
காலை கனவு 32
‘ஒயிட் மூன்.’
யாராக இருக்குமென்ற எண்ணம் யாஷிடம்.
ஆர்விக் சொல்லும்போது கூட அவனுள் எவ்வித யோசனையுமில்லை.
அது ஆணா, பெண்ணா என்று தெரியாத போதும், அன்விதாவின் திரையில் தெரிந்த அப்பெயரில் அவனிடம் சிறு குறுகுறுப்பு.
அதற்கு பின்னர் வேலையென மூழ்கினாலும், வீட்டிற்கு வந்தது முதல் ஆர்விக், “இங்க பாருடா” என மடிக்கணினி திரையை காண்பித்த கணம் மனதில் வந்து செல்கிறது.
தற்போது அவனிடத்திலும், தன்னை இத்தனை ஆழமாக கவனிக்கும் ஆள் யாரென கவனிக்கத் தோன்றியது.
அன்விதாவின் படவரி கணக்கினை திறந்து, ஒயிட் மூன் கணக்கிற்குள் நுழைந்தான். அந்த கணக்கு இவர்களது இவன்ட் கணக்கு மற்றும் மேலும் இவனோடு சேர்த்து மொத்தத்திற்கே ஆறேழு கணக்குகளை தான் பின்பற்றியிருந்தாள். அவளை பின் தொடர்புவர்களில் யாஷுக்கு தெரிந்த மூன்று நபர்கள்.
யாராக இருக்கும் என்ற யோசனை வலுத்தது. தேடலின் பதில் யாரென்று அறிந்துகொள்ள உந்தியது. தெரிந்துகொள்ளத்தான் முடியவில்லை.
அதில் ஒற்றை பதிவு கூட இல்லை.
“இதுக்கெதுக்கு அக்கவுண்ட்” என சலிப்பாக எண்ணியவன் அலைபேசியை மெத்தையில் தூக்கிப்போட…
“இன்னும் தூங்காம என்னடா பண்ற?” என்று உள் நுழைந்தான் ஆர்விக்.
“நீ இப்போதான் வர்றியா?”
“ஆமா… அன்வியோட டீ டைம். லைட் எரியவும் நீ தூங்கலன்னு வந்தேன்” என்ற ஆர்விக், என்ன பேசினோம் என்பதையெல்லாம் சொல்லவில்லை.
ஆனால், “இப்போதான் ஒரு மாதிரி ரிலாக்ஸ்டா இருக்குடா” என்றான்.
“ஹ்ம்ம்” என்ற யாஷின் குழப்ப முகம் ஆர்விக்கை யோசிக்க வைத்தது.
“என்னடா எதுவும் பிராப்ளமா?” ஆர்விக் அவ்வாறு கேட்டதும் யாஷ் மறைக்காது தன்னுடைய மனதை வெளிப்படுத்தினான்.
“அந்த ஒயிட் மூன் யாருன்னு தெரிஞ்சுக்கணும் மச்சி” என்ற யாஷை, விழிகள் உயர்த்தி புருவ நெளிவோடு பார்த்தான் ஆர்விக்.
“ஹேய்… எதுவும் நினைச்சிடாத” என்று வேகமாக சொல்லிய யாஷ்,
“எனக்கு யாருடா இப்படியொரு ஃபேன் அப்படின்னு தெரிஞ்சிக்கத் தோணுது… அவ்ளோதான்” என்றான்.
“ஹோ…”
“அடேய்… நம்புடா!”
“நம்பிடுவோம்” என்ற ஆர்விக், “அப்படியே விடு. உனக்கு அவங்க யாருன்னு தெரியணுமிருந்தா, கண்டிப்பா தெரியவரும்” என்றான்.
“ஹ்ம்ம்… அந்த ஐடியை அன்வி ஃபாலோ பேக் பண்ணியிருக்காள். சக்தி, கௌதமும். ஒருவேளை அன்வி ரிலேட்டிவ்வா இருக்குமா?” எனக் கேட்டான் யாஷ்.
சட்டென்று அது யாராக இருக்குமென்ற கணிப்பு ஆர்விக்கிடம். யாரென கண்டுகொண்ட பாவம். இருப்பினும் முழுமையாக உறுதியாக தெரியாது யாஷிடம் சொல்ல வேண்டாமென நினைத்தான்.
“ஒரு ஹார்ட் விட்டதுக்காடா இவ்வளவு யோசிக்கிற?” என யாஷின் அந்நேர மனதை மாற்ற முயற்சித்தான் ஆர்விக்.
“ஒரு ஹார்ட் இல்லை… என் இன்ஸ்டா பேஜ் முழுக்க அவங்க ஹார்ட்டா தான் இருக்கு” என்ற யாஷ், “ஹார்ட் விட்டதால தான்டா இவ்வளவு ரிசர்ச்” என்றான்.
“ஒருத்தங்களை நமக்கு பிடிச்சா, நம்ம பிடிப்போட அளவை இப்படித்தான சின்ன சின்ன விஷயங்களில் காட்டுவோம்” என ஆர்விக் சொல்ல…
“அப்படி நம்மளை லைக் பண்றது யாருன்னு யோசிக்க வைக்கிறது அந்த பிடிப்புதான?” என்றான் யாஷ்.
“உனக்கு தோனியை பிடிக்கும்ல. அவரோட ஒரு போஸ்ட், ஒரு நியூஸ் விடாம ஃபீட் பண்ணி வைக்கிற, லைக் பண்ற… இப்போ நீ யாருன்னு அவரு யோசிச்சிட்டா இருப்பாரு” என்ற ஆர்விக்கை பார்த்து உதடு சுளித்த யாஷ்,
“அதேதான் நானும் சொல்றேன். நான் அந்தளவுக்கு பெரிய ஆளெல்லாம் இல்லையேடா! நம்ம இவன்ட் பேஜ்ல லைக் போடுறது ஓகே! பட் என்னோட பிரைவேட் அக்கவுண்ட் ஃபாலோ பண்ணி, அதுல இருக்க போஸ்ட் எல்லாத்துக்கும் தேடி தேடி லைக் பண்ணியிருக்கு. இப்போதான் நோட் பண்ணேன். நான் அவ்வளவு பெரிய செலபிரிட்டியும் இல்லையே! என் பெர்சனல் அக்கவுண்ட் ஃபாலோ பண்றது ஒரு நூறு பேர் தான்… இதில் இந்தவொரு அக்கவுண்ட் ஹோல்டர் மட்டும் இப்படி பண்ணா யாரா இருக்கும் தெரிஞ்சிக்க க்யூரியஸ் ஆகாதா?” என்றான்.
“கரெக்ட் தான்” என்ற ஆர்விக், “நீ இப்போ அவங்க யாருன்னு தேடி… அவங்க பையனா இருந்தா என்ன பண்ணுவ?” எனக் கேட்டதில், யாஷின் முகம் அஷ்டகோணலாக மாறியது.
“அதேதான்… இப்படியே அந்த விஷயத்தை ஒதுக்கி வைச்சிடு” என்று சிரிப்போடு ஆர்விக் எழுந்துகொண்டான்.
“நீ சொல்றதும் சரிதான். இப்போலாம் ஹோமோ ஜென்டர் அட்ராக்ஷன் தான் அதிகமா இருக்கு. அதுதான் டிரெண்டாவும் சுத்தி வருது” என யாஷ் சொல்ல…
“எதையும் யோசிக்காம தூங்குடா” என்று அறையை விட்டு வெளியில் வந்தான் ஆர்விக்.
‘ஒயிட் மூன்?’ உச்சரித்த ஆர்விக், ‘என்னவா இருக்கும்? அன்விகிட்ட கேட்போமா?’ என நினைத்தபடி கீழே வர நிதாஞ்சனியிடமிருந்து தகவல் வந்தது.
“டேய் ஆர்வி லவ் சொல்லணும் டா. எதாவது ஐடியா கொடு.”
அவள் அனுப்பிய குரல் பதிவை கேட்டவன் மெல்லிய சிரிப்போடு…
“நேருக்கு நேர் நின்னு சொல்லிடு. அப்புறம் பாரு, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. பதில் சொல்லியே ஆகணும்” என பதில் அனுப்பி வைத்தான்.
உறங்கிக் கொண்டிருந்த அனிதாவின் அறையை எட்டிப்பார்த்துவிட்டு தன்னுடைய படுக்கையில் விழுந்தான்.
அமைதியாக கொள்ளும் உறக்கம் அன்விதாவின் நினைவில் சுழல வைக்குமென, ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு பாதி சரிந்து படுத்தான்.
இப்போதெல்லாம் கனவினை தவிர்ப்பதற்காக அவனின் வழக்கம் இதுதான்.
படுத்ததும் தானாக அன்விதாவின் மீதான காதலுக்குள் ஓடும் நினைவலைகளை புறம் ஒதுக்கிட அவன் கையாளும் சிறு முயற்சி.
படித்துக்கொண்டு புத்தகத்தில் மூழ்கி தன்னையறியாது உறக்கம் கொள்வது. அவனது வலி நிறைந்த நினைவுகளுக்கு சிறந்த நிவாரணியாகவும் இருந்தது.
இரண்டு பக்கங்கள் படித்திருப்பான்…
“ஆர்வி…” எனும் தகவல் அவனது கவனத்தை மாற்றியது.
முன்பு நிதாஞ்சனி அனுப்பிய தகவலுக்கும், தற்போது அனுப்பியிருப்பதற்குமான வேறுபாட்டை அவனால் உணர முடிந்தது.
நமக்கானவர்கள், நம் மனதில் அன்பின் வட்டத்தில் இருப்பவர்கள், ஒன்றை தம்மிடம் வாய்விட்டு சொல்ல வேண்டுமென்றில்லை. அவர்களின் சிறு அசைவு, நிழல், குரல், இவைமட்டுமல்லாது… அனுப்பும் குறுஞ்செய்தியிலும் அவர்களின் உணர்வுகளை உள்வாங்கிட முடியும்.
நேரத்தைப் பார்த்தான், படுக்கையைவிட்டு எழுந்துகொண்டான்.
யாஷின் அறைக்குச் சென்றவன், இன்னமும் உறங்காது புரண்டு கொண்டிருந்தவனிடம்,
“வெளிய போயிட்டு வர்றேன். பார்த்துக்கோ” என்றான்.
“எங்க?”
“சும்மா ஒரு டிரைவ். நிதா ஆபீஸ் வரை” என்றான்.
“எனக்கும் தூக்கம் வரும் தோணல. நானும் வர்றேன்” என்ற யாஷ், “அன்விக்கிட்ட பேசினேன் சொன்னியே! அது எதுவும் டிஸ்டர்ப் பண்ணுதா?” என்றான்.
“டிஸ்டர்ப் நிதாவுக்கு” என்ற ஆர்விக், “ஏதோ ஓவர் திங்கிங்ல இருக்காப்போல… ஷீ நீட்ஸ் சம்வன் டூ டாக் டூ ரைட் நவ்” என்றான்.
“எல்லாரையும் புரிஞ்சிக்கோ. ஆனால் உன்னை மட்டும் யாருக்கும் புரிய வைச்சிடாத” என்று யாஷ் முறைத்திட, “என்னை புரிஞ்சிக்கத்தான் நீ இருக்கியே மச்சான்” என படிகளில் இணைந்து நடந்தபடி, அவனை தோளோடு அணைத்துப் பிடித்தான் ஆர்விக்.
லட்சுமணன் கூடத்தில் அமர்ந்திருந்தார்.
“என்ன தாத்தா உங்களுக்கும் தூக்கம் வரலையா?”
“வயசானா பாதி தூக்கம் தான்” என்ற லட்சுமணன்… “தண்ணி எடுக்க வந்தேன். அப்படியே உட்கார்ந்துட்டேன்” என்றார்.
“அப்போ ஓகே” என்ற ஆர்விக், “வெளிய போயிட்டு வர்றோம்” என அவரிடம் சொல்லிக்கொண்டு நிதாஞ்சனியின் அலுவலகம் நோக்கி மிதமான வேகத்தில் வண்டியை செலுத்தினான்.
**********************************
கையில் ப்ளூ பெர்ரியை வைத்துக்கொண்டிருந்த நிதாஞ்சனி இருக்குமிடம் மறந்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
‘ஓய் பப்ளிமாஸ்.’
பள்ளி வயது சக்தியின் குரல் இன்று கேட்பதுபோல் அவளின் நெஞ்சத்தில் அதிர்ந்து செவி ஒலித்தது.
மாலை அன்விதா அப்பழங்களை கொடுத்தபோது நடந்த பேச்சில், பப்ளிமாஸ் என அவள் சொல்லியது, எப்போதும் நிதாஞ்சனியின் நினைவில் உயிர்ப்போடு ஒலிக்கும் குரலையும் அன்றைய நிகழ்வையும் நினைவு கூர்ந்திருக்க, அலுவலகம் வந்து வேலை நேரம் குறைந்ததும் பழைய நினைவில் ஆழ்ந்துவிட்டாள்.
நிதாஞ்சனி அப்போது பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.
சுகவனத்தின் எஸ்டேட் கடந்து, கதிர்வேலனின் தோட்டத்திற்கு அடுத்து சிறு இடைவெளியில் பள்ளிக்கூடம்.
தேர்வு நேரம் என்பதால் மதியத்திற்கு மேல் வகுப்புகள் இல்லை.
தேர்வு முடித்து தோழிகளுடன் நிதாஞ்சனி கதிர்வேலன் தோட்டத்து வழி நடந்து வந்துக்கொண்டிருந்தாள். தோழியர் கூட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியரும் அடக்கம்.
“தோட்டத்துல ஆளில்லை போலிருக்கே!” ஒரு பெண் கூறிட,
“கதிர் மாமா அங்க தான் ரூமுக்குள்ள இருப்பாங்க” என்றாள் நிதாஞ்சனி.
“சக்தி அப்பாவா?” என மற்றொரு பெண் கேட்க,
“ஆமா” என்றாள் நிதாஞ்சனி.
அந்நேரம் கதிர்வேலனும் வேலை முடித்து மதிய உணவுக்காக அங்கிருந்து புறப்பட, எதிர்ப்பட்ட நண்பனின் மகள் நிதாஞ்சனியிடம்,
“வண்டியில வரியா நிதா வீட்ல விட்டுடுறேன்” என்றார்.
“இல்லை மாமா. ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. நடந்து போய்க்கிறேன்” என சொல்லிய நிதாஞ்சனியின் கையை சுரண்டினர் மற்ற பெண்கள்.
“பார்த்து வாம்மா” என்று கதிர்வேலன் வண்டியை முடுக்க,
“மாமா” என அழைத்த நிதாஞ்சனி, “பழம் பறிச்சிக்கவா?” என ஸ்ட்ராபெர்ரி செடிகள் இருக்கும் பகுதியை காண்பித்தாள்.
கதிர்வேலனும் சிரித்துக்கொண்டே, “பாத்தியில அடி வைக்காம பறிச்சிக்கோங்க. முன்னாடி செடியிலலாம் இப்போதான் பிஞ்சு வைச்சிருக்கு. பின்னாடி அந்த கடைசி போங்க” என்று சென்றிருந்தார்.
“சக்தி அப்பா ஸ்வீட் டி” என்ற ஒரு பெண், “இந்த சக்தி தான் எப்பவும் வெட்ட வரவன் மாதிரியே விறைப்பா திரிவான்” என்றாள்.
வகுப்பு தலைமை மாணவன் என்பதால் அப்பெண் சக்தியிடம் வாங்கிய சில அடிகளால் கடுப்புடன் கூறினாள்.
(இங்கு அடிகள் என்பது மாணவர்களிடையே நடைபெறும் சில விளையாட்டு அரசியல்கள். அடின்னா அடி கிடையாது🤣.)
“அவ்ளோ டெரர்ரா அவங்க” என்று நிதாஞ்சனி விழிகள் விரித்துக் கேட்க,
“மாமா பையன் பற்றி உனக்கு தெரியாதா?” என இன்னொரு பெண் வினவினாள்.
“தெரியாதுக்கா. ஸ்கூல்ல போகும்போது வரும்போது பார்க்கிறதோட சரி. கதிர் மாமா அப்பாவைத்தேடி வீட்டுக்கு வருவாங்க. அதனால அவர்கிட்ட பேசுவேன்” என்றாள்.
பேச்சினூடே கதிர்வேலன் சொல்லிய பகுதிக்கு வந்திருந்தனர்.
“கொஞ்சம் கொஞ்சம் பறிச்சிக்கோங்க” என்ற நிதாஞ்சனி, மற்றொரு பக்கம் செல்ல…
“நீ எங்கடி போற?” என்றாள் மற்றொரு பெண்.
“அங்க ப்ளூ பெர்ரி இருக்கு. இதுவரை டேஸ்ட் பண்ணதே இல்லை. அதான் சாப்பிட்டு பார்க்கலாம்” என்று நிதாஞ்சனி சொல்ல…
“அது நம்ம கருப்பு திராட்சை மாதிரிதான் இருக்குமாமே டேஸ்ட்” என்று ஒருத்தி கூறினாள்.
“அப்போ இன்னைக்கு எல்லாரும் சாப்பிட்டு பார்த்திடுவோம்” என்று அங்கு சென்றனர்.
புதர் போன்ற அடர்ந்த உயரமான செடிகள். கொத்து கொத்தாகக் காய்த்திருந்தன. அனைத்தும் காயாக இருந்திட,
“ஸ்ட்ராபெர்ரியே பறிச்சிருக்கலாம்” என்று திரும்பிட, அங்கிருந்த பப்ளிமாஸ் மரத்தினை பார்த்துவிட்டு, “பழமெல்லாம் ரொம்ப பெருசா பார்க்கவே சாப்பிடக் கூப்பிடுற மாதிரி இருக்குடி” என்றாள் ஒருத்தி.
“சக்தி சீசன் டைம்ல கொண்டுவருவான். கிளாஸ்ல கொடுப்பான். அவ்ளோ டேஸ்ட். நம்ம ஊர்லே இந்த மரத்து டேஸ்ட் எங்கயும் வராது” என்ற பெண், “அதை பறிப்போமா?” என்றாள்.
“வேலி போட்டிருக்கே. மரம் ஃபுல்லா முள்ளு… எப்படி பறிக்கிறது?” என்ற பெண் ஒருத்தி, “பக்கத்துல ஒரு மரம் இருக்கே அதுல ஏறி அந்த மரத்துல மேலயிருக்க பழத்தை பறிக்கலாம்” என்றாள்.
“மரம் யார் ஏறுறது?”
“நிதாவையே ஏத்தி விடுவோம். அவள் தான் வெயிட் கம்மி” என்று சொல்லியதோடு நிதாஞ்சனி மறுக்க மறுக்க… அவளை அந்த மரத்தின் கிளையில் ஏற்றிவிட்டே ஓய்ந்தனர்.
“அப்படியே கிளையில் உட்கார்ந்து, எட்டி பறி நிதா” என்று சொல்ல…
“அச்சோ எனக்கு பயமாயிருக்கு. காலெல்லாம் நடுங்குது. இறக்கி விடுங்க” என்று நிதாஞ்சனி கிளையின் மீது நின்று கூறிட,
“நீ முதல்ல உட்காரு” என்றனர். நடுங்கிக்கொண்டே கிளையில் அமர்ந்த நிதாஞ்சனியிடம்,
“கிளையை பிடிச்ச மாதிரி படுத்துக்கோ நிதா” என்றனர்.
“அக்கா விழுந்திடமாட்டனே!” என்ற நிதாஞ்சனி, “விழுந்துட்டா புடிச்சுக்கோங்க” என கிளையின் மீது இருபக்கமும் கால்களை தொங்கப்போட்டு படுத்தவளாக கைகள் நீட்டி எட்டி வேலி தாண்டி பழத்தினைப் பறித்தாள்.
“தூக்கிப்போடுறேன் பிடிங்க” என்ற நிதாஞ்சனி பழங்களை கீழே போட…
“யாரு அங்க?” என்று கேட்ட குரலில் பெண்கள் அனைவரும் சிதறி ஓடியிருந்தனர்.
“அச்சோ என்னை விட்டுப்போறீங்க! அக்கா என்னை இறக்கிவிடுங்க” என்று நிதாஞ்சனி படபடத்தாள்.
சக்தி தான் வந்திருந்தான்.
பள்ளிவிட்டு வீட்டிற்கு வந்துகொண்டிருந்தவன், தன்னுடைய தோட்டத்திலிருந்து சத்தம் வரவே வந்திருந்தான்.
சக்தியின் மீது வகுப்பிலிருக்கும் பயத்தை வைத்து பெண்கள் அனைவரும் ஓடிவிட, நிதாஞ்சனி மாட்டியிருந்தாள்.
“அக்கா… இறக்கி விடுங்க!” தூரத்தில் ஓடிக் கொண்டிருந்த பெண்களை கத்தி அழைத்தாள்.
மரத்திற்கு கீழே விழுந்து கிடந்த பழங்களை பார்த்து நின்ற சக்தி, சத்தம் மரத்தின் மேலிருந்து வரவும் தலையை உயர்த்திப் பார்த்தான்.
தற்போது கிளையின் மீது ஒரு பக்கமாக கால்களை தொங்கவிட்டு அமர்ந்திருந்த நிதாஞ்சனி… சக்தியின் உயரிய பார்வைக்கே உள்ளுக்குள் அரண்டுப் பார்த்தாள்.
‘ஷார்ப் ஐஸ்… ஆத்தாடி!’
சக்தி பார்வையை மாற்றாது உறுத்திருக்க…
“மாமா… மாமாகிட்ட கேட்டுதான் பறிக்க வந்தேன்” என்றாள்.
அவள் சுகவனத்தின் பெண் என்பதும், அவர் தன்னுடைய தந்தையின் நெருங்கிய நண்பர் என்பதும் தெரியுமாதலால் அவள் மாமா என்று சொன்னதும் சக்தி விளங்கிக்கொண்டான்.
எதுவும் சொல்லாது சக்தி திரும்பிட…
“போறீங்களா?” என்றாள்.
சக்தி நின்று தலையை மட்டும் திருப்பிட,
“இறக்கிவிடுங்க” என்றாள்.
சக்தி எதுவும் சொல்லாது பார்த்திட,
“அபர்ணா அக்கா தான் ஏத்திவிட்டாங்க. உண்மையாவே எனக்கு பயமா இருக்கு. எப்படி இறங்குறது?” என்றாள். அழுதுவிடும் நிலையில் அவள்.
சக்தி வாய் திறந்திடாது நகர்ந்திட, நிதாஞ்சனி அழவே ஆரம்பித்துவிட்டாள்.
“போச்சு… போச்சு… கதிர் மாமா வேற எப்போ வருவாங்க தெரியல” என்று அழுகையோடு அவள் புலம்பிட, சக்தி ஏணியோடு திரும்பி வந்திருந்தான்.
மரத்தின் தண்டில் ஏணியை சாய்த்து வைத்தான்.
மெல்ல ஏணியில் அவள் கால் வைத்திட, ஏணி ஆட்டம் கண்டது. வேகமாக கிளையில் அமர்ந்துவிட்டாள்.
சக்தி என்னவென்று புருவம் உயர்த்திட…
“ஏணியை பிடிச்சிக்கிறீங்களா? பயங்கரமா ஆடுது” என்றாள். உண்மையில் அவளின் உடலில் தான் அத்தனை நடுக்கம். கால்கள் ஆட்டம் கண்டிருந்தன.
சக்திக்கு அவளின் உதறலிலும், அவள் தயங்கி தயங்கி பேசுவதிலும் மெல்லிய புன்னகைத் தோன்றிய போதும் வெளிக்காட்டது மறைத்தான்.
“ப்ளீஸ்… ஹெல்ப் பண்ணுங்க. இனிமே இங்க வரவேமாட்டேன்.”
சக்தி பேசாமலே நின்றிருக்கவும் கெஞ்சினாள்.
அமைதியாக ஏணியின் அருகில் சென்ற சக்தி, அதனின் கீழ் பகுதியில் அசையாதவாறு தன்னுடைய காலினை அழுத்தி வைத்தான்.
“நான் இறங்கும்போது காலை எடுத்திட மாட்டீங்களே?” எனக் கேட்டவள், சக்தி பார்த்தப் பார்வையில், மெல்ல இறங்கி கீழ் வந்தாள்.
இறுதியில் அவள் இறங்குவதற்காக சக்தி ஏணியின் மீது வைத்திருந்த காலினை எடுத்து நகர, அவனையும் தள்ளிக்கொண்டு தரை விழுந்திருந்தாள்.
சக்தி தன்மீது விழுந்தவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்திட,
அவன் மீதிருந்து வேகமாக எழுந்து நின்ற நிதாஞ்சனி,
“அய்யோ… சாரி… சாரி… நீங்க கால் எடுத்ததும் ஏணி ஆடுச்சா? எனக்கு பின்னாடியிருந்த உங்கமேலயே விழுந்துட்டேன்… சாரி… சாரி…” என கண்களை மூடி காதுகளை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு அவள் சொல்லிய விதத்தில் சக்தி மௌனமாக சிரித்திருந்தான்.
சக்தி எவ்வித பிரதிபலிப்புமின்றி நின்றிருக்க…
“நிஜமாவே கோபமா இருக்கீங்களா?” எனக் கேட்டவள்,
“நிறையவே சாரி. வேணும்னு விழல” என்றாள்.
அப்போதும் சக்தியின் நிலையில் மாற்றமில்லை.
“பேசவே மாட்டீங்களா?” என்ற நிதாஞ்சனி, “கோபமில்லைன்னாவது சொல்லலாமே!” என்றாள்.
சக்தி மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி நிமிர்ந்து நிற்க…
“இல்லை வேணாம்… நீங்க சொல்ல வேணாம். நான் போறேன்” என அங்கு தரையில் கிடந்த தன்னுடைய பையை எடுத்து தோளில் மாட்டியவளாக சில அடிகள் சென்றிருப்பாள்…
“ஓய் பப்ளிமாஸ்” என அழைத்திருந்தான்.
அவனின் அவ்விளிப்பில் நடை தடைபட திரும்பினாள்.
அதுதான் சக்தி அவளிடம் பேசிய முதல் வார்த்தை.
நிதாஞ்சனி அவனின் அழுத்தமான அக்குரலுக்கு மிரண்டிருந்தாள்.
கிட்ட வா எனும் விதமாக சக்தி கை காட்டிட, கூப்பிட்டு வைத்து அடித்துவிடுவானோ என பயந்து பயந்து, தயங்கி தயங்கி அவனருகில் சென்றாள்.
அவளின் உடல் மொழியும், முகத்தில் காட்டும் பாவனைகளும் அவனுள் அவனறியாது உள் இறங்கியது. சிறு சுவாரஸ்யம் அவனிடத்தில். இரு உதடுகளையும் உள் பக்கம் மடித்து தன்னுடைய உணர்வை மறைத்தான்.
இரு கன்னத்திலும் கைகளை வைத்து மூடிக்கொண்ட நிதாஞ்சனி, “நான் இனிமே இங்க வரவேமாட்டேன். எனக்கு ஸ்ட்ரா பெர்ரி, ப்ளூ பெர்ரி வேணுன்னா கூட கதிர் மாமாகிட்ட கேட்டு வீட்டுக்கே கொண்டுவர சொல்லிக்கிறேன். அடிச்சிடாதீங்க பிளீஸ்” என்றாள்.
அதில் சக்தி அதுவரை அடக்கி வைத்திருந்த மொத்த சிரிப்பையும் மொத்தமாக சிதறவிட்டிருந்தான்.
இதுவரை அவனது வீட்டினர் கூட கண்டிராத அவனின் சிரிப்பில் நனைந்த பூரித்த முகம், அவளுக்கு காண கிடைத்தது. அதுவரை இருந்த பதற்றம், பயம் நடுக்கம் யாவும் மேகமாக கலைந்திருக்க, அவனது அம்முகத்தில் லயித்துவிட்டாள்.
நிதாஞ்சனியின் ஊடுரும் பார்வையில் என்ன உணர்ந்தானோ பட்டென்று பழைய நிலைக்கு மாறியிருந்தான்.
“அப்பாடி… சிரிச்சிட்டீங்க! அப்போ கோபமில்லையே! நான் போகட்டா?” என்று நிதாஞ்சனி தலையசைத்துக் கேட்க…
“பப்ளிமாஸ்” என்றான்.
“ஹான்?!” அவள் புரியாது விழித்திட…
“பழம் பறிக்கத்தான வந்த. எடுத்துக்கோ” என அவள் பறித்து கீழே போட்டிருந்த பழங்களை காண்பித்தான்.
“ஆங்… தேங்க்ஸ்” என்றவள், அவனைப் பார்த்துக்கொண்டே பழங்களை எடுக்க குனிய முற்பட…
“இரு” என்றவன் தானே எடுத்துக் கொடுத்தான்.
“இதுக்கும் தேங்க்ஸ்” என்று வாங்கிக்கொண்டவள், “உங்க ஸ்மைல் அழகா இருக்கு” என்றாள்.
சட்டென்று சக்தியின் பார்வையில் கடுமை பரவியதோ…
“நான் எதுவும் சொல்லல” என ஓடியிருந்தாள்.
அவளின் ஓட்டம் அவனின் இதழை விரிய வைத்திருந்தது.
அன்றைய தினம் தான் இருவரும் பேசிக்கொண்டது. முதலும் கடைசியுமாய்.
ஆனால் அவள் அவனை நித்தம் பார்வையால் வலம் வரத் துவங்கியிருந்தாள். அதனை அவனும் உணர்ந்தே இருந்தான். அவனின் கவனித்தலையே அன்று பேருந்து நிலையத்திலிருந்து அவள் பின்னால் சென்றபோது தான் வெளிப்படையாகக் காட்டியிருந்தான். ஆனால் அவளுக்குத்தான் அவனது பார்வைக்கான பொருள் புரியவில்லை.
பழைய நினைவில் இன்றும், அவனது “பப்ளிமாஸ்” எனும் குரல் செவி தீண்ட…
“அச்சோ நிதா” என இரு கைகளாலும் முகம் மூடியவளின் சிணுங்கல் ஒலியில், அவளுக்கு அருகிலிருந்த பெண்…
“என்னடி ஆச்சு?” என்று தோள் தொட…
“என்னவோ ஆச்சு சுசி” என்ற நிதாஞ்சனி, “வெட்கம் வெட்கமா வருதே” என்றாள்.
“வரும்… வரும்…” என்ற சுசி, “உனக்கு மட்டும் தான் இந்த பழத்தைப் பார்த்தா வெட்கம் வரும்” என்றதோடு, நிதாஞ்சனியின் மேசை மீதிருந்த பழங்களிலிருந்து ஒன்றை எடுக்க, வேகமாக சுசியின் கையை தட்டியிருந்தாள் நிதாஞ்சனி.
“நோ ஷேரிங்” என்றாள்.
“ஷேரிங் இஸ் கேரிங் பேபி.”
“அதெல்லாம் இதிலில்லை.”
“ம்க்கும் ரொம்பத்தான்” என்ற சுசி, “பழத்துக்கு பட்டா போடாம… பழத்தை கொடுத்தனுப்புன ஆளுக்கு பட்டா போடுற வழியை பாருடி! யாரும் கூடையோடத் தூக்கிட்டுப் போயிடப் போறாங்க” என்று தன்னுடைய கணினி பக்கம் திரும்பிக்கொண்டாள்.
சிறிது நேரம் ப்ளூ பெர்ரியையே பார்த்திருந்த நிதாஞ்சனி,
“டேய் ஆர்வி லவ் சொல்லணும் டா. எதாவது ஐடியா கொடு” என்று ஆர்விக்கு குரல் பதிவை அனுப்பி வைத்திட்டு மேசையில் அலைபேசியை வைத்திட, சுகவனம் அழைத்திருந்தார்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
41
+1
2
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Lovely 💞💞💞💞
Thank you sis 😍😍😍