
காலை கனவு 23
ஆர்விக் அனிதாவிடம் எதையும் மறைத்ததில்லை. சிறு விடயமென்றாலும் அவரிடம் சொல்விடுவான். அவரும் அப்படித்தான்.
ஆனால் அன்னையின் மனதில் தன்னை நினைத்து இப்படியொரு வேதனை இருக்குமென்று அவன் சற்றும் யோசிக்கவில்லை.
“அம் இன் லவ் அனி” என்று ஆர்விக் முதல்முறை சொல்லும்போதே, இயல்பான அன்னையாகக் கண்டித்திருந்தாலோ அல்லது,
“இந்த லவ் வெளிய சொல்லக்கூட எனக்கு வாய்ப்பில்லைம்மா” என அவன் உடைந்து அழுதபோது,
“ஒத்துவராதது நமக்கெதுக்கு ஆர்வி” என்று கேட்டிருந்தாலோ…
“கனவோட வாழப் பழகிட்டேன் போலம்மா” என்று விரக்தியாய் உரைத்தபோது,
“இதெல்லாம் விட்டுட்டு உன் வாழ்க்கையைப் பாருடா” என்று கடிந்து கொண்டிருந்தாலோ,
‘அம்மாவுக்கு தன்னுடைய நிலை வருத்தம் கொடுக்கிறது’ என ஏதோ ஓர் புள்ளியில் நினைத்திருப்பான்.
ஆனால், “இது வேணாம்” என்றுவிட்டால், மகனின் மனம் வேதனை கொள்ளுமோ, அப்படிக் கூறினால் அவனது மகிழ்வு தொலைந்துப்போகுமோ என்று மட்டுமல்லாது…
‘அவன் உயிராய் நேசிப்பதை… எப்படி வேண்டாமென்று சொல்வது’ என அவனின் சந்தோஷத்தை மட்டுமே எண்ணி அனிதா முழுதாய் இவற்றை தவிர்த்திருக்க, அவரின் இப்படியோரான வலி அவனுக்குத் தெரியாமலே இருந்தது.
அனைத்துமாகிய உறவு.
தனக்காக வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது இதயத்தை கசக்கி பிழிய, வேதனையின் சாயல் கண்ணீராய் விம்மம் கொண்டது ஆர்விக்கின் கண்களில்.
தரை அமர்ந்திருந்த ஆர்விக் மெத்தையில் தலை சாய்த்து கண்கள் மூடி, தொண்டை உணரும் வலியை அடக்கி வைத்திட, இமை தாண்டிய நீர் அவனது செவி மடலை தொட்டுவிடும் முன்பு அனிதா துடைத்திருந்தார்.
யாஷ் கோபமாக எல்லாவற்றையும் கொட்டிக்கொண்டிருக்கும் போதே விழித்துவிட்ட அனிதா, பிரிக்க முடியாத இமையை முயன்று திறக்கும் முன் ஒரே மூச்சாக சொல்லி முடித்திருந்தான்.
தன்னுடைய கவலை மகனை வறுத்தவிடக் கூடாதென மனதை மறைத்தவருக்கு… மகனின் கண்ணீர் உயிர் வேதனை அளித்தது.
“அம்மா” என்று அவரின் தொடுகையில் வேகமாக திரும்பிய ஆர்விக்…
அனிதா கண்கள் திறந்திருப்பதில் பெரும் ஆசுவாசம் அடைந்தான்.
“ரொம்ப வலிச்சுத்தாம்மா?” என்று குரல் கமற கேட்ட மகனின் தலையை தனது வயிற்றோடு அழுத்திக் கொண்டார்.
“இனி உன்னைவிட்டு எங்கயும் போகமாட்டேம்மா. நீயும் போயிடாத! நீயில்லைன்னா என்னால இங்க சர்வைவ் பண்ணவே முடியாது அனி” என்றவனின் வார்த்தைகள் அங்கிருந்தவர்களின் விழிகளையும் பனிக்கச் செய்தது.
“அட்லீஸ்ட் நான் இருக்க வரையாவது நீயும் இரும்மா. எனக்காக இரும்மா” என்று முற்றிலும் உடைந்து அழுதவனை பார்க்க முடியாது, எழுந்தமர்ந்து மகனை மார்போடு ஆரத் தழுவியிருந்தார்.
“இல்லப்பா… இல்ல… அம்மா எங்கயும் போகமாட்டேன்!” என ஆர்விக்கின் முகத்தை பிரித்து, இரு கைகளாலும் அழுந்த துடைத்தவர், “என்னைப்பாரு… அம்மா ரொம்ப நல்லாயிருக்கேன். இனி உன்னோட அனிக்கு ஒன்னும் ஆகாது. சரியா? ஆர்வி அழவேக்கூடாது. ஆர்வி அழுதா அம்மாக்கு கஷ்டமா இருக்கும்ல?” எனக் கேட்டவரை கழுத்தோடு தாவி அணைத்திருந்தான் ஆர்விக்.
இருவரது பாசத்தின் உணர்வுப்போராட்டம் நெஞ்சத்தை கனக்க வைத்திட…
“இப்போதான் நார்மல் ஆகியிருக்காங்க ஆர்வி. கண்ட்ரோல் யோர் எமோஷன்” என நிதாஞ்சனி கூறினாள்.
“சாரிம்மா… சாரி” என விலகிய ஆர்விக், “இப்போ… இப்போ நீ ஓகே தானம்மா? நல்லாயிருக்க தான?” என்றான்.
“அம்மா எப்பவும் நல்லாயிருக்கணும் அப்படின்னா… நீ மூவ் ஆன் ஆகணும். உனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சாலே அம்மா ஃபுல் ஹேப்பி” என்ற யாஷ்,
“ஆமா தானம்மா?” என அனிதாவிடம் கேட்டான்.
அனிதா யாஷை முறைக்க…
“டேய் சும்மா இருடா!” என்று அவனை அதட்டினாள் தான்யா.
“இவனை முதல்ல அழ வேணாம் சொல்லுங்க மேம். பார்க்க முடியல” என்ற பூபேஷ், “அவனுக்கு மட்டுமில்ல… எங்களுக்காகவும் நீங்க கொஞ்சம் உங்களை பார்த்துக்கலாம்” என்றான்.
“வயசாகுதுல… சரியாகிடும். அதான் நீங்கலாம் இருக்கீங்களே!” என்ற அனிதா முடியாது முயன்று பேசுவது தெரிந்தது.
அதுவும் கூட ஆர்விக்கிற்காக தன்னை இயல்பாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார் என புரிந்தது.
“அம்மா ரெஸ்ட் எடுக்கட்டும் ஆர்வி” என நிதாஞ்சனி சொல்ல…
“படுக்கணுமாம்மா?” என்று தவிப்பாய் கேட்ட ஆர்விக், “முடியலன்னு படுக்காதம்மா. உன்னை அப்படி பார்க்கவே முடியல” என மீண்டும் தழுதழுக்க…
“ஆர்வி” என்ற அனிதாவின் ஆதுரமான அழைப்பில் அவரின் மடியில் சுருண்டுவிட்டான்.
“இப்போக்கூட உங்களுக்காகன்னு ஏதாவது வாய் திறக்கிறானா பாருங்க” என்ற யாஷ், “நீ இப்படியே இருந்தா அம்மாக்கு இப்படித்தான் ஆகும்” என்றான்.
அனிதாவின் மடியில் தலை வைத்து வயிற்றை சுற்றிக் கட்டிக்கொண்டிருந்த ஆர்விக்கின் பிடி இறுகியது.
தாயை எந்நிலையிலும் விடமாட்டேன் என தன்னுடைய பிடியில் உணர்த்தினான்.
அனிதா நிதாஞ்சனியை பார்க்க…
“நீ முதல்ல வெளிய வாடா” என யாஷை இழுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேறினாள் நிதாஞ்சனி.
“நீ இங்கவே உட்கார்ந்திருக்க. வாய் திறந்த கொன்னுடுவேன்” என யாஷை கூடத்தில் இருக்கையில் அமர்த்தியவள், “ஆர்விக் ரொம்பவே சென்சிடிவ் தெரியும்ல உனக்கு? அப்புறம் ஏன் இப்படி அவனை பிளேம் பண்ணிட்டு இருக்க நீ?” எனக் கேட்டாள்.
“என்ன பிளேம் பண்றாங்க? உண்மை தான? அம்மாவோட ஒரே கவலை அவன் தான். அதால வந்த அழுத்தம் தான இப்போ இங்கவரை கொண்டு வந்திருக்கு?” என்ற யாஷ், “இப்போக்கூட அவனுக்கென்ன அவ்ளோ பிடிவாதம். இல்லைன்னா விடாமா” என்றான். அடக்கப்பட்ட சீற்றத்துடன்.
வீடே பேச்சின்றி அமைதியாக இருந்திட, யாஷின் சத்தமான குரல் உள்ளே இருந்தவர்களுக்கும் தெளிவாகக் கேட்டது.
நிதாஞ்சனி என்ன பதில் கொடுப்பதென்று தெரியாது பார்க்க…
“உங்களால இதை மறுக்க முடியலல?” என்றவன், “அவங்க அழுத்தத்திலிருந்து வெளிவரலன்னா… இது ரிப்பீட் ஆகும். அது உயிருக்கே ஆபத்தா முடியும் டாக்டர் சொன்னாங்கன்னு, கொஞ்ச முன்ன அவன்கிட்ட சொன்னேன்தான? அப்பவும் இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம் நிதா? சொல்லாத காதல்… அதுவும் வன் சைட்… அவ்ளோ பெருசா இவனுக்கு?” என மேலும் பேச விழைந்தவனை,
அனிதாவின்…
“யாஷ்” எனும் அழைப்பு மௌனமாக்கியது.
சில நிமிடங்கள் அப்படியொரு அமைதி.
“எதுவும் சாப்பிடுறீங்களா மேம். நைட் ஆச்சு?” என தான்யா கேட்க,
“வெளிய இருக்கவனுக்கு எதும் கொடு தான்யா. பசியிலதான் இப்படி கத்திட்டு இருக்கான்” என அனிதா சிரிக்க முயன்றதில் அவ்விடம் சற்றே இறுக்கம் தளர்ந்தது.
“நேரா இங்கவே வந்துட்டீங்களா? வீட்டுக்கு கால் பண்ணியா தான்யா?” என அனிதா கேட்க,
“இங்கதான் இருக்கேன்னு அம்மாக்கு சொல்லிட்டேன் மேம்” என்ற தான்யா, “டின்னர் எதுவும் செய்றேன்” என நகர்ந்தாள்.
“உன் ஆளு போயிட்டாள் டா! நீயென்ன இன்னும் என் முகத்தையே பார்த்துட்டு உட்கார்ந்திருக்க?” என அனிதா பூபேஷிடம் கேட்க…
“நீங்க ஓகேதான?” என்றவனிடம் மென் சிரிப்பை உதிர்த்தார்.
“சிரிக்கிறீங்க நீங்க?” என்ற பூபேஷ், “நீங்க இல்லாம இவனால இருக்கவே முடியாது” என ஆர்விக்கைப் பார்த்தவிட்டு வெளியில் சென்றான்.
தான்யாவும், நிதாஞ்சனியும் சமையல் செய்திட… பூபேஷ் யாஷின் அருகில் அமர்ந்து அவனது கையை பிடித்து அழுத்தம் கொடுத்தான்.
“என்னடா?”
பூபேஷ் அழுத்தமாகப் பார்த்திட யாஷ் கேட்டிருந்தான்.
“நத்திங்…” என பூபேஷ் பார்வையை மாற்றிட…
“அதிகமா பேசிட்டனா?” என்றான் யாஷ்.
“ரொம்பவே!”
“இருக்கட்டும்.”
“ஏற்கனவே வலியில் இருக்கவனுக்கு அந்த வலியை அதிகமாக்கியிருக்க நீ!”
“தெரியுது!”
“அப்புறம் ஏன் டா?”
“வேறெப்படி… எப்போ, அவனை ஓவர்கம் ஆக வைக்கிறது?”
“புரியுது.”
“ஆனாலும் இவனோட ரொம்ப கஷ்டம் டா பூபேஷ். வலிக்குதுன்னு தெரிஞ்சே எப்படி அந்த வலியோட சுத்துறான் தெரியல” என்ற யாஷின் பேச்சு அனிதா வரவே தடைப்பட்டது.
“நீங்க எதுக்கு எழுந்து வந்தீங்க? அவன் எங்க?” என்ற யாஷ் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே அறையை எட்டிப்பார்த்திட…
“தூங்கிட்டான்” என்றார் அனிதா.
“ரொம்ப அழுதுட்டான்ல?” யாஷ் கேட்க…
“நீதான் காரணம்” என்றார் அனிதா.
“நானா?”
“ஆமா!” என்ற அனிதா, “ஆமாதான பூபேஷ்” என்றார்.
“ஆமா… ஆமா…” என்று பூபேஷும் தலையாட்டிக் கூறிட, இருவரையும் முறைக்க முடியாது யாஷ் இளகியிருந்தான்.
யாஷுக்கும் ஆர்விக்கை குற்றச்சாட்டும் எண்ணமில்லை. அன்று கேட்டபோது,
“அன்விக்கிட்ட என் லவ் சொல்லிடுவேன்” என ஆர்விக் சொல்லியிருந்தால் எப்படி நினைத்திருப்பானோ, “இனி எப்பவும் சொல்லமாட்டேன்” என்ற பின்னர் ஆர்விக் அந்த காதலிலே சுற்றிக் கொண்டிருப்பது சரியில்லையென நினைத்தே, இன்றே அவனை அதிலிருந்து வெளிக்கொண்டுவர வேண்டுமென மொத்தமாக பேசிவிட்டான்.
“அவன் நார்மல் ஆன பிறகு உனக்கு இருக்கு!” என அனிதா சிரிக்க முயல…
“ஆமா… சண்டை எதுவும் பிடிச்சிடப்போறான்” என்ற யாஷ், “அவனை ரொம்பத்தான் சாஃப்ட் பெர்சனா வளர்த்து வைச்சிருக்கீங்க” என்றான்.
“அது அவனோட இயல்பு” என்ற அனிதா, “அதுதான் அவனை ரொம்ப ஹர்ட் பண்ணுது” என்றார்.
நெஞ்சம் கனத்த ரணத்தினால் மனமும் உடலும் முழுதாய் சேர்ந்திருக்க… அன்னை மடி தந்த சுகத்தில் கண்ணீரோடு தன்னையறியாது உறங்கியிருந்த ஆர்விக்கின் ஆழ்மனதின் காட்சிகள் யாவும் யாஷ் பேசியவையும், அனிதாவின் நிலையுமாகவே சுற்றி வந்தன.
உணர்வுகளின் பெரும் ஓசையாய், அவனது குரலாய், “அம்மா” எனும் பிரபஞ்சத்தின் ஆக்கம் அவனது ஆத்மம் நிறைந்து ஒலித்தது.
**********************************
விடியலுக்கு முன் கௌதம் வந்துவிட்டான் என்பது தெரிந்தது.
வந்து சேர்ந்த அடுத்த நொடி ரகுபதி தெய்வானைக்கு அழைத்து,
“என் மகளை அனுப்பி வை” என்றதில்…
சக்தி தோட்டத்திற்கு செல்ல கிளம்பி, தெய்வானை கொடுத்து கருப்பட்டியை அருந்திகொண்டிருக்க, ரகுபதி அழைத்து அவ்வாறு கூறியிருந்தார்.
தெய்வானை பதில் சொல்ல முடியாது மகனைப் பார்க்க…
“இப்போ அனுப்ப முடியாது. விடியட்டும். வருவாள்” என அலைபேசியை தான் வாங்கி பதில் சொல்லியவன்,
“பத்து மணிக்கு மேல வீட்டுக்கு வாங்க! பேசணும்” என்றான்.
“பேச என்னயிருக்கு?” என ரகுபதி குரல் உயர்த்திட…
“நீங்க வர்றீங்க?” என்று வைத்திருந்தான் சக்தி.
“பிரச்சினை வேண்டாமே சக்தி!” தெய்வானை கைகளை பிசைந்தபடி சொல்ல…
“இங்கிருக்க ஒவ்வொரு தூணா உட்கார்ந்து அழுதிட்டு இருக்காள். இப்படியே இருக்கட்டும் நினைக்கிறீங்களா?” என்றான்.
“கோவப்பட்டா ஆச்சா சக்தி?”
“இதுக்கு கோவப்படாம?” என்ற சக்தி, “நான் இவ்வளவு பொறுமையா இருக்கிறதே, அவனுக்கானதை ஆர்வி கொடுத்துட்டாங்கிறதால தான். இல்லை அவனை முழுசா வகுந்திருப்பேன்!” என்றான். முகத்தில் சினம் பொங்கியது.
“சக்தி!”
“என்னை பேச வைக்காதீங்க?”
“நீ கோவப்படாத சக்தி. என்ன நினைக்கிறியோ செய்” என்று வந்தார் கதிர்வேலன்.
“அவங்க வரட்டும்ப்பா. மொத்தமா முடிச்சிக்கலாம். அவங்க அன்வியை பேசினது ஒருமாதிரி…” என்று முகம் கசங்கப் பார்த்தவன், “சொல்லவே முடியலப்பா” என்றான்.
“சக்தி!”
நொடியில் சீர்பெற்றிருந்தான்.
“அவங்களுக்கு அவங்க மகன் எப்படின்னு தெரியணும்தான? தெரிஞ்சதுக்கு அப்புறமும் சாப்போர்ட் பண்றாங்களா பார்ப்போம். எந்தளவுக்கு இதில் அவங்களுக்கு பங்கிருக்கு தெரியணுமே” என்ற சக்தி, “தோட்டத்துக்குப் போயிட்டு வர்றேன்” என்று வெளியேறினான்.
தெய்வானை கணவனை வருத்தமாக ஏறிட…
“உனக்கு உன் பொண்ணைவிட உன் அண்ணன் உறவு மேலவான்னு கேட்கத் தோணுது. ஆனால் கேட்கமாட்டேன். இது எவ்ளோ அபத்தமான கேள்வின்னு தெரியும்” என்ற கதிர்வேலன்…
“அவங்க நம்மளவுக்கு நம்மளை உறவா பார்க்கல தெய்வா… ஆதாயமாதான் பார்த்திருக்காங்க” என்றார்.
“நான் அவங்க வேணும் சொல்லலங்க… சண்டை போட்டு பிரியணுமான்னு யோசிச்சேன்” என்றார் தெய்வானை.
“இங்க யாரும் சண்டை போடப்போறதில்லை தெய்வா! சக்தி பொறுமையா பேசிப்பான்” என்று நகர்ந்தார்.
நின்ற இடத்திலேயே தரை அமர்ந்த தெய்வானைக்கு, மகளா? அண்ணன் உறவா? எனும் வேதனை எழத்தான் செய்தது.
அதற்காக கௌதமின் செயலை ஏற்றுக்கொண்டு அண்ணனென்று முடிவெடுத்திட முடியாதே! மகளின் கண்ணீர் அவரை அழுத்திக் கொண்டிருக்கிறது.
“அத்தை!” வெண்மதியின் அழைப்பில் தன்னிலை மீண்டார்.
“வாடா! அதுக்குள்ள எழுந்திட்ட?” என்று புடவை தலைப்பால் முகத்தை ஒற்றியவராக எழுந்தார்.
“அம்மா போன் பண்ணாங்க அத்தை. அங்க வரச்சொல்றாங்க” என்று வெண்மதி தயக்கத்தோடு சொல்ல…
“போலாம் மதி. இன்னும் இருளு பிரியலையே. தனியா எப்படி போவ?” என்றவர், “எனக்கும் உன் அப்பா போன் பண்ணார். சக்தி இப்போ அனுப்ப முடியாது சொல்லிட்டான்” என்றார்.
“மாமா சொல்லிட்டாங்களா? அப்போ சரி… நான் போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன்” என திரும்பியவளிடம்…
“உனக்கு கௌதம் எப்படியிருக்கான் பார்க்க தோணலையா?” எனக் கேட்டார் தெய்வானை.
“அன்வி அழறதை பாக்குறேன். எதையுமே ஈசியா எடுத்துக்குற ஆள். அவங்களாலே நடந்ததிலிருந்து வெளியவர முடியலன்னா அவன் எதோ பண்ணக்கூடாததை பெருசா பண்ணியிருக்கான் புரியுதே! அன்வி இடத்தில் என்னை வைச்சுப் பார்த்தேன். அவனை அண்ணனா நினைக்கத் தோணல” என்றவளின் பதிலில் தெய்வானைக்கு கொட்டு வாங்கிய உணர்வு.
வாழ்க்கையின் அனுபவமின்றிய சிறியப்பெண். எத்தனை பெரும் பாடத்தை உணர்த்திவிட்டாள்.
இனியுமா தெய்வானை அண்ணன் உறவென்று தன்னைக் குழப்பிக்கொள்வார்.
தவறென்றால்… யார் செய்தாலும் தவறு தான். அந்நிலையில் நம்மை கட்டி வைக்கும் உறவுகளை விலக்கி வைப்பதில் தவறே இல்லை என புரிந்துகொண்டார்.
சக்தி நடைபயிற்சியாக இருக்குமென தினமும் அதிகாலை நேரம் பெர்ரி தோட்டத்திற்கு வண்டியின்றி நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தான்.
நடந்து செல்வதால் முக்கிய பாதையை தவிர்த்து எஸ்டேட் உள் செல்லும் ஒத்தையடி பாதையை பயன்படுத்துவான்.
அவ்வழியில் தான் நிதாஞ்சனியின் வீடும் உள்ளது.
இன்று அவனுக்காகக் காத்திருந்ததைப் போன்று வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த சுகவனம், எழுந்து பாதைக்கு வந்தவராக,
“சக்தி” என அழைத்திருந்தார்.
“சொல்லுங்க மாமா” என்று நின்ற சக்தியிடம்…
“ஆளே பார்க்க முடியலையேப்பா” என்றார்.
“தினம் இந்த வழியாதான் போறேன்… வர்றேன். உங்களைத்தான் காணோம்” என்றான். இளமுறுவலோடு.
“திண்டுக்கல்ல கல்யாணம் ஒன்னு. நெருங்கின சொந்தம். மூணு நாள் அங்க போயிட்டேன். நேத்து சாயங்காலம் நம்ம வீட்டுக்கு வந்தேன். நீ பிளம் தோப்புக்கு போயிருக்கன்னு தங்கச்சி சொன்னுச்சு. திரும்பி வந்துட்டேன்” என்றார்.
“ஏதும் விஷயமா மாமா?”
“நன்றி சொல்லணுமே சக்தி.”
சக்தி புரியாது பார்த்தான்.
“இந்தமுறை கூடுதல் லாபம் சக்தி. தொடர்ந்து நீ காட்டின டீலரே எடுத்துக்கிறேன் சொல்லிட்டாரு. நட்டத்துல் வீதியோட நின்னுப்போயிருக்கும்” என்றவர், “அன்னைக்கே வீட்டுக்கு வந்து சொல்லணும் இருந்தேன். நீ வெளியூர் போயிருக்கன்னு கதிரு பார்க்கும்போது சொன்னான். அப்புறம் எங்க உன்னை பிடிக்கவே முடியலயே! அதான் நீ விடியல்ல இப்படி வருவியே இன்னைக்கு பார்த்து சொல்லிடலாம்னு” என்றார்.
“அதனாலென்ன மாமா. நமக்கு நாமதான உதவி. இப்படி ஒருத்தருக்கொருத்தர் மாத்தி மாத்தி செய்துக்கிறதுதான” என்றவனின் கையை அவனே எதிர்பாராது பற்றிக்கொண்டவர்…
“விவசாயிகளோட கஷ்டம் புரிஞ்சவங்க யாரு? சாப்பிடுற நேரம் விதவிதமா இருக்கணும் எதிர்பார்க்கிற யாருக்கும், அதுக்கு பின்னாடி இருக்க நம்மளை நினைச்சுப் பார்க்க தோணுறதில்லையே” என்றதோடு, “ரொம்பவே நன்றி சக்தி” என்றார்.
பெருமிழப்பு ஏற்பட்டுவிடுமோ என்று மனதோடு கொண்டிருந்த பயத்தின் நெகிழ்வு இதென அவரின் பேச்சில் உணர்ந்திட்ட சக்தி…
“எதுவாயிருந்தாலும் தயங்காம கேளுங்க மாமா” என்று தன்னுடைய கையை பிடித்திருந்தவரின் கரத்தில் அழுத்தம் கொடுத்தான்.
“வீட்டுக்கு வாயேன் சக்தி. டீ குடிச்சிட்டுப் போலாம்.”
“சீக்கிரம் வர்றேன் மாமா” என்று சிறு தலையசைப்போடு நகர்ந்திருந்தான்.
அவன் கூறிய வார்த்தைகளின் பொருள் அவனோடு மட்டுமே!
சக்தி செல்வதையே பார்த்து நின்றிருந்தார் சுகவனம்.
“நன்றி சொல்லியாச்சா?” என்று வந்த கார்த்திகா, “தன்மையான பிள்ளை. பார்க்கும் போதெல்லாம் நினைப்பு கூடுதுங்க. நான் மட்டுமாவது தெய்வாகிட்ட பேச்சுவாக்குல் கேட்டுப் பார்க்கட்டுமாங்க?” என்றார்.
“நீ செத்த சும்மா இரு கார்த்திகா” என்ற சுகவனம், “அங்க சூழல் சரியில்லை. நேத்து சாயங்காலம் போனப்போ கதிரு சொல்லி வருத்தப்பட்டான். இந்த கௌதம் எவ்வளவு பெரிய வேலையை பார்த்திருக்கான்” என்று மேலோட்டமாகக் கூறியவர், “மனசோட வச்சிக்க. இறக்கம் வரை போயி செடியில புது துளிர் வச்சிருக்கா பார்த்து வர்றேன்” என்று சென்றிருந்தார்.
“ஆசை இருக்கு ஆகாசத்தைப் பிடிக்க… சுலபத்துல யோகம் அமையுமா?” என்று தனக்குத்தானே சொல்லிய கார்த்திகா…
“இவளுக்கு எங்க அமைஞ்சிருக்கோ?” என வாசலை பெருக்க ஆரம்பித்தார்.
கார்த்திகாவின் எண்ணத்திற்குரிய அவளின் மகளோ, பெரும் யோசனையில் உழன்று கொண்டிருந்தாள்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
38
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நைஸ் கோயிங் 🥰🥰🥰❤️❤️❤️❤️
Thank you sis