
காலம் தாண்டிய பயணம் 31
அங்கே குட்டிப் பூவிழியின் பள்ளியின் முன்னே மகிழின் கார் நின்றிருந்தது.
காரின் பின்னே அமர்ந்து தன்னை முறைத்துக் கொண்டிருப்பவளிடம் வழியை எப்படி கேட்பது என்று தெரியாமல் வண்டியை இயக்க யோசித்தவனோ,
“ஸ்பைசி, மாமாக்கு கொஞ்சம் டையர்ட்டா இருக்குடா, சரியா தூக்கம் இல்லைங்கிறதால ரூட் கிளியரா தெரிய மாட்டேங்கிது, கொஞ்சம் முன்னாடி வந்து மாமாக்கு வழி சொல்லுறியா?” என்று கேட்டவனை முறைத்தவள், கார் கதவைத் திறந்து இறங்கி கதவை மீண்டும் மூடிய வேகம் சொன்னது அவள் கோபத்தின் அளவை…
அதே கோபத்துடன் முன்னே வந்து அமர்ந்தவள் அவனுக்குப் போகும் வழியைச் சொல்ல, அவனும் அதன் படியே சென்றான்.
சிறிது தூரத்திலே அவளது கல்லூரியும் வந்துவிட, இறங்க போனவளின் கரத்தைப் பற்றியவன் ஏதோ பேச வாயைத் திறக்க, முந்திக் கொண்டவளோ
“இங்க பாருங்க மகி மாமா, உங்கள எனக்குப் பிடிச்சிருந்திச்சு அதனால தான் உங்க பர்த்டே அன்னைக்கு வந்து என் லவ்வ சொன்னேன். நீங்க என்ன பண்ணீங்க, உங்களுக்குப் பிடிக்கல, நீங்க வேற யாரையோ லவ் பண்றதா சொன்னீங்க. சரி எப்படியோ போங்கனு நான் என் பாட்டுக்கு இருக்கேன்ல. அப்பறம் எதுக்கு ஸ்பைசி ஸ்வீட்டின்னு கடுப்பேத்துறீங்க? உங்களுக்கு எவளைப் பிடிச்சிருக்கோ அவளையே கட்டிக்கோங்க நான் அதுக்கு குறுக்க வரமாட்டேன்” என்றவள் கோபமாய் இறங்கி சென்றே விட்டாள்.
காரினுள் அமர்ந்திருந்தவனுக்குத் தான் மண்டை காய்ந்தது.
‘அவள் காதல் சொல்லி நாம் மறுத்தோமா??’ என அவனால் நம்பவே முடியவில்லை…
அவன் வாழ்க்கையே மொத்தமாய் திருப்பிப் போடப்பட்ட உணர்வு…
“பைரவா என்ன விளையாட்டு இது, சம்பவத்தை மாத்துறேன்னு சொல்லி என் ஆளையே மாத்திட்டியாப்பா, டேய் தகப்பா உன்ன வேற இன்னும் பார்க்கல நீ என்ன அதிர்ச்சியைக் கொடுக்கப் போறியோ?” என்று புலம்பியவன் மருத்துவமனையை நோக்கிக் காரைத் திருப்பினான்.
_____________
அங்கே மருத்துவமனையில் அவனுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தலையில் கையை வைத்தபடி மகிழ் அமர்ந்திருக்க, முன்னே அசோக்கும் ஷில்பாவும் அமர்ந்திருந்தனர்.
கடந்த அரை மணி நேரமாகத் தொடர்கிறது அவன் மௌனம்…
பொறுமை இழந்த அசோக்கோ “என்னன்னாச்சும் சொல்லித் தொலையேன்டா எரும மாடே, அரைமணி நேரமா இங்கயே பிடிச்சு வெச்சிருக்க, நாம டாக்டர்ஸ் பக்கி வேலைனு ஒன்னு பார்க்கணும்டா” என்று கொதித்தான்.
மகிழோ ‘அத எப்படி கேக்குறதுனு தெரியாமத்தானடா இப்படி உக்காந்திருக்கேன்’ என்று எண்ணியவனோ “உனக்குச் சொன்னாப் புரியாதுடா” என்றான்.
பின்னே காலப் பயணம் செய்தோம், அங்கே அரக்கனை அழித்து மீண்டும் தங்கள் புதிய வாழ்க்கைக்கு வந்துவிட்டோம். பழையவை ஞாபகம் இருக்கிறது. புதிதாய் மாறியவை என் ஞாபகத்தில் இல்லை என்றா சொல்ல முடியும்…
சொன்னால் தான் அப்படியே நம்பி விடுவார்களா? பைத்தியம் பிடித்து விட்டது என்று முடிவே செய்து விடுவார்களே!
அவனே நம்ப முடியாமல் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறான் தானே!
அசோக்கோ “நீ சொல்லு புரியுதா இல்லையானு அப்பறம் பார்ப்போம்” என்று அவன் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க, ஷில்பா மகிழை அர்த்தமாய்ப் பார்த்தவள் “இனியா என்ன சொன்னா மகிழ்?” என்றாள்.
அவனோ அவள்மீது பார்வையைக் கூர்மையாக்கி, “ஷில்லு” என்று அதிர்ச்சியுடன் அழைத்தான்.
அவளோ “அப்பவே சொன்னேன் இந்த எருமையோட ஐடியாவ கேக்காதன்னு கேட்டியா? இப்போ அனுபவிக்கிற, லவ் பண்ற பொண்ணுகிட்டயே வேற பொண்ண லவ் பண்ணுறேன்னு சொல்லி டென்ஷன் பண்ணுனா உன்ன கொஞ்சவாளா? சொல்லு என்ன சொன்னா?” என்று தீவிரமாய் கேட்க,
இப்போது மகிழின் புன்னகை மீண்டிருந்தது கூடவே அசோக்கின் முதுகில் ஒரு அடி வைத்தவன் “அடேய் சண்டாளா என் வாழ்க்கைல விளையாடப் பார்த்துட்டியேடா” என்று இன்னும் நான்கு அடிகளை வைத்தான்.
முதுகை தேய்த்துக் கொண்ட அசோக் மனைவியின் புறம் திரும்பி “அடியேய் கட்டுன புருஷன ஒருத்தன் இந்தக் கும்மு கும்முறான் ஆச தீரப் பார்த்துட்டே இருக்கியே! காப்பாத்துடி குத்து விளக்கே” என்று அலறியவனை சாவகாசமாகப் பார்த்தவள்,
“மொக்க ஐடியா கொடுத்தல்ல வாங்கிக்கட்டு” என்றபடி தன் மேடிட்ட வயிற்றில் கரத்தைப் பதித்து “பேபி வாழ்க்கைல உன் அப்பாகிட்ட மட்டும் லவ்க்கு ஐடியா கேட்டுடாதடா செல்லம்” என்று வேறு சொல்லி அசோக்கின் பிஞ்சு இதயத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்திவிட்டே சென்றாள்.
பின்னர் தன்னை பெரிய காதல் மன்னன் என அவன் எண்ணிகொண்டிருக்க, அவன் மனைவி வாயால் இப்படி ஒரு வார்த்தை கேட்டால் தங்குவானா???
ஸ்லோவ் மோஷனில் மனைவியை மூன்று முறை வெடுக் வெடுகென்று திரும்பிப் பார்க்க, அவன் காட்டிய குறளி வித்தையில் மகிழுக்கே புன்னகை மலர்ந்தது.
“போதும் உன் நடிப்பு, உலகத்துக்கு வா” என்று மகிழ் அவன் முதுகில் மீண்டும் வைக்க,
“டேய் மகிக் கொரங்கே, உன் ஆள சர்ப்ரைஸ் பண்ணனும்னு நீயா தானடா எனக்கிட்ட வந்த, பாவம்னு நானும் ஐடியா கொடுத்தா ரொம்ப தான் பண்ணுற, அதான் நாளைக்கு ஊருக்குப் போரில்ல அங்க பைரவர் கோயில்ல வெச்சு உன் காதல சொல்லப் போற தானே! அப்பறம் என்ன டேஷுக்குடா, என்ன என் பொண்டாட்டிகிட்ட மாட்டி விடுற” என்றவனின் பேச்சில் நடந்ததை உணர்ந்து கொண்ட மகிழோ குதிக்காத குறை தான்.
அதன் பின் அசோக்கின் புலம்பல் எதுவும் அவன் காதில் விழவே இல்லை…
அவன் சிந்தை மொத்தம் அவன் காதல் ஓவியத்தின் வர்ணங்கள் தான்
‘நாளைக்கு மாமா சொல்லுற லவ்ல என் ஸ்பைசி பேபி என்ன இறுக்கி அணைச்சு உம்மா தரப் போறா, எவ்வளவு திமிரா வேற எவ்வளயோ லவ் பண்ணா பண்ணிட்டு போன்னு சொல்லுறல்ல வெச்சிக்கிறேன்டி உன்ன’ என்ற எண்ணங்களில் சுற்றவனது இன்னொரு மனதோ,
‘இருந்தாலும் பேபியா வந்து லவ் சொல்லியும் நீ அப்படி பேசி இருக்கக் கூடாது மகி, பாவம் புள்ள எவ்வளவு பீல் பண்ணி இருக்கும்’ என்று அவளுக்காக வருத்தப்பட்டுக் கொண்டது.
இருக்கையை விட்டு எழுந்தவனோ அமர்ந்திருந்த ஷில்பாவின் உச்சந்தலையில் முத்தம் ஒன்றை வைத்தவனோ “தேங்க்ஸ் சில்லு” என்று சொல்ல, அருகில் ஒருவனின் வயிறு நெருப்பில்லாமல் புகைந்தது.
ஷில்பாவோ கணவன் முகத்தைப் பார்த்து சீண்ட எண்ணியவள் சுற்றும் முற்றும் பார்த்தபடி “மகி உனக்கு ஏதும் தீஞ்ச வாடை வருதா” என்று கண்ணடித்து அசோக்கினைக் காட்ட, மகிழோ அவன் பார்வையில் சிரித்துவிட்டான்.
“அடேய் நீ ஏன்டா மூஞ்சில காத்து விடுற, உனக்கும் வேணும்னா கேட்டு வாங்கிக்க வேண்டியது தானே” என்ற மகிழின் குரலில் ஒரு துள்ளல். எதுவும் தவராய் போகவில்லை என்ற ஒரு ஆசுவாசம் அது…
அவன் அந்த எண்ணங்களில் நிற்க, அசோக்கோ, “அவளுக்கு மட்டும் கேட்டா கொடுத்த” என்று முறுக்கிக் கொண்டதில்,
புன்னகையுடன் நண்பனின் கன்னத்தில் முத்தமிட்டு கடித்து வைத்தவனோ “ஒரு டாக்டரா நடந்துக்கோடா எரும, இன்னும் சின்னப்புள்ள கணக்கா உனக்கும் கிஸ் வேணும்னு நிக்கிற” என்றான்.
“அத கொஞ்சம் கண்ணாடியப் பார்த்து உங்களுக்கு நீங்களே சொல்லிக்கோங்க” என்க,
“இன்னைக்கு ஐயா லீவ், எனக்கும் சேர்த்து நீயே வேலைய பாரு மச்சான்” என்றவன் அந்தத் துள்ளலுடனே வெளியேறி விட்டான்.
போகும் அவனையே அசோக் பார்த்திருக்க, “என்னாச்சிடா மாமா இவனுக்கு?” என்றாள் ஷில்பா.
“எதையோ சொல்ல முடியாம தவிக்கிறான்டி. நம்மகிட்ட மறைக்கிறான்னா நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும். எதுவா இருந்தாலும் அவனுக்கு சீக்கிரமே அதுக்கான தெளிவு கிடைக்கணும்” என்று நண்பனுக்காக உறுதியுடன் வேண்டியும் கொண்டான்.
_________
மாலை உட்சாகத்துடனே பூவிழி கேட்ட பொம்மையை வாங்கிக் கொடுத்தவன், தாய் சொன்ன தங்க மாலையையும் மோதிரமும் மறக்காமல் வாங்கிக்கொண்டான்.
அடுத்ததாக இனியாவின் அழைத்து வர அண்ணனும் தங்கையும் கிளம்பி இருக்க, ஒரு முறைப்புடனே உள்ளே அமர்ந்தாள் அவள்…
அவள் முறைப்பையும் மீறிப் பார்வையை முன்னே இருந்த கார்க்கண்ணாடியூடு அவளையே மொய்க்கவிட, பார்வையால் அவனை எரித்தாள் அவள்.
அதே உல்லாச மனநிலையுடனே மூவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர்.
அவர்கள் வாழ்வில் நடந்திருப்பவை எல்லாம் நல்ல மாற்றம் என்றே மகிழின் மனது உணர்த்த, மனதினுள்ளே அத்தனை உவகை…
எத்தனை எத்தனை கவலை கொண்டார்களோ அதற்கும் சேர்த்து இப்போது புன்னகைப்பது போன்ற உணர்வு அவனுள்…
அதிலும் இனியாவின் இந்த மாற்றம் மனதில் அடைமழை தான்.
அவனைப் பார்த்து விழிகளில் பயத்தை கடத்தியவள் இப்போது தைரியமாய் அனலைக் கக்குவது கூடப் பிடித்திருந்தது.
அந்த உல்லாச மனநிலையுடன் வீட்டின்னுள்ளே நுழையும் போதே ஓடி வந்து அவன் காலைக் கட்டிக்கொண்ட பொம்மியை ஆசையாய் தூக்கிக் கொண்டான் மகிழ்.
“டேய் பொம்மி” என்ற ஆர்ப்பரிப்பான அழைப்பு அவனிடம்…
எத்தனையோ நாள் பிரிந்திருந்ததைப் போல் அத்தனை கொஞ்சல் இருவருள்ளும்…
அதனைப் பார்த்து வெறியான இனியாவோ “அத்தை என் பொம்மிய யாரும் கொஞ்ச வேணா சொல்லிடுங்க” என்றவள், பொம்மியிடன் “உனக்கு என்னடி நம்ம எதிரி கூடக் கொஞ்சல்” என்று முறைப்புடன் கேட்டு கொண்டிருக்க,
“என்னது உன் பொம்மியா?” என்றான் மகிழ்.
“பின்ன உங்க பொம்மியா?” என்று சண்டைக்குத் தயாராக, யாழினி இவர்கள் சத்தத்தில் அங்கே வந்திருந்தாள்.
“வந்ததும் உங்க வேலைய தொடங்கியாச்சா” என்று இருவரிடமும் கேட்டவள்,
“நீ ஏண்டி இப்படியே நிக்கிற போய் குளிச்சிட்டு வா” என்று இனியாவிடம் முடித்திருந்தாள்.
இனியாவோ மகிழை முறைத்தபடியே அவனைக் கடக்கும் போது “நான் வேணாமாம் என் மூலமா வந்த பொம்மி மட்டும் வேணுமாமா?” என்று முணங்கி விட்டுப் போனது அவன் காதில் நன்றாக விழுந்திருந்தது.
அவனுக்கோ அவள் பேச்சில் புன்னகை, காதலில் உள்ளம் மிதக்கத் தொடங்கியது. அவள் மீது அளவில்லாக் காதல் கொண்டவன் அவன். இப்போது அவளது காதலில் நனைவது பேரின்பமாய் தான் இருந்தது.
இன்னும் அவன் பொம்மி அவனிடன் செல்லம் கொஞ்சிக் கொண்டிருக்க, அவனும் அவள் நெற்றில் முட்டினான்.
“மகி வந்ததும் வராததுமா பொம்மி கூடக் கூத்தடிக்காம போய்க் குளிச்சிட்டு வா” என்று யாழினியிடமிருந்து மீண்டும் அதட்டல் வர, “மித்து எங்கம்மா?” என்று கேட்டான்.
யாழினியோ “அப்பா வெளியே போயிருக்காங்க மகி. இனிமேல் வர்ற நேரம் தான், நீ பிரெஷ் ஆகிட்டு வா” என்க, பொம்மியுடனே அவன் அறைக்குள் நுழைந்து கொண்டான்.
இப்போது பொம்மி எப்படி அவனிடம் வந்தாள் என்று அவனுக்குத் தெரியாது, அதே நிகழ்வா இல்லை வேறு ஏதும் நிகழ்வா என்றெல்லாம் தெரியாது ஆனால் நடந்தவை எல்லாம் சரியாகவே நடந்திருகின்றது என்று மட்டும் புரிந்தது.
இப்படி சிறுக சிறுக தெரிந்து கொள்வதை விட மொத்தமாய் எல்லாம் ஞாபகம் வந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணியவனிடம் பெருமூச்சு…
அப்படியே அமர்ந்திருந்தவன் நேரம் கடப்பதை உணர்ந்து “பொம்மி இங்கயே இரு, நான் குளிச்சிட்டு வந்துடுறேன்” என்று பொம்மியிடம் சொல்லி விட்டுக் குளியறைக்குள் நுழைந்தவன், அடுத்த அரைமணி நேரத்தில் மீண்டும் அறைக்குள் வர, அவன் மெத்தையில் பொம்மி எதையோ வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அதனை ஒரு பார்வை பார்த்தபடி, அவன் உடையை மாற்ற, சட்டென்று ஏதோ தோன்றியவனாகப் பொம்மி அருகே விரைந்தான்.
அது விளையாடிக் கொண்டிருந்த பொருளைப் பார்த்தவன் முகத்திலோ அத்தனை வெளிச்சம்.
‘இதை ஏன் தான் யோசிக்காமல் போனோம்’ என்று தன்னையே நிந்தித்துக் கொண்டவன், பொம்மி வைத்து விளையாடிக் கொண்டிருந்த அவனது நாட்குறிப்பை கையில் ஏந்தினான்.
“அச்சோ பொம்மிக்குட்டி தேங்க்ஸ்டா” என்று அதற்கொரு முத்ததைக் கொடுத்தவன், இரண்டாயிரத்து இருபத்திநான்கு என்று ஆண்டு போடப்பட்டிருந்த அந்த நாட்குறிப்பின் பக்கத்தைத் திறந்தான்.
காதலை அணைக்கும்…
ஆஷா சாரா…

