Loading

காலை கனவு 34

“லவ்… பெயினில்லாம இல்லையே!”

இளமுறுவலோடு கூறிய ஆர்விக்கை நீர் நிறைந்த விழிகளோடு ஏறிட்டாள் நிதாஞ்சனி.

“என்னை மாதிரி உன் காதல் வலியில முடிய வேண்டிய அவசியமில்லை நிதா” என்றவன், “என் காதல் வேற… உன் காதல் வேற…” என நிறுத்தி,

“எவ்ரி லவ் ஹேஸ் அ டிஃப்ரென்ட் ஸ்டோரி” என்றான்.

“இப்போ நான் என்ன பண்ணனும்?”

“முதல்ல கண்ணைத் துடை நிதா” என்ற ஆர்விக், “உன்னால திருக்கிட்ட சொல்ல முடியுமா? முடியாதா?” எனக் கேட்டான்.

“தெரியலையே!”

“ஒரு ட்ரை?”

நிதாஞ்சனி தவிப்போடு அவனை பார்க்க…

“ஹேய்… சில்” என அவளின் கரம் பிடித்து அழுத்திக் கொடுத்தான்.

“அம்மாவை பேச சொல்லலாமா?” என ஆர்விக் கேட்க,

வேண்டாமென தலையசைத்தாள்.

“எனக்கு இந்த முறை திரு நோ சொல்லமாட்டாருன்னு தோணுது. எனக்காக சொல்லிப்பாரு நிதா” என்றான்.

“நோ சொல்லிட்டா?”

“சொல்றதுக்கு முன்னவே இதைதான் சொல்வாருன்னு நீயா ஏன் நினைக்கிற?” என்ற ஆர்விக், “திருக்கிட்ட உனக்கிருக்க பயமெல்லாம் ஒதுக்கி வைச்சிடு. அந்த வயசுலே உன்கிட்ட நல்லாதான பிஹேவ் பண்ணியிருக்காங்க. சொல்லப்போனால் உனக்கு திரு மேல லவ் வரவே அந்த நாள்தான காரணம். நீ மெசேஜில் சொன்னதை நேர்ல சொல்லு. அன்னைக்கு உன்னோட நெம்பருன்னு தெரியாமக்கூட பிளாக் பண்ணியிருக்கலாமே” என்றான்.

“இல்லை நான்னு அவங்களுக்குத் தெரியும்.”

“எப்படியாம்?”

“அது தெரியல. ஆனால் நான்னு அவங்களுக்குத் தெரியும். அடுத்தநாள் காலேஜில் பார்க்கும்போது என்னை முறைச்சாங்க.”

நிதாஞ்சனி சொல்லிட ஆர்விக்கிடம் அப்படியொரு சிரிப்பு.

“சிரிக்காதடா. எனக்கு அவங்க வேணுமே!” என்றவளை பார்த்திட பாவமாகத்தான் இருந்தது.

தன்னளவிற்கு அவளால் இந்த காதல் வலியை ஏற்கவும் முடியாதென்று உணர்ந்திட்டான்.

“ஒரேவழி தான். மெசேஜில் சொன்னதை நேர்ல பார்த்து சொல்லிடு.”

“அம்மாடியோவ்” என்று இரு கன்னங்களிலும் கை வைத்து பொத்திக் கொண்டவள், “அவங்ககிட்ட போகவே ஷிவர் ஆகுதுடா! இதுல கண்ணைப் பார்த்து லவ் சொல்றதெல்லாம் வாய்ப்பேயில்லை. அதுவும் பிளாக் பண்ணவர்கிட்ட திரும்ப போய் சொல்றது, அவரோட உணர்வுக்கு நான் மதிப்பு கொடுக்காத மாதிரி ஆகிடாதா?” என்றாள்.

“நீயும் சொல்லமாட்ட, அம்மாவையும் பேச வைக்க வேண்டான்னா என்ன தான்டா பண்றது?” என ஆர்விக் அவளை முறைக்கவும், அதுவரை நின்றிருந்த கண்ணீர் அவளின் கன்னம் வழிந்தது.

“உடனே அழாத! யோசிப்போம்!” என சொல்லியிருந்தாலும் தான் சக்தியிடம் பேச வேண்டுமென ஆர்விக் எப்போதோ முடிவெடுத்திருந்தான். இருப்பினும் தான் சொல்வதைக்காட்டிலும், அவளாக சொல்வது தனிதானே என தன்னால் முயன்றளவுக்கு நிதாஞ்சனியே தன்னுடைய காதலை சொல்ல வைத்திட முயற்சித்திட்டான்.

“இன்னும் பஞ்சாயத்து முடியலயாடா?” உறக்கம் கலைந்து இவர்களைத்தேடி வந்திருந்தான் யாஷ்.

“உன் பங்குக்கு நீயும் நாலு டயலாக் பேசணும். அதுக்குதான வந்த இப்போ நீ” என்ற நிதாஞ்சனி,

“எனக்கு ஒண்ணு மட்டும் தெளிவா புரியுது. இதுக்கு அப்புறமும் அப்பா அம்மாவை கஷ்டப்படுத்தக்கூடாது” என்றாள். ஆர்விக்கைப் பார்த்து.

“அப்போ அப்பாகிட்ட வீக்கென்ட் வரன்னு சொல்லிட்டு ஊருக்கு போ” என ஆர்விக் சொல்ல…

“நான் போனால், கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன மாதிரி ஆகிடுமே!” முகம் சுருக்கினாள்.

“உன்னை போன்னுதான் சொன்னேன். போயி அப்பாகிட்ட திருவை லவ் பண்றேன்னு சொல்லிடு. சிம்பிள். மேட்டர் ஓவர். அவருமே உனக்கு வேறெதுவும் விருப்பமிருந்தா சொல்லுன்னு சொன்னாரே” என்றான் ஆர்விக்.

“ஆத்தி… அவ்ளோதான்” என நெஞ்சில் கை வைத்திட்ட நிதாஞ்சனி, “அப்பா சொல்லிட்டா போதுமா? அம்மா? நான் லவ் பண்றேன் தெரிஞ்சுது அவ்ளோதான். வீடு கூட்டுறதை எடுத்து சாத்து சாத்துன்னு சாத்திடுவாங்க” என்றவளுக்கு இப்போதே கார்த்திகாவிடம் நாலு அடி வாங்கிய வலி உடலில் உணர முடிந்தது.

“நிறைய வாங்கியிருபீங்கப்போல?” யாஷ் சிரித்துக்கொண்டே கேட்க,

“அதெல்லாம் கணக்கே இல்லை” என்றவள், “வேற ஐடியா?” என்றாள்.

“உன்னை கொல்லப்போறேன் பாரு நானு” என்ற ஆர்விக், “என்ன சொன்னாலும் முடியாது சொன்னா, என்ன பண்ணட்டும் நான்?” என்றான்.

ஆர்விக்கின் கடுமையில் அவளின் வதனம் சின்னதாகிட,

“முகத்தை அப்படி வைக்காத” என்று அவளின் தாடையை பிடித்து இழுத்தான்.

“போடா” என்று அவனின் கையை தட்டிவிட்டவள்,

“போனமுறை மாதிரி இந்த முறையும் நிறுத்த முடியுதா பார்க்கிறேன். இல்லைன்னா அப்பாவிட்ட வழி” என்றாள்.

“அப்போ சக்தி வாழ்க்கை?” யாஷ் அதிர்ந்தவனாகக் கேட்டிருந்தான்.

“அவங்க தான்டா எனக்கு வாழ்க்கை கொடுக்கணும். அதுக்கு வழியில்லன்னு தெரிஞ்சே எத்தனை நாளுக்கு வெயிட் பண்றது?” என்றாள்.

“அப்போ திரு வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியா?” மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு அழுத்தமாக வினவினான் ஆர்விக்.

“வீட்டுக்கு போகாம இருக்க முடியாது ஆர்வி. பார்க்கவர பையன்கிட்டவே பேசிப்பார்க்க வேண்டியதுதான்.”

“எத்தனை நாளுக்கு இப்படி?” என்ற ஆர்விக், “ஒண்ணுமேயில்லை. எல்லாத்தையும் மறந்துட்டு, இப்போதான் உன் லவ்வை முதல்முறை திருக்கிட்ட சொல்லப்போறதா நினைச்சு சொல்லு. கண்டிப்பா ஒரு பதில் சொல்லியே ஆகணும். இத்தனை நாளில்லாம நீயும் பிராக்டிக்கலா நினைக்க ஆரம்பிச்சிட்ட. சோ, திரு நோ சொல்லிட்டா உனக்கு அதிக பெயின் ஃபீல் ஆகாது. அடுத்து என்னன்னு யோசிக்க ஸ்டார்ட் பண்ணிடுவ. வலியோட வலியா இந்த வலியையும் கடந்துவந்திடுவ” என்றான்.

“ம்ம்…” நிதாஞ்சனி யோசனையோடு தலையசைக்கவே, அவள் எப்படியும் சக்தியைப் பார்த்து பேசிடமாட்டளென்றுதான் ஆர்விக்குக்கு எண்ணத் தோன்றியது.

“ரொம்ப கஷ்டம்” என ஆர்விக் சொல்ல, “என்னதுடா?” என்றான் யாஷ்.

“லவ் சொல்லவே இவ்வளவு யோசிச்சா?” என்ற ஆர்விக், “அரேஞ் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிடுவோமா?” என்றான்.

“எப்படி?” நிதாஞ்சனி, யாஷ் இருவரும் ஒன்றாகக் கேட்டிருந்தனர்.

“நிதா அப்பாவை திரு அப்பாகிட்ட பையன் கேட்க சொல்லுவோம்” என்றான்.

“அது சரிவராது ஆர்வி” என்ற நிதாஞ்சனி, “இப்போதான் வெண்மதி வைச்சு அவங்க வீட்டில் ஒரு குழப்பம் கிளியர் ஆகியிருக்கு. இந்த நேரம் அப்பா போய் பேசினா, இதுக்காக அவங்க சொந்தம் பிரிய நாங்க காத்திருந்த மாதிரி ஆகிடும்” என்றாள்.

“இதுல இப்படியொரு சிக்கல் இருக்கா?” என்ற ஆர்விக், “என்னைக்கு ஊருக்கு போகணும்?” எனக் கேட்டான்.

“ரெண்டு நாளுல!”

“சரி பார்த்துக்கலாம்” என்ற ஆர்விக், “இங்க சொல்லாம நம்ம மனசு ஒருத்தருக்கு தெரிய வாய்ப்பேயில்லை” என்றான்.

“எஸ்… அதேதான் உனக்கும்” என அவனுடைய காதலுக்குத் தாவியிருந்தாள் நிதாஞ்சனி.

“என்னால லவ் சொல்ல முடியாதுன்னு இல்லை நிதா. என் லவ் எனக்கு புரிஞ்ச அடுத்தநாளே அவகிட்ட என் லவ்வை சொல்ல போயிட்டேன்” என யாஷை பார்த்துக்கொண்டே கூறிய ஆர்விக், “என்னோட சைட் வேற. என் லவ் சேரவே சேராதுன்னு நல்லா தெரிஞ்ச விஷயம். ஆனால் உன்னோடது அப்படியில்லை” என்றான்.

“இந்த காதல் அப்படின்னாலே குழப்பம்தான் போல” என்ற நிதாஞ்சனி, “நான் இப்போ ஓகேதான். வீட்டுக்குப் போகலாம்” என முன் நடந்தாள்.

“அப்போ அன்விக்கிட்ட அவளோட லவ் தெரிஞ்சாலதான் நீ உன்னோட லவ் சொல்லாம இருந்திருக்க… ரைட்?” என்றான் யாஷ்.

“உனக்குத்தான் இது ஏற்கனவே தெரியுமேடா” என்ற ஆர்விக் அடி வைத்திட, அவனின் கையைப் பிடித்து நிறுத்தினான் யாஷ்.

“நீ சொல்லாம விட்டதால் தான் கௌதம் குறுக்க வந்தான்னு நினைச்சேன்” என்றான்.

“இங்க யாரும் யாருக்கும் குறுக்க வர முடியாது. அவங்கவங்க வாழ்க்கைக்கு அவங்கவங்க தான் பொறுப்பு. அதே மாதிரி என்னோட காதல் வலியோட முடியுறதுக்கும் நான் மட்டும் தான் காரணம்” என்றான்.

“ரொம்பத் தெளிவாதாண்டா இருக்க நீ?” என்ற யாஷ், “நிதா பேசும்போது வெண்மதின்னு சொன்னாங்களே, யார் அது?” என்றான்.

‘கெஸ் பண்ணிட்டானோ?’ என நினைத்த ஆர்விக், “ஏன் கேட்கிற?” என்றான்.

“சும்மா… இதுவரை நம்ம சர்க்கிளில் கேட்ட பெயர் மாதிரி இல்லையே” என்றான் யாஷ்.

“ஹோ… வெண்மதி, கௌதம் சிஸ்டர்” என, அன்விதா மூலம் சக்திக்கு திருமணப் பேச்சுவார்த்தை நடந்தது வரை தெரிந்திருந்ததைக் கூறினான்.

“குடும்பமே வில்லங்கம் போல” என யாஷ் கூறிட,

“வெண்மதி அப்படியில்லை” என்றான் ஆர்விக்.

“இருக்கட்டும்” என்ற யாஷ், “நிதா விஷயத்தில் என்ன முடிவு பண்ணியிருக்க?” என்றான்.

“திருக்கிட்ட பேசணும்” என்ற ஆர்விக்கின் பேச்சு காருக்கு அருகில் வந்ததும் நின்றது.

*******************************

“நிதா வந்தாச்சாம்மா?” எனக் கேட்டுக்கொண்டே ஆர்விக் கூடத்து இருக்கையில் அமர்ந்தான்.

“ஃபைவ் ஓ கிளாக் வந்தாள். கொஞ்சநேரம் ரூம்ல இருந்தாள். அப்புறம் மேல போனாள். இன்னும் வரல” என்றவர் அவனின் கையில் தேநீர் குவளையை அளித்தார்.

“அவகிட்ட பேசுனீங்களா?”

“என்ன பேசணும்? அவளா சொல்லாம நாமளும் ஒண்ணும் பண்ண முடியாது ஆர்வி” என்ற அனிதா, “நான் கார்த்திகாகிட்ட பேசலாம் நினைச்சிருக்கேன்” என்றார்.

“நீங்க இன்னும் அவங்ககிட்ட சொல்லலையா? எப்பவோ சொல்லியிருப்பீங்க நினைச்சேன்” என சிரித்த ஆர்விக், “இந்நேரம் திரு அங்க பேசியிருப்பாங்க. நீங்க கார்த்திகா அம்மாகிட்ட பேசுங்க. நான் மேல போயிட்டு வர்றேன்” என எழுந்தான்.

அன்றைய இரவு நிதாஞ்சனி கொடைக்கானலுக்கு கிளம்புவதாக இருந்தது.

பணி முடித்து மாலை வீட்டிற்கு வந்தது முதல் மொட்டைமாடியில் தான் பரந்த வானை வெறித்தவாறு நின்றிருக்கிறாள் நிதாஞ்சனி.

“என்னவாம்?” அவளுக்குத் துணையாக மாடியில் ஒரு ஓரமாக நின்றிருந்த யாஷிடம் கேட்டான் ஆர்விக்.

“தெரியல… நான் செடிங்களுக்கு தண்ணி விடலாம் வந்தப்போவே இப்படித்தான் நின்னுட்டு இருந்தாங்க. என்னன்னு கேட்டேன். பதில் சொல்லவே இல்லை” என்ற யாஷ், “நீ போய் பேசு. நைட்டு ஊருக்கு போறாங்களே! அதைப்பற்றி எதுவும் யோசிக்கிறாங்களா இருக்கும்” என்றான்.

“நிதா.” ஆர்விக் அவளின் அருகில் சென்றிட,

“முடியல ஆர்வி. இங்கிருந்து குதிச்சிட்டா எல்லாம் முடிஞ்சிடும்ல” என்றவளை தீயாய் முறைத்த ஆர்விக், “உனக்கென்ன மூளை குழம்பிடுச்சா?” என்று அவளை இழுத்துக்கொண்டு யாஷ் தங்கியிருக்கும் பகுதிக்கு இழுத்து வந்திருந்தான்.

“ஹேய் ஆர்வி… நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. எதுக்கும் அது தீர்வும் ஆகாதுன்னு எனக்குத் தெரியும்” என்ற நிதாஞ்சனி, “இதுக்கு முன்ன நிறைய முறை பொண்ணு பார்க்க வந்தவங்களை வேணாம் சொல்லியிருக்கேன். இப்பவும் அதையே சொல்ல வேண்டியதுதான். ஆனால இந்த முறை அம்மா சும்மாவிடமாட்டாங்க… அவ்ளோதான். ஆனால் நீ சொன்ன மாதிரி இதையே எவ்ளோ நாளுக்கு சொல்ல முடியும்ன்னு தான் தெரியல” என்றாள்.

ஆர்விக் பதில் எதுவும் சொல்லாது பார்த்திருக்க…

“இங்க சில விஷயங்கள் எதார்த்தத்துக்கும் நிதர்சனத்துக்கும் அப்பாற்பட்டது ஆர்வி” என்று கண்ணில் துளிர்த்த நீரை சுண்டிவிட்டவளாக கீழிறங்கிச் சென்றாள்.

“சக்திக்கிட்ட பேசுறேன் சொன்னியே! பேசுனியாடா?” என ஆர்விக்கிடம் கேட்ட யாஷ், “லவ் அப்படின்னாலே ஏன்டா மூளை வேலை செய்யாதா?” என்றான்.

அவனை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்த ஆர்விக் எதுவும் சொல்லாது கீழ் செல்ல நேரம் விரைந்தோடியது.

லட்சுமணன் முன்தினம் ஊருக்கு கிளம்பிச் சென்றிருக்க, யாஷினை அனிதாவுக்கு துணையாக இருக்குமாறு விட்டுவிட்டு ஆர்விக் தான் நிதாஞ்சனியை பேருந்து நிலையம் அழைத்துச் சென்றான்.

“என்ன சைலண்ட்டா வர?”

பழக ஆரம்பித்த இத்தனை நாட்களில் நிதாஞ்சனியிடம் இப்படியொரு அமைதியை ஆர்விக் கண்டதே இல்லை.

“எப்பவுமில்லாத பயம்… இந்த முறை” என்ற நிதாஞ்சனி, “அவங்க எனக்கில்லையாடா?” என தழுதழுத்தாள்.

“நீ நினைச்சா முடியும்” என ஆர்விக் சொல்ல,

“அவங்கிட்ட சொல்ல என்னால சொல்ல முடியுமாடா?” என்றாள்.

“திரும்பத்திரும்ப இதையே சொல்லாத நிதா… சொன்னா என்னவாகிடும்? என்ன பண்ணிடப்போறாங்க உன்னை” என்ற ஆர்விக், “ஏதாவதொரு முடிவெடுத்துட்டு அதுல ஸ்ட்ராங்கா இரு” என்றதோடு, “திரு வேணும்னா லவ்வை சொல்லு. வேணாம் அப்படின்னா அப்பா பார்த்திருக்க பையனுக்கு நாளைக்கு ஓகே சொல்லு. உன்னையும் குழப்பிக்கிட்டு, அவங்களையும் என்ன ஏதுன்னு உன்னை நினைச்சு கவலைப்பட வச்சிக்கிட்டு எதுக்கு தேவையில்லாத வருத்தம்” என்றான்.

“நான் சொன்னா ஓகே சொல்லுவாங்களா?”

வண்டியை நிறுத்திவிட்டான் ஆர்விக்.

“சொன்னாதான தெரியும்!” என்றவன், “சொல்லணும் நினைச்சா சொல்லிடு” என்றான்.

“கிளம்புற வரை கூட சொல்ல முடியுமான்னு அவங்களை நினைச்சு பயமா இருந்துச்சு. இப்போ சொல்லிப்பார்க்கலாம் தோணுதுடா. சொல்லட்டுமா?” எனக் கேட்டாள்.

“நாளைக்கு பையன் வீட்டிலிருந்து வந்து பார்த்திட்டுப் போயிட்டா, எல்லாமே உன் கைவிட்டு போயிடுங்கிற எண்ணம் உனக்கு வந்தாச்சு. கடைசி படியில் நிக்கிறவன் மனநிலை தான் உனக்கு. அதான் சொல்லிடலாம் நினைக்கிற” என்றான்.

“அடிச்சிடுவாங்களோ?”

“டேய்…” என சிரித்தபடி வண்டியை இயக்கிய ஆர்விக், “உன்னை என்ன பண்ணலாம்?” என்று அவளின் தலையில் தட்டினான்.

“எதுவும் நினைக்காம ஊருக்கு போ!” என்றவன், “எப்போ வர்றாங்களாம்?” எனக் கேட்டான்.

“மதியம் மூணு மணிக்கு மேல வர்றாங்கன்னு அப்பா சொன்னாங்க.”

“சூப்பர்… உனக்கு அப்போ டைம் இருக்கு. திரு எங்க இருப்பாருன்னு நான் கேட்டு சொல்றேன். நீ நேரா பார்த்து சொல்லிடு. அவர் ஒத்துவராதுன்னு நோ சொல்லிட்டா அமைதியா விட்டுடு. நடக்கிறது நடக்கட்டும். அப்பா, அம்மாவாவது ஹேப்பியா ஃபீல் பண்ணுவாங்க. திரு எஸ் சொல்லிட்டா, மத்தது அவரே பார்த்துப்பார்” என ஏதேதோ பேசி அவளுக்கு தைரியம் அளித்து பேருந்தில் அனுப்பி வைத்து…

“உங்க ஆள் கிளம்பியாச்சு” என சக்திக்கு தகவல் அனுப்பினான்.

சக்தியிடமிருந்து சிரிக்கும் பொம்மை பதிலாக வர,

“இந்த சிரிப்பை நிதாகிட்ட காட்டியிருந்தா… நான் இவ்ளோ டயலாக் பேச வேண்டிய அவசியம் வந்திருக்காது” என வருத்தமான பொம்மையுடன் அனுப்பி வைத்தான் ஆர்விக்.

“மாமானுக்காக மச்சான் நிறைய பேசலாம் தப்பில்லை.” சக்தியிடமிருந்து பதில் வர,

“பேசலாமே! இன்னும் நாலு டயலாக் சேர்த்து பேசலாம். ஆனாலும் உங்க லவ்வுல நான் நொந்துட்டேன் போங்க” என்றான் ஆர்விக்.

“பயங்கர குழப்பத்தில் இருக்காளா?”

“ஆமா… அதான் பேசின எல்லாம் சொன்னனே! இனி நீங்களாச்சு… உங்க ஆளாச்சு. வெட்டிங் டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு சொல்லுங்க. வந்து சேருறேன்” என்ற ஆர்விக், “நாளைக்கு அவகிட்ட உங்க வழக்கமான அய்யனார் தோரணையையெல்லாம் காட்டாமா சாக்லெட் பாய் லுக்கில் போய் நில்லுங்க” என்றான்.

“அடேய்… சேட்டை” என்ற சக்தி, “போய் தூங்குடா… குட் நைட்” என சிரிப்போடு அனுப்பி வைத்தான்.

“குட் நைட் மாம்ஸ்” என ஆர்விக்கிடமிருந்து வந்த பதிலில் சக்தியின் அதரம் நீண்டிருந்தது.

தங்கையின் நண்பன் எனும் விதத்தில் ஆர்விக்கை சக்திக்கு நிறையவே பிடிக்கும், அந்த பிடித்தம் இந்த சிலநாளில் அதீதம் பெற்றிருந்தது.

ஆர்விக்கிடம் அதிகம் பேசி பழகிய நாட்கள் இவை… ஆர்விக்கின் மீது பிடித்தத்தை தாண்டி உறவாக நெருக்கம் கொள்ள வைத்திருந்தது.

நிதாஞ்சனியை வைத்து ஆர்விக்கை மச்சானென்று முதலில் அடையாளப்படுத்தியது சக்தி தான். அதனை ஆர்விக்கும் ஏற்றவனாக மாமா என சொல்லப் பழகினான்.

தற்போது அந்த அழைப்பில் அவர்களின் உறவு ஆழம் கொண்டது.

வானம் முழுதாய் விடியல் கொண்டிருக்கவில்லை.

பேருந்திலிருந்து இறங்கிய நிதாஞ்சனி, அங்கு தனக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் அமர்ந்தவாறு நின்றிருந்த சக்தியை எதிர்பார்க்கவில்லை.

‘இவங்க இங்க என்ன பண்றாங்க இந்நேரம்?’ என நினைத்த நிதாஞ்சனி அலைபேசியை எடுத்து ஆர்விக்குக்கு அழைத்தாள்.

“போயிட்டியா நிதா?”

“ம்ம் இப்போதான் பஸ் நின்னுச்சு. இறங்கிட்டேன்” என்ற நிதாஞ்சனி, “அவங்க நிக்கிறாங்கடா” என்றாள்.

“எவுங்க?”

“ஆர்வி…”

“ஓ… உங்க அவங்களா?” என்ற ஆர்விக், “இப்போ அதுக்கென்ன?” என்றான்.

“நான் போய் பேசிடவா?”

“ம்ம்… கிட்ட போனதும் லவ் யூ சொல்லிடு” என அவள் மறுத்து பேசுவதற்கு முன்பு அழைப்பைத் துண்டித்திருந்தான்.

“டேய்… டேய்… ஆர்வி” என்றவள், வண்டியில் அமர்ந்தவாறு மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு தன்னையே பார்த்திருந்த சக்தியின் நேர்ப்பார்வையில் பதற்றம் கொண்டிருந்தாள்.

ஆர்விக்கிடம் தைரியமாக சொல்லிவிட்டால், காதலை சொல்கிறேனென்று, ஆனால் தற்போது சக்தி நேருக்கு நேர் நின்றிருக்க பயம் முன் வந்து நின்றது.

“கடவுளே” என மேல்நோக்கிப் பார்த்தவள், சக்தியை பார்த்தும் பார்க்காததைப்போன்று, மெல்ல அவனை நோக்கி அடி வைத்தாள்.

இன்று புதிதாக சக்தி தன்னை பார்ப்பதை அவள் ஏனென்று யோசிக்கத் தவறியிருந்தாள்.

ஆர்விக் பேசிய பேச்செல்லாம் மனதில் உருப்போட்டபடி இல்லாத தைரியத்தை வரவழைத்தவளாக சக்தியை நோக்கி சென்றவள், அவனை நெருங்கிவிட இன்னும் சில அடிகளே இருந்தது.

“அச்சோ நிதா உன்னால முடியாது” என அப்படியே பக்கவாட்டில் அடி வைத்து திரும்பிட,

“ஓய் பப்ளிமாஸ்” எனக் கேட்ட சக்தியின் குரலில் மூச்சு விடவும் மறந்தவளாக அதிர்ந்து உறைந்து நின்றிருந்தாள்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 57

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
48
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஆர்விக் கலக்குகிறான்.