
காலம் தாண்டிய பயணம் 17
ஐந்தாம் நூற்றாண்டு…
அங்கே மணலில் மயங்கிக் கிடந்த மித்ரன் கண்களைத் திறக்க முயன்றும் முடியாமல் போனது.
சிறுது நேரத்திலேயே அவன் கன்னங்கள் ஏதோ குளிர்மையை உணர, இமைதட்டி கண்களைத் திறந்தவனுக்கு முன்னே தெரிந்த உருவத்தையும் அங்கே நிகழ்வதையும் கண்டு கோபத்தில் கண்கள் சிவந்தது.
மித்ரனுக்கு வந்த கோபத்தில் தலைவலி கூடியதுதான் மிச்சம்.
எழுந்தமர்ந்தவன், எதிரில் சற்றுத் தொலைவில் நின்றிருந்தவனை முடிந்த மட்டும் முறைத்தான்.
அவன் பார்வையை உணர்ந்த எதிரில் இருந்தவனோ, புன்னகையுடன் அருகில் நின்றிருந்தவளிடம் “இங்கேயே உட்காரு, வந்துடுறேன்” என்று மொழிந்தவன், இவனை நெருங்க, இன்னும் கோபம் தான் வந்தது மித்ரனுக்கு.
அதில் மீண்டும் புன்னகை அவனுக்கு…
மெல்லிய இதழ் விரியாப் புன்னகையுடனே “ப்பா, இன்னும் எவ்வளவு நேரத்துக்கு இப்படியே முறச்சுட்டு இருப்ப? சீக்கிரம் எழுந்துக்கோ, இது என்ன இடம், ஏதுனு விசாரிக்க வேண்டாமா? ஒரு டெடிகேஷன் இல்லப்பா உன்கிட்ட” என்றான் மகிழ்.
அதில் சலித்துக்கொண்ட மித்ரனோ, “என்ன யாழ் பண்ணி வெச்சிருக்க நீ? இது உனக்குத் தேவையா? எதுக்கு வந்த நீ? அதுலயும் டோல்லையும் கூட்டிட்டு வந்திருக்க, உனக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு” என்று எழ முயல, அதுவோ முடியாமல் போனது.
சட்டெனக் கால்கள் ஒத்துழைக்கவில்லை. மீண்டும் எழுந்தவாக்கில் அவன் அமர்ந்துவிட, கரத்தை நீட்டி இருந்தான் மகிழ்.
அதனைப் பற்றி எழுந்தவனோ, மகனின் முதுகில் ஓர் அடி வைத்து, அங்கே மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தவளை நோக்கி நடை போட்டான்.
கூடவே மகிழும் நடக்க, “ஏன்டா இடியட், நீதான் கொழுப்பு எடுத்துப்போய் வந்தன்னா, இவ எதுக்குடா?” என்று பல்லைக் கடித்தபடி கேட்க,
அவனோ “நீங்க உங்க காதலைத் தேடி வந்தீங்க, நான் என் காதலோட உங்க காதலத் தேடி வந்திருக்கேன்” என்க,
முதலில் அவன் சொன்னது புரியாமல் போனாலும், மேலும் இரண்டு எட்டு வைத்து அவன் சொன்னதை உள்வாங்கிய மித்ரனுக்குப் புரிந்தது சேதி.
“யாழ்” என்று அதிர்ச்சியாய் அவன் முகம் பார்க்க, அவனும் சம்மதமாய் தலையசைத்தவன் “ஷி இஸ் மை லவ்ப்பா… என் தேவதை, என்னோட தேடல்… என் ஸ்பைசி” என்றான், குரலில் அத்தனை காதலைச் சுமந்து.
மித்ரனுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மகனின் இரண்டு வருடத் தேடல் அவன் அறிந்ததுதான். ஆனால் இந்தத் திருப்பம் அவன் அறியவில்லை.
“ஏன் யாழ், எங்கிட்ட சொல்லலை, டோல் தான் உன் ஆளுன்னு?” என்று கேட்க, அந்தக் கேள்வியே மகிழுக்குத் தித்தித்தது.
அது அவன் முகத்திலேயே பிரதிபலிக்க, மித்ரனின் மனம் சட்டெனச் சுருங்கியது.
“இவ்வளவு லவ் வெச்சிட்டுப் பிறகு ஏன் யாழ் இங்க? திருப்பிப் போவோமான்னு கூடத் தெரியாம உன் காதலையும் புதைக்கப் பார்த்திருக்கியே!” என்றவனின் குரலில் மிதமிஞ்சிய வேதனைதான் தெரிந்தது.
“ப்பா, சில உணர்வுகளை வெளியில சொல்ல முடியாதுப்பா… அப்படித்தான் உனக்கான என்னோட உணர்வுகளும். உனக்கு இல்லாத எதுவும் எனக்கும் வேண்டாம்ப்பா, அதனால தான் அவகிட்டக்கூட என் காதலை நான் சொல்லலை. அம்மாவை உன்கிட்ட கொடுத்துட்டுத்தான் எனக்குன்னு அவளை எடுத்துப்பேன்ப்பா, சோ என்ன பண்றீங்க, புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து ஜோடியா எங்களைச் சேர்த்து வைக்கிறீங்க, அப்புறம் அவகிட்ட காதலைச் சொல்லி நான் சம்சாரி ஆகிக்கிறேன்” என்றான் மகிழ்.
மித்ரன் அடுத்துப் பேச முன்னரே, இனியா அமர்ந்திருந்த மரத்தின் அருகே தந்தையும் மகனும் வந்துவிட, பேச்சு அப்படியே தடைப்பட்டது.
மித்ரனோ “என்னாச்சு டோல்?” என்றான், அவள் தலையைப் பிடித்தபடி அமர்ந்திருந்த விதம் கண்டு கேள்வியாக.
அவள் பதில் உரைக்கும் முன்பு மகிழே, “ரொம்ப வாமிட் மித்து அவளுக்கு. நான் மயக்கம் தெளிஞ்சு எழுந்து பார்த்தேன், வாமிட் பண்ணிட்டு இருந்தா. அதான் இங்க உட்காரச் சொன்னேன். குடிக்கத் தண்ணீர் கொடுக்கணும், இங்க கண்ணுக்கு எட்டுன தூரத்துக்கு மணல் மட்டும்தானே தெரியுது. ஆட்கள் யாரையும் காணோம். என்ன இடம்னும் புரியலை. கொஞ்சம் நடப்போம்” என்றான்.
மித்ரனும் இனியாவிடம் “டோல், நடக்க முடியுமாடா? மாமா வேணா தூக்கிக்கட்டுமா?” என்று கேட்க, மகிழோ முடிந்த மட்டும் தந்தையை முறைத்தான்.
மித்ரனுக்கு மகனின் முறைப்பு புரிந்தாலும் இனியாவிடம் காட்டிக் கொள்ளவில்லை.
மகனின் செயலில் மெல்ல எட்டிப் பார்த்த புன்னகையை அடக்கி, சற்று எள்ளலுடன் மகனைப் பார்த்து வைக்க, அவனோ தந்தையை கண்களால் எரித்தான்.
இனியாவுக்கோ இவர்களின் விழிபாஷையைத் தெரிந்துகொள்ள அவள் நிலை விடவில்லை.
தலைவலி உயிர் போனது அவளுக்கு. ஏற்கனவே வாந்தி எடுத்ததன் விளைவாக உடலின் சக்தி மொத்தமும் வடிந்தது போல் இருக்க, நடக்க முடியும் என்று தோன்றவில்லை.
முயன்று மித்ரனைப் பார்த்தவள் “தலைவலிக்குது மாமா” என்று அவன் கரங்களைப் பற்றிக்கொள்ள, அவனுக்குப் பாவமாய் போய்விட்டது.
இத்தனை தூரக் காலப் பயணத்தை அவள் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை, அதனால் உண்டான ஒவ்வாமை இது என்பது இரு ஆண்களுக்கும் புரிந்தது.
மகிழின் கண்களிலோ வேதனை.
அவனுக்கோ அவளை ஆறுதலாய் அணைத்துக்கொள்ள உள்ளம் பரபரத்தது.
அது மித்ரனின் கண்ணில் இருந்தும் தப்பவில்லை.
மகனின் தோளில் ஆதரவாய் அழுத்தம் ஒன்றைக் கொடுத்தவனோ, இனியாவை கைகளில் தூக்கிக்கொண்டான்.
அவளிடம் அதற்கு மறுப்பு இருக்கவில்லை என்பதைவிட, மறுப்பு சொல்லத் தோன்றவில்லை என்பதே உண்மை.
மித்ரனிடம் ஓர் அந்நியத்தன்மை அவளுக்குத் தோன்றியதே இல்லை அல்லவா?
அப்படியே மூவரும் சிறிது தூரம் சென்றிருக்க, அங்கே அவர்களுக்கு எதிரில் ஓர் வயதானவரைக் கண்ட ஆண்கள் இருவருக்கும் உண்மையில் நிம்மதிதான்.
நடையை எட்டப்போட்டு அவரிடம் நெருங்கினர்.
மகிழோ அவரிடம் “பெரியவரே, இது எந்த இடம்? இங்க குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்க,
அவரோ “இது காலபைரவன் கோட்டை மகனே” என்று அருகில் மித்ரனின் கையில் இருக்கும் இனியாவைப் பார்த்தவர், தனது பைக்குள் இருந்த குடுவை போன்ற ஒன்றை எடுத்து மகிழிடம் கொடுத்திருந்தார்.
மித்ரனோ யோசனையுடன் இனியாவை கீழே இறக்கி, மகிழின் பொறுப்பில் விட்டவன்,
“இது எந்த வருஷம் பெரியவரே? ஊருக்குள் எப்படிப் போகணும்?” என்றான், சரியாக வந்திருக்கிறோமா என உறுதிப்படுத்த எண்ணி.
அவரோ “இது ஐந்தாம் நூற்றாண்டு மகனே, வருடம் நானூற்றி ஐம்பது” என்க, தந்தை மகன் இருவர் முகத்திலும் அதிர்ச்சியின் ரேகை.
மீண்டும் அவரே “அதோ தெரிகிறது காலபைரவன் கோட்டை, இப்படியே சிறிது தூரம் சென்றால் ஊருக்குள் சென்றுவிடலாம். யான் வேறு விடயமாக வெளியில் செல்ல வேண்டும்…” என்றவர் அவர்களுடன் வந்து வழி சொல்ல முடியாது என்று தயங்கி நிற்க,
“பரவாயில்லை பெரியவரே நாங்களே போய்க்கிறோம். நன்றி” என்க, அவரோ குடுவையைப் பெற்றுக்கொண்டு முன்னே நடக்கத் தொடங்கி இருந்தார்.
மித்ரனிடமோ ஒரு பெருமூச்சு மகனை அர்த்தப் பார்வை பார்த்தவன் இனியாவிடம் பார்வையைத் திருப்பினான்.
அதற்குள் இங்கே அவள் ஓரளவுக்குத் தேறிவிட, மித்ரனோ அவளிடம் நிலைமையை விளக்க ஆரம்பித்தான்.
அவளையும் இதில் இழுத்து விட்டாகிற்று,இனிமேல் அதனை நொந்து என்ன செய்ய முடியும். இனி கடக்கும் நொடிகளின் கணங்களை தாங்க அவளை மனதளவில் இதற்கு தயார் செய்ய வேண்டுமே!
“டோல், லிசன், இது நம்ம கற்பனைக்கு அப்பாற்பட்ட விஷயம். நம்பக் கஷ்டம்தான், ஆனா இட்ஸ் ஹேப்பண்ட். என்னோட வைஃபைக் கண்டுபிடிக்க இங்க வந்திருக்கோம். டிரஸ்ட் மீ, உனக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மாமாவோட பொறுப்பு” என்றான், அவள் கண்களைப் பார்த்தபடியே தவிப்புடன்.
அவளோ புன்னகையுடன் அவனைப் பார்த்தவள், “இது நீங்க காப்பாத்திக் கொடுத்த உயிர் மாமா. ஊர்ல பிடிக்காத கல்யாணம். அதுக்கு பயந்து வாழ வழி தேடி ஓடி வந்த என்ன, என் மானத்தை அழிக்க நினைச்சவங்ககிட்ட இருந்து காப்பாத்தி, இத்தனை நாளா கூடவே வெச்சுப் பார்த்துக்கிட்ட உங்களுக்குச் செய்யாம யாருக்கு மாமா செய்யப் போறேன்?” என்க,
மகிழோ இடையில் புகுந்து, “வாழப் பிடிக்காம வந்தியா? அப்போ உன் லவ்வர் கூட ஓடி வரலையா?” என்று அதிமுக்கிய கேள்வியைக் கேட்டு, மித்ரனின் முறைப்பைப் பெற்றுக்கொண்டான்.
அவளோ இடம் வளமாகத் தலையசைத்து மகிழைப் பார்த்தவள், “அங்க என் அம்மாவோட தம்பிக்கும் எனக்கும் கல்யாணம்னு முடிவு பண்ணி இருந்தாங்க அதான்” என்றவள் மேலோட்டமாக நடந்தவற்றை அவர்களைக்கு விளக்கினாள்.
மறந்தும், மித்ரனைப் பாசமாக அழைக்கும் ‘மாமா’ என்று அதே வார்த்தை கொண்டு அந்த முரட்டுக்காளையை விளிக்க முடியவில்லை அவளால்…
சொன்னவள் சாதாரணமாகத்தான் சொல்லி முடித்தாள், ஆனால் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு ரணமாய் தான் இருந்தது.
அதிலும் மகிழின் மனநிலையை வார்த்தையில் அடக்க முடியாது. ‘இப்படியும் மனிதர்கள்’ என்று வெறுப்பாய் எண்ணிகொண்டவனது மனம் அவனவள் தற்போது அவன் அருகில் இருப்பதை எண்ணி சற்று ஆசுவாசம் அடைந்தது என்னவோ உண்மை.
இனியாவோ அமைதியாய் நிற்கும் மித்ரனிடம் மேலும் பேச்சை தொடர்ந்தாள்.
“இவங்க என்னையும் சேர்த்து கூட்டிட்டு வந்தது எவ்வளவு நல்லதா போயிடுச்சு” என்று மகிழை கை காட்டியவள்,
மீண்டும் “இதுல என் பங்கும் இருக்குறதுல எனக்குச் சந்தோஷம் தான். இன்னொரு நல்ல விஷயம், இது என்னோட ஊரு. நிச்சயம் என்னால ஏதாச்சும் உதவி செய்ய முடியும்” என்றாள்
அதுவரை அவள் பேசிய நீண்ட பேச்சு இதுவாகத்தான் இருக்கும்.
இவர்களிடம் பயந்து அவள் வார்த்தைகளை முழுங்க வேண்டியதில்லையே! அதனாலேயே விஜயாவிற்கு அடுத்தது இவர்களிடம் சாதாரணமாக இருந்தது அவள் பேச்சு.
மித்ரனோ “உன்னோட ஊரா?” என்று கேள்வி எழுப்ப,
மகிழோ “மித்து, இப்படியே இங்கேயே பேசிட்டிருக்கப் போறியா? ஏற்கனவே சம்பந்தமே இல்லாத இடத்துல வந்து மாட்டிக்கிட்டோம்னு இருக்கு. வா, ஊருக்குள்ள போய் விசாரிப்போம்” என்றவன், அவள் பேசியது சரிவர கருத்தில் பதியாமல் போக, இருக்கும் நிலையை உணர்த்த முயன்றான்.
மீண்டும் அவனே, “அதுசரி, நீ மனசுல நினைக்கிற இடத்துக்குத்தான் அந்த மாலை கொண்டுபோகும்னு சொன்ன. அப்போ அம்மா காணாமல் போன நேரத்துக்குத்தானே போயிருக்கணும். அப்புறம் எப்படி இவ்வளவு நூற்றாண்டு கடந்து?” என்று மண்டையைக் குடையும் கேள்வியைக் கேட்டான்.
அதில் மித்ரன் இனியாவிடம் கேட்க வந்த கேள்வி திசை மாறி இவன் கேள்வியில் வந்து நின்றது.
“எஸ், அப்படித்தான். ஆனா நான் மனசுல என் யாழ் இருக்குற இடத்துக்குத் தான் வரணும்னு நினைச்சேன் யாழ். சோ, நாம இங்க வந்திருக்கோம்னா, எப்படியோ என் யாழ் இங்க வந்து சிக்கியிருக்கணும்” என்றான் சரியாகக் கணித்து.
“எப்போவ், நீ குழப்பாத முதல்ல. என்னையும் ‘யாழ்’ என்கிற அம்மாவையும் ‘யாழ்’ என்கிற… சொன்னாலும் கேக்குறதில்லை. இனிமேல் நீ கூப்பிட்டா, ரெண்டு பேரும் திரும்பப் போறோம், மாட்டப்போற நீ” என்றவனது ஆர்வம் மித்ரனையும் தொற்றிக்கொள்ள, இப்போதே அவன் மனைவி கிடைத்து விட்டது போல் பூரிப்பு அவனிடம்.
அதன்பின் அவர்கள் பயணம் தொடர, சிறிது தூரத்திலேயே ஊரின் நுழைவாயில் கண்ணில் பட்டது.
அங்கே அந்த நுழைவாயில் அருகே யாரோ நிற்பதும் தெரிந்தது, ஆனால் முதுகுத் தோற்றம் தெரிந்ததால் முகம் தெரியவில்லை.
இன்னும் நெருங்க நெருங்க மித்ரனுக்கு முகத்தில் அத்தனை பரவசம் வந்து போனது. கூடவே ஏனென்று புரியாத கலக்கமும்.
காரணம் அந்த உருவத்துக்கு முன்னே நின்று பேசிய அவனவள்.
எத்தனை வருடம் கழித்துக் காணும் அவள் முகம்… பார்த்துக்கொண்டேதான் இருந்தான்.
இங்கேதான் இருக்கிறாள் என்று தெரியும், அவன் மனமும் அதையே அடித்துச் சொன்னது. ஆனால் இவ்வளவு விரைவில் அவளைக் காண்போம் என்றே எண்ணவில்லை அவன்.
இப்போது கண்டுவிட, பார்த்தது பார்த்தபடியே மெல்ல அவர்களை நெருங்கினான்.
சற்றுத் தொலைவில்தான் அவர்கள் நின்றிருக்க, பேசுவது எதுவும் புரியவில்லை, ஆனால் முன்னே நின்றிருந்தவனை அவள் அணைத்து அழுதது புரிய, மித்ரனின் உடலில் ஓர் திடுக்கிடல்.
அடுத்து என்னவென்று உணர்வதற்கு முன்பே அந்த ஆடவன் யாழினியைத் தூக்கிச் சென்றிருக்க, “யாழ்!” என்று கத்தியபடி பின்னால் ஓடினான் மித்ரன்.
வானில் பறப்பவனை ஓடிச் சென்று பிடித்துவிடத்தான் முடியுமா என்ன?
சிறிது தூரத்தில் அவன் அவ்விடத்திலேயே மடிந்து அமர, அவன் தோளில் மகிழின் கரம் ஆதரவாய் அழுத்தம் கொடுத்தது.
காதலைத் தேடும்
ஆஷா சாரா…



மின்னலே என் நெஞ்சிலே - பிரியதர்ஷினி S