Loading

காலை கனவு 17

அன்விதாவிடம் கிளம்பலாமென சொல்லிய ஆர்விக், அவள் எழுந்திட கரம் நீட்ட… சக்தியிடமிருந்து அழைப்பு.

“வன் செக்” என அவள் தன்னுடைய கரம் பிடித்து எழுந்ததும் தள்ளிச்சென்றான்.

“சொல்லுங்க திரு. சென்னை வந்திட்டு இருக்கீங்களா? பஸ் ஆர் கார்? பிக்கப் பண்ண நான் வரணுமா?”

சக்தியை பேசவே விடாது ஆர்விக் கேள்விகளை அடுக்கி முடித்திட,

“டேய்… என்னடா பண்ணி வைச்சிருக்க நீ?” எனக் கேட்டான் சக்தி.

“என்ன பண்ணாங்களாம்? ஒண்ணுமில்லையே!” என உதட்டில் புன்னகையை நெலிய விட்டான்.

“ஆர்வி…”

“ம்ப்ச்… இதுவே கம்மிதான்” என்ற ஆர்விக், “அதுக்குள்ள நியூஸ் அங்க வந்திருச்சா?” என்றான்.

“நீதான் பண்ணது தெரிஞ்சு போலீஸ் கம்ப்ளைன்ட் ஆச்சுன்னா என்ன பண்ணுவ?”

“தெரிஞ்சா தானே?” என்ற ஆர்விக், “அவன் பேசுன பேச்சுக்கு நானே பொளந்திருக்கணும்… ஆபீஸ் பிளேஸ்ல வைச்சு வேண்டான்னு அமைதியா விட்டேன்” என்றான்.

“உனக்கு கோபம் வர அளவுக்கு அப்படியென்ன சொன்னான்?”

“எல்லாம் ஃபோன்லே சொல்ல முடியாது” என்ற ஆர்விக், “எங்க இருக்கீங்க?” என்றான்.

“வர மார்னிங் ஆகிடும். கௌதம் பேரெண்ட் கூட வர்றாங்க” என்ற சக்தி, “அன்வி எங்க? அவள் ஓகேவா?” என வினவினான்.

“ஓகே ஆக வைச்சிட்டேன் நினைக்கிறேன்” என்ற ஆர்விக், “நீங்க வந்து உங்க பங்குக்கு நாலு டயலாக் பேசுங்க… மொத்தமா சரியாகிடுவாள்” என்றான்.

“இது அமைதியான ஆர்வி இல்லையே!”

“ஒரே நாள்ல என் காரக்டரையே மாற வைச்சிட்டான்… எனக்கு இவ்வளவு கோபம் வருன்னு எனக்கே இன்னைக்குத்தான் தெரிஞ்சுது. அவனை எங்கிருந்து திரு புடிச்சீங்க?” என்ற ஆர்வி, “அவன் சொல்றதெல்லாம் கேட்டு எனக்கு தலை சுத்திருச்சு. இன்னும் கொஞ்சம் பேசியிருந்தாலும் மெண்டல் ஹாஸ்பிடல் போயிருக்கணும் நான்” என்றான்.

“ம்ம்…” சக்தியிடம் சட்டென்று மௌனம்.

“விடுங்க பார்த்துக்கலாம்” என்று சக்தியின் உணர்வினை அவதானித்துக் கூறிய ஆர்விக், “ஃபீல் பண்ற அளவுக்கு ஒண்ணுமில்லை” என்றான்.

“புரியுது! ஆனால் அன்வி?”

“அவளுக்கென்ன… நல்லாயிருக்காள்! அவளை நினைச்சு வருத்தப்பட வேணாம்” என்ற ஆர்விக், “நீங்க டிரைவ் பண்றீங்களா?” என்றான்.

“இல்லை. டிரைவர் இருக்காங்க” என்ற சக்தி, “தேங்க்ஸ் ஆர்வி” என்றான்.

“அடடா! எதுக்காம்?”

“உண்மையிலே அன்வியை எப்படி பார்க்கப்போறேன்னு இருந்துச்சு. எனக்கு இதுதான் காரணம் அப்படின்னு தெரிஞ்சதும்… கோபம் வரல… பயங்கர ஷாக்கிங். அதை எப்படி எடுத்துக்கிறதுன்னு கூட தெரியல” என்ற சக்தி, “உண்மை தெரிஞ்ச அன்வி எப்படியெல்லாம் ஃபீல் பண்ணுவாளோன்னு அவளை நினைச்சுதான் வேதனையா இருந்துச்சு” என்றான்.

உண்மையில் சக்தியின் நிலை தான் நிதர்சனம். தவறு செய்பவர்கள் மீது கோபம் கொண்டு தண்டித்தால் மட்டும் நடந்தது இல்லையென்று ஆகிவிடுமா என்ன?

அந்த தவறால் பாதிக்கப்பட்டது அவனது தங்கையென்ற நிலையில், கோபம் கொள்வதைக் காட்டிலும், அவளுடன் துணை நிற்க நினைப்பதே இயல்பாகும்.

ஆர்விக் அழைப்பைத் துண்டிக்கும் முன்பு தெரிந்துக்கொண்ட விடயத்தில் அத்தனை அதிர்வு சக்தியிடம்.

கௌதம் மறையாகக் கூறிய விடயத்தின் பொருளை சக்தியால் ஏற்கவே முடியவில்லை.

நேரிலிருந்திருந்தால் கௌதமின் மீது கோபம் எழுந்து ஏதும் செய்திருப்பானோ என்னவோ? ஆனால் இத்தனை தூரத்தில், அக்கணம் அவனின் உள்ளம் ஒரு சகோதரனாக தங்கையை நினைத்துதான் அதிகம் வருந்தியது.

அவளுடன் தானிருக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவன், அவளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதலாக பக்கமிருக்க நினைத்து சென்னை வர ஆயத்தமாகினான்.

“அப்பா சென்னை வர போயிட்டு வர்றேன்” என்று கிளம்பி வந்த சக்தி கதிர்வேலனிடம் சொல்லிக் கொண்டிருக்க…

அவனுக்கு வெண்மதி அழைத்திருந்தாள்.

அவள் மூலம் விஷயத்தை அறிந்த சக்திக்கு, ஆர்விக் தான் செய்திருப்பான் என்பதில் அத்தனை திண்ணம்.

“யார் சொன்னாங்க?”

“இப்போ தான் கௌதம் ஃபோனிலிருந்து கால் வந்துச்சு. அம்மாவும், அப்பாவும் சென்னைப் போகணும் கிளம்புறாங்க” என வெண்மதி சொல்ல,

“நானும் அங்கதான் கிளம்புறேன். நீ அவங்களைக் கூட்டிட்டு இங்க வா! நானே கூட்டிட்டுப் போறேன். நாங்க வர வரை நீ இங்கவே இரு” என்றான் சக்தி.

“ஓகே மாமா” என்ற வெண்மதி, அடுத்த பத்தாவது நிமிடம் சக்தியின் வீட்டிலிருந்தாள்.

“யாரோ வேணுன்னு பண்ணியிருப்பாங்களா சக்தி?” என்று தென்னரசி கண்ணீரோடு கேட்க,

“தெரியலையே அத்தை. அங்க போனால் தெரியும்” என்றான்.

“அன்வியை பார்க்கப் போயிருக்கான். இப்படி ஆகிப்போச்சே” என்று தென்னரசி சொல்ல, சக்தி விறைத்து நின்றான்.

“அவனுக்கு இங்க எதிரின்னு யாரு இருப்பாங்க” என்று ரகுபதி யோசிக்க…

“கௌதமுக்கு அவனோட கம்பெனி ஓனர் பொண்ணு கொடுக்க கேட்கிறதா சொன்னீங்களே! அது உண்மையா?” எனக் கேட்டான் சக்தி.

கௌதம் காதலிப்பதாக சொல்வது அந்தப் பெண்ணாக இருக்குமோ! பணத்திற்காக மனம் மாறிவிட்டானோ? எனும் எண்ணத்தில் தான் சக்தி நினைத்தான். அவனுக்குத்தான் கௌதம் ஒரே நேரத்தில் இரண்டு காதலென்று பிதற்றியது தெரிந்திருக்கவில்லையே! இன்னொரு பெண்ணை விரும்புவதாலே தற்போது அன்வியை வேண்டாமென்கிறான் என நினைத்தான். அதனாலே அக்கேள்வியைக் கேட்டான்.

“அது வந்து…” என தென்னரசி இழுக்க…

“இந்த நேரத்தில் இதெதுக்கு சக்தி” என்ற கதிர்வேலன், “அவங்களே கௌதமுக்கு என்னாச்சோன்னு பதறி வந்திருக்காங்க. நீ கூட்டிட்டு கிளம்புப்பா” என்றார். தென்னரசி அழுவதை பார்த்த கதிர்வேலனுக்கு, அவர்களுக்கு முன்னதாகவே சக்தி சென்னை செல்லப் போவதாக கிளம்பியது எதற்கென காரணம் கேட்க மறந்திருந்தார்.

“அதான் சக்தி கூட வரானே! கௌதமுக்கு ஒன்னும் ஆகியிருக்காது தென்னரசி. அழாம போ” என்றார் தெய்வானை.

“பார்த்துப் போயிட்டு வா சக்தி” என்று கதிர்வேலன் சொல்ல…

அடுத்த நிமிடம் வண்டியில் புறப்பட்டிருந்தான். உடன் தென்னரசி, ரகுபதி.

இரவு வெகு தூரம் வண்டி ஓட்ட முடியாது என்பதற்காகவே ஓட்டுனர் ஏற்பாடு செய்திருந்தான்.

தென்னரசியும், ரகுபதியும் இருக்கவே சக்தியால் ஆர்விக்கு அழைத்து பேசிட முடியவில்லை. ஆதலால் புலனம் தகவல் அனுப்பினான்.

“கௌதம் என்னதான் சொல்றான்? இன்னொரு பொண்ணை லவ் பண்ணறானாமா?”

அப்போதுதான் ஆர்விக் யாஷிடம் அனைத்தும் சொல்லி முடித்து, அன்விதாவை பார்க்க தான்யாவின் வீட்டுக்கு இந்நேரத்தில் எப்படி செல்வதென தயங்கி, வீட்டிற்கே செல்லலாமென காரிலேறி அமர்ந்திருந்தான்.

“காத்துவாக்குல ரெண்டு காதலாம்!”

ஆர்விக் பதில் அனுப்பி வைத்திட,

“வாட்?” என்றான் சக்தி.

“அந்த படம் பார்த்தது இல்லையா?” ஆர்விக் கேட்க,

“இல்லை” என பதில் அனுப்பினான் சக்தி.

“அதான் உங்களுக்குப் புரியல” என்ற ஆர்விக், “அவனுக்கு விஜேஎஸ்’ன்னு நினைப்பு” என்றான்.

“நிஜத்துக்கும் புரியல ஆர்வி” என்று அனுப்பிய சக்தி, “அங்க நீ என்ன பண்ணி வைச்சிருக்க?” என்று தட்டச்சு செய்து அனுப்பிடும் முன்பு,

“நேர்ல வாங்க… பேசிக்கலாம்!” என்று அனுப்பி வைத்த ஆர்விக், வண்டி ஓட்ட வேண்டுமென இணையத் தொடர்பிலிருந்து வெளியேறியிருந்தான்.

ஆர்விக்கே தன்னுடைய இயல்பு மீறி இத்தனை பெரும் காரியத்தை செய்திருக்க, கௌதம் என்னவெல்லாம் பேசியிருப்பான் என நினைத்த சக்திக்கு உள்ளம் கசந்தது.

அன்விதாவுக்காக நண்பனாக ஆர்விக் எதுவும் செய்வானென்று சக்தி அறிவான். ஆனால் மென்மையான அவனிடத்தில் இதனை எதிர்பார்க்கவில்லை.

ஆர்விக் சொல்லாது தவிர்ப்பதிலேயே கௌதமின் மீதான கோபம் சக்திக்கு அதிகரித்தது. இருப்பினும் அவனது பெற்றோரை அழைத்துச்செல்ல ஒரே காரணம், தெய்வானையின் அண்ணன் ரகுபதி என்பதால் மட்டுமே!

அனைத்தும் முழுதாக அறிந்திடும் போது… இதே உறவுகள் எனும் கண்ணோட்டத்தில் பார்த்திடுவானா சக்தி.

இரவு வெகுதாமதமாக, தென்னரசியும், ரகுபதியும் தூங்கிட, ஓட்டுனர் சில நிமிட ஓய்விற்காக வண்டியை நிறுத்த, சக்தி ஆர்விக்கு அழைத்திட்டான்.

உண்மையில் ஆர்விக் இவ்வளவு சேட்டை என்று இத்தனை வருடப் பேச்சில் சக்திக்கு தெரிந்ததே இல்லை.

இன்று ஒரு நாளில் தன்னுடைய அனைத்து பரிமாணங்களையும் ஆர்விக் காட்டியிருந்தான்.

சக்தியின் பேச்சிலே அன்விதாவை நினைத்து அவன் எவ்வளவு கலங்குகிறான் என்பதை அறிந்திட்ட ஆர்விக்,

“எதுவும் நினைக்காம வாங்க! பார்த்துக்கலாம்! சமாளிச்சிடலாம்!” என்றான்.

“ஹ்ம்ம்…”

“அன்வியை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். நோ சொல்லமாட்டிங்களே?” என்ற ஆர்விக், “தனியா இருக்க வேண்டான்னு தான்யா வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிருந்தாள். ஆனால் அன்விக்கு அங்க இருக்க முடியல” என்று நிறுத்தினான்.

“மார்னிங் வீட்டுக்கே வர்றேன்” என்று தன்னுடைய வரவு வீட்டிற்குத்தானென்று கூறி, அன்விதா ஆர்விக்குடன் அங்கு செல்ல ஒப்புதல் அளித்திருந்தான் சக்தி.

அழைப்பை வைத்திட்டு திரும்பிட, கைகளைக் கட்டிக்கொண்டு வெகு தூரத்தில் நீரில் மிதந்தாடும் வெண்ணிலவை உணர்வற்றுப் பார்த்து நின்றாள் அன்விதா.

“போலாமா அன்வி?” ஆர்விக் அருகில் வர, மூச்சினை உள்ளிழுத்து கலங்கியிருந்த கண்களை சரி செய்தவள்,

“இனி பாக்குற ஒவ்வொரு விஷயமும் நான் ஏமாந்ததை சொல்லும்ல ஆர்வி?” என்றாள்.

“இதுக்கும் பழகணும். அவ்ளோதான்!” என்ற ஆர்விக் அவளுக்கு முன் கைக்காட்டியவனாக, இணைந்து நடந்தான்.

அன்விதாவுக்கு வேண்டுமாக இருந்தது, கரம் பிடிக்கும் ஆறுதலும், தோள் சாய்ந்திடும் அமைதியும்.

தானாக ஆர்விக்கின் விரல்களோடு தனது விரல்களைக் கோர்த்துக் கொண்டாள்.

“தனியா இருக்கவே பயமா இருக்கு ஆர்வி… நினைவுகள் அப்படின்னு மறக்கவே விடாதுப் போல” என்றாள்.

“உனக்கு அவனோட உண்மை தெரிஞ்சு நாலு நாள் தான் ஆகுது அன்வி” என்ற ஆர்விக், “இங்க இது இப்படித்தான்னு ஏற்க பழகிட்டா எல்லாமே ஈசி ஆகிடும்” என்றான்.

“ஆனால் ஏற்கிறது அவ்ளோ ஈசியில்லை…”

“ஆஹான்… அவ்வளவுக்கு கஷ்டமும் இல்லை” என்றவன், “நினைவுகள்… நாம மனசோட சேவ் பண்ற விஷயம். நம்ம மனசுக்குள்ள நிறுத்தி வைக்கிற்தாலதான் அது நினைவு. இதை நீ சேவ் பண்ணனுமா பின் (bin) பண்ணனுமா டிசைட் பண்ணு” என்றான்.

அதற்கு பின் அவளாகத்தான் இதிலிருந்து வர வேண்டுமென ஆர்விக் எதுவும் பேசவில்லை.

‘தெரிஞ்சிடுச்சே…

வெளிய வந்திடு.

கடந்திடு.

நாட்கள் சென்றால் மறந்திடும்.

இந்த வாழ்க்கை இப்படித்தான்.

இங்க இது அவ்வளவுதான்.’

இப்படியான ஆறுதல் யாவும் அறிவுரையாக வழங்கிட அத்தனை சாதாரணமாக இருந்திடும். ஆனால் வலியோடு உள்ளுக்குள் கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்நேர அமைதிக்கான வார்த்தைகள் மட்டுமே இவை. சிறு உத்வேகத்திற்கானவையே!

ஒரு விஷயத்திலிருந்து நீயாக மீண்டு வரும்போது கிடைக்கும் பெரும் நம்பிக்கையும், திடமும் பிறர் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளால் கொடுத்திட முடியாது.

எத்தகைய பெரும் இழப்பாக இருந்தாலும்… நீயாக வெளிவரும் தருணம், மீண்டும் இப்படியொன்று நமக்கு வேண்டுமா வேண்டாமா எனும் தெளிவு மனதில் பதிந்திடும்.

அதற்காகவே தன்னுடைய வார்த்தைகளை ஆர்விக் நிறுத்திக்கொண்டான்.

உடனிருக்கின்றேன் எனும் இருப்பு கொடுத்திடும் ஆறுதலையும், அரவணைப்பையும் பக்கம் பக்கமாக பேசிடும் வசனங்கள் கொடுத்துவிடுவதில்லை.

*******************

அருவியின் சாரலில் குளிர் காற்று தேகம் தீண்ட, அதன் உச்சியின் விளிம்பில் நின்றிருந்தான்.

அங்கிருந்து கொட்டும் நீரையும், தரை தொட்டு சுழித்து ஓடும் நதியையும் பார்ப்பதற்கு மனதிற்கு அத்தனை இதமாக இருந்தது.

பறவையின் சிறகாய் இரு கரங்களையும் நீண்டு விரித்து, வான் நோக்கி முகம் உயர்த்தி…

மனதின் சந்தோஷ ஆர்ப்பரிப்பில்,

ஓவென்று கத்த முனைய, இடியென கொட்டும் அருவியின் பேரிரைச்சல் சத்தத்திற்கும் நடுவில்,

“ஆர்வி” என்ற மெல்லிய ஒலி சில்லென்று செவி நிறைக்க, திரும்பியவனின் கண்களுக்கு எதிரே இருப்பவரின் முகம் பளிச்சிடுவதற்கு முன்னர்…

“வில் யூ மேரி மீ?” என்று கேட்டதில்…

“அன்வி” என தூக்கத்திலிருந்து பதறி எழுந்திருந்தான் ஆர்விக்.

மெல்லிய விடியல் வெண்மையில் இருக்கும் இடமும் தனது படுக்கையும் கண்கள் காட்சிப்படுத்தியது கனவென்று உணர்த்திட, அவனிடத்தில் மகிழ்வுக்கு பதிலாக பெருத்த ஆசுவாசம்.

எப்போதும் காதல் சொல்வதைப் போன்றுதான் கனவு வரும்… யாஷின் பேச்சுக்குப் பின்னாலோ அல்லது கிடைக்காத ஒன்றின் மீது எதற்கு இத்தனை ஆழமென்ற காரணத்தாலோ மெல்ல விலக்க நினைத்து, இரவில் காதலின் தாக்கத்தை ஒதுக்கி வைத்து, மற்றொன்றில் கவனத்தைப் பதித்து உறக்கம் கொள்வதை பின்பற்றத் துவங்கியதாலோ பல நாட்களாக வராதிருந்த கனவு இன்று காதலின் உச்சமாய் திருமணம் என்ற புள்ளியைத் தொட்டு வர பதறியிருந்தான்.

முன்பைவிட இப்பொழுது தான் ஆர்விக்கிடம் காதலை சொல்ல முடியாத நிலை அதிகம் கொண்டுள்ளது.

சொல்ல தடையான ஒன்றும் இல்லாதிருக்க… ஏனோ இந்த சூழலை தனக்கு சாதகமாகவே தன்னுடைய காதலுக்கு வழியாகவோ ஆர்விக்கால் பார்க்க முடியவில்லை.

ரணம் கொண்டு வதைபடுபவள் அவனது உயிராயிற்றே! எப்படி சுயநலமாக எண்ணிடுவான்.

“ஆர்வி இது சரியில்லை. மொத்தமா உன் காதலை உள்ளுக்குள்ள வைச்சு நல்லா பூட்டிக்கோ” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், தூக்கம் முழுதாய் சென்றிருக்க அறையை விட்டு வெளியில் வந்தான்.

அலைபேசியில் சக்தியிடமிருந்து ஏதும் அழைப்பு, தகவல் வந்திருக்கிறதா என பார்த்தவன், அனிதா சமையலறையில் இருக்கவும்…

“அனி டீ” என கூடத்து இருக்கையில் தளர்ந்து அமர்ந்தான்.

“என்னடா சீக்கிரம் எழுந்துட்ட” என்று வந்த அனிதா அவனின் கையில் குவளையை கொடுத்திட்டு அருகில் அமர்ந்தார்.

“அப்புறம் குடிச்சிக்கலாம்” என தேநீரை முன்னிருந்த டீபாயில் வைத்தவன், அனிதாவின் மடியில் தலை வைத்து கண்கள் மூடிக்கொண்டான்.

“டீ ஆறிப்போகும் ஆர்வி” என்று அவனின் சிகை கோதிய அனிதா,

“தூக்கம் வருதுன்னா இன்னும் கொஞ்சநேரம் தூங்கியிருக்கலாமே!” என்றார்.

“தூக்கம் வரல… கனவு தான் வந்துச்சு” என்றவன், “திஸ் இஸ் நாட் குட் அனி” என்று அவரின் மடியிலே முகம் புதைத்து உடலை குறுக்கினான்.

“ம்ம்… இதை உனக்கொரு வாய்ப்பா மட்டும் பார்த்திடாத ஆர்வி” என்று அனிதா சொல்லிட,

வேகமாக எழுந்தமர்ந்தவன்,

“உங்களுக்கு அப்படித் தோணுதா?” என்றான். முறைத்துக்கொண்டு.

“நீ அப்படி நினைக்கமாட்டத் தெரியும். ஆனால் உன் நேசம்” என்ற அனிதா, “உனக்கே எல்லாம் தெரியும்” என்றார்.

“அஃப்கோர்ஸ் அனி… இப்போ எனக்கு அன்வி இதிலிருந்து மீண்டு வந்துட்டா போதுன்னு இருக்கு. வேற தாட் எதுவுமில்லை” என தேநீரை எடுத்து சுவைத்தவன், “என்னோட லவ் ஆப்ஷன் இல்லைம்மா!” என்றான். வலியை மென்று வெளிவந்தது அவனது குரல்.

“ஆர்வி…!”

“எஸ் அனி… இப்போ அவளுக்கு என்னோட லவ் சொன்னாலும், அது அவளுக்கு சூஸ் பண்ற ஒன்னாதான் தெரியும். இனி எப்பவும் என் லவ் சொல்ல எனக்கொரு வாய்ப்பேயில்லை” என்றான்.

மகனின் வேதனையை தாய் அறியாததா?

“நேத்து அன்வி இதிலிருந்து வெளியவரணுன்னு நிறைய பேசியிருப்பல ஆர்வி?” என்றார்.

“ம்ம்…”

“அவளுக்காக நீ பேசினது எல்லாம் உனக்கும் பொருந்தும்ல?”

“ம்மா…”

ஆர்விக்கின் நெற்றி முடி கலைத்தவர்,

“நீயும் வெளியவர முயற்சி பண்ணு. நானும் சாதாரண அம்மா தான்” என்றார்.

என்றுமே உன் நிம்மதியை ஒதுக்கி வைத்து ஒன்றை இழக்க நினைக்காதே என வலியுறுத்தும் அனிதா இன்று இவ்வாறு சொல்வது ஏனென்று அவனுக்கு புரியாமலில்லை.

அவருக்கும் தன்னிடத்தில் அன்னையாக எதிர்பார்ப்புகள் இருக்குமே!

“வில் ட்ரை ம்மா” என்றான்.

மகனின் முகம் வாடுவதை தாங்க முடியாதவர் பேச்சினை மாற்றினார்.

“நைட்டெல்லாம் அன்வி தூங்கவே இல்லைடா! எவ்ளோ ஸ்ட்ராங் பெர்சனாயிருந்தாலும் உடனே கடந்து போறது கஷ்டம் தானே! கொஞ்சம் முன்னதான் வற்புறுத்தி கண்ணை மூடி படு. தூக்கம் வரும் சொல்லி, அவள் தூங்கினதும் வெளிய வந்தேன்” என்றவர், “அவளை சுத்தி அவளுக்கு வேண்டியவங்க எல்லாரும் இருந்தாலே சீக்கிரம் நார்மல் ஆகிடுவா ஆர்வி” என்றார்.

“திரு இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவார்மா. தான்யா, பூபேஷும் கூட வருவாங்க. நிதாவையும் வர சொல்லியிருக்கேன். பார்ப்போம்” என ஆர்விக் எழுந்திட வீட்டின் அழைப்பு மணி அடித்தது.

“நம்ம பக்கிஸா இல்லை திருவான்னு தெரியல” என ஆர்விக் கதவினை திறக்க,

வாயிலில் சக்தி நின்றிருக்க, அவனுக்கு பின்னால் வீட்டின் மதில் கேட்டினை திறந்து உள் நுழைந்தாள் நிதாஞ்சனி.

ஆர்விக்கின் பார்வை தன்னை கடந்து பின்னால் செல்லவும் யாரென சக்தி திரும்புவதற்கு முன்பே, அவனின் பின் உருவம் வைத்து கண்டுகொண்ட நிதாஞ்சனி…

‘ஆத்தி… இவங்க வர்றாங்கன்னு இந்த ஆர்வி சொல்லவே இல்லையே’ என உள்ளுக்குள் அரண்டவளாக கேட்டினை மூடுவதாக திரும்பி சக்திக்கு முகம் காட்டாது திரும்பிக்கொண்டாள்.

ஆர்விக் பொங்கி வந்த சிரிப்பை அதரம் மறைத்தான்.

“உள்ள வாங்க திரு” என்று சக்தி நுழைய விலகி வழிவிட்ட ஆர்விக், சக்தி உள்ளே சென்றதும், “வா சக்தி” என்று அனிதா அவனை வரவேற்று பேசிட, நிதாஞ்சனியிடம் வந்தான்.

“செம டைம்மிங்” என்று சிரித்த ஆர்விக்,

“நீ திரு முகத்தை பார்க்காமலே அவருன்னு ஃபைண்ட் பண்ண மாதிரி அவரும் உன்னை ஃபைண்ட் பண்ணியிருப்பார்ல?” எனக் கேட்டான்.

“சிரிக்காதடா” என்ற நிதாஞ்சனி, “அவங்களுக்கு என் முகத்தை பார்த்தாலே நான்தானான்னு தெரியாது. இதுல என் முதுகை பார்த்தே கண்டுபிடிக்கிறாங்களாம்… போடா!” என்றாள்.

“அப்போ நீ? உள்ள வரலையா?”

“என்ன சொல்லிடா என்னை வரச்சொன்ன? அன்வி வருத்தமா இருக்கா. அவளோட டைம் ஸ்பெண்ட் பண்ணுவோம் தான சொன்ன! இங்க வந்தா அவங்களும் வந்திருக்காங்க.”

“சிஸ் லா’காக நீ வரும் போது. தங்கச்சிக்காக அவங்க வரமாட்டாங்களா?” என புருவத்தை ஏற்றி இறக்கினான் ஆர்விக்.

“அவங்கள தூரத்துல பார்த்தாலே நடுங்கும்டா” என்றாள்.

“ஏதே… நடுங்குமா?” என்று சிரித்த ஆர்விக், “அப்புறம் எப்படி நிதா லவ்?” என்றான்.

“அதுதானே எனக்கும் தெரியல” என்றவள், “நான் இப்படியே மேல யாஷ் ரூம் போகட்டுமா? அவங்க போனதும் சொல்லு. வர்றேன்!” என்றாள்.

“விளங்கிடும்… இப்படியிருந்தா எப்படி தைரியமா லவ் சொல்லுவ நீ?” என்ற ஆர்விக்,

“இப்போ இருக்க சிட்டுவேஷனுக்கு திரு உன்னை பார்க்கக்கூட செய்யமாட்டாங்க. ஒழுங்கா உள்ள வா! ஒருவேளை நீதான்னு அவருக்கு தெரிஞ்சிருந்தா… இப்போ நீ உள்ள வராம இருந்தா, எதுவும் நினைப்பாங்க” என்றான்.

“சத்தியமா அவங்க முன்னாடி நார்மலா இருக்க முடியாது ஆர்வி!”

“அவங்க முன்னாடி இருந்து பார்த்திருக்கியா? இன்னைக்கு இருந்து பழகுவோம் வா” என்று கையை பிடித்து இழுக்காத குறையாக உள்ளே கூட்டிச் சென்றான்.

“உன் லவ்வு என்னாலதான் சேரும் போல” என்று ஆர்விக் சொல்லிக்கொண்டே வீட்டுள் அடி வைத்திட,

“ஹேய் நிதா லவ் பண்றீங்களா?” என சத்தமாகக் கேட்டிருந்தான் யாஷ்.

யாஷின் கத்தலில் சக்தி, அனிதாவும் கூட நிதாஞ்சனியை பார்த்திருந்தனர்.

குரல் மட்டும் வருகிறதே எங்கென பார்க்க, இருவருக்கும் பக்கவாட்டில் மாடிப்படிகளின் இறுதியில் நின்றிருந்தான் யாஷ். மாடிக்குச் செல்ல வீட்டிற்குள்ளாகவும், வெளியேயும் தாழ்வாரத்தின் வழி படிகள் இருந்தன.

நிலைபடித்தாண்டி உள்ளே அடி வைத்திருந்த நிதாஞ்சனி, யாஷ் கேட்டதில் அதிர்ந்து உள்ளே கூடத்தில் அமர்ந்திருந்த சக்தியை ஏறிட்டாள்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 49

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
50
+1
2
+1
3

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்