Loading

காலம் தாண்டிய பயணம் 15 

 

அப்படி அவர்கள் திருமணம் முடிந்திருக்க, ஒரு மாதம் கடந்தும், இன்றும் அதே கோபத்துடன் வேண்டுமென்று சுற்றிகொண்டிருக்கும் கணவனின் செல்லக்கோபம் பொறுக்காமல் அவனைத் தேடி வந்திருந்தாள் யாழினி..

 

அணைப்புடன் மெத்தையில் இருவரும் சரிந்திருக்க,

 

இன்றும் கோபம் என்று நடிப்பைத் தொடரும் கணவனின் பொய் கோபம் பற்றி அவள் அறியாததா???

 

“பாவம்னு சாப்பாடு கொண்டு வந்தா, நீங்க என்ன வேலை பார்க்குறீங்க தேவ்? விடுங்க என்ன” என்றவள் கரம் அவள் பேச்சுக்கு எதிர்மாறாய்  கணவனை இறுக அணைத்துக் கொண்டது.

 

அதில் அவள் மீது தன் அணைப்பை இன்னும் இறுக்கிய மித்ரனோ  “யாழ், போயிடுடி” என்றான் கிறக்கத்துடன்…

 

உரிமை இல்லாத நேரம் வேறு ஆனால் இப்போதுதான் முழு உரிமை இருக்கிறதே அவனுக்கு…

 

இந்த ஒருமாதம் கடத்தியதே அவனுக்கு அத்தனை அவஸ்த்தை.

 

இப்போதும் அவளை எடுத்துக்கொள்ளச் சொல்லி ஒவ்வொரு அணுவும் போராட, அவள் கன்னத்தில் ஆழ்ந்த முத்தத்தைப் பதித்தவனோ எழுந்து கொண்டான்.

 

யாழினியின் கண்ணில் குறும்பு மின்ன அவனையே பார்த்திருந்தாள்.

 

“என்ன உசுப்பேத்தாம வந்து சாப்பாடு போடுடி” என்றவனின் குரலில் இன்னும் அவளுக்கான உணர்வுகள் மீதமிருந்தது.

 

அவள் சிறிய பெண் என்று எவ்வளவோ மனதில் பதிய வைத்தாலும், அவளோ காதல் ராட்சசியாய் அவனை ஆட்டிப் படைத்தாள்.

 

கண்களை வேறு பக்கம் திருப்பியவனது மனமோ ‘என் கண்ணுக்கு மட்டும் சின்னப்பொண்ணா தெரியவே மாட்டேங்கிறாளே ராட்சசி’ என்று செல்லமாய்த் திட்டிக்கொண்டது.

 

அவன் முகத்தில் தெரிந்த வெட்கம் மனைவியவளுக்கு புன்னகையைக் கொடுக்க,

 

“அது சரி தேவ், உங்களுக்கு வயசாகிடுச்சுல அப்போ அப்படிதான் இருக்கும். கல்யாணமாகி ஒரு மாசம் ஆகியும் இன்னும் வேடிக்கை மட்டும் தானா?” என்று கேட்டவளோ எழுந்து கொள்ளப் பார்க்க அது முடிந்தாள் தானே!!!

 

அவள் தான் அவன் கட்டுக்குள் இருந்தாளே…

 

“என்னடி நான் வயசானவனா உனக்கு பிச்சிடுவேன் ராஸ்கல்… சின்னப்பொண்ணு பாவம்னு விட்டு வெச்சா ரொம்ப தான், இன்னைக்கி நமக்கு ஃப்ர்ஸ்ட் டேயே நடக்கப் போகுது, யாருக்கு வயசாகிடுச்சுனு பார்க்கலாமா?” என்றவன் அவள் இதழ்களைத் தன் இதழ் கொண்டு அழுத்தமாக மூடி இருந்தான்.

 

அவளுக்கு அவன் உணர்வுகள் முன்னுரிமையாய் இருக்க, தன்னையே கொடுக்க முன் வந்திருந்தாள்.

 

கணவன் என்று அவன்மீது அத்தனை நம்பிக்கை அவளுக்கு, அதுவும் நான்கே  மாதங்களின் நிகழ்ந்த ஆழமான காதலுக்கே உரிய ரகசிய உணர்வு அது.

 

அவன் காதலில் இத்தனை நாள் திளைப்பவளுக்கு அவனைவிட வேறேது முக்கியமாய் இருந்திட முடியும்?

 

முத்தம் முற்று பெற அவளை நோக்கி “என்னடி என்ன டெம்ப்ட் பண்ணுறியா?” என்றவன் அவள் நாசி நுனியை கடித்து வைக்க, “ஆஆ” என்றபடி அவளது நாசியை தடவியவளோ இப்போது கோபம் கொண்டு கணவனவன் இதழ்களைக் கொய்திருந்தாள்.

 

அதன் பின் மொத்தமாய் அவள் அவனுள்…

 

மீள முடியாத மீள நினைக்காத சுழளுள் இருவரும்…

 

என்னதான் உணர்வுகளின் பிடியில் இருந்தாலும் அவன் செயல் அவளைக் காயப்படுத்தாத வகையிலேயே இருந்தது.

 

‘இருப்பதேழு வயது ஆண்மகனின் உணர்வுகளை வெறும் பதினெட்டு வயது கூடப் பூர்த்தி அடையாத பாவையால் சமாளித்திட முடியுமா?’  என்பதே அவனின் பயம்.

 

அந்த எண்ணமே அவனுள் அத்தனை மென்மையைக் கொடுத்திருக்க, மஞ்சத்தில் பூவாய் அவளை வருடிக் கொண்டாடினான்.

 

இணைவின் இறுதியில் அவன் நெஞ்சில் சுகமாய் அவள் துயிலில் இருக்க, அவனோ அவளது கேசத்தை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

 

அப்படியே படுத்திருந்தவன் அவளிடம் அசைவு தெரியவும் “யாழ், இந்த மாசமே எப்படியும் அந்தப் பொக்கிஷத்த கண்டுபிடிச்சிடுவேன்”  என்றான்.

 

அவளும் “ம்ம்ம்ம்” என்றபடி அவனுடன் ஒன்ற,

 

மீண்டும் அவனே “சீக்கிரமே நம்ம வீட்டுக்குப் போயிடுவோம். நீ அதுக்கப்பறம் நிறைய படிக்கணும். நமக்குன்னு ஒரு வீடு, நமக்குன்னு ஒரு குட்டி பாப்பா, அதுவும் உன்ன மாதிரியே செம்ம வாயாடியா பெத்து கொடுத்துடுடி. அப்பறம் உனக்கு என்ன எல்லாம் ஆசையோ எல்லாம் ஒவ்வொன்னா நிறைவேத்தி வெச்சு என் செல்லத்தக் கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துப்பேன்” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன்னோடு அணைப்பில் இறுக்கிக்கொண்டான்.

 

அவள் இந்த முறையும் “ம்ம்ம்ம்” கொட்ட, “என்னடி வெறும் ம்ம்ம்ம் எங்கிற” என்றவன் வலிக்க அவள் கன்னத்தில் கடித்து வைக்க,

 

“ஷ்ஷ்ஷ்” என்று முகத்தைச் சுழித்தவளோ அவன் அணைப்பிலிருந்தபடியே அவனை நிமிர்ந்து பார்த்து,

 

“இப்போ என்ன தேவ் வேணும் உங்களுக்கு, இதையே தான் எப்பவும் சொல்லுறீங்க, புதுசா சொல்லுற போல டெய்லி அதையே படிச்சா தூக்கம் வராம என்ன பண்ணும்” என்றவள் அவன் மீசை முடியை நீவி அதில் முத்தமிட்டாள்.

 

“அப்போ வேற பாடம் படிக்கணும்கிற?” என்று அவன் கேள்வியோடு அவளை நெருங்க, அவளோ பட்டென எழுந்தவள் மெத்தையை விட்டுத் தள்ளி நின்றபடி

 

“இன்னைக்கு கோட்டா முடிஞ்சிது பாவம் புள்ளைன்னு ஒத்துக்கிட்டது தப்புனு இப்போ புரியுது. இதுல மீண்டுமா? இனிமேல் வந்தா அடிதான்” என்றாள்.

 

அதில் அவனுக்கு உல்லாசம் பெறுக, ‘டைம் ட்ராவெல்லாவது ஒன்னாவது, இவள இப்படியே கூட்டிட்டு ஓடிடலாமா?’ என்ற எண்ணத்துக்கே போய்விட்டது அவன் மனம்.

 

அதே குதூகலத்துடன் தலைக்கு ஒரு கரத்தைக் கொடுத்து ஒருங்களித்துப் படுத்தவனோ “நாம நாளைக்கே இங்க இருந்து போய்டலாமாடி?” என்று கேட்க,

 

அவளோ “அப்போ வந்த வேலை என்னாகிறதாம் ஆஃபிஸர்?” என்று நக்கலாய் கேட்டு வைத்தாள்.

 

அவனோ “யாழ், ஐ எம் சீரியஸ், நிஜமாவே உன்ன கூட்டிட்டு போய்டணும்னு தோணுதுடி. சேர்ந்து வாழாதவரை ஓகே ஆனா இனிமேல் எல்லாம் உன்ன பிரிஞ்சிருக்க முடியாதுடி, போய்டலாமா?” என்றவன் மனது அதையே செய் என்று உறுதியாய் உந்தியதில் அவன் பேச்சில் அத்தனை ஸ்த்திரம்.

 

அவன் பேச்சில் தெரிந்த உறுதி அவளுக்குப் புரியாமல் இல்லை. ஆனால் அவன் வந்த வேலையை முடிக்காமல் அங்கிருந்து செல்வதில் அவளுக்கு துளியும் விருப்பம் இல்லையே!

 

“இங்க பாருங்க தேவ், நீங்க வந்த வேலையை முடிக்காம இங்க இருந்து நாம போகப்போறதில்லை. அவ்வளவு ஆர்வத்தோட வந்த உங்கள நம்ம காதல் வெறும் கையோட போக வைக்கணுமா? நிச்சயம் சீக்கிரம் கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. கடைசி முயற்சியா அந்தக் கிணத்துல பார்க்கணும் சொன்னீங்கல்ல,  வர்ற ஞாயிறு அதப் பார்த்துடலாம்” என்றாள்.

 

அவனோ புன்னகையுடன் “சரிங்க பொண்டாட்டி” என்று எழுந்து அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டவன்

 

“உனக்காகவே சீக்கிரம் கண்டு பிடிக்கிறோம், இங்க இருந்து போறோம். அடுத்த வாரம் வர்ற உன் பிறந்தநாள் அன்னைக்கு ரெடியா இரு, அதுவரை தான் தேடுறது எல்லாம். அப்பறம் கிடைச்சாலும் இல்லைன்னாலும் இங்க இருந்து நாம போகப் போறது உறுதி” என்றவனின் குரலிலும்  அத்தனை உறுதி இருந்தது.

 

மனைவியின் முகம் தெளிவில்லாததை உணர்ந்தவனது கரம் அவளில் தன் உரிமையை நிலை நாட்டத் தொடங்க,

 

அவனுக்கு ஒரு அடி வைத்தவளோ “என்ன இது விடுங்க என்ன? ஆளப்பாரு” என்று உதட்டைச் சுழிக்க, அவனோ சத்தமாய் சிரித்துவிட்டான்.

 

“ஐயோ, சத்தம் போடாதீங்க” என்று அவன் இதழைக் கை கொண்டு மூட அதிலும் ஒரு முத்தத்தை வைத்தான் கள்வன்.

 

“அடி தான் தேவ் வாங்க போறீங்க, சேட்டை அதிகமா இருக்கு” என்றவள் மீண்டும் அவன் நெஞ்சில் கை வைத்தபடி அமைதியாய் இருக்க, அவளின் தேவ்வோ என்னவென்று கண்களாலேயே வினவினான்.

 

“நாம போய்ட்டு கொஞ்ச நாள்ல இங்கேயே திரும்பி வந்துடலாமா தேவ்? இனிக்குட்டிய பிரிஞ்சு என்னால இருக்க முடியாதே! அவளும் இருக்க மாட்டா தேவ்” என்க,

 

அவனோ “சீக்கிரமே வந்துடலாம்டா, அப்படி இல்லனா டோல்லயும் நம்ம கூடக் கூட்டிட்டு போய்டலாம் சரியா நீ கவலைப்படாத” என்றவன் ஆறுதலாய் அணைத்திருக்க, அப்படியே கடந்த நொடிகள் அவன் அணைப்பைக் கணவனின் உரிமையாக மாற்றியது.

 

ஏகாந்த தனிமை, கூடவே புது மனைவியின் நெருக்கம். சற்று முன்னர் அறிந்து கொண்ட அவள் மென்மையென இப்படி அனைத்தும் தேவ் மித்ரனை படுத்தி வைக்க, அவன் ஆதிக்கம் அவளிடம் அதிகரிக்கவே செய்தது.

 

சிறிது நேரம் தன்னைக் கொடுத்து நின்றிருந்தவள் நேரம் செய்வதை உணர்ந்து “குளிச்சிட்டு வாங்க தேவ் சாப்பிடலாம்” என்று பின்னால் இருக்கும் குளியலறைக்குள் அவனைத் தள்ளியவள், அவளும் உள்ளே இருக்கும் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

மீண்டும் அவன்  வெளியே வர, அவனுக்கு உணவைப் பரிமாறியவள் அவனருகில் நிற்க, அவளைத் தன் மடியில் இருத்தியவன், அவளுக்கும் ஊட்டி விடத் தொடங்கினான்.

 

அதன்பின் அவர்களுக்கான நேரம் அவர்களை அவர்களது உலகுக்குள் அவர்களை இழுத்துக் கொண்டது.

 

நிகழவிருக்கும் அவர்களது பிரிவை அறிந்து கொண்டாலும் விதியால்  வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

 

_______________

 

 

வீட்டினுள் நுழைந்தவளை வள்ளி முறைப்புடன் பார்த்துக் கொண்டிருக்க, அதனை சட்டை செய்யாதவளோ நேரே உள்ளே அவளறைக்குள் நுழைந்து கொள்ள,

 

வள்ளியோ ‘ஆட்டமாடி ஆடுற உன் கொட்டத்தை அடக்கல நான் வள்ளி இல்லை’ என்று எண்ணிக் கொண்டவரோ கணவன் வருகைக்காகக் காத்திருந்தார்.

 

காசிநாதன் வீட்டுக்கு வந்தவர் கை கால் கழுவி வந்தும் மனைவியிடம் அமைதி தான். எப்போதும் வள்ளி அப்படி இருப்பவர் அல்லவே! யோசனையுடனே சாப்பிட அவர் அமர, அப்போதும் வள்ளியிடம்  மௌனம் தான்.

 

எதுவும் பேசாமல் உணவை எடுத்து வைத்த மனைவியின் கரத்தைப் பற்றியவர் “என்னாச்சு வள்ளி ஏன் எதுவும் பேசாம இருக்க” என்று கேட்க, மூக்கை உறிஞ்சியவரோ,

 

“ஆத்தா வந்திச்சுங்க, தம்பிய இப்படி ஒத்தைல விட்டுட்டியே அவனுக்கு ஒரு வாழ்க்கை வேணாமான்னு அழுதுட்டே என்கிட்ட கேட்டிச்சு. மனசே சரியில்ல” என்றார். அவருக்கு தெரியுமே கணவனுக்கு தன் தாய் மேல் எவ்வளவு மரியாதை என்பது…

 

அவர் எண்ணியது போல அதுவும் வேலை செய்ய, “அதான் பேசி முடிவு எடுத்துட்டோமே வள்ளி, யாழினி பிறந்தநாள் அன்னைக்கு கல்யாணம்னு அப்பறம் என்ன” என்றார்.

 

“ம்ம்ம்ம் உங்க மேல உள்ள நம்பிக்கைல தான் இருக்கேங்க நான். காளைக்கு ஒரு வாழ்க்கை அமைஞ்சிட்டா அது போதும் எனக்கு, அவன் ஒண்டிக்கட்டையா இருக்கறதுனால தானே கண்ட கண்ட பழக்கம் எல்லாம் வருது. அவனுக்குன்னு பதவிசா  பொண்டாட்டி ஒருத்தி வந்தா எல்லாம் சரியா நடக்கும்னு நம்பிக்கை தான் எனக்கு. அதுக்குன்னு இந்த ராங்கி என் தம்பிக்கு பொருத்தம் இல்லத் தான். ஆனா என்ன பண்றது அம்மாவோட ஆசைன்னு ஒன்னு கண்ணு முன்ன நிக்குதே அதுக்காக பார்க்க வேண்டி இருக்கு” என்றார் நீலி கண்ணீருடன்…

 

“அப்பா அவர் கெட்டது பத்தாதுனு அவரை மாதிரியே அவளையும் வளர்த்து விட்டுட்டாரு, என்ன பண்றது?? கல்யாணம் நடக்கும்னு வாக்கு கொடுத்திருக்கேன். நடக்கும் நடக்கணும்” என்றவர் உணவில் கவனமானார்.

 

வள்ளியின் முகமோ அந்த வார்த்தையில் பிரகாசமாகியது.

 

அவர் எதிர் பார்ப்பதும் அது தானே! தன்னை மதிக்காதவள் எப்படி நிம்மதியாக வாழ்கிறாள் என்று ஒரு கை பார்த்து விடுவதாக கங்கணம் கட்டிக்கொண்டு வளம் வருகிறாரே!!

 

கணவனை இந்தத் திருமணத்தை உடனடியாக நடத்துவதற்கு சம்மதிக்க வைத்தவர், அந்தச் செய்தியை அவர் மனதில் உறுதியாக்கவென, அவரது காதில் தினமும் போட்டுக் கொண்டே தான் இருந்தார்.

 

 

காதலைத் தேடும்…

 

ஆஷா சாரா…

 

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
10
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்