
காலை கனவு 18
சக்தி நொடிக்கும் குறைவாய் நிதாஞ்சனியை பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக்கொள்ள… அனிதா நிதாஞ்சனியின் மிரட்சியில் நமட்டுச் சிரிப்பை உதிர்த்தார்.
“போச்சு… இப்படி மொத்தமா முடிச்சுவிட்டீங்களேடா!” என்று சக்தி தன்னை பார்க்கின்றானா என கவனித்தபடி, தன்னிலை கண்டு சத்தமின்றி சிரிக்கும் ஆர்விக்கின் இடையில் கை முட்டியால் குத்தி,
“இப்போ நான் என்ன கேட்டேன்னு பேய் முழி முழிக்கிறீங்க?” என்று பக்கம் வந்த யாஷின் காலிலும் நன்கு மிதித்தாள்.
“சேர்த்து வைக்கிறன்னு மொத்தமா சேர விடாமா பண்ணிடுவீங்க போலடா!” என்றாள்.
“பையன் யாருன்னு சொல்லுங்க. போய் மாப்பிள்ளை கேட்டுடுவோம்” என்று யாஷ் மீசையை முறுக்க…
“நீ அமைதியா இருந்தாலே போதும்டா சாமி” என்று நிதாஞ்சனி கையெடுத்துக் கும்பிட,
“அச்சோ நான் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்லை” என்று சிரித்த யாஷின் வாயை கை வைத்து மூடியிருந்தாள்.
“நீ எதாவது பேசின… போட்டுத்தள்ளிடுவேன் பார்த்துக்க” என்று நிதாஞ்சனி ஓசையின்றி மொழிந்தாள்.
ஆர்விக் சிரிப்பினை அடக்கிட முடியாது,
“இதுக்குமேல போச்சுன்னா… சத்தமா சிரிச்சிடுவேன் நிதா” என்றான்.
“நீ சிரிச்சிதான் பாரேன்” என்ற நிதாஞ்சனி,
“அவங்க போற வரை கொஞ்சம் அமைதியா இருடா தம்பி” என்றாள்.
யாஷ் விழிகள் தெறிக்க, “ம்ம்… ம்ம்…” என முனக…
“அச்சோ சாரி யாஷ்” என்று நிதாஞ்சனி கையை எடுத்திட,
“எவங்க போற வரை?” என்றான்.
பட்டென்று யாஷின் தலையிலே கொட்டிய நிதாஞ்சனி,
“உனக்கு மெதுவாவே பேச வராதாடா?” எனக் கேட்டாள்.
“இவங்க இப்படித்தான். அன்வி தூங்கிட்டு இருக்காள். வரட்டும். நீ உட்கார்ந்திரு சக்தி. நான் வர்றேன்” என அனிதா ஆர்விக்கிடம், சக்தியை கவனிக்குமாறு பார்வையால் சொல்லியவாறு சமையலறைக்குச் சென்றார்.
இவர்களை கண்டும் காணாதவனாய் டீபாய் மீதிருந்த புத்தகத்தை எடுத்து புரட்டிக் கொண்டிருந்தான் சக்தி.
“எதுக்கு இங்க வாசல்லே நின்னுட்டு உள்ள போய் உட்கார்ந்து பேசுங்க” என்று நிதாஞ்சனியை உள்ளே தள்ளி நீள்விருக்கையில் அமர வைத்தான்.
“நான் மம்மிக்கு ஹெல்ப் பண்ணப்போறேன்” என்று யாஷ் சமையலறைக்குள் ஓடினான்.
நிதாஞ்சனிக்கு அருகில் ஒற்றை இருக்கையில் சக்தி.
இத்தனை அருகிலெல்லாம் அவள் அவன் முன் இருந்ததே இல்லை.
அவளுக்கு மூச்சடைக்கும் உணர்வு.
“அவனே (யாஷ்) தேவலாம் டா தம்பி” என்று மற்றைய பக்கம் ஆர்விக்கை பார்க்க,
“என்ன நிதா சொல்றீங்க. நீங்க பேசுறதே புரிய மாட்டேங்குது” என வந்த யாஷ்… “இந்தாங்க டீ” என்று அவளிடம் நீட்டினான்.
“உன்னால தான்டா நான் அவங்ககிட்ட மாட்டப்போறேன்!”
“அந்த அவங்க எவங்கன்னு இன்னும் நீங்க சொல்லல” என்று யாஷ் கேட்க, வேகமாக சக்தி அமர்ந்திருந்த இடத்தைப் பார்த்தாள்.
நல்லவேளை அவனில்லை. இருக்கை காலியாக இருந்தது.
‘அதுக்குள்ள எங்க?’ என நிதாஞ்சனி வீட்டை பார்ப்பதைப் போன்று பார்வையை சுழற்றிட, சக்தி ஆர்விக்குடன் அவனது அறை பக்கம் சென்று கொண்டிருந்தான்.
நிதாஞ்சனியிடம் பெருத்த ஆசுவாசம்.
“வீட்டுக்கு கூப்பிட்டு வைச்சு அலற விடுரீங்ககடா” என்ற நிதாஞ்சனி, “அன்வி எங்க? ஆமா அவளுக்கு என்னாச்சு?” எனக் கேட்டாள்.
“விஷயம் தெரியாமலா அவளுக்காக லீவெல்லாம் போட்டுட்டு வந்திருக்கீங்க?” என யாஷ் கேட்க,
“பியூச்சரில் ரொம்பவே நெருக்கமான உறவாகப் போறவங்க வந்து தானே ஆகணும்” என்று அவர்களின் அருகில் வந்தமர்ந்தான் ஆர்விக்.
“சக்தி அண்ணா எங்கடா?”, யாஷ்.
“ரெஃப்ரெஷ் பண்ண போயிருக்காங்க” என்ற ஆர்விக், “அன்வி நைட்டெல்லாம் தூங்கலன்னு அம்மா சொன்னாங்க. இப்போ தூங்கிட்டு இருக்காள். அவளா எழுந்து வரட்டும்” என நிதாஞ்சனியின் கேள்விக்கும் பதில் வழங்கினான்.
“இவ்ளோ அப்செட் ஆக… அப்படி என்ன நடந்துச்சு?”
ஆர்விக் மேலோட்டமாக எல்லாம் சொல்ல…
“கௌதமா? நிஜமாவா?” என்று நம்ப முடியாது கேட்டிருந்தாள் நிதாஞ்சனி.
“எங்களுக்குமே ஷாக்கிங் தான்” என்றான் யாஷ்.
“அவனை சும்மாவா விட்ட நீ?” என்ற நிதாஞ்சனி, சக்தி வரவே கப்பென்று வாயினை மூடிக்கொண்டாள்.
ஆர்விக் பக்கென்று சிரித்திருந்தான்.
“புரிஞ்சிப்போச்சுடா… நீ என்னை மொத்தமா முடிச்சிவிடப் பாக்குற” என்ற நிதாஞ்சனி, சக்தி பக்கம் வருவதற்குள் அனிதா இருக்குமிடம் வேகமாக ஓடியிருந்தாள்.
“முதல் நாள் அம்புட்டு அமைதியா தெரிஞ்சவங்க… இன்னைக்கு பேசுற அத்தனையும் சரியான சேட்டைன்னு சொல்லுது. ஆனா பேசுறது ஒண்ணும் எனக்கு புரியல” என்ற யாஷ், சக்தி ஆர்விக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர,
“நீங்க ரெண்டு பேரும் பேசுங்க” என்று எழுந்துச் சென்றிருந்தான்.
அப்போது தான்யா மற்றும் பூபேஷ் வர,
அவர்களிடம் அன்வியின் நிலைப்பற்றிய பொதுவான பேச்சிற்குப் பின்னர்…
“ஆபீஸ்ல யாருமே இல்லைன்னா கஷ்டம் டா. நாங்க பார்த்துக்கிறோம்” என்றான் பூபேஷ்.
ஆர்விக் சரியென்றிட,
“நான் அன்வியை பார்த்திட்டு கிளம்புறேன்” என்றாள் தான்யா.
“இப்போ தொந்தரவு பண்ண வேணாம் தான்யா. நீங்க வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என அழைத்தார் அனிதா.
“சப்பிட்டுதான் மேம் வந்தோம். புது புராஜெக்ட் தீம் ரெடி பண்ணனும். அன்வியை பார்த்திட்டு போலான்னு வந்தோம்” என்ற தான்யா பூபேஷை கூட்டிக்கொண்டு அலுவலகம் சென்றுவிட்டாள்.
“நீங்க வாங்க சாப்பிடலாம்” என பொதுவாக அழைத்த அனிதா, “வா சக்தி” என்றார்.
“ம்மா…!” என்று தன்னைப்போல் நிதாஞ்சனி அதிர்ந்து கூவியிருக்க…
சக்தியின் பார்வை இம்முறை அழுத்தமாக நிதாஞ்சனியின் மீது படிந்து விலகியது.
அவளுக்கு உயிர் உறையும் கணமாய் அந்த சில நொடிகள்.
“என்னாச்சு நிதா” என்று அனிதா உணவு மேசை நோக்கி நகர, அவரின் பின்னாலே சென்ற நிதாஞ்சனி…
“அவங்களோட உட்கார்ந்தா ஃப்ரீயா எப்படிம்மா சாப்பிடுறது. மனசாட்சி இருக்கா உங்களுக்கு. வேணும்னே பண்றீங்க தானே?” என்றாள்.
“கூட உட்காரவே பயந்தா… அடுத்தடுத்து எப்படி நிதா. இந்த மாதிரி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் அவன் முன்னாடி இயல்பா இருக்கப் பாரு” என்றார்.
“நல்லா சொல்லுங்க. என்னவோ பார்க்கவே அந்த உதறு உதறுது கையெல்லாம்” என்று வந்த ஆர்விக்,
“இப்படியே இருந்தா ரொம்பவே கஷ்டம் நிதா” என்றான்.
“உண்மைக்கும் அவங்க முன்னாடி முடியலடா” என நிதாஞ்சனி சொல்ல…
“நீ பொறுமையா நார்மல் ஆகு. இப்போ நானே உன் லவ்வை திருக்கிட்ட போட்டுக் கொடுத்திட்டு வரேன்” என்ற ஆர்விக், “நீங்க சாப்பிடுங்கம்மா. திரு என்கிட்ட தனியா பேச நினைக்கிறாங்க. பேசிட்டு வர்றோம்” என்று நிதாஞ்சனியை அதிர வைத்த உணர்வு கொஞ்சமுமின்றி சென்றிருந்தான்.
நிதாஞ்சனி அப்படியே மரத்த நிலையில் நின்றிருக்க…
“ஹேய் நிதா என்னாச்சு. வாங்க” என்று உணவு அடங்கிய பாத்திரத்தை எடுத்து வந்த யாஷ் அவளின் தோள் தொட்டு அசைக்கவே சுயம் மீண்டாள்.
“நீங்க எனக்காக பையன் கேளுங்களேன்!”
சொல்லிய நிதாஞ்சனியை ஆழமாகப் பார்த்த அனிதா…
“அப்போ கடைசி வரை அவன்கிட்ட நீ உன் காதலை சொல்லப்போறதில்லை… அப்படிதானே?” என்றார் அனிதா.
“அவங்களுக்கு தெரியாம ஒண்ணும் இல்லையே” என்ற நிதாஞ்சனியின் முகம் சுருங்கி சின்னதாகியிருந்தது.
“ரொம்ப கஷ்டம்” என்றார் அனிதா.
“ஆமாவா?” தன்னால் முடியாதெனும் வருத்தத்தின் சாயல் நிதாவிடம்.
“அதை அப்புறம் பார்ப்போம். இப்போ வா சாப்பிடுவோம். நாம என்ன பேசுறோம்னு கூட கண்டுக்காம எப்படி தனியா சாப்பிடுறான் பாரு” என்று யாஷினை கேலி செய்து, நிதாஞ்சனியின் மனதை திசை திருப்பினார்.
**********************************
சக்திக்கு கேட்க நிறைய இருந்தது. ஆர்விக்குக்கு சொல்லிட அதிகம் இருந்தது.
ஆர்விக்காகவே சொல்லட்டுமென மாடியிலிருந்த கல் மேடையில் அவனுக்கு அருகில் அமைதியாக அமர்ந்திருந்தான் சக்தி.
“நானா சொல்லணும்ல உங்களுக்கு?” என்ற ஆர்விக்,
“நீங்க தெரிஞ்சுக்கணும். அதுக்காக மட்டும் சொல்றேன்” என்றான்.
கௌதம் பேசியதாக ஆர்விக் கூறிய அனைத்தையும் கேட்க கேட்க சக்திக்கு அப்படியொரு கோபம் உள்ளுக்குள் கிளர்ந்தது.
கௌதமை கொன்றுவிடும் வேகம்.
ஆனாலும் கௌதம் இப்படியொரு நிலையில் இருக்க தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துவதும் வீண் என நினைத்தான் சக்தி.
“அவ்ளோதான்” என்ற ஆர்விக், “எனக்கே அவ்ளோ கோபம் வந்துச்சு. உங்களுக்கு நிறையவே இருக்கும். ஆனால் நான் செய்ததே போதும். நீங்க எதாவது செய்தால், அது உங்க பேமிலிக்குள் இன்னும் சிக்கலாகும்” என்றான்.
“ம்ம்…” என மேடையிலிருந்து எழுந்த சக்தி…
“இது மட்டும் காரணமில்லைன்னு நினைக்கிறேன். என்ன மறைக்கிற ஆர்வி?” எனக் கேட்டான்.
“நான் ஏதோ மறைக்கிறேன்னு கெஸ் பண்ணுவீங்க தெரியும். பட் டைரக்டா கேட்கமாட்டீங்க நினைச்சேன்” என்ற ஆர்விக், எழுந்து நின்று சட்டையின் கீழே இழுத்து விட்டவனாக, மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்தான்.
“உன்னை ஏழு வருஷமா தெரியும். பழக்கம் இப்போதான் அப்படின்னாலும், அன்வி பேச்சு வைச்சு நீ ரொம்பவே சாஃப்ட் நேச்சர்… சட்டுன்னு அவ்ளோ ரியாக்ட் ஆகமாட்டன்னு ஓரளவு தெரியும். அப்படிப்பட்ட உனக்கே இவ்ளோ கோபம்… இந்தளவுக்கு இறங்கி செய்ய வைச்சிருக்கு அப்படின்னா, கௌதம் பேச்சு எல்லை மீறி போயிருக்குன்னு புரியுது. எனக்கு என்னன்னு தெரியனுமே! உறவுக்குள்ள அவ்ளோ சீக்கிரமா ஒரு முடிவை எடுத்திட முடியாது. சொந்தம்ன்னு நினைச்சு ஒரு கட்டத்தில் கௌதமை நாங்க சேர்த்துக்கிற சூழல் வந்தா… அவனோட எண்ணம், பேச்சு எல்லாமே தெரிஞ்சிருந்தாதான் அழுத்தமான ஒரு முடிவை எடுக்க முடியும். சொந்தம்ன்னு நான் நினைச்சு எடுக்கிற முடிவு, நான் அவ்ளோ பேசியும் இவங்கலாம் இவ்ளோதான்னு அவனுக்கு தோணிடக் கூடாதே! நீ சொன்னதெல்லாம் வைச்சு, அவன் மைண்ட் எப்பவும் தப்பெதுன்னு யோசிக்காதுன்னு நல்லாவே தெரியுது. அவன் ரியலைஸ் பண்ணனும் நினைக்கமாட்டேன். ஆனா என்னோட அமைதி அவனுக்கு அவன் பக்க நியாயமாகிடக் கூடாது” என்றான் சக்தி.
“ஒத்த வார்த்தையில் பேசுற திருவா இது” என்ற ஆர்விக்,
“ரொம்பவே கோபம் வரும். கண்ட்ரோல் பண்ணிக்கோங்க” என கௌதமின் அன்றையப் பேச்சின் இறுதியை, அன்வியிடம் சொல்லாது விட்டது, கௌதமின் இந்நிலைக்கு காரணமாக இருந்த அவனின் பேச்சினைகக் கூறினான்.
கௌதமின் பேச்சினை… ஒரு நேரத்தில் இரு காதல்கள் எனும் பிதற்றலைக் கேட்டு, பொங்கும் கோபத்தை எவ்வாறு பிரதிபலிப்பதென தெரியாது ஆர்விக் நின்றிருந்த கணம்…
“முதல் மனைவி இருக்கும்போதே இங்க பலபேரு ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறாங்களே! அது மட்டும் எப்படி?” என கௌதம் கேட்க, ஆர்வீக்கின் விழியில் கடுமை குடிகொண்டது. ஒற்றை புருவத்தை உயர்த்தி மேல் பார்வையால் அவனை நோக்கினான்.
‘நீ சொல்வதை சொல்லி முடி’ எனும் தோரணை.
“எனக்கு அன்வியையும் மேரேஜ் பண்ணிக்க தோணுது ஆர்விக். லவ் இல்லாம எப்படித் தோணும்?” என்றவன்,
“ஒழுங்கா ஓடிடு. நான் என்னோட இயல்புக்கு மீறி கோபப்பட்டுட்டு இருக்கேன்” என்ற ஆர்விக் இதயத்தை நீவியவனாக, இதழ் குவித்து ஊதினான்.
“உங்களுக்கு இப்போ நான் அன்வியை விட்டுட்டு தீக்ஷாவை மேரேஜ் பண்ணிக்கிறேங்கிறது தான கோபம்… அது தானே நான் அன்வியை ஏமாதிட்டேன்னு போட்ரே பண்ணுது?” என்ற கௌதம்,
“எனக்கு அன்வி, தீக்ஷா ரெண்டு பேரையும் மேரேஜ் பண்ணிக்க விருப்பம். தீக்ஷா கூட இதுக்கு ஓகே சொல்லுவாள், ஆனால் அன்வி … அதுக்காக மட்டும் தான் இப்போ மனசே இல்லாம அன்வியை விட்டு கொடுக்கிறேன்… வேணுன்னா அன்விக்கிட்ட பேசுங்க. அவளுக்கு ஓகேன்னா, அவளையும் நான் மேரேஜ் பண்ணிக்கிறேன்” என்றான்.
அவ்வளவு தான் கௌதம் சொல்லி முடிக்கும் முன்பு, அவனது கழுத்தை பிடித்து உயரத் தூக்கி, பிடியில் அழுத்தம் கொடுத்து, அவனது விழிகள் மலங்க… தண்ணீரில் தொப்பென்று போட்டிருந்தான்.
அத்தனை ஆத்திரம் ஆர்விக்குக்கு. தான் செய்ததை சரிதானென முட்டு கொடுப்பதற்காக எந்தளவிற்கு யோசித்து பேசுகிறான் எனும் ஆத்திரம்.
தவறு செய்யும் அனைவருக்கும் ஒரு காரணமிருக்கும். அவர்கள் பக்கம் அதெல்லாம் நியாயமானது தான்.
ஆனால் இவ்விடயத்தில் மற்றவரின் வாழ்வு எப்படி இன்னொருவருக்கு பாடமாகும்.
தண்ணியில் விழுந்தும், ஆர்விக் கழுத்தை பிடித்ததால் இரும்பியபடி,
“ஒரே நேரத்தில் ரெண்டு மனைவியோட லைஃப் லீட் பண்றவங்களும் இருக்காங்களே! அதெப்படி. அங்க அந்த லவ் தப்பா பார்க்கப்படுதா என்ன? அப்போ என்னோட ரெண்டு லவ் எப்படி பொய்யாகும். என் காதல் உண்மை காதல் ஆர்வி!” என்றான்.
“உன்னை சாவடிச்சிடுறேன்” என்று ஆர்விக் முன் வைத்த அடியில் எழுந்து திரும்பிப் பார்க்காமல் ஓடியிருந்தான் கௌதம்.
விரல்கள் உள்ளங்கை குவிந்து முறுகிய கரத்தில் ஓடிய நரம்புகள் சக்தியின் கோபத்தின் அளவை பறைசாற்றியது.
“திரு…” என்று சக்தியின் தோளில் கரமிட்ட ஆர்விக்…
“கண்ட்ரோல் யூர்செல்ஃப்” என மெல்லத் தட்டிக் கொடுத்தான்.
“உன்னோட கோபம் போக அவனை ஹாஸ்பிடலில் படுக்க வைச்சிட்ட… இப்போ நான் என்ன பண்ணனும் தெரியலடா” என்ற சக்தி, “எவ்ளோ தைரியமிருந்தா இப்படி கேட்பான்” என பற்களைக் கடித்தான்.
“அவனுக்குத் தெரிஞ்சது அவ்ளோதான்” என்ற ஆர்விக், “நீங்க ஹாஸ்பிடல் போகலையா?” என்றான்.
“இல்லை, தோணலை” என்ற சக்தி, “சிட்டி உள்ள என்டர் ஆனதும் அத்தை, மாமாவை மட்டும் வந்த கார்லே அனுப்பி வைச்சிட்டு நான் கேப் புக் பண்ணிதான் இங்க வந்தேன்” என்றான்.
“குட்… அவனை பார்த்தாலும் டென்ஷன் தான்” என்ற ஆர்விக், “எழுந்து நடக்கவே ஏழெட்டு மாசம் ஆகிடும்” என்றான்.
சக்தி பார்த்தப் பார்வையில் மென்னகை சிந்திய ஆர்விக்,
“அவனுக்கு இதெல்லாம் ரொம்பவே கம்மி” என்றான்.
“உன் பேர் எதுவும் வெளிய வந்துடாதே?”
“வராது. இவன்ட் பவுன்சர்ஸ் வைச்சு தான் நாலு தட்டு தட்ட சொன்னேன். ஆனால் நம்மாளுங்க நல்லா காட்டு காட்டுன்னு காட்டிடாங்க” என்ற ஆர்விக், “உங்களுக்கு இதுல ஒன்னும் வருத்தமில்லையே?” எனக் கேட்டான்.
“என் கையால நாலு அறை விட முடியலையேன்னு தான் இருக்கு.”
“இப்போ நீங்க ஏன் இவ்ளோ ஸ்ட்ரெஸ் பண்றீங்க?” என்ற ஆர்விக்,
“அன்வியை இதிலிருந்து வெளியக்கொண்டுவர என்ன பண்ணனுமோ அதான் இப்போ நாம பண்ணனும்” என்றதோடு… “நாமளே திரும்பத்திரும்ப இதை அவன்கிட்ட பேசி, திட்டின்னு அவனை ஓவர் ஹைப் பண்ண வேண்டாம். அவன் அவ்வளவுக்கு தகுதியானவனே கிடையாது” என்றான்.
“புரியுது” என்ற சக்தி பின்னந்தலையில் இரு கைகளையும் கோர்த்து வான் பார்த்தவனாக அழுத்தமாக கண்கள் மூடி திறந்தான்.
“திரு… ஆர் யூ ஓகே?”
“யா… பட் நாட் ஃபுல்லி” என்ற சக்தி, “நான் கொஞ்ச நேரம் தனியா இருந்துட்டு வர்றேன்” என்றான்.
“டேக் யோர் டைம்” என்ற ஆர்விக் கீழே சென்றுவிட்டான்.
மீண்டும் மேடையில் அமர்ந்த சக்தி… தன்னுடைய கோபம் முழுதாய் மட்டுப்பட்ட பிறகு தான் கீழே வந்தான்.
*****************************
ஆர்விக் கீழ் வர அன்விதா எழுந்திருந்தாள்.
அனிதா மிரட்டி அவளை உண்ண வைத்துக் கொண்டிருந்தார்.
“நிறைய சாப்பிட்டாலே பாதி கவலை போயிடுமாம் அன்வி” என்ற ஆர்விக்,
“ஊருக்கு போறியா?” எனக் கேட்டான்.
“ம்ம்… போகணும் ஆர்வி. இதை இப்படியே மறைக்க முடியாதே! வீட்ல சொல்லி என்ன நடக்குதுன்னு ஃபேஸ் பண்ணனுமே! அப்போ தான் முழுசா வெளிவர முடியும்” என்றாள் அன்விதா.
“குட்… மூவ் பண்ண நினைக்கிறதே பாசிட்டிவ் தான்” என்றவன், “திரு வந்திருக்காங்க. மேல இருக்காங்க” என்றான்.
“அண்ணா வந்தாச்சா? யாருமே சொல்லல” என்ற அன்விதா, “எல்லாமே சொல்லியாச்சா?” எனக் கேட்டாள்.
“சொல்லியாகனுமே” என்ற ஆர்விக், “நீ சாப்பிடு, வருவாங்க!” என்றான்.
“அண்ணா ஃபீல் பண்ணாங்களா?”
“பண்ணாம!”
முனுக்கென அவளின் கண்ணில் கண்ணீர் இறங்கியது.
“ச்சூ…” என்று அவளை அதட்டிய அனிதா, “இதெல்லாம் இனி பேசவும் வேண்டாம்” என்றார்.
நிதாஞ்சனிக்கும், யாஷுக்கும் அவ்விடத்தில் என்ன பேச வேண்டுமென்று தெரியவில்லை.
அன்வியின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்ட நிதாஞ்சனி,
“லவ் இவ்ளோ வலி கொடுக்குமா?” எனக் கேட்டாள்.
“உனக்கு தெரியாததா?” என்று ஆர்விக் கேட்க…
நிதாஞ்சனி வேகமாக, ஆர்விக்கின் பின்னால் வந்து சக்தி இங்கு எங்கேனும் அமர்ந்திருக்கின்றானா என பார்வையை ஓட்டி,
“நான் இங்க இல்லவே இல்லை” என்றாள்.
“டேய் வாடா உன் ரூம் போலாம்” என யாஷை இழுத்துக்கொண்டு மேலேறினாள்.
அன்விதா உணவையே வெறித்தபடி இருக்க, அனிதாவுக்கு கண் காட்டிவிட்டு, ஆர்விக்கும் நிதாஞ்சனி யாஷுடன் சென்றான்.
“ஹேய்… நில்லுங்க நானும் வர்றேன்” என்ற ஆர்விக், “எத்தனை நாளுக்கு ஒளிய முடியும் நிதா” என்றான்.
நிதாஞ்சனி அமைதியாக படியேறிட,
“சொன்னாதான பதிலென்னன்னு தெரியும்” என்றான்.
“தெரிஞ்ச பதிலுக்கு ஏன் குவெஸ்டீன் வேஸ்ட் பண்ணனும்” என்ற நிதாஞ்சனியிடம்…
“ஆர்விக்கெல்லாம் உங்க லவ் தெரிஞ்சிருக்கு. என்கிட்ட சொல்லமாட்டீங்களா?” என்றான் யாஷ்.
“என் லவ் தான… சொல்லிடலாம். இன்னைக்கு ஒருநாள் கொஞ்சம் பொறுமையா இரு” என்றாள்.
“அதெல்லாம் முடியாது.”
“ஏன்டா இப்படி கோர்த்து விடுறதுல குறியா இருக்கீங்க? உங்களைலாம் வச்சிக்கிட்டு லவ் பண்ற என்னை சொல்லணும்” என்று தனக்கு பின்னால் படியேறிடும் ஆர்விக் மற்றும் யாஷை பார்த்தபடி கூறிய நிதாஞ்சனி நெற்றியில் தட்டிக்கொண்டவளாக முன்னால் திரும்பிட, படியிறங்கி வந்து கொண்டிருந்த சக்தியின் இதயத்தில் தலை முட்டி நின்றாள்.
“சடனா இங்க என்ன பில்லரு?” என்று விழிகளை உயர்த்திப் பார்த்த நிதாஞ்சனி,
“அய்யோ… நானில்லை” என பின்னால் திரும்பி இறங்க முயல,
“நாம மேல போகணும்” என அவளை தடுத்து தோள்களைப் பற்றியவனாக திருப்பினான் ஆர்விக்.
சக்தி நிதாஞ்சனியையே பார்த்திருக்க…
“தம்பி அம் யூர் பெஸ்ட் சிஸ்டருடா! பயந்து வருது. இப்படியே இறங்கிடுவோம் டா!” என்று மெல்ல ஆர்விக்கின் மீது சாய்ந்தவளாக முணுமுணுத்த போதும், சக்திக்கு கேட்கத்தான் செய்தது.
சக்தி தொண்டையை செருமி, ஒதுங்கி நின்று,
“போங்க” என்க,
“வந்திடு ஆர்வி” என சக்தியின் மீது உரசிடாது பக்கவாட்டில் ஆர்விக்குடன் நிதாஞ்சனி நகர,
“முதல்லே நோட் பண்ணேன்… நீங்க ரெண்டு பேரும் ஒரே ஊர் தானே! பார்த்து தெரிஞ்சிருக்குமே! அப்புறம் ஏன் சக்தி ப்ரோவைப் பார்த்து இவ்வளவுக்கு பயப்படுறீங்க?” என்று யாஷ் மற்ற மூவருக்குமே கேட்டிடும் அளவுக்கு சத்தமாகக் கேட்டிருந்தான்.
“டேய் ஆர்வி… இவன் எனக்கு மொத்தமா அட்டாக் வர வைச்சிடுவான் போலடா” என்று நிதாஞ்சனி ஆர்விக்கின் தோள் மீதே மயங்கி கண்களை மூடியிருந்தாள்.
“நிதா” என ஆர்விக் அவளின் கன்னம் தட்டிட…
“அவங்க போனதும் சொல்லுடா” என உதடசைக்காது சொல்லியிருந்தாள்.
ஆர்விக் சக்தியை பார்க்க…
சக்தி அங்கிருந்து இறங்கினான்.
“போயாச்சு!” என்று ஆர்விக் கூற,
“அப்பாடா” என கண்கள் திறந்து ஆர்விக்கின் தோள் மீதிருந்து விலகி நின்றாள்.
பார்த்திருந்த யாஷ்…
“அவ்வளவும் நடிப்பா கோபால்?” எனக் கேட்க,
கீழிறங்கிக் கொண்டிருந்த சக்தி, சிறு வளைவில் நின்று திரும்பிப் பார்த்திட…
“அம்மாடி” என நெஞ்சில் கை வைத்து, “ஒத்த பார்வையிலே அலற வைச்சிடுறாங்கடா தம்பி” என அதிர்ந்து நின்றாள் நிதாஞ்சனி.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
42
+1
2
+1
3
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


நிதா😁😁😁😁😁
நன்றி அக்கா 😍😍