Loading

காலம் தாண்டிய பயணம் 21

 

இருள் சூழ்ந்த நேரமதில் அங்கே கரும்புகைகள் அந்த இடத்தைச் சூழ வட்டமிட, ஆந்தைகளின் அலறும் ஓசை அந்த மயான அமைதியைக் களைத்து பயமுறுத்த, யாழினியின் பார்வை மொத்தமும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நின்றிருந்த மித்ரனின் மீது தான்.

 

இதழ்களோ “தேவ்” என்ற உச்சரிப்பையும் விடவில்லை…

 

இப்போதும் அவள் பதினெட்டு வயது மங்கை தானே!

 

அவள் வயதுக்கு அவள் அதிகமாகவே இந்தச் சில நாட்களில் பார்த்துவிட்டாள்.

 

என்னதான் அவள் தைரியம் வாய்ந்தவளாக இருந்தாலும், இவை அவள் வயதுக்கு அதிகப்படியானவை தானே!

 

உண்மையில் துவண்டு தான் போயிருந்தாள், தாய்மையை உணர்ந்து கொண்ட பொழுதுகள் இப்படியா அமைய வேண்டும், அதிலும் அவளவன் உருவத்தில் ஒரு கொடூரனை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை…

 

உதடுகள் தேவ் என்ற அவன் பெயரைக் கூறி சுவாசம் பெற்றுக் கொண்டனவோ என்னவோ விடாமல் அவன் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தாள் பாவை…

 

அந்த நேரம் கோபமாய் அங்கே வந்து சேர்ந்தாள் அரத்த மோகினி… இல்லை இல்லை வரவழைக்கப்பட்டாள்.

 

“மார்த்தாண்டா என்ன விளையாட்டு இது?” என்று கோபமாய் அவள் கேட்க,  அவனோ புன்னகையுடன் “பதில் தெரிந்து கொண்டே வினவுதல் எங்கனம் சரியாகும் தாயே!” என்றான்.

 

அவளோ “தாயா? அப்படி அழைப்பதற்கு அர்த்தம் உணர்ந்தது போல் தெரியவில்லையே உன் செயல்” என்றான் இன்னும் அடங்காத சீற்றதுடன்…

 

“என்னைப் பற்றி அறிந்தும் அருகில் வைத்துக்கொண்டது தாங்கள் பிழை தாயே! இப்போதும்  தாய் என்பதற்காகவே இந்த முடிவும் இல்லையேல்” என்று நிறுத்தியவனது முகம் விகாரத்தைத் தத்தெடுத்துக் கொண்டது.

 

“வேண்டாம் மார்த்தாண்டா தவறிழைக்கிறாய்” என்று உரக்க கத்தியவளின் உடலானது மந்திர கட்டுக்குட்பட்டு அங்கிருந்த பூஜை வட்டத்தினுள் அமரவைக்கப்பட,

 

மார்த்தாண்டனோ “தவறா? எது தவறு… என் உயிரை ஆள வைக்க, எதுவும் சரியே! என் மகனை மீண்டும் கொண்டு வர, இந்த உலகையே வேண்டுமானாலும் அழிப்பேன்” என்றவன் மீண்டும் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கி இருந்தான்.

 

வான்மீகியோ சட்டென அவன் செய்யப் போவதை உணர்ந்தவரோ திடுக்கிட்டுத் தான் போனார்.

 

“மார்த்தாண்டா” என்று அழைத்தவரின் குரல் கூட நலிந்து தான் ஒலித்தது.

 

‘கூடாது… கூடாது இது நடக்கவே கூடாது’ என்று அவர் மனம் கூப்பாடு போட, ஏதேதோ மந்திரங்கள் உச்சரித்து முயற்சி செய்தும் அங்கே அவன் இடத்தில் அவன் கட்டுக்குள் அவரது மந்திரங்கள் கூடச் செயலிழந்து தான் போயிருந்தது.

 

நடக்கப் போகும் விபரீதத்தைத் தடுக்கும்  வழி அறியாது தவிப்புடன் நின்றிருந்தார்.

 

அவரது தவிப்பை உணர்ந்த இளவேந்தனோ “சுவாமி என்னவாகிற்கு? ஏன் தாங்கள் திடீரென இத்தனை தவிப்புக்குள்ளாகி நிற்கின்றீர்?” என்று வினவ,

 

அவரோ “மிகப்பெரிய அழிவின் ஆரம்பம் நிகழவிருக்கிறது இளவேந்தா, உன் மூதாதையர்கள் எதைத் தடுத்து நிறுத்தினார்களோ அது நடக்கவிருக்கிறது” என்றவரின் கூற்றில் அருகில் இருந்தவர்கள் புரியாமல் பார்க்க, மித்ரனோ நடப்பதை பார்க்கவும் முடியாமல் அவஸ்தையுடன் தான் நின்றிருந்தான்.

 

“புரியவில்லையே சுவாமி?” என்ற இளவேந்தனின் கேள்விக்குப் பதிலாய் “ஆத்ரீக வளவன்” என்றார் வான்மீகி…

 

அதே நேரம் மார்த்தாண்டனும் அதே பெயரைச் சத்தமாய் உச்சரிக்க, வானம் பலத்த இடிச் சத்தத்துடன் முழங்கியது.

 

கூடவே சட்டெனத் தோன்றிய மின்னல் கீற்று ஒன்று வானிலிருந்து புறப்பட்டு அரத்த மோகினியின் நெஞ்சினைத் துளைத்தது.

 

அடுத்து அவர் உடல் தன்னால் காற்றில் மிதக்க, அவரது அத்தனை சக்திகளையும் சிறிது சிறிதாக அந்த மின்னல் உள்வாங்கிக் கொண்டது.

 

அதற்கிடையில் எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய வான்மீகிக்கு எதுவுமே புலப்படாமல் போக, யோசிக்கத் தொடங்கியவருக்கு பதில் என்னவோ பூச்சியம் தான்.

 

கண்களை மூடிப் பைரவணை கண்களுக்குள் நிரப்பியவருக்கு சட்டென அந்தக் கிணற்றின் உள்ளேயிருக்கும் குகை ஞாபகம் வர, தன்னால் காலம் கடக்கும் மாலை நினைவில் வந்தது. கூடவே மகிழின் முகமும் வந்து போக, உண்மையில் வியர்த்தது அவருக்கு…

 

அவர் எதையோ நினைத்துச் செய்திருக்க, இங்கே நடப்பது வேறொன்றல்லாவா???

 

சட்டெனக் கண்களைத் திறந்தவரோ மித்ரனிடம் “மித்ரா, அந்த முத்து மாலை எங்கே உள்ளது?” என்று பதற்றமாய் வினவ, அவனோ “என்கிட்ட தான் இருக்கு, என் சட்டைப்பைக்குள்ள சின்னப் பெட்டி ஒன்னு இருக்கு அதுக்குள்ள தான் இருக்கு” என்றான்.

 

அவரோ ஆசுவாசமாய் மூச்சை எடுத்துக்கொண்டவரோ, “நல்லது மித்ரா, அதற்கான தேவை விரைவில் வரும். கவனமாய் இருந்து கொள், இங்கே எது நடந்தாலும் யாரைக் கொல்ல உனக்கு ஏவப்பட்டாலும்,  உன்னை எதிர்த்துப் போராடுவது யாராக இருந்தாலும் யான் சொல்வதை செய்ய வேண்டியது உன் கடமை, உன் பொறுப்பும் கூட. அதை நினைவில் ஸ்திரமாக வைத்துக்கொள்” என்றவர் நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினார்.

 

அதற்கிடையில் அங்கே மொத்த சக்தியும் உறிஞ்சப்பட்ட பின் அரத்த மோகினியின் உடல் தன்னால் கீழே விழ, அத்தனை சக்தியும் இப்போது நொடி நேர அவகாசமின்றி மார்த்தாண்டனின் உடலினுள் பாய்ந்தது.

 

முற்றாகச் சக்தி வரப்பெற்றவனோ எழுந்து நின்று அந்தக் காடே அதிரும் வண்ணம் கத்தத் தொடங்கினான்.

 

முன்னே கிடந்த அரத்த மோகினியைப் பார்த்துப் புன்னகைத்தவனோ “மிக்க நன்றி தாயே” என்றவனின் குரலில் கேலி…

 

இந்த நாளுக்காகவே அவளுக்குப் பயப்படுவது போல் பணிவது போல் அவன் நடித்தது.

 

அவளுக்கே தெரியாமல் அவளை வீழ்த்த யாகம் நடத்தினான் அவன். அவனது மகனை மீண்டும் உயிர்ப்பிக்க அவனுக்குப் பன்மடங்கு  சக்தி தேவை.

 

அங்கே அவர்கள் கூட்டத்தினுள் அவனை விட அரத்த மோகினியின் சக்தியே உயர்ந்தது.

 

இப்போது மொத்தமும் அவனிடம், அந்த அரக்கனிடம்.

 

சாதாரணமாகவே கொடூரன் அவன் இப்போது கேட்கவும் வேண்டுமா??

 

அதுவும் அவனுக்குப் போதவில்லை. கோடான கோடி பலிகளின் சக்தியை ஒருங்கே பெற்ற அவன் மகனை முழு சக்தியுடன் திருப்பிக் கொண்டு வர அவனுக்கு நிச்சயம் இது போதாதே!

 

அவனது வலது கரத்தை மேலே உயர்த்த, அங்கிருந்த தீயசக்தி கரும்புகை அனைத்தின் சக்தியும் இப்போது இவனுள் நிறையத் தொடங்கியது.

 

இப்போது மொத்த தீயசக்தியின் ஒட்டுமொத்த உருவாமாய் அவன்…

 

அதுவும் போதாமல் அடுத்து நேராய் மித்ரனின் அருகில் வந்தவன் அவன் கண்களில் கட்டியிருந்த கயிற்றை அகற்றினான்.

 

மித்ரனோ இருட்டுக்கு தன் விழிகளைப் பழக்கப்படுத்திப் பார்க்க, தன் முன்னே கொடூரமான தன்னையே காணும் உணர்வு அவனுக்கு…

 

இருவரின் விழிகளும் நேராய் மோத, மித்ரனுக்கோ விழிகளில் ஒரு வலி

 

மார்த்தாண்டனோ “ஹாஹாஹா உன் விழிகளை நேரே கண்டால் என் ஆயுள் சிறிது குறையுமாம், சாகாவரம்  பெற்றும் அழிவு நெருங்குமாம். பார்த்தாயா உனக்குப் பிறவி கொடுத்த எனக்கு நீ பாதகம் செய்கிறாய்” என்று புன்னகைத்தவன்,

 

மீண்டும் “ஆனால் என்ன செய்வது ஆபத்து  அறிந்தும் உனக்குப் பிறவி கொடுத்து உன் மூலம் என் மகனைக் கொண்டு வர நினைத்தால் உனக்கு நம் கடந்த கால ஞாபகம் வர வில்லையே! இருந்தும்  பரவாயில்லை உன்னால் இப்போது உபயோகம் தான்” என்றவனின் பார்வை அங்கே அமரவைக்கப்படிருந்த யாழினியைத் தொட்டு மீண்டது.

 

கூடவே “இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை,  நம் மகன் தான் உதித்து விட்டானே!” என்க, மித்ரன்  புரியாமல் பார்த்தான்.

 

மார்த்தாண்டனோ “நம் மகன் உருவாகிய நல்ல செய்தி இன்னும் உன் காதை அடையவில்லை அல்லவா?? மறந்துவிட்டேனடா மித்ரா” என்று பொய்யாய் ஆச்சரியம் காட்டியவனின் கூற்றில் மித்ரன் குழம்பித் தான் போனான்.

 

“என்ன சொல்ற?” என்றவனின் குரல் நலிந்து ஒலிக்க, பார்வையோ அங்கே அரைமயக்க நிலையில் இருக்கும் யாழினி மீதுதான்.  அவளும் இவனைத்தான் பார்த்திருந்தாள்.

 

எத்தனை ஆசையாய் சொல்லி இருக்க வேண்டிய செய்தி. இங்கே இப்படியொரு நிலையிலா தெரிய வேண்டும், உள்ளே வலித்தது அவளுக்கு…

 

மார்த்தாண்டனோ “நம் மனைவி யாழினி வயிற்றில் நம் மகன் உதித்து இரு திங்கள் கடந்து விட்டதடா மித்ரா, ஆனால் பார் இதை நானே எனக்குத் தெரியப்படுத்த வேண்டிய நிலை. கருவில் இருக்கும் போதே நம் மகனை அழித்து அவனுக்குப் பாதகம் செய்தவர்களை வேரோடு அழிக்க வேண்டாமா? இப்போது வெளியாகும் அவன் ஆன்மா உக்கிரமாய் இருப்பான்… நான் எண்ணியது போலவே உலகையும் அடக்கி ஆள்வான்” என்றான்.

 

அவன் குரலில் ஏகத்துக்கும் கேலி பரவியிருக்க, இந்த முறை மித்ரனோ பயங்கரமாய் அவனை முறைத்தான்.

 

அவன் முறைப்பின் காரணம் புரிந்து கொண்ட மார்த்தாண்டன் “நீ என்னில் பாதி என்றால் உன் மனைவி நம் மனைவி தானே மித்ரா!” என்று சிரிக்க, அவன் கூற்றில் மித்ரன் பார்வையில் இன்னும் தீர்க்கம் கூடியது.

 

அவ்வளவு கோபம் அவனுக்கு… அவன் ஒருவன் எத்தனை பேரைப் படுத்துகிறான்.

 

அதிலும் காலம் தாண்டி இத்தனை தூரம் வந்து தாங்கள் கஷ்டப்பட வேண்டிய நிலையும் அவனால் தானே! அவனது பேராசையினால் தானே!

 

இதில் யாழினியை அவன் மனைவி என்கிறான், உள்ளே கொதித்தது. ஒன்றும் செய்ய முடியாத இந்த இழிநிலையை அறவே வெறுத்தான்.

 

மார்த்தண்டனோ “ஆரம்பிக்கலாமா மித்ரா, இறந்த நம் மகனை மீட்டெடுப்போம் அதே உக்கிரத்துடன்” என்றவன்  மித்ரனே எதிர் பார்க்காத நேரத்தில் அவனது கரத்தில் வாளால் ஒரு கீறு போட்டு, வழிந்த அவன் உதிரத்தை தன் மார்பில் பூசிக்கொள்ள, மீண்டும் உருவாகிய மின்னல் இப்போது மார்த்தாண்டனின்  நெஞ்சை துளைத்து சக்தியைக் கூட்டியது.

 

அவன் விழிகள் நீல நிறத்தில் மாற, அவன் மார்பில் இருந்த மித்ரனின் குருதி தன்னால் மறைந்தது.

 

“நம் குருதியே பலம் வாய்ந்தது பார்த்தாயா? வீணாய் நல்லவன் வேஷம் எதற்கு  மித்ரா? நீ விரும்பினால் என்னுள் இணைந்து கொள்ளலாம், என்னை நானே அழிக்க எனக்கு ஆசையா என்ன? புரிந்து கொள்ளடா உன் மேல் கொள்ளைப் பிரியம் எனக்கு” என்றவன் சிறு புன்னகையுடன் அங்கிருந்து அகன்று பூஜை தயாராக இருந்த இடத்தை நெருங்கினான்.

 

மந்திரக் கட்டிலிருந்து விடுபடப் போராடிய மித்ரனோ “அவள விடு, அவளுக்கோ என் புள்ளைக்கோ ஏதாச்சும் ஆச்சு” என்று திமிறிய படியே கத்த,

 

மார்த்தாண்டனோ “நம் மனைவி நம் குழந்தை என்று சொல்லிப்பழகடா, பிரித்துப் பேசி என்னை வதைக்காதே, விளைவு விபரீதம் ஆகலாம்” என்று புன்னகையுடனே சொன்னவனது முகம் சாதாரணமாக இருந்தாலும் அந்தக் குரலில் ஒரு வன்மம்…

 

அதே வன்மத்துடன் பூஜை வட்டத்தில் அமர்ந்தான்.

 

அடுத்து எப்போதும் போல் அவன் இரத்த துளியை எரிந்த நெருப்பில் விட,  அடுத்த சில வினாடிகளில் அவன் மனைவி மோகினியின் அருவம் தோன்றியது அங்கே!

 

“வளவா, வெற்றி விரைவில் கிட்டிவிடுமோ” என்றவள் முன்னே சக்தி இழந்து கிடைக்கும் தாயைக் கண்டு சிறிதும் அதிர்ச்சி என்பதையே முகத்தில் காட்டாதவள்,

 

“தாயிடம் இருந்து சக்தி அனைத்தும் எடுத்தாகி விட்டதா? இன்னும் கால தாமதம் ஏனோ?” என்றபடி எந்தப் பாதிப்பும் இல்லாமல் அவளது வலக்கரத்தை உயர்த்த,  மீதி அரை உயிராய் கிடந்த அரத்த மோகினியின் உடலோ காற்றில் உயர்ந்து அழிந்து கரும்புகை ஆனது.

 

மார்த்தாண்டனும் புன்னகையுடன் “உன் வருகைக்கே காத்திருந்தேன் கண்மணி” என்று அவனது வலக்கரத்தை அருபமாய் நின்றிருந்தவளின் வயிற்றினை நோக்கி உயர்த்த, அவள் கரமும் அவள் வயிற்றினை நோக்கி நீண்டது.

 

இரண்டு கரத்திலும் இருந்து தோன்றிய ஒளிக்கதிர் அவள் வயிற்றைத் துளைத்து அங்கிருந்து பெரிதாகத் தோன்றிய ஒளிக்கதிர் இப்போது முன்னே அமர்ந்திருந்த யாழினியின் வயிற்றைத் துளைத்தது.

 

அவளோ “அம்மாஆஆஆ” என்று குரலெடுத்து அலற, இங்கே மித்ரனோ “யாழ்ழ்ழ்” என்று அலறினான்.

 

வான்மீகியோ நிலைமை கைமீறி போனதை உணர்ந்து கண்களை மூடித் திறந்தவர் “பைரவா கண்மூடி வேடிக்கை பார்ப்பது ஏனோ?” என்று இயலாமையுடன் கேட்டார்.

 

அவருக்குத் தெரியுமே ஆத்ரீக வளவனின் கொடிய சக்தி பற்றி, அவனைக் கருவில் அழிக்கக் காரணமே அவன் அதீத சக்தியால் உலகம் அழிவுறும் என்று தானே! ஆனால் இன்று மீண்டும் அவன் ஜனனம் நிகழவிருந்தும் தடுக்க முடியாத நிலை.

 

யாழினியின் கதறல் சத்தத்துடனே, அவள் கருவில் இருந்த குழந்தை ஒளிக் கற்றை ஒன்றாக வெளியே வர,  மார்த்தாண்டன் தம்பதியினரின் முகத்தில் பேருவகை.

 

அதனைப் பார்த்தபடியே யாழினி மயங்கிச் சரிய, மித்ரன் பேச்சற்று நின்றிருந்தான்.

 

வெளியே வந்த ஒளிகற்றையோ மார்த்தாண்டன் முன்னே வந்து நிற்க, “வருக செல்வமே வருக. ஆத்ரீகா உன் ஆட்சி பெருகட்டும், செல் ஆத்ரீகா உன் முழு ஆன்மாவை நீயாகவே அழைத்து வா, கூடவே உன் தாய்க்குத் தேவையானதையும்” என்ற  மார்த்தாண்டனின் குரலுக்குக் கட்டுப்பட்டபடி அந்த ஒளிக்கற்றை அங்கிருந்து நகர, மித்ரனின் பார்வையும் வலியுடன் அதன் பின்னே சென்றது.

 

 

காதலைத் தேடும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
7
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்