
காலம் தாண்டிய பயணம் – 11
கதையைச் சொல்லி முடித்த பூவிழியோ அமைதியாய் இருக்க,
யாழினியோ “அப்பறம் என்னாச்சு பூவிழி, அவங்க அதான் அந்த மோகினிக்கு உடல் கொடுக்க இங்க யாரும் பிறந்தாங்களா??” என்றாள் ஆர்வமாய் கதை கேட்கும் பாணியில்…
“இதுவரையில் இல்லை, ஆனால் அந்த மச்சத்தோட பிறந்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை. இனிமேல் பிறப்பெடுத்தால் தான் உண்டு” என்றவளுக்கு யாழினியை எதற்காக அழைத்து வந்திருக்கின்றான் என்பது புரிந்தது தான். ஆனால் அதனைச் சொல்லி அவளை நோகடிக்க விரும்பாமல்.
“எம்தமக்கை கூட அதில் ஒருவர் தான் யாழினி. என்ன செய்தும் தடுக்க முடியவில்லை. அவன் சாபத்தால் எம்மக்களுக்கு நிம்மதியும் இல்லை. இரவில் தினம் ஒரு பலி இங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றது. சில நேரம் கால்நடை, பதினெட்டு வயது பூர்த்தியானால் வீட்டின் மூத்த பெண்ணின் உயிர், அதுமட்டுமல்ல மற்ற பெண்கள் கூட சில நேரங்களில் பலி கொடுக்கப்படுகின்றனர். இப்படி யார் இறப்பர் என்று தெரியாமல் பயத்தில் கதிரவன் மறைவுக்கு முன்னே தன் பெண் குழந்தைளோடு வீட்டில் அடைந்து இரவைக் கடத்தும் எம்மக்கள் படும் இடர் சொல்லில் அடங்காது யாழினி” என்றாள் துளியாய் கண்ணிலிருந்து இறங்கிய கண்ணீரோடு…
யாழினி தோழியவள் சொன்னவற்றை நம்ப முடியாமல் அதனை உள்வாங்கிக் கொண்டபடி, “அவன் கெட்டவன் தானே பூவிழி அப்பறம் எப்படி அவன் சாபம் எல்லாம் பலிக்குது?” என்றாள் கேள்வியாக…
“அது நூறு வருடங்களுக்கு ஒருமுறை வரும் அரிய அமாவாசை என்பதால் அன்று தீய சக்தியின் சக்திகள் பல மடங்கு உயரும், அதிலும் நாக மச்சம் கொண்ட வீரவேந்தனைப் பலிகொடுத்ததில் மேலும் சக்தி அதிகரித்ததனால் ஏற்பட்ட விளைவு அது. ஒவ்வொருவராய் இறப்பார்கள் என்று தெரிந்தும் அவர்களைக் காக்க முடியாமல் தவிக்கின்றோம் யாழினி” என்றாள் பூவிழி சோர்வாய்
யாழினியோ “பூவிழி, மார்த்தாண்டன் காலபைரவன் பக்தனா இருந்ததா தான சொன்ன அப்பறம் ஏன் இப்படி எல்லாம் செய்யணும்?” என்று கேட்க,
பூவிழி “அவன் பைரவ பக்தனா???” என்று விரக்தியாக கேட்டவளோ மீண்டும்,
“இந்தப் பிறவி மட்டுமல்ல அதற்கு முன்பிருந்த பிறவியும் அவன் பைரவனுக்கு எதிராய் உலகை அடக்கியாளவே பிறப்பெடுத்துத் தோற்றவன் யாழினி. மோகினியைக் காணும் வரை அவன் பைரவ பக்தன் தான்” என்று நிறுத்த, யாழினி புரியாமல் பார்த்தாள்.
அவளது பார்வையின் அர்த்தம் உணர்ந்தவளோ “இதற்கு முந்தய பிறவிகள் அத்தனையிலும் அவன் காதல் மனைவியாக இருந்தவள் அந்த மோகினி. மார்த்தாண்டன் பருவ வயதை அடைவதற்காகக் காத்திருந்து அவன் முன் தோன்ற, அவளைக் கண்ட நொடி அவனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் மீண்டிருந்ததில் உண்டான விளைவுகள் தான் இப்போது யாம் நேரிடுவது. இந்தப் பிறவியில் அவன் ஆட்டம் சற்று அதிகமாகவே உள்ளது. இவை கூட சித்தர் வான்மீகி மூலம் எமக்கு தெரிய வந்தவை தான். இவற்றை விட எமக்குத் தெரியாமல் அவன் பல விடயங்களை நிகழ்த்திக் கொண்டு தான் இருக்கிறான். விரைவில் இடர் தீர வழி பிறக்க வேண்டும்” என்றவளின் இறுதி வார்த்தையில் அத்தனை உறுதி…
யாழினியோ அவள் கரத்தைப் பற்றித் தன் கரத்தினுள் வைத்துக்கொண்டவள் சற்று முன் அவள் கொடுத்த தைரியமான அழுத்தத்தை அவளுக்குக் கொடுத்தபடி,
“நீ எனக்கு சொன்னது தான் பூவிழி, சீக்கிரமே எல்லாம் சரியாகும். பைரவன் பார்த்துப்பான்” என்று உறுதியாய் சொன்னவளின் மனதில்
‘தன்னை இங்கே கொண்டு வந்த நோக்கம் என்னவோ?’ என உள்ளே ஒரு பய பந்து உருளவே செய்தது. கூடவே அவள் மனம் வேதனையுடன் அவளவனை எண்ணிக் கொண்டது.
‘தேவ், என்ன தேடுவியா தேவ், உன்ன விட்டு ரொம்ப தூரமா வந்துட்டேன். எனக்கு உன்ன பார்க்கணும் தேவ், உன்னோட காதல் எனக்கு வேணும் தேவ். சீக்கிரமே உன் கிட்ட வந்துடுவேன் தேவ்’ என்று நெஞ்சோடு அவன் கட்டிய தாலியை அணைத்தபடி பிதற்றினாள்.
______________
இங்கே மித்ரனோ அந்தப் பூங்காவிலிருந்து எப்படி வீட்டுக்கு வந்து சேர்ந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை. கால் போன போக்கில் அப்படியே நடந்தே வீடு வந்துவிட்டான்.
வண்டியை எடுக்க வேண்டுமே என்ற எண்ணம் கூட அவனிடத்தில் இல்லை…
வீட்டின் மணியை அவன் அழுத்தி நிற்க, இனியாவோ கதவைத் திறந்தாள்.
அவன் நின்றிருந்த கலைந்த தோற்றம் அவளுக்கு எதுவோ சரியில்லை என்று தோன்ற, “என்னாச்சு மாமா?” என்று வினவினாள்.
ஆனால் அவனிடம் பதிலில்லை. அவன் மனமோ கேள்விகளிலும் அவனவள் நினைவிலும் லயித்திருக்க, வேறு எதுவும் அவன் கருத்தில் பதியவில்லை.
அவள் கேள்விக்குப் பதிலளிக்காமலே அப்படியே அவனது அறைக்குள் நுழைந்தவன், சிறிது நேரத்திலேயே மீண்டும் அருகில் இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டான்.
இனியாவோ மூடி இருந்த கதவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
நேரம் கடந்து கொண்டே செல்ல, அவன் வெளியே வரும் வழியையும் காணவில்லை…
இங்கே அவள் வந்த நாளிலிருந்து ஒரு சிறு புன்னகையுடன் ‘டோல்’ என்று அத்தனை உரிமையாய் பாசமாய் அழைக்கும் அவன் இன்று தன்னுடன் பேசாமலேயே கதவை அடைத்துக் கொண்டது அவளுக்கு ஏதோ போல் தான் இருந்தது.
‘என்னவாக இருக்கும்?’ என்ற கேள்வியுடன் அமர்ந்திருந்தவள் அடுத்துக் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டுத்தான் போனாள்.
மித்ரன் இருக்கும் அறைக்குள் இருந்து தான் அத்தனை சத்தம்.
எதையோ அடித்து உடைப்பது போல் பெரிய சத்தம், உண்மையில் பயந்துவிட்டாள் பெண்ணவள்.
அந்தக் கதவைத் தட்டியவள் “மாமா என்னாச்சு?” என்று அவள் எத்தனை தடவை அழைத்தும் உள்ளே பதிலில்லை, ஏதேதோ உடையும் சத்தம் மட்டுமே…
இங்க இப்படி இருக்க அங்கே மருத்துவமனையின் ஆய்வு கூடத்தில் தனியே அமர்ந்திருந்தான் மகிழ் யாழன். எப்படி யோசித்தாலும் ஏதோ ஒரு முட்டுக்கட்டை வந்து கொண்டே தானே இருக்கிறது.
மித்ரன் மீது கொள்ளைப் பிரியம் அவனுக்கு, எப்படியாவது அவனுக்குத் தேவையானதை கொடுப்போம் என்றால், எத்தனை போராடியும் அவனால் முடியவில்லையே!
இயற்கைக்கு மாற்றமான காரியம் என்கையில் அவன் கையில் எதுவுமில்லை தான், ஆனால் ஏனோ மனம் கனக்கவே செய்தது.
இரத்த உறவே இல்லாமல் தனக்கு தந்தையாகப்பட்டவனுக்கு, உயிரையே கொடுக்க அவன் தயாராய் இருக்கிறான்.
ஆனால் அவனுக்குத் தேவை இவன் உயிர் அல்லவே மாறாக அவன் உயிரானவளாகிற்றே!!
தான் அறிந்து கொண்ட தந்தையின் காதல் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது.
இரண்டு வருடமாக ஒருத்தியைத் தேடி அந்த அவஸ்த்தையை அனுபவித்தவனுக்கு, தந்தையின் பதிமூன்று வருட தவம் புரியாமல் போகுமா என்ன???
அதிலும் அதற்கான காரணம் அவனாக இருக்கூடும் என்ற எண்ணமே அவனை வதைத்தது.
‘தன்னால் தானே அன்று தந்தையால் சரியான நேரத்துக்கு தாயைப் பார்க்கச் செல்ல முடியவில்லை’ என்ற குற்ற உணர்வு அவனுக்கு…
எத்தனையோ விசாரித்தாகி விட்டது. யாழினி பற்றி எந்தத் தகவலும் இல்லை. உயிருடன் இருக்கிறாளா? இல்லையா? எங்கு சென்றிருப்பாள்? என்னவாகி இருக்கும்? இப்படி எந்தக் கேள்விக்கும் மித்ரனிடமும் பதிலில்லை, எத்தனை தேடி அழைந்தும் மகிழுக்கும் பதில் கிடைக்கவில்லை.
அவர்களது இறுதி ஆயுதம் தான் இந்தக் காலப் பயணம்.
சரியாக அவள் காணாமல் போன தினத்துக்கே சென்று என்னவாகி இருக்கும் என நேரில் பார்க்கலாம் என்று தான் தந்தையும் மகனும் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் அது ஒன்றும் இலகுவான காரியம் இல்லையே! இதோ கடந்த பதிமூன்று வருடங்கள் அதற்கு சான்றல்லாவா???
அந்த நாள் மித்ரனுக்கு மட்டுமல்ல, மகிழுக்கும் முக்கியமான நாள் தானே!
கண்ணிமைக்கும் நொடியில் அனாதையாகி மிதரன் அவனுக்கு உறவாய்க் கிடைத்த நாள்.
இந்தக் கலப்பயணம் அவன் தாய் தந்தையையும் மீட்க உதவுமே! என்று ஒரு எண்ணம் அவனுள் ஓடிக்கொண்டு தான் இருந்தது.
அப்படியே அமர்ந்திருந்த மகிழின் எண்ணங்களோ அன்றைய நாளுக்கே சென்றது.
_________
பதிமூன்று வருடங்களுக்கு முன்…
“ப்பா, இன்னுமாப்பா இந்த அம்மா வரல” என்று கேட்டபடியே கோயிலின் வாசலில் நின்றிருந்தான் பன்னிரண்டு வயதான மகிழ்.
அவனது தந்தையோ “அவ சும்மாவே வேண்டோ வேண்டுன்னு வேண்டி சாமியையே கதற வைப்பா, இப்போ உனக்கு ஆபத்துனு வேற ஜோசியர் சொல்லிட்டாரு சொல்லவா வேணும். இரு வருவா?” என்று சொல்ல, அவனோ சலிப்புடன் தான் நின்றிருந்தான்.
பத்து வருடங்கள் கழித்து அவர்களது பூர்வீகமான பைரவக் கோட்டைக்கு வந்திருந்தனர் அவர்கள் குடும்பத்தினர்.
மகிழின் தாயார் பிறந்து வளர்ந்த ஊர் என்றாலும் அவரது திருமணத்தின் பின்னர் இங்கிருந்து சென்றிருந்தார்.
அதிலும் அவரது தாய் தந்தை இருவரும் இயற்கை எய்தி விட, அதன் பின் இங்கே வரமுடியாமலேயே போய்விட்டது.
இரண்டு நாட்களின் முன் அவர் கண்ட பயங்கர கனவின் தாக்கம், அவரை ஒரு ஜோதிடரைத் தேடிச் செல்ல வைத்திருக்க, விளைவு இதோ இந்த நடு இரவில் பைரவன் கோயிலில் குடும்பமாய் நிற்கின்றனர்.
‘பைரவா, என் மகனுக்கு எந்தக் கண்டம் வந்தாலும் அவனைப் பாதுகாக்க வேண்டியது உன்னோட பொறுப்பு, இந்த ஊர விட்டுப் போயிருந்தாலும் தினமும் நான் உன்னத்தான் வழிபட்டேன் என்கிறது உண்மைனா என் மகன் இனிமேல் உன் பொறுப்பு’ என்று மனம் உருக வேண்டிக்கொண்டிருந்தார் மகிழின் தாய்.
‘மகனுக்குப் பெரும் கண்டம் இருக்கிறது’ என்று ஜோதிடர் சொன்னதிலிருந்து ஒரு தாயாய் அவர் மனம் படும் பாடு அவர் ஒருவரே அறிவார்.
பிராத்தனையை முடித்தவர் அங்கிருந்து நகர, பைரவனின் சிலை உண்மையில் சிலையாய் தான் போனதோ என்னவோ?? தன் இறுதி நொடிகளைத் தேடி வந்த, அந்தத் தம்பதிகளைத் தடுக்க முடியாமல் விதியின் ஆட்டத்தைச் சிலையாய் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.
வெளியே வந்த தாயைப் பார்த்தவன் “மா இட்ஸ் கெட்டிங் லேட், தூக்கம் வருதுமா, அப்படி என்னமா இன்னைக்கே வந்தாகணும்னு பிடிவாதம், நாளைக்கு வந்தா உங்க பைரவர் ஒத்துக்க மாட்டாரா?? டூ பேட் மா… இப்போ மறுபடியும் நைட் ட்ராவல் பண்ணனும்” என்று சலித்துக்கொண்டவன் முதுகில் ஒன்று போட்டவர்,
“படவா என் பைரவரயே பேசுவியா நீ” என்று மீண்டும் அவன் கன்னத்தைப் பற்றியவரோ,
“எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் மகி கண்ணா சீக்கிரம் வீட்டுக்குப் போய்டலாம். அப்பறம் அம்மா உனக்குப் பிடிச்ச ரசகுல்லா பண்ணித்தறேன்” என்றார்.
ரசகுல்லா என்றதும் சமாதானமாகியவன் “யம்மி ரசகுல்லாக்காக உன்ன மன்னிச்சு விடுறேன்” என்றான் போனால் போகிறது என்பது போல,
அதில் அவன் அம்மா அப்பா இருவரும் சிரித்துவிட, அதன் பின் அவர்களது பயணம் முடிவை நோக்கி ஆரம்பம் ஆனது.
எல்லாம் சரியாகத் தான் சென்று கொண்டிருந்தது. பயணம் ஆரம்பித்து அடுத்த பத்து நிமிடத்தில் எல்லாம் தீடீரென உருவான புயல் காற்றினால் அவர்களது வாகனம் தன் கட்டுப்பாட்டை இழக்க, காரை ஓட்டிக்கொண்டிருந்த மகிழின் தந்தைக்கு அதிகரித்த வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது.
அவர் முயற்சி அத்தனையும் வீணாகியதன் விளைவாய் வாகனம் தள்ளாடியபடி அங்கு ஓரமாய் இருந்த பெரிய மரம் ஒன்றில் மோத, மோதிய வேகத்தில் கார் சிறிது பின்னே வந்து மீண்டும் அந்த மரத்திலேயே மோதியது.
அன்று தான்!! அன்றே தான்!! சற்று முன்னர் யாழினியை கவர்ந்து சென்றிருந்தான் மார்த்தாண்டன். அந்தத் திடீர்ப் புயலுக்கும் காரணம் அவனே!!
அன்று யாழினியின் வருகைக்காக ஊரினைத் தாண்டி இருக்கும் பிரதான வீதியில் காத்திருந்தது என்னவோ மித்ரன் தான்.
அந்த நேரத்தில் தான் இவர்கள் கார் அந்த மரத்தில் மோதி இருந்தது. விரைந்து செயற்பட்ட மித்ரனோ, அடுத்த அரைமணி நேரப் போராட்டத்தின் பின், மூவரையும் சற்றுத் தொலைவில் இருந்த அந்த மருத்துவனையில் அனுமதித்திருந்தான்.
மகிழின் தாயோ சம்பவ இடத்திலேயே மரணித்திருக்க, அவன் தந்தையின் உயிர் எதையோ சொல்லப் போராடியபடி ஊசலாடிக் கொண்டிருக்க, மகிழ் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தான்.
மித்ரனுக்கோ உலகமே ஸ்தம்பித்த உணர்வு, ‘தன்னவள் தன்னை தேடி வருவாளே’ என்ற பதப்பதைப்பு ஒரு புறம், ‘இங்கே ஊசலாடும் மூன்று உயிர் ஒரு புறம்’ என அவன் நிலை அந்த நிமிடங்களில் தடுமாற்றம் தான்.
இப்படியே யோசனைகளுடன் மித்ரன் அமர்ந்திருக்க, வெளியே வந்த மருத்துவரோ,
“அந்த லேடி சம்பவ இடத்துலேயே இறந்துட்டாங்க சார், அந்தப் பையனோட நிலைமை கொஞ்சம் கிரிட்டிகல் தான், பட் வி டூ அவர் பெஸ்ட்.. அண்ட் அந்தப் பையனோட அப்பாவ காப்பாத்துறது…” என்று நிறுத்தியவர் இல்லை என்பதாய் தலையசைத்து பெருமூச்சு விட்டவாறு,
“உள்ள போய்ப் பாருங்க, அவர் ஏதோ சொல்ல விரும்புற போலத் தெரியுது” என்று வெளியேறி விட, மித்ரனோ கணக்கும் மனதுடன் தான் உள்ளே நுழைந்தான்.
அங்கே தலையில் கட்டுடன் கண்களில் வேதனையை நிரப்பி மெத்தையில் படுத்திருந்த மகிழின் தந்தையோ இவனைக் கண்டதும் கையை அசைத்து அவனை அருகில் அழைக்க, இவனும் அருகில் சென்றான்.
மிதரனின் கரத்தைப் பற்றிக்கொண்டு “என் பையன பார்த்துக்கோ தம்பி” என்று கண்களில் பரிதவிப்புடன் வார்த்தைகளைக் கடினப்பட்டு உச்சரித்தவரின் இறுதி மூச்சு நின்றிருந்தது.
அவனும் தாய் தந்தையை இழந்தவன் தானே, அக்கா மட்டும் இல்லையேல் அவன் நிலை என்னவாகி இருக்கும். இப்போது தாய் தந்தையை ஒரே நேரத்தில் இழந்து நிற்கும் அந்தச் சிறுவனின் நிலை அவனுக்கு மனபாரத்தையே கொடுத்தது.
அடுத்து வந்த நாட்களில் கண் விழித்த மகிழிடம் பேசியதில் அவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதை அறிந்தவனுக்கு அப்படியே விட்டுச் செல்லவும் மனதில்லை, அடுத்த ஒரு வாரமும் அந்த மருத்துவமனை வாசம் தான் அவனுக்கு…
இடையில் அவன் காதல் மனைவியை எங்கேயெனத் தேடிச் சென்ற இடத்திலும் பதில் பூச்சியம்…
ஊரில் அவள் ஓடிப்போய்விட்டதாகச் சொல்ல, உடையவனுக்கோ கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட நிலை தான்…
இதை எல்லாம் விடத் தாய் தந்தையை எண்ணிக் கவலைப்படும் மகிழை அவனால் சமாளிக்க முடியாமல் போக, அவனுக்கு நிலைமையை எடுத்துச் சொல்லிப் புரியவைத்தான்.
கூடவே தந்தையாகாமலேயே பன்னிரெண்டு வயதுச் சிறுவனுக்குத் தந்தையாகினான். குருதி மட்டுமல்ல இரத்த உறவையும் கொடுக்கத் தாயாராகி இருந்தான்.
தாய்மை என்பது பெண்களுக்கு மட்டுமென்றில்லையே! தாய் தந்தை இல்லா வலியை அனுபவித்தவன் அவன், அவனைவிட வேறு யாருக்கு மகிழின் நிலை புரியப் போகிறது.
மகிழை தன்னுடனே அழைத்து வந்தவன், இன்று வரை அவனுக்குத் தோள் கொடுக்கும் தோழனாய், கண்டிக்கும் தகப்பனாய், அரவணைக்கும் அன்னையாய்… இப்படி எல்லாமாகவும் அவன் வாழ்வில் இன்றியமையாததாகிப் போனான் மித்ரன்.
மகிழும் அவனது ஒவ்வொரு உணர்விலும் ஒவ்வொரு உறவாய் மித்ரனைத்தான் தேடினான்.
மிகவும் உடைந்து போயிருக்கும் வேளையில் தந்தையாய் என்றும் மித்ரன் வேண்டும் அவனுக்கு…
இதோ அவனது பதிமூன்று வருட வாழ்வில் அவனுக்குத் தூணாய் நின்றிருக்கும் இனிமேலும் நிற்கும் உறவுக்கு, அவன் உயிரை மீண்டுக் கொடுப்பதை விட என்ன தான் கைமாறு செய்திட முடியும்.
அவர்கள் உறவு இன்றும் என்றும் விசித்திரம் தான். அவர்கள் இருவரையன்றி யாராலும் உணர்ந்து கொள்ள முடியாத உணர்வு பிரவாகம் அது…
காதலைத் தேடும்…
ஆஷா சாரா…


