Loading

காலை கனவு 20

மருத்துவமனைக்கு தென்னரசியும், ரகுபதியும் வந்து சேர்ந்த நேரம், சிகிச்சை முடித்து அறைக்கு மாற்றப்பட்டிருந்தான் கௌதம்.

இரண்டு கால்களும், ஒரு கையும் முழுதாகக் கட்டிடப்பட்டிருந்தது.

தான் தகவல் கொடுக்காத நிலையில் வந்து நிற்கும் பெற்றோரை பார்த்ததும் கௌதமுக்கு அதிர்வு. தன்னுடைய பொய்கள் யாவும் வெளியில் வந்துவிடுமோ எனும் சிறு அச்சம்.

ஆம், அவனது பொய்கள் தான்…

அன்விதா தானாகவே இந்த திருமணம் வேண்டாமென்று சொல்ல வைத்திட கௌதம் நகர்த்திய காய்களே அவனது பெற்றோர் தான்.

அவர்களுக்கு வெண்மதிக்கு சக்தியை கட்டிக்கொடுக்க வேண்டுமென இருந்த எண்ணத்தை, ஆசையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த கௌதம், அவர்களை தூண்டிவிட்டிருந்தான்.

சக்தியின் திருமணப்பேச்சு ஆரம்பிக்கிறது என்பது தெரிந்ததுமே,

“நீங்க சக்தி மாமாக்கு வெண்மதியை கட்டிக்கொடுக்க நினைக்கிறீங்க. ஆனால் அவங்க வெளிய பொண்ணு தேட சொல்லியிருக்காங்களாம்?” என்று மெல்ல ஆரம்பித்தான்.

அன்று தான் ரகுபதியை தற்செயலாக சந்தித்த பொன்னுசாமி, கதிர்வேலன் சக்திக்கு பெண் பார்க்க சொல்லியிருப்பதைத் தெரிவித்திருந்தார்.

மனைவிக்குத் தெரிந்தால் சண்டையைத் துவங்கிவிட்டுதான் பேசவே செய்வாள் என்பதால், ரகுபதி கோவிலுக்குச் செல்ல கௌதம் ஊருக்கு வரும்வரை காத்திருந்து அவனிடம் சொல்லியிருந்தார்.

“நான் அம்மாகிட்ட பேசுறேன்பா… நீங்க அத்தைக்காக பேச யோசிப்பீங்க” என நயமாக ரகுபதியை அமைதியாக்கிய கௌதம், தென்னரசியிடம் விஷயத்தைக் கூறி…

“சொந்த தாய்மாமன் வீட்ல பொண்ணு இருக்கும்போது… எதுக்கு வெளிய பார்க்க சொல்லணும்? அப்போ நம்ம அவங்க அளவுக்கு சொத்து வைச்சில்லன்னா?” என்றான்.

“சக்தி ஏற்கனவே ஒருமுறை விளையாட்டுப் பேச்சுக்கே… இதெல்லாம் நடக்காதுன்னு சொல்லியிருக்கான் கௌதம். அண்ணி பேச்சு வாக்குல, இந்த ஆசையெல்லாம் வேணாங்கிற மாதிரி அப்போவே சொன்னாங்க. அவங்க வெளிய பார்த்துகிட்டா பார்த்துக்கிடட்டும். சொந்தத்துக்குள்ள எதுக்கு சண்டை?” என்றிருந்தார் தென்னரசி.

அன்னையின் தன்மையான புரிதலானப் பேச்சினை கௌதமால் நம்பவே முடியவில்லை.

அவரின் பேச்சை வைத்துதான்,

“உன்னைத்தான் கட்டிப்பேன். வீட்ல எவ்ளோ ஃபோர்ஸ் பண்ணாலும் அன்வி எனக்கு லவ்வர் மட்டும்தான்” என்று உறுதியாக தீக்ஷாவிடம் சொல்லியிருக்கின்றான்.

தற்போது தென்னரசி இப்படி சொல்லவும் சடுதியில் திட்டம் வகுத்திருந்தான்.

“அதெப்படிம்மா இப்படி அசால்ட்டா விட்டுடலான்னு பேசுற?” என்ற கௌதம், “மறந்துப்போச்சா? இப்போ நாம தொழில் பண்ணிட்டு இருக்கிறது கதிர்வேலன் மாமா நிலம். வெறும் வாய் வார்த்தையா வைச்சிக்க சொன்னாங்கன்னு நாமளும் நம்ம நிலங்கிற உரிமையில் பயிர் வச்சிக்கிட்டு வர்றோம். நாளைக்கு சக்தி இன்னொரு பொண்ணை கட்டிக்கிட்டால்… அவளுக்கு உண்மை தெரிஞ்சா இவ்ளோ ஏக்கர் நிலத்தை விட்டுவைப்பாளா? கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டின்னு பார்ப்பாங்களா இல்லை மாமா, அத்தைன்னு உன்னை பார்ப்பாங்களா? இந்த நிலமில்லாம நமக்குன்னு இப்போ கொஞ்ச நிலம் சேர்ந்திருந்தாலும், அந்த நிலத்துல வர விளைச்சல் வேற எதிலாவது கிடைக்குதா? அந்த நிலம் தான் நமக்கு வசதி வாய்ப்பைக் கொடுத்திருக்கு. உன்னால அந்த நிலத்தை எங்க பேருக்கே எழுதி கொடுங்கன்னு கேட்க முடியுமா? அப்படியே கேட்டாலும், இப்போ வசதி வந்தாச்சே! விட்டதெல்லாம் மச்சான் புடிச்சிட்டாரே! இனிமே அந்த நிலம் உங்களுக்கு எதுக்குன்னு கேட்டா என்ன பண்ணுவ? இல்லைன்னா நிலத்துக்கு ஈடா பணம் கேட்டால்?” என்று சரியாக அவரின் எண்ணத்தில் கல் எறிந்திருந்தான்.

“இதை நான் யோசிக்கவே இல்லையே கௌதம்” என்ற தென்னரசி கணவரைப் பார்க்க…

“ஆமா அரசி… சக்தி நம்ம கைக்குள்ள இருந்தாதான் இந்த நிலம் எப்பவும் நமக்கு சொந்தமா இருக்கும்” என்றார் ரகுபதி.

“இப்போ என்னங்க பண்றது?” தென்னரசி புரியாது கணவரையும், மகனையும் ஏறிட்டார்.

“நாளைக்கு கோவிலில் வைச்சு பேசுங்க. மறுக்க முடியாத அளவுக்கு உங்கப்பேச்சு இருக்கணும்” என்ற கௌதம், “நம்ம மதியை மாமா கல்யாணம் பண்ணிக்கலன்னா… இந்த நிலமும் நமக்கு இல்லை” என்றிருந்தான்.

அதன்படிதான் அவர்கள் கோவிலில் வைத்து சக்தியிடம் அவ்வாறு பேசியது.

உறவுக்குள் விரிசல் ஏற்படுவதை சக்தி எப்போதும் விரும்பமாட்டான் என்பதால், நிச்சயம் திருமணத்திற்கு சரியென்றிடுவானென தென்னரசி, ரகுபதி நினைத்ததற்கு மாறாக…

சக்தி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதனை யாராலும் மாற்ற முடியாது என கௌதமின் எண்ணத்திற்கு ஏற்ப அடுத்த கட்ட நகர்வு நடந்திருந்தது.

கௌதம் எதிர்பார்த்ததுபோல…

சக்தி, “இப்போ என் கல்யாணத்துக்கு அவசரமில்லை. இந்தப் பேச்சே வேண்டாம்” என்று சொல்லியிருந்தான்.

இதனை காரணமாக வைத்து இரு குடும்பத்தையும் பிரித்துவிட்டால், குடும்பம் பிரிந்ததை வைத்து,

“நம்ம கல்யாணம் நடக்காது அன்வி. இன்னும் தான் குடும்பத்துக்குள்ள சிக்கல் வரும்” என்று அன்விதாவை தவிர்க்க முடிவு செய்திருந்தான்.

ஆனால் அவனின் எண்ணத்திற்கு மாறாக…

“இப்போ வேணாம் சொல்றவனுக்கு அப்புறம் வேணும் தோணலாம். இப்போதான பேச்சை ஆரம்பிச்சிருக்கோம். இதுவரைக்கும் சக்திக்கு மதி மேல அப்படியொரு எண்ணம் இல்லாம இருந்திருக்கலாம்… ஆனால் இப்போ பேசியிருக்கோம்ல… இந்தப் பேச்சே அவனை மதியை பார்க்க வைக்கும். பொறுமையா இருப்போம். உறவு வேணாம்னு போனாலும் நமக்குத்தான் நட்டம். உறவே வேணாம், நான் கொடுத்த நிலம் மட்டும் எதுக்குன்னு கேட்டு வாங்கிட்டா என்ன பண்றது?” என்று தென்னரசி கேட்கவே, தன்னுடைய திட்டத்தை மாற்றியிருந்தான்.

“நானும், அன்வியும் லவ் பண்றோம்!”

கௌதம் சொல்ல தென்னரசி, ரகுபதிக்கு அதிர்வுதான். இருந்தாலும் மகிழ்ந்தனர்.

“சக்தி மதியை கட்டிக்கலன்னாலும்… அன்வி உன்னை கட்டிக்கிட்டா போதும்டா! உங்க கல்யாணத்தை வைச்சு, சீதனமா நிலத்தை எழுதி வாங்கிடலாம்” என்றார் ரகுபதி.

கௌதம் தந்தையின் கூற்றில் அரண்டு போனான்.

‘தான் ஒன்று நினைக்க… நடப்பது வேறொன்னா இருக்கே!’ என சிந்தித்தவன்,

“அப்போ மதிக்கு மாமா வேணாமா?” என்றான்.

“அவன் தான் பிடியா நிக்கிறானே! சட்டுன்னு முடிவை மாத்திக்கிற ஆளில்லை அவன்” என்றார் தென்னரசி.

“நடக்காமப்போனா கஷ்டமில்லையா?”

“கஷ்டம் தான்… அதுக்குன்னு மிரட்டி தாலி கட்ட வைக்க முடியுமா!”

“ஏன் முடியாது?” என்ற கௌதம், “அன்வியை வைச்சு சக்தி மாமாவை கார்னர் பண்ணுவோம். தங்கச்சிக்காக இறங்கி வந்துதான ஆகணும். எனக்கு அன்வி, மதிக்கு சக்தி. ஒரே டிமாண்ட்… நாம நினைச்சது நடக்கும். அப்புறம் இந்த நிலம் நம்ம பெயரில் இருந்தா என்ன இல்லைன்னா என்ன?” என்றான்.

“எனக்கும் கௌதம் சொல்றது சரின்னு படுது அரசி” என்று ரகுபதி சொல்ல…

“இப்போ உடனே அன்விக்கு கல்யாணம் பண்ணி வைக்க சம்மதிப்பாங்களா?” என்றார் தென்னரசி.

“ஜோசியம், ஜாதகம்ன்னு எதுக்கு இருக்கு?” என்ற கௌதம், “எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும் இருக்கு. இல்லைன்னா ரொம்ப வருஷத்துக்கு தள்ளிப்போவும் சொல்லுங்க. அன்வியும் என்னை விரும்புறது தெரிஞ்சாலே, அவங்க சரின்னு தான் சொல்லுவாங்க” என்றான்.

“இதுல சக்தியை எப்படி மதிக்கு ஓகே சொல்ல வைக்கிறது?” ரகுபதி புரியாது வினவினார்.

“நிச்சயம் முடிஞ்சதும், சக்தி மதியை கட்டிக்க சம்மதம் சொன்னாதான் இந்த கல்யாணம் நடக்கும் சொல்லுங்க… தங்கச்சிக்காக சக்தி தானா நம்ம வழிக்கு வந்துதான் ஆகணும்” என்ற கௌதமுக்கு நன்கு தெரிந்ததுதான் இருந்தது…

சக்தி ஒப்புக்கொண்டாலும் இதனை அன்விதா ஏற்றுக்கொள்ள மாட்டாளென்று.

அன்விதாவுக்காக சக்தி யோசித்திடும்போது, சக்திக்காக அன்விதா யோசித்திட மாட்டாளா என்பதை தென்னரசியும், ரகுபதியும் சிந்திக்கத் தவறியிருக்க, கௌதம் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான்.

இதில் தன்னுடைய இருப்பு தெரியக்கூடாதென காதலை மட்டும் சொல்லியவனாக கோவைக்குப் புறப்பட்டிருந்தான். பெற்றோரை சக்தியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு.

எல்லாம் அவன் கணக்குப்படி சரியாக சென்றுகொண்டிருக்க…

“ஒருவேளை என்மேலிருக்கும் காதலால்… அன்வி அமைதியா இருந்திட்டா?” என்று யோசித்த கௌதம், அன்விதாவை நேரில் பார்த்து குழப்பி வரலாமென நினைத்தே சென்னை வந்தான்.

அவன் இங்கு வந்ததும் நடந்ததே வேறு.

அனைத்தும் தன்னுடைய கைமீறிச் சென்றாலும், நடக்க வேண்டியது நடந்த நிம்மதி கௌதமிடம்.

ஆனாலும் தன்னுடைய பெற்றவர்கள் முன்பு தனது மதிப்பு இறங்கிவிடக் கூடாதென நினைத்தான்.

தானாகவே தன்னுடைய பக்கங்களை திறந்து காட்டி அனைத்தையும் சொல்லி வந்திருக்க, அன்விதா திருமணத்தை நிறுத்துவது உறுதியென்றாலும், தன்னுடைய வீட்டில் உண்மை தெரிந்தால்? இக்கேள்வி கௌதமை யோசிக்க வைக்க…

கொஞ்சமும் யோசியாது… ஒரு பெண்ணின் மீது, அதுவும் தான் இக்கணம் காதலிப்பதாக சொல்லிக்கொண்டிருக்கும் பெண்ணின் குணத்தின் மீது பழி சொல்கிறோம் எனும் எண்ணமின்றி கதை ஒன்றை புனைந்திருந்தான்.

ஆர்விக்கிடம் பேசிவிட்டு வந்திருந்தாலும்,

ஆர்விக்கின் சில அடிகளும், அவனது பார்வையும் கௌதமுக்கு அச்சத்தைக் கொடுத்திருந்தது.

சக்திக்கு உண்மை தெரிவதற்கு முன்பு தன் வீட்டார் தனக்கு துணை நிற்கும் வகையில் செய்திருக்க வேண்டுமென முடிவு செய்தவன்,

தென்னரசிக்கு அழைத்தபடி கடற்கரை சாலையில், ஆர்விக்கின் அலுவலகத்திலிருந்து சிறிது தூரம் தள்ளிச் சென்று நின்றிருந்தான்.

அது ஆள் அரவம் அதிகம் காணப்படாத இடம். அத்தகைய சூழல் தான் தங்களின் பலதரப்பட்ட நிகழ்வுகளுக்கு அதிக தொந்தரவு இல்லாது பயன்படுமென அவ்விடத்தில் அலுவலகம் அமைத்திருந்தனர் ஆர்விக்கின் நண்பர்கள் குழு.

தென்னரசி அழைப்பினை ஏற்கும் முன்பு, நான்கு பேர் வந்து தானாக வம்பு செய்து அடித்திட, எதற்கென்று காரணம் தெரியாது அலறினான் கௌதம்.

அவர்களும் அடித்திடும் பொழுது வாய் திறக்கவே இல்லை. சத்தமின்றி வேலையை முடித்துவிட்டு சென்றிருந்தனர்.

அசையக்கூட முடியாது சாலையில் விழுந்து கிடந்த கௌதம், தன்னை யாரோ தூக்குவதை உணர்ந்து மெல்ல கண்கள் திறந்து பார்த்தான்.

“தேங்க்ஸ் ஆர்வி!”

“உன்னை அடிக்க சொன்னதே நான் தான்” என்ற ஆர்விக், “அடி கொஞ்சம் கம்மியா இருக்கே” என்க, இந்நிலையில் இவனும் அடித்தால் உயிர் போனாலும் போய்விடுமென பயத்தினை கண்களில் காட்டியிருந்தான் கௌதம்.

“உன்னோட எண்ணத்துக்கும், பேச்சுக்கும் இதெல்லாம் குறைவு தான்” என்ற ஆர்விக், “உன்னை அடிச்சாலாவது என் கோபம் குறையுமான்னு பார்த்தேன். இல்லையே” என்றான்.

“ஆர்விக்…”

“உன்கிட்ட இப்போ நான் ஏன் வந்து நான்தான் உன்னை ஆள் வைச்சு அடிச்சேன் சொல்றேன் தெரியுமா?” என்ற ஆர்விக், “தண்டனை எதுக்காகன்னு தெரிஞ்சா தானா… தப்பு எதுன்னு தெரியும். இந்த அடி, உன்னை இனி அன்வி பக்கமே திரும்ப விடக்கூடாது” என்றான்.

“பிளீஸ் ஆர்விக்… ஹெல்ப் மீ?” கௌதம் திக்கி திணறினான்.

“நீயெல்லாம் மனுஷனே இல்லை. உயிரோட இருந்து என்னடா பண்ணப்போற? உன்னையெல்லாம் இப்படியே விட்டுப்போனாலும், நாய் கூட சீண்டாது” என்ற ஆர்விக், “ஆனா நான் நீ இல்லையே! இப்போ என் மனசு உன்னை ஹாஸ்பிடலில் சேர்க்க சொல்லுது” என்றான்.

கௌதமை மருத்துவமனையில்,

“ரோட்ல அடிபட்டு கிடந்தாங்க” என்று சேர்த்த ஆர்விக், அவனது அலைபேசியிலிருந்தே ரகுபதிக்கு அழைத்து…

“உங்க மகன் இங்க அடிபட்டு கிடந்தாங்க. ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கேன்” என தன்னை அடையாளப்படுத்தாது மருத்துவமனையின் பெயரையும் சொல்லி வைத்திட்டான்.

சிகிச்சை முடிந்து கண் விழித்த கௌதம், பெற்றோரை பார்த்து தான் தப்பிக்க வழி யோசித்தான்.

“உனக்கு ஏன் கௌதம் இப்படி?” என்று அழுத தென்னரசி,

“ராத்திரி முழுக்க உதவிக்கு ஆளில்லாம தனியாவ இருந்த கௌதம்?” என்று கேட்டார்.

ரகுபதிக்கு மகனை அந்த நிலையில் காணவே முடியவில்லை. அவனின் காலுக்கு அருகிலே அமைதியாக அமர்ந்துவிட்டார்.

“அன்வி இங்கதான இருக்காள் கௌதம், அவளை கூப்பிட்டிருக்கலாமே?” என்று தென்னரசி கூற,

“என்னை ஆள் வைச்சு அடிச்சதே அவள் தாம்மா?” என்றான் கௌதம்.

“என்னப்பா சொல்ற? நம்ம அன்வியா?” என ரகுபதி அதிர்வாய் கேட்டார்.

“அவள் ஏன் உன்னை ஆள் வைச்சு அடிக்கணும்?” என்ற தென்னரசி, “நீ எதுக்கு இங்க வந்த?” எனக் கேட்டார்.

மெல்ல கண்களை மூடி, தனக்கு அருகில் நின்றிருந்த தென்னரசியின் மீது சாய்ந்த கௌதம், அழுகையில் தோள்களை குலுக்கியவனாக…

“அவள் என்னை ஏமாத்திட்டாம்மா” என்றான்.

மகன் அழுவதை எந்த தாயால் தாங்கிக்கொள்ள முடியும்? அவன் சொல்வதை கண்களை மூடிக்கொண்டு நம்பினார்.

“என்னை லவ் பண்ணிகிட்டே இன்னொருத்தனையும் லவ் பண்ணிட்டு இருந்திருக்காம்மா! கல்யாணம் சொன்னதும் எனக்கு நீ வேணாம். இந்த கல்யாணப் பேச்சையே நிறுத்துன்னு ஃபோன் பண்ணாள். என்னன்னு தெரியாம எப்படி நிறுத்திறது? அவளை நான் உண்மையா அவ்ளோ லவ் பண்றேன்” என்றவன், அவரிடமிருந்து பிரிந்து, இருவரின் முகத்தையும் ஆராய்ந்தான்.

தான் சொல்வதை நம்பும் பாவனை தெரிய மேலே தொடர்ந்தான்.

“நேர்ல பார்த்து பேசலாம் வந்தா… அவளோட சுத்திட்டு இருப்பானே ஆர்விக்குன்னு ஒருத்தன். அவனை லவ் பண்றதா சொல்றாள். எனக்கு அப்படியே செத்துப் போயிடலாம் போல இருந்துச்சும்மா” என்று கதறியவன், கையின் வலியில் முகம் சுளிக்க…

“உன்னை கஷ்டப்படுத்திக்காத கௌதம்” என்று தென்னரசியும் மெல்ல விசும்பினார்.

“அப்போ என் லவ்வுக்கு என்ன பதிலுன்னு கேட்டதுக்குதான் அவனை வைச்சு அடிச்சிட்டாம்மா” என்றான்.

“அன்வி மேல தப்பு இருக்கிறதாலதான் சக்தி நம்ம கூட வந்தும் இங்க வரலையா?” என்றார் ரகுபதி.

“சக்தி மாமா வந்திருக்காரா? அவரை வரச்சொல்லுங்க… நான் என் காதலுக்கு நியாயம் கேட்கணும்” என்று இயல்பாய் நடித்தான்.

“உனக்கு அடிப்பட்டிருக்குன்னு கேள்விப்பட்டதும், கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சு அவள் ராசிதான் படுக்க வைச்சுதுன்னு யோசிச்சேன். ஆனால் அவள் இவ்வளவு பெரிய காரியம் பண்ணியிருப்பான்னு தெரியாமப் போச்சே” என்ற தென்னரசி…

“நீ எதுக்குப்பா அழனும்? அவள் தான் உன் பொண்டாட்டி. அவளை உனக்கு நான் கட்டி வைக்கிறேன்” என்றார்.

தற்போது ஆத்திரப்பட்டால் காரியம் கெட்டுவிடுமென நினைத்து சக்திக்கு அழைத்து முதலில் இங்கு வர வைப்போமென பேசியவர்,

தன்னையும் மீறி வார்த்தைகளை விட்டிருந்தார்.

சக்தியின் ஒற்றை வார்த்தைக்கே பயந்தவர், அன்விதாவை வைத்து தான் சக்தியை வளைக்க முடியுமென நினைத்து அவளுக்கு அழைத்தார்.

கௌதமுக்கு இரண்டு குடும்பமும் பிரிந்தால் தனக்கு நல்லது எனும் எண்ணம் ஈடேறியிருந்தது.

*****************************

“தேயிலை எல்லாம் சக்தி சொன்ன மாதிரி, டீலர் வந்து வாங்கிட்டு போயிட்டாங்க கார்த்திகா. பணம் வந்திருக்கு… நல்ல லாபம்” என்ற சுகவனத்தின் முகத்தில் அத்தனை மகிழ்வு.

பல மாதங்களாக போட்ட உழைப்பு ஒரே நாளில் வீணாகிவிடுமோ என்று பயந்த பயமெல்லாம் ஒன்றுமில்லையென ஆகியிருந்தது.

“இந்த பணத்துல இருக்கிற பழைய நகையெல்லாம் மாத்தி, கூட சேர்த்து இன்னும் கொஞ்சம் புது நகையும் வாங்கி வைப்போம். நிதா கல்யாணத்துக்கு ஆவும்” என்ற சுகவனம், “அடுத்த பறிப்புக்கும் பணம் வரும்” என்றார்.

“மொதல்ல பையன் பார்க்க சொல்லுங்க… அப்புறம் இதெல்லாம் பார்ப்போம்” என்ற கார்த்திகா, “நிதாவுக்கு வயசு போறது தெரியுதா இல்லையா?” என்றார்.

“அவள் தான் கொஞ்சநாள் வேலைக்கு போவனும் சொன்னாளே!”

“அதான் அவள் ஆசைக்குன்னு மூணு வருஷமா வேலைக்கு போயிட்டு இருக்காளே! படிப்பு முடிச்சதும் வந்த வரன் எல்லாம் அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து இப்போ வேணாம் வேணாம் சொல்லி தட்டி கழிச்சீங்க. இப்போ நாமளா தேட வேண்டியதாயிருக்கு. போன வாரம் வந்த பையன் கிட்டவும் என்ன பேசினான்னு தெரியல. வேணாம் சொல்லிட்டாங்க” என்றார் கார்த்திகா.

“இப்போ என்ன கார்த்திகா… பொறுமையா பார்த்து செய்வோம்” என்ற சுகவனம், “சக்தியை கேட்க ஆசையிருக்குதான்… அவங்க வீட்லே பொண்ணு இருக்கும்போது நாம கேட்கிறது நல்லாயிருக்காதே!” என்றார்.

“உங்களுக்கும் இந்த நினைப்பு இருக்கா?” என்ற கார்த்திகா, “நம்ம கண்ணு பார்க்க வளர்ந்த பையன். ஒரு குறை சொல்ல ஆவுமா. தானா மனசுல ஒரு விருப்பம் ஒட்டிக்கிச்சு. அன்விக்கிட்ட கூட அன்னைக்கு உங்க மதி இல்லைன்னா நாங்களே எங்க நிதாவுக்கு கேட்டிருப்போம் சொன்னேன். நினைக்கிறதெல்லாம் எங்க நடக்குது” என்றார். ஆதங்கமாக.

“நாம பார்த்துதான் ஒன்னும் ஒத்துவர மாட்டேங்குதுன்னு நம்ம பொன்னுசாமி கிட்ட நிதா போட்டோ கொடுத்து பார்க்க சொல்லியிருக்கேன். சக்தி போட்டோவும் அவர் கையில இருந்துச்சு. நான் கேட்காமலே சங்கதி இதுதான்னு சொல்லிட்டாரு. சக்திக்கு எடைய பொண்ணு பார்க்க சொல்லியிருக்கான் கதிரு. அப்புறம் என்னாச்சு தெரியல. கொஞ்சநாள் நிறுத்தி வைக்க சொன்னானாம்” என்றார் சுகவனம்.

“குடும்பத்துக்குள்ள எதுவும் சுணக்கமா இருக்குமோ? மதி பதிவுசான பிள்ளையாச்சே!” என்ற கார்த்திகா, “அவங்களே வெளிய பாக்குறன்னு இருக்காங்க. அப்போ நாம நம்ம பிள்ளைக்கு கேட்போமே” என்றார். மிகுந்த எதிர்பார்ப்பாய்.

“இப்போ நாம கேட்டா வீம்புக்கு போய் நிக்கிறோம் அப்படின்னு தென்னரசி நினைக்கும் கார்த்திகா. அவங்களுக்குள்ளவே இன்னும் சரியா எதுவும் முடிவு பண்ணிக்கல தோணுது. பார்க்க சொன்னதை நிறுத்தி வைக்க சொல்லியிருக்காங்களே! பார்ப்போம். அதுக்குன்னு நம்ம பிள்ளையை காக்க வைக்க முடியாது. நாம பாக்குறதை பார்ப்போம். யாருக்கு எங்கன்னு இருக்கோ அங்கதான் அமையும். நீயும், நானும் நினைச்சா நடக்குமா? மேல இருக்கவன் கணக்கு என்னவோ?” என்ற சுகவனம், “தென்னரசியை நேர்ல பார்த்தாக்கூட எதுவும் கேட்டுக்காத. அந்தம்மா தெய்வானை மாதிரி அமைதியெல்லாம் கிடையாது. நேருக்கு நேரா உன் வாயை பிடுங்கும்” என்று எழுந்து சென்றார்.

“அதுவும் சரிதான்” என்ற கார்த்திகாவுக்கு சக்தியை விட மனமே இல்லை.

யாரென்ன நினைத்தாலும் பரவாயில்லை ஒருமுறை கேட்டுப் பார்ப்போமா என்ற எண்ணம் இக்கணம் அதிகத்துக்கும் துளிர்விட்டது.

எதிர்பார்ப்பதெல்லாம் எளிதாக கைகூடுமாயின் வாழ்வில் சுவாரஸ்யம் ஏது?

யாருக்கு யாரோ?

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 48

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
38
+1
1
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. ஆர்விக் செம. கௌதம் டூ மச்.