

சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கியது அவன் பயணித்த விமானம். மக்கள் கூட்டத்தின் இடைய வெளியே வந்தவனை சென்னை வெயில் அன்போடு வரவேற்றது. அவனது கண்களை கூசிச் சென்றன கதிரவனின் கதிர்கள். அதனைக் காண முடியாமல் கூலர்ஸை அணிந்தவன் தன் உடமைகளை தள்ளிக் கொண்டு வந்தான்.
அவனையும் அவனது உடமைகளை சோதித்து அனுப்ப, வெளியே வந்தவனின் கண்கள் தனக்காக காத்திருக்கும் வாகனத்தையும் ஓட்டுநரையும் கண்டறிந்து, கையை அசைத்தான்.
அவனை கண்டதும் விரைந்து வந்து அவனது பெட்டியை கையில் வாங்கி கொண்டார் காசிநாதன்.
கூலர்ஸை கழட்டியவன் அவரை ஆராய்ந்தான். தலை மட்டுமே பஞ்சை டோப்பாக வைத்தது போல இருந்தது. அவரது முகமும் சிரிப்பும் மாறவில்லை. அவரை கண்ட வியப்பில் “காசி அங்கிள், ஹாவ் ஆர் யூ?”என்று கேட்டான்.
அவனது கேள்வியில் தன் அழகான சிரிப்போடு”எனக்கென்ன தம்பி, அம்மா புண்ணியத்துல ஆமோகமா இருக்கேன்” என மெய்யாக மனதில் நிறைந்த மகிழ்ச்சியோடு சொன்னார்.
“நீங்க எப்படி இருக்கீங்க தம்பி? ஆள் வளர்ந்திட்டீங்க, ஆனா உங்க முகமும் அந்தக் குழந்தை சிரிப்பும் மாறவே இல்ல. சின்ன வயசில பார்த்தது, இப்பையும் அப்படியே இருக்கீங்க” என்று இருபத்தாறு வயது நிரம்பிய ஆடவனிடம் கூறினார்.
அவனும் சிரித்துவிட்டு ” நான் சொல்ல வேண்டியத நீங்க சொல்றீங்க அங்கிள். ரொம்ப வருசம் உங்களை காணலையே அங்கிள்
எங்க போயிருந்தீங்க…?” என்றான்.
“அதுவா தம்பி ! நானும் என் பொண்டாட்டியும் என் பேரன பார்த்துக்க என் புள்ளை வீட்டிலே இருந்தோம் தம்பி. அப்புறம் என் பொண்டாட்டி இறந்துட்டா ! நான் தனியா இருந்து அவங்களுக்கு ஏன் பாரமா இருந்துட்டுனு மறுபடியும் அம்மா கிட்ட வந்து வேலைக்கு கேட்டேன். வானு சொல்லிட்டாங்க… அதான் மறுபடியும் காரை ஓட்டிட்டு இங்கே வேலை பார்த்துட்டு என் நாட்களை கழிக்கலாம் இருக்கேன் தம்பி”என்றார்.
அவனும் சிரித்துக் கொண்டே கேட்டான். இருவரும் நடந்த படி மகிழுந்தை அடைந்தனர். டிக்கில் பெட்டியை வைத்தவர் முன் சீட்டில் அமர, இவனும் பின் சீட்டில் அமர்ந்தான். வண்டி புறப்பட்டது.
“சென்னை ரொம்ப ஹாட்ல அங்கிள்” என அந்த ஏசியிலும் அவனுக்கு வியர்த்தது. சட்டையில் இரண்டு பட்டனை கழட்டி விட்டப்படி சொன்னான். அவரும் சிரித்து கொண்டே ஏசியைக் கூட்டினார்.
“டேய் என்னடா இன்னும் வண்டியே வரல… ?”என நெற்றியில் படிந்த வியர்வை வழித்து சுண்டி விட்டபடி கேட்டான் ஒருவன்.
“வந்துரும் டா , ஏர்போர்ட்ல இருந்து கிளம்பினதா நம்மாள் சிக்னல் கொடுத்துட்டான் . இன்னும் பத்து நிமிஷத்துல கார் இந்தப் பக்கம் தான் வரும் வெயிட் பண்ணுடா ! ” என்றான் இன்னொருவன்.
“வண்டி நம்பர் **** தானடா” என்றான் மற்றொருவன். அவனுக்கு வெறும் தலை அசைவை மட்டும் தந்தான் அவன்.
மூவரும் ஆள் நடமாட்டம் இல்லாத அந்தத் தெரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். தெரு முக்கில் ஒருவன் நின்றிருந்தான்.
கார், அந்த தெருவை அடைந்ததும் அந்த மூவருக்கும் சிக்னல் கொடுக்கப்பட்டது.
மூவரும் நடுமையத்தை ஆக்கிரமித்து அமர்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களை கண்ட காசி, காரை மெல்ல இயக்கி, அவர்களுக்கு ஐந்தடி தள்ளி வண்டியை நிறுத்தியவர், ஹார்னை அடித்தார். ஆனால் அம்மூவரும் அசைந்த பாடு இல்லை… மீண்டும் அழுத்தினார். காதை குடைந்தனர். மீண்டும் மீண்டும் அழுத்தினார். ம்கூம் ஒரு பயனும் இல்லை.
பாடல் கேட்டு கொண்டிருந்தவன் காதொலிபானை கழட்டிவிட்டு எட்டிப் பார்க்க, மூவர் நகராமல் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
“வாட் தி ஹெல் அங்கிள். யார் அவங்க ஏன் இப்படி உட்கார்ந்து இருக்காங்க?”
” தெர்ல தம்பி. வம்பிழுக்கவே உட்கார்ந்து இருக்கறது போல இருக்கு…” என்றவர். சாளரம் வழியிலே தலையை நீட்டி, “தம்பிகளா, கொஞ்சம் ஓரமாக போனீங்கனா. நான் போயிடுவேன்” என்றார் தன்மையாக.
“நீ ஓரமா போயா” என்றான். அவரும் அவர்கள் அமர்ந்திருக்கும் பக்கவாட்டில் பார்க்க, கார் நுழைய முடியாதளவு இருந்தது இடம்.
“தம்பி, போக முடியாது. ஓரமாக போக அங்க இடமே இல்ல…”
“அதுக்கு… நாங்க எந்திருக்கணுமா? முடியாது. அப்படியே வந்த வழிலே சுத்தி போயா ” என்றான். அவரும் பின்னாடி பார்த்தார் காரை திருப்பி கொண்டு போவது மிக கடினம். என்ன செய்வது என்று புரியாமல் துருவனைப் பார்த்தார்.
சாளரத்தின் வழியே தலையை விட்டு எட்டி அவர்களைப் பார்த்தவன், “அங்கிள் மூணு எரும மாடுங்க தானே ! சும்மா ஏத்துங்க அங்கிள் பிரச்சினை வந்தா நான் பார்த்துகிறேன்” அவர்களுக்கு கேட்கும் படி சொல்ல இதான் சாக்கு என்று மூவரும் எழுந்தனர்.
“ஓ… ஏத்திடுவீயோ எங்க வா” என்று மூவரும் எழுந்து நின்றனர். “அங்கிள் ஏத்துங்க, வர்றத பாப்போம்” என்றான் அவனும் விடாமல். “தம்பி, வேணாம் பிரச்சினையாகிட போகுது”என்றார்.
“பாத்துக்கலாம் அங்கிள் நீங்க வண்டியை முன்னாடி விடுங்க”
அவரும் அவன் பேச்சை கேட்டு தயங்கியபடி கியரை போட்டு வண்டியை அவர்கள் முன் செலுத்த, கோபத்தில் ஒருவன் கண்ணாடியை உடைத்தான். காரை நிறுத்தி விட்டார் பயத்தில்.
தன் கார் கண்ணாடியை உடைத்ததும் கோபம் கொண்டவன், கீழே இறங்கி கை சட்டையை முட்டி வரை மடக்கி விட்டு சண்டைக்கு கிளம்பினான். காசி நாதன் மறுக்க மறுக்க அவர்கள் முன் நின்றான்.
“ஹவ் டார் யூ ! யார்டா நீங்க? எதுக்குடா என் கார் கண்ணாடிய உடைச்சீங்க? ” அவர்கள் முன் எகிறினான்.
“அப்படி தான் உடைப்போம், ஏன் கேட்க வந்தால் உன் கையையும் காலையும் உடைப்போம்” என்று அவனை தாக்க ஆரம்பித்தனர். அவனால் மூவரையும் சமாளிக்க முடியவில்லை. அடிவாங்க ஆரம்பித்தான். அவனை தடுக்க வந்த காசி நாதனையும் தாக்கினார்கள்.
மண்டையில் ரெத்தம் வழிய, போனை எடுத்து யாருக்கோ அழைத்து விஷயத்தைச் சொன்னார் காசி. அடுத்த பத்தாவது நிமிடத்தில் கருப்பு உடை அணிந்தவர்கள் அங்கு சூழ, அம்மூவரும் தப்பித்து ஓடி விட்டனர். அவனை தூக்கி மருத்துவமனைக்கு விரைந்தனர் அந்த காவல் படையினர்.
மருத்துவமனையில் நைதுருவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மயக்கத்தில் இருந்தான். காசிக்கு சிகிச்சை அளித்து, தலையில் கட்டு போட்டு விட்டிருந்தனர்.
மகனின் தலையை வருடி கொடுத்தவர், வழிந்த நீரை துடைத்துக் கொண்டு வெளியே வந்தார். அவரது முகம் சினத்தால் சிவந்திருந்தது. காசி அங்கு நடந்த அனைத்தையும் அவரிடம் கூறினார்.
“தயா ” என்ற பெண் சிங்கமாக கர்ஜித்தார் வீரமதி, நைதுருவனின் தாயார். அவர் கர்ஜனையில் உடல் நடுங்க அவர் முன்னே வந்த நின்றான் அவரது காரியதர்சி.
“அம்மா “என்று பணிவாக வந்து நின்றான்.” அவங்க யார் என்னன்ற விஷயம் எனக்கு தேவை இல்ல. ஆனா அவங்க உயிரோட இங்க இல்லன்ற செய்தி எனக்கு வேணும்” என்றார்.
அவனும் “சரிமா” என்று சென்றிவிட, வீரமதி தன்னருகே கருப்பு உடைந்த விறைப்பாக நின்றவனின் புறம் திரும்பியவர்”எட்வர்டு, என் பையன் பின்னாடியும் இனி பாடிகார்ட்ஸ் இருக்கணும். உங்க க்ருல இருந்து திறமையான பாடிகார்ட் அரேஞ்ச் பண்ணு ” என்றார்.
“மேம், ஜெஸி டீம் மட்டும் தான் அவைலபிளா இருக்காங்க… இஃப் யூ டோண்ட் மைண்ட் வர சொல்லட்டுமா?”என்று கேட்டு அவர் முகம் பார்த்தான்.
“ஜெஸி “என்றதும் அவரது முகம் மாறிப் போனது. அதை கண்டவனின் முகத்திலும் சிறு குழப்ப ரேகை படர்ந்து மீண்டது.
“ஓகே வர சொல்லு அவளை” என்று முடித்துக் கொண்டார். அவன் அங்கிருந்து அகல, மகனின் அறையைப் பார்த்தவர், கண் முன்ன வந்த காட்சியை ஒதுக்கித் தள்ளிவிட்டு மகனை பற்றி மட்டும் யோசிக்கலானார்.
***
கண்களிரண்டில் காதல் தழும்ப வசீகர சிரிப்போடு இருக்கும் கணவனை இமை மூடாமல் கண்டு ரசித்தாள் அவள். இன்னும் அவன் சிரிப்பில் ஓர் உயிர்ப்பு இருப்பதை உணர்ந்தாள். மெல்ல அவன் கன்னத்தை வருடினாள். அவனிடம் எந்த அசைவும் இல்லை. உதட்டில் உறைந்த
சிரிப்பும் மாறவில்லை. கண்ணாடிக்குள் பத்திரப்படுத்திருந்தது.
அவன் புகைப்படத்திற்கு முன் ஏற்றிய மெழுவர்த்தி, அவன் முகமோடு சேர்ந்து மலர்ந்து எரிந்தது.
கண்ணீரில் நனைந்திருந்தன அவள் கண்கள். துடைக்க அவன் கைகள் வருமென
ஏங்கி தவித்து நின்றாள். வந்தது என்னவோ அவன(ள)து உயிர் நகலின் பிஞ்சு விரல் தான்.
“ம்ம்மா.. நோ… ம்மா…நோ” என்றான் அவனும் அழுதபடி. அவனின் அழுகை கண்டதும் தன் கண்ணீரை துடைத்து விட்டு அவன் கண்ணீரையும் துடைத்து விட்டு ” ஓகே செல்லோ நோ நோ…” என்றாள்.
“மா…அங்க”என்று அறையின் வாசலை காட்ட, “ஓகே போலாம்” என்று மேசை மேல் ஏறி நின்றவனை தூக்கி வெளியே வர, கூடத்தில் கையில் காப்பி கப்புடன் அமர்ந்திருந்தான் எட்வர்டு.
“வா எட்வர்டு” என்றவள் அவன் அருகே அமர்ந்தாள். அவள் முகத்தில் குடிக் கொண்ட சோகமே, அதற்கான காரணத்தை எடுத்துக் கூற, அதைப் பற்றி பேசாது வந்த வேலையைச் சொன்னான்.
“எங்க மேமோட சன்னுக்கு பாடிகாட்ர்ஸ் வேணுமா, உங்க க்ருல ஆள் இருக்கானு கேக்குறாங்க. உங்க டீம் இருக்கிறதா சொன்னேன். வர்றச் சொன்னாங்க… என்ன வர்றீயா?” என நேரடியாக கேட்டான்.
அவள் அமைதியாக இருக்க, “போமா, ப்ளீஸ். நீ இப்படி இருக்கிறது எங்களால பார்க்க முடியல. மகனை இழந்த சோகத்தை விட, உன்னை இப்படி தினமும் பாக்கறது ரொம்ப வேதனையா இருக்கு… எங்களுக்கு நீயாவது வேணும்மா போ ” என்று கண்கள் கலங்க கூறியவர் கண்ணாடியை கழட்டி துடைத்து கொண்டார். பக்கத்தில் அமர்ந்திருந்த அவரது துணைவியும் கண்ணைக் கசக்க… அவர்கள் இருவரும் தன்னால் வேதனை அடைய கூடாது என்று நினைத்து வேறு வழியில்லாமல் “வர்றேன்” என்று அவனுக்கு வாக்கு கொடுத்தாள்.
மறுநாள் ஜெஸி வீரமதியின் முன் கைகளை பின்னுக்கு கட்டி விறைப்பாக நின்றாள். ஆளை எடைப்போடும் அவரது கண்கள், இன்று அவளை கண்டு கனிந்திருந்தன. அவளது இழப்பும் அழுகையும் கண் முன்னே வர்ற, பெண்ணாய் உள்ளே கண்ணீர் வடித்தார் வீரமதி.
“மேம் ஐ ரெடி டூ வொர்க் ஆஸ பாடிகார்ட். அண்ட் ஐ வில் ஷேவ் யூர் சன் அட் மை லாஸட் ப்ரீத்” என்று நெஞ்சை நிமர்த்தி விறைப்பாகச் சொன்னவளிடம் தலையை மட்டும் அசைத்து விட்டு, தன் மகனிடம் விஷயத்தை சொல்ல, அவனோ ஒரு பெண் தனக்கு பாடிகார்ட்டாக வருவதை ஜீரணிக்க முடியாமல் கத்த ஆரம்பித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
+1

