
காலை கனவு 36
“காலையில நானே பஸ் ஸ்டாப் போய் கூட்டிட்டு வர்றேன் மாமா” என இரவு, “நிதா கிளம்பியாச்சு” என்று ஆர்விக்கிடமிருந்து தகவல் வந்த பின்னர் சுகவனத்திற்கு அழைத்து சக்தி கூறியிருந்தான்.
“அது சரி வருமா சக்தி. இன்னும் முறையா நிச்சயம் கூட ஆகலயே” என்று சுகவனம் தயங்கிட,
“என் மச்சானை பேச சொல்லட்டுமா மாமா?” என்றிருந்தான் சக்தி.
“வேண்டாம் சக்தி. காலையில என்கிட்ட பேசினப்போவே அக்காவுக்கும் மாமனுக்கும் அவங்க எவ்வளவு சப்போர்ட்டுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். நீங்களே கூட்டிட்டு வந்துடுங்க” என்று உடனடியாக சம்மதம் வழங்கினார் சுகவனம்.
“சொல்ல வேண்டியவங்க பேர் சொன்னாதான் கிடைக்க வேண்டியது கிடைக்கும் போல” என சக்தி சொல்ல…
“அப்படியில்லை சக்தி. உண்மையிலே நிதாவுக்கு கூடப்பிறந்தவன் அப்படின்னு யாரும் இருந்திருந்தாக்கா ஆர்வி தம்பி மாதிரிதான் நடந்துக்கிட்டிருந்திருப்பாங்கன்னு எண்ணம். அவளுக்குன்னு சொந்த உறவா பிறந்தவீடுன்னு எங்க காலத்துக்கு அப்புறம் ஆர்வி தம்பி இருக்கும்ன்னு நிதாக்காக பேசும்போது புரிஞ்சிக்கிட்டேன். ரத்த பந்தமில்லாம இப்படியொரு உறவு கிடைக்கிறதெல்லாம் ஈசி இல்லையே! அக்கான்னு உரிமையில என் பொண்ணுக்காக என்கிட்ட பேசுனப்போவே, என் மகனாகிட்டாங்க. மகன் பேச்சுக்கு அப்பாவா மதிப்பு கொடுக்கணுமே” என்றார்.
“அதுசரி… எனக்கு பெரியவங்க முறையா எல்லாம் ஆரம்பிக்கும் முன்ன நிதாகிட்ட பேசணும்” என சக்தி கூற,
“பேசுங்க” என்றிருந்தார் சுகவனம்.
அதிகாலை பேருந்து நிலையம் செல்ல சக்தி வெளியில் வர, ஆர்விக்கிடமிருந்து காணொளி அழைப்பு.
“என்னவாம் என் மச்சானுக்கு” என்று சக்தி அழைப்பை ஏற்று முகம் காட்டிட,
தலையணையில் கவிழ்ந்தபடி நெற்றி வழிந்த முன்னுச்சியை ஒரு கையால் ஒதுக்கி…
“என் ஆளை பார்க்கப்போறன்னு அழகா கிளம்பியாச்சு போலயே” என்றான் ஆர்விக்.
“அடேய்…” என்று சிரித்த சக்தி, “இன்னும் பெட் விட்டு எழுந்துக்கலையா?” என்றான்.
“நீங்க பேச்சை மாத்தாதீங்க…” என்ற ஆர்விக், “நிதா எங்க இருக்கான்னு கேட்டு கால் பண்ணேன். இன்னும் தர்ட்டி மினிட்ஸ்ல போயிடுவேன் சொன்னாள். அதான் நீங்க கிளம்பியாச்சான்னு கால் பண்ணேன்” என்றான்.
“அதுக்கு காலையிலே என்னை வம்பு பண்ணனுமா நீ?”
“மாமன் மச்சான்னு ஆகிப்போச்சு, இந்த வம்பெல்லாம் இல்லாம எப்படி” என்ற ஆர்விக், “எதுவும் டிப்ஸ் வேணுமா மாம்ஸ்?” எனக் கேட்டான்.
“மச்சானுக்கு அனுபவம் இருக்கும் போலயே?”
“இருந்திருந்தா நான் ஏன் இந்நேரம் உங்களுக்கு கால் பண்ணப்போறேன்” என்ற ஆர்விக்கின் புன்னகையின் பின்னால் அவன் மட்டுமே அறிந்த அவனுக்கான வலி மீதூறியது.
“ஆஹான்…”
“என்கிட்ட பேசினா நேரம்போறது தெரியாதா உங்களுக்கு?” என்ற ஆர்விக், “இப்போ இருக்க முகத்தை மாத்தாம அப்படியே போய் நில்லுங்க. உங்கள மாதிரி என் அக்கா பிளாக் பண்ணனும் யோசிக்கக்கூட மாட்டாள்” என்றாள்.
“யோசிக்க விடுவோமா என்ன?” என்ற சக்தி, “குத்திக் காட்டுறீங்களோ?” என்றான்.
“அஃப்கோர்ஸ் மாம்ஸ்” என அதிர்வின்று சிரித்த ஆர்விக்கின் முகத்தில் ஆதுரத்தின் மிகுதியாய் படிந்தது சக்தியின் பார்வை.
“நிதாவை பார்க்க சொன்னா என்னை பார்க்குறீங்க நீங்க?” என்று ஆர்விக்கின் சிரிப்பு மேலும் அதிகரிக்க…
“உன்னை எல்லாருக்கும் பிடிச்சிடும்டா… உண்மைக்குமே உன்கிட்ட நிறைய பேசறேன் நான். பேச வைக்கிற” என்றான்.
ஆர்விக் கண்கள் சிமிட்டிட…
“எப்பவும் இப்படியே இரு. நினைச்சாலும் உன்னை மாதிரி சாஃப்ட்டா ரொம்பவே கைண்டா என்னால முடியாது” என்று சக்தி கூறினான்.
“அக்காகிட்ட பேச வேண்டியதெல்லாம் மச்சான்கிட்ட பேசிட்டு இருக்கீங்க” என்று மலர்ந்து முறுவல் பூத்த ஆர்விக், “டைம் ஆச்சே! எப்படியும் உங்களை அங்க பார்த்ததும் எனக்கு கால் பண்ணுவாள். அவளை வேற புஷ் பண்ணனும் நான். ஆல் தி பெஸ்ட் மாம்ஸ்” என்று வைத்திருந்தான்.
ஆர்விக் சொன்னதைப்போன்று பேருந்தை விட்டு இறங்கியதும், நிதாஞ்சனி கையில் அலைபேசியை எடுத்திட,
“எல்லாரையும் சரியா புரிஞ்சு வைச்சிருக்கான்” என்று நினைத்த சக்தி, நிதாஞ்சனி தன்னை நோக்கி வருவதை நம்ப முடியாதுதான் பார்த்து நின்றான்.
தன்னைக் கண்டதும், பார்க்காததைப்போன்று ஒதுங்கி சென்றிடுவாளென்று தான் நினைத்திருந்தான்.
தற்போது அவள் தன்னுடைய எண்ணத்திற்கு மாறாக நேர்கொண்டு வரவும்,
“நல்லாவே ட்யூன் பண்ணியிருக்கான்” என மென்னகைத்தான்.
“பயம் போயிடுச்சு போலவே” என சக்தி நினைத்து முடிக்குமுன்…
“இது ஆவரதுக்கில்லை” என நிதாஞ்சனி பக்கவாட்டில் அடி வைத்து திரும்பிட…
“ஓய் பப்ளிமாஸ்” என்றழைத்திருந்தான் சக்தி.
சக்தியின் குரலில் மூச்சு விடவும் மறந்தவளாக அதிர்ந்து உறைந்து நின்றிருந்தாள்.
நிதாஞ்சனி மெல்ல திரும்பிப் பார்க்க… வழக்கம்போல் அவனின் அழுத்தமான அக்குரலுக்கு மிரண்டிருந்தாள்.
கிட்ட வா எனும் விதமாக சக்தி கை காட்டிட, அன்றைய நாள் போன்று பயந்து பயந்து, தயங்கி தயங்கி அவனருகில் சென்றாள்.
அவளின் உடல் மொழியும், முகத்தில் காட்டும் பாவனைகளும் அவனுள் அவனறியாது உள் இறங்கியது. சிறு சுவாரஸ்யம் அவனிடத்தில்.
இருவரிடமும் அன்றைய நாளின் தாக்கம். தங்களுக்கிடையேயான முதல் நிகழ்வும், பேச்சும் அகம் தோன்றி இதழ் நிறைந்தது…
புன்னகையாய் அவனிடம், எதிர்ப்பார்ப்பாய் அவளிடம்.
பக்கம் வந்தவள் அவனின் விழிகளை சந்திக்க மறுத்து பார்வையை அவனது மார்பில் பதித்தவளாக நின்றிருக்க…
“ஏறு” என தனக்கு பின்னால் கண் காட்டினான்.
“ஹான்” என அவள் பார்வையை உயர்த்தி அவனின் விழிகளை சந்தித்து நொடியில் தாழ்த்தியிருந்தாள்.
“சொன்னா கேட்கணும்!” அவனது குரல் அழுத்தமாகத்தான் வந்தது.
‘எப்பவும் விறப்பாவே சுத்திட்டு இருந்தா எப்படி கிட்ட வருவாள்?’ ஆர்விக் கேட்டது நினைவில் தோன்றி மென்னகைக்க வைத்தது.
சட்டென்று இதழில் கீற்றுப்போன்ற புன்னகை தோன்றியிருந்தது.
“ஏறு பப்ளிமாஸ்” என்று நெகிழ்ந்து ஒலித்த அவனது ஓசையில் ஆச்சரியமாய் விழி விரித்து விழிகளை விரித்தவள்
“அப்பா… அப்பா வருவாங்க” என்றாள். தடுமாற்றத்துடன்.
“அப்படியா? ஆள காணோமே!” என்று சக்தி சொல்ல…
“நான்… நான் கால் பண்ணிப்பாக்குறேன்” என்று சுகவனத்திற்கு அழைப்பு விடுத்தாள்.
“பாரு… பாரு…” என்றவனை புருவம் சுருக்கி மேல் கண்களால் நோக்கியவள்,
‘நிஜமாவே இவங்க என்கிட்ட இப்போ பேசிட்டு இருக்காங்களா?’ என தனக்குத்தானே கேட்டுக் கொண்டவளாக, அவனறியாது தன்னை கிள்ளிப் பார்த்தாள்.
“வலிச்சுதா?”
“ஆங்…”
“கனவில்லை. நிஜம் தான்” என்றவனை ஆவென பார்த்து நின்றாள். சுகவனம் அழைப்பை ஏற்று “அம்மாடி நிதா” என்றதையும் காதில் வாங்காதவளாக.
“என்ன இன்னைக்கு புதுசா தெரியுறனா?” சக்தி கேட்டதுமே பட்டென்று தன்னை மாற்றியவள், காதில் தந்தையின் குரல் ஒலிப்பதை உணர்ந்து…
“எங்க இருக்கீங்கப்பா? நான் வந்துட்டேன்” என்றாள்.
“மாப்பிள்ளை உன்னை கூப்பிட வந்திருக்காரேம்மா!”
“அப்பா!” அதிர்ச்சியும், ஆச்சரியுமுமாய் குழப்பம் கொண்டு சக்தியை ஏறிட்டாள்.
“ஃப்ரீஸ் ஆகிட்டாள்” என முணுமுணுத்த சக்தி, அவளின் கையிலிருந்த அலைபேசியை லாவகமாக எடுத்து…
“நான் கூட்டிட்டு வந்திடுறேன் மாமா” என அழைப்பைத் துண்டித்தான்.
திரையில் அவளும் ஆர்விக்கும்.
“தம்பியை ரொம்ப பிடிக்குமோ?”
“ஹான்…?”
“சும்மா இப்படி பார்த்து வைக்காதடி… என்னவோ பண்ணுது” என்று இதயத்தை நீவிய சக்தி,
“போவோமா?” என்று அலைபேசியை அவளிடம் நீட்டினான்.
“எனக்கு நிஜமா ஒண்ணுமே புரியல. இப்போ நீங்க என்கிட்ட பேசுறீங்க… இதை நான் எப்படி எடுத்துக்கணும்?” என்றாள்.
“தெளிஞ்சிட்டாள்” என்ற சக்தி,
“இங்க நின்னு எல்லாம் சொல்லணுமா?” எனக் கேட்டான். எவ்வளவு முயன்றாலும் அவனது குரலில் ஆர்விக் சொல்லும் மென்மையை கொண்டுவர முடியவில்லை. அதற்காக முன்பிருந்த அழுத்தமும் அத்தனைக்கு தற்போதில்லை.
நிதாஞ்சனி தன்னுடைய தந்தை மாப்பிள்ளை என்றதையும், சக்தி அவரிடம் சொல்லியதையும் வைத்து தற்போதைய சூழலை ஓரளவிற்கு அனுமானித்தவளாக சக்தியின் பின்னால் வண்டியில் ஏற முற்பட,
“பையை என்கிட்ட கொடுக்கலாம்” என்றான் சக்தி.
“இல்லை நானே வைச்சிப்பேன்” என்றவள் அவன் பார்த்தப் பார்வையில் தானாக அவன் முன் வண்டியின் மீது பையை வைத்திருந்தாள்.
“எப்பவும் அந்த கண்ணுல அதட்டல் தான்” என்று முனகியவள் அமர்ந்திட,
“பின்னாடி விழுந்து வைச்சிடாத” என்றான். அவள் நன்கு தள்ளி, மேலே உரசிடாதவாறு இடைவெளிவிட்டு அமர்ந்ததை சுட்டிக் கூறினான்.
இத்தனை வருட அவளின் ஏக்கத்தில் ஒருமுறை கூட அவனது இளகள் இளக்கம் கொண்டதில்லை.
இன்று அவனது எல்லாம்… ஒரே நாளில் அவளுக்கு மூச்சடைக்க வைத்தது.
“ஹேண்டில் பிடிச்சிக்கிட்டேன்.” அந்த குரலின் நடுக்கம் அவனுக்கு மென் சுவாரஸ்யம்.
சக்தி வண்டியை சீராக செலுத்திட, நிதாஞ்சனி கையில் இறுக்கிப் பிடித்திருந்த அலைபேசியை திறந்து…
“டேய் ஆர்வி!” என குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“ஒண்ணுமில்லை. ஃப்ரீயா பேசு. நீ பேசணும் அவசியமில்லை. மாம்ஸ் பேசுவார். கேட்டுக்கோ! அவ்ளோதான். டேக் அ டீப் ப்ரீத் நிதா” என ஆர்விக்கிடமிருந்து வந்த பதிலில், அவனது மாம்ஸ் என்ற வார்த்தையிலே அவளின் விழிகள் நிலைக்குத்தி நின்றுவிட்டன.
“எல்லாம் கூட்டு களவாணிங்க” என்று வாய்விட்டு சொன்னதோடு மட்டுமில்லாது, ஈ என சிரிக்கும் பொம்மை உடன் அவனுக்கு அனுப்பியும் வைத்தாள்.
“எதுவும் சொன்னியா?” சக்தி திரும்பாது, கண்ணாடி வழி அவளின் பக்கவாட்டு முகம் கண்டு வினவினான்.
நிதாஞ்சனியும் இல்லையென கண்ணாடி வழியே தலையசைக்க,
சக்தி வண்டியை நிறுத்தியிருந்தான்.
“ஏன்? ஏன் நிறுத்திட்டீங்க?” ஆளற்ற பகுதி. அவர்களின் பள்ளி வழி சக்தியின் பெர்ரி தோட்டத்திற்கு செல்லும் பாதை.
அவனுடன் பயணிப்பதே படபடப்பை அளித்திட… அந்த அமைதி அவளை அதிகம் பதற்றம் கொள்ள வைத்தது.
“பேசணும் சொன்னனே” என்ற சக்தி,
“இறங்கு” என்றான்.
“என்ன என்ன பேசணும்? வீட்டுக்கு போகணும். அப்பா வெயிட் பண்ணுவாங்க. ப்ளீஸ் போங்க” என்றாள்.
“இவ்வளவு நாள் நீ பார்த்தியே, நான் எதுவும் சொன்னனா? இப்போ நான் பேசணும்… வேணாமா?”
அதற்குமேல் அவனிடத்தில் பிடிவாதம் பிடிக்க முடியாதென இறங்கி நின்றாள்.
“குட்” என்ற சக்தி வண்டியை நிறுத்தி இறங்கி, அதன் மீதே சாய்ந்து நின்றான்.
நொடிகள் நிமிடங்களாகிட… சக்தி பேசவே இல்லை.
தனக்கு முன்பு கைகளை பிசைந்தபடி, நிலையாக நிற்க முடியாது, ஒருவித மென் தள்ளாட்டத்துடன் அவஸ்தையாய் நின்றிருந்தவளையே, பல வருடங்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பார்த்து வைத்தான்.
நேரம் செல்லச் செல்ல அவளின் இதைத்துடிப்பின் ஓசை அவனும் கேட்பதாய்.
தூரத்தில் வாகனம் செல்லும் ஓசை கேட்க, பதறி யாரெனப் பார்த்த நிதாஞ்சனி, அது அந்தப்பக்கமில்லை என்றதும் நெஞ்சில் கை வைத்தவளாக ஆசுவாசம் கொண்டு…
“என்ன பேசணும்?” என கேட்டாள்.
“பேசலாம்” என்ற சக்தி, “என் முகத்தை எப்போ பாக்குறியோ அப்போ” என கால்களை ஒன்றின் மீது ஒன்று மாற்றிப்போட்டு இன்னும் வாகாய் வண்டியின் மீது சாய்ந்து நின்றான்.
“அய்யோ ஏன் இப்படி பண்றீங்க?” என்று அவனின் முகம் பார்த்தவள் அவனது அசையா விழிகளில் கட்டுண்டு அவனில் நிலைத்துவிட்டாள்.
அவளது மொத்த காதல் அம்புகளும் அவளின் விழி வழி தனது இதயத்தில் தைப்பதை உணர்ந்த சக்தி…
“என்கிட்ட எதுவும் சொல்லணுமா?” எனக் கேட்டான்.
இதுநாள் வரை தன்னிடம் சொல்ல முடியாது தவித்தவளின் தவிப்புகள் அவளின் காதலை சொல்வதால் மட்டுமே குறையுமென அவளாக சொல்ல வாய்ப்பினை உருவாக்கினான்.
அவளுக்கோ தன்னைப் புரிந்து இத்தனை தூரம் வந்த பின்னர், வேண்டுமென்றே இப்படிக் கேட்டால் என்ன சொல்வதென்ற சிறு கோபம் எழ அமைதியாகவே நின்றாள்.
“அப்போ மேடம் சொல்லமாட்டிங்க?” என்ற சக்தி…
“எனக்கு புரியுது” என்றான்.
“என்ன புரியுதாம்?” என்று நிதாஞ்சனி அவனுக்கு கேட்டுவிடாது முனக, அவனுக்கோ நன்கு கேட்டிருந்தது.
இளமுறுவல் கொண்டிருந்தான்.
தன்னுடைய அலைபேசியை எடுத்து, அவள் பல வருடங்களுக்கு முன்பு அனுப்பிய தகவலை திறந்து அவள் முன் காண்பித்தான்.
இன்னமும் அவளின் எண் பிளாக் செய்யப்பட்டுதான் இருந்தது.
“ஹோ… அது நான் அனுப்பல!” உதட்டினை சுளித்திருந்தாள்.
“நிஜமாவா?”
“ஆமா!”
இத்தனை வருடம் தன்னை மனதோடு அல்லாட வைத்த சுணக்கம் அவளிடம்.
“நீங்க நினைச்சு, என் மச்சான் சொன்னான்னு நானும் மேரேஜ் வரை முடிவு பண்ணிட்டனே! அப்போ இது நீங்கயில்லையா?” என்று உண்மைப்போல ஆச்சரிய பாவனைக்காட்டி அவளை அதிர வைத்தான்.
நிதாஞ்சனி என்ன சொல்வதென்று தடுமாற…
“பட் இட்ஸ் ஓகே! எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. மேரேஜ் பண்ணிக்கனும் தோணுது. பண்ணிக்கலாம். நீ சம்மதம் சொன்னா” என்றவன், “போலாம்” என வண்டியை உயிர்ப்பித்திட…
“இப்பவும் அதே அதட்டல்” என்றாள்.
“இதுதான் நான். வேறென்ன செய்யணும்?”
“ஒண்ணும் செய்ய வேண்டாம். இத்தனை வருஷம் அமைதியாதான வேடிக்கைப் பார்த்தீங்க. இப்போ மட்டும் என்னவாம்…” என்றவளுக்கு கண்களில் கண்ணீர் நிரம்பியது.
“நிதா.” சக்தி அவளின் கண்ணீரில் அதிருப்தி கொண்டான்.
“என் பேர் கூட தெரியுமா உங்களுக்கு?” என்றவள், “போங்க… போங்க… எனக்கு நீங்க வேணாம்” என்று வழியும் கண்ணீரை இரு கைகளாலும் மாற்றி மாற்றி துடைத்தாள். தேம்பியபடி.
அவனின் பார்வைக்காக ஏங்கியவளுக்கு, அவனது பிடித்திருக்கிறது என்பது, அழுத்தி வைத்த ஏக்கத்தின் வலிகளை எல்லாம் கரையச் செய்திருக்க, பெரும் ஆனந்தத்தின் வெளிப்பாடாய் கண்ணீர் சுரந்தது.
“அழாதடி!”
“வருதே! என்ன பண்ண?”
“இப்போ நான் என்ன பண்ணனும்?”
“நிஜமா என்னை பிடிச்சிருக்கா?”
“ஆமா… கட்டிக்கிற அளவுக்கு.”
“எப்போலேர்ந்து? ஹான்…”
“உன் கதிர் மாமா எனக்கு கல்யாணம் சொன்னதிலேர்ந்து” என்ற சக்தி, ஆர்விக்கிடம் கூறிய அனைத்தையும் அவளிடமும் கூறினான்.
அனைத்தையும் மௌனமாய் கேட்டவளுக்கு,
அவனுக்கு தன்மீது காதல் இருந்ததா இல்லையா என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்கத் தோன்றவில்லை.
திருமணம் என்றதும் அவனுக்கு தான்தான் மனதில் நின்றிருக்கிறோம் என்பதிலே அவளின் காதல் கொண்ட நெஞ்சம் நிறைந்துவிட்டிருந்தது.
“அப்போ இனி முறைச்சுப் பார்ப்பீங்களா?”
“என்னடி?”
“நீங்க சொல்லுங்க?”
“மாட்டேன்!”
“அதட்டக்கூடாது.”
“ஓகே!”
“என்கிட்ட அப்பப்போ சிரிக்கணும்.”
“டன்” என்றவன், “வேற?” என்க,
“என் நெம்பர் அன்பிளாக் பண்ணல” என்றாள்.
“அதுல ஏதோ ஒரு ஃபீல்… சோ, பண்ணனும் தோணல.”
“இப்போ பண்ணலாம்!”
“ஆமா, பண்ணலாமே!”
“பண்ணுங்க.” அவள் முடிக்கும் முன்பு சிரித்தபடி, அவளின் எண்ணை அன்பிளாக் செய்திருந்தான்.
அடுத்த நொடி தன்னுடைய அலைபேசியில் அவனின் எண்ணை அவள் பிளாக் செய்திருந்தாள்.
“ஹேய்… என்னடி?”
“நான் பழிவாங்கணுமே!” என்றவள், “எனக்கு தோணும்போது அன்பிளாக் பண்றேன்” என்றாள்.
“நல்ல பழிவாங்கல்” என்று அவன் கூறிட…
“ஆர்விதான் உன்னை அவர் பிளாக் பண்ணிட்டாருன்னு ஃபீல் பண்றதுக்கு பதிலா, அவரோட நெம்பரை பிளாக் பண்ணிட்டு, அவரை நீதான் பிளாக் பண்ணியிருக்கன்னு நினைச்சிக்கோ. குட்டியா ஒரு சாட்டிஸ்ஃபை கிடைக்கும். உனக்கும் இந்த பெயின் இருக்காதுன்னு சொன்னான்” என்றாள்.
“அதான் இப்போ எல்லாம் ஓகே ஆகிடுச்சே!”
“உங்களுக்கு ஆனா போதுமா! தெரிஞ்சும் எவ்ளோ அழ வைச்சீங்க” என்றாள்.
“அக்காவும், தம்பியும் சேர்ந்து நல்லா பண்றீங்க” என்று சத்தமிட்டு சிரித்த சக்தியின் முகம், அன்றைய முகமாக அவளின் இதயத்தில் ஆழப் பதிந்தது.
“இந்தப் பார்வை தான் மொத்தமா உன்பக்கம் சாய்ச்சிடுச்சு” என்ற சக்தி,
“வாழ்க்கை முழுக்க இதே இனிமையோட என்னோட வர்ற உனக்கு ஓகேவா?” எனக் கேட்டான்.
“எனக்கெல்லாம் எப்பவோ ஓகே” என்றவளின் முகத்தை அதீத உரிமையோடு தித்திப்பாய் தன்னுடைய அகம் சேர்ப்பித்தான்.
காத்திருப்பிற்கு பின்னான சுகத்தில் அவளின் காதல் திளைத்திருக்க… அவளுடன் நீண்டதாய் வாழப்போகும் வாழ்வின் நீளத்தை காதலாய் எதிர்நோக்கி அவன்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
23
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆர்விக் கலக்குகிறான்