Loading

காலை கனவு 29

யாஷ் சொல்வதை கேட்ட அனிதாவுக்கு நம்பவே முடியவில்லை.

“அன்னைக்கு அந்தப்பொண்ணு வந்து பேசும்போது… இவ்ளோ அடாவடியான பொண்ணு மாதிரியே தெரியலையேடா!” என்றார்.

“அனி விடு… இந்தப் பேச்சே வேணாம்” என ஆர்விக் சொல்ல…

“எப்படி விட சொல்ற ஆர்வி. இவ்ளோ பண்ண பொண்ணு… இதுக்குமேல எதுவும் பண்ணமாட்டான்னு எப்படி நம்புறது? தாத்தா சரியான நேரத்துக்கு வந்தார். இல்லைன்னா?” என்றார் அனிதா.

“கேட் கிட்டவே நின்னுட்டு இருந்தான். தாத்தா அவன் பார்வையே சரியில்லைன்னு என்னன்னு விசாரிச்சா, சட்டுன்னு சவுண்ட் விட்டு பிரச்சினை பண்றான். தாத்தா பளார்ன்னு ஒன்னுவிட்டார். ஓடிட்டான்” என்றவள், “தாத்தா வராமாயிருந்திருந்தா, இங்க எங்க கழுத்துல கத்தியை வைச்சு அங்க உன்னை தாலிக்கட்ட வைச்சிருப்பாள்” என்றாள்.

“அதான் ஒண்ணும் ஆகலையே! விடுங்க. அவனே ஏன்டா அழகா பொறந்தோம்ன்னு ஃபீல் பண்றான்” என்று யாஷ் சிரியாது சொல்லியதில், ஆர்விக் அவனை முறைக்க முயன்று பக்கென சிரித்திருந்தான்.

“தாத்தா எங்கம்மா?” ஆர்விக் கேட்க,

“அவர் அந்த அரசியல்வாதியை பார்த்து பேசிட்டு வர்றேன்னு போயிருக்கார்” என்ற நிதாஞ்சனி, “நான் ஆபீஸ் கிளம்புறேன். நூன் ஷிஃப்ட். அந்த மேனேஜர் மண்டையன் வந்தே ஆகணும் சொல்லிட்டான்” என்ற நிதாஞ்சனி அலுவலகம் செல்ல ஆயத்தமாகினாள்.

“அன்வி கால் பண்ணா ஆர்வி. உன்னை ரீச் பண்ணவே முடியலன்னு சொன்னாள்” என்ற அனிதா, “நீ பேசிடு” என ஓய்வெடுப்பதாக அறைக்குள் சென்றார்.

ஆர்விக்கின் முகம் யோசனையில் இருந்திட…

“என்னடா டீப் திங்கிங்?” என்றான் யாஷ்.

“நிதா சொல்ற மாதிரி அந்த இனியா வேறெதுவும் செய்தால்?” என கேள்வியாய் நிறுத்தினான் ஆர்விக்.

“அவள் என்ன பண்ணப்போறான்னு எப்படிடா கண்டுபிடிக்க முடியும்? இப்போ மாதிரி நடந்த பிறகு தடுக்க வேண்டியது தான்” என்றான் யாஷ்.

“இல்லைடா… அவள் என் பின்னாடி சுத்துறது எனக்கு ஒரு மாதிரி இருக்கு” என்ற ஆர்விக், “அவள் நான் மறுக்கிறேன்னதும் சைலண்டா ஒதுங்கி நின்னிருந்தா அவள் மேல் எனக்கொரு சாஃப்ட் கார்னர் வந்திருக்குமோ என்னவோ? இப்போ அவளை நினைச்சாலே எரிச்சலா வருது. பசங்களே செய்ய யோசிக்கிற விஷயம். அசால்ட்டா ஆளுங்களை வைச்சு… என்னலாம் பண்ணிட்டாள்” என நடந்ததிலிருந்து மீள முடியாது புலம்பினான்.

“அம்மாவை பேச வேண்டாம் சொல்லிட்டு நீ பேசிட்டு இருக்க?” என யாஷ் கேட்க,

“இனி யாருமே பேச வேண்டாம்” என்று உள் வந்தார் லட்சுமணன்.

“ஹாய் எங் மேன்” என்று எழுந்து அவரை அணைத்த ஆர்விக், அவரின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்து விலகினான்.

“ஆர்வி” என்று வாஞ்சையாக பேரனின் கன்னம் வருடிய லட்சுமணன்,

“இனியா சாப்டர் ஓவர்” என்றார்.

“நிஜமாவா? அப்படியென்ன பண்ணீங்க?” என கதை கேட்கும் பாவனையில் யாஷ் வினவினான்.

“நாச்சிமுத்து தங்கச்சி பொண்ணு தான் இனியா. அவர் நல்ல மனிதர். பார்க்க கட்சி ஆபிசுக்கு போயிட்டேன். எக்ஸ் மிலிட்டரி மேன் சொல்லிதான் உள்ள போனேன். நடந்ததை சொன்னதும் ரொம்ப வருத்தப்பட்டார். அவருக்குத் தெரியாமதான், அவரோட கட்சி ஆளுங்களை வைச்சி அந்தப்பொண்ணு இதை பண்ணியிருக்கு” என்று இருக்கையில் அமர்ந்தார்.

“அப்போ நம்மகிட்ட அவருக்குத் தெரியும்னு பொய் சொல்லியிருக்கா ஆர்வி” என்றான் யாஷ்.

“எஸ்… நாம போலீஸ் கூப்பிட்டிடக் கூடாதுன்னு அவருக்குத் தெரிஞ்சுதான் பண்றேன்னு சொல்லியிருக்கா” என சரியாக யூகித்துக் கூறினான் ஆர்விக்.

“வயது கோளாறுல தெரியாம பண்ணியிருப்பாள். நான் கண்டிக்கிறேன். இனி உங்க பையனுக்கு எங்க பொண்ணால தொந்தரவு வராதுன்னு சொன்னார்” என்ற லட்சுமணன்,

“உனக்கு கல்யாணம் ஆகிட்டாலே இந்த பிரச்சினை முடிஞ்சிடும் ஆர்வி. நானும் இன்னும் எத்தனை நாளுக்கு உயிரோட இருப்பேன்னு சொல்ல முடியாது. நான் நடையும் உடையுமா இருக்க என் பொண்ணு படுக்கையில் விழுந்து எழுந்திருச்சிருக்காள். இப்படியாகிப்போச்சேன்னு அவளை பார்க்க கிளம்பி வந்தா, உன் பிரச்சினை. எங்க காலம் நல்லாயிருக்கும் போதே உனக்கு ஒரு நல்லது நடந்திடனும் ஆர்வி. உன் முடிவு என்ன?” எனக் கேட்டார்.

ஆர்விக் மௌனமாக யாஷை ஏறிட்டுப் பார்க்க…

“இதெல்லாம் கேட்டா தாத்தா செய்வாங்க. பெரியவங்க நீங்களா பார்த்து செய்தா செய்துக்கப்போறான்” என்ற யாஷ், “அப்படியே எனக்கும் ஒரு பொண்ணைப் பார்த்து கட்டி வைச்சு, மேல் வீட்டை என் கல்யாணத்துக்கு சீதனமா என் பேர்ல எழுதி வைச்சிடுங்க. லைஃப் லாங் இவனோடவே இருந்திடுறேன்” என்றான்.

“அதுக்கென்ன… உனக்கு இல்லாததா” என யாஷின் கன்னம் தட்டியவர், “போன முறை வந்தப்போ ஆர்வி கல்யாணப்பேச்சு பேசினதுக்கு, ஒரு பொண்ணுமேல ஆர்விக்கு விருப்பம் இருக்கிறதா அனிதா சொன்னாள். அந்தப்பொண்ணு யாருன்னு சொன்னா, போய் கேட்கலாம்” என்றார்.

ஆர்விக் அமைதியாக அவ்விடம் விட்டு எழுந்து சென்றிட…

“அது முடிஞ்சிப்போனது தாத்தா. நீங்க உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணு யாராவது இருந்தா சொல்லுங்க. சீக்கிரமா மேரேஜ் வேலையை ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றான்.

“அவனைவிட உனக்கு அவசரம் போலயே!” லட்சுமணன் சிரித்திட,

“அவனுக்கு ஆனா தான எனக்கு பொண்ணு பார்ப்பீங்க” என்ற யாஷ்,

“அவன் லைஃப் வலியில்லாம இருக்கணும் தாத்தா. அதை நான் பார்க்கணும்” என்றான்.

“ரொம்பவே டீப் லவ்வா?” தாத்தா கேட்க,

“ஆமா ஆமா… விட்டா காலை கனவினில் தினமும் காதல் கொள்கிறேன் அப்படின்னு பாட்டு பாடுவான்” என்ற யாஷ் அனைத்தும் அவரிடத்தில் கூறியிருந்தார்.

“இந்த காலத்து பிள்ளைகளை புரிஞ்சிக்கவே முடியல. எல்லாம் சரியா செய்யறாங்க நினைச்சா, இப்படி எதாவது ஒன்றில் மொத்தமா சரிக்கிடுறாங்க” என்றார்.

“நானெல்லாம் அப்படியில்லை தாத்தா. நான் ரொம்பவே ஸ்மார்ட்” என்று யாஷ் சொல்ல,

“ஆமா ஆமா ஊருக்குள்ள நாலு பேர் சொல்லிட்டாங்க தாத்தா” என்று வந்தாள் நிதாஞ்சனி.

“என்னை டேமேஜ் பண்றதுதான் இவங்களுக்கு வேலை. அதுவும் அக்காவும் தம்பியும் ஒண்ணு சேர்ந்தா அவ்ளோதான்.”

“பொய் சொல்றான் தாத்தா… இவனுங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் என்னை டோட்டல் டேமேஜ் பண்றாங்க” என நிதாஞ்சனி லட்சுமணனிடம் புகார் வாசித்தாள்.

“நம்பாதீங்க தாத்தா…” என யாஷ் கூற,

“போடா” என்றவள், “ஆர்வி” என அழித்தாள்.

“கிளம்பியாச்சா?” என்று வந்த ஆர்விக், “இங்கவே தங்கிக்கலாமே” என்றான்.

உண்மையில் அவள் உடனிருந்தது, கடினமான சூழலில் ஆறுதலாக இருந்தது. முன்னர் கேட்டதைப்போன்று இல்லாமல் இம்முறை உரிமையாகவேக் கேட்டிருந்தான்.

“மார்னிங் நான் கால் பண்றேன். நீ என் பிஜி வந்திடு ஆர்வி. என்னோட திங்க்ஸ் கொண்டு வந்திடலாம்” என்ற நிதாஞ்சனி, அனிதாவின் அறையை ஒருமுறை எட்டிப் பார்த்தவளாக, “அம்மாவோட யாராவது ஒருத்தங்க எப்பவும் கூடவே இருக்கணும் ஆர்வி. அட்லீஸ்ட் அவங்க ஸ்டேபிள் ஆகிறவரை” என்றாள்.

“கரெக்ட்” என்ற யாஷ், “இவன் நார்மல் ஆகிட்டாலே அம்மா வில் பீ ஃபுல்லி ரெக்கவர்ட்” என்றான்.

ஆர்விக் யாஷை முறைக்க…

“உண்மையைதான சொல்றான்” என்றார் லட்சுமணன்.

“நான் தான் நீங்க என்ன பண்ணாலும் சரின்னு சொலிட்டனே! அப்புறமும் ஏன்டா இதையே எல்லாத்துக்கும் ரிலேட் பண்ணி பேசிட்டு இருக்க” என கடுப்பாக நெற்றியைத் தேய்த்தான் ஆர்விக்.

“உன்னை நான் டெக்கரேட் பண்ற வெட்டிங் ஸ்டேஜில் உன்னை உட்கார வைக்காம இதை விடமாட்டேன்” என்றான் யாஷ்.

“உன்னோட முடியலடா” என்று தலையசைத்த ஆர்விக், “நீ இங்க ஸ்டே பண்ண அப்பா, அம்மாகிட்ட பேசணுமா நிதா?” எனக் கேட்டான்.

“நானே பேசிட்டேன் ஆர்வி. அம்மாவும், அனிதா அம்மாவும் என் மூலமா ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க. நல்ல க்ளோஸ். அம்மாக்கு இப்படின்னு சொன்னதுமே கார்த்திகா அம்மா ஓகே சொல்லிட்டாங்க” என்றாள்.

“ஹோ… அப்போ அம்மா அடிக்கடி, சமையல் குறிப்பு, சீரியல் கதையெல்லாம் போன் டாக் பண்ற கார்த்திகா உங்க அம்மா தானா?” என்ற யாஷ், “அப்புறம் என்ன இனிமே ஒண்ணா கும்மியடிக்க வேண்டியதுதான்” எனக்கூறி, ஆர்விக், நிதாஞ்சனியிடமிருந்து சில பல கும்மிகளை பெற்றுக்கொண்டான்.

“நானும் ஆபீஸ் போயிட்டு வர்றேன் தாத்தா. பூபேஷ் நைட் பார்ட்டி புக் பண்ணியிருந்த கஸ்டமர் லாஸ்ட் மினிட் ஃப்ளவர் டெக்கரேஷன் வேணும்னு சொல்றாங்கன்னு கால் பண்ணான் யாஷ்.” தாத்தாவிடம் ஆரம்பித்து யாஷிடம் கூறினான்.

“நான் வரவேணாமா?” யாஷ் கேட்க,

“அப்போ நீ போடா… நான் இருக்கேன்” என்றான் ஆர்விக்.

“ரெண்டு பேரும் போகணும்னாலும் போங்க… நான் பார்த்துக்கிறேன். இப்போதான தூங்கினாள். எழ நேரமாகுமே” என்றார் லட்சுமணன்.

“இருக்கட்டும் தாத்தா நான் போகல… ஆர்வியே மேனேஜ் பண்ணிடுவான்” என்று யாஷ் சொல்லிட, ஆர்விக் நிதாஞ்சனியை அழைத்துகொண்டு புறப்பட்டிருந்தான்.

இருவரும் சென்றதும் அனிதா அறையிலிருந்து வெளியில் வந்தார்.

“நீங்க தூங்கலையா?” யாஷ் புருவத் தூக்கலோடு கேட்டிட…

“இனியொருமுறை ஆர்விக்கு வேற பொண்ணு பாக்குறதைப்பற்றி நீ பேசினா… அவ்ளோதான். அதை சொல்லியே அவனை கஷ்டப்படுத்துற நீ” என யாஷின் அருகில் அமர்ந்து அவனின் தோளிலே அடித்தார் அனிதா.

“அப்போ அவன் லைஃப் இப்படியே இருக்கட்டும்… நீங்களும் அதை நினைச்சு ஃபீல் பண்ணி, எங்களை பயம் காட்டிட்டே இருக்கன்னு சொல்றீங்களா?” என்றான் யாஷ்.

“நான் எங்கடா அப்படி சொன்னேன்?”

“இப்போ நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தமாம்?” என்ற யாஷ், “அவன் கண்டிப்பா அன்வியிலிருந்து வெளியவரமாட்டான்… உங்களுக்காக சரின்னு சொல்லிட்டு உள்ளுக்குள்ள உடைஞ்சிட்டு இருக்கான். அதான் அவனை ஓபன் அப் பண்ண வைக்கலாம்னு சீண்டுறேன். அசராம அமைதியா இருக்கான்” என்றான்.

“அவனோட இந்த அமைதிக்கு பின்னால் தான் எல்லாத்தையும் ஒளிச்சு வைச்சிக்கிறான்” என்றான் லட்சுமணன்.

“ம்ம்…” என்ற அனிதா, “எனக்கொரு யோசனை ப்பா… அதை உங்ககிட்ட பேசலான்னு தான் ஆர்வி இல்லாத நேரத்தை எதிர்ப்பார்த்திருந்தேன்” என்றார்.

“ஆர்விக்கு தெரியாம பிளான் பண்றோமா?” யாஷ் கேட்க,

“ஆமா” என்றார் அனிதா.

“நீங்களா மம்மி? ஆர்விக்கு தெரியாம ஒரு விஷயம் பண்ணப்போறது?” என்று அதிர்வதைபோல நெஞ்சில் கை வைத்தான் யாஷ்.

“அவனுக்கொரு நல்லது நடக்குது அப்படின்னா மறைக்கிறதுல தப்பில்லை” என்ற அனிதா, “நான் சொல்றதை கேளுடா” என தன்னுடைய எண்ணத்தைக் கூறினார்.

“நல்லாதான் இருக்கு ஐடியா!” யாஷ் சொல்ல…

“சரி வருமா அனிதா?” எனக் கேட்ட லட்சுமணன், “ஒத்து வந்தா அவன் ஆசைப்பட்டது அமையும்” என்றார்.

“நாமெதுக்குப்பா இருக்கோம்? அமைச்சிக் கொடுப்போம். எனக்காக அவன் ஆசையை விட்டுக்கொடுக்கும் போது, அவனுக்காக நான் இதை செய்யலாமே!” என்றார்.

“கண்டிப்பா… இப்படியொரு வழி இருக்குங்கிறப்போ முயற்சி செய்யுறதுல தப்பில்லையே” என்றார் தாத்தா.

“எஸ்…” என்ற யாஷிடம்,

“நீ முடியாது சொல்லுவேன்னு பார்த்தேன்” என்றார் அனிதா.

“எனக்குமே இந்த ஐடியா மனசுல இருந்துச்சு. எல்லாம் நார்மல் ஆனதும் உங்கக்கிட்ட பேசலாம் இருந்தேன்” என யாஷ் சொல்லிட,

“அடப்பாவி” என்ற அனிதா, “அப்புறம் எதுக்குடா அவனை வார்த்தையால குத்திக்கிட்டே இருந்த” என்றார்.

“அதான் சொன்னனே… எங்க? வாய் திறப்பனான்னு இருக்கான். உங்களுக்காகன்னு ஒரு முடிவெடுத்துட்டா அதிலிருந்து நிச்சயம் பின்வாங்கமாட்டான். இப்போ இதுக்கு ஒத்துப்பானா?” என்ற யாஷ்,

“அப்போ எப்போ கிளம்புறோம்?” என்றான்.

“எங்க?” தாத்தா கேட்க,

“பிளான் போட்டா போதுமா? அதை எக்சிக்யூட் பண்ண வேண்டாமா?” என்றான்.

“நீ சொன்னதேதான்… எல்லாம் நார்மல் ஆகட்டும்” என்றார் அனிதா.

“உங்க பிளான் அவனுக்குத் தெரியாம இருந்தா சரி.”

“நான் என்ன பண்ணாலும் ஓகேன்னு சொல்லியிருக்கான் டா” என்ற அனிதா, “நான் சொல்றது தான்” என்றார்.

“அம்மா பிள்ளையா வளர்த்து வைச்சிட்டு வீராப்பா பாரு” என்று யாஷ் அனிதாவின் கன்னத்தில் இடித்திட, லட்சுமணன் சிரித்தார்.

நினைப்பதெல்லாம் எளிதாக நடந்துவிடுமாயின், இங்கு காரண காரியங்களோடு அரங்கேறும் நிகழ்வுகளுக்கு என்ன பொருளோ?

**********************************

“இப்போ கிளம்பி பாதி நேரத்துக்கு போய் சேருவ அன்வி. உன்னை கூட்டிட்டுபோக வர, ஆர்வி தம்பிக்கு தொல்லை” என்று சொல்லிக்கொண்டே, தங்கள் தோட்டத்தில் விளைந்த பழங்களை அன்விதா எடுத்துச்செல்லும் வகையில் பையில் அடுக்கிக் கொண்டிருந்தார் தெய்வானை.

கௌதமின் பேச்சுக்கு ஒரு முடிவு எட்டியதுமே, வீடு ஓரளவிற்கு இயல்பாகியிருந்தது.

“இருக்கட்டும்மா! ஆர்வி அப்படியெல்லாம் நினைக்கமாட்டான்” என்ற அன்விதா, “மேம்க்கு உடம்பு சரியில்லையாம். ஆர்வி ரொம்பவே டவுன் ஆகியிருப்பான். என்கிட்ட யாருமே சொல்லல. நானும் என் பிரச்சினையில் யாரோடவும் பேசவே இல்லை. ரெண்டு நாளா ஆர்வி கால் எடுக்கவே இல்லைன்னு தானுக்கு போன் போட்டா அவள் இப்படின்னு சொல்றாள்” என்றாள்.

“இப்போ எப்படியிருக்கு அவங்களுக்கு?”

“நான் பேசினேன். ஓகேன்னு சொன்னாங்க. இருந்தாலும் நேர்ல போய் பார்த்தாதான் மனசுக்கு நல்லாயிருக்கும்” என்ற அன்விதா, “அங்க நான் தைரியமா இருக்க காரணமே மேம் தான்” என்றாள்.

“இந்தா அன்வி ப்ளூ பெர்ரி கேட்டியே” என்று தோட்டத்திலிருந்து அப்போதுதான் வீட்டிற்கு வந்த சக்தி, “இன்னும் சீசன் ஸ்டார் ஆகலையே! சோ பழம் அதிகமில்லை” என்றான்.

“இதுவே போதும் அண்ணா” என்று அதனை வாங்கி அன்விதா பையில் வைத்திட, “இது யாருக்கு?” எனக் கேட்டார் தெய்வானை.

“எல்லாம் வேண்டியவங்களுத்தான்” என்று வார்த்தையில் அழுத்தம் கொடுத்த அன்விதா, சக்தியை ஓரக்கண்ணால் பார்த்திட, யாருக்கென புரிந்திட்ட சக்தி இதழின் ஓரத்தில் புன்னகையை நெளியவிட்டிருந்தான்.

“அப்பா எங்கம்மா?”

“மனசு ஒரு மாதிரி இருக்கு சுகவனம் அண்ணாவை பார்த்து பேசிட்டு வர்றேன்னு போனார். வர நேரம் தான்” என தெய்வானை சொல்லிக்கொண்டிருக்க கதிர்வேலன் வீட்டிற்குள் வந்தார்.

“என்னப்பா ஃப்ரெண்ட்கிட்ட பேசியாச்சா?” என அன்விதா கேட்க, மகளின் அருகில் வந்த கதிர்வேலன், அவளின் தலையில் கை வைத்தவராக,

“உன்னோட இந்த மாற்றம் எங்களுக்காகன்னு இல்லாம இருந்தா நல்லதுடா” என்றார்.

சட்டென்று அவரை கட்டிக்கொண்ட அன்விதா, “உண்மையாவே அம் ஓகேப்பா… என்னோட சோகம் என்னைவிட உங்களையெல்லாம் கஷ்டப்படுத்தும் அப்படிங்கிறப்போ நான் எப்படி அதிலே இருப்பேன்” என்றாள்.

“அப்பாக்கு இது போதும்டா” என்றவர், “ஆர்வி அம்மாவை நலம் விசாரிச்சேன் சொல்லு” என்றார்.

“சரிங்கப்பா” என்ற அன்விதா, “நான் ஒன்னு சொல்லட்டுமாப்பா?” எனக் கேட்டாள்.

“சொல்லுடா” என்று இருக்கையில் அமர்ந்தார்.

“அண்ணாக்கு மேரேஜ் பண்ணலாமேப்பா! இனிமே அவங்க வந்து பிரச்சினை பண்ணுவாங்கன்னு யோசிக்க வேண்டாமே” என்றாள்.

“நானும் அம்மாவும் கூட அதான் பேசிக்கிட்டோம். வரும்போது கூட பொன்னுசாமி எதிர்பட்டார். என்னாச்சுன்னு கேட்டார். ரெண்டு நாளுல சொல்றேன் சொல்லிட்டு வந்திருக்கேன்” என்றவர், “நீயென்ன சொல்ற சக்தி?” எனக் கேட்டார்.

“எனக்கு ஓகே தான்ப்பா!”

“அப்போ மொத ஒரு பொண்ணு வந்ததே… பொன்னுசாமி அண்ணனை அவங்ககிட்ட பேச சொல்லுவோமா?” என ஆர்வமாகக் கேட்டார் தெய்வானை.

சக்தி, அன்விதா பார்வை ஒன்றாக இணைந்து பிரிந்தது.

“அது வேண்டாம்மா! நான் சொல்றேன்” என்ற சக்தி, “ரெடியா அன்வி? கிளம்பலாமா?” என்றான்.

“ஹான்… போலாண்ணா!”

இருவரும் வண்டியில் சென்று கொண்டிருக்க, வெண்மதி கல்லூரி பேருந்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்.

அவளருகில் சக்தி வண்டியை நிறுத்திட,

“ஹாய் மாமா, அன்வி” என்ற வெண்மதி, “சென்னைக்கா?” எனக் கேட்டாள்.

“ஹ்ம்ம்… கிளம்பியாச்சு” என்று அன்விதா சொல்ல…

“உன் ஆபீசுக்கு என்னையெல்லாம் எப்போ கூட்டிட்டுப்போய் காட்டுவ அன்வி?” எனக் கேட்டிருந்தாள் வெண்மதி.

“என் ஆபீஸ் பார்க்க உனக்கென்ன ஆர்வம்?” அன்விதா புருவம் உயர்த்தினாள்.

“ஆர்வம் அப்படின்னு எதுவுமில்லை. பீச் வீவ்… உங்க தீம் எல்லாம் நல்லாயிருக்கே. சோஷியல் மீடியா உங்க போஸ்ட் பார்த்து நேர்ல பார்க்கணும் தோணுச்சு” என்றாள்.

“ஹோ… எக்ஸாம் முடியட்டும். லீவுக்கு கூட்டிட்டுப்போறேன்” என அன்விதா சொல்ல…

“ஓகே மதி. பார்த்து போ!” என சக்தி வண்டியை முடுக்கியிருந்தான்.

காலையில் வீட்டில் என்ன நடந்ததென்று தெரிந்துகொள்ள வேண்டுமென்ற எண்ணம் கூட அன்விதாவுக்கு எழவில்லை. இனி அவ்வீட்டில் அவர்களுக்கு வெண்மதி மட்டுமே வேண்டுமானவள்.

பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்திட்ட சக்தி…

“மார்னிங் அந்தப்பொண்ணு உன்கிட்ட பேசினது நினைச்சு நீ எதுவும் ஃபீல் பண்ணலயே அன்வி?” எனக் கேட்டான் சக்தி.

“அதான் சொன்னீங்களே… நமக்கு சம்பந்தமில்லாததை நினைச்சு நம்மளை நாம வருத்திக்கக்கூடாதுன்னு… அன்வி இப்போ ரொம்பவே சில்லாகிட்டேன்” என்று புன்னகைத்திருந்தாள்.

தங்கையின் அந்த புன்னகையில் தான் சக்தியின் மனம் அமைதி கொண்டது.

முடிந்த ஒன்று மீண்டும் உயிர்த்திடக் கூடாதென்பதே சக்தியின் அந்நேர எண்ணமாக இருந்தது.

அப்படி மீண்டும் கௌதமின் குறுக்கீடு அன்விதாவின் வாழ்வில் இருக்குமாயின், அங்கு அவளுக்கு துணையாக நிற்கப்போவது சக்தி மட்டுமல்ல… அவளின் வாழ்வாகப்போகிறவனும்.

அன்விதா சென்னை சென்று சேர, அடுத்தநாள் அவளை நேரில் சந்தித்து தன்னுடைய காதலுக்கு உதவுமாறு கேட்டிருந்தாள் இனியா.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 44

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
37
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. Intha iniyaku vera velaiye illaya sis .. story supera pokuthu sis..

    1. Author

      அவளுக்கு ஆர்வியை லவ் பண்றதுதாம் வேலையாம் சிஸ்…

      மகிழ்ச்சி… மனமார்ந்த நன்றி ❤️