சொல்ல என்னடா யோசனை உனக்கு?” என்று நகர்ந்து கண்ணாடி முன் நின்று சட்டையை அணிந்த சக்தி, “இப்போவே சொல்லு” என்றான்.
“நான் சொல்லிடுவேன். ஆனால் சொன்ன அப்புறம் நீங்க என்னை எப்படி பார்ப்பீங்கன்னு தெரியலையே” என்ற ஆர்விக்கை புருவம் நெறித்துப் பார்த்தான் சக்தி.
“இப்போவே முறைக்கிற மாதிரி இருக்கு” என்ற ஆர்விக், “இது உங்க டே… சோ அப்புறம் சொல்றேன். ஆனால் கண்டிப்பா சொல்லுவேன்… சொல்லணும்” என்றான்.
“ம்ம்…” என்ற சக்தி, “தோட்டத்துல என்னடா பிளான் பண்ணியிருக்கீங்க. ரெண்டு நாளா என்னை அந்தப்பக்கமே விடல நீ. கொஞ்சம்முன்ன வந்த அப்பாவும், நல்ல அலங்காரம். ஆனால் இதுதான் பண்ணனும் அப்படின்னு எதும் காரண்மிருக்கான்னு கேட்டுட்டுப்போனார்” என்றார்.
“பெருசா ஒண்ணுமில்லை… குட்டி சர்ப்ரைஸ் உங்களுக்கு” என்றான்.
“நீ சொல்ற விதமே சரியில்லையே” என்ற சக்தி, “எதும் மாட்டிவிடுற பிளானாடா?” என்றான்.
“அதான் மொத்தமா நிதாகிட்ட மாட்டிக்கிட்டீங்கலே… நான் வேற தனியா மாட்டிவிடனுமா?” என்ற ஆர்விக், மேசை மீதிருந்த கைக்கடிகாரத்தை எடுத்து சக்தியின் கையில் கட்டிவிட்டான்.
“லுக்கிங் மேன்லி” என முழுதாக தயாராகி நின்ற சக்தியின் தோள்கள் இருபக்கமும் பிடித்துக் கூறிய ஆர்விக்,
“வாங்க கீழப்போலாம்” என கூட்டிச் சென்றான்.
கூடத்தின் நீள்விருக்கையில் சக்தியை அமறுமாறு கூறிய தெய்வானை,
“எல்லாரும் தோட்டத்துக்குப் போயிட்டாங்க சக்தி. இந்த ஜூஸ் குடி. முடிய எவ்வளவு நேரமாகும் தெரியல. அங்க போறதுக்கு முன்ன நீயும் நிதாவும் நம்மூர் கோயிலுக்கு போயிட்டு நேரா அங்க வந்துடுங்க” என்று மீண்டும் சமையலறைக்குள் சென்றார்.
“நான் நிதாவை பார்த்திட்டு வர்றேன்” என்று அன்விதாவின் அறை நோக்கிச் சென்ற ஆர்விக், அந்நேரம் அன்விதா அறையிலிருந்து வெளியில்வர,
“நிதா கிளம்பியாச்சா அன்வி” எனக் கேட்டான்.
கேட்டவனை மேலும் கீழும் பார்வையால் அளந்த அன்விதா, உதட்டை சுளித்தவளாக நகர்ந்திட்டாள்.
சென்றவளை புரியாது பார்த்த ஆர்விக் அடுத்த நொடி கண்கள் ஒளிர இதழில் புன்னகையை குவித்தவனாக பின்னந்தலையை அழுந்த வருடியவனாக அங்கு அமர்ந்திருந்த சக்தியின் அருகில் வந்தமர்ந்ததோடு, அவனின் தோளில் தலை வைத்து சாய்ந்தவனாக…
“என்னவோ பண்ணுது மாம்ஸ்” என்று இதயத்தில் தட்டிக்கொண்டான்.
“என்னவாம்?”
“இப்போ சொல்றதுக்கில்லை. இதுல நானுமே முழுசா தெரிஞ்சிக்க வேண்டியது இருக்கு” என்ற ஆர்விக், அன்விதா தன்னை நோக்கி வருவதை கண்டதும் நிமிர்ந்தமர்ந்தான்.
“மாமா” என வெண்மதி அழைக்கவும் சக்தி எழுந்து சென்றான்.
அருகில் வந்த அன்விதா ஆர்விக்கிடம் சிறு பையை நீட்டினாள்.
“என்னது?”
“நீ ரெடி ஆகலையா?”
“எனக்கா ரிசப்ஷன். போட்டிருக்கிறதே போதும்” என்ற ஆர்விக்கை முறைத்த அன்விதா,
“இதைத்தான் போடுற” என்று அவனின் கையில் திணித்தாள்.
“புதுசா இருக்கு அன்வி.”
“எது? நான் உனக்கு ஷர்ட் வாங்கிக் கொடுக்கிறதா?”
“இல்லை… உன் கண்ணு ரெண்டும் என்னை பார்க்குறது. இப்படி முறைக்கிறது” என்றான்.
“பழகிக்கோ” என்று சென்றிருந்தாள்.
“பழகிக்கலாமே!” என இளமுறுவல் கொண்ட ஆர்விக், கன்ன கதுப்பினை உட்பக்கமாக கடித்துவிடுத்தான்.
ஆர்விக் பையில் என்னவென்று பார்க்க சக்தி ஆர்விக்கின் அருகில் வந்தான்.
“கோவிலுக்கு வரியா ஆர்வி?” சக்தி கேட்க,
“நான் தோட்டத்துக்கு போகணும் மாம்ஸ். யாஷ் தனியா மேனேஜ் பண்ணிட்டு இருக்கான்” என்றான் ஆர்விக்.
“ஓகே டா. அம்மா எங்களை கோவில் கிளம்பச்சொல்றாங்க” என்று சக்தி ஆர்விக்கிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போது, அன்விதா நிதாஞ்சனியை அழைத்து வந்தாள்.
இருவரின் பார்வையும் தொட்டு பகிர்ந்து விலகியது.
“ஒரு சின்னபையன் பக்கத்தில் நிக்கிறேன். நினைவிருக்கா?” என்று சக்தியை வெட்கம் கொள்ளச் செய்த ஆர்விக், அன்விதாவின் பார்வையில் தடுமாறியவனாக அவளை ஏறிட்டான்.
பார்வையில் தொலைந்து நின்ற கணங்கள் விரைந்தோடிட… ஆர்விக், அன்விதா வரவேற்பிற்காக ஏற்பாடு செய்திருந்த நுழைவு வாயிலில் வருபவர்களை வரவேற்கும் விதமாக நின்றிருந்தனர்.
“உன் ரிலேட்டிவ்ஸ் அவ்ளோதானா? இன்னும் இருக்காங்களா?” என அன்விதாவிடம் கேட்ட ஆர்விக், “போட்டிருக்க சீட்ஸ் போதாது நினைக்கிறேன்” என்றான்.
“அண்ணாக்கு கரியர் ரிலேட்டட் கம்யூனிகேட் அதிகம்… அதுவும் ரெண்டு பேரும் ஒரே ஊர். வெட்டிங்கும் கோவிலில். சோ, நாம இவ்வளவு பேரை எதிர்ப்பார்த்திருக்கனும்” என்றாள் அன்விதா.
“ம்ம்…” என்ற ஆர்விக், “வந்தாச்சு” என சக்தியும், நிதாஞ்சனியும் வந்துவிட்டதை அறிந்து அவர்களின் அருகில் சென்றான்.
“உங்களுக்கு இந்த வே இல்லை. இப்படி வாங்க” என்ற ஆர்விக்,
“இதுதான் உன் சர்ப்ரைஸ் பிளானா?” என அங்கு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை சுட்டி சக்தி வினவியதில்…
“நிதா லவ்வோட பெஸ்ட் மெமரி… அந்த சீன் ரீக்ரியேட் பண்ண முடியாது. அதோட உங்க பிஸ்னஸ் ரிலேட்டட்… ஏதோ என்னால் முடிஞ்சது” என்றான்.
பெயர் பலகை மட்டுமில்லாது அவ்விடத்தின் முழு அலங்காரமும் பூக்களின்றி பெர்ரி மற்றும் பப்ளிமாஸ் பழங்கள், தேயிலை கொண்டு வடிவமைத்திருந்தான் ஆர்விக்.
இருவரின் பெயரும் பப்ளிமாஸ் சுளைகளுக்கு நடுவில் ஸ்ட்ராபெர்ரி வைத்து, சுற்றி ப்ளூ பெரியால் அலங்கரிக்கப்பட்டு பார்ப்பதற்கே கொள்ளை அழகில் அவை மட்டுமின்றி அவ்விடமே அழகோவியமாகக் காட்சிக்கொண்டது.
“அப்போ இந்த பழங்களுக்கு பின்னாடி தான் இவங்க லவ் ஸ்டோரி இருக்கா? அன்னைக்கு நான் பப்ளிமாஸ் அப்படின்னு பழத்தை சும்மா சாதாரணமா சொன்னதுக்கே அவ்ளோ பிளஷ் ஆனதுக்கு பின்னால் பெரிய ரகசியம் இருக்கா?” என்று அன்விதா கேட்டதில், நிதாஞ்சனி செம்மை கொண்டவளாக சக்தியின் கரத்தை கோர்த்துப் பிடித்து அவன் பின் முகம் மறைத்தாள்.
“நீ ஏன் இவ்ளோ எஃபோர்ட் போட்டன்னு இப்போ புரியுது” என்ற அன்விதா, “அண்ணியோட இந்த வெட்கத்துக்காகவே இன்னும் நிறைய பப்ளிமாஸ் பழம் வைச்சிருக்கலாம் போலயே” என்றாள்.
“அச்சோ அன்வி” என்று சிணுங்கிய நிதா, “எல்லாம் உங்களால” என்று சக்தியின் மார்பில் அடித்தாள்.
“இதெல்லாம் அநியாயம். அன்னைக்கு யார் உன்னை இந்த பழத்தை பறிக்க வரச்சொன்னது” என்று சக்தி சிரித்திட,
“எல்லாம் உங்ககிட்ட மாட்டணும்னுதான்” என்று மேலும் அவனின் சிரிப்பை அதிகரித்திருந்தான் ஆர்விக்.
“எதோ டபுள் மீனிங் இருக்கும் போலவே மச்சான்?” என்று சக்தி கேட்க…
“அப்படியா?” என்ற ஆர்விக், “ஒருவேளை உங்களுக்கு மட்டும் அப்படி தோணுதோ?” என்றான்.
“உள்ள ஸ்டேஜ் டெக்கரேஷன் இன்னும் பயங்கரம் அண்ணா” என்றாள் அன்விதா.
“இதுதான் மச்சான் குறும்பா?” என்று சக்தி கேட்டிட…
“அஃப்கோர்ஸ் மாமா” என்று கண்கள் சிமிட்டிய ஆர்விக், “என்னோட வெட்டிங் கிஃப்ட் எப்படி?” என்று பெயர் பலகையோடு சேர்த்து நால்வரும் திரை நிறைக்க சுயமி எடுத்திருந்தான்.
நிறைவாய் அவ்விடம் விரவிய மகிழ்வின் மொத்தமாய் நிறைந்திருந்தான் ஆர்விக்.
(நாளை அத்தியாயம் வந்தால் வரும்.)
தோழமை அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
60
+1
1
+1
2


