
காலை கனவு 33
சுகவனத்திடமிருந்து அழைப்பு வரவும் நிதாஞ்சனி இந்நேரத்தில் எதற்கென்ற யோசனையில் தான் ஏற்றிருந்தாள்.
“அப்பா…!”
“ஆபிஸில் இருக்கியா கண்ணு?”
“ஆமாங்கப்பா! செக்கென்ட் ஷிஃப்ட் இந்த வாரம்” என்றாள்.
“ஓ… சரிம்மா. நீ காலையில கூப்பிடு” என்று சுகவனம் கூற,
“என்னன்னு சொல்லுங்கப்பா. இப்போ ஃப்ரீ தான் ப்பா” என்றாள்.
“இந்த வாரம் வர முடியுமாம்மா?” எனக் கேட்டார்.
அவர் அவ்வாறு கேட்டதுமே அவளுக்குள் படபடப்பு. பையன் வீட்டிலிருந்து வருகிறார்கள் என சொல்லிவிடுவாரென்ற பயம்.
“வரணுமாப்பா?” நலிந்து ஒலித்தது அவளின் குரல்.
“ஆமா கண்ணு! பையன் வீட்டிலிருந்து வரேன் சொல்லியிருக்காங்க. இந்த இடம் ரொம்ப பிடிச்சிருக்கு. முடிஞ்சிடும் மனசுல படுது. ஒருவகையில உன் அம்மாவுக்கு உறவாவுது” என்றார்.
தந்தைக்கு பதில் சொல்ல முடியாது தவித்திருந்தாள் நிதாஞ்சனி.
“அப்பா…” விவரிக்க முடியா தவிப்பின் ஓசையாய் அவளின் குரல்.
ஒவ்வொரு முறையும் பையன் வீட்டிலிருந்து வருகிறார்கள் என்றால், எப்படியும் இந்த சம்மந்தம் கைசேராது எனும் நம்பிக்கை அவளுள் தானாக எழுந்து ஓர் நம்பிக்கையை அளித்திடும். இல்லையென்றால் இவள் வேண்டாமென்பதைப்போன்று மெல்ல தயங்கினாலும், சுகவனம் வேண்டாமெனக் கூறிவிடுவார்.
அதற்கே கார்த்திகாதான் அதிகத்துக்கும் புலம்புவார்.
“அவள் வேணாம் வேணாம் சொல்றாள். நீங்களும் சரி சரின்னு போயி வயசும் போவுது. இப்போவே ஏன் இத்தனை வயசு வரைக்கும் வீட்ல வைச்சிருக்கீங்கன்னு ஊர்லயும், வர பையன் வீட்லயும் ஏதோ உள் காரணம் இருக்குமோன்னு சந்தேகமா கேட்க ஆரம்பிச்சிட்டாங்க” என்று போனமுறை வந்த பையனை நிதாஞ்சனி அவர்கள் முன்பே, “எனக்கு ரெண்டு பேருக்குள்ளவும் ஒத்துவரும் தோணல” என்று சொல்லியதற்கு ஆடி தீர்த்திருந்தார்.
இந்தமுறையும் இதே என்றால் நிச்சயம் தன்னுடைய அன்னை சும்மா இருக்கமாட்டாரென்று யோசித்தவளுக்கு அழுத்தமாக மறுப்பை சொல்லவும் முடியவில்லை.
பெற்றவர்களாக அவர்களின் ஆசையையும், ஏற்பாட்டையும் மறுக்க முடியாத இடத்தில் அவள்.
நிதாஞ்சனி பதில் சொல்லாதிருக்கவே,
“இதுவரை வந்த இடமெல்லாம் ஏதோ ஒண்ணு சரியில்லைன்னு எனக்குமே எண்ணம். ஆனால் இந்த இடம் ரொம்ப நல்ல இடமா படுது நிதா. பையன்கிட்ட நேர்ல பார்த்துப்பேசி முடிவு பண்ணுடா. இப்படி பாக்குறதுக்கு முன்னவே முடியாதுன்னு முடிவெடுத்தா உன் அம்மா என்னை ஒருவழி பண்ணிடுவாள்” என்றார் சுகவனம்.
“அப்பா…”
“உனக்கு கல்யாணத்துல விருப்பமில்லையாம்மா?”
தொடர்ந்து மறுத்துக்கொண்டே வர அவருக்கும் இப்படி எண்ணத் தோன்றுவது இயல்புதானே!
“அப்படி… அப்படியில்லப்பா” என்றவள், “மனசுக்கு பிடிக்கணுமேப்பா” என்றாள்.
“அப்போ உனக்கு யாரையும் பிடிச்சிருக்காடா?”
“அப்பா??”
“அப்படியிருந்தாலும் அப்பா உன் விருப்பத்துக்கு தடையா இருக்கமாட்டேன் நிதா” என்றார்.
சக்தியின் மனம், அவனது பதில் என்னவென்று தெரியாது தந்தையிடத்தில் தனது மனதை சொல்ல முடியவில்லை அவளால்.
எப்படி அவன் மீது இந்த உணர்வு அந்த வயதில் வந்ததென்றும் அவளே அறியாதது.
அன்று சக்தி தலையில் கொட்டி, “இங்கெல்லாம் பழம் பறிக்கக்கூடாது” என்று சொல்லியிருந்தால், அவனின் முறைப்புக்கும் கோபத்துக்கும் அவன் பக்கமே திரும்பாது இருந்திருப்பாளோ என்னவோ?
ஆனால் அவன், அவளிடம் காட்டிய அமைதி, பொறுமையாக அவள் கூறிய காரணங்களை கேட்டது, அவளுக்கான தேவை உணர்ந்து உதவி செய்தது, இறுதியாக அவளுக்கு வேண்டியதை அவனே எடுத்துக் கொடுத்தது. அதில் தான் அவன் தன்னுடைய தோழியர் சொல்வதைபோன்று கடுமையானவன் இல்லையென்பதை தெரிந்துகொண்டாள்.
அத்தோடு அவளின் செயல்களில் அவன் சிதறிய சிரிப்பில் ஒருவகை ஈர்ப்பிற்குள் ஆட்பட்டாள். மீண்டும் ஒருமுறை அவனின் அந்த சிரிப்பை பார்த்திட வேண்டுமென்ற மனதின் ஆசை. அதற்காகவே அவனை கவனிக்க ஆரம்பித்தாள். அந்த கவனித்தல் தன்னைப்போல் அவனை ரசிக்க வைத்தது. அவனுள் நேசம் கொள்ளச் செய்தது. அந்த நேசத்தின் பிறப்பு அவளே அறியாதது.
ஆறுமாதங்கள் ஓடிய வேகமே தெரியவில்லை. சக்தி இறுதித்தேர்வு முடிந்து பள்ளி வருவது நின்றிட, அவனை காணாத நாட்கள் ஒருவித வெறுமையை கொடுப்பதை உணர்ந்திட்டாள். அவனுக்கான தேடல் நிறைந்த நாட்கள் அவை. ஆனால் அதுதான் காதலென உணரும் வயதும் பக்குவமுமின்றி நாட்களை அந்த வெறுமையோடு கழிக்க பழகிக்கொண்டாள்.
என்றேனும் சக்தியை அவனது தோட்டத்திலோ அல்லது தன்னுடைய வீட்டை கடந்து அவன் செல்கையிலோ பார்க்க நேரிடும்போது ஒட்டு மொத்த சந்தோஷமும் அக்கணம் மனதை நிரப்புவதில் குதுகளித்து மகிழ்வாள்.
சக்தியின் பொதுத்தேர்வு முடிவுக்குப் பின்பு அவன் தோட்டத்திற்கு வருவதும் நின்றுப்போக, காரணம் அறியாது கழிந்த நாட்கள் பெரும் அவஸ்தையாய்.
விடுமுறை முடிந்து பள்ளி திறந்த அன்று பள்ளிக்குச் சென்றவள், நேராக தன்னுடைய வகுப்பிற்கு செல்லாது அன்விதாவின் வகுப்பிற்குத்தான் சென்றிருந்தாள்.
ஒன்பதாம் வகுப்பான அன்விதா தன்னுடைய வகுப்பில் நிதாஞ்சனியை கண்டதும்,
“ஹாய் அக்கா” என்று அவள் அழைக்குமுன் தானே சென்று பேசிட, எப்படி என்ன பேசுவதென்று வந்தவளுக்கு மெல்லிய ஆசுவாசம்.
“ஹாய் அன்வி” என்ற நிதாஞ்சனி பேச்சினூடே சக்தியைப் பற்றி அறிந்துகொண்டாள்.
“சென்னையில… அவ்வளவு தூரம் போய் ஏன் படிக்கணும்?” நிதாஞ்சனி அவனை பார்க்க முடியவில்லையே எனும் கடுப்போடு கேட்டிருந்தாள்.
“அண்ணா சாய்ஸ் தான்க்கா. அண்ணா கேட்டுட்டா அதுக்கு வீட்ல மறுப்பே இருக்காது. அப்பாவே அண்ணா சொல்றதைதான் கேட்பாங்க” என அன்விதா சொல்லிட,
“வீட்லயும் டெரர்ரா உன் அண்ணன்?”
“அண்ணா ரொம்பவே ஸ்வீட்… அண்ணாவோட ஸ்பேஸ் எல்லாம் வீட்டு ஆட்களிடம் தான்” என்றாள் அன்விதா.
‘ஸ்வீட்ன்னு எனக்கும் தெரியுமே!’ மனதில் மட்டுமே சொல்லிக்கொண்டாள். அன்றைய நாள் நினைவில்.
அன்விதாவிடம் பேசிவிட்டு வகுப்பிற்கு வந்த பின்னரே,
“அவங்களைப்பற்றி நீ ஏன் தெரிஞ்சுக்கணும் நிதா?” என தலையில் தட்டிக்கொண்டாள். இருப்பினும் அன்விதாவுடன் நேரம் கழிக்கத் தொடங்கியிருந்தாள்.
அதன் பின்னான நாட்கள் இருவருக்கும் ஒன்றாக பள்ளிக்கு வருவது போவதென முன்பிருந்த உறவு மேலும் நெருக்கம் கொண்டது.
நிதாஞ்சனி கேட்காமலே அன்விதாவும் தன்னைப்போல் சக்தியின் தகவல்களை அவளுக்கு வழங்கிக் கொண்டிருந்தாள்.
அந்த வருடம் முடிய கல்லூரி படிப்பு குறித்து சுகவனம் பேசிட…
சற்றும் யோசியாது சென்னையில் சக்தி படிக்கும் கல்லூரியின் பெயரைச் சொல்லியிருந்தாள்.
அவனைப் பார்த்துக்கொண்டே இருக்கும் வாய்ப்பாக அவளின் மனம் நினைக்கவே, தன்னுடைய காதலை உணர்ந்தாள்.
‘இதுதான் காதலா?’ தனக்குத்தானே கேட்டு வெட்கம் கொண்டு புன்னகைத்ததெல்லாம் அவளின் அறை கண்ணாடி மட்டுமே அறிந்தது.
சக்திக்காகவே அக்கல்லூரிக்கு வந்திருந்தாலும் படிப்பில் கவனமாகவே இருந்தாள். முதல் மாணவி என்பதாலே அனிதாவிடம் நெருக்கம்கொள்ள வாய்ப்புக்கிடைத்தது.
நிதாஞ்சனி இரண்டாம் வருடம் படிக்கையில்… கேண்டீனில் ஒரு பெண் சக்தியிடம் காதலை சொல்வதை கண்டவள்… சக்தி அப்பெண்ணுக்கு மறுப்புத் தெரிவித்திருந்தாலும், தன்னைப்போல் மனதில் ஒருவித அலைப்புறுதல் சூழவே அன்றே அவனிடம் தன்னுடைய மனதை சொல்ல நினைத்தாள்.
ஆனால் நேரில் சென்று சொல்லிட துளியும் தைரியமில்லை. அந்த தைரியம் இருந்திருந்தால், அவனுக்காக அக்கல்லூரிக்கு வந்த அன்றே அவனிடம் தன்னுடைய மனதையும் சொல்லியிருப்பாளே!
எப்படி சொல்லலாமென தீவிர யோசனைக்குப் பின்னர்…
“இது சக்தி நெம்பர் நிதா. அவ்வளவு தொலைவில் படிக்கப்போற. எதாவதுன்னா சக்தி இருக்கான். பார்த்துப்பான்னு கதிர் சொன்னதாலதான் உன்னை அங்கு படிக்க அனுப்புறேன். அதுக்காக சக்திக்கு தொல்லையாவும் இருந்திடக்கூடாது. முடியாத சூழ்நிலை அப்படின்னா தம்பிக்கிட்ட உதவி கேளு” என்று அவளை கல்லூரியில் விட்ட தினமே சக்தியின் அலைபேசி எண்ணை சுகவனம் கொடுத்திருந்தார்.
அன்று அலைபேசியில் சேமிக்காது இதயத்தில் சேமித்த எண்ணை இன்று அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதற்காக அலைபேசியில் பதிந்தாள்.
எண்ணை சேமித்ததும் அவனது முகப்புப் படத்தை திறந்துப் பார்த்தாள்.
ஆய்வுக்கூடத்தில் தொழில் கருவிகளோடு அவனிருக்கும் புகைப்படம்…
“போஸ் பலமாதான் இருக்கு. என் காதலுக்கு என்ன ரியாக்ஷன் வரும் தெரியலையே” என அனைத்து கடவுள்களையும் மனதில் நினைத்தவளாக, ஒருவித பதற்றத்துடன்…
“என்னை உங்களுக்கு புரியுதுதான?” என முன்னுரை, விளக்கவுரை எதுவுமின்றி அனுப்பி வைத்த பின்னரே,
“நான் யாருன்னே சொல்லாம… லூசு நிதா” என நெற்றியில் தட்டிக்கொண்டவளாக, “நான் நிதாஞ்சனி” என அனுப்பி வைத்தாள்.
சில நொடிகளுக்கு முன்னால் அனுப்பி வைத்த தகவல் அவனால் பார்க்கப்பட்டிருக்க, தற்போது அனுப்பியது ஒற்றைக் குறியோடு நின்றது.
“ஆஃப்லைன் போயிட்டாங்களா?” என்றவள் ஆராய, முகப்புப்படமும், அபௌட் கேப்ஷனும் இல்லாது இருக்கவே அவன் தன்னுடைய எண்ணை பிளாக் செய்தது புரிந்தது.
அந்நேரம் அவள் எவ்விதமான உணர்வுக்குள் ஆட்பட்டாளென்று அவளே முழுதாய் உணராதவை.
மூச்சடைக்கும் உணர்வு. இதயத்தின் துடிப்பு பாய்ந்தோடும் ரணம். புதிதாய் நெஞ்சம் அறியும் வலி. அதிலிருந்து எப்படி வெளிவர வேண்டுமென்றும் தெரியாது தவிப்போடும், சக்தியை பார்க்கும் நேரங்களில் அதிகரிக்கும் ஏக்கத்தோடு நகர்ந்த நாட்கள் அவை.
அதன் பின்னர் அனிதாவின் தேற்றுதலால்… மெல்ல மெல்ல காதலை சொல்லக்கூட அனுமதிக்காத அவன் கொடுத்த வலியோடு நாட்களை கடக்கப் பழகியவளுக்கு வருடங்கள் பல சென்றதுதான் விந்தை.
இன்னமும் எப்படி தான் இவ்வலியோடு இத்தனை தூரம் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதே அவளுக்குள் இருக்கும் விடையறியா பெரும் கேள்வியாகும்.
படிப்பு முடிந்து திருமணமென கார்த்திகா எடுத்தப் பேச்சினை,
“ரெண்டு வருஷமாவது வேலைக்குப் போகணும். எனக்கு வேலை கிடைச்சிருக்கு” என்று சொல்லித் தடுத்திருந்தாள்.
அவள் கேட்டுக்கொண்டதற்காக சுகவனம் இரண்டு வருடங்களுக்கு அவளின் திருமணம் குறித்து கார்த்திகாவை பேசக்கூட அனுமதிக்கவில்லை.
அதில் நிம்மதியாக இருந்த நிதாஞ்சனி கடந்த இரண்டு வருடங்களாக சுகவனம் தன்னுடைய திருமணம் குறித்து பேசுவதில் துவண்டிருந்தாள்.
எப்போதும் அவளின் மறுப்பிற்கு சம்மதித்து “அடுத்து பார்ப்போம்” என்பவர் இப்போது சரிசொல்ல வேண்டுமென்பதைப்போல் முடிவை கேட்கவும், என்ன சொல்வதென்று தெரியாது குழப்பமும் கலக்கமும் கொண்டாள்.
“அம்மாடி.”
நிதாஞ்சனி பதில் சொல்லாதிருக்கவும், மகள் திருமணமே வேண்டாமென்று இருக்கிறாளோ என்று கவலையோடு அவளை அழைத்திருந்தார்.
“அப்பா…”
மகளின் அடைத்தக் குரலில் என்ன உணர்ந்தாரோ?
“உன் முடிவு தான்டா! உன்னை நீ கஷ்டப்படுத்திக்காத. உன் முடிவு எதுவாயிருந்தாலும் அப்பா அதுக்கு சம்மதிக்கிறேன். ஆனாலும் ஒரு சராசரி அப்பாவா நீ சரின்னு சொல்லனும்னு தான் மனசு நினைக்குது” எனக்கூறி,
“பார்த்து பத்திரமா இரும்மா” என்று வைத்திருந்தார்.
அனிதாவுக்கு உடல்நிலை சீர்கேடு அடைந்த தினம், யாஷ் ஆர்விக்கிடம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், பெற்றோர் பக்கம் யோசிக்காதவற்றை நிதாஞ்சனியை யோசிக்க வைத்திருக்க, முன்னர் போன்று சட்டென்று அவளால் தன்னுடைய மறுப்பை சொல்ல முடியவில்லை.
‘இருக்கா இல்லையா என்று நிலையான முடிவு தெரியாத காதலுக்காக தனது பெற்றோரின் ஆசையை குலைக்கின்றோமோ?’ என நினைத்தவள், இமை தாண்டிய துளி நீரை அருகிலிருக்கும் சுசி காணும் முன்பு வேகமாகத் துடைத்துக்கொண்டு, மேசையில் கவிழ்ந்திட்டாள்.
மனதில் பள்ளி வயது சக்தியின் சிரித்த முகமும், ஆர்விக்கின் வீட்டில் மாடிப்படியில் நொடிநேரம் அழுத்தமாக தன்னைப் பார்த்து நின்ற சக்தியின் தோற்றமும் மாற்றி மாற்றித் தோன்றி அவளின் காதல் நெஞ்சத்தை அழுத்தியது.
இதயத்தின் வலியை யாரிடமாவது பகிர வேண்டுமென நினைத்தவளுக்கு ஆர்விக் தான் கண்முன் வந்து போனான்.
அவனிடம் பேச வேண்டுமென எண்ணம் எழ,
“ஆர்வி” என புலனம் வழி அவனை அழைத்திருந்தாள்.
நள்ளிரவு கடந்த வேளை, அவன் உறங்கியிருப்பான் என்பதெல்லாம் அவளின் கருத்தில் இல்லை.
மேசையில் கவிழ்ந்திருந்தவள் வதையோடு நேரத்தை நகர்த்திட,
“டைம் ஆகிடுச்சு நிதா” என சுசி அவளைத் தட்டினாள்.
நேரம் முன் அதிகாலை மூன்றாகியிருந்தது.
“கவனிக்கல.”
“லாஸ்ட் கேப் மிஸ் பண்ணிட்டா கஷ்டம்… வா!” என நிதாஞ்சனியையும் இழுத்துக்கொண்டு அலுவலகம் விட்டு வெளியில் வந்தாள் சுசி.
“நேத்து உன்னை டிராப் பண்ணவங்க நிக்கிறாங்க நிதா” என சுசி கூற, தரையை பார்த்தபடி வந்து கொண்டிருந்த நிதாஞ்சனி யாரெனப் பார்க்க…
காரின் மீது சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டு அவளை எதிர்நோக்கி காத்திருந்தான் ஆர்விக்.
“யாருடி அவங்க. நேத்தே கேட்கணும் நினைச்சேன்” என்று சுசி சொல்ல…
“என்னோட பிரதர்… தம்பி” என நெகிழ்வாய் கூறியிருந்தாள்.
“சொல்லவே இல்லை. உனக்கு இவ்வளவு ஹேன்ட்சமான பிரதரா? இன்ட்ரோ கொடு நிதா” என்றாள்.
“உன்னைவிட யங்கர் டி…”
“சோ, வாட்? சைட் அடிக்க வயசா முக்கியம்?” என்ற சுசி, அவளுக்கான அலுவலக கேப் வந்து நிற்கவும், “நாளைக்கு கண்டிப்பா இன்ட்ரோ கொடுக்கணும்” என விடைபெற்றிருந்தாள்.
சில அடிகள் இடைவெளியில் நின்றிருந்தாலும் ஆர்விக் நிதாஞ்சனியின் சிவந்த விழிகளை கண்டுகொண்டிருந்தான்.
அதுவரை கட்டுப்படுத்தியிருந்த நிதாஞ்சனியின் தவிப்புகள் மேலெழும்பிட,
“ஆர்வி” என்றழைப்போடு அவனருகில் வேகமாகச் சென்று அவனது தோள் சாய்ந்திருந்தாள்.
“அழுதியா நிதா?”
கேட்டவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
அர்த்தம்கொள்ளா தன்னுடைய ஒற்றை அழைப்புக்கு தன் மனமறிந்து தானிருக்குமிடம் வந்தது மட்டுமல்லாது, தனது உணர்வுகளையும் கவனித்துக் கேட்பவனை இடையோடு கையிட்டு பக்கவாட்டில் அணைத்திருந்தாள்.
“என்னாச்சுடா?” அதுவரை காருக்குள்ளே இருந்த யாஷ் கீழிறங்கி வந்தான்.
ஆர்விக் நிதாஞ்சனியின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தபடி, யாஷிடம் கண்களை மூடித்திறந்தான்.
“எனக்காகவா? எதுக்கு வந்த?”
“உனக்காகலாம் இல்லை. தூக்கம் வரல. டிரைவ் போலாம் வந்தோம். உன் ஆபீஸ் க்ராஸ் பண்ணோம். சரி உனக்கு ஹாய் சொல்லலாம் நின்னோம்” என்று ஆர்விக் சொல்ல…
“பொய் சொல்றான். நீங்க எதோ டிஸ்டர்ப்டா இருக்கீங்க… பார்க்கணும் சொல்லித்தான் கிளம்பினான்” என்றான் யாஷ்.
“நிஜமாவா?” யாஷ் சொல்லாமலே ஆர்விக் தன்னைத்தேடி வந்தது ஏனென்று புரிந்துகொண்டபோதும் கேட்டிருந்தாள்.
“யூ ஆர் மை சிஸ்டர் நிதா. உனக்கு பேசணும் தோணுச்சுன்னா, பேசணும்டா… வான்னு சொன்னா வரப்போறேன். அதுக்கெதுக்கு திருக்கிட்ட தயங்குற மாதிரியே என்கிட்டவும் தயங்குற” என்றவன்,
“திருக்கிட்ட பேசணுமாடா?” என அவளின் தவிப்பறிந்துக் கேட்டிருந்தான் ஆர்விக்.
சட்டென்று அவனிடமிருந்து பிரிந்து நின்ற நிதாஞ்சனி,
“ஒரு லாங் டிரைவ் போலாமா?” எனக் கேட்டாள்.
“போலாமே!” என யாஷ் சொல்ல,
“நான்தான் டிரைவ் பண்ணுவேன்” என்றாள்.
“அப்போ நான் வரல” என உடனடியாக சொல்லியிருந்தான் யாஷ்.
“ஏய்…” என்ற நிதாஞ்சனி, “நான் நல்லாவே டிரைவ் பண்ணுவேன்” என ஓட்டுநர் இருக்கையில் சென்றமர்ந்தாள்.
“எதோ ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்றாள் யாஷ். டிரைவ் பண்ணட்டும்” என முன்னிருக்கையில் ஆர்விக் அமர, யாஷ் பின்னால் ஏறினான்.
“நீதான் முன்னாடி இருக்க… பார்த்துக்கோடா” என யாஷ் சொல்ல,
“இப்போவே உன்னை உருட்டித் தள்ளிடுவேன்” என்று கண்ணாடி வழி மிரட்டினாள் நிதாஞ்சனி.
“நான் இப்படியே படுத்து தூங்குறேன். வீடு வந்துட்டா மட்டும் எழுப்புங்க… இவ்வளவு நேரம் வராத தூக்கம் இப்போ வருது” என்று யாஷ் கண்களை மூடிக்கொண்டான்.
குளிரூட்டியை அணைத்துவிட்டு, சன்னலை திறந்து வைத்து மிதமான வேகத்தில் கார் செல்லத் துவங்கியது.
குளிர்ந்த காற்றுக்கு நடுவில் பயணிப்பதே மனதை அமைதிப்படுத்துவதைப் போலிருந்தது.
ஆர்விக் பாடலை ஒலிக்கவிட, இருவரும் நிதாஞ்சனியின் காதலை தவிர்த்து பல கதைகள் பேசினர்.
நகரத்தைத்தாண்டி பல மைல்கள் தூரம் வந்திருந்தனர். இருள் பிரியத் துவங்கியது. மனதும் நிலைகொண்டதை உணர்ந்தவள் சாலையின் ஓரம் வண்டியை நிறுத்தியிருந்தாள்.
நிதாஞ்சனி கீழிறங்கிட பின்னால் உறங்கிக்கொண்டிருந்த யாஷை பார்த்துவிட்டு ஆர்விக்கும் இறங்கியிருந்தான்.
அவர்களுக்கு முன் பச்சை வர்ண வயல்களும், ஒற்றை மலையும், எழத்துடிக்கும் வெய்யோனின் கதிருமாக ரம்மியமான விடியல் காட்சிக் கொண்டிருந்தது.
“பிளஸன்ட் மார்னிங்…” என ஆர்விக் சொல்லிட,
“இப்படியே நடக்கலாமா ஆர்வி” என்றவள், அவனின் தலையசைப்பில் இணைந்து நடந்தனர்.
ஆர்விக் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவனிடம் அனைத்தும் பகிர்ந்திருந்தாள்.
சொல்லுமிடத்தில் அவள். கேட்குமிடத்தில் அவன்.
பெற்றோருக்கு அடுத்து ஒரு பெண்ணிற்கு பெற்றவர்கள் இடத்தை நிரப்புவது உடன்பிறந்தவர்களாகத்தான் இருக்கும். அந்த உணர்வு இருவருக்கும் இயல்பாய் வந்திருந்தது.
ஆதலால் எவ்வித எல்லையுமின்றி தன்னுடைய காதல் நிகழ்வுகளை ஆர்விக்கிடம் நிதாஞ்சனி சொல்லிட, ஆர்விக்கும் எந்தவொரு குறுக்கிடும் செய்யாது அனைத்தும் கேட்டுக்கொண்டான்.
சுகவனம் அழைத்து பேசியதெல்லாம் கூறியிருந்தாள்.
“இப்போ என்ன பண்ணனும்டா?” கேட்டவளை ஆழ்ந்துப் பார்த்த ஆர்விக்…
“நீ எந்தவொரு முடிவும் எடுக்கிறதுக்கு முன்ன திருகிட்ட ஒருமுறை ஒரே முறை பேசு நிதா… உன் காதலை சொல்லிப்பாரு” என்றான்.
சக்திக்கு நிதாஞ்சனியின் காதல் தெரியும். அவனும் அவளை விரும்புகிறான். இருந்தும் அவன் அவளாக சொல்ல வேண்டுமென்று அவன் காத்திருக்கின்றானோ எனும் எண்ணம் ஆர்விக்கிடம். சக்தியின் அமைதி இதுவாகத்தான் இருக்குமென்று ஆர்விக்கை நினைக்க வைத்திருக்க, நிதாஞ்சனியிடம் காதலை சொல்லுமாறு கூறினான்.
“நிறையவே லவ் பண்றேன் ஆர்வி. ஆனால் அதை சொல்ல மட்டும் வரவே மாட்டேங்குது” என்றாள் நிதாஞ்சனி.
“அன்னைக்கு திரு உன்னை பிளாக் பண்ணது… அது ஒரு மாதிரி பயத்தைக் கொடுத்திருச்சு நிதா. கண்டிப்பா உன்னோட புரொபோசலுக்கு திரு நோ தான் சொல்லுவாருன்னு உன் மனசு அழுத்தமா நம்புது. அதனால் தான் உன்னால சொல்ல முடியல” என்று சரியாக அவளின் காதல் சொல்லா நிலையை கண்டறிந்து பேசினான் ஆர்விக்.
“அதெல்லாம் மறந்திடு… இதுவரை உன் லவ்வை நீ திருக்கிட்ட எக்ஸ்பிரஸ் பண்ணதே இல்லைன்னு நினை. புதுசா, முதல்முறை உன் லவ் சொல்லப்போறதா நினைச்சு திருக்கிட்ட பேசு” என்றான்.
“என்னால முடியும்னு தோணல” என்ற நிதாஞ்சனி, “அப்பா, அம்மாவை ரொம்பவே கஷ்டப்படுத்துறேன் ஆர்வி” என கைகளால் முகம் மூடி அழுதிட, அவளை தோளோடு சாய்த்துக் கொண்டான்.
“ஓகே… ஓகே… ரிலாக்ஸ்” என்று அவளின் கண்களை துடைத்தவன், “உன்னோட முடிவு என்ன?” எனக் கேட்டான்.
“உன்னை மாதிரியே நானும் இந்த லவ்வில் காலம் முழுக்க வலி சுமக்கணும் போலடா” என்று கண்ணீர் நிறைந்த அவளின் விழிகளை ஆழ்ந்து நோக்கிய ஆர்விக் மென் முறுவல் சிந்தினான்.
“EVEN THE LOUDEST HEARTS NEED QUIET LISTENER.”
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
45
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


ஆர்விக் lovefoul person.