
காதலொன்று கண்டேன்!
தேடல் 35
பையனுக்கு கொஞ்சம் அதிர்வு தான்.தன் வீட்டை எப்படி தேடிப் பிடித்துக் கொண்டு வந்தாள் என்பது.உடன் அவளின் தம்பியையும் அழைத்து வந்திருந்தாள்.
வாசுவிடம் கூறினால்,பேயாட்டம் ஆடிடுவான் என்று தெரிந்தவளோ,எப்படியோ பொய்களுடன் அவனை சரி கட்டி இங்கு வந்திருந்தது.
தன் முன்னே அமர்ந்திருந்தவளை வெறுமையாய் அவன் பார்த்திட,அவன் முகபாவமே அவளுக்கு உணர்த்திற்று,அவனாக எதையும் பேச மாட்டான் என்று.
அதுவும் அன்று கண்ட அதே பெண்,குழந்தையுடன் ஒரு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்திட,இவளின் முகம் இறுகிச் சிவந்தது.
“நா கொஞ்சம் பேசனும்..பேசற வர பொறுமயா கேளுங்க..குறுக்க பேசாதீங்க ப்ளீஸ்..” அவளின் கெஞ்சலுக்கு,மறுப்பு சொல்லவில்லை,அவன்.
அவனின் அமைதியதை,அனுமதியாய் கொண்டு தன் பேச்சை தொடர்ந்தாள்,அவள்.
“உங்களுக்கு பழசு மறந்து இருக்குறதா சொன்னாங்க..ஆனா யாழ் உங்கள லவ் பண்ணா..ரொம்ப லவ் பண்ணா..நீங்க..” என்றவளின் பேச்சு பாதியில் நின்றது,தோழி அன்று உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்ததில்.
“அவரு என்ன லவ் பண்ணாரான்னு எனக்கு தெரியாது..அவரு எனக்கு அன்னிக்கி வாக்குத் தந்தது உண்ம..அதப் போய் சொல்லி அவரு சட்டய புடிச்சு நியாயம் கேக்கலாம்..ஆனா ஒருவேள அவருக்கு கல்யாணம் ஆனது உண்மயா இருந்தா..அப்றம் மனுஷன் குற்ற உணர்ச்சிலே செத்துருவாரு..அதனால அப்டி நா கேக்க மாட்டேன் ஒரு நாளும்..”
உறுதியான அவளின் வார்த்தைகள் போதுமே,அவன் மீதாவ வரையின்றிய நேசத்தை எடுத்துக்காட்ட.அந்த வார்த்தைகள் தோழியை நிதானிக்க வைத்தது.
“அவ தான் உங்கள லவ் பண்ணா..நீங்க அவள லவ் பண்ணல..அவ தான் உங்க மனசு என்னன்னு தெரியாம ஆசய வளத்துக்குட்டா..”
என்றவளை ஆராய்ந்த அவனின் பார்வையில் இருந்த உணர்வுகளின் மொழிபெயர்ப்பை எழுதிட புது மொழி படைக்க வேண்டும்.
“அவ தப்பு தான் அது..நீங்க கல்யாணம் ஆனவருன்னு சொன்னத நா நம்பறேன்..ஆனா அவ நம்ப மாட்டேங்குறா..”
“என்ன சொல்லி அவ கிட்ட புரிய வக்கிறதுன்னு கூட தெரில எனக்கு..ஆனா ஒன்னு மட்டும் உண்ம..அவ ஆர்யாவ தான் காதலிச்சா..நீங்க அடுத்தவ புருஷன்னு தெரிஞ்சு இருந்தா உங்கள கண்டிப்பா காதலிச்சு இருக்க மாட்டா..அவ அப்டி பட்டவ எல்லாம் இல்ல..”
“இப்போ கூட அவ உங்களுக்கு கல்யாணம் ஆச்சா இல்லயான்னு சந்தேகப் பட்டுட்டு தான் இருக்கா..சந்தேகம் தான்..அதப் போய் அசிங்கமா எடுத்துக்காதீங்க..அவ ஒன்னும் அடுத்தவ புருஷன்னு தெரிஞ்சும் உங்க கூட சேரனும்னு நெனக்கல..”
“அவளுக்கு அவ்ளோ நம்பிக்க உங்க மேல..நீங்க பொய் சொல்றீங்கன்னு தோணுதுன்னு சொல்லிட்டே இருக்கா..அசிங்காம நெனக்காதீங்க அத..நீங்க பொய் சொல்றீங்கன்னு தோணுற அளவு உங்க மேல இருக்குற நம்பிக்க..அவ லவ் அப்டி சீக்கிரமா மாறாதுன்னு அது மேல இருக்குற நம்பிக்க..அது தான் அவ அப்டி உங்க கிட்ட நடந்து கிட்டது..”
“அன்னிக்கி அவ நடந்து கிட்டதுக்கு உங்க கிட்ட நா சாரி கேக்கறேன்..அவ இப்ப கூட நம்பறா நீங்க ஏதோ ஒன்ன மனசுல வச்சிட்டு பொய் சொல்றீங்கன்னு..நாங்க யாரும் எவ்ளோ எடுத்து சொல்லியும் அவ கேக்க மாட்டேங்குறா..இன்னும் மூணு நாளுல அவளுக்கு கல்யாணம்..தயவு செஞ்சு அவ கிட்ட வந்து எப்டியாச்சும் உண்மய எடுத்து சொல்லி புரிய வைங்க..அவளுக்கு ஒரு வாழ்க்க வேணும்..ப்ளீஸ்..”
“நா அவள உங்கள பாக்க கூட்டிட்டு வந்துருப்பேன்..திரும்ப அவ உங்கள மீட் பண்ணினா அவ லவ்வ நீங்க அசிங்கம்னு சொன்னா சத்தியமா செத்துருவா அவ..தயவு செஞ்சு வந்து புரிய வைங்க..” அவள் கை கூப்பி கெஞ்ச,அப்போதும் எந்த பதிலையும் மொழிந்திடவில்லை,பையன்.
●●●●●●●
இன்னும் சில நாட்களில் திருமணம்.
டாக்டருக்கே வியப்பாகத் தான் இருந்தது,அதை நினைக்கையில்.மனதில் சிறு இதம் பரவிட,வீட்டினருக்கும் அவன் முகத்தில் புதிதாய்த் தெரிந்த மலர்வு புன்னகையைத் தந்தது.
இங்கோ,பாவையவளின் வீடு ஆட்களால் நிரம்பி இருக்க,அவளோ அறையில் அடைந்து கிடந்தாள்,தன்னுணர்வுகளை மறைத்திட.
மனம் மட்டும் பையனின் வரவுக்காக,கடந்திடும் ஒவ்வொரு நொடியிலும் தவமிருந்தது.
ஒரு நம்பிக்கை அவன் மீது;அவள் காதலின் மீது;அவனின் ஒற்றைப் புன்னகை மீது.
அந்த நம்பிக்கையின் பேரில் தானே,இத்தனை நாள் அவனுக்கென தவமிருந்தே.இப்போதும்,அதே நம்பிக்கை அவன் வருவான் என்று.
வெளியிலே,பார்வதியும் பரிமளாவும் இணைந்து மகிழ்வு மின்னும் முகங்களுடன் கதைத்துக் கொண்டிருக்க,அவளை அழைத்தாலும் சத்தம் கேட்டும் உறங்குவது போல் பாவனை காட்டி கட்டிலில் படுத்து இருந்தாள்.
அவள் திருமணத்துக்கு சம்மதம் சொன்னதே பெரிய விடயம் என்றிருக்க,யாரும் அவளை எந்தவொன்றுக்காகவும் வற்புறுத்தவில்லை.
அடிக்கடி அவளின் வீட்டுக்கு வரும் டாக்டர் கூட,அவளிடம் கேட்டு வைப்பான்.
“நீ இன்னுமே அவன நம்பறியா தென்றல்..?” அவன் கொஞ்சம் எள்ளல் கலந்த தொனியுடன் வினவிட,அவளின் பதில் மௌனம்.அந்த மௌனமே போதும்,ஆமோதிப்பை உணர்த்த.அந்த மௌனத்தில் அவன் மீதான காதலும் தெரியும்.
அருகில் திருமணத்தை வைத்துக் கொண்டும் அவள் உம்மென்று இருப்பது டாக்டருக்கு கடுப்பை கிளப்பினாலும்,அவளின் நிலையில் இருந்து யோசித்து அவன் அமைதியாவதுண்டு.
அவள் மீது அவனுக்கு எந்த விருப்பமும் இல்லாத பொழுதுகளில்,அவள் காதலை இரசித்தவன் தான்.இப்போது,அவள் மீது விருப்பம் வந்திருக்க,அதே போன்று சிறு ஈர்ப்பை அவளிடம் எதிர்ப்பார்க்க,அது கிட்டாது போனதன் விளைவு போலும் அது.
இதில் அஞ்சலி..?
அவளை விட்டு வெகுதூரம் அவன் வந்திருக்க,சில சமயம் தன்னை மீறி அவனை நினைவுகள் ஆட் கொண்டாலும்,அது என்னவோ பாவையவளில் வந்து நிற்க,அது அவனுக்கும் கொஞ்சம் அதிர்வு தான்.
மணக்கப் போகிறவள் என்று மனதில் அழுத்தமாய் பதிந்து விட்டது போலும் என தனக்குத் தானே கூறி சமாதானம் செய்து கொள்வான்,அவன்.
அவனும் நினைத்திருக்கவில்லை,யாழவளுடனான திருமணத்தில் தான் இத்தை முனைப்புக் காட்டுவோம் என்று.
அவன் வலியும் அவள் வலியும் ஒருமித்து தோன்றுவதால் வேறு வழியின்றி மணக்க முடிவு செய்தவனுக்கு,சத்தியமாய் இப்பொழுது அந்த எண்ணமில்லை.
காதலா..?
காதலின் அதிகாரங்கள் விரிந்து நிற்கையில்,அவளுக்கான அவனின் உணர்வை காதல் என்று வார்த்தைக்கேனும் கூறுவது தகாது.
அவள் மீது சிறு விருப்பம்;அவள் காதல் தனக்கு உரித்தாக வேண்டும் என்கின்ற ஆசை,அவ்வளவே!
அது காதலில்லை.அதைக் காதல் என்றால்,அடி நெஞ்சின் ஆழமான உணர்வுகளுக்கு பிரபஞ்சத்தில் பெயரில்லை!
மறுநாளும் எட்டிப் பார்த்து விட்டது.சரியாக இன்னும் நான்கு நாட்களில் அவளுக்கு திருமணம்.அந்த எண்ணமே இல்லை,அவளில்.
உள்ளுணர்வு அதை ஒப்புக்கொள்ளாதது போனது அவளுக்கு பெரும் நம்பிக்கையை தந்தது.
அவளின் மனம் மட்டும் இன்னும் மாறியபாடில்லை.அத்தனை சுலபமாய் அவளின் மனதை மாற்றிட இயலும் என்று டாக்டர் தப்புக் கணக்கு போட்டிருந்தான்,போலும்.
“அம்மா நா கோயிலுக்கு பொய்ட்டு வர்ரேன்..”அவள் பதிலுக்கு அவரின் முகம் பார்த்திட,அவளின் முகத்தில் என்ன கண்டாரோ அவருக்கும் முன் சரியென்று தலையசைத்து இருந்தார்,பரிமளா.
“பொய்ட்டு வரட்டும் பார்வதி..கல்யாணம்னு வரும் போது எல்லாருக்கும் மனசு படபடன்னு இருக்கும்ல..”அவளின் நிலை புரிந்தாற் போல் அவர் பேசிட,அதற்கு மேல் பார்வதியும் மறுக்கவில்லை.
அகல்யாவின் மகனை அழைத்தவாறு,வீட்டில் இருந்து சற்றுத் தள்ளி இருக்கும் கோயிலுக்கு அவள் நடந்தே சென்றிட,எப்போதும் போல் அதில் காலடி எடுத்து வைக்கையில் அவனின் நினைவு தான் நெஞ்சை மோதிற்று.
முன்பெல்லாம் மனம் நிறைய இதழ் விரியும்.ஏனோ இம்முறை வலியும் வழிமறித்து இடம் கேட்க,சட்டென விழிகள் கலங்கிப் போயின.
“அத்த” என்ற வாண்டின் குரலில் அமைதி அடைந்தவளோ,கலங்கிய விழிகளை சிமிட்டியவாறு அவனைப் பார்த்து புன்னகைத்தாலும்,அந்த புன்னகையில் உயிர்ப்பே இல்லை.
ஜீவன் வற்றிப் போயிருக்கையில் புன்னகையில் எங்கு உயிர்ப்பின் ஈரம் துளிர்ப்பதாம்..?
மனமுருகி இதயம் வலிக்க,கை கூப்பி வேண்டத் துவங்கி இருந்தாள்,கடவுளிடம்.
“அவரு அசிங்கம்னு சொல்லிருவாரோங்குற பயத்துல திரும்பப் போய் என்னால அவர் கிட்ட எதயும் கேக்க முடியாது..அவருக்கு எதுவும் ஞாபகம் இல்லன்னாலும் என்னோட காதல அவரு கேவலமா நெனச்சிரக் கூடாது சாமி..”
“ஏன்னு தெரில சாமி மனசு மட்டும் உண்யம ஒத்துக்கவே மாட்டேங்குது..அவருக்கு கல்யாணம் ஆகி இருக்காதுன்னு மனசு படபடன்னு சொல்லிட்டே இருக்கு..அது உண்மயா பொய்யான்னு தேடவும் மனசு விடல..அவரு பேசுனது அத பண்ண எடம் தர மாட்டேங்குது..ஆனா எல்லாரும் சொல்றத பாக்கும் போதும் அவரு அன்னிக்கி நடந்துகிட்டத பாக்கும் போதும் மனசு கேக்கல”
“இந்தக் கல்யாணம் நடக்காதுங்குற நம்பிக்கைல தான் இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்..நீ தான் எனக்கு சரியான வழிய காட்டனும்..”
அவள் மெல்லிய இதழசைப்புடன் கடவுளிடம் வேண்டிக் கொள்கையில்,அவளின் துப்பட்டா இழுபட,கீழே குனிந்து பார்த்தால்,அகல்யாவின் மகன் தான் இழுத்துக் கொண்டிருந்தான்.
என்னவென்று அவள் கேட்க,அவன் கை காட்டிய திசையில் பார்த்தவளின் இதயம் சடாரென வேகமெடுத்தது,அங்கு பையனைக் கண்டதும்.
குளக்கட்டில் அமர்ந்திருந்தவளின் விழிகளில் நீர் திரண்டிருக்க,அடிக்கடி அதை சிமிட்டியதில் இமைகளும் நனைந்து போயிற்று.
அழுவதும் இப்போது வாடிக்கையாயிற்று,என் நொந்து கொண்டது மனம்.
“யாழ்ழ்ழ்ழ்..” என்ற அவனின் அழைப்பில் அவள் விழிகள் ஒரு கணம் மின்னி மறைந்தது.முதலில் அவளை இப்படித் தானே,அவன் அழைத்தது.
“யாழ் தான பேர்..?” அவன் மீண்டும் அவளிடம் வினவ,அவளின் புன்னகை சற்றே விரிய,அவனுக்கு காட்டாது முகத்தை திருப்பினாள்,அவள்.
“நா உங்க கூட கொஞ்சம் பேசனும்..”
அவனின் குரலில் இருந்த ஒட்டாத தன்மையே,அவளுக்கு அவன் கூற வருவதை புரிய வைப்பது போல்.
“ஐ அம் சாரி..” தளர்ந்து நலிந்து ஒலித்தது,அவன் குரல்.
அவளோ எதற்கென்று நிமிர்ந்து பார்த்திட,அவன் விழிகளைக் கொண்டு அவளால் எந்த உணர்வுகளையும் படிக்க முடியவில்லை.
“நா அன்னிக்கி ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன் ரியலி சாரி..” நெற்றியை நீவிக் கொண்டு அவன் மன்னிப்புக் கேட்டிட,அதில் பொய்யைக் காணவில்லை,அவள்.
“நெஜமாலுமே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுங்க..இத எப்டி உங்க கிட்ட ப்ரூஃப் பண்றதுன்னு தெரில எனக்கு..வேணும்னா ஃபோட்டோ காட்டட்டுமா..?” அவன் அலைபேசியை கையில் எடுத்திட,வேண்டாம் என்று தலையசைத்தாள்,அவள்.
புகைப்படத்தை பார்த்தால் செத்தே விடுவாள்,உயிரோடு.அவள் பொய்யென்று நினைப்பது உறுதியாகின்,அவள் ஆன்மா அணைந்தே போய்விடும்.
“என் மேல லவ் வர்ர மாதிரி நா உங்க கிட்ட நடந்து இருந்தா தயவு செஞ்சு மன்னிச்சுக்கோங்க..நீங்க இப்டி இருக்குறப்போ என்னாலயும் என் ஃபேமிலி கூட நிம்மதியா இருக்க முடில..” என்க,அவளுக்கு சுருக்கென்றது.
“நா இதுக்கு முன்னாடி எப்போவாச்சும் உங்கள லவ் பண்றேன்னு சொல்லி இருக்கேனா..?” அவனின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவளை சுட்டது.
பிடித்தம் என்று உரைத்திருந்தாலும்,காதல் என்று ஒரு பொழுதேனும் அவளிடம் கூறியது கிடையாதே.நினைவின் தொலைவில் பிடித்தங்களும் காணமல் போய் விட்டது போலும் என வலியுடன் நினைத்தவளுக்கு,கண்ணீரும் வரவில்லை.
“உங்க கிட்ட ஏதாச்சும் ப்ராமிஸ் பண்ணேனா..?” என்று அவன் வினவ,இல்லையென்றாள்,அவளும்.
அவனே வலிய வந்து கூறுகிறான் திருமணம் ஆகி விட்டது என்று.அவனின் வார்த்தைகளில் துளியளவு பொய்யையும் அவளால் கண்டிட முடியாதிருக்க,அதற்கு மேலும் மறுக்கவில்லை.ஆயினும்,மனதின் துளியோரம் மட்டும் ஏற்க விடாமல் சதி செய்தது.
அவன் வாக்குத் தந்தான் தான்.ஆயினும்,தற்பொழுது அவனிடம் அதைத் தெரியப்படுத்த விரும்பவில்லை.அவனுக்கு அது தெரியாமலே இருக்கட்டும் என்றே,எண்ணியது அவன் மீது காதல் கொண்ட நெஞ்சம்.
“ரியலி சாரி மிஸ்.யாழ்..சத்தியமா எனக்கு எதுவும் ஞாபகம் இல்ல..நா உங்கள ஏதாச்சும் ஒரு விதத்துல பாதிச்சு இருந்தா ரியலி சாரி..ப்ராக்டிகல்னு ஒன்னு இருக்கு..எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..சப்போஸ் பாஸ்ட் ல நா உங்கள லவ் பண்ணி இருந்தாலும் அது பாஸ்ட் தான்..”
“வெறும் பாஸ்ட்ட்ட் மட்டும் தான்..என்னோட ப்ரசன்ட் ஃப்யூச்சர் எல்லாம் என்னோட வைஃப் மட்டுந்தான்..ஜஸ்ட் வந்து போற லவ்வுக்காக கல்யாணத்த தூக்கி போட்ற அளவு கேவலமானவன் இல்ல நா..ஹோப் யூ வில் அன்டர்ஸ்டான்ட்..உங்களுக்கு கல்யாணம்னு கேள்வி பட்டேன்..காங்கராஜுலேஷன்..”
“உங்களுக்கு என் மேல ஃபீலிங் இருக்கலாம்..அது வர்ரதுக்கு நா காரணமாவும் இருக்கலாம்..பட் உங்க லைஃப்ல நா பாஸிங் க்ளவுட் மட்டுந்தான்..இதுக்கப்றம் எனக்கு பழசு ஞாபகம் வந்தாலும் கண்டிப்பா நா எப்டியும் உங்கள தேடி வர மாட்டேன்..தேடி வர்ர அளவு நா உங்கள லவ் எல்லாம் பண்ணியும் இருக்க மாட்டேன்..என்னோட கேரக்டர் பத்தி எனக்கு நல்லா தெர்யும்..” அவன் வார்த்தைகளில் அதே திமிர் புலப்பட,அவள் இதழ்களில் மெல்லிய முறுவல்.
“நீங்க மேற நா வேற..நீங்க உங்க லைஃப பாருங்க..” என்றவனோ,அகன்று செல்ல,அவளின் குரல் அவனை தடுத்து நிறுத்தியது.
“ஐ அம் சாரி..” அவளுக்கும் குற்றவுணர்வு.
“நீங்க கல்யாணம் ஆனவருன்னு சொல்லியும் கேக்காம டிஸ்டர்ப் பண்ணதுக்கு..”
நம்பி விட்டாளா..?
இன்னும் முழுதாக இல்லை.ஆனால்,நம்பியது போல் காட்டிக் கொண்டாள்.அவனின் திருப்திக்காக போலும்.மீண்டும் மீண்டும் வழிய வருபவனை வதைக்க,அவள் எண்ணவில்லை.
“இனிமே கண்டிப்பா உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்..மன்னிச்சுக்கோங்க..” கரம் உயர்த்தி மன்னிப்புக் கேட்டவளிடம் இருந்து சிறு தலையசைப்புடன் விடைபெற முற்படுகையில் உரைத்த அவளின் வார்த்தைகளுக்கு பதிலேதும் சொல்லாமல் கிளம்பி விட்டான்,பையன்.
“வர்ர ஞாயிறு கல்யாணம் இதே கோயில்ல தான்..முடிஞ்சா வந்துட்டுப் போங்க..” அவ்வளவு தான் கூறினாள்.பிறகு அவனுக்கு ஏதாவது நினைவில் வந்தால் கூட,தான் மகிழ்வுடன் திருமணம் செய்தது நினைவில் வந்தாலாவது அவனின் மனதை குற்றவுணர்ச்சியில் இருந்து நீக்கி விடும் என்பதனால் இந்த யோசனையே.
அவன் உருவம் விழிகளை விட்டு மறையும் வரை அவனையே பார்ததிருந்தளின் விழிகளில் ஏகப்பட்ட உணர்வுகள்.
“இவரு சொல்றது உண்மயா இருந்தா..கடவுளே இனிமே எக்காலத்துக்கும் இவருக்கு பழசு ஞாபகம் வந்துரக் கூடாது..பொய்யா இருந்தா என் கழுத்துல தாலியேர்ரதுக்கு முன்னாடி அவரு என்ன தேடி வரனும்..”கடவுளிடம் வேண்டியவளுக்கு,வேறு வழியும் இல்லை.
குழந்தையோ,அவளையே பார்த்திருக்க,அவனின் தலையை கோதி விட்டு மெல்லச் சிரித்தாள்,அவள்.அந்த புன்னகையில் வார்த்தைகளால் விவரிக்க முடியா பலநூறு அர்த்தங்கள்.
நேசத்தின் கனம் நெஞ்சை அடைத்திட,அதன் பாரத்தில் அழுகையும் அடங்கிப் போனது.
சில நேசங்கள் அப்படித் தான்.அவற்றின் அகராதியில்,நான் என்ற வார்த்தை எப்போதும் நீ என்பதன் பின்னே தான்.வலிகளின் போது மட்டுமே,அந்த “நான்” முன்னுரிமை கேட்டிடும்.
காதல் தேடும்.
2025.04.30
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்ன தான் நடக்கப் போகுதோ
Exciting