
காலம் தாண்டிய பயணம் 32
நாட்குறிப்பைத் திறந்தவனுக்கு கரங்களில் ஒரு நடுக்கம்…
கண்களை ஒரு நிமிடம் மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டவனோ மெல்லப் படிக்கத் தொடங்கினான்.
படிக்கப் படிக்க அவன் வாழ்க்கையை அவனே புதிதாய் பார்க்கும் உணர்வு, சில நிகழ்வுகள் அப்படியே இருக்க சில நிகழ்வுகள் மாறி இருந்தது.
மகிழுக்கோ ஒவ்வொரு நாளும் நடப்பதை எழுதும் பழக்கம் இல்லை என்றாலும் அவனது இருபதாம் வயதிலிருந்து இப்படி முக்கியமாய் நடப்பவற்றை நிச்சயம் நினைவடுக்கில் நினைவூட்ட வார்த்தைகளாகக் கோர்ப்பான்.
அப்படித்தான் அங்கேயும் அவன் மனதை பாதித்த நிகழ்வுகள் வரிகளாய் அவன் மனதை நிறைத்து.
அடுத்ததாக ஒவ்வொரு பக்கங்களாக அவன் தட்ட,
“என்னோட ஸ்பைசி இன்னைக்கு மேஜர் ஆகிட்டா, தூக்கிட்டு போய்த் தாலி கட்டிடட்டா, ஆனா குட்டிப் பொண்ணா இருக்காளே! கொஞ்சம் வளரட்டும்”
அடுத்து வந்த பக்கத்தில்….
“இன்னைக்கு மித்து என் காதலக் கண்டு பிடிச்சிட்டான், எனக்கு ஒரே வெட்கமா போயிடிச்சு… போதும் ரொம்ப ஓட்டாத மித்து, நீ போய் அவளைப் பொண்ணு கேட்டா நான் எப்படி காதல் சொல்லுறதாம், இரண்டு வருசமா உள்ள பூட்டி வெச்சிருக்கேன், நான்தான் என் காதல சொல்லுவேன் அப்பறம் வேணும்னா நீ பேசிக்கோ”
இப்படி அவள் பிறந்தநாள் அன்று அவன் நினைவுகள் காகிதத்தில் அச்சுகளாய் நிறைந்திருந்தது.
அடுத்து இரு தினங்களில் இவன் பிறந்தநாள், அவள் காதல் சொன்ன நாள் என்று தெரிந்திருந்ததால் ஆர்வமாய் தான் படித்தான்.
“அச்சோ என் ஸ்பைசி பேபி என்கிட்ட அவ காதல சொல்லிட்டாளே, நான் எதிர் பார்த்தது தான், எனக்குத் தான் பூக்குட்டி ஏற்கனவே சொல்லிட்டாளே! ஆனாலும் தெரியாதது போலவே கேட்டுட்டு இருந்தேன், என்ன ஒரு அடாவடித்தனம் என்னையே நல்லா பார்த்துக்குவாளாமே! பார்த்துக்கிட்டா நல்லா தான் இருக்கும். ஆனா நான் ஏற்கனவே லவ் பண்றேன்னு சொன்னதும் மேடம் முகம் அப்படியே வாடிப்போச்சு… அப்பவே நீதான்டி அந்தப் பொண்ணுன்னு சொல்லிக் கட்டிக்கலாம்னு கூடத் தோணிச்சு. ஆனா நான் தான் மித்து கூடப் பேசி நிச்சயதுக்கே ரெடி பண்ணிட்டேனே! அவளுக்கே தெரியாம ஊருக்குப் போய் நிச்சயம் வெச்சு அன்னைக்கே என் காதல அவகிட்ட சர்பிரைஸ்ஸா சொல்லப்போறேன், அப்போ மேடம் முகத்துல வர்ற ஒவ்வொரு உணர்வையும் ரசிக்கனும், அதுக்காக இந்தக் கொஞ்ச வாட்டம் பரவாயில்லைனு தோணிச்சு. அதுவரை மாமாவை கொஞ்சம் விட்டு வைடி ஸ்பைசி”
என்று காதலாய் அவன் எழுதிய வரிகள் அவனை மீண்டும் லட்சமாவது தடவையாக மீண்டும் அவள் மேல் காதல் கொள்ள வைத்திருந்திருந்தது.
அதனைப் படித்தவன் சிறகு இல்லாமல் தான் பறந்தான்.
அவன் உணர்வுகளை வார்த்தையால் சொல்லிவிட முடியவில்லை, ‘இப்போதே சென்று அவளை இறுக அணைத்துக்கொள்ள மாட்டோமா?’ என்று உணர்வுகள் ஆர்ப்பரிக்க அதனை அடக்க வழி தெரியாமல் தவிப்பாய் நின்றிருந்தான்.
பின் ஏதோ ஞாபகம் வர, அவனது பழைய நாட்குறிப்புகள் இருக்கும் இடத்துக்கு அவன் கால்கள் தன்னால் நகர்ந்தது.
அவன் எதிர்பார்த்தது போல அங்கே அவன் நாட்குறிப்புகள் வருடம் அடிப்படையில் வரிசையாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தது.
முடியுமானவரை நடந்ததை தெரிந்து கொள்ள ஆர்வம் அவனுக்குள்…
இனியாவின் எண்ணத்திலே தவித்ததால் அவளைக் கண்டு காதல் கொண்ட நாளை எண்ணியவனோ, அவன் கையில் இருந்த நாட்குறிப்புக்கு இரண்டு வருடங்களின் முன்பான அந்த நாட்குறிப்பில் சரியாக ஓவியக் கண்காட்சி நாளின் பக்கத்தைப் பிரித்தான்.
அவன் எண்ணிய போலவே அவன் காதல் வார்த்தைகள் அவனை வரவேற்றது.
முதலில் படித்தவனுக்கு சம்பவம் அப்படியே தான் நடந்துருப்பது புரிந்தது.
கூடவே சிறிய மாற்றம், அவனுக்கு அவளை முன்பே தெரிந்திருப்பது தான்.
அந்தப் பக்கத்தின் இறுதியில்…
“இன்னைக்கு என்னோட கண்ணுக்கு இந்த இனியா ஏன் வித்தியாசமா தெரியிறா, அவளுக்கு அடிபட்டதும் என்னை மீறி என் இதயம் ஏன் இவ்வளவு தவிக்கிது. அப்போ அவ தான் எனக்கானவளா??? உனக்காகப் பிறந்த தேவதைய இத்தனை நாளா கண்டுபிடிக்காம விட்டுட்டுட்டியே மகி, சின்னப் பொண்ணா இருந்ததனால விட்டுடேனோ?? இப்போவும் அவ சின்னப்பொண்ணு தான். ஆனா இனிமேல் என்னோட ஸ்பைசி… அடிபட்டு ரொம்ப வலிச்சிருக்கும்ல, காயம் ஆறிடும் சீக்கிரமே… கொஞ்சம் வளரட்டும் அப்பறம் காதல் சொல்லிக்கலாம்… காதலா??? அப்போ நான் அவளைக் காதலிக்கிறேனா?? ஐயோ வெட்கமா வருதே, இன்னும் மேஜர் கூட ஆகாத பொண்ணுடா மகி…”
என்ற பல கேள்விகளுடன் இறுதியில் அவனது வெட்க சிதறல்களும், என அந்த நாளுக்கான அவன் உணர்வுகள் அந்தப் பக்கத்தில் முடிந்திருந்தது.
மனதில் என்ன உணர்கிறான் என்பது புரியாமல் மூச்சுக்கு சிரமப்படுபவன் போலத்தான் நின்றிருந்தான்.
மனதை முட்டும் மகிழ்ச்சி அவனைத் தாக்க, என்ன செய்வது என்றே புரியாத நிலை…
அந்த நேரம் அவனை எதிலிருந்தோ காப்பது போல் அவன் கதவு தட்டப்பட்டதும் இல்லாமல் திறந்தும் கொண்டது.
உள்ளே வந்தவனைக் கண்டதும் அவன் மனம் அமைதி அடைய எழுந்து சென்றவன் அவனை இறுக்கமாய் அணைத்துக்கொண்டான்.
“என்னாச்சு யாழ்?” என்று கேட்ட மிதரனும் மகனை ஆதரவாய் அணைத்தான்.
“நத்திங் ப்பா” என்றவன் அணைப்பிலிருந்து விடுபட,
“நத்திங் சொல்லுற ஓகே, ஆனா அப்பானு சொல்லுறியே அதான் இடிக்கிது அப்போ ஏதோ இருக்குனு தானே அர்த்தம்” என்றான் மகனை உணர்ந்து கொண்டவனாய்…
“எனக்கு ரொம்ப ரொம்ப மனநிறைவா இருக்குப்பா, ஆனா ஏன் எதுக்குன்னு என்னால சொல்ல முடியாது சொல்லவும் கூடாது, ஆனா மாற்றம் நல்லது தான். உன்னோட காதல் அது வெற்றி அடஞ்சிடிச்சுப்பா, இப்போ என்னோட காதலும்… என்னவோ நெஞ்ச முட்டுற சந்தோசம். இப்போ இந்த நொடி என்னால அதைப் பேலன்ஸ் பண்ணிக்க முடியல. ஒரு சப்போர்ட் தேவப்பட்டிச்சு அப்போதான் நீ வந்த, எப்போ எனக்கு உன்னோட பிரசன்ஸ் தேவப்படுதோ அப்போல்லாம் எனக்கு அத நீ ஆர்த்மார்த்தமா கொடுத்திருக்க, உனக்கு எவ்வளவு தேங்க்ஸ் சொன்னாலும் பத்தாது. ஆனா நான் அத சொல்லி உனக்கும் எனக்குமான இந்த உறவ தூரமாக்கிக்க மாட்டேன், பிகோஸ் ஐ லவ் யூ சோ மச் ப்பா…. நம்மளோட காலம் தாண்டிய பயணம் நம்ம ரெண்டு பேருக்கானா உறவையும், காதலையும் கூடப் பேசும்” என்றவன் வெகுவாய் உணர்ச்சி வசப்படிருந்தான்.
மித்ரனுக்கு மகன் பேசியவை முழுவதுமாகப் புரியாமல் போனாலும் அவன் உணர்வுகள் புரிந்தது.
“என்ன நடந்தாலும் அப்பா இருக்கேன் யாழ்… உன்னோட பன்னிரெண்டு வயசுல என்னோட கைய அப்பானு பிடிச்சு என்ன முதல் முதலா அப்பாவாக்குனது நீதான் யாழ்… எங்கேயும் எதுக்காகவும் நீ கவலைப்படவே கூடாது. உன் மித்து எதுக்காக இருக்கேன், நீ நினைக்கிறத செஞ்சி கொடுக்குறதுக்குத் தானே! எதையுமே யோசிச்சு மனசக் குழப்பிக்கக் கூடாது, நாளைக்கு ஊருக்குப் போறோம் நாளை மறுநாள் உனக்கு நிச்சயம், நீ எப்போ ஆசப்படுறியோ அப்போ டோல் கூட உன்னோட கல்யாணத்தை வெச்சிக்கலாம்” என்றான், மகன் அதனை எண்ணித்தான் கவலை கொண்டிருக்கிறானோ என்றெண்ணி…
மகிழோ ‘நீ என்னோட அப்பாப்பா, உன்னோட மகன் நான், இது காலமே நினைச்சாலும் மாத்த முடியாது’ என்று கர்வத்துடன் எண்ணிக்கொண்டான்.
“ஓகே வெளில போகலாமா? இப்படியே நின்னா, என் யாழ் தோசை கரண்டியோட தான் உள்ள வருவா. அப்பறம் ரெண்டு பேருக்கும் அடி கன்ஃபோர்ம். உன்னை சாப்பிட வரட்டாம் உன் அம்மா. போ போய் பேஸ் வோஸ் பண்ணிட்டு வா” என்றவன் மகனின் தோளில் ஒரு அழுத்தம் கொடுத்துச் செல்ல, அவன் மனமோ எப்போதும் போல் அவன் தந்தையை எண்ணி கர்வம் கொண்டது.
மித்ரன் வெளியேறியதும் தான், அவனுக்கு ‘தான் மித்ரனுக்குக் கிடைத்த சம்பவம் என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வி மனதினுள் நுழைந்தது.
“ச்சே.., நாம தான் இருபது வயசுக்கு முதல் டைரியே எழுத மாட்டோமே!” என்று சொல்லிக்கொண்ட அடுத்த நொடி, நாட்குறிப்பு எழுத ஆரம்பித்த வருடம், தாயின் நினைவு நாளன்று அவன் கிறுக்கியது ஞாபகம் வந்தது.
தேடிப் பிடித்து அன்றைய நாளைத் திறந்தான். அவன் எண்ணம் வீண் போகவில்லை. அன்றும் அவனது உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்திருந்தான்.
“ரசகுல்லா பண்ணித்தர இன்னைக்கும் நீ வரமாட்டல்ல, ஏன் மா என்னை விட்டுட்டுப் போன, நான் என் மித்து கூடவும் யாழினிமா எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரியுமா? ரொம்ப பாசமா பார்த்துக்கிறாங்க. ஆனா நீங்க ரெண்டு பேரும் இல்லாம வலிக்குதுமா… மித்து எனக்கு அப்பா மட்டுமில்ல ம்மா எல்லா உறவாவும் இருகாங்க. நீயும் அப்பாவும் கூடவே இருந்திருந்தா இன்னும் ஹாப்பியா இருப்பேன்ல. எங்கிட்ட வாமா? அந்த ஆக்சிடென்ட் அன்னைக்கு நடக்கலான நீங்க எனக்காக இருந்திருப்பீங்கல்ல, ஆனா மித்து யாழினிமா இல்லாம போய் இருப்பாங்க, எனக்கு நீங்க நாளு பேரும் வேணுமே! ரொம்ப பேராசைப்படுறேன்ல. எனக்குத் தெரியும் நீங்க எங்க இருந்தாலும் என்னைப் பார்த்துட்டு தான் இருப்பீங்க. உங்க மகன் சந்தோசமா இருக்கான் மா. எப்பவும் உங்க மகனுக்கு உங்க ஆசீர்வாதம் வேணும்…”
என்ற வசங்களோடு அவன் கண்ணீர் துளிகள் அந்தப் பக்கத்தை நனைத்திருந்த அடையாளம் கூட இருந்தது.
இப்போதும் அவன் கண்கள் கலங்கி இருக்க, நாட்குறிப்பை மூடியவனது கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவன் கன்னம் தொட்டு இதழை அடைய, இதழோ ஒரு மன நிறைவுடன் புன்னகை சிந்தியது.
எத்தனை நேரம் அப்படியே நின்றானோ? யாழினியின் “மகிழ் என்ன பண்ற வா எல்லாரும் சாப்பிட வைட்டிங்” என்ற குரலுக்கு சுயத்துக்கு வந்தவன், நாட்குறிப்பை அதனிடத்திலேயே வைத்து, “இதோ வரேன்மா” என்று குரல் கொடுத்து, முகம் கழுவ குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.
அடுத்த சில நிமிடங்களில் வெளியே வந்தவன் கண்டது அவனுக்காக காத்திருக்கும் அவன் உலகத்தைத் தான்.
கவிலயாவோ தட்டை தட்டியபடி “மகித்தான் பசிக்குது சீக்கிரம். இந்த அத்தை நீ வராம சாப்பாடு போட மாட்டேங்கிது” என்று வந்தவனிடம் குற்ற பத்திரிகை வாசித்தவளது தலையில் கொட்டிய யாழினி,
“நானாடி மகி அத்தான் வரட்டும்னு மூக்கால அழுதேன்” என்று அவளைப் போலவே ஒழுகு காமிக்க,
“ஹிஹி அதெல்லாம் கண்டுக்கப்படாது அத்தை, மை மகி அத்தான் மை உரிமை” என்றாள்.
அதில் கடுப்பான இனியா “அத்த நீ இப்ப சாப்பாடு தருவியா மாட்டியா? சும்மா தேவை இல்லாதது எல்லாம் பேசாம சாப்பாட்டை போடு, வேணும் என்கிறவங்க சாப்புடுவாங்க” என்று கடித்து துப்பிய வார்த்தைகள் மகிழ் மீதான கோபம் என அவனுக்கு நன்கு புரிய, அவனிதழ் ஆசையாய் விரிந்து கொண்டது.
அதில் அவன் சுவாரஷ்யம் கூட, கவிலயா அருகில் அமர்ந்தவன் “என்ன சொல்லு கவிக்குட்டி உன்ன போல அத்தான் மேல எல்லாருக்கும் பாசம் இருக்குமா?” என்று இனியாவைப் பார்த்தபடி சொன்னவன், அவள் முறைக்கவும் திரும்பிக் கொண்டான்.
மித்ரனும் மகனின் விளையாட்டு உணர்ந்து அதனைக் கண்டும் காணாமல் புன்னகையுடன் உணவில் கவனமானான்.
மகிழின் பார்வை அவள் மீதே இருக்க, அவன் காதருகில் குனிந்த கவிலயாவோ “மகித்தான் வழியிது தொடச்சிக்கோ, கொஞ்சமாச்சும் கெத்து காட்டுத்தான். இப்படியே போனா இப்போவே கண்டு பிடிச்சிடுவா?” என்க, அவனோ அவளை கூர்மையாகப் பார்க்க,
“ஆல் டீடெயில்ஸ் ஐ நோவ்” என்றவள் பூவிழியைக் கண் காட்ட, அவளோ தனக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை என்கிற ரீதியில் உணவை விழுங்கிக் கொண்டிருந்தாள்.
மகிழ் மனதுக்குள் ‘அம்மாஆஆ’ என்று கடுகடுத்தவன் அவளை முறைக்க முயன்று தோன்றான்.
அடுத்து ஒருவாறு உணவருந்தி முடித்தவர்கள் நாளை பயணத்துக்குரிய ஆயத்தங்களை மேற்கொள்ளத் தொடங்கி இருந்தனர்.
காதலை அணைக்கும்…
ஆஷா சாரா…

