
காலை கனவு 25
கதிர்வேலனிடமிருந்து அழைப்பு வந்ததும், சக்தி உடனடியாகவெல்லாம் கிளம்பிவிடவில்லை.
அந்நேர வேலையாக, தோட்டத்தினை முழுவதுமாகப் பார்வையிட்டப் பின்னரே அங்கிருந்து வீட்டிற்கு, வெகு நிதானமாகவே வந்து சேர்ந்தான்.
தாழ்வாரத்திலே வெண்மதி அமர்ந்திருக்க…
“காலேஜ் போகலையா மதி?” எனக் கேட்டுக்கொண்டே வீட்டிற்கு நுழைந்தான்.
“அம்மா போக வேண்டாம் சொன்னாங்க மாமா. முக்கியமான கிளாஸ் இருக்குன்னு சொன்னதுக்கு, இங்க பஞ்சாயத்து இருக்கு. உன் மாமன் குடும்பம் எப்படின்னு நீயும் கூட இருந்து தெரிஞ்சிக்கோ. அப்போதான் மாமன் வீடுன்னு உறவாடம இருப்பன்னு பேக் பிடுங்கி வைச்சிக்கிட்டாங்க” எனக் கூறினாள்.
“ஹோ…” என்ற சக்தி நேரத்தைப் பார்த்தான், பத்தை நெருங்க ஐந்து நிமிடங்கள் இருந்தன.
“அந்த கிளாஸ் முடிஞ்சிருக்குமா?”
இருவரும் பேசிக்கொண்டு நிற்பதை கூடத்தில் உட்கார்ந்திருந்த தென்னரசி முறைத்தபடி பார்த்திருந்தார்.
“ம்ம்… ஃபர்ஸ்ட் பீரியட்” என்ற வெண்மதி, “இட்ஸ் ஓகே மாமா. நோட்ஸ் பசங்ககிட்ட வாங்கிப்பேன்” என்றாள்.
“உனக்கு போகணுன்னா சொல்லு… ட்ராப் பண்றேன்.”
“இல்லை… வேண்டாம் மாமா! அப்புறம் அவங்க சொன்னதை மீறி போனேன்னு அதுக்கு ஒரு வம்பு பண்ணுவாங்க” என்றாள்.
சிறிய விஷயத்திற்கும் சிறு பெண்ணிடம் உள்ள புரிதல் பெரிய பெரிய விஷயங்களில் பெரியவர்களிடம் இல்லையே என நினைத்த சக்தி உள்ளே செல்ல…
“எங்களை வர சொல்லிட்டு நீ உன் வேலையை பார்க்கப் போயிருந்தா என்ன அர்த்தம் சக்தி?” எனக் கேட்டார் ரகுபதி.
சரியாக அந்நேரம் கடிகாரம் பத்து மணியென ஒலியெழுப்பியது. அதனை ஒரு பார்வை பார்த்த சக்தி,
“நான் உங்களை வர சொன்ன நேரத்துக்கு வீட்டில் தான் இருக்கேன்… சொல்லுங்க” என்றான்.
“ஏதோ பேசணும்னு நீதான் வர சொன்ன?” என்ற தென்னரசி, “ஹாஸ்பிடல்ல முடியாம கிடந்து என் பிள்ளை வீட்டுக்கு வந்திருக்கான். வந்து ஆறேழு மணிநேரமாகப்போவுது இன்னும் நீயோ, உன் அப்பா, அம்மாவோ அவனை வந்து பார்க்கல. உன் வீட்டுக்கு நாங்க வந்த பின்னும் அவன் எப்படியிருக்கான்னு ஒரு வார்த்தைக் கேட்கல. வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடல… நல்லாயிருக்கு. ரொம்ப நல்லாயிருக்கு. நீங்க பண்றது. அவனை கட்டிக்கப்போற உன் தங்கச்சி… நாங்க வந்திருக்கோம் தெரிஞ்சும், ரூமைவிட்டு வெளிய வரல” என்றார். நடுக்கூடத்தில் நின்று அத்தனை சத்தமாக.
“அதைப்பற்றி பேசத்தான் வரச்சொன்னேன். ஆனால் இப்படி கத்தி சத்தமா இல்லை. உங்களுக்கு என்ன பேசணுமோ அவ்வளவும் பேசுங்க… பொறுமையா பேசுங்க” என்ற சக்தி, “நீங்க பேசுறீங்களாப்பா?” என்றான். அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த கதிர்வேலனிடம்.
“நீயே பேசிடு சக்தி” என கதிர்வேலன் சொல்ல,
“அப்போ குடும்பமா சேர்ந்து ஏதோ முடிவு பண்ணியிருக்கீங்க?” என்றார் ரகுபதி.
“ஆமா… முடிவு தான்” என்ற சக்தி, “உங்க பையனுக்கும் என் தங்கச்சிக்கும் முடிவு பண்ண நிச்சயம் நடக்காது” என்றான்.
“அதான் குறிச்ச நாளே ஓடிடுச்சே! எங்கிருந்து நடத்த? வேற தேதிதான் பார்க்கணும்” என்ற தென்னரசி, “ஆனால் இப்போ எப்படி நடத்துறது. அதான் உன் தங்கச்சி ராசிக்கு என் பிள்ளையை ஆள் வைச்சு அடிச்சி படுக்க வைச்சிட்டாளே! அவனுக்கு உடம்பு தேறட்டும். பார்த்துக்குவோம்” என்றார்.
தென்னரசி பேசிட சக்தி தன்னுடைய அன்னையைதான் ஏறிட்டான்.
‘இதற்கு மேலும் அவங்களுக்கு உன் பொண்ணை கொடுக்கணுமா?’ எனும் பார்வை அது.
“உன் முடிவு எதுன்னாலும் நான் மறுக்கமாட்டேன் சக்தி” என்ற தெய்வானை அங்கிருந்து நகர்ந்து சமையலறைக்குள் புகுந்துகொண்டார்.
மகளின் ராசி என்ற கண்ணோட்டம் தெய்வானையை வெகுவாகவே வருத்தியது. இரண்டு குடும்பமும் சுமூகமாக சென்று திருமணம் நடக்கிறதென்றாலும், இந்த எண்ணம் சிறு சிறு செயலிலும் முன்னின்று மகளின் வாழ்வை கேள்வியாக்கிவிடுமே! என அதிலே தெய்வானை ஒதுங்கிப்போனார்.
“என்ன முடிவு?” ரகுபதி கேட்க,
“கௌதம் இனி எப்பவும் இந்த வீட்டு மாப்பிள்ளை இல்லை” என்ற சக்தி, “உங்களோட உறவும் இல்லை” என்றான். சுற்றி வளைத்து பூசி மொழிகினால், உறவை முறிப்பதில் தான் தடுமாறுகிறோம் எனும் எண்ணம் அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுமோ என்று முகத்திற்கு நேரே ஒளிவு மறைவின்றி கூறிவிட்டான்.
“உறவு இல்லைன்னா புரியல” என தென்னரசி சொல்ல…
“உங்களுக்கும் எங்களுக்கும் இனி எந்த சம்மந்தமும் இல்லைன்னு அர்த்தம்” என்றான் சக்தி.
“என்ன சக்தி பேச்சு தோரணையா இருக்கு!” என்ற ரகுபதி,
“என்ன மச்சான் உங்க மகன் ஈசியா உறவை வேண்டாம்னு சொல்றான். இவங்க வேண்டாம் சொன்னா உறவு இல்லைன்னு ஆகிடுமா?” என்றார்.
“அந்த உறவுக்கு உண்மையா இருந்திருக்கீங்களா? எங்களை உறவா இல்லாம ஆதாயமா பார்த்த நீங்க உறவைப்பற்றி பேசவேக்கூடாது” என்ற சக்தி… “நானும் அதிகம் பேசாம முடிச்சிக்கலாம் பார்த்தா, என்னை மொத்தமா பேச வைக்கிறீங்க” என்றான்.
“தப்பெல்லாம் உங்க மேல வைச்சிக்கிட்டு… நியாயப்படுத்த உறவு வேண்டாம்னு சொல்லி முந்திக்கப் பாக்குறீங்களா?” என்ற தென்னரசி, “தப்பு பண்ணிட்டு மனசு உருத்துரதால தான உன் தங்கச்சி இன்னும் ரூமை விட்டு வெளியவராம இருக்காள்” என்றார்.
“போதும் நிறுத்துங்க” என்றவன்,
“உங்க மகன் சொன்ன கதையெல்லாம் கேட்டவரை சரி. ஆனால் அதுக்கு அப்புறம் அவன் சொன்னதில் எந்தளவுக்கு உண்மை இருக்கும் ஒரு செக்கென்ட் யோசிச்சுப் பார்த்தீங்களா நீங்க?” என்றதோடு,
“அன்வியை பிறந்ததிலிருந்து உங்களுக்குத் தெரியும். ஆனாலும் அவ்ளோ ஈசியா அவளோட குணம் வரை பேசிட்டீங்க நீங்க” என்றான்.
“நான் என்ன இல்லாததை பேசிட்டேன்னு இந்த கோபம் காட்டுற” என்ற தென்னரசி, “நியாயமா நாங்கதான் கல்யாணம் வேணாம்னு நிறுத்தியிருக்கணும்” என்றார்.
“அப்போ உங்க நியாயத்துக்கே நானும் ஒத்துக்கிறேன். கல்யாணம் வேண்டாம்” என்ற சக்தி,
“எனக்கு ஒரு கேள்விக்கு மட்டும் உண்மையா பதில் சொல்லுங்க” என்றான்.
“என்ன கேள்வி?” தென்னரசியை முந்திக்கொண்டு ரகுபதி வினவினார்.
“கௌதமோட பாஸ், பொண்ணு கேட்டதா சொன்னீங்களே உண்மையா?”
ரகுபதியும், தென்னரசியும் ஒருவரையொருவர் பார்த்து திருதிருத்தனர்.
“சொல்லுங்க…”
“கல்யாணத்துக்கும் அதுக்கும் என்ன சம்மந்தம்?” என்றார் தென்னரசி இழுவையாக.
“உங்க பையனுக்கு நீங்களும் உடந்தையான்னு தெரிஞ்சிக்கணுமே!” என்ற சக்தி, அவர்களின் அமைதியில், “அப்போ உங்க பையன் இன்னொரு பொண்ணை விரும்புறது உங்களுக்கு முன்னவே தெரிஞ்சிருக்கு… அப்படியா?” என்றான்.
“என்ன சக்தி பேச்சு இது? அதெப்படி இன்னொரு பொண்ணை விரும்புவான். அவன்தான் அன்வியை அவ்ளோ பண்றேன். இப்பவும் அவள் எனக்கு வேணும்னு உருகுறானே” என்றார் தென்னரசி.
“நீங்க நிச்சயத்துக்கு ஓகே சொல்லாமவிட்டா, என் முதலாளி எனக்கு பொண்ணு தரதா சொல்லுறாருன்னு சொலுங்கன்னு கௌதம் தான் அம்மா, அப்பாகிட்ட சொன்னான் மாமா” என்ற வெண்மதி, “நிஜமாவே கௌதம் அன்வியை லவ் பண்ணிக்கிட்டே இன்னொரு பொண்ணையும் லவ் பண்றானா?” என சக்தியின் பேச்சில் தான் விளங்கிக்கொண்டதை கேட்டிருந்தாள்.
“சந்தோஷம்” என்ற சக்தி, “எங்க அது உண்மையோன்னு நினைச்சு பணத்துக்காக அந்தப்பக்கம் போயிடுவாங்களோன்னு அம்மா ரொம்பவே பயந்தாங்க. தன்னோட அண்ணனுக்கு பணம் தான் முக்கியமாப்போயிடுமோன்னு அவ்ளோ கவலை. அப்படியில்லைன்னு இப்போ அம்மாவுக்கு நிம்மதியாகியிருக்கும். அதுக்காகத்தான் இதை கேட்டேன்” என்றதோடு,
“அப்போ உங்க பையன் உங்களையும் ஏமாத்தியிருக்கான்” என்றான்.
“மச்சான் சக்தி என்ன சொல்றான். நீங்களும் வாய் திறப்பனான்னு அமைதியாவே உட்கார்ந்திருக்கீங்க?” என ரகுபதி கதிர்வேலனைப் பார்க்க,
“உன் தங்கச்சி இன்னொரு பையனை” என தென்னரசி ஆங்காரமாக குரல் உயர்த்தி, வார்த்தைகளை முடிக்கும் முன்பு,
அங்கிருந்த நீர் நிறைந்த சொம்பினை எடுத்து தரையில் ஓங்கி அடித்திருந்தான் சக்தி.
தென்னரசி அவனது கோபத்தில் அரண்டுவிட்டார்.
“சக்தி…” என கதிர்வேலன் இருக்கையைவிட்டு எழுந்துவிட, சமயலறையில் நின்று நடக்கும் பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருந்த தெய்வானை வேகமாக அங்கு வந்திருந்தார்.
அழுத்தமானவன் தான். ஆனால் ஒருபோதும் மகனின் முகத்தில் இவ்வளவு ஆக்ரோஷத்தை கண்டதில்லை.
“சக்தி வேணாம்பா… அவங்களுக்கு நாம எந்த விளக்கமும் கொடுக்க வேணாம். என் காது கேட்க என் பொண்ணை தப்பா பேசுறாங்க… முடியல சக்தி. போகச்சொல்லு இங்கிருந்து. உறவே வேணாம்” என்று வாய் பொத்தி அழுதார் தெய்வானை.
“உங்க மேல தப்பை வச்சிக்கிட்டு சும்மா நாடகம் போடாதீங்க” என்று தென்னரசி சத்தமின்றி கூற, சக்தி அழுத்தமாகப் பார்த்தப் பார்வையில் வாயினை கப்பென்று மூடிக்கொண்டார்.
“என்னப்பா… விட்டா அடிச்சிடுவப்போல” என ரகுபதி வர,
“வார்த்தையில கவனம்!” என வாய் மீது விரல் வைத்தவன், “உங்க மகன் மேல எனக்கிருக்கும் கோபத்துக்கு நான் ரொம்பவே… ரொம்பவே பொறுமையா பேசிட்டு இருக்கேன். வார்த்தையை விட்டு என்னை தூண்டாதீங்க” என்றான்.
“இதுதான் உன் பொறுமையா?” என இன்னும் அங்கு தரை உருண்டு கொண்டிருந்த சொம்பினை பார்த்து ரகுபதி கேட்க,
“கௌதம் பண்ணதுக்கு இதுவே அதிகமான பொறுமை தான்” என்றார் கதிர்வேலன்.
“அப்படியென்ன பண்ணிட்டான் என் பையன். உங்க பொண்ணு பண்ணாததையா பண்ணிட்டான். உங்க பொண்ணு தான் கட்டிக்கிறேன்னு என் பையன் பின்னாடி சுத்திக்கிட்டே, ஃப்ரெண்ட்ன்னு இன்னொருத்தன்” என்று சொல்ல வந்தவர், சக்தி அழுத்தமாக முன் வைத்த அடியில் பின்னால் நகர்ந்தவராக பேச்சினை நிறுத்தி கணவரின் பின் சென்று சக்தியின் பார்வையில் விழாது மறைந்து நின்றார்.
“உங்க மகன் உங்களை ஏமாத்துறது தெரியாம இவ்வளவு சப்போர்ட்” என்ற சக்தி, “உங்க பையன் சொன்ன அவனோட பாஸ் பொண்ணு உண்மைதான். எங்களை சம்மதிக்க வைக்க, பொய்யா அவன் சொல்ல சொன்னது இல்லை” என்றான்.
“அப்படியே இருக்கட்டுமே! அதிலென்ன தப்பு?” என்று ரகுபதி கேட்க,
“தப்பில்லைதான். பையன்னு இருந்தா நாலு பேரு கேட்கத்தான் செய்வாங்க” என்ற சக்தி, “நீ மாடிக்கு போ மதி” என அவள் செல்லும் வரை பொறுமை காத்து, “அவன் அந்தப் பொண்ணோட கல்யாணம் ஆகாம ஒரே வீட்டில் வாழுறானே அது தெரியுமா உங்களுக்கு?” என்றான்.
“சக்தி!”
அவன் சொல்லியதில் தென்னரசி அதிர்ந்து கத்திட, இந்த விஷயத்தை தற்போதுதான் அறிந்திட்ட கதிர்வேலன், தெய்வானை மற்றும் அறைக்குள் இறுகிய நிலையில் நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த அன்விக்குமே அதிர்வை காட்டிலும் வேதனை பலமடங்காகியது.
கௌதம் தன்னிடம் பேசிச்சென்ற சில மணி நேரத்தில் தீக்ஷா யாரென அறிந்துக்கொள்ள நினைத்து ஆர்விக் முயன்றதில், கௌதமும் தீக்ஷாவும் ஒரே வீட்டில் வசிப்பது தெரிய வந்தது.
அதனை ஆர்விக் சொல்லிய பின்னர் தான், கௌதமிடத்தில் தன்னுடைய கோபத்தைக் காட்டுவதும் வீணென்று சக்தி இவ்வளவு நாட்களும் இத்தனை பொறுமையாக இருந்ததும்.
கோபம் கூட உரிமை உள்ளவர்களுக்கே உரித்தான ஒன்றென்ற எண்ணம் சக்தியினுடையது. அதனாலே கௌதமிடத்தில் தனது கோபத்தையும் தள்ளி வைத்திட்டான்.
“பொய்யில்லை… உண்மை தான். அந்தப் பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிறதுக்காகத்தான் இவ்வளவும்… உங்க பையனோட பிளான்” என்ற சக்தி…
“இதுக்குமேல இந்த விஷயத்தை பேச எனக்கு பிடிக்கல. இதை இப்போ சொன்னதுகூட, என் தங்கச்சி கேரக்டரை தப்பா காண்பிச்சு உங்க பையன் தப்பிக்க நினைச்சு சொல்லிய பொய்யுக்கும், அதை அப்படியே நம்பி நீங்க பேசின பேச்சுக்கும் நான் பதில் கொடுக்கணுமே!” என்றான்.
அக்கணம் தென்னரசியால் வாய் திறக்கவே முடியவில்லை.
சக்தி எந்தவொரு விஷயத்தையும் அலசி ஆராயாது பேசிடமாட்டன் என்பது தெரியுமென்பதால் அவர்களால் அதனை நம்பாது இருக்கவும் முடியவில்லை.
“நீ… நீ சொல்றது உண்மையா சக்தி?” தென்னரசி தவிப்போடு வினவினார்.
“நீங்க உங்க பையன்கிட்ட கேட்கவேண்டிய கேள்வி இது” என்றவன்,
“இந்த விஷயத்தில் நீங்களும் ஏமாந்திருக்கீங்க. அதனால இதில் எனக்கு உங்கமேல கோபமே கிடையாது. அதுக்காக நீங்க பேசியப் பேச்சை மறந்திடுவேனில்லை. அந்தப் பேச்சுக்கெல்லாம் பதில் கொடுத்துட்டேன் நினைக்கிறேன்” என்றான்.
“அவன் இப்படி ஏமாத்துவான்னு தெரியாமப்போச்சே” என ரகுபதி கைகள் விரித்து வருத்தமாகக் கூற,
“இப்போவே அவனை” என கோபத்தோடு தென்னரசி அங்கிருந்து செல்ல முனைய…
“ஒரு நிமிஷம்” என நிறுத்தியிருந்தான் சக்தி.
“இன்னும் என்னப்பா?” என்ற ரகுபதி, “அதான் எங்கமேல தப்பில்லாத விஷயத்துக்கு, கௌதம் செய்ததுக்காக உறவே வேணாம் சொல்லிட்டியே. விட்டுப்போற உறவா தாய்மாமன் சொந்தம்” என்றார் ரகுபதி.
“இந்த விஷயத்தில் நீங்க ஏமாத்த நினைக்கலன்னாலும், ஜாதகம் சரியில்லைன்னு, கல்யாணம் சீக்கிரம் வைக்க நீங்க சொன்னது பொய் தான?” என்ற சக்தி, “அது அன்னைக்கே தெரியும். தெரிஞ்சும் ஏன் நிச்சயத்துக்கு சம்மதம் சொன்னேன்னா… ஒரே காரணம் அன்வி. அவளுக்கு கௌதம் மேலிருந்த விருப்பம்” என்றான்.
“கௌதம் இப்படி பண்ணுவான்னு எங்களுக்கும் தெரியாது சக்தி” என்று தென்னரசி கண்ணீரோடு கூற,
“இப்போ பேச்சு இதில்லை. நீங்க எங்களை ஏமாத்த நினைச்சது. மதியை எனக்கு கட்டி வைக்க நினைச்சதுக்கு பின்னாலும், அன்வியை கௌதமுக்கு உடனே கல்யாணம் செய்து வைக்க எடுத்த முயற்சிக்கு பின்னாடியும் இருக்கும் காரணம்… நிலம். அந்த நிலத்துக்குதான இவ்வளவும்?” என்றான்.
“சக்தி!” தென்னரசியும், ரகுபதியும் ஒருசேர ஓசையின்றி விளித்தனர்.
“அந்த நிலத்துமேல இருந்த ஆசை தான கௌதம் சொன்ன எல்லாத்தையும் என்ன ஏதுன்னு கூட யோசிக்காம செய்ய வச்சிது” என்ற சக்தி, “அந்த நிலத்துக்காக என்னை கார்னர் பண்ண நினைச்ச உங்களுக்கு, நான் வேணாம் சொன்னது, அதுல என்னோட மன உணர்வு பெருசா தெரியலையா? நானும் உங்க பிள்ளைதான?” என்று நிறுத்தியவன், ஒரு பக்க இடையில் கை குற்றியவனாக, பக்கவாட்டில் தலையை திருப்பி, இரு உதட்டையும் உள் மடித்து விடுத்து மூச்சினை வெளியேற்றியவனாக, “நீங்க அப்படி நினைக்கல இல்லையா” என்றான்.
“அது…”
“என்னோட அப்பா, அம்மா, கௌதமையும் மதியையும் அவங்க பிள்ளைகளா நினைச்ச மாதிரி நீங்க என்னையும், அன்வியையும் நினைச்சிருந்தா, ஒரு நிலத்துக்காக எங்க மனசோட விளையாட முடிவு பண்ணி, அன்வியை பகடையாக்க நினைச்சிருக்கமாட்டிங்க” என்றான்.
“மனசளவுல ரொம்பவே தூரமாகிட்டீங்க” என்ற சக்தி, “தூரமான உறவு தூரமாவே இருக்கட்டும்” என்றான்.
ரகுபதி தன்னுடைய தங்கையைப் பார்த்தார்.
“உனக்கு நான் கூட முக்கியமா இல்லாமப் போயிட்டனா அண்ணா?” என்று தழுதழுக்க கேட்ட தெய்வானை, “நீ எல்லாத்தையும் இழந்துட்டு நின்னப்போ அந்த நிலத்தை உனக்கு கொடுக்க சொன்னதே சக்திதான். நீ இழந்ததையெல்லாம் மீட்ட அப்புறம், இனி அந்த நிலத்துல நாமளே பயிர் பண்ணலாம் நான் சொன்னதுக்கு கூட, வேணாம்மா மாமாக்குன்னு கொடுத்தது அவர் பேர்ல எழுதிடலாம் சொன்னவன். என்னவோ எழுத நேரம் அமையாமப்போச்சு. ஆனா நீங்க என் பிள்ளைங்க வாழ்க்கையையே பணயம் வைக்க பார்த்துட்டீங்களே” என்றார்.
முட்டி நின்ற அழுகையை மகனின் பார்வைக்காக வெளியேற்றாது விசும்பியபடி இருந்தார்.
“என்னயிருந்தாலும் நான் உன் அண்ணன் தெய்வா” என ரகுபதி கூற,
“இனி அப்படியொரு உறவே எனக்கில்லை” என்றிருந்தார் தெய்வானை. வேகமாக.
“இப்போ என்ன அந்த நிலத்துக்காகத்தான் நாங்க சொந்தம் கொண்டாடினோம் சொல்றீங்களா?” என்ற தென்னரசி, “ஆமான்னே வச்சுக்கோங்க” என்றார்.
தென்னரசியால் ஒரு பெண்ணாக தன்னுடைய மகன் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை தான். ஆனால் அதற்காக தங்கள் மீதான தவறை உணர்ந்தாரில்லை.
“ஆமா அந்த நிலத்துக்காகத்தான் மதியை உன் பையனுக்கு கட்டிவைக்கப் பார்த்தோம்… இத்தனை வருஷம் அந்த இடத்தில் உழைப்பைப்போட்டு விளையிற பூமியா மாத்தி வச்சிருக்கோம். நீங்க கேட்டா கொடுத்திடனுமா?” என்றார்.
சக்தியிடம் விரக்திப் புன்னகை.
கதிர்வேலனுக்கு மனமே விட்டுப்போனது. தொப்பென்று இருக்கையில் அமர்ந்தார்.
“நீங்க மாத்தினீங்களா?” என்ற தெய்வானை, “உங்ககிட்ட கொடுக்கும்போதே அது போட்டதெல்லாம் விளையும் தங்க பூமிதான்” என்று மேற்கொண்டு பேச விழைய,
“அம்மா” என்று அவரை அமைதியாக்கியிருந்தான் சக்தி.
“இனி எதுவும் பேச வேண்டாம்” என்றவன், தன்னுடைய அறைக்குச்சென்று வந்தான்.
சக்தியின் கையில் பத்திரம்.
“மதி!”
சக்தியின் குரலுக்கு வேகமாக கீழிறங்கி வந்தாள் வெண்மதி.
அவளிடம் பத்திரத்தைக் கொடுத்த சக்தி,
“அந்த நிலத்தை வெண்மதி பேருக்கு மாத்தி எழுதியிருக்கேன். அவளோட கல்யாணத்துக்கு அப்புறம் அது அவளோட வாரிசுக்கு போய் சேரும். மதி யாருக்கும் எழுதி கொடுக்க முடியாது” என்றான்.
வெண்மதியின் பெயரில் உள்ளதென சக்தி சொல்லியதும் மகிழ்ந்த தென்னரசி, ரகுபதிக்கு அவனின் அடுத்த வார்த்தைகள் பெரும் அதிர்வாய்.
மொத்த சூழலுக்கும் காரணமாக இருந்த அந்த நிலம் தற்போது அவர்களிடத்தில் தான். ஆனால் அவர்களிடமில்லை. உரிமை கொண்டாட முடியா சொத்து.
சக்தியின் அமைதியான அதிரடி அவர்களை மொத்தமாக நிலைக்குலைய வைத்திருந்தது.
அப்படியே விட்டிருந்தாலும் காலத்துக்கும் நம் கையோடு நின்றிருக்குமென வருந்த மட்டுமே முடிந்தது.
மகளாகவே இருந்தாலும் பின்னாளில் யாருக்கோ உரிமையான ஊறவாயிற்றே! ஏற்கமுடியவில்லை.
இதில் கௌதம் செய்து வைத்திருக்கும் செயல்கள் வேறு ஆத்திரமளிக்க…
“அவளைக் கூட்டிட்டு வந்து சேருங்க” என்று கணவரிடம் அதிகாரமாய் உரைத்து வேகமாக அங்கிருந்து வெளியேறினார் தென்னரசி.
“இது வேணாம் மாமா” என வெண்மதி பத்திரத்தை சக்தியிடம் நீட்ட…
“இது உனக்கானது. இப்போயில்லை. உன்னோட பதினெட்டாவது வயசு பிறந்தநாளுக்கே எழுதி வைச்சிட்டேன். இப்போ எல்லாம் தெரிஞ்ச அப்புறம் காலத்துக்கும் உனக்கே இருக்கணும்னு மாத்தி எழுதினேன்” என்று அவளின் தலையில் பரிவாய் கை வைத்து அழுத்தம் கொடுத்தான்.
“மாமா…”
“இனிமே இங்கென்ன பேச்சு” என்று மகளைப் பார்த்து உறுமிய ரகுபதி, “வா போலாம்” என்று அவளின் கையைப்பிடித்து இழுத்துச் சென்றார்.
எது எப்படியோ ரகுபதி, தென்னரசிக்கு நிலம் தங்களிடம் தான் எனும் எண்ணம் தான் அப்போதும்.
தெரிந்தே விட்டுக்கொடுத்திட்ட மகனின் குணத்தின் முன்பு கதிர்வேலனுக்கு அந்த நிலமெல்லாம் பெரிதாகத் தெரியவில்லை. மகனை மெச்சுதலாய் பார்த்திருந்தார்.
“எப்பவும் மாறமாட்டாங்க” என்ற கதிர்வேலன், “மதி பேர்ல எழுதினது ரொம்பவே சரி சக்தி” என்றார்.
மனதின் அழுத்தம் வெளியேறியவனாக சக்தி நின்றிருக்க…
“அந்த கௌதமை அப்படியே விட்டுட்டியேப்பா?” என்றார் தெய்வானை.
“அவனை எதுவும் செய்ய நாம யாரும்மா? அவன் தான் நமக்கு யாரு? திட்டி, அடிச்சு கோபத்தைக்காட்டி, நீ எனக்கு உரிமையானவன், தப்பு பண்ணா கேட்கிற ரைட்ஸ் இருக்குன்னு காண்பிக்கணுமா? வேணாம் முடிவு பண்ணியாச்சு… அன்வி வாழ்க்கையில அவனை விலக்கி வைச்சாச்சு. அந்த குடும்பத்தில் மதி மட்டும்தான் நம்ம உறவு” என்றான்.
சக்தியின் நிதர்சனத்தில் பெரியவர்களிடம் ஏற்கும் விதமான பாவனை.
கனமான சூழலிலிருந்து வெளிவந்த உணர்வு,
அறைக்குள்ளிருந்து ஓடி வந்த அன்விதா,
“அண்ணா” என பெருத்த ஆசுவாசமாய் அவனை அணைத்திருந்தாள்.
சக்தியின் உள்ளத்தில் தங்கையின் நிம்மதியை மீட்டுக்கொடுத்திட்ட நிறைவு.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
34
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


சூப்பர்
நன்றி அக்கா 😍😍