Loading

அன்று வசந்த் இரவு வேளையில் “குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? “என்று கேட்க .

 

“சரி” என்று தலையாட்டி சிரித்து விட்டாள்.. அன்று அவர்களுக்கான இரவாக அந்த பொழுது கழிந்தது ..

 

நாட்கள் வேகமாக சென்றது. இருவருக்கும் திருமணமாகி ஐந்தாவது மாதம் நெருங்கி இருந்தது..

 

அப்பொழுது நிவேதா காலேஜ் விட்டு வந்து இரவு வேளையில் கையை பிசைந்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள் .

 

அப்பொழுதுதான் வசந்த் வீட்டிற்குள் நுழைந்தவன் “படிக்கலையா? என்ன யோசனையா உட்கார்ந்திருக்க?” என்று கேட்டான் ..

 

வேகமாக எழுந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டு அழுதாள்.

 

” என்ன ஆச்சு யாராவது ஏதாவது சொன்னாங்களா? இல்ல வீட்டுல ஏதாவது திட்டினாங்களா? என்னடி ஆச்சு “என்று பதறினான் ..அவளது அழுகையில் என்னவென்று உணர்ந்து கொள்வது என்று புரியாமல் ..

 

அப்போதும் , அவள் அழுகையுடனே அவனை கட்டி அணைத்துக் கொண்டிருந்தாளே தவிர விவரத்தை சொல்லவில்லை.

 

அவளின் பதிலை எதிர்நோக்கி சில நொடிகள் காத்திருந்தான்.

ஆனால் அவள் மௌனமே அவனைச் சினமூட்டியது.

“என்னடி நடந்தது? யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா?

ஏதாச்சும் சொன்னாங்களான்னு தானே கேட்கிறேன் சொல்லித் தொல.. அமைதியா இருந்து கொல்லாத!” என்று வெடித்தான்.

“அம்மா ஏதாவது சொன்னாங்களா?

இல்ல, வீட்டில வேற யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா?”

என்று கேட்டு விட்டு, அவளின் பதிலுக்காக அமைதியாக நின்றான்.

 

 

 

தனது அண்ணி ஏதாவது சொன்னார்களா? என்று அவனால் கேட்க முடியாமல், அமைதியில் மூழ்கினான்..

 

வாய் திறந்து “இல்லை”என்றவள்.. மேற்கொண்டு வேறு எதுவும் சொல்லாமல் அவள் மௌனம் சாதிக்க..

 

அவளின் அமைதி, அவன் பொறுமையை மெல்ல மெல்ல சிதைத்தது. “ஏதாவது சொன்ன தான தெரியும் ?”என்று சீறினான்..

 

அப்போது, தன் கையில் இருந்ததை அவனுக்குக் காட்டிவிட்டு, நிவேதா அவனது கண்களையே துளைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

 

வேகமாக அவளை இழுத்து தன்னுள் புதைத்துக் கொண்டான்… அவனது இதயம் கட்டுப்பாடின்றி வேகமெடுத்துத் துடிக்க ஆரம்பித்தது.

 

அவனது இதயம் அவளுக்குள் வரை உணரப்படும் அளவிற்கு வேகமெடுத்துத் துடித்தது.“எப்ப டி பார்த்த?” என்றவனது குரலில் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்திருந்தது.

 

“உனக்கு கிட் யார் வாங்கிக் கொடுத்தா? நீ என்கிட்ட சொல்லவே இல்லையே?”

என்று அவளது விழிகளை ஊடுருவிப் பார்த்தபடி கேட்டான்.

 

 

“இ..இல்ல அ..அது அம்மா கொடுத்துவிட்டு இருந்தாங்க ..

அம்மாவுக்கு நாள் தள்ளி போயிருச்சுன்னு தெரியும். செக் பண்ணி பார்க்க சொல்லிக் கொடுத்திருந்தாங்க அதான்!” என்றாள் திக்கி திணறி.

 

“அப்போ என்கிட்ட சொல்லணும் என்று உனக்கு தோணலையா? “என்று அவளது கன்னங்களை தன் கைகளில் ஏந்தி கொண்டு பரிவாக கேட்டான்..

 

அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். “அப்படி இல்ல.. அம்மாவாவே தான் கேட்டிருந்தாங்க .. நாள் தள்ளி போயிருக்கு உனக்கு என்று  சொல்லிட்டு அவங்களா தான் கொடுத்து அனுப்பி இருந்தாங்க” ..

 

“அதாண்டி கேட்கிறேன். உனக்கு நாள் தள்ளி போய் இருக்குன்னு என்கிட்ட சொல்ல முடியாதா?” .

 

சொற்கள் உறைந்த தருணம் அவளிடம் ….எதுவும் பேசவில்லை .சிறிது நேரம் அவளுடன் தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டவன்..

 

ஏதோ ஏதோ பேசிக்கொண்டு  இருந்தான் .

 

“இனி  நமக்கே நமக்காக ஒரு உறவு என் பொண்ணு வந்துருவா”  என்றான் உணர்ச்சி பெருக்கில் குதூகலமாக.

 

” ஏன் உங்களுக்குன்னு இதுவரை உறவே  இல்லையா? அப்ப நான் யாரு? உங்க அம்மா , அப்பா , அண்ணன், தம்பி என்று எல்லாரும் இருக்காங்க அவங்கலாம் யாரம் ?”..

 

“எத்தனை உறவு இருந்தாலும், இந்த உறவு ஸ்பெஷல் தான் டி.

என் பொண்ணு என் கைக்கு வர போறா இன்னும் கொஞ்ச நாள்ல” என்று மகிழ்ந்தான் வசந்த் .

 

“ஏன் பொண்ணு தான் வேணுமோ ?பையன் வேண்டாமோ?” .

 

“உனக்கு பையன் வேணுமா.. ?எனக்கு பாப்பா தான் வேணும் .. பொண்ணுனா தான் எனக்கு விருப்பம் !”என்று முத்துப்பற்கள் தெரிய புன்னகையைச் சிதறவிட்டான்..

 

“எனக்கும் பொண்ணு தான் வேணும்!” என்று சொல்லி அவனது தலையோடு தலை முட்டினாள் மகிழ்வாக..

 

பிறகு ,தனது அம்மாவிற்கு ஃபோன் செய்து விஷயத்தை சொன்னாள் நிவி.

 

கவிதா சந்தோஷப்பட்டு கொண்டார் ..” உங்க அத்தை கிட்ட சொல்லிட்டியா? நிவி” என கேட்க .

 

“இல்லம்மா. நான் எப்படி அவங்க கிட்ட சொல்றது?” என்றாள் கேள்வியாக .

 

“சொல்லுடி சந்தோஷப்படுவாங்க! பேசாமலே போயிடுவாங்களா என்ன? அதெல்லாம் பேச செய்வாங்க… நீ போய்ட்டு சொல்லு “என்றார் ஒரு தாயாக.

 

“இப்போ வா அம்மா காலைல சொல்றேன்”.

 

“இப்பவே சொல்லு “என்றார் .

 

நிவேதா ஒரு சில நொடி யோசனைகளுக்குப் பிறகு, நேரத்தை பார்த்தாள் .

 

அது இரவு எட்டு மணியை தொட்டு இருந்தது.யோசித்து விட்டு வெளியில் வந்தாள்.

 

அவளுடைய மாமியார் அவளுக்கு எதிர் வீட்டில் இருக்க..

 

கதவு அடைக்கப்பட்டிருந்தது. ‘அது குள்ள தூங்கிட்டாங்களா ?’என்று மனதிற்குள் தைரியத்தை வர வைத்து கொண்டு அவளது மாமியார் வீட்டு கதவைத் தட்டினாள்.

 

கதவை திறந்தவர். “இந்த நேரத்தில என்ன? அவன் இன்னும் வரலையா?”என்றார்..

 

“வந்துட்டாரு அத்தை”..

 

“அப்புறம் என்ன?ஏதாவது சொன்னானா?” என்று கேட்டார் வசந்தா..

 

அவள் அமைதியாகவே நிற்க. “ஏதாச்சும் சொன்னா தானே தெரியும் ..?”

 

“அ..அத்தை… அது…”

என்று சொல்லி நின்றவள், ஒரு கணம் மௌனத்தில் மூழ்கினாள்.வார்த்தைகள் வாயிலே சிக்கிக் கொள்ள,

வசந்தாவின் கண்ணையே பதற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“எனக்கு நாள் தள்ளிப் போயிருக்கு அத்தை,” என்ற அந்த ஒற்றை வரி மௌனத்தை உடைத்தது.

 

வசந்தா வெளி திண்ணையில் உட்கார்ந்தவர் ..தனது மருமகளையும் அருகில் உட்கார வைத்துக் கொண்டு அவளது கண்ணை ஒரு சில நொடி ஆழ்ந்துப் பார்த்து விட்டு “உண்மையாவா ?” என்றார்…

 

“ஆமா அத்தை!” என்றாள்.

 

“ஹாஸ்பிடல் போயிட்டு வந்தீங்களா ?சொல்லவே இல்ல? ,போன மாதிரியும் தெரியல?” என்றார்.

 

“இல்லத்தை ஹாஸ்பிடல் போல ,அது வீட்டிலேயே பார்க்கிற கிட் ஒன்னு இருக்கு ,அதுல இப்போ தான் பார்த்தேன்”.

 

“அதுல பார்த்தா உண்மையை இருக்குமா? என்ன ?..”

 

“உண்மையா தான் இருக்கும்” என்றாள் லேசான மென் சிரிப்புடன் …

 

‘இது கூட அவருக்கு தெரியாதா ?’என்று மனதிற்குள் எண்ணி சிரித்துக் கொண்டே சொன்னாள் .

 

“அவன் என்ன சொன்னான்?” என்றார்..

 

‘தனது மகன் மீது இவ்வளவு ஆசை இருக்க ..எதற்காக தான் பெற்ற மகனிடம் பேசாமல் வெறுத்து ஒதுக்க வேண்டும் ‘என்று தான் தோன்றியது நிவேதாவிற்கு .. தனது மாமியாரையே பார்த்துக் கொண்டிருந்தாள் .

 

 

தன் மகனின் சந்தோஷம்… அதுவும் அவன் தந்தையாகப் போகிறான் என்ற ஆனந்தத்தில், வசந்தா தனது மருமகளின் முகத்தையே பார்வை விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்..

 

“சரிடி நாளைக்கு ரெண்டு பேரும் ஹாஸ்பிடலுக்கு போயிட்டு காமிச்சிட்டு வந்துருங்க எதுக்கும் ஒரு தரம் “என்றார்.

 

“சரித்தை “என்றாள்.

 

” சரி நேரம் ஆகுது போய் தூங்கு” என்றார் .

 

அவ்வளவுதானா! என்பது போல் ஒரு சில நொடி யோசித்து விட்டு, “சரி” என்று விட்டு அவள் வீட்டிற்குள் வந்து கதவை தாழ்ப்பாள் போட போகும் நேரத்தில்..

 

வேகமாக தனது கையில் கற்பூரத்தை எடுத்துக்கொண்டு சென்ற வசந்தா அருகில் உள்ள பெரியாயி கோவிலில் கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டு வணங்கி விட்டு வந்தார்.

 

அதை பார்த்தவுடன் அவளது கண்கள் லேசாக கலங்கச் செய்தது.

 

தன் மீதோ இல்லை ,தன் கணவன் மீதோ கோபம் இருந்தாலும் ,பாசம் அதை விட அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்தவள் ,தனது கணவனைப் பார்க்க..

 

அவனது கண்களுமே கலங்கி இருந்தது.”நீங்க செஞ்சது  தப்பு தானங்க?” என்று கேட்க ..

 

“நான் பண்ணது தப்பா கூட இருக்கட்டும் டி .அவங்க பண்ணது தப்பு இல்லன்னு  ஆகிடாது “என்றான்.

 

“என்ன?” என்றாள் .

 

“கிட்டத்தட்ட ரெண்டு வருஷமா பொண்ணு பாக்க சொல்லிட்டு இருக்கேன் டி . எனக்கும் வயசு ஏறிட்டு போகுது சரியா ?எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. நான் இங்க இருக்கவங்களுக்காக மட்டுமே வாழ்ந்துட்டு ,சம்பாரிச்சு கொடுத்துட்டு இருக்க முடியாது..

 

எனக்குனு  இருக்க வாழ்க்கையை நான் எப்ப தான் வாழ்றது.. அது அவங்க யோசிக்கவே இல்லையே..

நான் அவங்களையும் ,இந்த வீட்ல இருக்கறவங்களையும் பார்க்கணும் என்று மட்டும் தானே யோசிக்கிறாங்க ..

 

எனக்குன்னு ஒருத்தி வந்துட்டா.. அவங்கள பாத்துக்க மாட்டன்ற எண்ணத்துக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது.. நான் அதை  மாத்தவும் முடியாது “என்று விட்டு அமைதியாகி விட்டான் .

 

மேற்கொண்டு அவள் எதும் கேட்டுக் கொள்ள விரும்பவில்லை .

 

இப்பொழுது அவனுக்கு இருக்கும் சந்தோஷத்தை கெடுக்க அவள் விரும்பவில்லை .

 

அன்றைய பொழுது இனிமையாக கழிந்தது..

 

அன்று இரவு தூங்கும் வேலையில் இதை தனது நண்பனிடம் சொல்ல வேண்டும். ஆனால், இப்பொழுது முடியாது என்பதை நினைத்தவள் அமைதியாக இருந்தாள்..

 

மறுநாளுமே தனது நண்பனிடம் சொல்ல வேண்டும் .ஆனால் இதை மெசேஜில் சொல்ல முடியாது .போன் செய்ய வேண்டும் என்று யோசித்தாள் .

 

 

ஆனால் , அவளால் போன் செய்து சொல்ல முடியவில்லை .சூழ்நிலை என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

 

அவளாக திருமணத்திற்கு பிறகு ,அவனுக்கு போன் செய்யவில்லை என்பது தான் உண்மை.

 

அவனாக போன் செய்தால் ,பேசுவாள். இல்லையென்றால் அவனிடம் மெசேஜில் ஏதாவது என்றாள் பேசுவாள்.

 

ஆனால் ,இது மெசேஜில் சொல்ல கூடிய விஷயம் இல்லை என்பதால் ,பொறுமை காத்தாள் கிட்டத்தட்ட ஒரு வாரம் சென்று இருந்தது.

 

ஒரு வாரத்திற்கு பிறகு நவியாகவே போன் செய்து இருந்தான்.வேகமாக எடுத்து  “சொல்லுடா என்ன செய்ற எப்படி இருக்க ?” என்று கேட்டாள்..

 

“என்ன டி அதிசயமா இருக்கு .போன் பண்ண உடனே எடுத்துட்ட இன்னைக்கு” என்றான்.

 

“இல்ல சும்மாதான், போன் கையில் இருந்துச்சு “என்று பொய்யாக சிரித்தாள் .

 

ஆனால் ,தனது நண்பனிடம் பொய் சொல்கிறோம் என்று கவலைக் கொண்டாள் .

 

“என்னடி பண்ற? காலேஜ் எப்படி போது ஒழுங்கா படிக்கிறியா ?மாமா நல்லா இருக்காரா ?”என்று அவன் கேட்டதற்கெல்லாம் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்..

 

“சரி டி ..நீ என்கிட்ட ஏதாச்சும் மறைக்கிறியா?” என்றான் .

 

“ஏன்டா இப்படி கேட்கிற? “என்று கலக்கத்துடன் கேட்டாள்..

 

“இல்ல ,நீ என் கிட்ட  இப்படி இருக்க மாட்ட, நான் போன் பண்ணதுக்கு அப்பறமே என்கிட்ட பேச செஞ்சாலும் படபடபடன்னு இதுவரைக்கும் என்னென்ன நடந்ததோ அதை நீயே சொல்லுவ.. என்கிட்ட சொல்ல கூடிய விஷயத்தை சொல்ல செய்வ.. ஆனா ,இப்போ நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்ற ..அதும் யோசிச்சு யோசிச்சு பேசுற மாறி இருக்கு அதான்!” என்றான்.

 

“அப்படிலாம் எதும்  இல்லடா” .

 

”  பொய் சொல்லாம சொல்லுடி…

இல்ல, சொல்லக்கூடிய விஷயம் இல்லன்னா சொல்ல வேணாம்” என்றான்.. ஒருவேளை அது அவளுடைய தனிப்பட்ட விஷயமாக இருந்தால் அதில் நாம் தலையிட முடியாதே என்ற காரணத்தினால் மட்டுமே..

 

“சொல்லணும் தான்… ஆனா எப்படி சொல்றதுன்னு தெரியாம நிக்கிறேன்,” என்று குரல் தளரச் சொன்னாள்.

 

“லூசு என்கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம். வீட்ல ஏதாவது பிரச்சனையா? …”

 

“இல்ல டா..”

 

“பின்ன? அப்புறம் என்ன தாண்டி விஷயம்?” என்றான் பொறுமை இழந்து ..

 

ஒரு சில நொடி கண்களை மூடி திறந்து விட்டு…எப்பொழுது இருந்தாலும் தனது நண்பனிடம் சொல்லி தான் ஆக வேண்டும்..

இது மறைக்கக் கூடிய விஷயமும் இல்லை என்று எண்ணியவள்..” நீ மாமா ஆக போற டா” என்றாள் பட்டென்று…

 

இங்கு நவிக்கு முதலில் ஒன்றும் புரியாமல் ,எதையோ யோசித்தவன்..” நீ சொன்னது புரியல டி .. நீ சொன்னது என் காதுல” என்று தயக்கமாகக் கேட்டான்..

 

“உன் காதுல என்ன விழுந்துச்சோ அத தான் சொன்னேன் “என்றாள் புன் சிரிப்புடன்..

 

“அதைக்கூட நான் போன் பண்ணினா தான் சொல்லுவியா?

நீயா போன் பண்ணி சொல்ல மாட்டியா? உனக்கு என்கிட்ட சொல்லணும்னு தோணலையா?”

என்று விழிகள் நனைய, குரல் உடைந்து கேட்டான்.

 

 

“இல்லடா உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சேன்..”

 

“இதை என்கிட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன டி தயக்கம்..அப்போ நான் உன்னோட நண்பன் இல்லையா? “..

 

” அப்படி இல்லடா இந்த விஷயத்தை போன் பண்ணி தான் சொல்லணும் , மெசேஜ்ல சொல்ல முடியாது அதனாலதான்”..

 

“ஏன் எனக்கு போன் பண்ண கூட உனக்கு கஷ்டமா இருக்கா ?இல்ல போன் பண்ண முடியாத சூழ்நிலையில இருந்தியா ?”..

 

“இல்ல போன்ல…” என்று வார்த்தையை இழுத்தபடி முணுமுணுத்தாள்.

 

“சரிடி விடு! உன்னால எனக்கு போன் பண்ணி சொல்ல முடியாது. ஆனா, நீ போன் பண்ற சூழ்நிலையில இருந்த அவ்வளவுதான்! .. உனக்கும் , எனக்கும்  இருக்க உறவுக்கு பேரு என்ன டி? ..அப்போ அது உண்மையான ,ஆத்மார்த்தமான நட்பு இல்லையா ?”என்று விட்டு போனை கட் செய்து இருந்தான் நவிலன்..

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்