Loading

காலை கனவு 22

வீட்டிற்கு வருவதற்குள் ஆர்விக்கின் உயிர் மரித்து மீண்டதென்று தான் சொல்ல வேண்டும்.

எப்போதும் தான் அழைப்பதற்கு முன் தன்னுடைய இருப்பை தகவல் வழி உணர்த்திக் கொண்டேயிருக்கும் அன்னையிடமிருந்து அன்றைய தினம் முழுக்க ஒற்றை தகவல் கூட இல்லாதிருக்க மனதில் தானாக ஒருவித பதற்றம் குடிக்கொண்டுவிட்டது.

சென்ற வேலை முடிந்ததும், அடுத்த நிமிடம் உடன் வந்திருந்த தன்னுடைய நண்பர்களைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டுவிட்டான்.

வரும் வழியெல்லாம் அனிதாவுக்கும், யாஷுக்கும் அழைத்தபடியே வர, இருவரில் ஒருவர் கூட அவனது அழைப்பை ஏற்காது போக, பதற்றம் பயமாக சூழ்ந்துகொண்டது.

இருப்பினும் வேலையின் காரணமாக எடுக்காது விட்டிருக்கலாமென தனக்குத்தானே திடமளித்துக் கொண்டவனாக முயன்று தன்னை இயல்பாக வைத்திருந்தான்.

அந்த இயல்பெல்லாம் யாஷிடமிருந்து அழைப்பு வரும் வரையில் தான்.

சக்தி அன்வியுடன் பேசச்சொல்கிறான் என்பதை அவனிடமிருந்து வந்த தகவலில் புரிந்துகொண்ட ஆர்விக்,

பேசுவதற்கான தங்களின் பிரத்யேகமான தருணமாக எப்போதும் இடம்பெறும் தேநீருடன் அவளுக்கு அழைக்கலாமென நினைத்து, தேநீர் கைக்கு கிடைத்ததும் அன்விதாவுக்கு அழைக்க நினைத்தான்.

அதற்கு முன்னர் தேநீரை புகைப்படம் எடுத்து அவளுக்கு அனுப்பி வைக்க, யாஷிடமிருந்து அழைப்பு.

அந்த அழைப்பை ஏற்பதற்கு முன்னர் ஆர்விக்கின் மனதில் எழுந்த ஆசுவாசத்தை அத்தனை எளிதாக விவரித்திட இயலாது.

சுவாசம் சீராகிய கணம் யாஷின் குரல் வைத்தே அங்கு ஏதோ சரியில்லையென கண்டு கொண்டான்.

அழைப்பை ஏற்றதும்,

“கால் அட்டெண்ட் பண்ணாம என்னடா பண்ற?” என்று கோபமாகக் கேட்டவனின் குரலில் மிதமிஞ்சிய பதற்றமே எஞ்சியிருந்தது.

“நீ எங்க இருக்க ஆர்வி?” யாஷின் சோர்ந்த குரல் ஆர்விக்கின் நெற்றியை சுருங்கச் செய்தது.

“யாஷ்… ஆல் ஓகே?”

அடைத்த தொண்டையை யாஷ் சரி செய்வதை ஆர்விக்கால் அவதானிக்க முடிந்தது.

“அம்மா… அம்மாக்கு… அம்மா ஓகே தான யாஷ்?”

ஆர்விக்கின் நிலையற்ற தவிப்புகள் அடங்கிய திணறலில் தான் யாஷ் தன்னையே நெற்றியில் தட்டிக் கொண்டவனாக…

“அம்மாக்கு என்ன? நல்லாயிருக்காங்க! நீ எப்போ வரேன்னு கேட்க சொன்னாங்க அதான் கால் பண்ணேன்” என யாஷ் சமாளித்தான்.

“உன் பேச்சு நார்மலா இல்லை… எதுவும் மறைக்கிறியா?” ஆர்விக் அழுத்தமாகக் கேட்க…

“இருடா அம்மாவையே பேசச்சொல்றேன்” என்றான்.

“அம்மா வீட்டுக்கு வந்தாச்சா?” என்ற ஆர்விக், “அப்புறம் ஏன் எனக்கு கால் பண்ணவே இல்லை” எனக் கேட்டான்.

அதற்குள் யாஷ், “அம்மா… அம்மா…” என அனிதாவை அழைப்பது ஆர்விக்குக்கு கேட்டது.

“நீ மேல இருக்கியாடா?”

“அம்மா தூங்கிட்டு இருக்காங்க ஆர்வி.”

“இப்போவா?” என்று நெற்றியைத் தேய்த்த ஆர்விக், “எழுப்ப வேண்டாம். இன்னும் டூ ஹவர்சில் வந்துடுவேன்” என்றதோடு, “நிஜமா ஒண்ணுமில்லையே?” என்றான்.

“ஹேய்… இங்க எல்லாமே நார்மலாதான் இருக்கு” என்ற யாஷ், “சீக்கிரம் வாடா” என்று சொல்ல…

“இப்போ எப்படி இருக்காம் யாஷ்?” என நிதாஞ்சனியின் குரல் பின்னணியில் ஒலிக்க, யாஷ் பட்டென்று அழைப்பைத் துண்டித்திருந்தான்.

நின்ற இடத்திலிருந்து அங்கு எதுவோ சரியில்லையென மூச்சினை இழுத்து வெளியேற்றியவனாக தொடு வானத்தின் தூரப்புள்ளியை வெறித்த ஆர்விக், அஸ்த்தமிக்கும் சூரியனில் என்ன உணர்வை பெற்றானோ…

“பூபேஷ் கம்” என தேநீர் கடை முன்பு சாலையோரம் நின்றிருந்த ஆர்விக் வாயிலில் நின்றிருந்த பூபேஷை சத்தமாக அழைத்தான்.

பூபேஷ் அருகில் வருவதற்குள் காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து அதனை உயிர்பித்திருந்தான் ஆர்விக்.

“என்னாச்சுடா?” பின்னாலிருந்த தான்யா ஆர்விக்கின் பதற்றம் உணர்ந்து வினவினாள். பூபேஷும் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தான்.

“அம்மா…”

அந்த ஒரு சொல்லே அவனுக்கு இருக்கும் உலகம்.

“டூ டேஸ் தான் அனி… சீக்கிரம் வந்துடுவேன்” என்று கிளம்பும் முன் சொன்ன போது, அனிதா சிரித்தபடியே சொன்ன வார்த்தைகள் அவனின் நினைவில் ஒலித்தன.

“நான் இருந்துப்பேன். நீ என்னையே நினைச்சிட்டு இருக்காம போற வேலையை சரியா பண்ணு. நான் எங்கயும் போயிடமாட்டேன்” என சிரிப்போடு அவனின் கன்னம் தட்டியிருந்தார்.

அவரின்றி ஓர் சுவாசம்… ஏனென்று தெரியாது மனதில் இவ்வெண்ணம் எழ, நெஞ்சத்தில் பெரும் அச்சம் சூழ்ந்தது.

“நிதாவுக்கு கால் பண்ணுடா?” என்று ஆர்விக் கூற,

“என்னடா… அம்மாக்கு என்ன?” என்றான் பூபேஷ். நிதாஞ்சனிக்கு அழைப்பு விடுத்தவனாக.

“அம்மாக்கு என்னன்னு எனக்கும் தெரியல. ஆனா ஏதோ ஆகியிருக்கு. இந்த யாஷ் சொல்ல மாட்டேங்கிறான். அவன் வாய்ஸ் சரியில்லை” என்ற ஆர்விக், ஒரு கையால் ஸ்டியரிங்கை தட்டியவனாக, மற்றொரு கையால் சுழற்றி வேகத்தைக் கூட்டியிருந்தான்.

“ஒன்னும் இருக்காது ஆர்வி. நீ பயப்படாம இரு” என்ற தான்யா, “ரிலாக்ஸ்…” என்றாள்.

ஆர்வியின் வேகம், அவனது முகம் காட்டும் இறுக்கம் இருவருக்குமே புதிது.

இந்த ஆர்விக் தன்னைப்போல் பயத்தைக் கொடுத்திருந்தான்.

“அம்மா” என்ற உறவுக்காக இயங்குபவன்… இன்று அந்த இயக்கமே ஸ்தம்பித்த நிலையில் என்னவென்ற பயத்தில் இறுகியிருந்தான்.

“நிதா ஃபோன் எடுக்கலடா” என்ற பூபேஷ், யாஷுக்கு அழைக்க… முதல் ஒலியிலே ஏற்றிருந்தான்.

“என்னடா அவனுக்கு? இங்க நான், அம்மா நல்லாதான் இருக்கோம். அவனை சின்ன பையன் மாதிரி அழாம, பயமில்லாம வந்து சேர சொல்லு” என்று பூபேஷ் பேசுவதற்கு வாய்ப்பளிக்காது வேகமாக பேசி வைத்திருந்தான்.

“அங்க அம்மா நல்லாதான் இருக்காங்க ஆர்வி. நீ கொஞ்சம் சில்லாகு” என்று அவனின் தோள் தொட்ட பூபேஷ், ஆர்விக் பார்த்த பார்வையில் அதிர்ந்திருந்தான்.

விழிகள் சிவந்து, முகம் கசங்களோடு சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கியவனாக தத்தளிக்கும் பார்வை அது.

“டேய்… என்னன்னு தெரியாமலே நீ இவ்ளோ ஃபீல் பண்ண வேண்டியதில்லை” என்றான் பூபேஷ்.

“அம்மா… அவ்ளோதான். ஈடா வேறெதுவும் இருக்கா?” என்ற ஆர்விக், “அம்மா இன்னும் என்கிட்ட பேசல. இதுவே அவங்களுக்குத்தான் என்னவோன்னு சொல்லுது” என்றான்.

விட்டால் சிறுவனாக கண்ணீர் வழிய விடுவான் என்றே தோன்றியது மற்ற இருவருக்கும்.

அதன் பின்னர் ஆர்விக்கிடம் ஆழ்ந்த அமைதி.

அத்தனை தூரத்தை விரைந்து கடந்திருந்தான்.

வீட்டின் முன்பு வண்டியை நிறுத்திய தடம் உணர்வதற்கு முன்னர் உள் நுழைந்திருந்தான்.

“அம்மா!”

கூடத்தில் நின்று அவன் விளித்த ஓசையில் அனிதாவின் அறையிலிருந்து யாஷும், நிதாஞ்சனியும் பதற்றத்தோடு வெளியில் வந்தனர்.

“அம்மாக்கு என்னாச்சு?” எனக் கேட்ட ஆர்விக்,

“ஆர்வி…” என்று யாஷ் தடுமாற,

வேகமாக அறைக்குள் நுழைந்திருந்தான். தரையில் அமர்ந்தவனாக உறங்கிக்கொண்டிருந்த அனிதாவின் கரத்தினை தன்னுடைய கைகளுக்குள் பொத்தி வைத்தான்.

அவனின் பின்னால் வந்த யாஷ்…

“எதுவுமில்லைடா. லேசான மயக்கம். ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போனேன். ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும் சொன்னாங்க” என்று சொல்ல, அவனை நிதாஞ்சனி அதிர்வாக ஏறிட்டு, யாஷின் கண்கள் மூடி திறந்ததில் பார்வையை சீர் செய்தாள்.

இருவரின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டுகொண்ட ஆர்விக்…

“அம்மா எழுந்துக்கட்டும் நான் தெரிஞ்சிக்கிறேன்” என்றான்.

“ஆர்வி…”

“நீ சொல்றது உண்மையில்லைன்னு எனக்கு தெரியும்.”

“நிஜமா ஒண்ணுமில்லைடா” என்றான் யாஷ்.

“அப்படியா?” என்ற ஆர்விக், “அம்மா இந்த நேரம் தூங்கமாட்டங்க. அப்படியே தூங்கினாலும் என்னோட சின்ன சத்தத்துக்கே எழுந்திருப்பாங்க” என்றான்.

“அம்மா இப்போ ஓகேதான் ஆர்வி. நீ இப்படி இருக்காத” என்று அவனின் அருகில் சென்று நிதாஞ்சனி கூற…

“அம்மா என்கிட்ட பேசட்டும் நிதா…” என்றான்.

“நிஜமாவே மயக்கம் மட்டும் தானா?”

“ஏற்கனவே மேமுக்கு மைல்ட் அட்டாக் வந்திருக்குல?”

தான்யாவும், பூபேஷும் சத்தமின்றி யாஷிடம் கேட்டிருந்தனர்.

சட்டென்று கன்னம் வழிந்த நீரை யாஷ் துடைத்திருந்தான்.

“யாஷ்!” இருவரும் ஒருசேர அதிர்ந்து அவனின் கையை பிடித்திருந்தனர்.

நிதாஞ்சனி யாஷை பார்க்க, அவனோ ஆர்விக்குடன் இருக்குமாறு கண் காட்டிவிட்டு வெளியில் சென்றான்.

அனிதாவின் கை மீதே தலை வைத்து கண்கள் மூடிய ஆர்விக்…

“டாக்டர் என்ன சொன்னாங்க?” என்றான்.

அவனருகில் அமர்ந்திருந்த நிதாஞ்சனி திருதிருவென விழிக்க…

“சொல்லு நிதா?” என்றான்.

“ஆர்வி…”

அவனது தோளில் நிதாஞ்சனி கை வைத்திட… சட்டென்று அவளின் கை மீது தலை சாய்த்தவன்…

“அம்மா இல்லாம முடியாது நிதா… அம்மா வேணும். என்னோட, அம்மா இருக்கணும். அம்மா இல்லாம ஆர்வி எப்படி?” என்று அழுதவனின் தலையில் மற்றொரு கை வைத்த நிதாஞ்சனி, அவன் அழுவதை காண முடியாது தானும் கலங்கியிருந்தாள்.

“அம்மா எப்போ எழுந்துப்பாங்க? எப்போ என்கிட்ட பேசுவாங்க” எனக் கேட்டவன் மூச்சு விடவே சிரமம் கொண்டவனாக தவித்திட, அவனது மார்பை நீவி விட்ட நிதாஞ்சனி…

“ஆர்வி… ஆர்வி… ரிலாக்ஸ். டேக் அ ப்ரீத். அம்மாக்கு… அம்மாக்கு ஒன்னுமில்லாட. இங்க என்னைப்பாரு” என்று அவனின் முகம் பற்றி நிமிர்த்தி, தன்னைப் பார்க்கச் செய்தாள்.

“அம்மா ரொம்பவே நல்லாயிருக்காங்க… கொஞ்ச நேரத்துல எழுந்திடுவாங்க” என்று அவனின் முகம் துடைத்தாள்.

“அட்டாக்கா?”

நிதாஞ்சனி அவனின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது தடுமாற…

“ஆமாம்… நீ இப்படியே இருந்தன்னா, அதுவும் வந்திடும்” என அவனின் அழுகையில் உள் வந்த யாஷ் கோபமாகக் கூறினான்.

“”உன்னை அம்மாவை பார்த்துக்கோ சொன்னனா இல்லையா?” என்றான் ஆர்விக்.

“அப்போ நான் பார்த்துக்கல சொல்றியா?” என்று யாஷ் கேட்க,

“யாஷ்” என அவனை தடுத்த நிதாஞ்சனி,

“நாம எவ்ளோ பார்த்துக்கிட்டாலும், அவங்க மனசு சந்தோஷமா நிம்மதியா இருக்கணும் ஆர்வி” என்றாள்.

“அப்போ அம்மாவை நான் சந்தோஷமா வைச்சிக்கலையா நிதா?”

நெஞ்சம் விம்மி இறங்க, தழுதழுத்த குரலில், கண்களில் நீரோடு பரிதவிப்பாய் கேட்டவ ஆர்விக்கை காண முடியாது தன்னுடைய தோள் சாய்த்து தட்டிக் கொடுத்திருந்தாள்.

“ஆமா… நீ அம்மாவை ஹேப்பியா வைச்சிக்கல. உன்னால தான். உன்னோட பிடிவாதத்தால் தான். நீ இப்படியே இருந்திடுவியோன்னு உன்னையே நினைச்சு நினைச்சு தான், உனக்காக வருத்தப்பட்டு, அதை உன்கிட்ட காட்டிக்க முடியாம அழுத்தி வைச்சு” என்ற யாஷ், “அவங்க இல்லைன்னா என்னன்னு யோசிக்கிற நீ, அவங்க இருக்கும் போது என்ன பண்ணனும் யோசிக்கலாமே!” என்றான்.

“யாஷ்… கொஞ்சம் பொறுமையா இருடா!” பூபேஷ் சொல்ல…

“இப்பவும் இவனுக்காகதான்டா ஹாஸ்பிடல்ல இருக்கவே முடியாதுன்னு சொல்லி இங்க வந்து படுத்திருக்காங்க” என்றான் யாஷ்.

“இந்த நேரத்தில் அவங்க மன அமைதி ரொம்பவே முக்கியம்… அது இங்க இருந்தா அவங்களுக்கு கிடைக்காது அப்படிங்கிறப்போ எங்க கிடைக்குமோ அங்கவே வைச்சிருங்கன்னு டாக்டர் சொல்லி அனுப்பிட்டாங்க” என்ற யாஷ், “நிதாவை கேளு. முடியாத நேரத்திலும் அவங்க உனக்காகப் பாக்குறாங்க. யோசிக்கிறாங்க. ஆனால் நீ… உன் மனசோட மட்டுமே வைச்சிருக்க, கனவுல மட்டுமே வாழுற காதலுக்காக அம்மாவை, அவங்களோட மனசை கொஞ்சமும் புரிஞ்சிக்கமாட்டேங்கிற” என்றான்.

ஆர்விக்கின் கண்ணீர் சட்டென்று நின்றிருக்க…

தரை அமர்ந்திருந்தவன் பின்னால் கட்டிலில் ஒரு கால் நீட்டி ஒரு கால் மடக்கி குத்திட்டு அதன் மீது கை வைத்து சாய்ந்தவனாக கண்களை மூடிக்கொண்டான்.

ஆர்விக்கின் அத்தோற்றம் நால்வருக்கும் மனதை கனக்க வைத்தது.

“என்னடா இப்படி பேசிட்ட?” தான்யா யாஷிடம் ஆதங்கமாகக் கேட்க…

“நேத்து நைட்டெல்லாம் அம்மா தூங்கவே இல்லை தான்யா. இவனை நினைச்சு புலம்பிட்டே இருந்தாங்க” என்ற யாஷ் முன்தின இரவு இருவருக்குமிடையே நிகழ்ந்த உரையாடலைக் கூறினான்.

ஆர்விக் காலையில் தான் கிளம்பிச் சென்றிருந்தான்.

மாலை கல்லூரி முடித்து வந்தது முதல் யாஷுடன் சாதாரணமாக பேசி நேரத்தைப் போக்கியவர், யாஷ் உறங்குவதற்காக ஆர்விக்கின் அறைக்குச் சென்ற பின்னரும் கூடத்தில் நீள்விருக்கையிலையே அமர்ந்திருந்தார்.

“தூங்கினாலும் அம்மாவை நைட் ஒருமுறை போய் பாருடா” என்று ஆர்விக் சொல்லிச் சென்றிருக்க,

நள்ளிரவில் அனிதாவை காண்பதற்காக எழுந்து வந்த யாஷ், அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு…

“தூங்கலையாம்மா?” என்று அருகில் அமர்ந்தான்.

“தூக்கம் என்னவோ இப்போலாம் வரதே இல்லை யாஷ்” என்ற அனிதா,

“மனசுல பாரமிருக்கே! எப்படி தூக்கம் வரும்” என்றார்.

“ம்மா?” என்ற யாஷ், “என்ன பாரம் சொல்லுங்க சரி பண்ணிடலாம். அதுவும் ஆர்வி உங்களுக்கு ஒரு கஷ்டம்னா என்னவும் செய்வானே” என்றான்.

“கவலையே அவனைப்பற்றிதான்” என்ற அனிதா, “இதுநாள் வரை அன்வி கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சிட்டா, ஆர்வி அவன் காதல்ல இருந்து மொத்தமா வெளிவந்திடுவான் நினைச்சிருந்தேன். ஆனால் அவன் இனி எப்பவுமே வெளிவரமாட்டான்னு தெரிஞ்சிடுச்சு. அவனை கஷ்டப்படுத்திக்கிட்டு இதிலிருந்து வெளியவரனும் நினைக்கல. ஆனால் எனக்கு அப்புறம் அவனுக்குன்னு யோசிக்கும்போது என் உயிரே பதறுது?” என்றார்.

“அதான் அன்வி லவ் இல்லைன்னு ஆகிடுச்சே! இப்போ இல்லைன்னாலும் கொஞ்சநாள் போனால் அவனுக்கே அவகிட்ட லவ் சொல்லணும் தோணும். அப்புறமென்ன… டும்… டும் தான்.” இப்படி ஒன்று நடக்க வழியே இல்லை என்று ஆர்விக்கைப் பற்றி நன்கு தெரிந்தும் அனிதாவின் மனநிலையை அந்நேரம் மாற்றுவதற்காக கலகலப்பாகக் கூறினான் யாஷ்.

“உன் ஃப்ரெண்ட் இதை செய்யமாட்டான்னு உனக்கும் தெரியும்” என்ற அனிதா, “இதைப்பற்றி நீ அவன்கிட்ட பேசாமலா இருந்திருப்ப?” என்றார்.

“பேசவா?” என்ற யாஷ், சக்தி வந்திருந்த அன்று, நிதா உடனிருக்க தான் கேட்டதை கூறி, “பதில் பேசவே இல்லை. எழுந்து போயிட்டான்” என்றான்.

“அன்வியோட இந்த நிலையை அவன் பயன்படுத்திக்கணுங்கிறது என் எண்ணமில்லை… இது வேணாம் அப்படின்னு உறுதியா முடிவெடுத்திட்டு அடுத்து என்னன்னு ஏன் அவனால பார்க்க முடியலன்னு கவலையாகுது. ஒரு மனசு இந்த சிட்டுவேஷனை அவனோட காதலுக்கு அவன் பயன்படுத்திக்கிட்டாதான் என்னன்னு தோண வைக்குது” என்றவர், “நானும் சராசரி அம்மா தான யாஷ்” என்றார்.

“ஆர்வி முயற்சி பண்ணிட்டுதாம்மா இருக்கான். இப்போலாம் கனவு வரதில்லை சொன்னானே!”

“அதுக்காக அவன் உள்ளுக்குள்ள எவ்வளவு போராடுறான் தெரியுமா யாஷ்?” என்ற அனிதா, “நம்மளோட ஆழ் மன எண்ணங்கள், ஆசைகளோட பிரதிபலிப்புதான கனவு… மனசோட வேர்ல புதைஞ்சிருக்க இவனோட காதல் சீக்கிரம் மறைஞ்சுப்போகுமா என்ன?” என்றார்.

“ம்மா…?!”

“அவன் லவ் அவளுக்கு ஆப்ஷனா இருந்திடக்கூடாதுன்னு நினைக்கிறான். அதை நான் தப்பு சொல்லல… அதிலிருந்து மொத்தமா வெளிய வந்திடலாமேன்னு தோண வைக்குது. ஆர்விகிட்ட இதை சொல்ல முடியாம தடுமாறுறேன்” என்றார்.

“ஒரு அம்மாவா அதட்டி மிரட்டி நீ உன் வாழ்க்கையில அடுத்தக்கட்டம் நகர்ந்துதான் ஆகணும் அப்படின்னு ஒரு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சா என்ன பண்ணிடுவானாம்? உங்களுக்கு டெரர் மம்மியா நடந்துக்க தெரியல” என்றவனின் கன்னத்தில் தட்டியவர்,

“ஆர்வி வேண்டாம்னு நினைக்கிறதை என்னால எப்படிடா செய்ய முடியும்? அதுவும் மிரட்டி செய்ய வைக்கிற காரியமா இது?” என்றார்.

“அப்போ இதைப்பற்றி நினைக்காம அமைதியா தூங்குங்க. தூங்கி எழுந்தாலே இங்க பாதி பிரச்சினை சரியாகிடும்” என்று வேறு கதைகள் பேசியபடியே அவரை உறங்க வைத்திருந்தான்.

காலையில் எழுந்ததும்,

“நான் நைட்டு புலம்பினதை வைச்சு அவன்கிட்ட நீ எதுவும் சண்டை போடக்கூடாது யாஷ்” என்று சொன்னவரை முறைத்துப் பார்த்தவனாக மேலே சென்றிருந்தான்.

அதன் பின்னர் தான் இனியா வந்தது. அவளுடனானப் பேச்சுக்குப் பின்னர், அவரின் மனம் மகனிடமே சுற்றத் துவங்கியது.

இரவில் துவங்கிய அழுத்தம் மெல்ல அவரின் இதயத்தை தாக்கத் துவங்கியிருந்தது. ஏற்கனவே இதயம் பலவீனமானவரை இம்முறை சற்று அதிகமாகவே அவரை செயலிழக்க வைத்திருந்தது.

அந்நேர வலி நொடியில் மறைந்துபோக யாஷை சமாதானம் செய்து கல்லூரிக்கு சென்றவரால் சிறிது நேரத்திற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

நிதாஞ்சனியின் அலுவலகம் அவரது கல்லூரியிலிருந்து பத்து நிமிட தொலைவில் இருக்கவே, யாஷுக்கு அழைப்பதற்கு முன்பு அவளுக்கு அழைத்து வரவைத்தார்.

“அம்மா என்ன பண்ணுது?” ஸ்டாஃப் ரூமில் அனிதா மட்டுமே இருக்க என்ன செய்வதென்று தெரியாது நிதாஞ்சனி பதறினாள்.

“ரொம்ப பெயின் ஆகுது நிதா. மேனேஜ் பண்ண முடியல” என்றவர், “சரியாகிடும் நினைச்சேன். ஹாஸ்பிடல் போகணும்” என்றார்.

“போயிடலாம்மா” என்றவள், அவரை கூட்டிக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தாள்.

“ஆர்விக்கு சொல்ல வேணாம். யாஷ் வரச்சொல்லு” என்றவர் மருத்துவமனை வருவதற்கு முன்பே மயங்கியிருந்தார்.

நிதாஞ்சனி யாஷுக்கு தகவல் அளிக்க உடனடியாக வந்திருந்தான்.

“நான் அப்போவே சொன்னேன் நிதா… கேட்கவே இல்லை. அப்படியே அவனோட பிடிவாதம் அவங்களுக்கும் இருக்கு” என்ற யாஷ், “டாக்டர் என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான்.

“ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு. இன்னும் எதுவும் சொல்லல” என்ற நிதாஞ்சனி, “ஆர்விக்கு சொல்ல வேண்டாமா?” என்றதோடு, “அம்மா சொல்லக்கூடாது சொன்னாங்க” என்றாள்.

“ஹ்ம்ம்… இப்போ வேண்டாம். அங்கிருந்து வரதுக்குள்ள செத்திடுவான்” என்ற யாஷ், “சொல்லலன்னாலும் கஷ்டம். டாக்டர் என்னன்னு சொல்லட்டும். சொல்லிப்போம்” என்றான்.

சிகிச்சைக்குப் பின்னர் வெளிவந்த மருத்துவர்,

“ஹார்ட் அட்டாக். ரொம்பவே சிவியரா தாக்கியிருக்கு. இதுல சந்தோஷப்பட வேண்டிய விஷயம் பிளாக்கேஜ் எதுவுமில்லை” என்றார்.

“அப்புறம் எப்படி அட்டாக் டாக்டர்?”யாஷ் புரியாது வினவினான்.

“ஸ்ட்ரெஸ் இண்ட்யூஸ்ட் கார்டியோ மயோபதி (stress induced cardio myopathy). இது அட்டாக்கில் ஒரு வகை. அதிக மன அழுத்தத்தால் வரும்” என்றவர், “இவங்களுக்கு ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கு” என்றார்.

“ஆமா டாக்டர்… சிக்ஸ் இயர்ஸ் முன்ன!”

“நோ… நோ… இப்போ ரீசன்ட் டைமில் வந்திருக்கு.”

“இல்லை டாக்டர்.”

“அவங்க மறைச்சிருக்கலாம். இல்லைன்னா நார்மல் பெயின்னு ஒதுக்கியிருக்கலாம்” என்ற மருத்துவர், “அவங்களோட அழுத்தம் என்னன்னு குறைக்கப் பாருங்க. உயிருக்கு ஆபத்தாகவும் அதிக வாய்ப்பிருக்கு” என்றார்.

மருத்துவரின் இறுதி வரியில் யாஷ் மற்றும் நிதாஞ்சனிக்கு துடிப்பே நின்ற உணர்வு.

“இப்போ அம்மா?” என நிதாஞ்சனிதான் தன்னை மீட்டு தவிப்போடு கேட்டிருந்தாள்.

“இப்போ ஓகே தான். இன்ஜெக்ஷன் போட்டிருக்கு. பெயின் சரியாகிடும். சில மெடிசன்ஸ் கண்ட்னியூ பண்ற மாதிரி இருக்கும். மேக்சிமம் ஃபோர் ஹார்ஸ்… கண் விழிச்சிடுவாங்க” எனக்கூறி நகர்ந்தார்.

மருத்துவர் குறிப்பிட்ட நேரத்தில் அனிதாவும் கண்கள் திறந்திருந்தார்.

அடுத்த நொடி, “வீட்டுக்குப் போகணும்” என சொல்ல, முடியாதென எவ்வளவோ சொல்லியும் அனிதா கேட்கவில்லை.

“ஆர்வி வரும்போது நான் இங்கிருக்கேன் தெரிஞ்சாலே அவன் உடைஞ்சிடுவான் நிதா. வீட்டுக்குப் போகலாம்” என்றவரிடம்,

“உங்க இதயம் ரொம்ப பல்கீனமா இருக்கு. அட்லீஸ்ட் டூ டேஸ் இங்கிருந்து ரெஸ்ட் எடுத்திட்டுப் போங்க” என மருத்துவரையே அழைத்து வந்து பேச வைத்தான் யாஷ்.

ஆனாலும் அனிதா பிடிவாதமாக, “இங்க எடுக்கிற ரெஸ்ட் வீட்ல எடுத்துக்கிறேன்” என்று வீடு வந்து சேர்ந்தார்.

“முடிஞ்சளவு நல்ல தூக்கம் இருக்க மாதிரி பார்த்துக்கோங்க. கொடுத்திருக்க மருந்துகளே ஆழ்ந்த தூக்கத்தைக் கொடுக்கும்” என்று வலியுறுத்தியே மருத்துவர் அனுப்பி வைத்திருந்தார்.

இப்போதும் மருந்தின் வீரியத்தாலே அமைதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார் அனிதா.

யாஷ் அனைத்தும் சொல்ல…

தன்னை குறித்து அன்னைக்கு இப்படியொரு வேதனை மனதோடு அழுத்தம் கொண்டிருக்கும் என்பதை எதிர்பாராத ஆர்விக்கின் மூடிய கண்ணிலிருந்து கோடென வழிந்து காது மடலைத் தொட்ட கண்ணீரை, அனிதாவின் கரம் துடைத்திருந்தது.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 54

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
39
+1
1
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. நல்ல அம்மா பையன்