
காலை கனவு 21
உண்மை தெரிந்தது முதல் ஏற்க முடியவில்லை என்பதைவிட, நம்ப முடியவில்லை எனும் நிலையில் கதிர்வேலனும், தெய்வானையும் உடைந்து போய் அமர்ந்திருந்தனர்.
சக்தி அவர்களிடம் கௌதமின் பேச்சில், ஆர்விக் மற்றும் வெண்மதி மூலமாக அறிந்து கொண்டதில் ஒற்றை வார்த்தியைக்கூட விடவில்லை. அனைத்தையும் சொல்லிவிட்டான்.
இரவு பத்து மணிக்குமேல் ஆகிவிட்டது இருவரும் வீடு வந்து சேர…
“என்னப்பா போன வேகத்துல வந்து நிக்கிற?” என்ற கதிர்வேலன், மகளும் உடன் வந்து நிற்க, என்னவாயென்று மகனை கலக்கமாகப் பார்த்தார்.
“பேசுவோம்ப்பா” என்ற சக்தி, “குளிச்சிட்டு வர்றேன்” என தனதறைக்குச் சென்றான்.
சக்தி அலைபேசி வாயிலாக கதிர்வேலனுக்கு அழைத்து கதவை திறக்கச் சொல்லியிருக்க, சக்தி நகர்ந்ததும்…
“என்னம்மா நீயும் கூட வந்திருக்க? எதுவும் பிரச்சினையா?” என மகளிடம் கேட்டார்.
“அண்ணா சொல்லுவாங்கப்பா” என்ற அன்விதா, அவளது அறை பக்கம் செல்ல…
“வெண்மதி இருக்காள் அன்வி” என்றார் கதிர்வேலன்.
“சரிங்கப்பா” என அவள் மறைந்ததும், வேகமாக தன்னுடைய அறைக்குச் சென்றவர், அப்போதுதான் உறக்கத்தில் ஆழ்ந்த மனைவியை தட்டி எழுப்பினார்.
“என்னங்க… தூக்கம் வரலையா?” என்று தெய்வானை எழுந்தமர…
“சக்தி வந்தாச்சு. அன்வியையும் கூட்டிட்டு வந்திருக்கான்” என்றார்.
“கௌதமுக்கு அடிபட்டிருக்குன்னு போனான். உடனே வந்துட்டான். அண்ணா, அண்ணியும் வந்தாச்சா?”
“இல்லை. சக்தி ஏதோ பேசணும் சொன்னான்” என்ற கதிர்வேலன், “எனக்கு இப்போதான் நினைவு வருது தெய்வா, தென்னரசியும் ரகுபதியும் சென்னைக்கு போவனுன்னு வரதுக்கு முன்னவே, சக்தி சென்னை போறேன்னு கிளம்பி வந்து என்கிட்ட சொன்னான். தென்னரசி கௌதமுக்கு என்னவோ ஏதோன்னு அழுததுல சக்தி ஏன் கிளம்பினான்னு கேட்க மறந்துட்டேன்” என்றார்.
“என்னவாங்க இருக்கும்?”
“தெரியலையே! அன்வி முகமும் சரியில்லை” என்ற கதிர்வேலன், “வா கூடத்துக்குப் போவோம்” என்றார்.
அதற்குள் சக்தியே,
“அப்பா” என்ற அழைப்போடு உள்ளே வந்திருந்தான்.
“வா சக்தி” என்ற தெய்வானை, “சாப்பிட்டீங்களா தம்பி? தோசை ஊத்தட்டுமா?” என எழுந்தார்.
“வரும்போதே சாப்பிட்டோம்மா. எதுவும் வேணாம். உட்காருங்க” என்றவன், அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவனாக, “நீங்களும் உட்காருங்கப்பா” என்றான்.
“ரொம்ப பெரிய விஷயமாப்பா?” தெய்வானைக்கு பதற்றமாக வந்தது.
“நீங்க நான் சொல்லப்போறதை எப்படி எடுத்துக்கிறீங்களோ… அதை பொறுத்தது பெருசா சின்னதாங்கிறது” என்றான்.
“என்ன சக்தி என்னென்னவோ சொல்ற?” என்ற கதிர்வேலன், “கௌதமுக்கு எப்படிப்பா இருக்கு? நீ ஏன் உடனே வந்துட்ட?” எனக் கேட்டார்.
“அவன் எப்படி இருக்கான்னு தெரியாது. ஆனால் எழுந்து நடக்க ஏழெட்டு மாசமாகலாம்” என சக்தி சொல்ல…
“யாருப்பா இப்படி பண்ணது? கல்யாணப் பேச்சு பேசுன நேரம் இப்படியாகிப்போச்சுன்னு உன் அத்தை நம்ம அன்வியை எதுவும் பேசிடுவாளோன்னு எனக்கு கெதக்குன்னு இருக்கு” என்றார் தெய்வானை.
“புதுசா அவங்க சொல்ல எதுவுமில்லைம்மா” என்ற சக்தி, “இனிமே அவங்களுக்கும் நமக்கும் நடுவுல உங்க அண்ணன் வீடுங்கிற உறவை தவிர்த்து எதுவுமில்லை” என்றான்.
தெய்வானை பதற, கதிர்வேலன்…
“தாய்மாமா உறவு விட்டுப்போகக்கூடியது இல்லை சக்தி” என்றார்.
“அது எனக்கும் தெரியும்?” என்ற சக்தி, கௌதமின் செயல்கள் யாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்து, “இதுல அத்தை மாமாக்கு எவ்வளவுக்கு பங்கிருக்குன்னு எனக்குத் தெரியாது. கௌதம் அவங்களையும் ஏமாத்தியிருக்கான் அப்படின்னாலும், கௌதமுக்கு இப்படி ஆனதுக்கு காரணம்னு அத்தை அன்வியை பேசின பேச்சுக்கு அவங்களை ஒருநாளும் நான் மன்னிக்கமாட்டேன்” என்றான்.
பெரியவர்கள் இருவருக்கும் என்ன பேசுவதென்றே தெரியவில்லை.
“அவ்வளவும் அந்த நிலத்துக்கா சக்தி?” என்று தெய்வானை கேட்க,
“கௌதமா இப்படி?” என்றார் கதிர்வேலன்.
“வீட்ல அந்த நிலத்துக்காக இப்படி பேசிக்கிறாங்கன்னு மதி சொல்லும்போது, அந்த நிலத்தை முறையா அவங்க பேருக்கு மாத்தி எழுதிடலாம் தான் நினைச்சேன்ப்பா. ஆனால் இப்போ அது வேண்டாம்னு தோணுது. அன்வியை வைச்சு அந்த கௌதம் எவ்ளோ பிளே பண்ணியிருக்கேன். கடைசியில் அவனை நல்லவனா காட்டுறதுக்கு அன்வியோட கேரக்டரை தப்பா சொல்லியிருக்கான். அவன் சொன்னா உங்க அண்ணனும், அண்ணியும் உடனே நம்பிடுவாங்களாம்மா?” என இருக்கையைவிட்டு எழுந்த சக்தி,
“இதுக்கு மேல இதை பேசவே கோபமா வருதுப்பா. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அத்தை வந்து பேசுறாங்கன்னு எதுவும் இறங்கிப்போனீங்க… அமைதியான சக்தியை நீங்க வேற மாதிரி பார்க்க வேண்டியிருக்கும்” என்று வெளியேறியிருந்தான்.
சக்தி சென்றது முதல் இடிந்துப் போனவர்களாக அமர்ந்திருக்கின்றனர்.
கௌதமின் செயல்கள், பேச்சுக்கள் யாவும் நினைக்க நினைக்க அவர்களுக்கு மனம் ஆறவில்லை.
*********************************
ஒரு வாரம் கடந்திருந்தது…
அனிதா கல்லூரி செல்லத் தயாராகிக் கொண்டிருந்தார்.
வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கவே,
“இந்த நேரத்தில் யாரென்ற?” வினாவோடு கதவினை திறந்திருந்தார்.
“ஹாய் அத்தை.” பளிச்சென்ற புன்னகையுடன் நின்றிருந்த பெண்ணை அவருக்கு சுத்தமாக யாரென்று தெரியவில்லை.
அதுவும் அப்பெண் அத்தையென விளித்திட, கிராமத்தில் தன்னுடைய தந்தைக்கு தெரிந்தவர்கள் குடும்பத்தை மனதில் அலசி வந்தார்.
“யாரும்மா நீங்க?”
“வாசல்ல வைச்சே யாருன்னு கேட்குறீங்களே அத்தை. உள்ள கூப்பிட்டு பேசமாட்டிங்களா?” என்று அப்பெண் கேட்க, அனிதா திரும்பி சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார்.
“கண்டிப்பா உங்களுக்கு லேட் ஆகாது. அப்படியே ஆனாலும் பிரச்சினை இல்லை. நான் உங்களை ட்ராப் பண்றேன்” என்றவள், அனிதா பணிபுரியும் கல்லூரியின் பெயரைக்கூறி, “அங்கதானே ஒர்க் பண்றீங்க?” என்றாள்.
“நீங்க யாருன்னே எனக்குத் தெரியல?” என்ற அனிதா, “என்னோட ஸ்டூடண்ட்டா?” எனக் கேட்டார்.
“இன்னும் நீங்க என்னை உள்ள வான்னு கூப்பிடல?”
“யாருன்னு தெரியாதவங்களை எப்படிம்மா உள்ள நம்பிக்கையா கூப்பிடுறது?”
அனிதா கேட்டதில் அவளின் பார்வை மெச்சுதலாக உயர்ந்தது.
“நான் உங்க பையன் லவ்வர் அத்தை.”
அவள் அவ்வாறு சொல்லியதும் சில நொடிகள் நெற்றிச் சுருக்கிய அனிதா,
“இனியா?” என்றார்.
“வாவ்… அத்தை” என்று துள்ளி குதித்த இனியா, “என்னைப்பற்றி அவங்க சொல்லியிருக்காங்களா?” என்றாள்.
“சொன்னது ஆர்வி இல்லை. நான்” என்று யாஷின் குரல் ஒலித்தது.
மேலிருந்து படியில் இறங்கிக் கொண்டிருந்தான்.
“என் பையன் பிடிக்காதவங்க யாரைப் பற்றியும் அனாவசியமா பேசமாட்டான்மா” என்ற அனிதா,
“நீ எதுக்கு வந்திருக்க?” என உள்ளே சென்றார்
“அவங்க அம்மா பையன் கேள்விப்பட்டேன். அதான் பையன் பின்னாடி சுத்தி நேரத்தை வீணாக்காம, அம்மாவை கைக்குள்ள போட்டுக்கலான்னு வந்தேன்” என்று உள்ளே வந்தவளை உள் வாயிலோடு தடுத்து நிறுத்தியிருந்தான் யாஷ்.
“சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காது போலிருக்கே” என்ற இனியா, பையோடு வெளிவந்த அனிதாவிடம், “நான் அழகா இருக்கேனா? எனக்கென்ன அத்தை குறை? உங்க பையன் ஏன் வேணாம் சொல்றாங்க” என்றாள்.
“ஒருத்தர் வேணாம் சொன்னதுக்கு அப்புறம் திரும்பத்திரும்ப போய் முன்னாடி நிக்கிறது தொல்லையாதான் தெரியும்” என இனியாவிடம் கூறியவர், “என்னை ட்ராப் பண்ணிடு யாஷ்” என யாஷிடம் கூறியவராக வாயில் தாண்டி வெளியில் சென்றார்.
“நீங்க உங்க பையனுக்கு மேல ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்கீங்க அத்தை” என்று அனிதாவின் பின்னே சென்றவளாக இனியா கூற, சட்டென்று நின்று திரும்பிய அனிதா,
“அத்தை சொல்ல வேண்டாம்” என்றார்.
“ஒரு பெண்ணுக்கு கூட பெண்ணின் மனசு புரியலையே” என இனியா பொய்யாக அழுதிட,
“நீ பொண்ணுன்னு யார் சொன்னா?” என்றான் யாஷ்.
“யாஷ்…” அனிதா கண்டனமாகப் பார்க்க…
“ஜெஸ்ட் ஜோக் மம்மி” என்ற யாஷ், “சாரி” என இனியாவிடம் மன்னிப்பும் கேட்டு நகர்ந்திருந்தான்.
“உங்களை கரெக்ட் பண்ண என்ன பண்ணனும்?”
கேட்ட இனியவை கனிவோடு பார்த்த அனிதா,
“என் பையன் உனக்கு பொருத்தமானவன் இல்லை. அவன் வேணாம் முடிவு பண்ணிட்டா மாத்திட முடியாது. அவனோட விருப்பம் தான் எனக்கும். அவனுக்கு பிடிக்காத ஒன்னை செய்யச்சொல்லி நான் எப்பவும் சொல்லவும் மாட்டேன். திரும்ப இங்க வந்து என் நேரத்தையும் வீணாக்காதே” என்றவர், யாஷ் இருசக்கர வாகனத்தை அவர் முன் நிறுத்தவே ஏறி அமர்ந்தார்.
“என் வீட்டிலிருந்த வந்து பேசினா உங்களுக்கு ஓகேவா?”
“பிடிக்கலன்னு சொன்னதுக்கு அப்புறமும் இப்படி கேட்கிறது சரியில்லை.”
“தட்ட தட்டத்தான் கதவுகள் திறக்குமாம் அத்தை.”
“ஆர்வி கொடுத்த டோஸ் உனக்கு பத்தலைன்னு நினைக்கிறேன்” என்ற அனிதா, “நீ போ யாஷ்” என அவனின் தோளில் தட்டினார்.
செல்பவரையே பார்த்து நின்றிருந்த இனியா, இம்முயற்சியும் வீணானதை எண்ணி சோர்ந்துப் போனவளாக நின்றிருந்தாள்.
“என்னடா அமைதியா வர?”
எப்போதும் சலசலத்துக்கொண்டே வரும் யாஷ், இன்று அமைதியாக வரவே கவனித்து அனிதா கேட்டிருந்தார்.
“நீங்க ஏதோ திங்க்கிங்ல வந்தீங்களேன்னு நான் சைலண்ட்டா வரேன்” என்றான்.
“ஹ்ம்ம்” என்ற அனிதா, “அந்தப் பொண்ணை நான் எதுவும் ஹர்ட் பண்ணிட்டனாடா?” எனக் கேட்டார்.
“இதுதான் சரி. வீட்டுக்கு வந்திருக்கான்னு நீங்க சகஜமா பேசியிருந்தா, அதை அட்வான்டேஜாவோ இல்லை ஒரு ஹோப்பாவோ எடுத்துக்க சான்ஸ் இருக்கு. இப்போ நீங்க இப்படி பேசியதில் இது நமக்கு எப்பவும் ஒத்துவராதுன்னு நினைப்பாள்” என்றான்.
“ஹ்ம்ம்.”
“நீங்களும் ஆர்வி இப்படியே இருக்கட்டும் நினைக்கிறீங்களா?”
“எது நடக்கணுமோ அதுதான் நடக்கும் யாஷ்” என்ற அனிதா இதயத்தில் முள் தைப்பதைப்போன்ற வலியை உணர்ந்து முகம் சுருக்கினார்.
யாஷின் தோள்மீது படிந்திருந்த அவரின் பிடியில் அழுத்தம் ஏற்பட,
“அம்மா” என்று கண்ணாடி வழி அவரைப் பார்த்தவன், வண்டியை சாலையின் ஓரம் நிறுத்தியிருந்தான்.
“அம்மா… அம்மா என்ன பண்ணுது?” என்று பதறியவன், அவரின் பையிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்து நீர் அருந்த வைத்து, மெல்ல அவரை ஆசுவாசப்படுத்தினான்.
“ஹாஸ்பிடல் போலாம்மா!”
“வேணாம் யாஷ். லைட்டா பெயின் மாதிரி தெரிஞ்சுது. பட் இப்போ இல்லை” என்றார்.
“நீங்க இப்படித்தான் சொல்லுவீங்க… வாங்க ஹாஸ்பிடல் போவோம்” என்று கண்கள் கலங்கிய யாஷ், “நீங்க வரலன்னா இப்போவே ஆர்விக்கு கால் பண்ணிடுவேன்” என்றான்.
ஆர்விக், தான்யா, பூபேஷ் மூவரும் இவன்ட் ஏற்பாடிற்காக வெளியூர் சென்றிருக்கின்றனர்.
“டேய்… சொன்னா கேளுடா! ஒண்ணுமில்லை. அசிடிட்டியா கூட இருக்கும்” என்ற அனிதா ஏதேதோ சொல்லி யாஷை சமாளித்து கல்லூரி வந்து சேர்ந்தார்.
*********************************
அன்று தான் கௌதமின் மருத்துவமனை வாசம் முடிவுக்கு வந்தது.
இன்னும் சிறிது நேரத்தில் கிளம்ப வேண்டும்.
இந்த இடப்பட்ட நாட்களில் ஒருமுறை கூட சக்தியின் வீட்டிலிருந்து ஒரு அழைப்பு இல்லை.
வெண்மதி மட்டும் அவ்வப்போது அழைத்து கௌதமின் நலன் தெரிந்துக் கொண்டிருந்தாள்.
அவளிடம் கூட வீட்டில் யாரும் கௌதம் பற்றிக் கேட்கவில்லை. அதிலேயே என்னவோ நடந்திருக்கிறது என்பதை யூகித்த வெண்மதி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.
ஆனால் எப்போதும் சோகமே உருவமாக அமர்ந்திருக்கும் அன்விதாவை பார்க்கும் போது அவளிடம் என்னவென்று கேட்கத் தோன்றும்.
அன்றும் முற்றம் தூணில் சாய்ந்து வருத்தமாக அமர்ந்திருந்த அன்விதாவை கண்ட வெண்மதி அவளின் அருகில் சென்றமர்ந்தாள்.
“என்னாச்சு அன்வி? எல்லாருமே சோகமாவே இருக்கீங்க?” என்ற வெண்மதி, அன்விதா மெலிதாக இதழ் விரிக்க…
“கௌதம் தான் காரணமா?” எனக் கேட்டாள்.
“இதெல்லாம் உனக்கு தெரிய வேண்டாம் மதி. நீ போ, படி!” என அவளின் கன்னம் தட்டினாள்.
“இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றாங்க. நாளைக்கு காலையில வந்துடுவாங்க. நான் அங்க போயிடுவேன்” என்ற வெண்மதி,
“நான் கௌதம் மாதிரி கிடையாது அன்வி” என்றாள்.
“இப்போ உன்னை யாரு பிரிச்சுப் பார்த்தாங்கலாம். நீ இந்த வீட்டுப்பொண்ணு. சக்தி அண்ணாவே உன்னை விட்டுக்கொடுக்கமாட்டார். அப்புறம் என்ன?” என்ற அன்விதா, “நாளைக்கு அவங்க வந்த அப்புறம் குடும்பத்துக்குள்ள என்ன வேணாலும் நடக்கலாம். நீ அதையெல்லாம் மனசுல வைச்சிக்காத. எதையும் கண்டுக்கவும் கண்டுக்காத. நீ எப்பவும் போல இங்க வரலாம், போலாம்” என்றாள்.
“ம்ம்…” என்ற வெண்மதி, “அண்ணா உங்களை லவ் பண்றேன்னு பொய் சொல்லிடுச்சா?” எனக் கேட்டாள்.
“அது லவ்வே இல்லை” என்று விரக்தியாகப் புன்னகைத்த அன்விதா தூணில் பின்னால் தலை சாய்த்தவளாகக் கண்கள் மூடினாள்.
அவளை திரும்பித்திரும்பிப் பார்த்தவளாக வெண்மதி சென்றிட, அன்வியின் மூடிய இமைகளின் வழி கண்ணீர் வழிந்தது.
அக்கணம் வீட்டிற்கு வந்த சக்தி தங்கையின் நிலை பார்த்தபடி, அரவமின்றி அறைக்குள் நுழைந்து ஆர்விக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
அடுத்த கணம் ஆர்விக்கின் எண்ணிலிருந்து அன்விதாவின் அலைபேசி திரையில் தேநீர் குவளையின் புகைப்படம் எம்பிக்குதித்தது.
************************************
“இன்னைக்கு இவன்ட் தீம் நல்லாயிருந்துச்சு. இதை இன்னொரு இவன்டுக்கு யூஸ் பண்ணனும் ஆர்வி” என்ற தான்யா தங்களின் சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை பதிவேற்றிக் கொண்டிருந்தாள்.
“அடுத்தமுறை வெளியூர் ஃபங்ஷன் அப்படின்னா எம்பிளாய்ஸ் மட்டும் அனுப்பி வைப்போம் ஆர்வி. இந்த டிராவல் எல்லாம் எனக்கு ஒத்து வரல” என்று காரினை ஓட்டிக்கொண்டிருந்த பூபேஷ் அலுத்துக்கொண்டான்.
ஆர்வியிடம் பதிலில்லை.
“நீ என்னடா ரொம்ப நேரமா அமைதியா வர?” தான்யா கேட்க,
“அம்மாக்கு ட்ரை பண்றேன். அட்டெண்ட் பண்ணவே இல்லை தானு” என்ற ஆர்விக், “யாஷும் ஃபோன் அட்டெண்ட் பண்ணல” என்றான்.
“மேமுக்கு கிளாஸ் இருக்கும்டா. யாஷ் எதுவும் வேலையா இருப்பான்” என பூபேஷ் சொல்ல…
“மெசேஜ் கூட பார்க்கல” என்றான் ஆர்விக்.
“நீ உன்னோட எமோஷன்ஸ் கண்ட்ரோல் பண்றது நல்லது ஆர்வி. ரொம்ப பதட்டமாகிடுற” என்றாள் தான்யா.
“இது உனக்கு சொன்னா புரியாது தானு” என்ற ஆர்விக், “நமக்குன்னு இருக்கவங்க டக்குன்னு இல்லைன்னு ஆகுற வலி… அப்போ நான் சின்னப்பையன். அப்பா இனி இல்லைன்னு அம்மா உடைஞ்சு அழுதப்போ எனக்கு எதுவும் புரியல… அம்மா அழுதாங்கன்னு நானும் அழுதேன். ஆனால் அம்மா காலேஜ்ல மயங்கி விழுந்தப்போ, ஒரு செக்கென்ட், இவ்ளோ பெரிய உலகத்துல எனக்குன்னு யாரு இருக்கான்னு தோணுன வலி இருக்கே! அதை ஃபீல் பண்ணாதான் புரியும்” என்றான்.
“விடு ஆர்வி… இன்னும் நடந்ததையே நினைச்சு வருத்தப்பட்டுகிட்டு” என்ற தான்யா, “இப்போ உனக்காக நாங்க நிறைய பேர் இருக்கோம்” என்றாள்.
ஆர்விக் புன்னகைத்திட, அவனின் அலைபேசி சத்தமிட்டது. எடுத்துப் பார்த்தான்.
“யாருடா? அம்மாவா?” பூபேஷ் கேட்டான்.
“திரு” என்ற ஆர்விக் என்னவென்று வந்திருந்த தகவலை திறந்தான்.
“உன் ஃப்ரெண்டோட டீ குடிக்கலாமே!” என வந்திருந்தது.
உண்மையில் அக்கணம் ஆர்விக்குக்கும் அன்விதா உடனிருந்திருந்தால், “டீ குடிக்கலாம்” என்றே தோன்றியது.
“டீ ஷாப்ல நிறுத்துடா!” என்ற ஆர்விக்கிடம்,
“அன்விதா எப்போ வரேன்னு ஏதும் சொன்னாளா?” என்றான் பூபேஷ்.
“அந்த கௌதமுக்கு இன்னைக்குத்தான் டிஸ்சார்ச். அவன் அங்க போனாதான் அடுத்து என்னன்னு தெரியும்” என்றான்.
“அன்வி ஃபேஸ் பண்ணிடுவாளா?”
“பண்ணனும்” என்ற ஆர்விக், பூபேஷ் வண்டியை நிறுத்திடவே காரிலிருந்து இறங்கினான்.
கையில் வாங்கிய தேநீர் குவளையை புகைப்படம் எடுத்து அன்விதாவுக்கு அனுப்பி வைத்தவன், யாஷிடமிருந்து வந்த அழைப்பினை ஏற்றிருந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
36
+1
3
+1
1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நைஸ் 😍😍😍
Thank You
ஆர்விக் அம்மா என்ன
எதுவும் ஆகாதுக்கா