Loading

காலை கனவு 31

ஆர்விக் தானும் ஒரு பெண்ணை விரும்புவதாக மறைமுகமாக சொல்லியதை அன்விதாவால் நம்ப முடியவில்லை.

அவளிடம் அதிர்வு.

“என்ன சொல்ற ஆர்வி நீ?” என்ற அன்விதா, “லவ் பண்றியாடா?” எனக் கேட்டாள்.

“ஏன் நானெல்லாம் லவ் பண்ணக்கூடாதா?”

“டேய்…” என அவனை நெருங்கியவள், அலையில் கால் வைத்திட,

“இந்த நேரத்தில் தண்ணியில நின்னா உனக்கு சேராதில்லை. மணலுக்கு வா” என்று அவளை நீரிலிருந்து வெளியேற்றி, அவளுடன் தானும் மணலில் அமர்ந்தான்.

அன்விதா இன்னும் ஆர்விக் சொல்லியதை நம்ப இயலாது சிறு அதிர்வோடு அவனைப் பார்த்திருக்க…

தன்னுடைய காதலை சொல்ல ஆரம்பித்தான்.

“ரொம்ப பிடிக்கும். ஏன், எப்படி வந்துச்சு… எனக்குள்ள அந்த ஃபீல்” என கண்களை மூடியவனின் முகத்தில் பெருங்காதலின் பேரொளி.

ஆர்விக்கின் அந்த முகம்… அத்தனை வியப்பைக் கூட்டியது அவளிடத்தில்.

“சொல்லத் தெரியல” என இமைகள் திறந்தவன்,

“கனவில் தொடங்கி கனவில் முடிஞ்சிட்ட காதல்” என்று தன்னையே பார்த்திருக்கும் அன்விதாவின் விழிகளை சந்தித்தான்.

அவனின் அப்பார்வை அவளின் நெஞ்சத்தில் ஊடுருவியதோ… முன் அனுபவ மனதின் விளங்கா தடத்தின் பொருள் புரியாது போனது.

“காரணமில்லை… சின்ன பேச்சில் ஆரம்பிச்ச உறவு. மனசோட ஆழத்தில் ஸ்ட்ராங் ஆகிடுச்சு. நான் அவளை காதலிக்கிறேன்னு எனக்கு புரிய வைச்சது என்னோட கனவு. அதுவரைக்கும் அவள் மேல எனக்கிருந்த அக்கறை, அன்பு, அவளை தேடும் என்னோட தவிப்பு இதுக்கெல்லாம் பெயர் தான் காதல்ன்னு சத்தியமா தெரியாது” என்ற ஆர்விக், அவளிலிருந்து பார்வையை நகர்த்தி, சலசலக்கும் வெள்ளி அலைகளில் ஒன்றினான்.

“நம்ம மனசோட டீப் ஃபீல் தான ட்ரீம். எஸ் ஷீ இஸ் மை ட்ரீம்… ஹெவன் திங்க்” என்றவனின் குரல் தூவிய காதலில் அவளுக்கு மேனி சிலிர்த்தது.

“ஷீ இஸ் த டெப்த் ஆஃப் மை சோல் “

இதுவரை அவன் காட்டிடாத ஓசை.

வார்த்தைகளின் சத்தத்தில் அவனது தவிப்புகளின் அதீதம்.

“எனக்கு அவளை உணர வைச்சது அந்த ட்ரீம். என்னோட மனசுல அவளுக்கான காதல் நானே உணராம அடி ஆழம் போயிடுச்சு. அதோட பிம்பம் தான் என்னோட கனவு. அதுவரைக்கும் அவளை அப்படியொரு எண்ணத்தில் நிறுத்தி பார்க்காத என்னை மொத்தமா எனக்கு அவள்தான்னு பார்க்க வைச்சது. அவளுக்காக எதையும் செய்ய வைச்சது. எதையும் அப்படின்னா, அவளுக்காக அவளையே விட்டுக்கொடுக்கவும் வைச்சது” என்றான்.

“அவங்க உனக்கு நோ சொல்லிட்டாங்களா?”

ஆர்விக்கின் காதல் வலி தனக்கே வலிக்கொடுப்பதைப் போன்று தவிப்போடுக் கேட்டிருந்தாள்.

“சொல்லியிருந்தாதான எஸ் ஆர் நோ தெரிஞ்சிருக்கும்” என்ற ஆர்விக், “அவள் எனக்கில்லை அப்படின்னு காதலிக்க ஆரம்பிச்ச அன்னைக்கே தெரிஞ்சிடுச்சு” என்றான்.

“என்ன சொல்றன்னு புரியலடா” என்ற அன்விதா, “நீ ஏன் லவ் சொல்லல? எனக்கே உன் ஃபேஸ்ல இப்போ அவ்ளோ லவ் தெரியுதே! அவளுக்கு ஒருமுறை கூடவா தெரியாம இருந்திருக்கும்?” எனக் கேட்டாள்.

“எதிர இருக்கவங்களுக்கு நம்மளை புரியனும் அப்படின்னா நாம சொல்லணும்… அப்படியில்லைன்னா உணர்வை காட்டணும். இது ரெண்டையுமே அவகிட்ட நான் காட்டினதில்லை” என்றான்.

“லூசாடா நீ? இவ்வளவு லவ் பண்ணிட்டு அதை ஒருமுறை கூட எக்ஸ்போஸ் பண்ணலன்னு சொல்ற… யூ இடியட்” என்றாள்.

“என்னதான் அவங்க நமக்கானவங்கன்னு ஃபீல் பண்ணாலும் அதை சொல்ற சந்தர்ப்பத்தையோ, எக்ஸ்பிரஸ் பண்ற நேரத்தையோ எதிர்ல இருக்கவங்க கொடுக்காம நம்ம ஃபீல் எக்ஸ்போஸ் பண்ண முடியாது” என்றவன், அக்கணம் அங்கு பொங்கும் அலைகளுக்கு நிகராக பொங்கி வழிய நெஞ்சம் முட்டி காத்திருக்கும் தன்னுடைய காதலை மறைக்கும் பொருட்டு கால்களை இரு கைகளாலும் கட்டிக்கொண்டு உணர்வுகளை உடலின் இறுக்கத்தில் தொலைத்தான்.

“ஆர்வி…” என அவனின் கலங்களை உணர்ந்தவளாக, தோளில் கை வைத்தாள்.

தன்னுடைய தோள் படிந்த அவளின் கரத்தில் தலை சாய்த்து கன்னம் பதித்தவன்,

“அவள் எனக்கில்லைடா” என்றான். மனதின் கலங்களில் அவனது குரல் தழுதழுக்க கண்களில் நீர் துளிர்த்திட்டது.

“டேய்…” என அவனை நெருங்கி அமர்ந்தவள், அவனது தோளைச்சுற்றி கரமிட்டவளாக தன்னோடு சேர்த்து தட்டிக் கொடுத்தாள்.

“என்ன காரணமா இருந்தாலும் ஒருமுறை சொல்லியிருக்கலாமே ஆர்வி!”

“அவள் இன்னொரு காதலுக்குள்ள இருக்கும்போது நான் சொல்றது என் காதலோட மதிப்பை குறைச்சிடுமே!” என்றவனிடத்தில், யாரோ ஒரு பொண்ணுக்காக என்ற எண்ணத்திலிருக்கும் அவளுக்கான காதல் ஆழ்கடலின் ஆழமாய் கொட்டிக்கிடந்தது.

“யாருடா அந்தப்பொண்ணு?”

கேட்டவளை உணர்வற்றுப் பார்த்தான்.

“இனி சொல்றது எப்பவும் சரிவராது.”

“லவ் அப்படின்னாலே வலி தான் போல” என்ற அன்விதா,

“அவங்க இன்னொருத்தரை லவ் பண்றாங்க சரி… அப்புறம் எப்படிடா இன்னும் அவங்கமேல இவ்வளவு லவ்?” எனக் கேட்டாள்.

“கிடைக்கும் தெரிஞ்சு பண்றது லவ் இல்லை. கிடைக்காதுன்னு தெரிஞ்சும் அவங்க மேல வந்த அன்பு குறையாம இருக்கிறதுதான் லவ். என்னோடது வெறும் ஈர்ப்பு இல்லை அன்வி, அவள் இல்லைன்னு ஈசியா மறந்துட்டு அடுத்து என்னன்னு பாக்குறதுக்கு. லவ்… என்னோட லவ்” என்றான்.

“அப்போ இப்படியே இருக்கப்போறியா?”

“அது முடியாதே!” என்ற ஆர்விக், “அம்மாக்கு உடம்பு முடியாமப்போக நான்தான் காரணமாம். என் லவ் தான்” என்றான்.

“ஹார்ட் அட்டாக்… உன்னால எப்படி?”

“யாஷ் அப்படித்தான் சொன்னான்” என்றவன், “எனக்குமே புரியுதே” என்று முகம் கசங்க அவளைப் பார்த்து சிறுவனாய் உதட்டை வளைத்தான்.

“ஆர்வி…” அவனது தோளில் படிந்திருந்த அவளின் கரத்தில் அழுத்தம் கூடியது.

“அனிக்கு நான் இதுல இருந்து வெளிய வரமாட்டேன்னு பயம் வந்திடுச்சு. அது ஒரு மாதிரி ஸ்ட்ரெஸ் பண்ணிடுச்சு அவங்களை. நான் ஃபீல் பண்ணுவேன்னு வெளிய காட்டிக்காம இருந்தாலும், அவங்களும் அம்மா தான. எனக்கு அவங்களை புரியுது. நான் மகனா அவங்க ஆசையை தேவையை புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கணுமே! நடந்துக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன்” என்றவன், “எஸ் ட்ரை மட்டும் தான் பண்ணிட்டு இருக்கேன். உங்க முடிவுன்னு சொல்லிட்டேன். ஆனாலும் முழுசா வெளிவந்திடுவேனான்னு தெரியல” என்றவன் ஆழ்ந்த மூச்சின் சத்தம் பெரும் வேதனையாய் அவளைத் தீண்டியது.

“நமக்கு பிடிச்ச ஒண்ணு கிடைக்கல அப்படின்னா, கிடைக்கிற வரை முயற்சி செய்வோம்… ரைட்? ஆனால் கிடைக்கவே கிடைக்காது தெரிஞ்ச அப்புறம் அந்த ஆசையை மனசுல ஓரிடத்துல ஒதுக்கி வைச்சிட்டு அதோட வாழப் பழகிடுவோம் தான? நானும் இப்போ அதைத்தான் செய்ய முயற்சி பண்றேன்” என்றான்.

“புரியுது…” என்ற அன்விதா, “கடைசிவரை உன்னோட லவ் அந்தப்பொண்ணுக்கு தெரியவேக்கூடாது ஆர்வி” என்றாள்.

ஏன் எனும் விதமாக ஆர்விக் ஏறிட…

“உன்னை மிஸ் பண்ணதுக்காக அவள் ஃபீல் பண்ண வேண்டியதிருக்கும்” என்றாள் அன்விதா.

ஆர்விக்கிடம் விரக்தியாய் ஓர் புன்னகை.

அவளிடம் காதலை சொல்லிவிட்டான். காத்திருப்பில் நிறைந்திருந்த தன்னுடைய காதலை மொத்தமாக அவளிடம் கொட்டிவிட்டான். ஆனால் யாரோவாக! யாருக்கானதாகவோ!

அகம் புதைந்த காதலை தன்னவளிடம் கூறிவிட்டோம் எனும் சிறு மகிழ்வு. மனதின் முடுக்கில் துளைத்துக் கொண்டிருந்த வலியின் துளி நீர்த்திருந்தது.

“அவள் நல்லாயிருக்கணும்! நல்லாயிருப்பாள்!”

“இன்னொருத்தருக்கான உன்னோட இந்த எண்ணமே உன்னையும் சந்தோஷமா வைச்சுக்கும் ஆர்வி” என்ற அன்விதா…

“வெளிய வரணும், அடுத்தக்கட்ட லைஃப் மூவ் ஆகணும் முடிவு பண்ணிட்ட… அந்த முடிவு ஏன் இனியாவா இருக்கக்கூடாது?” என்றாள்.

பதிலின்றி பார்வையை விலக்கியவனிடம்,

“உன்னை அவ்ளோ லவ் பண்றாள் ஆர்வி. லவ்வைப் பற்றி சொல்ல எனக்கு தகுதி இருக்கா தெரியல. ஆனால் லவ்வோட பெயின் எப்படியிருக்கும் தெரிஞ்ச நீ அதை இன்னொருத்தருக்கு கொடுக்கிறது ஷாக்கிங்கா இருக்கு” என்றாள்.

“ஒருத்தர் நம்மை விரும்புறாங்க அப்படிங்கிறதுக்காக பதிலுக்கு லவ் வருமா?” என்ற ஆர்விக், “வரும் அப்படின்னா நான் லவ் பண்ணவளுக்கும் எம்மேல வந்திருக்கணுமே!” என்றான்.

“நான் அப்படி மீன் பண்ணல” என்ற அன்விதா, “நீ விரும்பினது கிடைக்கல… சோ, உன்னை விரும்புவதை ஏத்துக்கோன்னு எல்லாரும் சொல்ற நிதர்சனத்தை சொல்றேன்” என்றாள்.

“என்னை அவள் விரும்பிறாள் அப்படிங்கிற ஒன்னுக்காக மட்டும் அக்செப்ட் பண்ண முடியாது அன்வி” என்ற ஆர்விக், “என்னோட மனசு தெரிஞ்சு அவள் அமைதியா தூரம் நின்னிருந்தா எனக்கும் அவளை ஒருவேளை பிடிக்க ஆரம்பிச்சிருக்கலாம். நான் சொல்ற பிடித்தம் காதல் இல்லை. ஒருத்தங்களை நம்ம மனசு ஏதோ ஒருவகையில் அக்செப்ட் பண்ணிக்க நினைக்குமே அப்படி” என்றான்.

“அவளோட லவ் சரியோ தப்போ… எனக்கு அவமேல செட்டாகாத ஃபீல். இந்த மனசோட அவளை என் பக்கத்துல எப்படி வைச்சிக்க முடியும். நாங்க ஒண்ணு சேர்ந்தா லைஃப் நல்லாயிருக்காது” என்ற ஆர்விக், “நம்மகிட்ட வரணும் அப்படின்னா சின்ன பொருளா இருந்தாலும் அது மேல நமக்கு ஒரு இன்ட்ரெஸ்ட் வரணும் அன்வி. அவள்மேல அது சுத்தமா வராது. எப்பவும்” என்றான்.

“ம்ம்…”

“அவளுக்கு என்மேல இருக்கிறது லவ் இல்லை அன்வி. ஒரு மாதிரி அட்ராக்ஷன். அவள் என்னை அப்ரோச் பண்றான்னு நானும் சரி சொல்லியிருந்தா அவளோட அட்ராக்ஷன் கொஞ்சநாளில் காணாமப்போயிருக்கும். நான் விலகவும், அவள் என்னை எஸ் சொல்ல வைக்கணும் அப்படிங்கிற அப்செஸ்க்கு போயிட்டாள். நேத்து அவள் பண்ணதில் எனக்கு நல்லா புரிஞ்சுது. கொஞ்சம் உட்கார்ந்து யோசிச்சாலே அவள் தெளிஞ்சிடுவாள்” என்றான்.

“ஏதோ லவ்வுல, நீ வேணும்ன்னு முட்டாள்தனமா பண்ணிட்டேன்னு சொன்னாள். என்ன பண்ணா சொல்லலையே” என்ற அன்விதா இனியா தன்னிடம் பேசியதைப் பகிர்ந்தாள்.

“ஹே… ஹாய்! இங்கென்ன உட்கார்ந்திருக்கீங்க?”

அலுவலகத்திற்கு வந்த அன்விதா, அங்கு வெளியிருக்கும் மேடையில் இனியா அமர்ந்திருப்பதைக் கண்டுவிட்டு அருகில் சென்றாள்.

“ஹாய்… உங்களைத்தான் பார்க்கணும் வந்தேன்” என இனியா கூறிட,

“என்னையா? ஏன்?” என்ற அன்விதா, “உள்ள போயிருக்கலாமே!” என்றாள்.

“நான் இங்க வந்தது யாருக்கும் பிடிக்கல.”

“ஆர்வியை பார்க்கணுமா?” என்ற அன்விதா, அப்போது வெளியில் வந்த ஆர்வி அவளுடன் நிற்பதால் தன்னையும் பாராது சென்ற ஆர்விக்கின் செய்கையில் நெற்றிச்சுருக்கினாள்.

“உங்ககிட்ட கொஞ்சம் பெர்சனலா பேசணும்” என செல்லும் ஆர்விக்கையே பார்த்தபடி இனியா கூறினாள்.

“பேசலாம்” என்ற அன்விதா அலுவலகத்திற்குள் சென்று தன்னுடைய நண்பர்களிடம் சொல்லிவிட்டு வெளியில் வர, இருவரும் அலுவலகத்தின் பின் பகுதி இருக்கும் பூங்காவிற்கு சென்றனர்.

“என்ன பேசணும்?” அன்விதாவிற்கு ஓரளவு யூகம். இனியா இதைப்பற்றிதான் பேசுவாளென தெரிந்து நேரடியாகக் கேட்டிருந்தாள்.

“நான் ஆர்வியை லவ் பண்றேன்.”

“ஹ்ம்ம்…”

“நீங்க ஹெல்ப் பண்ணனுமே!”

“இதுல நான் ஹெல்ப் பண்ண எண்ணயிருக்கு?”

“உங்க ஐந்து பேரில் ஆர்விக்கு நீங்கதான் ரொம்ப க்ளோஸ் கேள்விப்பட்டேன்!”

“அப்படியா?” என்ற அன்விதா, “நாங்க ஐந்து பேரும் ஒண்ணுதான். நான் எப்படியோ அப்படித்தான் மத்தவங்களும் அவனுக்கு. நீங்க வந்த விஷயத்தை மட்டும் சொல்லுங்க” என்றாள்.

“நீங்க ஆர்விக்கை விட ஸ்ட்ரிக்ட் போல…”

அன்விதா நீ சொல்ல வந்ததை சொல் எனும் விதமாக நின்றிருந்தாள்.

“அவருக்கு நான் லவ் பண்றது தெரியும். தெரிஞ்சும் என்னை அவாய்ட் பண்றாங்க. லவ் சொல்லவே விடமாட்டேங்கிறாங்க. அன்னைக்கு இங்க என் ஆபீஸ் பார்ட்டி அரேஞ் பண்ணப்போ” என நடந்ததைக் கூறினாள்.

அன்று அன்விதா இருந்த நிலையில் அவளுக்கு அது தெரிந்திருக்கவில்லை. இனியாவிடம் கத்திவிட்டு ஆர்விக் வெளியில் வந்தபோதுதான் கௌதம் வந்திருக்க, அதற்கடுத்த நிகழ்வுகள் யாவும் அன்விதாவைச் சுற்றி நடந்ததில் இதனை அவளிடம் சொல்வதற்கே மறந்திருந்தான்.

தற்போது இனியா அதனை சொல்லிடவும், ஆர்விக்குக்கு சுத்தமாக அவள் மீது சிறு பிடித்ததும் இல்லையென்பதை அன்விதா அறிந்திட்டாள்.

“அன்னைக்கு அவங்க என்கிட்ட அவ்ளோ கோபமா பேசவும்… இனி அவங்க பின்னாடி சுத்தாம, அவங்க அம்மாவை கவர் பண்ணுவோம் நினைச்சு போய் பேசினேன். அவங்களும் முடியாது சொல்லிட்டாங்க” என சோகமே முகமாக சொல்ல, “அவங்களை ரொம்பவே லவ் பண்றேன் அன்விதா. அவங்க இல்லாம முடியாதுங்கிற ஸ்டேஜ் போயிட்டேன். அதனால கிறுக்குத்தனமா என்னென்னவோ பண்ணிட்டேன். எனக்காக உங்க ஃப்ரெண்ட்கிட்ட நீங்க கொஞ்சம் பேசுங்களேன்” என்றாள்.

“லுக் இனியா” என்று அன்விதா அழுத்தமாகவே ஆரம்பித்தாள். தன்னுடைய மென்மையானப் பேச்சினை அவளுக்கு சாதகமாக அவள் எடுத்துக்கொள்ளக்கூடாதென.

“லவ் அதுவா வரணும். நாம உணரணும். ஒருத்தர் பின்னாடி சுத்தி வரதால காதலை வரவைக்க முடியாது. அதோட அவளை லவ் பண்ணுன்னு ஒருத்தர் சொல்றதால காதல் வரவே வராது” என்ற அன்விதா,

“ஆர்வி தெளிவா உன்கிட்ட சொல்லிட்டான். ஒத்துவராதுன்னு. அவன் வேணாம் முடிவு பண்ண ஒன்றை என்னால செய்யின்னு சொல்ல முடியாது. நீ வந்து கேட்கிறன்னு உனக்காக நான் பேசணும் எதிர்பார்க்கிற உன் எண்ணம் மாதிரிதான், அவனுக்கு விருப்பமில்லைன்னு தெரிஞ்சும் என்னால பேச முடியாது” என்றாள்.

“விலகிப் போறவங்களை இழுத்துப் பிடிக்க நினைக்கிறது உனக்கும் கஷ்டம், அவங்களுக்கும் கஷ்டம். இப்போவரை உன்னோட லவ் ஆர்விக்கு தொல்லையாதான் தெரியுது. அவன் தொல்லையா நினைக்கிற விஷயத்தை ஏத்துக்க சொல்லி என்னால எப்படி சொல்ல முடியும்?” என்றவள், “உங்க அண்ணா மேரேஜ் அப்போ தான் இவன்ட் ஆர்கனைசர் அப்படிங்கிற முறையில் ஆர்விக்கை உங்களுக்குத் தெரியும். இந்த த்ரீ மன்த்ஸ் பீரியடில் அவனைப்பற்றி என்ன தெரியும் உங்களுக்கு? அவனைப்பற்றி முழுசா எதுவும் தெரிஞ்சிக்கக்கூட ட்ரை பண்ணாம அவனுக்கு ஒருமாதிரி அழுத்தம் கொடுத்துட்டீங்க. அவனை பார்த்ததும் அவ்வளவு லவ்வா?” எனக் கேட்டாள்.

“ஆமா… பார்த்ததும் ரொம்ப பிடிச்சது!”

இனியா பட்டென்று கூறினாள். காதலென சொல்லாது பிடித்ததென!

“குட்… பார்த்ததும் யாருக்கும் யாரையும் பிடிக்கலாம். அப்படி பிடிக்கிறதுக்கு பேர் காதல்ன்னு எப்படி சொல்றீங்க?”

இனியா பதில் சொல்லத் தெரியாது குழம்பினாள்.

“இதுக்கு வேகமான பதிலை எதிர்பார்த்தேன்” என்ற அன்விதா, “பதில் சொல்ல முடியாம யோசிச்ச இந்த அமைதி தான் உங்களுக்கான பதில்” என்றாள்.

“ஆர்வி கிடைக்கணும் அப்படிங்கிறதுகாக ஏதேதோ பண்ணிட்டேன் சொன்னீங்களே! இனி அப்படியெதுவும் பண்ணாம கொஞ்சநாள் தள்ளி நில்லுங்களேன்! உங்களுக்கே உங்க மனசு புரிஞ்சாலும் புரியும். ஆர்வியை விட்டு விலகியிருங்க. ஒரு வன் மன்த். இதுக்குள்ள அவனை பார்க்காம முடியவே முடியல அப்படின்னு ஃபீல் பண்ணீங்கன்னா வாங்க. அப்போ உங்களுக்காக அவன்கிட்ட நான் பேசுறேன்” என்றாள்.

“நிஜமா பேசுவீங்களா?”

“கண்டிப்பா பேசுவேன். இப்போ அவனை லவ் பண்றேன்னு பட்டுன்னு சொன்ன மாதிரி அப்பவும் சொல்லணும். அப்போ பேசுவேன்” என அன்விதா புன்னகையோடு கூற,

“வன் மன்த் இல்லை… வன் இயர் ஆனாலும் அவங்க மேல எனக்கிருக்க இந்த கிரேஸ் குறையாது. மாறாது” என்றாள் இனியா!

“குட்…” அன்விதாவின் பார்வையில் அப்படியில்லை எனும் பொருள். அப்பார்வை இனியாவை சீண்டிவிட்டதுவோ?

“வன் மன்த் சொன்னீங்கள்ல… த்ரீ மன்த் வைச்சிப்போம். என்னோடது வெறும் ஈர்ப்பு இல்லைன்னு உங்க எல்லாருக்கும் நான் புரிய வைக்கிறேன்” என்று அன்விதாவின் பதிலையும் கேட்காது வேகமாகச் சென்றிருந்தாள்.

அன்விதா சொல்லி முடிக்க, இனியா நேற்று நடத்திய நாடகத்தை ஆர்விக் கூறினான்.

“அடிப்பாவி…” என்ற அன்விதா, “அவள் கேட்டதும் அவளுக்காக நான் உன்கிட்ட பேசுவேன் நினைச்சிட்டாப்போல… அதான் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சிட்டாள்” என்றாள்.

“மே பீ” என்ற ஆர்விக்,

“அவகிட்ட முடியாதுன்னு பேசிட்டு வந்துதான்… என்கிட்ட அவளை கன்சிடர் பண்ணலாம் பேசுனியா நீ?” என்றான்.

“எனக்கு இனியா பார்ட் உன்கிட்ட என்னன்னு தெரியாதே! என்கிட்ட நீங்க யாரும், வெட்டிங் அண்ட் இங்க பார்ட்டியில் நடந்ததை சொல்லவே இல்லை. அவள் சொன்னது வைச்சே உனக்கு அவளை பிடிக்கலன்னு தெரிஞ்சாலும், உனக்கு சின்னதாவாவது அவள் மேல எதுவும் இருக்குமோன்னு நான் தெரிஞ்சிக்கணுமே… நீயா சொல்லணும். அதான் அப்படி சொன்னேன்” என்ற அன்விதா, “அதை சொன்னதாலதான சார் இத்தனை வருஷமா என்கிட்ட மறைச்சு வைச்சிருந்த ரகசியம் தெரிய வந்தது” என்றாள்.

“மறைக்கணும் நினைக்கல… சொல்லணும் தோணல” என்றான். தொண்டை வரை வந்திட்ட காதலின் வார்த்தைகளை முயன்று விழுங்கி வைத்தான்.

‘அவளுக்கான காதலையே அவளிடம் நேரடியாக சொல்ல முடியாத போது, என்னுடைய காதலே நீதானென்று எப்படி சொல்ல முடியும்.’ மௌனமாய் உள்ளுக்குள் அரற்றினான்.

அன்விதா தன் முகத்தையே பார்த்திருக்க… உணர்வுகளை மாற்றியவனாக,

“த்ரீ மன்த் அப்புறம் அவள் வந்தா என்ன பண்ணுவ?” என்று புருவம் உயர்த்தினான்.

“கண்டிப்பா வருவா” என்று அன்விதா கூறியதில் ஆர்விக் இல்லையென தலையசைக்கும் முன்,

“வந்து உன்னை வெறும் க்ரஷ் அப்படின்னு சொல்லுவாள்” என்றாள்.

“எஸ்… இதான் நடக்கும்.”

சில நிமிடங்கள் நீடித்த அமைதியை,

“அந்தப்பொண்ணு பேர் என்னடா?” எனக்கேட்டு அன்விதை கலைத்திருந்தாள்.

பாறையில் மோதி சிதறும் நீர்த்துளியாக தன்னுடைய மனமும் சிதறுவதாக ஒப்பிட்டுப் பார்த்திருந்த ஆர்விக், அன்விதா கேட்டதில் அவள் புறம் திரும்பிட,

“எனக்குத் தெரிஞ்ச பொண்ணாடா? நான் பார்த்திருக்கேனா” என்றாள்.

“ம்ம்…”

“யாருன்னு சொல்லு ஆர்வி. எனக்குத் தெரியாம யாரு? நம்ம கிளாஸா?”

“எனக்கில்லைன்னு ஆகிப்போச்சு. அப்புறம் அதை தெரிஞ்சு நீயென்ன பண்ணப்போற, அதைப்பற்றி பேசி நான்தான் என்ன பண்ணப்போறேன்” என்று எழுந்துகொண்ட ஆர்விக், “வா… வா… கிளம்பலாம். ஓவர் நைட் ஆகிடுச்சு” என்று அவள் எழ கரம் நீட்டினான்.

நீட்டிய கரத்தினை பிடித்து எழுந்து நின்றவள்,

“எப்படிடா இவ்ளோ லவ்வை கடந்து வருவ?” என்றாள். நண்பனின் வலியை யோசித்தவளாக.

“அதெல்லாம் கடந்திடலாம்” என்று தான் முயன்று தோற்றுக் கொண்டிருக்கும் விடயத்தையும் அத்தனை திடமாகக் கூறினான்.

“உன்னை நீயே ஏமாத்திக்காத ஆர்வி.”

“அடடா” என சிரித்த ஆர்விக்,

“இதுல ஏமாத்திக்க என்ன இருக்கு? அவள் எனக்கில்லை. அவ்ளோதான். இது எனக்கு புரியுதே! அப்போ அவள் என்னோட நினைவா மட்டுமே ஒருநாள் எனக்குள்ளவே நின்னுபோயிடுவாள். நான் அவளை கடந்து வரணும் அப்படின்னு எடுத்திருக்கிற டெசிஷன் அனிக்காக… என் முன்னாடி பெரிய காரணமா நிக்கிறது அம்மா! சோ, மூவ் ஆன் ஆகிடலாம். இப்போ நீ ஆகலையா? அந்த மாதிரி” என அவளுடன் இணைந்து நடந்தான்.

அவனுள் அவளுக்கான நேசம் என்றும் அவனுள் அவனுக்கானதாய் மட்டுமே பொத்தி வைக்கப்பட்டது!

காதல்…

‘கடந்து வந்தவர்கள் சிலராயினும்,
கடக்க முடியாது நினைவோடு நிறை வாழ்வு கொண்டவர்களும் பலர்!’

அவனுக்கான அவள் மீதான நேசமும்,
அவளுக்கான யாரோ ஒருவனின் மீதான நேசமும்,
முழுமை பெறாவிட்டாலும்…

கொண்ட காதல் ஆத்மமடைந்தது அவர்களின் உள்ளத்தில்.

ஆர்விதா ❤️

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 43

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
41
+1
3
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அன்வி ஆர்விக் கியூட்