
காலம் தாண்டிய பயணம் 22
இதே நேரம் கோயிலில், “உங்களுக்குத் திருமணம் நடக்கலயா?” என்று பூவிழியிடம் வினவி அவள் முறைப்பைப் பரிசாகப் பெற்றான் மகிழ்.
“இல்ல உங்களப் பார்த்துட்டேன், அப்படியே அப்பாவும் இங்க இருந்தா அவங்களையும் பார்க்கலாம்னு ஒரு ஆசைல கேட்டேன்” என்றான்.
பூவிழியோ அவன் மனநிலை புரிந்து “திருமணம் இன்னும் ஆகவில்லை மகிழ், இருக்கும் இடரில் அந்த எண்ணமும் வந்ததில்லை” என்றாள்.
அவனோ “ஓஓஹோ” என்றவன் அருகில் அமர்ந்திருந்த இனியாவின் கரத்தைப் பற்றி “இவதான் உங்க மருமக, உங்களுக்குப் பிடிச்சிருக்கா? எங்களோட காலத்துக்குப் போனதுக்கு அப்பறம் இவளத் தான் கட்டிக்கப் போறேன்” என்றான் அத்தனை மகிழ்வுடன்.
பூவிழியும் “மனம் நிறைந்த மகிழ்வுடன் சொல்கிறேன், நீண்ட ஆண்டுகள் அனைத்தும் பெற்று சிறப்பாய் வாழ்வீர்கள்” என்று புன்னகையுடன் ஆசி வழங்கினாள்.
இனியாவிற்கோ அவன் செய்கையில் புன்னகை தோன்றினாலும் அதனை மறைத்து, கையை உருவப் போராடிவளோ மெல்லிய குரலில்,
“விடுங்க மகிழ், என்ன இது? மாமாகிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்” என்க, அவனும் அவள் காதருகில் குனிந்தவனோ அதே மெல்லிய குரலில்,
“சொல்லிக்கோ, என்ன பண்ணுவாராம் உன் மாமா? உன்ன என்னவோ எல்லாம் பண்ணத் தோணுது சும்மா கைய மட்டும் பிடிச்சிருக்கேன்னு சந்தோஷப்படு” என்றவன் கன்சிமிட்ட, இனியாவுக்குள்ளோ ஏதோ செய்தது.
அதனை மறைக்க அவள் தான் வெகுவாய் போராட வேண்டி இருந்தது.
அவன் காதல் சொன்ன நொடியில் இருந்து அவளுள் எதுவோ நிகழ்ந்து கொண்டு தான் இருந்தது.
அவனது அந்தப் பார்வை அவளை அப்படியே அவன் விழிகளுக்குள் சுருட்டிக் கொள்வதாக இருக்க, பேதை அவன் விழிகளைக் காண தவித்துத்தான் போனாள்.
அவனோ அவளது வெட்கத்தைக் கண்டு கொண்டவன் கேலியுடன் “ஸ்பைசி பேபி வெளிப்படையாவே வெட்கப்படலாம் தப்பில்லை. நானும் கொஞ்சம் உன் வெட்கத்தை ரசிப்பேன்ல” என்க, அவன் பேச்சில் விழித்தவளோ அவனைப் பலம் கொண்டு தள்ளிவிட்டாள்.
அதில் அட்டகாசமான புன்னகை அவனிடத்தில்.
மீண்டும் அவள் கரத்தை அவன் பற்ற, இவள் தடுக்கவென்று நடந்த போர் இறுதியில், தன் இனிமையானவளின் கரத்தைப் பற்றித் தன்னுள் பொத்தி வைத்த மகிழின் கரத்தினால் முற்றுப்பெற்றது.
பூவிலும் மிருதுவாய் அவன் பிடித்திருந்த அவளது கரத்தின் மென்மை, ஆடவனை இனிய அவஸ்தைக்குள்ளாக்கியது.
பூவிழியோ இவர்களது காதலை கண்டும் காணாமல் அமர்ந்திருக்க, இனியா அவளிடம் பேச்சுக் கொடுத்தாள்.
அவ்வப்போது மகிழையும் அவன் கரத்தில் சிக்குன்றிருக்கும் தன் கரத்தையும் ஒரு பார்வை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க, இருவரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் மகிழ்.
“அதுசரி பைரவர் நினைச்சா நொடில இந்த மார்த்தாண்டன அழிச்சிடலாமே அப்பறம் ஏன் இவ்வளவு கஷ்டம். காலம் கடந்து எல்லாம் நடக்குறதுக்கு பதிலா அவரே எல்லாத்தையும் சரி பண்ணிடலாமே” என்று வினவினான் மகிழ்.
பூவிழியோ புன்னகையுடன் “எல்லாம் காலத்தின் கட்டாயம் மகிழ். நீயே இதனை யோசித்திருக்கும்போது நம் மூத்தாதையர்கள் யோசிக்காமல் இருப்பார்களா? அதற்கு வாய்ப்புக்கள் உண்டென்னும் போது பைரவர் கை கட்டி வேடிக்கை பார்க்க என்ன அவசியம் வந்தது?” என்றாள்
அவனோ “அப்படி என்ன காரணம்?” என்று விடாமல் வினவ,
அவளோ “மார்த்தாண்டன் சக்தி பொருந்திய வீர வேந்தரை அழித்துச் சாகா வரம் பெற்றவன். அந்தச் சாகா வரத்தை அருள நிர்பந்திக்கப்பட்டவர் எம்பெருமானார் ஈசன். அப்படி இருக்கையில் அவனை அழிக்க, ஈசனின் அவதாரமான பைரவனால் எங்கனம் முடியும், அந்த ஒரு வரம் தான் இத்தனை நாள் அவன் ஆட்டதுக்கு காரணம்” என்றாள் விளக்கமாக.
“ஒரே ஒரு சாகா வரத்த வெச்சிக்கிட்டு என்ன ஆட்டத்தைக் காட்டுறான் அந்த மார்த்து” என்று மகிழ் கிண்டல் பேசிக்கொண்டிருக்கையில், எதிர்பாராத வெளிச்சம் ஒன்று அங்கே பரவி அடங்கியது.
அவர்கள் என்னவென்று உணரும் முன்னரே வந்த வெளிச்சம் மறைந்திருக்க, இனியாவை பயம் தொற்றிக் கொண்டது.
அதில் அவளோ அருகில் அமர்ந்திருந்த மகிழின் தோளில் முகம் புதைத்தவள், சிறிது வினாடிகளின் பின் நிமிர்ந்து அமர்ந்தாள்.
பூவிழி என்னவென்று அந்த வெளிச்சம் வந்த திசையைப் பார்த்திருக்க,
இனியாவோ கண்களில் மிரட்சியுடன் “என்னாச்சு?” என்று பூவிழியிடம் வினவினாள்.
அவளுக்கோ என்னவென்று புரியாவிட்டாலும் ஏதோ விபரீதம் என்று மட்டும் தெரிந்தது. ஆனாலும் பயம் கொண்டு கேட்கும் அவளைச் சமாதானப் படுத்த எண்ணி,
“இங்கு வழமை போல் நடப்பது தான் பயம் வேண்டாம் இனியா” என்று சொன்னாலும் உள்ளே ‘என்னவானது’ என்று கேள்வி அவளிடம் பிறக்கவே செய்தது.
பூவிழியின் சமாதான வார்த்தைக்குப் பின்னரே பயம் அகல, பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்ட இனியாவின் முகம் நொடியில் மாற, எதிரே அமர்ந்திருந்த பூவிழி என்னவென்று கேள்வியாய் பார்த்தாள்.
இனியாவோ நொடிக்கு நொடி கூடும் வலியில் அவளது கரத்தைப் பார்க்க, அதுவோ மகிழின் கரத்தினுள் கிட்டத்தட்ட நசுங்கும் நிலையில் இருந்தது.
அவனோ தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தான்.
கரத்தை உருவ முயன்றும் முடியாமல் போக, “மகிழ், வலிக்குதுங்க, கைய விடுங்க” என்றவளது குரலுக்கும் அவன் நிமிரவில்லை அப்படியே தான் அமர்ந்திருந்தான்.
ஆனால் அவன் கரத்தின் அழுத்தம் மட்டும் கூடிக்கொண்டே போனது.
இனியாவிற்கு ஒரு கட்டத்தின் மேல் வலி பொறுக்க முடியாமல் போக, அழவே தொடங்கி விட்டாள்.
பூவிழிக்கு ஏதோ தவறாகப் பட, அவளது குருவாளை உயர்த்தியபடி அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க,
அடுத்தநொடி அவனது உயர்த்திய இன்னொரு கரத்தின் ஆட்டதுக்கு பொம்மை ஆனாள் பூவிழி.
அவன் கரம் உயர்ந்திருந்த தூரத்துக்குப் பூவிழி அந்தரத்தில் பறக்க, அவளது கழுத்திலும் அழுத்தம்.
இரு பெண்களும் தவிப்பும் பயமுமாய் அவனையே பார்த்திருக்க, நிமிர்ந்தவனது கண்கள் சிவந்திருக்க முகமோ அக்னி சாயம் பூசி இருந்தது.
அவனோ கோணல் சிரிப்புடன் உயர்த்தி இருந்த அவனது கரத்தை அழுத்த, அங்க அந்தரத்தில் தொங்கிய பூவிழியின் கழுத்தில் அழுத்தம் கூடியது.
அவளுக்கோ மூச்செடுக்கவே சிரமமாகிப் போக, கால்களை உதைத்து விடுபடப் போராடினாள்.
அந்த நேரம் கோயில் மணிகள் எல்லாம் சட்டென்று காற்றில் அசைந்தாடி எழுப்பிய சத்தத்தில் அவன் கவனம் சிதற, அவன் பிடியும் நழுவியது.
தொப்பென்று கீழே விழுந்த பூவிழி, அந்தக் கணத்தைப் பயன்படுத்தி இனியாவின் கரத்தைப் பற்றி இழுத்தவள் உள்ளே பைரவன் சிலை இருக்கும் இடத்தில் சென்று மறைந்து கொண்டாள்.
அவன் கவன சிதறல் எல்லாம் ஒரு நிமிடம் தான். அடுத்த நொடி அவன் பார்வையில் காற்று தன்னால் அடங்க, இயங்கி கொண்டிருந்த மணியும் சட்டென அதன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது.
பெண்கள் இருவரும் அங்கே இல்லை என்பதை உணர்ந்தவன் “என்னிடமிருந்தே தப்பித்து விடுவீர்களா??? யான் ஆத்ரீக வளவன், தீய சக்தியின் பிறப்பிடம், இந்த உலகை ஆளப்பிறந்தவன்” என்று சத்தமிட்டு சிரித்தான்.
அந்தக் குரல் உள்ளே இருக்கும் பெண்கள் இருவரின் இதயத்தையும் அசைத்தது.
சற்று முன் அத்தனை காதலுடன் புன்னகை முகமாகப் பேசிக் கொண்டிருந்தவனுக்கு என்னவாகிற்று?? என்ற கேள்வியே அவர்கள் மண்டையில் ஓட,
இனியா பூவிழியின் கரத்தை இறுகப் பற்றி கொண்டாள்.
அவள் தொடுகையில் சுயம் பெற்ற பூவிழி, “பயம் வேண்டாம் இனியா, இது பைரவனின் சன்னிதி, இங்கே நமக்கு ஆபத்து இல்லை” என்று அங்கிருக்கும் திருநீரை இனியாவிற்கு பூசி விட்டாள்.
மூடப்பட்டிருந்த கதவை கோரப்புன்னகையுடன பார்த்தவனோ, கடும் சத்தமிட்டு சிரித்து “யான், இந்த ஆத்ரீகனை, இந்தச் சிறுவன் பைரவனின் திருநீர் அடக்கும் என்று போலிக் கனவு காணும் பேதை பெண்களே! அவன் என் முன்னால் வெறும் சிலை மட்டுமே!” என்று உரக்கக் கத்தியவன்,
அவனது வலது கரத்தை உயர்த்தி விரல்களை அவனை நோக்கி மடக்க, அவன் விரல் அசைவுக்கு இனியா தரையோடு தரையாய் இழுபட்டு அவனிடமே வந்தாள்.
பின்னாலேயே பூவிழியும் ஓடிவர, தன்னை நோக்கி வருபவர்களைக் கோரப்புன்னகையுடன் தான் பார்த்தான் அவன்.
அடுத்த சில வினாடிகளின் பின், குனிந்து தன் காலடியருகே வந்த இனியாவின் தலை முடியைப் பற்றி எழுப்பியவன் “என்னிடமிருந்து தப்பிக்க எண்ணம் கொண்டாயா? தவறு, தவறுக்கு தண்டனை என்ன தெரியுமா?” என்று ஏற்ற இரக்கங்களுடன் கேட்டவன் நிச்சயம் அரக்கன் என்றே அவள் உள்ளம் அடித்துக் கொண்டது.
சற்று முன்னர் தன்னுடன் அத்தனை காதலாய் பேசியவனா அவன்?? இனியாவுக்கோ பயத்திலும் வலியிலும் கண்கள் கலங்க, கலங்கிய அவள் விழிகளையே ஆசை தீரப் பார்த்தவன் இரு கரங்களினாலும் அவளை ஏந்திக் கொண்டான்.
அவளோ “விடுங்க மகிழ் என்ன பண்றீங்க, வலிக்குதுங்க” என்று அப்போதும் அழுதாள் பெண்ணவள்…
உண்மையிலேயே அத்தனை வலித்தது அவன் பிடி. தரையில் இழுபட்டு வேறு வந்ததில் உடல் வேறு வலிக்க, கண்களில் நீர் குலமாகியது.
இதனை எல்லாம் உணர்ந்து வருந்த அவன் ஒன்றும் மகிழ் இல்லையே!
இப்போது இருப்பவன் தான் கொடூர மிருகமான ஆத்ரீக வளவன் ஆகிற்றே!
அது அவளுக்கு எங்கே புரிய, அவள் பார்வைக்கு அவன் மகிழ் தானே! ஆனால் அவனோ கொடூரன் ஆத்ரீக வளவனின் மறுபிறவி.
பூவிழிக்கு நிலைமை புரிய, தடுக்கும் வழி அறியாது அவள் தவித்து நின்ற நொடி அவளை ஒரு பார்வை பார்க்க, அவன் பார்வைக்கு கட்டுப்பட்டபடி அவள் உடல் தன்னால் காற்றில் மிதந்தது.
“மகிழ் வேண்டாம் உன் காதல் அவள், உன் தாயாய் சொல்கிறேன் அவளை விட்டு விடு, இந்த கொடூரனுள் புதைந்திருக்கும் என் மகன் நீ. வெளியே வா” என்று கிட்டத்தட்ட கத்தவே தொடங்கினாள்.
அவளை ஒரு முறை மட்டும் தான் திரும்பிப் பார்த்தான், அதன் பின் அவள் நா அவள் பேச்சையே கேட்கவில்லை,
“ஆத்ரீகன் வாழ்க” என்று அவன் புகழ் பாடத் தொடங்கியது.
அவளது உள்ளதுக்குப் புரிந்தது அவள் செயல்.
தன் நாவை ஒரு பார்வையில் அடக்கி இருந்தவனது சக்தி எப்படிப்பட்டது என அந்த நொடி அவளால் உணர முடிந்தது.
ஆத்ரீகன் என்ற பெயரையும் அவன் கொண்டிருக்க கூடிய சக்தியைப் பற்றியும் தந்தை மூலம் அறிந்திருந்தவள் தான். ஆனால் இங்கே நேரில் அவளாக உணரும் போது அதன் ஆழம் புரிந்தது.
ஊமையாய் மனதால் அழமட்டுமே இப்போது அவளால் முடிந்தது.
இங்கே அவள் இதழ்கள் அவன் நாமத்தை உரைத்துக் கொண்டிருக்க, அவன் இதழ்களோ கேலியாய் புன்னகை சிந்திய, அடுத்த நொடி அங்கிருந்து இனியாவுடன் பறந்திருந்தான் ஆத்ரீக வளவன்.
கூடவே பூவிழியின் உடலும் பின்னால் சென்றது.
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…

