
தனது நண்பனிடம் பேசிய பிறகு நிவேதா கொஞ்சம் தெளிவு பெற்று இருந்தாள். தன் கணவனை அதிலிருந்து வெளிய கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ ?அனைத்தையும் தன்னால் முடிந்த அளவிற்கு செய்தாள்.
இங்கு நடந்த எதையும் தன் தாய்க்கு போன் செய்து கூறவில்லை.. அது இன்னும் பிரச்சினையை உண்டு பண்ணும், அது மட்டும் இல்லாமல் கணவனுக்கு இன்னும் மன வருத்தத்தை கொடுக்கும் என்று எண்ணினாள்.
இப்படி இருக்கும் நிலையில் தான் அவளுக்கு நாட்கள் தள்ளிச் சென்றது .. அடுத்த குழந்தையப் பற்றி அவள் யோசித்து இருந்தாலும், உடனே வேண்டும் என்று எண்ணியதற்கு முக்கிய காரணம் தன் கணவனின் மனதை திசை திருப்ப வேண்டும் என்று எண்ணியதே..
தங்களின் ஆசைக்காக இரண்டாவது குழந்தையும் , கணவனின் மனம் மறுதலுக்கும் வழி வகுக்கும்.. ஒரே கல்லில் இரண்டு மாங்கா என்பது போல் தான் யோசித்து இருந்தாள்.
அவள் கருவுற்ற செய்தியை வீட்டில் உள்ள யாருக்கும் தெரியப்படுத்த விரும்பவில்லை..
நிவேதா கூட கேட்டாள்..” உங்க அம்மா கிட்ட சொல்லிட்டு வரட்டா?” என்று ..
“தேவையே இல்லை.. நானே அவங்களுக்கு தேவையில்லாதவன்.. கல்யாணம் பண்ணதே வேண்டாத வேலை..அப்படி இருக்க என் புள்ளையின் வரவை மட்டும் மகிழ்ச்சியாக கொண்டாட போறாங்களா..? கேவலமா கூட பேசுவாங்க போதும்.. என்ன அவங்க பேசின வரைக்கும். என் பிள்ளைகளையோ இல்ல , ஒன்னையோ பேச நான் என்ன விட மாட்டேன் டி .அவங்க என்ன எந்த இடத்துல வச்சிருக்காங்கன்றத உணர்ந்துட்டேன் “என்று அழுகுரலில் கூறியவன் ..
“உங்கம்மா கிட்ட மட்டும் சொல்லிட்டு விடு. வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம்” என்று கூறினான்.
சரி என்று தன் தாயிடம் மட்டும் கூறிவிட்டு அமைதியா விட்டாள். கவிதாவும் ,” உன் மாமியார் கிட்ட சொல்லு என்ன இருந்தாலும் உன் புருஷனை பெற்றவங்க ..” என்றார்..
கவிதாவுக்கு மேலோட்டமாக மகளும் ,மருமகனும் வீட்டில் உள்ளவர்களிடம் பேசவில்லை என்று தெரியும் .அதற்கு காரணம் என்ன என்று தெரியாது . ஆகையால் அவர் அவ்வாறு கூற..
“வேணாம் மா அவரை இவ்வளவு தூரம் பேசினதுக்கு அப்புறமும் நான் அவங்கி கிட்ட சொல்லல.. இவரும் சொல்ல வேணாம்னு சொல்லிட்டாரு..”
“என்ன டி பெத்தவங்க நாலு வார்த்த ஏதாவது கோபத்தில் சொல்லத்தான் செய்வாங்க. அதுக்காக பெத்தவங்களே வேண்டாம்னு ஒதுக்கி வைப்பீங்களா ? இன்னைக்கு சண்டை சச்சரவுனா நாளைக்கு கூடமா விட்டுடுவீங்களா ?” என்றார் .
“அம்மா உனக்கு ஒன்னும் தெரியாம நீயா ஏதாவது பேசாத.. அவர அத்தை என்ன என்ன பேசினாங்க தெரியுமா ?அவருடைய அண்ணனும் தான்…” என்று அப்போதுதான் மூன்று மாதங்களுக்கு முன்பு இங்கு நடந்த அனைத்தையும் கூறினாள்.
“இதை ஏண்டி என்கிட்ட முன்னாடியே சொல்லல ..”என்று சத்தம் போட்டார்..
அவளிடம் அமைதி..
” நான் வந்து பேசட்டா?”.
“வேணாம்.. முடிஞ்சு போனதை திரும்ப கிளறாத.. இப்பதான் கொஞ்சம் மனசு மாறி இருக்காரு.. அதுல இருந்து வெளியே வந்து இருக்காரு. இப்ப குழந்தை உண்டாகி இருக்க சந்தோஷத்தில் இருக்காரு.. திரும்பவும் இதை பத்தி பேச விரும்பல, அவர் கொஞ்சமாவது அதை மறந்து நிம்மதியா இருக்கட்டும்..” என்றாள்..
கவிதாவும் அமைதியாகி விட்டார்.. கிடுகிடுவென்று மாதங்கள் உருண்டோடி ஐந்தாவது மாத தொடக்கத்தில் இருந்தாள்.. ஐந்தாவது மாதம் சோறு கொடுப்பதற்கு கவிதா இங்கு வருவதாக கூற..
” நீங்க இங்க வர வேணாம்.. நான் அங்க கூட்டிட்டு வரேன்.. உங்க வீட்டிலேயே வச்சு சோறு கொடுத்துக்கோங்க..” என்று கூறி விட்டான் வசந்த்..
சரி என்று கவிதாவும் நல்ல நாள் பார்த்து வீட்டிற்கு வர வைத்து ஐந்தாவது மாதம் சாதம் கொடுத்திருந்தார்…
தாய் வீட்டில் பெரிதாக தங்கவில்லை. காலையில் கிளம்பி சென்றவர்கள்.. மாலையில் தன் புகுந்து வீட்டிற்கு வந்துவிட்டாள்..
அதுவரை அவள் கருவுற்று இருப்பது தெரியாமல் இருந்தது. புகுந்த வீட்டில் உள்ள யாருக்கும்.. ஐந்து மாதம் வரை அவளுக்கு பெரிதாக வயிறு காட்டி கொடுக்கவில்லை..
அது மட்டும் இல்லாமல் அவர்களை வீட்டில் உள்ள யாரும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்ததால், உற்றுப் பார்க்கும் அளவிற்கு இல்லை.. மற்றபடி கவனிக்கும் அளவிற்கு எதுவும் செய்யாததால் அடுத்தவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை..
ஐந்தாவது மாதம் சாதம் கொடுத்த மறுநாள் அவள் வெளியே குப்பை கொட்டி விட்டு வரும் போது , வெளி திணையில் உட்கார்ந்து இருந்த அவளது மாமியார் வசந்தா வயிறு லேசாக தெரியவும்.. முகத்தில் பூரிப்பும், கைகளில் வலையிலும் போட்டிருப்பதை உணர்ந்து, அவள் குப்பை கொட்டி விட்டு வரும்போது நிற்க வைத்து , “மாசமா இருக்கியா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் .
அவரை குறுகுறுவென ஒரு சில நொடிப் பார்த்தாள்..
இத்தனை மாதங்களில் அவர் இவளிடம் பேசவில்லை. இவளாகவும் சென்று அவரிடம் பேசவில்லை..
அவள் அமைதியாக இருக்கவும், ” உன்ன தாண்டி கேட்டுட்டு இருக்கேன்…”.
“ஆமா..” என்றவள் மீண்டும் அமைதியாக.
“ஓ! அது கூட உன்னாலையும் உன் புருஷனாலையும் சொல்ல முடியாது.. அம்புட்டு வேண்டாதவளா போயிட்டனா?” என்றார்.
ஒரு சில நொடி அமைதியாக இருந்தவள்..” அவருக்கு கல்யாணம் ஆனதே தான் உங்களுக்கு பிடிக்கல .. அப்புறம் எங்கிருந்து நான் மாசமா இருக்குறது மட்டும் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்திர போது?” என்று கேள்வி எழுப்பியிருந்தாள்.
தன் கணவனை அன்று அவர் பேசிய வார்த்தை கொஞ்ச நஞ்சமா என்பதை உணர்ந்து கேட்டு விட்டாள்..
லேசாக கண்கள் கலங்க அவளை பார்த்தவர்.. “கோபத்துல பேசுற வார்த்தைக்கு எல்லாம் அர்த்தத்தை கண்டு பிடிச்சிட்டு உக்காந்து இருக்கீங்க?” என்றார்..
மேற்கொண்டு எதுவும் அவரிடம் வாதாட விரும்பாமல் சென்று விட்டாள்.
அவரும் கூப்பிட்டு வைத்து எதுவும் பேசவில்லை. ஒரு ஒரு வாரம் கடந்து இருக்கும்..
அப்படி இருக்கும் நிலையில் வசந்தின் தந்தை சீனிவாசன் அதிகாலை 5 மணி அளவில் டீக்கடைக்கு சென்று டீ குடிக்க சென்றிருந்தார்..
வீட்டில் மனைவி ஆறு ஏழு மணிக்கு டீ போட .. காலையில் டீ குடித்து பழகியவருக்கு அது செட் ஆகாமல், விடியலில் டீ கடையில் குடித்து விட்டு வருவார் ஒரு முறை.. அதன் பின்பே வீட்டில் குடிக்கும் பழக்கம் உடையவர். அப்படித்தான் அன்றும் சென்றார்..
டீ குடித்துவிட்டு வரும்பொழுது இருட்டில் எதிரில் வந்த பைக் காரன் ஒருவன் . அவர் மீது மோதி விட.. அங்கவே கீழே விழுந்து விட்டார்.. கீழே விழுந்ததில் பலத்த அடி .. அக்கம் பக்கம் இருந்தவர்கள் பார்த்து அவரை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு விட்டு சென்று இருந்தனர்.
மாசமாக இருப்பதால் நிவேதா 6 மணிக்கு மேல் எழுந்து கொள்வதால் அவளுக்கு விவரம் தெரியாமல் இருந்தது..
காலை நான்கு மணிக்கு எழுந்து வயலுக்குச் சென்றதால் வசந்துக்கும் விஷயம் தெரியாமல் இருக்க.
வசந்த் காலை உணவிற்கு வீட்டிற்கு வரும் போது, வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் விஷயம் கூறவும் தான் வசந்துக்கு விஷயம் தெரியவந்தது..
நேராக வீட்டுக்கு வந்தவன்.. தந்தையிடம் சென்று ,”என்னாச்சு ?இப்ப எப்படி இருக்கு? வலி இருக்கா ?என்ன ஏது “என்று விவரம் கேட்க.
அவரும் இந்த மாதிரி ஆச்சுடா என்ற ஒரு விபரம் கூற ..
கணவன் மாமனாரிடம் பேசிக் கொண்டிருக்கவும் வீட்டிலிருந்து வெளியில் வந்தவளுக்கு அப்பொழுதுதான் விவரம் தெரிய வந்தது ..
“ஏன் மாமா என்கிட்ட சொல்லல? நான் இங்க தான இருந்தேன்..” என்று அவள் கேட்கவும்..
“உனக்கு விவரம் தெரிஞ்சு.. வீட்ல இருக்கவங்க மேல இருக்க கோபத்துல என்னை கண்டுக்காம போறேன் நினைச்சிட்டேன் நான் ..” என்றார் கண்கள் கலங்க.
“ஏன் மாமா நீங்க வேற ? அவங்க மேல இருக்குற கோவத்தை உங்க மேல நான் ஏன் காட்ட போறேன்… கோவத்துல பாக்காமலா.. எனக்கு தெரியாது உண்மையாவே ..” என்று கண் கலங்கினாள் ..
அதன் பிறகு, வசந்த் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்..
ஆப்ரேஷன் செய்தாக வேண்டும். நரம்பு விட்டு இருக்கிறது என்று மருத்துவர் கூறிவிட ..
“இப்போதைக்கு ஆபரேஷன் வேணாம்.. மருந்து மாத்திரையில் சரி பண்ண முடியாதா ?”என்று கேட்க .
“இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா கால் எடுக்குற மாதிரி சூழ்நிலை கூட வரும்..” என்று மருத்துவர் கூறினார்..
சீனிவாசன் தான்…” இப்போ வீட்டுக்கு போலாம் டா.. மருந்து மாத்திரை மட்டும் வாங்கிட்டு வா..” என்று கூறினார் ..
“இல்லப்பா என்ன சொல்றாங்கன்னு …” என்று கூறும் போதே..
“நான் சொன்னதை செய்!” என்றார்..
வீட்டிற்கு வரும் வழியில்,” மாவு கட்டு போட்டா எல்லாம் சரியாயிடும்.. இவனுங்க காசு புடுங்குறதுக்காக சொல்றானுங்க ” என்று கூறி ,அருகில் உள்ள புத்தூர் சென்று கையோடு மாவு கட்டும் போட்டு விட்டு வந்தார்..
அதன் பிறகு, அவருக்கு தேவையான அனைத்துமே வசந்த் தான் பார்க்க நேரிட்டது..
அவசரத்திற்கு பெரிய மகனை அழைத்தால் கூட ..
“எனக்கு வேற வேலை வெட்டி இல்ல பாரு.. உங்களுக்கு பண்றது தான் என்னோட வேலையா ?நான் வேலைக்கு போகாம வீட்டிலேயே உங்கள பாத்துட்டு உட்கார்ந்து இருந்தா என் பொண்டாட்டி பிள்ளையா யாரு பார்க்கிறது ?”என்று கேட்டிருக்க..
“ஓ! இந்த வேலை வாங்கி கொடுக்கும்போது நான் அப்பனா தெரிஞ்சேன்.. இப்ப படுக்கையில் இருக்கும் போது, எனக்கு ஏதாவது செய்யணும்னா நான் வேண்டாதவனா இருக்கனோ?” என்று கத்தினார்…
“விடுப்பா..அதான் நான் பார்த்துக்கிறேன் இல்ல..” என்று வசந்த் சமாதானம் செய்ய,
“ஆமா .. ஆமா.. அவன் தான் வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கான். அவனையே பார்த்துக்க சொல்லு .. அவனை மாதிரி நான் வெட்டியா ஒன்னும் வீட்டுல உட்கார்ந்து இல்ல” என்றான் நக்கலாக ரஞ்சித்.
அவன் அவ்வாறு சொல்லவும் கட்டுக்கடங்காத கோபம் சீனிவாசனுக்கு .. வசந்த் கூட அமைதியாகத்தான் இருந்தான்.
” ஆமாண்டா ..அவன் வெட்டியா தான் இருக்கான்.. அவன் வெளிநாட்டுல வேர்வை சிந்தி சம்பாதித்த காசுல தான், நீ இப்ப டிப் டாப்பா கிளம்பி வேலைக்கு போயிட்டு இருக்கன்னு மறந்துராத “என்று கூறிவிட்டார்.
“என்ன குத்தி காட்டுறீங்களா ?சொல்லிக்காட்டுறீங்களா ?” என்று எகிறிக் கொண்டு வந்தாள் ரஞ்சித்தின் மனைவி இளவரசி..
” சொல்லிக் காட்டல . உண்மையை தான் சொல்லிட்டு இருக்கோம்.. “
“அதுக்குன்னு ஒவ்வொரு முறையும் இதையே சொல்லிட்டு இருப்பீங்களா?”
“ஏன் ஒவ்வொரு முறையும் சொல்றதுக்காக, உன் புருஷனுக்கு வேலை வாங்கிக் கொடுத்த காசை ஒரு பைசா விடாம எண்ணி வைக்க போறானா ? உன் புருஷன் …”
வசந்த் ” விடுப்பா பிரச்சனை வேணாம் ..” என்றவுடன் அமைதியாக விட்டார்..
அதன் பிறகு ,அவருக்கு தேவையான அனைத்துமே இவன் தான் பார்த்தான்.. சாப்பாடு கூட நிவேதா தான் போட ஆரம்பித்தாள் ..
மாவு கட்டு போட்டு வந்ததுக்கு பிறகு ஒரே இடத்தில் உட்கார்ந்து இருக்க அவருக்கு ஒரு மாதிரி இருக்க..
“என்ன கொஞ்சம் கை தாங்களா கூட்டிட்டு போய் வெளிய கட்டில்ல உட்கார வை நிவேதா” என்றார் அவளிடம்..
அந்நேரம் வசந்தும் வீட்டில் இல்லை வயலுக்கு சென்றிருந்தான்..
ஒரு சில நொடி தயங்கினாள்.. மாசமாக இருக்கும் போது அவரின் வெயிட்டை தன்னால் தாங்க முடியுமா? என்று ,இருந்தாலும் இப்படி முடியாமல் இருக்கும் பொழுது என்ன செய்வது .. அவரால் முடியவில்லை என்பதால் தானே கேட்கிறார் என்று எண்ணியவள் ..
அவரை தூக்க முயற்சிக்க.. அப்பொழுது அங்கு வந்த அவரது மனைவி வசந்தா..” மாசமா இருக்க புள்ளையை என்ன யா உன்ன கை தாங்களா கூட்டிட்டு போக சொல்ற?”என்று கேள்வி எழுப்பினார் தன் கணவனிடம்..
சீனிவாசனோ, கண்கள் கலங்க “மாசமா இருக்கியா நிவேதா ?” என்றார்..
” ஆமா மாமா” என்றாள்..
“இத கூட சொல்ல கூடாதுன்னு முடிவு பண்ணிட்டீங்களா ? நீயும் உன் புருஷனும் .. அம்புட்டு வேண்டாதவனா வேத்து ஆளா போயிட்டானா நாணு? அவ தான பேசினா ..நான் என்ன பண்ணேன்..?” என்றவருக்கு குரல் அடைத்தது .
” இ..இல்ல மாமா..
அ..அது அவர்தான்..” என்றவளுக்கு அதற்கு மேல் பேசத் தோன்றவில்லை..
உங்க பையன் தான் வீட்ல இருக்க யார் கிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னாரு என்று சொல்ல முடியவில்லை..
கணவனை விட்டுக் கொடுப்பது போல் தோன்றியதால் அமைதியாகிவிட்டாள்.

