Loading

காதல்-3

மித்ரன் பணிபுரியும் மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டு இருந்தனர் சுமித்ராவும் நித்திலனும்.

இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர். செய்தி கேட்டு மீரா அரக்க பறக்க ஓடி வந்தாள். மித்ரனாலும் சூழ்நிலையைக் கையாள முடியவில்லை. உள்ளே இருப்பது இருவருக்கும் உயிர் கொடுத்த உயிர்களாயிற்றே!.

தேவிகாவும் நந்தாவும்தான் இருவரையும் பார்த்துக்கொண்டனர். பல ஆழமான சிராய்ப்புகள் காரணமாகவும் வயது மூப்பின் காரணமாகவும் நித்திலன் நள்ளிரவில்தான் கண்விழித்தார். படுக்கைக்கு அருகிலேயே மித்ரன் நாற்காலியில் அமர்ந்தவண்ணம் உறங்கிக் கொண்டிருந்தான்.

ஒருநிமிடம் தான் எங்கேயிருக்கிறோம், என்னவாயிற்று? என்று ஒன்றுமே புரியவில்லை நித்திலனிற்கு. கண்விழித்த சிறிது நிமிடங்களிலேயே உடல் முழுக்க பயங்கரமாக வலி பிண்ணி எடுத்தது. சிராய்ப்புகள் வேறு எரிச்சலைக் கொடுத்தது.

“டேய், மித்ரா!” ஈனஸ்வரத்தில் மகனை அழைத்தார். மருத்துவன் என்பதால் சட்டென்று எழுந்துவிட்டான்.

“ப்பா, ஒன்னுமில்லப்பா. நீங்க நல்லா இருக்கீங்க” என்றவன், சற்று நிதானத்திற்கு வந்ததால் அவரின் தற்போதைய நிலையை சரிபார்த்தான். அனைத்தும் சமநிலைக்கு வந்துவிட்டது. ஆனால், காயங்கள் சரியாகும்வரை ஓய்வு தேவை. காயத்தில் தண்ணீர்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவனாய் அவனுக்கு தெரியும்.

“சுமி… சுமி எங்கடா?”

இதுவரை திடமாக இருந்தவன், அன்னையின் பெயரைக் கேட்டதும் தடுமாறினான்.

“ம்மா, அம்மாக்கும் சிராய்ப்புதான்பா. இன்னொரு ரூம்ல இருக்காங்க. காலைல பாக்கலாம். நீங்க இப்போ தூங்குங்க” தந்தையின் இந்நிலையில் என்ன சொல்வதென்று தெரியாமல் பாதி உண்மையும் பாதி மறைத்தும் நிலையைக் கூறினான்.

“இல்லடா, ஆக்சிடன்ட் ஆன உடனே நான் ரோட்டுல தரச்சிக்கிட்டே கொஞ்ச தூரம் வந்துட்டேன். ஆனா, கீழ விழுறப்போ சுமியோட புடவை டயர்ல மாட்டிக்கிச்சுடா. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. வண்டியோட அவளும் பின்னாடியே உருண்டுட்டு வந்தா. பெரிய அடி பட்டுருக்குமோன்னு பயமா இருக்குடா மித்ரா. எனக்கு உடனே என் சுமிய பாக்கணும்.” இத்தனை வயதிலும் மனைவியின் மீதான அன்பு அவருக்கு துளியும் குறையவில்லை. அன்பு என்பதை விட காதல். அத்தனை காதல் நித்திலனிற்கு அவரின் சுமியின் மீது.

விழிப்படலம் சிவந்து நீர்த்துளிகள் நிறைந்தவாறு தாயைக் கேட்கும் தகப்பனிடம் உண்மையை எப்படி சொல்வது என்று அறியாமல் சிறு குழந்தையாய் தவித்தான் மித்ரன்.

அந்நேரம் செவிலியரோடு நோயாளிகளை பார்வையிட வந்தாள் தேவிகா. உள்ளே வந்தவள், சூழ்நிலையைத் தன்வசம் எடுத்துக் கொண்டாள்.

“அங்கிள், ஆன்ட்டிக்கு ஒன்னும் இல்ல. கை, கால்ல எல்லாம் சிராய்ப்புதான். அவங்களுக்கும் இன்ஜக்சன் போட்டு இருக்கோம். நல்லா தூங்கிட்டாங்க. மணி இப்போ ஒன்னு. இந்த நேரம் அவங்கள பாக்க முடியாது. காலைல முதல் வேலையா நானே அழச்சிட்டு போறேன். இப்போ உங்க ஹெல்த் கன்டீசனுக்கு நீங்க ஸ்ட்ரைன் பண்ண கூடாது. அதுனால நீங்களும் ரெஸ்ட் எடுங்க.” என்றவள், செவிலியரிடம் ஒரு ஊசியை சொல்லி அதை ஐ.வி. டிரிப்ஸ்சில் போடும்படி சொல்லிவிட்டு, மித்ரனை வெளியே வரும்படி சைகை செய்தவாறு சென்றாள்.

மருந்தின் தாக்கத்தால் உறக்கநிலைக்கு சென்றார் நித்திலன். உடல் உறங்கினாலும், மனது முழுக்க அவரின் சுமியை மட்டுமே எதிர்நோக்கிக் கொண்டிருந்தது.

….

இரவு முழுக்க உறங்காமல் எதையோ மனத்தில் போட்டு உழன்றுக் கொண்டிருந்தார் அபிமன்யூ. காலையில் சிவந்த கண்களோடு தனக்கும் மகனுக்கும் சமைத்துக் கொண்டிருந்தார்.

“ப்பா, இன்னைக்கு ஈவ்னிங்க் ஸ்பெசல் க்ளாஸ் இருக்கு. நான் வர லேட் ஆகும். எனக்கு வெய்ட் பண்ணாம, சீக்கிரம் சாப்பிட்டு தூங்குங்க.” என்று சொல்லிக்கொண்டே புறப்பட்டுக் கொண்டிருந்தான். நேற்றிருந்த மனநிலை தற்போது சற்று ஆசுவாசமடைந்தது போல் இருந்தது.

அவனுக்கு பைரவி மீது அளவுகடந்த அன்பு. அபிமன்யூ மீது எல்லையில்லாத அன்பு அதனோடு மரியாதையும்தான். கடந்தகால நினைவுகள் அவ்வப்போது மனத்தில் வந்து நிழலாடும்போது எல்லாம் அபிமன்யூ மேல் மரியாதை கூடிக்கொண்டே செல்லும்.

தான் சொன்னதற்கு இன்னும் எந்த பதிலும் வராமல் போக, சமையலறைக்கு சென்று தந்தையின் முகத்தைப் பார்த்தான்.

“ப்பா?”

மகனிற்காக அரிதாரம் பூசியவர், “என்னடா, கிளம்பிட்டியா? என்று கேட்டார்.

“ம்ம்… என்னாச்சுப்பா?” ஒருவேளை நேற்று அவன் இருந்த நிலையை எண்ணி தற்போது வருந்துகிறாரோ என்ற எண்ணமும் வாட்டியது.

“சாயங்காலம் கோவிலுக்கு போகலாமா முகிலா?”

கனவினை எண்ணி அபிமன்யூவிற்கு மனது பிசைந்தது. தந்தையின் முகத்தைப் பார்த்து மகனுக்கு மனது வாடியது.

“இன்னைக்கு ஸ்பெசல் க்ளாஸ் இருக்குப்பா. முடிஞ்ச வரைக்கும் சீக்கிரம் வரப் பாக்குறேன்”

“சரிப்பா.” என்றவன் யோசனையுடனே உணவருந்திவிட்டு புறப்பட்டான்.

அனைத்து வேலைகளையும் முடித்தவர், துணிகளை மட்டும் முகிலன் வந்தபிறகு துவைத்துக் கொள்ளலாம் என்றெண்ணி இருக்கையில் அமர்ந்தார். கண்ணை மூடினாலே சுமியின் முகம் இரத்த நிறத்தில் தோன்றியது. அலைபேசியை எடுத்தவர், நித்திலனிற்கு அழைக்கலாம் என்று எண்ணினார்.

வெகுநேரம் அந்த எண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், அழைக்கத்தான் மனதில்லை. இன்னும் ஒரு மாதத்தில் மீராவிற்கு திருமணம் என்பது அபிமன்யூ அறிந்ததே! கனவிற்காக அவர்களையும் சேர்த்து பயமுறுத்த வேண்டுமா என்ற எண்ணம் ஒருபக்கம் இருந்தாலும், கிட்டத்தட்ட இருபத்தியாறு வருடங்கள் அவர்களை பிரிந்து இருந்தாயிற்று. இன்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு பேசுவது என்ற எண்ணமும் ஒருங்கே எழுந்தது.

….

விபத்து நடந்த தருணம்…

வண்டியின் சாய்நிலை நிற்பி (Side Stand) சாலையில் தரைத்துக் கொண்டே வண்டி சில அடி தூரம் சென்றது. இருவரும் தலைக்கவசம் அணிந்துதான் இருந்தனர். வாகனம் நித்திலனையும் சேர்த்து இழுத்துக்;கொண்டு சென்றது. சிறிது நேரத்தில் நித்திலன் தனியாக உருண்டு சென்றுவிட்டார்.

சுமித்ராவின் விதியா, இல்லை கவனமின்மையா என்று எதைக் குறிப்பிடுவது? சுமித்ரா அணிந்திருந்த தலைக்கவசம் சரியாக மாட்டப்படாததால் கீழே விழுந்தவுடன் அது தனியாக சென்றுவிட்டது. சுமித்ராவின் புடவையும் வாகன சக்கரத்தில் மாட்டிக்கொள்ள, வண்டியின் பின்னாடியே இழுத்துச் செல்லப்பட்டார். தலையில் பலத்த அடி. இரண்டு காலிலும் சதைகள் மோசமாக பிய்ந்து வலது காலில் எலும்பும் அடி வாங்கியது. இடதுகை முழங்கையிலும் பலத்த அடி.

தலையில் அடிபட்டதும் அரைமயக்கத்திற்கு சென்றுவிட்டார். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத சில காட்சிகள் நியூரான்களில் தோன்றி மறைந்தது. தொடர்ந்து வந்த வண்டிகள் நிறுத்தப்பட்டு உடனடியாக அவசர ஊர்திக்கு தகவல் அளித்தனர்.

ஒரு பெண்மணி சுமித்ராவை தூக்க முன் வர, “போ..ன்…” என்பது போல் சைகை செய்தார். விழுந்த வேகத்தில் அவரின் கைப்பை ஆரம்பத்திலேயே விழுந்து இருந்தது. அதையொருவர் எடுத்து வர, ஒருகையை தலையை பிடித்தவாறே முகமெல்லாம் இரத்தமாக, அலைபேசியை எடுத்தவர், “எ…என்.. பையன்… மி…த்…ர…ன்…” என்று கூறினார். அதற்குமேல் சுமித்ராவால் பேச முடியவில்லை.

அவர் சொல்ல வருவதை புரிந்துக்கொண்டவர்கள் உடனடியாக மித்ரனுக்கும் தகவலளித்தனர். யார் செய்த புண்ணியமோ மித்ரன் பணிபுரியும் மருத்துவமனை அவசர ஊர்திதான் வந்தது. அங்கு வந்த செவிலியருக்கு நித்திலனை தெரியும் என்பதால் உடனே நந்தாவிற்கு அழைத்து விசயத்தைக் கூறிவிட்டாள். அதன்பின் அனைத்தும் அவசரமாய் ஏற்பாடு செய்யபட்டது.

வாயிலிலேயே மித்ரனும் நந்தாவும் காத்திருந்தனர். ஊர்தி வந்தவுடன் உள்ளே அழைத்து செல்ல, மித்ரனைப் பார்த்ததும் “அ…பி…மன்யூவப் பாக்…கணும்” என்றவர் ‘இனி மகன் பார்த்துக் கொள்வான்’ என்ற நம்பிக்கையில் முழுவதுமாக மயக்கநிலைக்கு சென்றார். அதற்கு பிறகு சிகிச்சையளித்து, தற்போது சுமித்ரா கண்விழிக்க அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

….

ஒருகையை தலையில் வைத்துக்கொண்டு இன்னொரு கையை சுமியின் கையை பிடித்தவாறு அமர்ந்திருந்தாள் மீரா. ஒவ்வொரு நினைவாக உயிர்ப்பித்தெழுந்து மனத்தை பிசைந்துக்கொண்டிருந்தது. அழுது அழுது கண்கள் சிவந்து முகம் வீங்கியிருந்தது.

இதுபோல் ஒருநாள் சுமித்ரா கடும்காய்ச்சலால் அவதியுற்று இருந்தாள். அன்றைய நினைவுகள் அனலாய் மேலெழும்பியது.

‘நித்திலன் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துவிட்டு சுமித்ராவைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது மீராவிற்கு பதினான்கு வயது. அன்னையின் சுகவீனம் மகளை பயப்படுத்தியிருந்தது.

மித்ரன் அறைக்குள் நுழைந்தான். “மீரா…”

“என்னடா? ஏன்டா அழுகுற?”

“அம்மா… அம்மாக்கு என்ன ஆச்சு? எனக்கு பயமா இருக்கு மீராக்கா” தாயை எண்ணித் தவிக்கும் கன்றாய் பன்னிரண்டு வயது பாலகனை என்னச் சொல்லித் தேற்றுவது என்று மீராவிற்கும் புரியவில்லை.

“அம்மாக்கு காய்ச்சல்தான்டா. வேற ஒன்னும் கிடையாது. அழாத” என்று சொன்னவளுக்கும் அழுகைதான் வந்தது.

பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பயெண்ணி அவர்களைத் தேடிவந்தான் நித்திலன். அப்போது அவர்கள் பேசியது அவனுக்கும் கேட்கத்தான் செய்தது.

இதுவரை இத்தனை அவதியுற்றது கிடையாதே அவன் சுமி. பிள்ளைகள் வெளியே அழுதுவிட்டன. அவன் அழவில்லை அவ்வளவுதான் வித்தியாசம்.

“மீரா, மித்து…” என்றபடி உள்ளே வந்தான்.

இருவரும் கண்ணைத் துடைத்தவாறு அவனைப் பார்த்தனர். தந்தைக்கு மகவுகள் அழுதால் தாங்காதே!

“என்ன ரெண்டு பேரும் சீரியஸ்சா டிஸ்கஸ் பண்ணிட்டு இருக்கீங்க? டைம் ஆச்சு, ஸ்கூலுக்கு கிளம்பணும்ல. வாங்க, வாங்க. மீருக்குட்டி, இன்னைக்கு மட்டும் நீங்களே தலை சீவிக்கோமா. நான் தோசை ஊத்தி, சட்னி அரச்சு வச்சியிருக்கேன். மதியத்துக்கு ரச சாதம் செஞ்சுட்டேன். அம்மாவுக்கு காரம் கொடுக்கக் கூடாதுல்ல, அதான். அம்மாக்கு சரியான உடனே நாம ஹோட்டல் போலாம்” என்றான்.

மறைந்திருந்த அழுகை ‘அம்மா’ என்று சொன்னதும் மீண்டும் உருவெடுத்தது.

“நான் லீவ் போட்டுக்குறேன்பா. நானும் அம்மாவ பாத்துக்குறேன். மித்ரன் மட்டும் போகட்டும்” என்றாள் மீரா அழுதபடி.

“அதுலாம் ஒன்னும் வேண்டாம் மீரா. நான்தான் லீவ் போட்டு இருக்கேன்ல. ஒருவேள என்னால பாத்துக்க முடியலன்னா நானே சொல்றேன் நீ லீவ் போட்டு அம்மாவ பாத்துக்க, சரியா. இப்போ சமத்தா ரெண்டு பேரும் கிளம்புங்க” என்று பிள்ளைகளுக்கு தைரியம் அளித்தவன் மனத்தில் வேறொரு எண்ணம்.

‘என்னைக்கும் என்னால பாத்துக்க முடியாதுன்னு ஒரு சூழ்நிலை வரவே வராது மீருக்குட்டி. என்னோட கடைசி மூச்சு இருக்க வரைக்கும் என் சுமிய நான் பாத்துக்குவேன். அவ இல்லாம நான் எப்டி?’ ஒரு காய்ச்சலுக்கே மனைவி படும் அவஸ்தை அவனை வாட்டியது. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வஞ்சனையின்றி அன்பை வாரி வழங்குகிறாளே! வேறு என்ன வேண்டும் தனக்கு? என்ற எண்ணம் மட்டுமே நித்திலனிற்கு.’

இதுவரை அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லையென்றால் அப்பா மட்டுமே கண்ணும்கருத்துமாய் பார்த்துக்கொள்வார். இருவரையும் விடுப்பு எடுக்க விட்டதேயில்லை. ஆனால், இன்று? இருவரையும் எண்ணி மனது தவித்தது. எழுந்து வாருங்களேன் என்று மீராவின் மனது கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தது.

மித்ரன் அறைக்குள் நுழைந்தான். “மீரா…”

தலையிலிருந்து கைகளை எடுத்தவள், நிமிர்ந்து அமர்ந்தாள். “அப்பா எப்டி இருக்காருடா?”

“இன்னும் எழுந்திரிக்கல. நைட்டு ஒரு மணிக்கு மயக்கம் தெளிஞ்சது. எழுந்த உடனே அம்மாவதான் கேட்டாரு. காலைல பாக்கலாம்னு சொல்லி படுக்க வச்சோம்.

மித்ரன் பின்னாலேயே நந்தனும் வந்தான். இருவரும் சுமியைப் பரிசோதித்தனர். இருவரையும் மீரா தவிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தாள். தலையில் அடிபட்டதினால் கதிரியக்கத் துழாவற் படம் (CT Scan) எடுத்துப் பார்த்ததில் சுமித்ராவிற்கு தலையில் உள்இரத்தக் கசிவு (Internal Bleeding) இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. சுமி அபாயக்கட்டத்தை கடந்து விட்டாலும் இரவுக்குள் சுமித்ரா கண்விழிக்கவில்லை என்றால் ஆழ்மயக்க நிலைக்கு செல்லவும் வாய்ப்பு இருக்கிறது.

“இன்னைக்கு மதியத்துக்குள்ள அம்மா கண்விழிக்கலன்னா என்ன மாமா பன்றது?”

“உனக்கே தெரியும்லடா. கோமா ஸ்டேஜ்தான். அவங்ககிட்ட பேச்சு கொடுத்துக்கிட்டே இருங்க. ஆமா, கேட்கணும்னு இருந்தேன். யாரு அந்த அபிமன்யூ?”

மீரா குழப்பமாக பார்த்தாள். ‘அபிமன்யூவா?’

“நானும் பார்த்ததில்ல மாமா. ஆனா, அம்மாவோட க்ளோஸ் ப்ரெண்டுன்னு அப்பா சொல்லிக் கேட்டு இருக்கேன்”

“என்னடா?”

“அம்மாவ ஸ்ட்ரெச்சர்ல தூக்கிட்டு வரப்போ என்னைப் பாத்து ‘அபிமன்யூவ பாக்கணும்’னு சொன்னாங்க.”

“எல்லாரும் பேசிப்பாருங்க அத்த கிட்ட. ஒருவேள அப்பவும் அவங்களுக்கு கான்சியஸ் வரலன்னா, அபிமன்யூவ பேச வைக்கணும்” என்றவன், மீராவிற்கு ஆறுதலாய் அவளின் கையை தட்டிக்கொடுத்துவிட்டு சென்றான், நந்தன்.

அடிபட்டு இரத்த முகமாக மருத்துவமனையில் சேர்க்கும்போது “அபிமன்யூவ பாக்கணும்” என்ற அம்மா கூறியதாய் மித்ரன் சொன்ன, அந்த வார்த்தைகள்தான் மீராவின் செவிக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.

மீராவிற்கு ஒரே கேள்விதான். ‘அம்மா, தன்னோட இக்கட்டான சூழ்நிலைல அப்பாவ கேட்காம ஏன் அபிமன்யூவ பாக்கணும்னு சொல்லணும்?’ இந்த கேள்விக்கு மீராவிடம் பதிலில்லை.

பதில் யாரிடம்?

 

அன்புடன்

காதல்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்