
காலை கனவு 2
“நீ ரொம்ப ஆசைப்பட்டு அந்த காலேஜில் சேர்ந்த ஆர்வி… எனக்காக மாத்திக்கிட்டு வரவேணாம்” என்ற அனிதாவின் பேச்சினை ஆர்விக் கண்டுகொள்ளவே இல்லை.
“எனக்கு உங்கக்கூடவே இருக்கணும்மா. நான் கூடவே இருந்தா உங்களுக்கும் எதுவும் ஆகாதும்மா. நான் பார்த்துப்பே அனி உன்னை” என்று அன்னையை கட்டிக்கொண்டு அழுதிருந்தான்.
தனக்காக ஓடிக்கொண்டே இருந்தவர், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் படுக்கையில் கிடந்தது அவனுள் பயத்தை ஏற்படுத்தியிருந்தது.
அதற்காகவே அனிதாவுடன் எக்கணமும் இருந்திட வேண்டுமென, அனிதா வேலை செய்யும் கல்லூரியிலே தானும் பயில்வதாக அடம் பிடித்தான்.
முன்பு அக்கல்லூரி வேண்டாமென்றவனையே, தற்போது வேண்டுமென சொல்ல வைத்துவிட்டது.
“அவனும் உன்னோடவே இருந்தா தைரியமா இருப்பான் அனிதா. ரெண்டு பேரும் நாள் முழுக்க ஒண்ணாவே ஒரே இடத்திலே இருப்பீங்க. சேர்ந்து போய் வரலாம்” என்று பேரனுக்கு துணையாகப் பேசி, அனிதாவை சம்மதிக்க வைத்திருந்தார் லட்சுமணன்.
“இதுக்குத்தான் ஆரம்பத்திலே சொன்னேன். அப்போவே இங்க சேர்ந்திருக்கலாம். இப்போ ரெண்டு காலேஜிலும் பேசணும்” என்ற அனிதா, “உனக்கு நானும் பாடமெடுக்குற மாதிரி வரும். என் பையன்னு சலுகையெல்லாம் எதிர்ப்பார்க்கக் கூடாது” என்று கராராகக் கூறினார். ஒற்றை விரல் நீட்டி.
“ம்க்கும் ரொம்பத்தான்” என்ற ஆர்விக், “எனக்கும் நீங்க காலேஜில் லெக்ச்சரர் மட்டும் தான்” என்று உதட்டினை வேகமாக சுளித்தான்.
“ஃபர்ஸ்ட் செம் முடிஞ்சுதே! இந்த லீவில் காலேஜ் மாறுர பார்மாலிட்டிஸ் முடிச்சிடலாம்” என்று அனிதா சொல்ல, “அந்த சிரமமே உங்களுக்கு வேண்டாம் அனி. நானே பேசி ரிலீவ் ஆகிட்டேன். நாளைக்கு டிசி வாங்கிக்க சொல்லிட்டாங்க” என்ற ஆர்விக்கின் கன்னத்தில் அழுத்தமாக உள்ளங்கை வைத்த அனிதாவின் கண்கள் பனித்திருந்தன.
மகனின் அன்பினால் மட்டுமே அவரது ஜீவன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இரண்டாம் பருவத்தில் தங்களின் வகுப்பிற்கு புதிதாக வந்த ஆர்விக்கை தங்களின் கூட்டுக்குள் அழகாய் இணைத்துக் கொண்டனர் பூபேஷ், யாஷ், தான்யா மற்றும் அன்விதா.
சொல்லப்போனால் அன்விதா தான் ஆர்விக்கிடம் முதலில் பேசியது. நூலகத்தில் அவளுக்கு வேண்டுமான புத்தகம் அவனிடத்தில் இருந்திட, இருவருக்குமான பேச்சு புத்தகம் தொடர்பாக ஆரம்பித்து, அனைத்தையும் உரிமையாக பேசும் நட்பில் பிணைந்தது.
அன்விதாவும் தான்யாவும் நெருங்கியத் தோழிகளாக இருந்திட, ஆர்விக்குடன் நட்பு கொண்ட பூபேஷ், யாஷும், அன்விதா மற்றும் ஆர்விக்கின் நட்பால் ஒரு குழுவாக நெருக்கம் கொண்டனர்.
ஐவரும் ஒன்றாக சுற்றித் திரிந்தாலும் அன்விதாவுக்கு மற்ற இரு ஆண்களைக் காட்டிலும் ஆர்விக்கோடு அனைத்தும் பகிர்ந்திட இயல்பாக முடிந்தது.
ஏதுவாக இருப்பினும் ஆர்விக்கிடம் பகிர்ந்துகொள்ளும் அளவிற்கு குறுகிய காலத்திலேயே நட்பில் ஆழம் கொண்டிருந்தனர். முக்கியமாக அவர்களின் பேச்சுக்கள் பாடம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்.
ஐவரும் ஒன்றாக இருக்கும் நேரங்களில் கூட, மற்றவர்கள் அரட்டை அடைத்திட, அன்விதாவோ ஆர்விக்கோ ஏதேனும் சந்தேகமென பாடத்துடன் தொடர்புப் படுத்தி பேச்சினை திசை மாற்றிவிடுவர்.
“நிஜத்துக்கும் காண்டாகுது. சும்மா அந்த புக்கோடவே மல்லுக் கட்டுறீங்க” என்று யாஷ் கடுப்போடு மொழிய, “இப்போ படிப்பு தான மச்சான் முக்கியம்” எனும் ஆர்விக்கைப் பார்த்து யாஷ் கையெடுத்து கும்பிட்டிடுவான்.
அன்விதா, யாஷ் விடுதியில் தங்கி படிக்கின்றனர். ஆர்விக் விடுமுறை தினங்களில் கூட கல்லூரி நூலகத்திற்கு படிக்க வருவதை காரணமாகக் கொண்டு அவளுடன் பொழுதினைப் போக்கிடுவான்.
“லீவ் நாளையாவது விட்டு வைங்கடா” என்று யாஷ் அன்றைய தினங்களில் தெறித்து ஓடிவிடுவான்.
அன்விதாவுக்கும் அந்த நாட்களில் படிப்பு நேரம் முடிந்து, ஆர்விக் வீட்டிற்கு கிளம்பு நேரம், கல்லூரிக்கு வெளியில் எதிர்ப்பக்கமிருக்கும் தேநீர் கடையில் இருவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் குடிப்பதில் அத்தனை பிடித்தம் உண்டாகியிருக்க… நினைத்த நேரமெல்லாம் ஐவரும் தேநீர் கடையில் கூடுவதும் வாடிக்கையாகியிருந்தது.
அந்நேரத்தில் படிப்பைத் தவிர்த்து மற்ற சுவாரஸ்யமானப் பேச்சுக்கள் நீளும்.
“ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கிறது” என்று சில நேரங்களில் மற்ற மூவரும் ஒதுங்கிட, இருவருக்குமான தேநீர் நேரம் அவர்களுக்கான புரிதலுக்கு வலுவாக அமைந்தது.
நட்பு எனும் பந்தம் உரிமை எனும் வரையறையில் தானாக நுழைந்திருந்தது.
தற்போதெல்லாம் ஆர்விக்குக்கு அன்விதாவின் மீது புரியாத பிடித்தம் ஒன்று இருப்பதாகத் தோன்றியது.
அன்று அன்விதா தான்யாவுக்கு தலையில் கொட்டி ஏதோ சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்க சற்று இடைவெளியில் அமர்ந்திருந்த ஆர்விக்கின் பார்வை அன்விதா மீதுதான் நிலைத்திருந்தது.
பூபேஷ் கூடைப்பந்து அணியில் ஆட்டக்காரனாக சேர்ந்திருக்க, அக்கணம் அவன் மைதானத்தில் இருந்தான்.
“என்னடா பார்வையில ஏதோ மாற்றம் தெரியுது?” ஆர்விக்கை கவனித்தவனாக யாஷ் கேட்டிருந்தான்.
“தெரியல மச்சி… இப்போலாம் அன்வி பக்கத்துல இருந்தாலே பார்த்துட்டே இருக்கணும் தோணுது” என்றான் ஆர்விக்.
“அவள் எப்பவும் உன்னோடவே தான் இருக்காள். எங்களை விடவும் அவளுக்கு உன்னோட நெருக்கம் அதிகம். சோ அப்படியிருக்கலாம்” என்ற யாஷ், “எதுவும் தேவையில்லாம யோசிக்காத” என்றான்.
“யோசிக்கவும் என்னன்னு புரியனுமே” என்ற ஆர்விக் எதிர்பார்க்கவில்லை அன்விதா தனது காதலாக மாறுவாள் என்று.
அவனுக்கு அவளை முதன் முதலாக தன்னுடைய வகுப்பில் பார்த்ததும் பிடித்திருந்தது. செடியில் பூத்திருக்கும் மலரை பார்த்ததும் கண்கள் அதில் குடிகொண்டுவிடுமே… அதுபோன்றான பிடித்தம். அந்த பிடித்தம் காதலாக மாறுமென்பது அவனே அறியாதது.
அந்த பருவம் கடந்திருந்த நிலையில் தேர்வெழுதிய விடுமுறைக்கு அன்விதா, யாஷ் தத்தம் ஊருக்குச் சென்றிருந்தனர்.
நாள் முழுக்க ஒன்றாக இருந்தவர்களுக்கான முதல் பிரிவு.
ஐவரும் இருக்கும் புலனம் குழு அரட்டையில் நிரம்பி வழிந்தது. இருப்பினும் ஆர்விக்குக்கு அன்விதாவுடன் தனியாக பேசிடும் ஆர்வம் தவிப்பை ஏற்படுத்தியது.
காரணம் புரியாது பித்துப்பிடித்த நிலை தான்.
அனிதா கவனித்து என்னவென்று கேட்கும் நிலையில் சோர்ந்து திரிந்த ஆர்விக், அந்த ஊரிலே இருக்கும் பூபேஷுடன் விடுமுறை நாட்களை கடத்தி, மனதின் அலைப்புறுதலிலிருந்து தன்னைக் காத்துக்கொண்டான்.
“இன்னும் தூங்காம என்ன பண்ணிட்டு இருக்க ஆர்வி” என்று நேரம் இரவு பத்தை கடந்த பின்னரும் தொலைக்காட்சியின் முன்பு அமர்ந்திருந்த மகனிடம் கேட்டார் அனிதா.
ஆர்விக் பதில் சொல்லாது தனக்கு அருகில் வந்தமர்ந்த அனிதாவின் மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டான்.
“கொஞ்சநாளா ரொம்பவே அமைதியா இருக்க நீ! என்னாச்சு?”
“ஒண்ணுமே புரிய மாட்டேங்குது அனி. அடிக்கடி இப்போலாம் இப்படித்தான் ஆவுது. ஏன் டல்லாகுறேன், என்ன யோசிக்கிறேன் ஒண்ணுமே தெரியல” என்றவன் அனிதாவை இடையோடு கட்டிக்கொண்டு அவரின் மடியில் இன்னும் அழுத்தமாக முகத்தை புதைத்தான்.
“எதுவும் கனவு வருதா?” ஆர்விக்கின் சிகை கோதியவராக வினவினார்.
“என்ன கனவும்மா?”
“உன் வயசுக்கு ஏத்த கனவு தான் ஆர்வி.”
“ம்ப்ச் அதெல்லாம் இல்லை அனி. அது அப்போ ஒரு நாள் வந்துச்சு அவ்ளோதான். அதுவும் அன்னைக்கு ஏதோ லவ் மூவி பார்த்துட்டு அதே நினைப்பில் தூங்கினேன். சோ அப்படியொரு கனவு” என்று சாதாரணம் போல் கூறிய ஆர்விக், “நான் ஓகே தான் மாம். நீங்க போய் படுங்க” என்று அவனின் அறைக்குச் சென்றுவிட்டான்.
படுக்கையில் விழுந்த ஆர்விக் அலைபேசியில் நண்பர்களுடனான புகைப்படங்களை எடுத்துப் பார்வையிட்டவனாக, அனைத்துப் படங்களிலும் அன்விதாவை மட்டும் ஏனென்று காரணமே விளங்காது பெரிது செய்து பார்த்து ரசித்தான்.
பெரும்பாலானவை இருவரின் தேநீர் நேர புகைப்படமாகத்தான் இருந்தன.
“கூடவே இருந்துட்டு… இப்போ நீயில்லாம என்ன தோணுதுன்னே தெரியமாட்டேங்குது” என்று அன்விதாவின் நிழலுருவிடம் பிதற்றியவனாக உறங்கிப்போனான்.
பார்க்கும் இடமெங்கும் பச்சை நிறைந்து, அவ்விடம் முழுக்க வானவில் உடைந்து சிதறியது போல பல வண்ண மலர்கள் கொட்டிக் கிடந்தன. மேனித் தீண்டிய குளிர் காற்றை ஆழ்ந்து சுவாசித்து நுரையீரலில் சேர்ப்பித்தவனிடம் பூவின் மணம் அவனையே மறக்க வைத்து உறைந்து நிற்க வைத்திட்டது.
அவனுக்கு பின்னால் மெல்லிய பாத ஓசை. தனக்கு அருகில் நெருங்கி வரும் அரவம் உணர்ந்த போதும் அவனால் மனம் நிரம்பும் வாசனையை விடுத்து மூடிய கண்களைத் திறந்து பின்னால் திரும்பிப் பார்த்திட இயலவில்லை.
மிக அருகே நெருங்கிவிட்ட காலடிச் சுவடு, அவனை திரும்பிப் பார்த்திட உந்தியது.
அவனின் தோளில் மென் தீண்டல். அழுத்தமாகப் படிந்த உள்ளங்கையின் வெம்மை அவனது உடலெங்கும் பரவிய உணர்வு.
தொடுகை ஒன்று போதுமானதாக இருந்தது தனக்கு பின்னால் யார் வந்து நின்றிருப்பதென அவன் அறிய!
“அன்வி” என்று அவன் மெலிதாக உச்சரித்திட… அதே கணம்
“ஆர்வி” என்ற அன்விதாவின் அழைப்பு அவனின் செவி நுழைய சட்டென்று வேகமாக திரும்பிப் பார்த்தான்.
முன்பு ஒருமுறை வந்தபோது முகம் காட்டாது கலைந்து சென்றவள், தற்போது மேகம் விலகிய பால் நிலவாக பளிச்சென முகம் காட்டியிருந்தாள்.
“அன்விதா” என்று அழுத்தமாக உச்சரித்த ஆர்விக் பட்டென்று இமை திறந்தவனாக உறக்கத்திலிருந்து எழுந்தமர்ந்திருந்தான்.
கனவில் அவனது தோள் பதிந்த அன்விதாவின் கரம் இன்னும் அங்கு படிந்திருப்பதாத் தோன்றிட கை வைத்துப் பார்த்தான்.
“ஆர்வி… இட்ஸ் ஜஸ்ட் அ ட்ரீம்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.
‘தூங்குறதுக்கு முன்ன அம்மா ட்ரீம் பற்றி பேசினதால, அப்போ வந்த ட்ரீமில் தெரிந்த முகம் தெரியாத பொண்ணு இப்போ அன்வியா தெரியுது. ஜஸ்ட் ஹலோசினேஷன்’ என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டவனாக உறங்க முயற்சித்திட ஆர்விக்கால் முடியாது போனது.
ஒரு கட்டத்தில் தன்னுடைய மனம் கூறுவதை விளங்கிக் கொண்டவன்,
“இம்சை பண்ணாதடி” என்று தன்னுடைய இதயத்தை நீவியவனாக தனது காதலை அறிந்திட்ட மகிழ்வில் தன்னையறியாது உறங்கியிருந்தான்.
விடிந்ததும் அனிதாவிடம் கனவை கூறியுமிருந்தான்.
“உனக்கு இது அதுதான்னு தோணுதா ஆர்வி?” என, மகனின் முகத்தில் ஒளிரும் கண்களிலே, அவனின் மனம் தெள்ளென அறிந்த போதும் கேட்டிருந்தார்.
“இங்க அப்படித்தான் அனி சொல்லுது” என்று தன்னுடைய நெஞ்சின் ஓரம் கை வைத்துக் கூறிய ஆர்விக்,
“இப்போ இந்த வயசில் இது வெறும் ஈர்ப்பா கூட இருக்கலாம். நாலஞ்சு மாசம் கூடவே இருந்தவ, இப்போ என்னோட இல்லைன்னதும் மனசு அவளை தேடுறதாவும் இருக்கலாம். ஆனாலும் இப்போ இதை அலசி ஆராய்ச்சி பண்ற வயசோ பக்குவமோ எனக்கில்லை. இப்போ அவள் மேல வந்திருக்க இந்த ஃபீல் நல்லாயிருக்கு. பிடிச்சிருக்கு. இது இப்படியே இருக்கட்டும் அனி. இது மாறவே மாறாதுன்னு ஒரு கட்டத்தில் தோணும்ல அப்போ அவகிட்ட சொல்றேன்” என்றான்.
பக்குவம் கொண்ட வயதில்லை என்றவனின் பேச்சில் வயதை மீறிய பக்குவத்தை கண்ட அனிதா, ஆர்விக்கின் நெற்றி வழிந்த கேசம் ஒதுக்கியவராக…
“உன் மனசுக்கு நீ ஆசைப்படுறது நிச்சயம் நடக்கும் ஆர்வி” என்றிருந்தார்.
“தேங்க் யூ அனி” என்று அவரை அணைத்து சாய்ந்தாடியவனின் காதல், வருடங்கள் ஓடி விருட்சம் கொண்ட போதும் அவளிடம் சொல்ல முடியாது போனது.
காலையில் அனிதாவை கல்லூரியில் விட்டுவிட்டு வந்ததிலிருந்து பழைய நினைவில் மூழ்கியிருந்தவனை கலைத்தது அன்விதாவிடமிருந்து வந்த அழைப்பு.
“சொல்லு அன்வி…”
“என்னடா இன்னும் ஆபீஸ் வரல?”
“அம்மாவை பிக்கப் பண்ணனும் அன்வி… த்ரீ ஓ கிளாக் வந்துடுறேன்” என்ற ஆர்விக்கிடம்,
“ம்ம்… நான் நைட் ஊருக்கு போறேன் ஆர்வி. வர நாலு நாளாகும். நீ வந்தா நெக்ஸ்ட் புக் ஆகியிருக்க இவன்ட் டீடெயில்ஸ் சொல்லிடலாம்னு கால் பண்ணேன்” என்றாள்.
“ம்ம்” என வைத்திட்ட ஆர்வி,
மதியம் போல் அனிதாவை கல்லூரியிலிருந்து அழைத்து வந்த பின்னர் அலுவலகம் வந்து சேர்ந்தான்.
‘ஃபிரண்ட்ஸ் இவன்ட் மேனேஜ்மென்ட்.’
கடற்கரை அருகே அமைந்துள்ளது அந்த அலுவலகக் கட்டிடம். கல்லூரியில் தொடங்கிய ஐந்து நண்பர்களின் நட்பு, ஏழு வருடங்கள் தொடர்ந்து தற்போது தொழிலிலும் பிணைப்பைக் கொண்டுள்ளது.
ஒரு விழா என்றால் நடைபெறவிருக்கும் தினத்தை மட்டும் கூறினால் போதும், அவ்விழாவுக்கு வேண்டிய அனைத்தும் அவர்களே ஏற்பாடு செய்திடுவர்.
வாயிலில் வைக்கும் பெயர் பலகையில் ஆரம்பித்து விழா முடிந்து அனைவரும் வெளியேறும் வரை அனைத்தும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.
கடற்கரையில் பிரமாண்டமாக நடத்த விரும்பினால், அதையும் ஏற்பாடு செய்திடுவர். அவர்களின் அலுவலகமே கடற்கரை பகுதியில் தான் அமைந்துள்ளது. அலுவலகக் கட்டிடம் அமைந்துள்ள குறிப்பிட்ட பகுதி வரையிலான கடற்கரையும் அவர்களுக்கே உரித்தானது. ஆதலால் தனிமையின் எழில் மிகுந்த இடத்தில், விழாக்கள் நடைபெறுவதற்கு மண்டமும், விருந்து அறையும் கூட அவர்களின் கீழ் உள்ளது.
இதனின் முதல் அடி ஆர்விக் தான். அவனது யோசனை ஐவராலும் கலந்தாலோசிக்கப்பட்டு… இணைந்து தொழில் தொடங்குவதில் வந்து நின்றது.
நண்பர்கள் ஒன்றாக தொடங்கும் தொழில் என்பதால் குடும்பத்தின் உதவியின்றி, வங்கியில் பொதுவான கடன் பெற்று தொடங்கினர்.
ஆரம்பம் அத்தனை எளிதானதாக அமைந்துவிடவில்லை. பல தடைகள் தகர்த்து படிகள் ஏறிய பின்னரே பிரபலமாகத் துவங்கினர். அதற்கே இரண்டு வருடங்கள் ஆயிற்று.
அலுவலகத்தின் முன்பு வண்டியை நிறுத்திய ஆர்விக்,
அங்கு மரத்தடியில் நின்றுகொண்டு தலையில் கொட்டியபடி, முகத்தை தீவிர யோசனையில் வைத்திருந்த தான்யாவை பார்த்தவாறு உள்ளே சென்றான்.
ஒரு விழாவில் பங்குபெறும் அனைத்து துறைகளுக்கும் தனித்தனி பிரிவுகள், அதற்கான பணியாளர்களென்று அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.
ஒரு சில பணியாளர்கள் கூடம் போன்ற இடத்தில் அலங்கார பூக்களை வடிவமைத்துக் கொண்டிருக்க, பூபேஷும், யாஷும் அப்பூக்களின் வர்ணங்கள் விளக்கு வெளிச்சத்திற்கு ஏதுவாக நிழல் உருவம் கொள்கிறதா என காமிராவில் படம் பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அன்வி எங்க?” என்று மற்ற இடங்களில் பார்வையை சுழட்டிய ஆர்விக், இருவரின் அருகில் சென்று கேட்டிருந்தான்.
“ஆபீஸ் ரூம்ல இருக்கா” என்ற யாஷ், “அவள் ஊருக்கு போகணும் சொன்னாடா” என்றான்.
“ம்ம்… பேமிலியா பழனி கோவில் போறாங்களாம்” என்ற ஆர்விக், “அந்த பர்த்டே பார்ட்டி முடிஞ்சுதா?” என வினவினான்.
“ஹ்ம்ம் முடிஞ்சுது. ஹால் கிளின் பண்ணிட்டு இருக்காங்க” என்ற பூபேஷ், “தான்யா கிட்ட சொல்லிட்டேன் மச்சான்” என்றான்.
“பாருடா” என்று இதழ் விரித்த ஆர்விக், “என்ன சொன்னாள்?” என்றான்.
“ஷாக் ஆகிட்டா… கொஞ்சம் தனியா இருக்கணும் சொன்னா” என்ற பூபேஷ், “எனக்குதான் பக்கு பக்குன்னு இருக்கு” என்று சுருங்கிய வதனத்ததோடுக் கூறினான்.
“உனக்கு நோ சொல்ல வாய்ப்பில்லை. நீ லவ் சொல்லுவன்னு எக்ஸ்பெக்ட் பண்ணியிருக்கமாட்டாள். அதான் யோசிக்க நினைச்சிருப்பாள்” என்ற ஆர்விக், “அன்வி அப்போவே கால் பண்ணா… என்னன்னு கேட்டுட்டு வரேன்” என்று ஐவருக்கும் பொதுவான அலுவலக அறைக்குள் சென்றான்.
தலைமை இருக்கை, மேசை என எதுவுமில்லை. வட்ட மேசையை சுற்றி ஐந்து இருக்கைகள் போடப்பட்டிருந்தது.
மேசை மீது தலை கவிழ்ந்தவளாக அன்வி கண்கள் மூடியிருந்தாள்.
“அன்வி.” பக்கம் சென்று மெல்லொலியில் அழைத்த ஆர்விக் அவளிடம் அசைவில்லை என்றதும் நகர்ந்து அடி வைத்திட…
“ஆர்வி” என்று அவனின் கரத்தை பிடித்திருந்தாள் அன்விதா.
தலையை உயர்த்தாது இமைகள் மட்டும் திறந்து அன்விதா ஆர்விக்கை ஏறிட்டுப் பார்க்க, அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
அன்விதா எதுவும் பேசாது மௌனமாக இருக்க… அவளின் விழிகளின் குழப்பங்கள் அவனைச் சேர்ந்தது.
“டீ குடிக்கலாமா அன்வி?”
“என் ஃப்ரெண்ட்ட போல யாரு மச்சான்” என்றவள் சட்டென்று எழுந்து நின்று, “நம்ம கேண்டின் வேண்டாம்” என்றாள்.
பற்கள் தெரியாது புன்னகைத்த ஆர்விக்,
“டீ குடிக்கலாம் சொன்னா போதும் ஃபேஸ் பிரைட் ஆகிடுமே” என்றவன் தன்னுடைய கரத்தைப் பார்த்தான். இன்னமுமே அவள் அவனது கரத்தை விடாது பற்றியிருந்தாள்.
பல வருடங்களாக அவளின் கரம் கோர்த்திடக் காத்திருக்கிறான், எப்படி விடு என்று சொல்லிட முடியும்?
அவனின் பார்வையையும் மனதையும் அறியாதவள்,
“என்னடா டீ குடிக்க போலாம் சொல்லிட்டு அப்படியே உட்கார்ந்திருக்க” என்றவள், “வா!” என்று இன்னும் அழுத்தமாக அவனது கரத்தைப் பற்றி இழுத்தவளாக வெளியில் வந்தாள்.
“எங்கடா?”
பூபேஷ் கேட்டிட, யாஷ் அவனின் இடையில் இடித்தான்.
பூபேஷ் புரிந்தவனாக,
“இந்த வெயிலில் என்னால டீ குடிக்க முடியாதுடா. நீங்க போயிட்டு வாங்க” என்றான்.
இருவரும் வெளியேற,
“காலேஜ் டைம்ல அன்வி ஆர்வியோட க்ளோஸா இருக்கிறதை பார்த்து, லவ் பண்றாள் நினைச்சேன் மச்சான்” என்ற பூபேஷ், “இப்பவும் எதாவதுன்னா அவளுக்கு அவன் தான்டா தேவைப்படுறான்” என்றான்.
“லவ் பண்ணியிருந்தா நல்லாயிருக்கும்” என்ற யாஷ் சத்தமின்றி முனகியிருக்க…
“என்னடா… கேட்கல” என்றான் பூபேஷ்.
“நீ தான்யா என்ன சொல்றான்னு போய் கேளு” என்று பூபேஷின் கவனத்தை திருப்பிவிட்டான் யாஷ்.
***********************
திண்டுக்கல் மாவட்டம். மலைகளின் அரசியென அழைக்கப்படும்
கொடைக்கானல்.
“அன்வி கால் பண்ணாளா தெய்வானை?” என்று கேட்டுக்கொண்டே, உணவு கூடம் வந்தமர்ந்தார் கதிர்வேலன்.
“ம்ம்… பத்து மணிக்கு பஸ் ஏறிட்டு கால் பண்றேன்னு தம்பிக்கிட்ட சொல்லியிருக்கா” என்ற தெய்வானை, கணவருக்கு உணவினை எடுத்து வைத்தார்.
“சக்தி வந்தாச்சா? நான் கவனிக்கலையே” என்ற கதிர்வேலன், “சாப்பிட்டாச்சா?” எனக் கேட்டார்.
“இப்போ தான் வந்தான். குளிச்சிட்டு வரேன்னு ரூமுக்கு போயிருக்கான்” என்ற தெய்வானை, “நீங்க கொஞ்சம் பேசி பார்க்கக்கூடாதா?” என்றார்.
“சக்தி முடிவுதான் தெய்வா!”
“சக்தி விருப்பத்துக்கு மாறா நாம எதுவுமே செஞ்சது இல்லையேங்க. இதுல நமக்காகன்னு செய்ய சொல்லக்கூடாதா?” என்ற தெய்வானையிடம் அத்தனை மனத்தாங்கல்.
“இதுவரைக்கும் அவங்க விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது பெரிய விஷயம் இல்லை தெய்வா. வாழ்க்கையோட முக்கியமான பகுதியே கல்யாணம் தான். இதுக்கு அப்புறமான மொத்த வாழ்க்கையும் கல்யாணத்தை அடிப்படையா வைத்துதான் நகரும். அதுல அவங்க விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கணும். அவங்க மனசுல சில எதிர்பார்ப்புகள் இருக்குமே” என்றவருக்கும் மகனுக்கு வெளியில் பெண் பார்ப்பதில் விருப்பமில்லை.
ஆனால் அவன்… சக்தி திருக்குமரன். திட்டவட்டமாக தீர்மானமாக சொல்லிவிட்டான். திருமணத்திற்கு பெண் உறவுக்குள் இல்லை என்பதை.
அதில் தெய்வானைக்குத்தான் அதீத வருத்தம்.
“கண்ணுக்கு முத்தா என் அண்ணன் வீட்டுல பொண்ணு இருக்க… வெளிய பார்த்தா நல்லாவா இருக்கும். இதனால குடும்பத்துக்குள்ள விரிசல் வராதா?” என்ற தெய்வானை மகன் வரும் அரவம் தெரிந்ததும் வாயினை கப்பென்று மூடிக்கொண்டார்.
சட்டென்று மனைவி அட்டென்ஷன் மோடில் நின்றிடவும் கதிர்வேலனுக்கு சிரிப்பு.
மகன் அருகிலிருக்கும் இருக்கையில் அமரவும் உணவோடு சேர்த்து சிரிப்பையும் விழுங்கி வைத்தார்.
“என்னம்மா அப்பாகிட்ட எதோ பேசிட்டு இருந்தீங்க?” என்ற சக்தி, “அன்விகிட்ட பேசிட்டே(ன்)ப்பா” என்றான்.
“என்ன சொல்றா?” என்ற கதிர்வேலன்,
“முறையா மாமா வீட்டுல சொல்லிட்டு செய்யணும் சொல்றா” என்றான் சக்தி.
“இது சரி வருமா சக்தி?” கேட்ட தெய்வானை, சக்தி விழி உயர்த்தியதில் அமைதியாகிவிட்டார்.
“உங்களுக்கு நான் வெண்மதியை கட்டிக்கணும் ஆசை இருக்காம்மா?” அன்னையின் முகம் பார்த்தே நேரடியாகக் கேட்டுவிட்டான். அவன் கேட்டதில் அவருக்கு பதிலின்றி நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
“சொல்லுங்கம்மா” என்ற சக்தி, “என் கல்யாணம் அப்படிங்கிறது என்னோட தனிப்பட்ட விருப்பம் கிடையாது. நம்ம எல்லாரோடதும்” என்றான்.
“புரியுது சக்தி” என்ற தெய்வானை, “தென்னரசிக்கு வெண்மதியை உனக்கு கட்டிக்கொடுக்க கொள்ள விருப்பம்” என்றார்.
“ஹோ…”
சக்தியிடம் அவ்வளவுதான் பிரதிபலிப்பு.
உண்டு முடித்து எழுந்து கொண்டான்.
“பிளம் (plum fruit) லோட் ஏத்திக்கிட்டு இருக்குப்பா. நான் தோட்டத்துக்குப் போகணும்” என்று தந்தையிடம் கூறியவன், “விடியல் ஆகிடும். வேலை முடிய… நானே அன்வியை கூட்டிட்டு வந்துடுறேன்” என்றவன் வேகமாக வெளியேறியிருந்தான்.
“நான் சொன்னதுல கோபமா போறானோ?” தெய்வானை கணவரிடம் கேட்க, “சக்தி முகத்துல உனக்கு கோபமெல்லாம் தெரியுதா” என்று மெல்ல புன்னகைத்தார் கதிர்வேலன்.
“அதை சொல்லுங்க… இங்க யாரு அம்மா, யாரு பையன் அப்படின்னே தெரியல. அவன் முகத்தைப் பார்த்து கண்டுபிடிக்க முடியுதா? ஈசியா ஒன்னு பேசிட முடியுதா?” என்ற தெய்வானை, வெளியில் சென்ற சக்தி திடீரென முன் வந்து நிற்கவும் அரண்டு விழித்தார்.
இம்முறை கதிர்வேலன் சிரிப்பினை கட்டுப்படுத்த இயலாது சத்தமாக சிதறவிட்டிருந்தார்.
“என்ன சக்தி… என்னப்பா?” தெய்வான தடுமாற,
“பைக் கீ” என்று மேசையில் வைத்திருந்த சாவியை எடுத்து தூக்கிக் காண்பித்த சக்தி, இரண்டடி முன் வைத்து சென்று நின்று திரும்பியவனாக…
“நீங்க தான் அம்மா… நான் தான் பையன்” எனக்கூறி சென்றிருந்தான்.
“பயங்கரம் தெய்வா” என்று கதிர்வேலன் மேலும் சிரித்திட, “அவன் என்னை மிரட்டிட்டுப் போறான். உங்களுக்கு சிரிப்பா வருதா?” என்று கணவரின் புஜத்திலே கிள்ளி வைத்தார் தெய்வானை.
“இருடி என் பையன் வரட்டும் உன்னை போட்டுக் கொடுக்கிறேன்” என்று கதிர்வேலன் சொல்ல, வெளியேறிய சக்தி ஒரு அழைப்பின் காரணமாக கூடம் கடந்து வெளி வராண்டாவில் பேசிக்கொண்டே நின்றுவிட, உள்ளே தன்னுடைய பெற்றோருக்கு இடையே நடந்த பேச்சில் அதரம் விரித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
31
+1
+1
1
