
காலை கனவு 28
ஆர்விக் “வர முடியாது” என சொல்லியதும்,
இரண்டு வெள்ளை வேட்டியும்,
“தலைவர்கிட்ட போய் சொல்லுவோம்” என நகர, அனிதா வந்தார்.
நடந்த பேச்சுக்களை கேட்டிருந்தவர்,
“கூப்பிட்ட மரியாதைக்கு போயிட்டு வா ஆர்வி. பதவியில் இருக்கிறவர் வேற… நேர்ல பார்த்து தன்மையா உன் முடிவை சொல்லிட்டு வா” என்றார்.
“அனி…” என்று பார்த்த ஆர்விக், அனிதா கண்கள் மூடி திறந்ததில்,
“ஓகே!” என்றான்.
“நீ மட்டும் போக வேண்டாம். நானும் வர்றேன்” என யாஷும் அவனுடன் சென்றான்.
“எங்க கார்லே போலாம்.”
ஆர்வி அவனது வண்டிக்குச் செல்ல இருவரில் ஒருவன் சொல்லியிருந்தான்.
“முடியாது!” ஆர்விக் பட்டென்று சொல்லிட…
“இது எங்க தலைவரோட பாதுகாப்புக்கு. கூட்டிட்டுப்போற நாங்களே, கொண்டுவந்து விடவும் செய்வோம்” என்றான் மற்றொருவன்.
ஆர்வி யாஷை பார்த்து இடவலமாக தலையசைத்தான்.
“போயிட்டு வந்திடுவோம் ஆர்வி. அவள் தான் கேட்கல. அவராவது புரிஞ்சிக்கட்டுமே” என்று யாஷ் சொல்ல, மறுக்காது அவர்களின் வாகனத்தில் ஆர்விக் ஏறினான்.
வண்டி புறப்படுவதற்கு முன்,
“அம்மாவை பார்த்துக்கோ நிதா” என்றிருந்தான் ஆர்விக்.
அவனது விழிகள் தங்கள் வீட்டு முன், சாலையோரம் வெள்ளை வேட்டியில் ஒருவன் நின்றிருப்பதை ஆராய்வாகப் பார்த்தான்.
காரில் தன்னுடைய பக்கத்தில் அமர்ந்திருந்தவன், அவனுக்கு கண்கள் காட்டுவதை கவனியாது கவனித்தான் ஆர்விக்.
வாகனம் நாச்சிமுத்துவின் வீடிருக்கும் திசையில் செல்லாது வேறு பக்கம் சென்றது.
“உங்க தலைவர் வீடு இந்த ஏரியா இல்லையே!” ஆர்விக் கேட்க,
“எங்கடா கூட்டிட்டுப் போறீங்க?” என்றான் யாஷ்.
“எங்கன்னு சொன்னாதான் வருவீங்களோ?” என்ற தடியன், “பேசாம வரணும். இல்லை” என சட்டையைத் தூக்கி இடையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காண்பித்தான்.
“இதெல்லாம் காட்டினா பயந்திடுவோமா?” என்ற ஆர்விக், “நீ டோர் ஓபன் பண்ணி ஜம்ப் பண்ணுடா யாஷ். என்ன பண்ணிடுவானுங்க பார்ப்போம்” என்றான்.
“அடேய் அமைதிக்கு பொறந்தவனே! இன்னைக்கு என்னடா ஆச்சு உனக்கு. பொசுக்கு பொசுக்குன்னு சவுண்ட் விடுற” என்று ஆர்விக்கின் கையை பிடித்த யாஷ், “அவன் வைச்சிருக்கிறது துப்பாக்கிடா. என்னதான் நடக்குது பார்ப்போம்” என்றான்.
“எப்படி அமைதியா இருக்க சொல்ற? கூட்டிட்டு வர சொன்னாங்கன்னு சொல்லிட்டு, ஏதோ கடத்திட்டுப்போற மாதிரி போறாங்க” என்ற ஆர்விக், தன்னுடைய அலைபேசி ஒலிக்கவே, சட்டை பையிலிருந்து எடுக்க, ஆர்விக்கின் அருகில் அமர்ந்திருந்தவன் வேகமாக அதனை பறித்திருந்தான்.
“ம்ப்ச்… என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்ற ஆர்விக், “டிரைவர் கார் ஸ்டாப் பண்ணுங்க” என்றான்.
“பண்ணாதய்யா நீ” என்று யாஷுக்கு பின்னால் அமர்ந்திருந்த தடியன், யாஷின் கழுத்தில் கத்தியை வைத்தவனாக,
“போய்ச்சேருற வரை கம்முன்னு வரணும். இல்லை ஒரே கோடு தான்” என அவன் கிழிப்பதைப்போல் காண்பித்தான்.
“டேய் எப்பா… உன்னோட மொத்த பொறுமையையும் இப்போ காட்டு நீ” என்ற யாஷ், “நம்மளை மீறி என்ன நடந்திடும். அமைதியா இரு ஆர்வி” என்றான்.
“தான்யாகிட்டேர்ந்து மெசேஜ் வந்தது. என்னன்னு தெரியல” என்ற ஆர்விக், மூச்சினை இழுத்து இதழ் குவித்து ஊதியவனாக தன்னை சமன்படுத்தினான்.
“என்னடா?” யாஷ் கேட்க,
“ரெஸ்ட்லெஸ்ஸா இருக்கு யாஷ்” என்றான் ஆர்விக்.
“பீ காம்” என்ற யாஷ், பிடித்திருந்த ஆர்விக்கின் கையில் அழுத்தம் கொடுத்தான்.
ஆர்விக் அக்கணம் மெல்ல புன்னகைக்க…
“என்னவாம்?” என்றான் யாஷ்.
“எப்பவும் நீ துள்ளுவ… நான் காம் பண்ணுவேன் உன்னை. இன்னைக்கு அப்படியே உல்ட்டாவா இருக்கே.”
“தெரியல” என்ற யாஷ், “என்னவோ இந்த இனியா பிரச்சினை முடிஞ்சிட்டா போதும்னு இருக்கு” என்றான்.
இனியாவின் பெயரை சொல்லியதும்,
“பேசாம வாங்க” என்று ஒருவன் உறுமினான்.
“கை முட்டி வைச்சு அவன் வயித்திலே ஒரு பஞ்ச் கொடுக்கவா?” ஆர்விக் யாஷின் தோளில் சரிந்து மென்குரலில் கேட்க,
“இன்னும் இந்த சீன் அந்தளவுக்கு போகல” என்றான் யாஷ்.
“எஸ்…” என்ற ஆர்விக்,
“ஆக்சுவலி உங்க பிளான் தான் என்ன?” என்றான். இரு தடியன்களிடமும்.
“உன்னை கூட்டிட்டு வரச்சொன்னாங்க, அவ்ளோதான்” என்றான் ஒருவன். விறைப்பாக.
சில நிமிடங்களில் நகரத்தின் எல்லைத்தாண்டி கோவில் ஒன்றின் முன் வண்டி நின்றது.
“இங்கவா?” ஆர்விக், யாஷ் ஒன்றாக வினவினர்.
“ஆமா! இறங்குங்க.”
“கோவிலுக்கு எதுக்கு?”, ஆர்விக்.
“இங்கதான் சாமி கும்பிட வந்திருக்காங்க.”
“ஹோ வந்த இடத்தில் பேச்சு வார்த்தையை முடிச்சிடலாம் நினைச்சிருப்பார். நீ வாடா! என்னன்னு கேட்டு பதிலை சொல்லிட்டு கிளம்பிடுவோம்” என்ற யாஷ், “புது புராஜெக்ட் ஒன்னு வந்திருக்குன்னு நேத்து பூபேஷ் சொன்னான்” என்றான்.
“அவனே எதிர வர்றான் பாரு” என்று ஆர்விக் சொல்ல…
“நீ இங்க என்னடா பண்ற?” என அருகில் வந்த பூபேஷிடம் யாஷ் வினவினான்.
“நீ கூட்டிட்டு வர சொன்னான்னுதான்டா ஆபிஸிலிருந்த என்னையும், தானுவையும் ரெண்டு பேர் வந்து கூட்டிட்டு வந்தானுங்க. இங்க வந்தா கோவிலையே இவனுங்க கட்டுப்பாட்டில் வைச்சிருக்காங்க. எல்லாம் வெள்ளை வேட்டி கட்டின ரவுடிங்க” என்ற பூபேஷ், “என்ன நடக்குது கேட்டால் ஒருத்தனும் வாய் திறக்கல. துப்பாக்கியை எடுத்துக் காட்டுறானுங்க. பத்து பேர் இருக்கானுங்க” என்றான்.
“தான்யா எங்கடா?” ஆர்விக் கேட்க,
“அங்க அந்த தூணுக்கு ஒருத்தன் காவல் நிக்கிறான் பாரு. அவனுக்கு முன்னதான தான்யாவை நிறுத்தி வைச்சிருக்கானுங்க” என்றான்.
“ஏன்?” யாஷ் கேட்க,
“நான் அமைதியா நிக்கிறதுக்கு” என்றான் பூபேஷ்.
“என்னடா உளர்ற?”
“யாருக்கோ கல்யாணம் போலடா இங்க” என்ற பூபேஷ், “ஆனா நம்மளை ஏன்டா கூட்டிட்டு வந்தானுங்க?” என்றான்.
ஆர்விக் வேகமாக யாஷை பார்த்திட,
“நான் நினைக்கிறதைதான் நீயும் நினைக்கிறியா மச்சான்” என்றான் யாஷ்.
“அதேதான்” என்ற ஆர்விக்,
“டேய் போலாம் வா” என்றதோடு, “தான்யா” என அவளையும் அழைத்தான்.
தடியனின் மறைவிலிருந்து எட்டிப்பார்த்த தான்யா, “ஆர்வி” என அருகில் வந்திட, கோவில் கதவு மூடப்பட்டது.
“இந்தா இதைப்போட்டுக்க” என்று ஒருவன் மாலையை ஆர்வியிடம் நீட்டிட…
“ஒழுங்க டோர் ஓபன் பண்ணுங்க” என்றான் ஆர்விக். மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு நிமிர்ந்து நின்று.
“ஆர்வி என்னடா? என்ன நடக்குது இங்க?” என தான்யா மூவரின் பக்கமும் நின்றிட,
“எனக்கு மேரேஜ் பண்ணி வைக்க பிளான்” என்றான் ஆர்விக்.
“யாருடா இவனுங்க? உனக்கு சொந்தமா? உனக்கு அம்மா தான மேரேஜ் பண்ணி வைக்கணும்?” என பூபேஷ் கேள்வி கேட்க,
“டேய் இதெல்லாம் அந்த இனியா பிளான் டா” என்றான் யாஷ்.
“தெரிஞ்சுமா இங்க வந்தீங்க?” என்றாள் தான்யா.
“இங்க வந்ததும் தான் தெரிஞ்சுது” என்று கடுப்போடு ஆர்விக் சொல்ல, மண்டபத்தின் பின்னிருந்து முழு அலங்காரத்தில் இனியா வந்தாள்.
“சும்மா லவ்வுன்னு சுத்தி வர்றான்னு பார்த்தா… இவ்வளவு தூரம் பிளான் பண்ணியிருக்காள்” என்றான் பூபேஷ்.
“என்ன பண்றது பூபேஷ்… நானும் ரொம்ப சாஃப்ட்டா லவ் பண்ணலாம் நினைச்சேன். ஆனால் உங்க ஃப்ரெண்ட் அதுக்கு ஒத்து வரலையே! அதுக்குத்தான் இந்த அரேன்ஜ்மென்ட்ஸ். எப்படி இருக்கு?” என்ற இனியா, அடியாளிடமிருந்த மாலையை வாங்கி, “நானே போட்டுவிடுறேன்” என ஆர்விக்கின் முன் செல்ல, ஆர்விக் தன்னைப்போல் பின்னால் நகர்ந்தான்.
“திஸ் இஸ் த லிமிட் இனியா” என்ற ஆர்விக், “உன் வீட்ல உன்னை எதுவும் கேட்கமாட்டாங்களா? எவ்வளவு தைரியம் உனக்கு?” என்றான்.
“என் மாமாகிட்ட உன்னை லவ் பண்றேன், நீ ஒத்துவரமாட்டேங்கிற சொன்னேன். கல்யாணத்தை முடிச்சிட்டு சொல்லுன்னு சொல்லிட்டார். அவருக்கு இருக்க பிஸியில் இதுக்கெல்லாம் டைம் இல்லை” என்றவள், “மாலையும் கழுத்துமா போய் நிப்போம்” என்றாள்.
“இது ரொம்பவே தப்பு இனியா” என்ற யாஷ், “இதென்ன அராஜகம்” என்றான்.
“வேறென்ன பண்றது யாஷ்? இவங்க அம்மாகிட்டவும் பேசி பார்த்துட்டேன். ரொம்ப நல்ல அம்மா போல அவங்க, என் பையனுக்கு பிடிக்காதது எனக்கும் பிடிக்காது சொல்லிட்டாங்க. சோ” என்று இடைநிறுத்தி, “எனக்கு வேறவழி… நோட் திஸ் பாயிண்ட், வேறவழியில்லாம தான் இப்படியொரு பிளான் போட வேண்டியதாகிடுச்சு” என்றாள்.
“நீ இந்த ஏற்பாடெல்லாம் பண்ணிட்டா… நான் ஓகே சொல்லிடுவேன்னு நினைச்சியா?” என்ற ஆர்விக், “நீங்க வாங்க போலாம்” என தன்னுடைய நண்பர்களை அழைத்தவனாகத் திரும்பிட…
“நீ அடங்கி ஏத்துக்கிற ஆளு இல்லைன்னு நல்லாவே தெரியும்” என்றாள் இனியா.
“அதான் தெரியுதே! அப்புறம் இதெதுக்கு?” என்றான் யாஷ்.
“என்னவோ எப்படியாவது உன் ஃப்ரெண்டை லவ் பண்ண வைச்சிடனும் தோணுது. தாலி கட்ட வச்சிட்டா, ஆட்டோமேட்டிக்கா லவ் வந்திடும்ல” என்றவள், “சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம். மேரேஜ் முடிஞ்சதும் முறையா உங்க வீட்டுக்குப்போய் நிறைய பேசலாம்” என்றாள்.
“காமெடி பண்ணாம கிளம்பு நீ” என ஆர்விக் சொல்ல…
“காமெடியா பக்காவா பிளான் பண்ணி உன்னைத் தூக்கியிருக்கேன்” என்றாள் இனியா.
“இவனை தூக்கினது ஓகே! எங்களை எதுக்கு?” என யாஷ் கேட்க, “உன்னை வரவைக்கிற பிளானே இல்லை. ஆர்வி சைட் சாட்சி கையெழுத்துக்காக இவங்களை தூக்கினேன்” என்று தான்யா, பூபேஷை காட்டியவள், “நீயா வந்து மாட்டிக்கிட்ட” என்று தோள் குலுக்கினாள்.
“ஓகே… இங்கிருந்து நான் போகணும். அதுக்கு என்ன பண்ணனும்?” ஆர்விக்கின் ஆழமான நிதானம் அவன் முடிவினை எடுத்துவிட்டான் என்பதை உணர்த்திடும். அதை அறிந்திருந்த நண்பர்கள் மூவரும் ஆர்விக்கின் கண் அசைவிற்காக முனைப்போடு காத்திருக்கத் துவங்ககினர்.
“ஐயர் ரெடி… தாலி ரெடி… ரிஜிஸ்டரர் ரெடி… என் ஃப்ரெண்ட்ஸ் உங்க ஃப்ரெண்ட்ஸ் ரெடி… தாலி கட்டிட்டு என்னை கூட்டிட்டுப் போயிட்டே இருக்கலாம்” என்றாள்.
“முடியாது!” ஆர்விக் அழுத்தமாக உரைத்திட…
“உனக்கு உன் அம்மாவை ரொம்ப பிடிக்கும்ல?” என்றாள் இனியா.
ஆர்விக் அவளின் வார்த்தையின் பொருளை புரிந்துகொள்ள யோசனையாக புருவம் சுருக்க…
“ஹேய்… அம்மாவுக்கு என்ன?” என்று அவளின் முன்பு சீறிக்கொண்டு முகம் காண்பித்த யாஷ், “அம்மாவை எங்க வைச்சிருக்க? இங்க கூட்டிட்டு வந்திட்டியா? அவங்க இப்போதான் உடம்பு முடியாம சரியானாங்க. அம்மாவை எதுவும் பண்ண உன்னை நானே கொன்னுடுவேன்” என்று கத்திட,
“நாங்க இருக்கும்போதே மேடத்தைப் பார்த்து துள்ளுறியா?” என தடியன் ஒருவன் யாஷை அடிக்க வர, நொடியில் யாஷுக்கு முன் வந்து, தடியனின் முகத்திலே குத்து விட்டிருந்தான் ஆர்விக்.
“இன்னொருவாட்டி மேல கை வைக்க வந்த” என்று விரல் நீட்டி எச்சரித்தான் ஆர்விக்.
இனியா சிரித்திட,
“அம்மா ரொம்ப பிடிக்கும். அதுக்காக அவங்களை வைச்சு கார்னர் பண்ணலாம் நினைக்காத” என்றான்.
“அப்போ உங்க அம்மாவுக்கு ஏதாவதுன்னாலும் நீ தாலி கட்டமாட்டியா ஆர்விக்?”
“ஆர்வி இது விளையாட்டு இல்லை. இவள் எதுவும் பண்ணாம இப்படி கேட்கமாட்டாள்” என்ற யாஷ், “நான் அம்மாவுக்கு கால் பண்றேன்” என அலைபேசியை எடுக்க,
“அவ்வளவுக்கு சீன் இல்லைடா” என்று நண்பனின் தோளில் கைப்போட்டு அவனை அமைதிப்படுத்தினான் ஆர்விக்.
அம்மா என்று சொல்லியும் ஆர்விக் பொறுமையாக இருந்திடவே, யாஷ் மெல்ல நிதானத்திற்கு வந்திருந்தான்.
“ஆர்வி…”
“சில் டா!”
“அம்மா அங்க ரொம்பவே சேஃப். இவள் இங்க நம்மளை டிகர் பண்றதுக்காக பொய் சொல்றாள்” என தன்னுடைய அலைபேசியை யாஷின் முன்பு காட்டினான்.
“அம்மாவும், நானும் சேஃப் ஆர்வி. தாத்தா வந்திருக்கிறார்” என நிதாஞ்சனி தகவல் அனுப்பியிருந்தாள்.
தன்னிடமிருந்து தடியன் பிடுங்கியிருந்த அலைபேசியை வண்டியிலிருந்து இறங்கும் முன்பு அவனுக்குத் தெரியாது ஆர்விக் எடுத்திருந்தான்.
வீட்டிலிருந்து கிளம்பும் போது, வாயிலில் ஒருவன் சம்மந்தமில்லாது நின்றிருப்பதை கவனித்திருந்த ஆர்விக், யாரும் அறியாது நிதாஞ்சனிக்கு தகவல் அனுப்பினான்.
“எதுவோ சரியில்லை நிதா. யார் வந்தாலும் டோர் ஓபன் பண்ணாத!” என ஆர்விக் அனுப்பிய தகவலுக்குத்தான் நிதாஞ்சனி அவ்வாறு பதில் அனுப்பியிருந்தாள்.
“இவனுங்க பார்க்கவே தடியா இருக்கானுங்க. தாத்தாவால சமாளிக்க முடியுமா?” என்றான் பூபேஷ்.
“அவர் எக்ஸ் மிலிட்டரிடா.”
“மறந்துட்டேன்” என பூபேஷ் சொல்ல…
“அதான் இப்பவும் அப்படி இருக்காரா?” என்ற தான்யா, “அப்புறம் என்ன நாம கிளம்புவோம்” என்றாள்.
“என்னை இவ்வளவு சாதாரணமா நீ நினைச்சிருக்கக்கூடாது ஆர்வி” என்ற இனியா, தனது ஆட்களில் ஒருவனுக்கு கண் காட்டிட, அவன் தான்யாவுக்கு பின்னால் ஓடி வந்து அவளை வளைத்து பிடிக்க முயல, காலால் அவனது வயிற்றிலே உதைத்திருந்தான் ஆர்விக்.
“சொன்னா புரிஞ்சிப்பன்னு நினைச்சு தான் வந்தோம். ஆனால் எவ்ளோ அட்டகாசம் பண்ற நீ” என்ற யாஷ், “லவ் அடிச்சு பிடுங்க முடியாது இனியா” என்றான்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் உன் ஃப்ரெண்ட் தாலி கட்டாம நீங்க யாரும் இங்கிருந்து போக முடியாது” என்றவள், “இவங்களையெல்லாம் தனித்தனியா நீ அடிச்சிடலாம். ஒட்டு மொத்தமா வந்தா என்ன பண்ணுவ. ஹீரோயிசம் காட்டாம வந்து மணவறையில் உட்கார்” என்று திருமணத்திற்கு தயாரான இடத்தில் சென்று அமர்ந்தாள்.
“இங்கிருந்து எப்படிடா தப்பிக்கிறது?” தான்யா தன்னை ஒருவன் பிடிக்க வந்ததிலேயே அரண்டிருந்தாள்.
“ரிலாக்ஸ் டா” என்ற ஆர்விக், கோவில் கதவினை பூபேஷுக்கு கண் காட்டியவனாக கோவிலுக்குள்ளே இருந்த அமைதியில் அவ்விடத்தை பார்வையால் அலசினான்.
இறுதியாக ஆர்விக் இனியாவை நின்ற இடத்திலிருந்து நேர்கொண்டு பார்த்தான்.
ஆர்விக்கின் கண்களில் அந்த இடத்தில் இருக்கவே கூடாது என்பதைப்போன்ற அசௌகரியம்.
“என்னடா போய் உட்கார்ந்துட்டாள்” என்ற யாஷ், “வேறெதுவும் பிளான் வைச்சிருப்பாளா?” என்றான்.
“என்ன பிளானா இருந்தாலும் நான் ஒத்துக்கமாட்டேன்!” என்ற ஆர்விக், கண்களை மூடி எந்தெந்த இடத்தில் எத்தனை அடி தூரத்தில் ஆட்கள் நின்றிருக்கின்றனர் என்பதை மனதில் கணக்கிட்டு பதிய வைத்தான்.
யாரை தாக்கினால் யார் எங்கிருந்துவர எத்தனை நொடிகள் ஆகுமென்ற கணக்கீடல் அது.
“அன்னைக்கு ஆர்வி கோபமா திட்டி பேசினது, அப்படி பேசியிருக்க வேண்டாம் நினைச்சேன். அவளுக்காக ஃபீல் பண்ணேன். ஆனால் இவள் ரவுடி வேலையெல்லாம் பாக்குறாள்” என்ற தான்யா,
“இப்போ என்னடா உன் பிளான்?” என்றாள்.
“நிதாகிட்ட சொல்லி போலீஸ் வரவைக்கலாமா?” பூபேஷ் கேட்டான்.
“எதுக்கு போலீசும் இங்க வந்து அவளுக்கு உதவியா நம்மளை கார்னர் பண்ணவா? அரசியல்வாதி பொண்ணுடா இவள்” என்றான் யாஷ்.
யாஷ் மெல்ல ஆர்விக்கின் பக்கமாக நகர்ந்தான்.
“கிட்டத்தட்ட பத்து பேர்.
எல்லாருமே ஆயுதத்தோட.
அடிச்சு வெளிய வர்றது ஈசியா இருக்காது” என்று மென்மையாகக் கூறினான்.
“அடிக்கவே வேண்டாமே” என்றான் ஆர்விக்.
“புரியல?”
“நாமென்ன அவ்ளோ ஸ்ட்ராங்கா? நம்ம அடிக்கு அந்த நேர வலி ஜெர்க் ஆவானுங்க. அவ்ளோதான். சாயலாம் மாட்டானுங்க” என்றான் ஆர்விக்.
“அப்போ என்னடா பண்ணலாம். ஐயர் வேற மந்திரம் சொல்ல ஆரம்பிச்சிட்டார். அவள் உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாலே எனக்கு என்ன நடக்குமோன்னு இருக்கு” என்றான் பூபேஷ்.
“சரியான டைம்ல சரியான இடத்துல தள்ளினாலே போதும். ஈசியா மேனேஜ் பண்ணிடலாம்” என்றான் ஆர்விக்.
“நேரமாவது. உங்க பேச்சு அப்புறம் வச்சுக்கோங்க” என்ற ஒருவன், இன்னொருவனை அழைத்து, “தூக்குடா” என்றான்.
“தான்யா!” என ஆர்விக் சத்தமாக அழைத்திட… ஆர்விக்கை தூக்க வந்தவன் திரும்பிப் பார்க்க,
அந்த ஒரு விநாடி கவனச்சிதறல்… மூன்று ஆண்களுக்கும் சாதகமாக அமைந்திட்டது.
யாஷ் தன் முழங்கை வைத்து
முன்னால் நின்றவனின் வயிற்றில் ஒரு தள்ளு.
சட்டென்று மூன்று பேரும் தங்களை நோக்கி வந்தவர்களை தாக்க முற்பட, தான்யா விழித்து நின்றாள்.
“டோர்!” என ஆர்விக் அவளிடம் காட்டிட, தான்யா வாயிலை நோக்கி ஓடினாள்.
“பிடிங்கடா!” என்ற குரல் எழ,
இரண்டு பேர் முன்னால் பாய்ந்தார்கள்.
ஆர்விக் அவர்களை நேராக எதிர்க்கவில்லை. கோவில் தரையில் கிடந்த தேங்காயின் உடைந்த துண்டை காலால் தள்ளி
ஒருவனின் காலுக்கு முன்னால் தட்டினான். தேங்காய் சில்லு அவனின் பாதத்தை பதம் பார்த்தது.
அவன் சரிந்து விழ…
அவனுக்கு பின்னால் வந்தவன்
அவனையே மிதித்து தடுமாறினான்.
மற்றொருவனை தனது கைச்சந்தில் தள்ளிவிட, அவனோ சுவற்றில் தலை முட்டி விழுந்தான்.
“ஓடு!” பூபேஷ் தான்யாவை இழுத்துக்கொண்டு ஓட,
ஆர்விக் திரும்பிப் பார்த்தான்.
இனியா அமர்ந்திருந்த இடத்திலேயே எழுந்து நின்றிருந்தாள்.
ஆர்விக், இனியா கண்கள் சந்தித்தன. அவனது கண்ணில் ஏளனம். அவளிடத்தில் ஒருவித பளபளப்பு.
தடியர்கள் அனைவரும் தரையில் சுருண்டிருந்தனர்.
இனியாவின் நண்பர்கள் மற்றும் பதிவாளர், ஐயர் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
“மேடம்… நான் போகட்டுமா?” கேட்ட பதிவாளரை முறைத்த இனியா, “வெயிட் பண்ணுங்க” என்றாள்.
“அவன் தான் எல்லாரையும் அடிச்சிப்போட்டுட்டானே! இனி யாரை வைச்சு மிரட்டுவ?” என இனியாவின் தோழி கேட்டிட, அந்நேரம் ஆர்விக்கின் தொழில் பவுன்சர்ஸ் அதிரடியாக உள்ளே புகுந்திருந்தனர்.
ஆர்விக் எப்படியென்று பார்க்க…
“நான்தான் வரச்சொன்னேன்” என்றான் யாஷ்.
பவுன்சர்சை பார்த்ததும், பதிவாளரும் ஐயரும் ஓடிவிட்டனர்.
“அவ்ளோதான். உன் பிளான் ஊத்திக்கிச்சு” என்று ஒருத்தி சொல்ல, அவள் இனியா பார்த்த பார்வையில் வாயினை மூடிக்கொண்டாள்.
“இனிமே இந்த மாதிரி சில்லியா யோசிக்காத” என்ற ஆர்விக், “இப்பவும் சொல்றேன் என் பின்னாடி சுத்திறது வேஸ்ட் ஆஃப் டைம்” என்றான்.
“இப்போ தாலி கட்ட முடியுமா? முடியாதா?” தட்டிலிருந்த தாலியை எடுத்து ஆர்விக்கின் முன் நீட்டியவளாக, இனியா கேட்டிட…
“இது திருந்தாதது ஆர்வி” என்றாள் தான்யா.
“ஆமாடா… அம்மா என்னவோன்னு பயந்து இருப்பாங்க. நாமப்போலாம்” என்றான் யாஷ்.
“ஹ்ம்ம்…” என ஆர்விக் திரும்பிட,
அங்கு வைக்கப்பட்டிருந்த குத்து விளக்கை கையில் எடுத்தவளாக,
“ஆர்விக்” என அவ்விடம் எதிரொலிக்க இனியா கத்தி அழைத்திருந்தாள்.
“ஹேய்…” என அனைவரும் பதறிட…
ஆர்விக் யாஷை அழுத்தமாக பார்த்து விலகியவனாக, இனியாவிடம் பேச்சுக் கொடுத்தான்.
“உனக்கென்ன பைத்தியமா?” என்ற ஆர்விக், “நல்லா ஆழமா குத்திக்கோ” என்றான்.
அவன் பதட்டம் கொள்வான், தன்னுடைய பேச்சுக்கு இறங்கி வருவானென இனியா நினைத்திட, அவனோ அவளின் எண்ணத்திற்கு மாறாகப் பேசினான்.
‘உண்மையாவே குத்திக்கணும் போலயே!’ இனியா உள்ளுக்குள் முனகினாள்.
“நீ குத்திக்கிட்டு செத்துப்போனாலும் எனக்கு உன்மேல ஒரு ஃபீலும் வராது” என்ற ஆர்விக், “குத்திக்கிட்டா ஹாஸ்பிடல் கூட்டிட்டுப்போங்க” என இனியாவின் நண்பர்களிடம் கூறினான்.
“நான் பொய் சொல்லல ஆர்வி. உன்னை கல்யாணம் பண்ணிக்க என்னவும் செய்வேன் நான்” என்றாள்.
“நானும் அதான் சொல்றேன். என்ன வேணாலும் செய்துக்கோ” என்ற ஆர்விக், “கை நடுங்குது. ஸ்டெடியா பிடி” என்றான்.
அதில் அவள், ‘உண்மையா குத்திக்கிட்டாலும் அசரமாட்டான் போல’ என நினைக்க… அவளின் தோழிகள் இது தேவையா என்று பார்த்தனர்.
“நிஜமாவே குத்திப்பேன் ஆர்விக்.”
“கமான்… டூ இட்” என அசால்டாக ஆர்விக் சொல்லிட,
வீம்புக்கேனும் செய்தாகவேண்டும் என்ற நிலை தான் இனியாவுக்கு.
இரு கைகளாலும் விளக்கை அழுத்தமாகப் பற்றி, முன் நீட்டி தன்னை நோக்கி இறக்கிட, அவளின் பின்னால் சத்தமின்றி வந்து நின்ற யாஷ் அவளின் கையை வேகமாக தட்டிவிட்டான். அவளின் பிடி நழுவி விளக்கு கீழே விழுந்தது.
“ஊஃப்.” தலையசைத்த ஆர்விக்கிடம் ஒருவித முகச்சுளிப்பு.
விளக்கு கீழே விழ, அதிர்ந்து கண்களை மூடி நின்றிருந்த இனியாவின் முன் சொடக்கிட்ட யாஷ்…
“அறிவிருக்கா உனக்கு? யூ இடியட். நீ நடிக்கவே செய்திருந்தாலும், உயிர் அப்படிங்கிறது அவ்ளோ ஈசியா போயிடுச்சா?” என சத்தமாகக் கடிந்திருந்தான்.
அவளின் தலையைக் நங்நங்கென்று கொட்ட வேண்டுமென பரபரத்த கையை இறுக மூடி தன்னை நிலைப்படுத்தினான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
40
+1
2
+1
3

