Loading

காலை கனவு 27

தென்னரசி அத்தனை ஆவேசத்துடன் வீட்டிற்கு வந்திருந்தார்.

தற்போது நிலம் அவருக்கு பிரச்சினையாகவே இல்லை. என்னயிருந்தாலும் மதிக்கு உரித்தாக உள்ளதே. அதுவே போதுமென நினைத்தார்.

அப்போதும்கூட திருமணமாகிச் சென்றாலும் இங்கு வந்து பயிர் வைக்கப் போகின்றாளா எனும் எண்ணம் அவரை திருப்தியடையச் செய்திருந்தது. ரகுபதிக்கும் அவ்வெண்ணம் தான். உழைப்பு அவருடையதாக இருந்தாலும், அந்த நிலம் கைக்கு வந்தபின்னர் தான் அனைத்தும் ஏறுமுகம் என்ற நம்பிக்கை. ஆதலாலே அந்த நிலத்தை விட்டுவிடக்கூடாது எனும் எண்ணம் உறவுகளுக்குள்ளே பல தகிடுத்தத்தங்களை செய்ய வைத்துவிட்டது.

வீட்டிற்குள் நுழைந்த தெய்வானை…

படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்த கௌதமை அழுத்தமாகப் பார்த்தார்.

மனதில் என்ன நினைத்தாரோ, அவனைப் பார்த்தபடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டார்.

அவரின் பின்னாலே வெண்மதியை அழைத்துக்கொண்டு வந்த ரகுபதி மனைவியின் தோற்றம் கண்டு துணுக்குற்று…

“ஏன் தென்னரசி இப்படி உட்கார்ந்திருக்க?” எனக் கேட்டார்.

என்னயிருந்தாலும் தவறு செய்தாலும் தனது பெற்றவராயிற்றே! வெண்மதியால் விடமுடியவில்லை…

“அம்மா என்னாச்சு?” என அவரின் அருகில் அமர்ந்தவளை ஏறிட்டுப் பார்த்த தென்னரசியின் விழிகள் ரத்தமென சிவந்திருந்தன.

“அம்மா…”

கண்களை துடைத்தவர்,

“அவனை எழுப்பு மதி” என்றார்.

அப்போதுதான் கௌதமை வெண்மதி பார்க்கவே செய்தாள்.

இரு கால்களிலும் ஒரு கையிலும் கட்டிடப்பட்டு, நெற்றியில் பிளாஸ்த்ரி ஒட்டப்பட்டிருந்தது.

உடன் பிறந்தவன். அவனின் நிலை வருந்தச் செய்தபோதும், ஒரு பெண்ணாக அவனது செயலை ஏற்க முடியாது, கண்களை மூடி திறந்த வெண்மதி,

“கௌதம்” என எழுப்ப முயன்றாள்.

அவன் அசைந்தானில்லை.

“கௌதம்” என்று சத்தமாக அவனது தோள் தொட்டு உலுக்கினாள்.

உடலை அசைக்க முடியா வலியை முகத்தில் பிரதிபலித்தவனாக கண்கள் திறந்தான்.

“மதி” என்ற கௌதம், “இப்போதான் என் ஞாபகம் வந்துச்சா? பார்க்க ஓடி வந்துட்ட” என்றான்.

“உன்கிட்ட பேச ஒன்னும் எழுப்பல. அம்மா எழுப்ப சொன்னாங்க” என்ற வெண்மதி, “மதியத்துக்கு என்னம்மா சமைக்கட்டும்” என தென்னரசியிடம் கேட்டாள்.

“சாப்பிடுற நிலைமையிலா இப்போ நாம இருக்கோம்” என்று தென்னரசி சொல்ல…

“அதுசரி தப்பு பண்ணா எப்படி நிம்மதியா சாப்பிட முடியும்” என்ற வெண்மதி, “நீங்களாச்சு, அவனாச்சு. இதுல நான் ஏன் பட்னி கிடக்கணும்? எனக்கு பசிக்கும்ல. நீங்க எப்படியும் செய்து தரமாட்டிங்க. அதான் நானே செய்துக்கலாம் கேட்டேன்” என்றான்.

“மதி…”

“என்னப்பா? உண்மையைதான பேசறேன்” என்றவள், “இந்த விஷயத்திலும் இவனுக்கு சப்போர்ட் பண்ணி, மொத்தமா மனசாட்சியை தொலைச்சிடாதீங்க” என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

“மதிக்கு என்னாச்சு? ஏன் இப்படி பேசிட்டுப்போராள்” என கௌதம் கேட்க, இருவரும் வாய் திறக்கவில்லை.

“பதில் சொல்லாம இப்படியிருந்தா என்ன அர்த்தம்?” என்ற கௌதம், “எங்க போயிட்டு வந்தீங்க? போகும்போது சொல்லக்கூடயில்லை” என்றான்.

“தீக்ஷாவுக்கு போன் போட்டு வரச்சொல்லு.”

தென்னரசி அவ்வாறு கூறியதும் கௌதமிடம் அதிர்வு. ஆனால் லாவகமாக மறைத்துக்கொண்டான்.

“சக்திக்கிட்ட பேசிட்டு வர்றீங்களா?” என்ற கௌதம், “அன்வியை நியாயப்படுத்த அவன் சொன்ன பொய்யெல்லாம் நம்பிட்டு வந்திருக்கீங்க” என்றான்.

“அடச்சே… வாய் மூடு” என்ற தென்னரசி, “எவ்வளவு பொய் டா. ஒருத்தருக்குகூட உண்மையா இருக்கமாட்டியா நீ? நீ சொன்ன பொய்க்கு எங்களையும் ஆட வச்சிருக்கியே” என்றதோடு, “இன்னைக்கு ராத்திரிக்குள்ள அந்த பிள்ளை இங்கிருக்கணும்” என்று நகர்ந்தார்.

“அப்பா… என்னப்பா?” என்ற கௌதமிடம் ரகுபதி பேச வாய் திறந்திட…

“என்னங்க” என்று தென்னரசி அழுத்தமாக அழைத்ததில்,

“நீ அந்தப்பொண்ணை வரச்சொல்லு கௌதம்… நீ அன்வி விஷயத்துல இப்படி நடந்துப்பன்னு எதிர்பார்க்கல” என்று சென்றிருந்தார்.

அடிபட்ட மூன்றாம் நாள் கௌதம் தீக்ஷாவுக்கு அழைத்து, “சின்ன ஆக்சிடென்ட் தீக்ஷா, கை காலெல்லாம் அடிப்பட்டிருக்கு” என மேலோட்டமாக மட்டும் சொல்லியிருந்தான்.

அப்போது அவனைப் பார்ப்பதற்காக அவள் வருவதாக சொல்லிட… வேண்டாமென மறுத்திருந்தான்.

தற்போது தென்னரசி என்ன முடிவெடுக்கப்போகிறார் என்ற பயத்தோடவே தீக்ஷாவுக்கு அழைத்து,

“என் அம்மா உன்னை பார்க்கணும் வரச்சொல்றாங்க தீக்ஷா” என்றான்.

அவளிடம் சட்டென்று ஒருவித குதூகலம்.

“ஹேய் நிஜமாவா?” என்றவள், “அன்விதா மேட்டர் ஓவரா?” எனக்கேட்டாள்.

“ஆமா… அன்வி வீட்டுக்கு பேசப்போனாங்க. வந்ததும் உன்னை உடனே கிளம்பி வரச்சொல்றாங்க. நாளைக்கு எப்படியும் வந்திடு” என்றான்.

“இப்போவே கிளம்பலாம். பட் மீட்டிங் ஒண்ணு இருக்கு. நான்தான் ஹேண்டில் பண்ணனும். ஏர்லி மார்னிங் கிளம்பி, நாளைக்கு மார்னிங் ஒன்பது மணிக்கெல்லாம் அங்கிருப்பேன்” என்றவளும், “நம்ம மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிட்டுதான் அங்கிருந்து கிளம்புவேன்” என்றாள்.

அடுத்தநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் கொடைக்கானல் வந்துவிட்டதாக கௌதமுக்கு அழைத்திருந்தாள்.

“லைவ் லொகேஷன் ஷார் பண்ணு கௌதம்.”

“அதுக்குள்ள வந்துட்டியா?”

“எஸ்… கார்ல தான் வந்தேன். எனக்கு பொறுமையில்லை. உன் அம்மாவை பார்த்து நம்ம மேரேஜ் டேட் ஃபிக்ஸ் பண்ணாதான் எனக்கு நிம்மதி. இப்போ நான் வேணும்னு தோணுற உனக்கு, அன்விதான் வேணும்னு தோண எவ்ளோ நேரமாகிடும். நீதான் ஒரே நேரத்தில் ரெண்டு லவ் பண்ற ஆளாச்சே” என்றாள்.

என்ன இருந்தாலும் தீக்ஷாவினுள்ளும் இரு காதல் விடயம் துரும்பாக உள்ளதோ?

“ஹேய்…”

“சும்மா சொன்னேன்டா. உனக்கு அவளைவிட எம்மேல லவ் அதிகம் தான்” என சிரித்தாள்.

“நான் லொகேஷன் ஷார் பண்றேன் வந்திடு” என்று இருப்பிடம் அனுப்பி வைத்தான்.

மலைகளுக்கு உள்ளடங்கிய ஊர் என்பதால் முக்கிய சாலையிலிருந்து ஊருக்குச் செல்லும் கிளை சாலையில் பயணிக்கத் துவங்கக்கியதும் இணையத்தின் அலைவரிசை முறிவுபெற, எந்தப்பக்கம் செல்லவேண்டுமெனத் தெரியாது ஊர் எல்லையில் நின்றுவிட்டாள்.

அலைவரிசை இல்லாது கௌதமுக்கும் அழைப்பு செல்லவில்லை.

நேற்றைய இரவு சக்தி பேசிச் சென்ற பின்னர், ஆர்விக்கிடம் பேசினால் இன்னும் மனம் தெளிவாகுமென அழைத்து, அவன் எடுக்கவில்லை என்றதும்… அவனுடன் பகிர்ந்துக்க வேண்டியவற்றை குறுந்தகவலாக அனுப்பி வைத்திருந்தாள். மனம் லேசானது போன்றிருக்க… காலையே கோவிலுக்குச் சென்றிருந்த அன்விதா, அவ்வழியாகத்தான் வீடு திரும்பிக் கொண்டிருந்தாள்.

காரிலிருந்து இறங்கி நின்று யாருடன் கேட்பதென பாதையை பார்த்தபடி நின்றிருந்த தீக்ஷா, சில அடிகள் தூரத்திலே அன்விதாவை பார்த்துவிட்டாள்.

அவளுக்கு அன்விதாவை தெரிந்திருந்தது.

அன்விதா அவளை கடந்து சென்றிட…

“ஹாய் அன்விதா” என தீக்ஷா அழைத்திருந்தாள்.

நெற்றியிலிருந்த திருநீறும், கையிலிருக்கும் பூஜை கூடையும், அவள் கோவிலுக்குச் சென்று வருகிறாள் என்பதை பார்த்ததும் காட்டிக்கொடுத்தது.

தன்னை அழைத்தது யாரென தெரியாது தீக்ஷாவின் அருகில் சென்ற அன்விதா,

“நீங்க?” எனக் கேட்டாள்.

“கோவிலுக்கு போய் அழுதிட்டு வரப்போல!” தீக்ஷாவின் குரலில் நக்கல்.

“யாருங்க நீங்க?” என்ற அன்விதா, “என்னைத் தெரியுமா உங்களுக்கு?” எனக் கேட்டாள்.

“ம்ம்… ரொம்ப நல்லாவேத் தெரியும். எனக்கு போட்டியே நீதான” என்ற தீக்ஷா, “இந்த சிட்டுவேஷன் ரொம்ப கஷ்டமா இருக்கா அன்விதா?” என உச்சிக்கொட்டினாள்.

தன்னுடைய விடயங்கள் இப்பெண்ணிற்கு எப்படித் தெரியுமென நினைத்தாலும், மூன்றாம் நபரிடம் தனக்கென்னப் பேச்சென,

“ம்ப்ச்…” என்று அன்விதா அவளிடம் பேச பிடிக்காதவளாக திரும்பி நடந்திட…

“கௌதம் வீட்டுக்கு எப்படி போகணும்?” எனக் கேட்டாள்.

தீக்ஷா, கௌதம் என்றதில் அன்விதாவுக்கு அனைத்தும் விளங்கியது.

நின்று திரும்பிட,

“கௌதம் வீடு எங்கிருக்கு?” எனக் கேட்டாள் தீக்ஷா.

அன்விதா பதில் சொல்லாது நின்றிருக்க,

“உனக்கு ரொம்பத்தான் திமிரு போல… நீ ரொம்பவே சாஃப்ட் அப்படின்னு சொல்லுவான். பார்த்தா அப்படி தெரியலையே” என்ற தீக்ஷா தனக்கருகில் வந்து நின்ற இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவனை யாரென்று பார்த்தாள்.

“இப்படித்தான் வழியில் யாருன்னு தெரியாதவங்க கூப்பிட்டால் நிக்கிறதா?” என தங்கையிடம் கேட்ட சக்தி…

“வீடு அந்த மேட்டில் இருக்கு” என தீக்ஷாவிடம் கூறிவிட்டு அன்விதாவிடம்,

“ஏறு” என்றான்.

பெண்பிள்ளை தனியாக இங்கு நின்று செல்வோர் போவோரிடம் விசாரித்து நிற்பது சரியில்லையென்பதாலே அன்விதாவிடம் கேட்ட கேள்விக்கு சக்தி பதில் சொல்லியிருந்தான்.

அன்விதா சக்தியின் பின்னால் அமர்ந்திட…

“தங்கச்சியை காப்பாத்துறீங்களோ?” என்றாள் தீக்ஷா. மிதப்பான தொனியில்.

பெண்களை சாதரணமாகத் திரும்பிப் பார்த்திடவே யோசித்திடும் சக்தி, நீயெல்லாம் ஒரு ஆளா என பார்த்தப் பார்வையில் தீக்ஷாவின் முகம் கருமை படர்ந்தது.

சக்தி கோபம் கொண்டு ஏதேனும் பேசியிருந்தாலும் இந்தளவிற்கு அவமானத்தை உணர்ந்திருக்கமாட்டாளோ!

ஒற்றைப் பார்வை, தீக்ஷாவை குறுக வைத்திருந்தான்.

செல்லும் அவர்களையே முறைத்து நின்ற தீக்ஷா,

மற்றொரு வண்டியின் சத்தத்தில் நிகழ் மீண்டு கௌதமின் இல்லம் சென்றிருந்தாள்.

வீட்டு வாயிலில் வாகன சத்தம் கேட்கவே, ரகுபதி யாரென்று வந்தார்.

அவரைப் பார்த்ததும் காரிலிருந்து இறங்கிய தீக்ஷா,

“ஹாய் அங்கில்” என புன்னகைக்க, அவரோ யாரோபோல பார்த்து நின்றார்.

“என்ன அப்படி பாக்குறீங்க? கௌதம் என் ஃபோட்டோ கூட காட்டலயா?” என்றவள்,

“நான் தீக்ஷா” என்றாள்.

ரகுபதி அவளையும், அவள் வந்து இறங்கிய காரையும் மாற்றி மாற்றிப் பார்த்தவர்,

“அரசி” என வீட்டிற்குள் குரல் கொடுத்தார்.

தென்னரசி வெளியில்வர,

“அந்தப்பொண்ணு” என தீக்ஷாவை கை காண்பித்தார்.

தென்னிரசியின் முகம் கோபத்தை பிரதிபலிக்க, தீக்ஷா அதனை உணரவில்லை.

“வீட்டுக்குள்ள கூப்பிடமாட்டிங்களா ஆண்டி? நீங்கதான வரச்சொன்னீங்க” என்றாள்.

“ஆமா!” என்ற தென்னரசி, “வா” என அழைத்துவிட்டு உள்ளேச் சென்றார்.

வீட்டிற்குள் வந்து சக்கர நாற்காலில் அமர்ந்திருந்த கௌதமை கண்டதும் தீக்ஷா அதிர்ந்துவிட்டாள்.

“சின்ன ஆக்சிடென்ட் சொன்ன” என அவனின் அருகில் சென்றவள், அவனின் நலம் விசாரித்து, அழுதென முடித்து நிமிர்ந்திட…

“அவனை கூட்டிட்டு போயிடு” என்றார் தென்னரசி. தீக்ஷாவிடம்.

கௌதம், தீக்ஷா புரியாது பார்த்தனர்.

“எங்களுக்கு ஒரு பொண்ணு மட்டும்தான். பையன்னு ஒருத்தன் இருந்ததையே மறந்துட்டோம். கூட்டிட்டுப் போயிடு” என்றார்.

மனைவியின் முடிவு இதுதானென அறிந்திருந்த ரகுபதி எதுவும் சொல்லாது அறைக்குள் சென்றுவிட்டார்.

“அம்மா என்னம்மா சொல்ற?” கௌதம் வினவ,

“நான் என்ன சொன்னேன் உனக்கு புரியலையா?” என்று முந்தைய நாள் தொடங்கி அன்றைய பொழுதுக்கு அப்போதுதான் கௌதமின் முகம் பார்த்த தென்னரசி,

“எனக்கு நீ மகனே இல்லை. வீட்டைவிட்டு போயிடுன்னு சொல்றேன்” என்றார்.

“அம்மா…”

“அம்மா தான்டா… நானும் ஒரு அம்மா தான? எனக்கும் ஒரு மகள் இருக்காளே! நீ பண்ணதை என் பொண்ணுக்கு ஒருத்தன் பண்ணியிருந்தால்?” என்றார்.

“அப்படியென்னம்மா நான் பண்ணிட்டேன். ஒரே நேரத்துல ரெண்டு பேர் மேல காதல் வந்தது என் தப்பா?” எனக் கேட்டவனை அருவருப்பாக ஏறிட்ட தென்னரசி…

“ச்சீ… வாயமூடு” என்றார்.

“அம்மா?”

“உனக்கும் எங்களுக்கும் எந்த சொந்தமுமில்லை. தயவு செய்து போயிடு” என்றார்.

“என்னம்மா ரொம்ப நல்லவங்க மாதிரி பேசுற” என கௌதம் கேட்க,

“நான் நல்லவ இல்லை தான். நானும் சராசரி மனுஷிதான? ஆசை யாரை விட்டுச்சு” என்ற தென்னரசி, “கொலை பண்றதைவிட பெரிய பவம்டா நீ பண்ணியிருக்கிறது” என்றார்.

“எது பாவம். லவ் வந்துச்சு பண்ணேன்.”

“இப்படியிருக்க உன்னை அடிக்கக்கூடாதுன்னு பாக்குறேன்” என்ற தென்னரசி, “நீ பண்ணதுக்கு பேரு காதலா? ஒருத்தியை விரும்புறோம் அப்படிங்கிற மனக் கட்டுப்பாடு இல்லாம, இன்னொரு பொண்ணுக்கூட…” என நிறுத்தி, “நீ பண்ண காரியத்துக்கு காதல்ன்னு பேர் வைக்கிறியா? ஒரு மகனைப் பார்த்து சொல்லக்கூடாதுன்னு வாய் மூடியிருக்கேன். நீ பண்ணதுக்கு வேற பேர் சொல்லுவாங்க” என்றார்.

“அம்மா!”

“இனி என்னை அப்படி கூப்பிடாதடா” என்ற தென்னரசி, “உன்னை இந்த விஷயத்தில் என்னால எப்பவும் மன்னிக்க முடியாது. உன்னை நல்லவனா காட்டிக்க எத்தனை திருகுத்தாலம் பண்ணியிருக்க நீ” என்றார்.

“இதுல ஒரே நேரத்துல ரெண்டு பேரையும் கல்யாணம் செய்துக்க விருப்பம்ன்னு சொன்னியாம்” என்றவர், “சுய ஒழுக்கம் இல்லாதவனெல்லாம் என்ன ஆம்பிளை” என்றார்.

“நீங்களும் அந்த நிலத்துக்காக பொய் சொன்னவங்க தான?”

“ஆமாண்டா இல்லைன்னு சொல்லலையே! அதனால நட்டமோ லாபமோ எங்களுக்குள்ள. நாளைக்கே நான் போய் நின்னாலும், வாங்க அத்தைன்னு என்னை கூப்பிடுவான். அவன் மனசு யாருக்கும் வராது. அதான் நாங்க கேட்டதை மனசார திருப்பிக் கொடுத்தே எங்களை குறுக வைச்சிட்டான். இப்பவும் அந்த நிலம் கைவிட்டுப் போகலன்னு ஒரு மனசு சந்தோஷப்படுதுதான். அதுக்காக நீ பண்ண தப்பை மன்னிக்கச் சொல்றியா? மன்னிக்கக்கூடியதா அது?” என்றவர், “எனக்கு ஒரு மகள் இருக்காங்கிற என் நினைப்பு… உனக்கு ஏன்டா ஒரு தங்கச்சி இருக்கான்னு இல்லாமப்போச்சு?” என்றார்.

“என்னம்மா திடீர்னு ரொம்ப நல்லவங்களாகிட்டீங்க!” அவனிடம் கேலி இழையோடியது.

“தப்பு பண்ணாலும் அதை ஒருகட்டத்தில் புரிஞ்சிக்கிறவன் தான் மனுஷன். இப்பவாவது மனுஷியா நடந்துக்கணும் நினைக்கிறேன். நீ காதல்ன்னு சொல்றதெல்லாம் கூட ஏத்துக்கிறேன். ஆனால் உன்னை நியாயப்படுத்த அன்வி குணத்தை தப்பா சொன்ன பார்த்தியா? அதை மன்னிக்கவே முடியாதுடா! நீ சொன்னதை நம்பி நானும் என்னலாம் பேசிட்டேன். நான் பேசினப்பேச்சு என் பொண்ணு பக்கம் பாவம் சேர்ந்திடுமோன்னு பயந்து வருது எனக்கு” என்றார்.

“சும்மா டிராமா பண்ணாதீங்க. இந்த நிலையில எங்க போவேன் நான்!”

“எங்கயாவது போடா” என்றவர், “உன்னை அடிச்சதில் தப்பேயில்லை. இவளுக்காகத்தான எல்லாம் பண்ணா. கூட்டிட்டுபோய் பார்த்துக்கட்டும். கல்யாணம் ஆகாமலே ஒரே வீட்டில் உன்னை தங்க வச்சிக்கிட்டவள் தான?” என அந்த வைச்சிக்கிட்டவள் என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத்தார்.

அதுவரை அமைதியாக நின்றிருந்த தீக்ஷா, “ஆண்டி” என்று சத்தமிட்டு, “பார்த்து பேசுங்க” என விரல் நீட்டினாள்.

“உன்னை பார்த்து பேசணும்னு தான் வரச்சொன்னேன்” என்ற தென்னரசி, “நீயும் ஒரு பொண்ணா?” என்றார்.

“உங்க பையன் என்னோட இருக்கும்போதே நான் பொண்ணுதான்னு உங்களுக்குத் தெரியலையா?” சாதாரணமாக அவள் கேட்டதன் உட்பொருளில் தென்னரசி வெளிப்படையாகவே முகம் சுளித்தார்.

“நல்லாத் தெரியுது. பொண்ணுக்கு பொண்ணுதான் எதிரின்னு காட்டிட்டியே! அவன் அவளை விரும்பிட்டு இருக்காங்கிறது தெரிஞ்சும் அவன் பின்னாடி சுத்தி… ச்சை… இதை பேசவே விரும்பல நான்” என்றவர், “ரெண்டு பேரும் மொத என் வீட்டைவிட்டு கிளம்புங்க” என்றார்.

“அவளை ஏன்மா இப்படி பேசுற?”

“மேல கை வைக்கலன்னு சந்தோஷப்பட்டுக்க” என்றவர், தீக்ஷாவை ஒரு பார்வைப் பார்த்திட,

சக்தியின் பார்வையில் தெரிந்த அதே பொருள்.

“இனி இங்க ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டேன். உன் அம்மாங்கிறதுக்காகத்தான் பொறுமையா இருக்கேன். நீ வா கௌதம். உன்னை நான் பார்த்துக்கிறேன். இவங்க இல்லைன்னா உன்னை பார்த்துக்க முடியாதா? நீ எப்படியிருந்தாலும் நான் பார்த்துப்பேன் டியர்” என்றவள், அப்போதே கௌதமை கூட்டிக்கொண்டுச் சென்றுவிட்டாள்.

கார் சென்ற சத்தம் கேட்ட பின்னரே ரகுபதி அறைக்குள்ளிருந்து வெளியில் வந்தார்.

“தப்புபண்ணிட்ட அரசி. அவன் உடம்பு நல்லாகறவரையாவது நீ கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். பெத்தவங்க கடமைன்னு ஒன்னு இருக்கே! அவனை பெத்த பாவத்துக்காவது அவனை குணமாக்கி அனுப்பியிருக்கலாம்” என்றார்.

என்னயிருந்தாலும் பிள்ளை பாசம் விட்டுப்போகாதே!

“செய்த தப்பை அவன் உணர இதுவொரு வழிங்க. அந்தப்பொண்ணைப் பார்த்தா உங்களுக்குத் தெரியலையா? பணத்துலே செழிப்பா வளர்ந்திருக்கா. நல்லாயிருந்த போது அவள் அவனையே சுத்தி வந்தது பெருசில்லை. அவன் இப்படியிருக்கும்போது தான் ரெண்டு பேருக்குமே அவங்களோட உண்மை புரியும். என் எண்ணத்துக்கு மாறா அவள் அவனை நல்லா பார்த்துக்கிட்டா, அவளோடவாவது அவன் நல்லா வாழுறாங்கிற திருப்தி. தப்பு புரிஞ்சி திரும்ப வந்தா, நம்ம வளர்ப்பு தப்பா போகலங்கிற நிம்மதி. அவ்ளோதான். இங்க அனுபவம் தர பாடம் வேறெதுவும் தராது” என்ற மனைவியை அமைதியாக ஏறிட்ட ரகுபதி, “என்னயிருந்தாலும் நம்ம வளர்ப்பு அவன் விஷயத்தில் தப்பாதான் போயிடுச்சு. அவன் பண்ணதை என்னால ஜீரணிக்கவே முடியல” என்றார்.

“இத்தோட இந்தப் பேச்சை விடுங்க. இந்த உண்மையெல்லாம் தெரியாம அவன் சொன்ன மாதிரி கல்யாணம் வரை போயிருந்தா, ஒரு பொண்ணோட கண்ணீர் நம்மை சும்மா விட்டிருக்குமா? இப்போ எனக்கு அன்வி வாழ்க்கை தப்பிச்சுதுன்னு நிம்மதியாதான் இருக்கு” என்றார்.

“அந்தப்பொண்ணோடவாவது ஒழுங்கா இருந்தா சரிதான்.”

“அதுக்கு அவளும் ஒழுங்கா இருக்கனுமே” என்ற தென்னரசி, “எழுந்து போய் உங்க மகள் ஆக்கி வைச்சிருக்கிறதை சாப்பிட்டுட்டு அடுத்த வேலையைப் பாருங்க. இனி அவன் பேச்சே வேணாம்” என்று நகர்ந்திருந்தார்.

தீக்ஷா வந்தது முதல் அனைத்துப் பேச்சுக்களையும் அறைக்குள்ளிருந்தபடியே கேட்டிருந்த வெண்மதிக்கு மெல்லிய ஆசுவாசம்.

தன்னுடைய பெற்றோர் நிலத்திற்காக தவறு செய்திருந்தாலும், இந்த விடயத்தில் சரியென ஆராய்ந்து நடந்துக்கொண்டதில் அத்தனை மகிழ்வு. இதிலும் கௌதமிற்கு உடன்பட்டிருந்தால், பெற்றோர் என்று சொல்லிக்கொள்ளவே சங்கடப்பட்டுப் போயிருப்பாள். அதற்காகவே நேற்று வெண்மதி தன் கோபத்தைக்காட்டி பேசியதும்.

நடந்த அனைத்தையும் குரல் பதிவாக சக்திக்கு அனுப்பி வைத்தவள்…

“ஆண்கள்ல நல்லவங்கன்னு இருந்தாலும், அவ்ளோ லேசுல நம்பக்கூடாதுப் போல. நம்ம ஆளு எப்படின்னு தெரியலையே! நான் இங்கிருக்கேன். அவங்க அங்க இருக்காங்க. இப்படியொருத்தி நினைச்சிட்டு இருக்கேன்னு தெரியவாவது செய்யுமா? என்னையே யாருன்னு தெரியாது… இதுல இந்த நினைப்பெல்லாம் வேற. எப்போ பார்க்க சான்ஸ் கிடைக்குதோ” என்று புலம்பியவளாக கல்லூரிக்கு கிளம்பினாள்.

அவளின் புலம்பலுக்கு காரணமானவனோ அந்நேரம் இனியாவிடம் தன்னுடைய ஒட்டு மொத்த பொறுமையும் இழந்தவனாகக் கத்திக் கொண்டிருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 42

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
31
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

    1. Author

      இனியா ஆர்விகிட்ட தான பேசுவாள்… 😁😁

    1. Author

      நாளைக்கு அத்தியாயத்தில் தெரிஞ்சிடும் அக்கா 🤭