
காலை கனவு 26
“எவ்வளவு நேரம் இப்படியே நிக்கலாம்னு இருக்க?”
சில்லென்ற குளிர்காற்று ஊசியாய் உடலைத் துளைத்தபோதும், அந்தகாரத்தின் தூரப்புள்ளியை வெறித்தவாறு மொட்டைமாடியில் நின்றிருந்த அன்விதா, தனக்கு பின்னால் கேட்ட சக்தியின் குரலில் மெல்லத் திரும்பிப் பார்த்தாள்.
“இவ்வளவு ஃபீல் பண்ற அளவுக்கு இப்போ என்பாகிப்போச்சாம்?” என்ற சக்தி, “எதிர நின்னு சொல்றது ஈசி. சீக்கிரம் வெளியவரது ரொம்பவே கஷ்டம் தான். அதுக்காக தேங்கி நின்னுட்டா… அங்கவே நிக்க வேண்டியது தான்” என சுற்றுச்சுவரில் கைகளை ஊன்றியவனாக, கால்களை மாற்றிப்போட்டு பின் சாய்ந்து நின்றான்.
“என் மேலேயே கோபம் கோபமா வருதுண்ணா. என்மேல இருக்க கோபம் தான் ஒரு மாதிரி அழுத்தமா இருக்கு” என்ற அன்விதா, “ரொம்பவே முட்டாளா இருந்திருக்கேன்” என்றாள்.
“ம்ஹூம்… கௌதம் மேல அவ்வளவு நம்பிக்கை” என்ற சக்தி, “உன்மேல கோபப்படுறதாலயோ, உன்னையே நீ ஸ்ட்ரெஸ் பண்ணிக்கிறதாலயோ, நடந்த எதுவும் இல்லைன்னு ஆகிடாது. அவங்களைப்பற்றி நமக்கு இப்படித்தான் தெரியணும் இருந்திருக்கு. தெரிஞ்சிக்க கிடைச்ச சந்தர்ப்பம். மனுஷங்க சொந்த உறவாகவே இருந்தாலும் அவங்களையும் நம்பக்கூடாதுன்னு நமக்கு கிடைச்ச ஒரு அனுபவம். இந்த விஷயத்தை நீ இப்படித்தான் பார்க்கணும். ஒரு விஷயத்தை நாம எப்படி அணுகுறோம் அப்படிங்கிறதை பொறுத்துதான் அது நம்மோடவே பயணிக்குமா, அங்கயே முடிஞ்சிப்போகுமான்னு தெரியும். இந்த விஷயத்தையும் நீ எப்படி எடுத்துக்கிறங்கிறதை பொறுத்துதான் அதிலிருந்து நீ வெளிய வரதும், அதோடவே லீட் பண்றதும்” என்றான்.
“உங்களுக்கு என்மேல கோபம், வருத்தம் எதுவுமே இல்லையா?”
“இதைத்தாண்டி வேறொன்னு இருக்கு. அதுக்கு என்ன பேருன்னு சரியா சொல்லத் தெரியல” என்ற சக்தி, “என்னோட அன்வி என்கிட்ட எதையும் மறைக்கமாட்டாங்கிற என்னோட ஆழமான நம்பிக்கை. எங்கயோ சரிக்கிடுச்சு” என்றவனை இரண்டே எட்டில் தாவி அணைத்திருந்தாள்.
“தெரிஞ்சதும் அந்த நேரம் எப்படி ஃபீல் பண்ணேன்னு சொல்லக்கூட வரலடா! அன்விக்கு அவள் அண்ணாகிட்ட சொல்ல முடியாதளவுக்கு டிஸ்டன்ஸ் இருக்கா ரெண்டு பேருக்கும்?” என்றான்.
“திருண்ணா…” சக்தியின் அன்பு காட்டுதல் வெளிப்படையாக இல்லையென்றாலும், அவனின் கண்டிப்பில் கூட மிகையாய் உணர்ந்திருப்பவளுக்கு சக்தியின் உள்ளம் உடைந்த காரணம் பெரும் வேதனையாய்.
“மறைக்கணும் நினைக்கல… உங்ககிட்ட சொல்லற தைரியமில்லை. அதுக்காக உங்ககிட்ட எனக்கு பயம் அப்படின்னு அர்த்தமில்லை. இதை சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பீங்களோங்கிற தயக்கம்” என்றவள், “ரொம்பவே சாரிண்ணா” என்றாள். அவனிலிருந்து பிரிந்தவளாக.
“அண்ணாகிட்ட சாரி சொல்வாங்களா?” என்று அவளின் உச்சியில் கை வைத்து அழுத்தம் கொடுத்த சக்தி, “இதைப்பற்றி பேசுறது இதுவே கடைசி. எவ்வளவு முடியுமோ அவ்ளோ சீக்கிரம் எல்லாம் மறந்திடு” என்றதோடு, “இப்போக்கூட உன்கிட்ட இதை பேச எனக்கு விருப்பமில்லை. நமக்கு சொந்தமில்லா ஒரு விஷயம் பேசுறதால நமக்கென்ன ஆகப்போகுது? நீ இதிலிருந்து மீண்டுவர என்ன பேசணுமோ அதெல்லாம் ஆர்வியே பேசிட்டான். நான் சொல்ல ஒன்னுமேயில்லை. நான் எதுவும் பேசலன்னு, அதை நீ உன்மேல எனக்கிருக்கும் கோபமா நினைச்சிடக்கூடாதே… அதுக்குத்தான் மொத்தமா எல்லாம் முடிச்சி வைச்சிட்டு உன்கிட்ட பேசுறேன்” என்றான்.
“என் அண்ணாவை எனக்கு புரியும்” என்ற அன்விதாவின் கன்னத்தை பிடித்து இழுத்த சக்தி, “இந்த முகம் உனக்கு செட் ஆகல” என்றான்.
“இனி இப்படி இருக்காது” என்றவளிடம்,
“குட்” என்று புன்னகைத்தான்.
“நான் ஒண்ணு சொல்லட்டுமா அண்ணா?”
“என்ன? பெர்மிஷன் எல்லாம் பலமா இருக்கு?”
“ஸ்டார்ட் பண்ண மாதிரி உங்க மேரேஜ் டாக் திரும்ப ஓப்பன் பண்ணலாமா?” என்றவள், சக்தியின் புருவம் மேலுயர்ந்திட, “நம்ம வீடு பழைய மாதிரியாக ஒரு மாற்றம் வேணும். ரொம்பவே சைலண்ட்டா இருக்கு. அது உங்க மேரேஜ் விஷயம் சரிபண்ணும் தோணுது. அப்பா, அம்மா முகத்தைப் பார்க்கவே எனக்கு ஒரு மாதிரி இருக்கு. அவங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன். அப்பா ஒரு வார்த்தை என்கிட்ட கேட்கல? அவங்க உள்ளுக்குள்ளே வேதனைப்பட்டுட்டு இருக்காங்க. இப்போ உங்க மேரேஜ் அப்படின்னா ரெண்டு பேருமே ஆக்டிவ் ஆகிடுவாங்க. எனக்கு இது நல்ல ஐடியாவா தோணுச்சு. எனக்கும் சேன்ஞ் கிடைக்கும்” என்றாள்.
“அப்படியே ஒரு பொண்ணும் பார்த்து ஐடியாவை எக்சிக்யூட் பண்ண வேண்டியதுதான?”
“எனக்கு ஒருத்தங்களை பிடிக்கும். உங்களுக்கு ஓகேன்னா நாளைக்கே அப்பாவை அவங்க வீட்டுக்குப்போய் பேச சொல்லலாம்.”
“பாருடா! பொண்ணு யாராம்?”
“எல்லாம் உங்களுக்குத் தெரிஞ்சவங்கதான்!”
அன்விதா பிடிக்குமென சொல்லியதுமே யாரென யூகித்தவனுக்கு அன்விதாவின் இப்பேச்சு தித்திப்பாய் அவனிடத்தில் அகம் நுழைந்தது. அதனாலே இதுபோன்ற பேச்சுகளை தங்கையிடம் தவிர்ப்பவன், வினா தொடுத்து நீட்டித்தான். அதனுடன் சில நாட்களுக்குப் பின்னான தங்கையின் முகம் காட்டும் மென் முறுவலில் மெல்லியம் இதம் சேர்த்தான்.
“தெரிஞ்சிக்கிட்டே கேட்டா யாருன்னு சொல்றதாம்?” என்ற அன்விதா, “ஆனாலும் இவ்வளவு அழுத்தம் கூடாது” என்றாள்.
சக்தி மலர்ந்து சிரித்திட,
“ஆர்வி சொல்லிட்டானா?” எனக் கேட்டான்.
“அவனுக்குத் தெரியுமா?”
“ம்ம்…”
“எப்படி?”
“உனக்கெப்படித் தெரியும்?”
“அன்னைக்கு பஸ் ஸ்டாப்ல பைக் கண்ணாடி அட்ஜஸ்ட் பண்ணீங்களே… அப்போ இருக்குமோன்னு ஒரு டவுட். ஆனால் நீங்க அப்படில்லாம் பார்க்கும் ஆளில்லையே! நான் தான் ஏதோ தப்பா நினைக்கிறேன்னு அமைதியாகிட்டேன். அப்புறம் நம்ம பெர்ரித் தோட்டத்துல, அவங்க போக வழிவிட்டுட்டு திரும்பிப் பார்த்தீங்களே ஒரு பார்வை… அதுல கன்ஃபார்ம் பண்ணிட்டேன்” என்றாள்.
“ஆஹான்…” என்ற சக்தி, “எனக்கே இது புரியாத இடத்தில்தான் இருந்துச்சு. அப்பா மேரேஜ் டாக் எடுத்தப்புறம் தான்” என்றவன் அந்த வாக்கியத்தை எப்படி முடிப்பதென தெரியாது முகத்தை தாழ்த்தி பின்னந்தலையை அழுந்த வருடினான்.
“உங்களை இப்படி பார்க்கவும் நல்லாதான்(ண்)ணா இருக்கு!”
“அப்படியா? அப்போ இப்படியே மெயின்டெய்ன் பண்ணுவோம்! அப்பவாவது என்கிட்ட பேச தைரியம் வருமான்னு பார்ப்போம்” என்றான்.
“அப்படின்னா… அவங்களுக்கு உங்க மேல” என்று கேட்க வந்த அன்விதா,
“எனக்குத் தூக்கம் வருது” என சக்தி அங்கிருந்து சென்ற வேகத்தில் பேருவகைக் கொண்டாள்.
மாடிப்படியில் சிறு துள்ளலோடு இறங்கிய சக்தியின் கை தானாக அலைபேசியை எடுத்து, தன்னவளிடமிருந்து தனக்காக வந்திருந்த அவளின் முதலும் இறுதியுமான தகவலை திறந்துப் பார்த்தது.
வெளிவிரியா மெல்லிய இதழ் விரிப்பு அவனது மீசை நுனியில் தொக்கி தொலைந்தது.
*********************************
“இப்போ எப்படிம்மா இருக்கு?”
அனிதா வெகுதாமதமாகத்தான் உறக்கம் கலைந்து எழுந்திருந்தார்.
அவரின் அருகிலே அமர்ந்திருந்த ஆர்விக், அவரின் முகத்தில் கண்ட சோர்வில் பதற்றம் கொண்டு கேட்டிருந்தான்.
“ஓகேதான் ஆர்வி. நீ டென்ஷன் ஆகமா இரு” என்று அவனின் கன்னத்தில் கை வைத்த அனிதா, “நேத்து யாஷ் பேசின எதையும் மனசுல வைச்சிக்காதப்பா” என்றார்.
“மனசுல வைச்சிக்கிற அளவுக்கு உண்மையானதுதான அவன் பேசினது. என்னால… என்னை நினைச்சுதான உங்களுக்கு இப்படி?” என்ற ஆர்விக், “உங்களை நான் யோசிக்கவே இல்லைல… நான் கெட்டப்பையன்ல அனி?” எனக் கேட்டான். அவனது தவிப்புகளின் கூடுதல் கண்களின் அலைப்புறதலில் தெரிந்தது.
“ஆமா… ஆமா… ரொம்ப கெட்டப்பையன்” என்று ஆர்விக்கின் மூக்கைப் பிடித்து ஆட்டிய அனிதா, “இப்போ என்ன பண்ணலாம் அதுக்கு?” எனக் கேட்டார்.
“நீங்க என்ன சொன்னாலும் எனக்கு ஓகே அனி” என்ற ஆர்விக், “இந்த லவ் வேண்டாம்மா. இது வலியை கடந்த சந்தோஷம் அப்படின்னாலும், எனக்கு மட்டுந்தான். ஆனால் உங்களுக்கு… நான் உன்னை யோசிக்காம ரொம்பவே செல்ஃபிஷ்ஷா இருந்திருக்கேன்” என்றான்.
“உன்னை கஷ்டப்படுத்திக்கிட்டு…”
வேகமாக அனிதாவின் வாயில் கை வைத்து அவர் பேசுவதை தடுத்த ஆர்விக்,
“எனக்காகன்னு சொல்லாத! எனக்கு நீ முக்கியம்மா! உனக்காக இதை கடக்கிறது எனக்கு சந்தோஷம் தான். உனக்கு வலி கொடுத்துதான் எனக்கு புரிய வைக்கணும் இருந்திருக்கு. உனக்காகன்னு ஒன்னை செய்யும்போது அதுல எனக்கு கஷ்டமில்லை அனி” என்றான்.
“கொஞ்சநாள் வெயிட் பண்ணலாம் ஆர்வி. எனக்காகன்னு அவசரமா எந்த முடிவும் எடுக்க வேண்டாம்” என்றார் அனிதா!
“வெயிட் பண்ணா மட்டும் என்ன நடக்கும் அனி? உயிர்ல உறைஞ்சிப்போன காதல். கரைந்து வெளியேற வழியேயில்லை.”
அனிதா பதில் சொல்லாது அவனின் முகத்தையே பார்த்திட…
“இதுநாள் வரை உணர முடியாத என்னோட காதலை இனி எத்தனை நாள் வெயிட் பண்ணாலும் அவளால உணர முடியாதும்மா. அப்படியே அவள் ஃபீல் பண்ணாலும் என்ன நடக்கும் நினைக்கிறீங்க? உடனே என் லவ் அச்செப்ட் பண்ணிட்டு, மேரேஜ் பண்ணிக்கலாம் சொல்வான்னு தோணுதா உங்களுக்கு?” என்ற ஆர்விக், “என் லவ் தெரிஞ்சா, அதுக்கும் சேர்த்து வருத்தப்படுவாள். என் முன்னாடி வரவே யோசிப்பாள். கௌதம் லவ்வோட என் லவ் கம்பேர் பண்ணி ஃபீல் பண்ண வைக்கும். அவளே நினைக்கூடாதுன்னு நினைச்சாலும் மனசு இருக்கே, அது பொல்லாதது அனி… நமக்கு முரணானது என்னவோ அதைத்தான் நினைக்க வைக்கும். செய்ய வைக்கும்… என்னால ஒரு கஷ்டம் அவளுக்கு வேணாம்” என்றான்.
“இதுநாள் வரை அன்வி உன்னோட லவ்வை உணரமாப்போனதுக்கு நீதான் காரணம் ஆர்வி” என்ற அனிதாவின் பேச்சு விளங்காது ஆர்விக் புருவம் சுருக்கினான்.
“எஸ்… நீதான் காரணம். ஒருமுறை ஒரு செக்கென்ட் உன் லவ் அவள் உணர்ற மாதிரி நீ வெளியக் காட்டியிருக்கியா?” எனக் கேட்டார்.
ஆர்விக் தடுமாற,
“இன்னொரு பையனை விரும்புற பொண்ணுக்கிட்ட எப்படி காதலை காட்டுறதுன்னு நீ நினைக்கிறது சரிதான். ஒருவேளை உன்னோட லவ் கட்டப்பட்டிருந்தால், உண்மையான லவ்வை அன்வி புரிஞ்சிருந்திருப்பாளோ” என்றார்.
அவனிடத்தில் வருத்தம் கடந்த விரக்தியில் கண்களால் ஓர் புன்னகை.
“சில உணர்வுகளை நாம இங்க வெளிக்காட்டனும் அவசியமில்லை அனி… நம்மவங்களுக்கு நம்மளோட உணர்வு நாம கண்ணில் காட்டாமலே, வார்த்தையில் சொல்லாமலே உணர்ந்துக்க முடியும். அன்வி எனக்கானவ இல்லைப்போல. அதான் என்னோட வேவ் அவளோட கனெக்ட் ஆகவே இல்லை” என்ற ஆர்விக், “நான் அவகிட்ட என் மனசை காட்டுற அளவுக்கு எனக்கு டைம் இல்லை அனி அப்போ. என் லவ் தெரிஞ்சு அவகிட்ட போன என்னால என் லவ் சொல்ல முடியல. அவளோட லவ்தான் தெரிஞ்சிக்க முடிஞ்சுது” என்றவனிடம் அன்றைய நாளுக்காக எஞ்சி நின்ற வலியின் மிச்சம் இன்றும் தடம் கொண்டிருந்தது.
“தெரிஞ்சுக்கிட்ட அவளோட லவ் என்னோட லவ்வை எனக்குள்ள மறைச்சு வைக்க கத்துக்கொடுத்திருச்சு.”
“இப்போ என்னதான் சொல்ல வர்ற ஆர்வி நீ?” என்ற அனிதா, “உன்னோட லவ் அவளுக்கு ஆப்ஷனா தெரியக்கூடாது, இந்த நேரத்தில் காதல்னு அவகிட்ட போய் எப்படி சொல்றது? உன்னோட இந்த காதல் அவளால இப்போ எப்படி பார்க்க முடியும் அப்படினெல்லாம் நீ நினைக்கிறது சரிதான். அதுக்காக அவகிட்ட உன்னை உன் லவ் சொல்லுன்னு நான் சொல்லல. அவளோட இடத்திலிருந்தும் நான் பார்க்கிறேன். காதலால காயம் பட்டிருக்கவளுக்கு, இனியொரு காதல் அப்படின்னாலே தான ஒரு பயம் வரும். சூடு கண்ட பூனை நிலை தான். ஆனால் அவளுக்கு நிச்சயம் உன்னோட காதல் மருந்தா இருக்கும்” என்றார்.
“இந்த சிட்டுவேஷனை உனக்கான வாய்ப்பா பார்க்காத சொன்ன… இப்போ இப்படி பேசுறது புரியல அனி” என்ற ஆர்விக்கின் முன் கேசத்தை கலைத்து ஒதுக்கிய அனிதா, “உன்னோட முடிவை நீ சொல்லிட்ட. இனி என்னோட முடிவு எதுவாயிருந்தாலும் நீ உடன்படனும். உனக்கு ஓகேவா?” எனக் கேட்டார்.
“நீ இந்த மாதிரி உடம்பு சரியில்லாம படுத்து என்னை பயங்காட்டாம இருப்பன்னா… நீ என்ன பண்ணாலும் எனக்கு ஓகே தான்” என அவரின் இரு கன்னத்தையும் பிடித்து ஆட்டினான்.
“அடேய்… விடுடா! வலிக்குது” என்ற அனிதா ஆர்விக்கின் கையிலே தட்டிட…
“இதுக்கு அப்புறம் என்னை நீ இப்படிலாம் அழ வைக்கக்கூடாது… டீல்?” என்றான்.
“அதான் நான் என்ன பண்ணாலும் உனக்கு சரின்னு சொல்லிட்டியே! உடனே உனக்கு ஒரு பொண்ணை பார்த்து, என் மனசுக்கு நிறைவா கல்யாணம் பண்ண வேண்டியதுதான்” என்றார்.
அனிதாவின் முகத்தில் அப்படியொரு புன்னகை. அதில் தெரியும் நிறைவில், உள்ளம் சுடும் காதலின் தகிப்பை அணைக்க முயன்றான்.
நீண்ட இதழ் விரிப்பில் கலங்கும் கண்களை சமன் செய்திட்டான்.
மகனின் அகம் அன்னைக்கு புரியாததா?
ஆர்விக்கின் தொண்டைக்குழி ஏறி இறங்குவதில் அவனது சொல்ல முடியா வலியை உள்வாங்கியிருந்தார் அனிதா.
தனக்காக ஆத்மார்த்தமாய் சுமந்திட்ட நேசத்தையே துறந்திட முயன்றுவிட்ட மகனின் அன்பில் கரைந்துதான் போனார்.
முடியவே முடியாத ஒன்றென்று வலியோடு வாழ்ந்தவன். வலியில் சுகமாய் ஜீவித்தவன். இன்று அவனது ஜீவனையும் விட்டுக்கொடுத்திட்டான்.
அன்னைக்காக பனித்த கண்ணையும், தவிக்கும் மனதையும் லாவகமாக மறைத்துக் கொண்டான்.
‘உன்னை நானறிவேன்.’ அனிதா மனதோடு புன்னகைத்துக் கொண்டார்.
“பேச்சோட நிறுத்திடாம… சொன்னதை செய்யுற வேலையைப் பாருங்க” என்று இருவரின் இறுதிப் பேச்சினை கேட்டவனாக உள்வந்த யாஷ், “ஊர்ல உங்க சொந்தத்துல எதும் பொண்ணு இருக்கான்னு தாத்தாகிட்ட கேளுங்க. ஒத்து வந்தா பேசி முடிச்சிடுவோம்” என்று அமர்ந்தான்.
ஆர்விக் சிரித்திட, யாஷ் அவனது அந்த சிரிப்பின் பொருளை அவதானிக்க முயன்றான்.
“ரொம்ப ஆராயாதடா! அதான் நீங்க என்ன பண்ணாலும் சரின்னு சொல்லிட்டனே” என்ற ஆர்விக், “அன்வி நைட் கால் பண்ணியிருக்காள். கவனிக்கவே இல்லை. பேசிட்டு வர்றேன்” என எழுந்து சென்றுவிட்டான்.
“எனக்கு நம்பிக்கையில்லை.” செல்லும் ஆர்விக்கையே பார்த்தபடி யாஷ் கூறினான்.
“எனக்கு நிறையவே இருக்கு. அவன் முன்னாடி அவனுக்கான காரணமா இருக்கிறது அவனோட அம்மா. இனி கனவில் கூட அந்த காதலை நினைக்கமாட்டான்” என்றார் அனிதா.
“உங்க பிளான் தான் என்ன?” என்று வந்த நிதாஞ்சனி, “அவனோட சந்தோஷம் அந்த கிடைக்காத காதலில் தான் இருக்குன்னு, அது வேண்டாம்னு சொன்னதில்லை நீங்க. ஆனால் இப்போ?” என்றாள்.
“நானும் சராசரி அம்மா தான நிதா? பிள்ளைக்கு எது சரியோ அதைத்தான செய்ய நினைப்பேன்” என்றார்.
“எதுவோ புரியுது… ஆனாலும் புரியல” என்றவள், “டிஃபன் ரெடி பண்ணிட்டேன். நீங்க வந்து சாப்பிடுங்க. டேப்லெட் போடணும்” என்றாள்.
“ஹ்ம்ம் வர்றேன்” என அனிதா குளியலறைக்குச் செல்ல…
“உனக்கு எதும் புரியுது?” என யாஷிடம் கேட்டாள்.
“ஓ… நல்லாவே புரியுதே!” என்றான்.
“என்ன?”
“அம்மா அவனுக்காகவும், அவன் அம்மாக்காகவும் யோசிக்கிறாங்க” என்ற யாஷ்,
“புரிஞ்சிடுச்சு” என்ற நிதாஞ்சனி, வீட்டின் அழைப்புமணி அடிக்கவே அங்கிருந்து நகர்ந்தாள். அவள் பின்னே யாஷ்.
“தான்யா, பூபேஷா இருக்கும்” என்று யாஷ் கூடத்தில் இருக்கையில் அமர்ந்திட…
கதவினை திறந்த நிதாஞ்சனி, வாயிலில் வெள்ளைவேட்டி சட்டை அணிந்து திடகாத்திரமாக நின்றிருந்த இருவரைப் பார்த்து,
“யாஷ்” என அழைத்தாள்.
“ஹான்… யாரு?” என்று வந்த யாஷ்…
“யார் நீங்க?” என நிதாஞ்சனிக்கு முன் வந்து அவளை மறைத்தவாறு நின்றான்.
“நீதான் ஆர்விக்கா?” இருவரில் ஒருவன் கேட்க…
“யாருடா?” என்று வந்தான் ஆர்விக்.
“ஓ நீதானா?” என்ற இன்னொருவன், “உன்னை தலைவர் கூட்டிட்டு வரச்சொன்னார்” என்றான்.
“தலைவரா? அப்படி யாரையும் தெரியாதுங்க. நீங்க வீடு மாறி வந்துட்டீங்க நினைக்கிறேன்” என்றான் ஆர்விக்.
“அவங்க உன் பேர் தான் சொன்னாங்க” என நிதாஞ்சனி மெல்லக்கூற…
“ஆமா… ஆர்விக் நீதான? வா போலாம்” என்றான் ஒருவன். இன்னொருவன் ஆர்விக்கின் கையை பிடித்து இழுக்க முயல…
“உங்க தலைவர் யாருன்னு முதல்ல சொல்லுங்க” என்ற யாஷ், “வான்னா வந்திடனுமா?” என்றான்.
“இது அந்த இனியா வேலைடா!” சொல்லிய ஆர்விக்கை யாஷ் ஆமாவா என ஏறிட,
“உங்க தலைவர் பேரு நாச்சிமுத்துதான?” என அவர்களிடம் கேட்டான் ஆர்விக்.
“ஆமா… உங்களை கையோட கூட்டிட்டு வரச்சொன்னாங்க” என்றான் அவன்.
“வர முடியாதுன்னு போய் சொல்லுங்க” என்ற ஆர்விக் திரும்பி வீட்டிற்குள் செல்ல அடி வைத்திட,
“நீ இப்படித்தான் சொல்லுவன்னு எங்க மேடம் சொன்னாங்க” என்றான் அவன்.
“அதான் தெரியுதே! அப்புறம் எதுக்கு இங்க நின்னு டைம் வேஸ்ட் பண்றீங்க… கிளம்புங்க” ஒற்றை விரலை வெளி நோக்கி அசைத்திருந்தான்.
“ஏய்…” என்று ஒருவன் சீறிக்கொண்டு அடியை முன் வைக்க…
“மேடம் இவன் மேல கை வைக்கக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்கட, வரமாட்டெங்கிறான்னு தலைவருக்கு போன் போட்டு சொல்லுவோம்” என மற்றொருவன் அவனை இழுத்துகொண்டுச் சென்றான்.
“அடுத்த பிரச்சினையா?” என யாஷ் ஆர்விக்கைப் பார்க்க…
சிறு சிரிப்போடு தலையை இருபக்கமும் அசைத்தவாறு ஆர்விக் உள்ளே சென்றிருந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
28
+1
2
+1

