
காதலொன்று கண்டேன்!
தேடல் 34
விழிகளில் சட்டென நீர் கோர்த்திட,அதை அடக்கியவாறு அறைக்குள் நுழைந்தவளின் பின்னூடு,வந்த மித்ராவுக்கு பையனின் கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்திடும் அளவு ஆத்திரம்.
அறைக்குள் நுழைந்து மடிந்த அமர்ந்த பாவையவளோ,நெஞ்சைப் பிடித்துக் கொண்டு,விம்மி வெடித்து அழுதாள்.
தலையில் அடித்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுதவளில் இருந்து நில்லாமல் கண்ணீர் வழிய,நிமிர்ந்து மித்ராவைப் பார்த்திட,அவளுக்கோ தோழியின் விழிகளில் மரணவலியைக் கண்டதும் மனம் பிசைந்தது.
“நா தொலச்சிட்டேன்ல…அ..அவர நா தொலச்சிட்டேன்ல..” தலையில் அடித்துக் கொண்டு அழுதவளின் மனதில் அத்தனை வலி.
“அ..அவரு..நே..த்து சொல்லும் போ..போது கூ..ட நம்..நம்பல டி..நா..ஆனா..உரிம..யா அவ..அவங்க அவ..அவரோட கை..பிடிக்கிறத..பாக்கும்..போது..அவரு உரிம இல்..இல்லன்னா அந்த சின்ன உரி..உரிமய கூட தந்து இருக்க..மாட்டாரே..டி..” ஏங்கி ஏங்கி அழுதவளுக்கு,முன்னில் இருந்தவளைத் தழுவும் போது அவன் விழிகள் ஏந்திடும் கனிவு கூட மரண வலி தான்.
“அ..வரு..எனக்..கு யாரோ..ல இப்ப..” அழுதழுதே கேட்க,என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,விழித்த தோழியின் விழிகளிலும் மெல்லிய நீர்ப்படலம்.
“இன்..இன்னொருத்தரோட சொ..சொந்தம்ல..” கூறியவளுக்கு அதை நினைக்கும் போதே,நெஞ்சு வெடிப்பது போல் தான் இருந்தது.
“ஒரு..மாதிரி என்..என்னமோ பண்ணு..பண்ணுதுடி..செத்து..ருவேன்னு தோணு..து..” கண்ணீரைத் துடைத்தவாறு உரைத்தவளின் விழிகள்,அவளின் மன எண்ணம் அதுவென்ற ஒப்பிக்க,மித்ராவுக்குத் தான் மனம் பாரமானது.
“யாழ்ழ்ழ்ழ்ழ்..”
“ஒரு வேள அவருக்கு பழசு மறந்து இல்லன்னா இப்டி ஆயிருக்காதுல..” அவள் கூற வருவதை புரிந்து கொள்ளாமல்,தன் பாட்டில் அவள் பிதற்றிட,மித்ராவுக்கு பயம் பிடித்துக் கொண்டது.
“யாழ்ழ்ழ்ழ்ழ்..” அவள் அதட்ட,அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை,அவள்.
“அ..ந்த பொண்ணு..கைய புடிக்கிறா..அப்போ அவரு பொ..ண்டாட்டி தான..அவரு..அப்டி அலோவ் பண்ண..மாட்டாருல..”பைத்தியம் போல் அதையே பிதற்றிட,அவளை பிடித்து அமர வைத்தாள்,தோழி.
“யாழ் நா சொல்றத கேளு..” அவளின் கன்னத்தை பிடித்துத் தட்ட,சுவற்றில் நிலைகுத்திய விழிகள் அவள் புறம் திரும்பவேயில்லை.
“அ..அவரு பொய்..சொல்றாரா மித்ரா..? என் கிட்ட ப்ரேங்க் பண்றாரா..?” அவள் புறம் திரும்பி வினவிட,அதில் ஆமென்று சொல்லிவிடேன் என்கின்ற இறைஞ்சல் அளவுக்கு மீறி.
“யாழ் நா சொல்றத கேளு..” கன்னத்தில் தட்டிட,அவளோ எதிர்வினையாற்றாது போக,பட்டென அறைந்தாள்,கன்னத்தில்.
“நா சொல்றத கேளுன்னு சொல்றேன்ல..” அவள் அறை அதிரும் அளவு கத்திட,திரும்பி அடிபட்ட பார்வை பார்த்தாள்.
“நீயும் ஏன்டி ஹர்ட் பண்ற.?”கன்னம் தொட்ட கண்ணீருடன் வினவிட,சட்டென அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்,தோழி.
“யாழ்ழ்ழ்ழ்..அமைதியா இருடி..”
“ஏன்டி அவர என் கண்ணுல காட்டுனாங்க..? ஏன்டி லவ் பண்ண வச்சாரு கடவுள்..? நானாடி அவர லவ் தேடிப் போய் லவ் பண்ணேன்..? வீட்ல தானடி பாத்து தந்தாங்க..எல்லாம் ஓகேன்னு அப்றம் தானடி விரும்புனேன்..லவ் பண்ணேன்..”
“கல்யாணத்துல விருப்பம் இல்லன்னு சொன்னப்போ கூட அவரு வந்து என் கிட்ட நேரா சொல்லட்டும்னு ஒரு நம்பிக்க இருந்தது மனசுல..அதான் அவ்ளோ வைராக்கியமா என்ன இருக்க வச்சுது..”
“ஆனா எதுக்குடி கடவுள் அவருக்கு பழச எல்லாம் மறக்க வக்கனும்..? நா தேடி வர்ரதுக்குள்ள இன்னொரு பொண்ண மீட் பண்ண வக்கனும்..” அமைதியாய் அழுதழுது வினவியவளோ,மறு நொடியே ஆக்ரோஷமானாள்.
“எல்லாம் என் தப்பு..என் தப்பு தான் டி..நா அ..அவர முன்..முன்னவே தேடி வந்து இருக்கனும்ல..”தலையில் அடித்துக் கொண்டு புலம்ப என்ன ஆறுதல் சொல்லி அவளும் தேற்றிட..?
“நா வேணும்னா ஒரே ஒரு தடவ போய் உண்மயான்னு கேட்டுட்டு வரவா..?” என்றவளோ,மின்னல் வேகத்தில் எழுந்து கொள்ள,வெளியே வந்தவளின் முன் உக்கிர முகமாய் நின்றிருந்தான்,பையன்.
திறந்திருந்த கதவு வழியே,அவர்களின் உரையாடல் அவனுக்கு தெளிவாகவே கேட்டிருந்தது.
“லவ் அது இதுன்னு பெனாத்துறான் அவன்..நீயும் என்னன்னா நா சொன்னத நம்பாம இருக்க..எனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் உன் லவ் ஜெய்க்கனும்னு வேண்டுற..அப்டின்னா அது லவ்வா..?” அவனின் கேள்வியில்,அவள் செத்தே விட்டாள்.
“எனக்குன்னா அப்டி தோணல..இப்டி எனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் நீ நடந்துக்குறத பாத்தா லவ்னு தோணல..வேற அர்த்தம் தான் கெடக்கிது..” அழுத்தமாக அவன் மொழிய,அவளுடன் அவள் காதலும் மரண அடி வாங்கியிருக்க,அழுகை அப்படியே அடங்கி விட்டது,அவளுக்கு.
பையனின் வார்த்தைகள் அவளில் இருந்த,காதலை துண்டாக்க,அது தந்த வலியில் அவள் உயிர் உருவிழந்து போனது.
அவனனின் ஒவ்வொரு சொல்லும் அவளில் அளவில்லா அழுத்தத்தை வீசிச் செல்ல,அதன் கனம் தாங்காமல் மூர்ச்சையாகி விடுவோமோ எனத் தோன்றிற்று,அவளுக்கு.
இன்னுமே,அவன் என ஏற்காத மனம்,அவன் காதலின் வரம்.அவள் காதலில்,சாபமோ என்னவோ..?
யாருக்குத் தெரியும்..?
அவனின் வார்த்தைகளில் அவள் மொத்தமாய் மரித்துப் போக,அவனோ அசரவில்லை.
“லவ்னு சொல்லிட்டு திரும்ப திரும்ப வராத..நீ லவ்னு சொல்றத கேக்கும் போதே அசிங்கமா இருக்கு எனக்கு..இப்டி கல்யாணம் ஆனவன்னு தெரிஞ்சும் திரும்ப திரும்ப தேடி வர்ரதுக்கு பேர் லவ் இல்ல..அசிங்கம்..” இதழ் சுளிப்புடன் கூறி விட்டு அவன் நகர,அவளோ அவ்விடத்தில் மடங்கி அமர்ந்தாள்,விழிகள் நிலைகுத்திப் போக.
●●●●●●●●
நடந்தது எதையும் மாற்றும் சக்தி இங்கு காலத்துக்கும் இல்லை.மறக்க மட்டுமே வைத்திட முடியும்,கடந்திடும் காலத்தால்.
இதோ ஒரு மாதம் கடந்து விட்டது,அவள் இயல்பாக;அவன் வார்த்தைகளில் இருந்து வெளிவர.
நேசத்தின் உச்ச கட்டவலி,புரிந்து கொள்ள வேண்டியவர்களே புறக்கணிப்பது தான்.அவனோ,அவனை புறக்கணித்தாய் எண்ணிய பொழுது வராத அழுகை,அவனின் பேச்சில் வந்து தொலைத்தது.
புரிந்துகொள்ளாதது போல் அவன் பேசியதில்,அவள் காதல் மொத்தமாய் அடி வாங்கியிருக்க,மீளவும் அவனிடம் செல்லவும் அவள் எண்ணவில்லை.
எங்கே தன் காதலை தவறாக நினைத்து விடுவானோ என்கின்ற பயம்.அவளைப் பற்றி அவன் என்ன நினைத்திருந்தாலும்,அவளை அது இத்தனை தூரம் தாக்கியிருக்காது.
அவள் காதலைப் பற்றி..
அவளின் உயிரில் உறைந்திருக்கும் ஒற்றை இரகசியம் பற்றி..
அவனின் ஜீவனின் மௌனமொழியதை பற்றி..
அவன் பேசிய வார்த்தைகளில் சத்தியமாய் முழுதாய் நொருங்கி விட்டிருந்தாள்,அவள்.
வீட்டில் யாருக்கும் நடந்தது எதுவும் தெரியாது.டாக்டர் அனைத்தையும் மறைத்து விடுமாறு பணித்திட,அவளுக்கும் அதுவே உசிதம் எனத் தோன்றிற்று.
அன்றும் அவன் வார்த்தைகள் நினைவிலாட கோர்த்த கண்ணீருடன் அவள் அறையை ஒழுங்குபடுத்துகையில் டாக்டர் அழைத்திடும் சத்தம் கேட்டது.
அவனோ அவளைக் காண வந்திருந்தான்,தன் பணியை முடித்துக் கொண்டு.
“தனியா பேசனும் வா..” என்றவனோ,அவளை அழைத்துக் கொண்டு வீட்டு முற்றத்துக்கு வர,அவர்களுக்கு தனிமை கொடுத்து யாரும் தொந்தரவும் செய்யவில்லை.
“தென்றல்ல்ல்ல்..”
“என்னத்தான்..?”
“நம்ம கல்யாணத்த பத்தி என்ன முடிவுல இருக்க..?” என்கின்ற கேள்வியில் அவளுக்கு திடுக்கென்றது.
ஏனோ வலியில் அவள் தோய்ந்திருக்க,இந்த திருமண விடயத்தை பற்றி எந்தவொரு தீர்மானத்தையும் எடுத்து இருக்கவில்லை,அவள்.
அதைப் பற்றி கொஞ்சமும் யோசிக்க விடாமல் வேறு நினைவுகள் அவளை வலம் வர,கண்ணீருடன் காலத்தை கழித்திருக்க,டாக்டரின் பேச்சு அவளுக்கு பெருத்த அதிர்வையே தோற்றுவித்தன.
அவளின் அமைதி அவனுக்கு கோபத்தை தந்தது.டாக்டரின் முகத்தில் கோபம் சேர,அடிக்குரலால் சீறினான்,அனல் விழிகளுடன்.
“அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரிஞ்சுருச்சு தான..?அப்றமும் என்ன ****** யோசிச்சிகிட்டு இருக்க..?” அவ்வளவு கடுப்பு அவனுக்கு.
“வேணும்னா போய் இன்னொரு தடவ செக் பண்ணிட்டு வர்லாமா..?” அவன் கோபமிகுதியில் வினவ,உடனடியாக மறுத்தாள்,யாழவள்.
அவன் முன் மீண்டும் காதல் யாசகம் கேட்டுச் சென்றால்,அவளின் காதல் இழி நிலைக்குச் செல்லும் எனப் பயந்தவள் அதை செய்யவில்லை;செய்ய விரும்பவில்லை.
அன்று அவன் வீசி விட்ட கத்தி வார்த்தைகளின் பின்,திரும்பி வந்து விட்டார்கள்.டாக்டர்,எதற்கும் ஒருமுறை என மறுக்க,அவனோ வேண்டாமென்று ஒற்றைக் காலில் நின்றதால் அவன் பின் வாங்க வேண்டியதாய் போயிற்று.
“இனிமே அவர பத்தி எதுவும் தேட மாட்டேன்னு சத்தியம் பண்ணுங்க அத்தான்..” அவள் கேட்க,அவனும் அவள் விழிகளில் தெரிந்த உறுதியில் பேசாமல் வாக்குக் கொடுத்து விட்டிருந்தான்.அதன் பின் அவனைப் பற்றித பேச்சு எதுவும் எழவில்லை என்றாலும்,அவள் மனம் இன்னும் இயல்பாகவில்லை என்று டாக்டருக்கு தெரியும்.
ஆனால்,சங்கவியின் திருமணத்தை முன்னிறுத்தி இவர்களின் திருமணத்தை வீட்டினர் அவசரப்படுத்த அவனும் என்ன தான் செய்திட..?
“நீ இன்னும் அவன தான் நெனச்சிட்டு இருக்கியா..?” அவன் வார்த்தைகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தவளின் செவிகளில்,”எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு” என்ற,அவனின் வார்த்தைகளே எதிரொலித்தது.
அவளின் அமைதியே அவளின் பதிலை உணர்த்திட,டாக்டரின் முகம் இறுகிற்று.
“பதில் சொல்லு தென்றல்..”
“எனக்கு இன்னுமும் அவர் பொய் சொல்றாருன்னே தோணுது அத்தான்..” ஏனோ அவள் விம்மலில் முடிக்க,டாக்டரின் கைமுஷ்டிகள் மடங்கின.
“கொழந்தகி டி என் ஏ டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட்ட காட்டவா உன் கண்ணு முன்னாடி தான கேட்டான்..? பொய்யா இருந்தா அவன் எப்டி தைரியமா அப்டி கேப்பான்..?” என்க,அவளிடம் பதிலில்லை.
“இங்கப் பாரு தென்றல்..நீ லவ் பண்ணவ..அதனால தான் புத்தி இப்டி கிறுக்குத் தனமா யோசிக்கிது..மொதல்ல ப்ராக்டிகலா யோசிக்கப் பழகு..லவ் லவ்னு நம்பிக்க வச்சு சுத்த இது ஒன்னும் சீரியல் கெடயாது..”
“எல்லாருக்கும் பாஸ்ட் லவ் ஒன்னு இருக்கு தான்..அதுக்குன்னு யாரும் ப்ரசன்ட வீணடிச்சிக்க மாட்டாங்க..நீ என்னன்னா ப்ரசன்ட் ஃப்யூச்சர் ரெண்டயும் நாசமாகிக்கற..”
“இதுக்கப்றம் உன் சம்மதத்த நா கேட்டுகிட்டு இருக்க மாட்டன்..இன்னொருத்தன் புருஷன நெனக்க மாட்டன்னு தான அன்னிக்கி பக்கம் பக்கமா வசனம் பேசுன..?இப்போ என்ன ஆச்சு..?”
“இன்னும் ஒரு வாரத்துல நமக்கு கல்யாணம்..சிம்பிளா கோயில்ல வச்சுப்போம்..அதுக்குள்ள அவன் உன்ன தேடி வந்தான்னா தாராளமா நீ அவன கட்டிக்கோ..இல்லன்னா என் கையால தாலிய வாங்கிக்கோ தட்ஸ்..” அவன் கட்டளையிட,இவளுக்குள் உள்ளுக்குள் நடுங்கியது.
“ஒரு வாரமான்னு யோசிக்காத..நீ கேட்ட டைம நா தந்துட்டேன்..இதுக்கப்றமும் என்னால வீட்டாளுங்க ஏமாத்த முடியாது..உன் எப்டி மாத்தனும்னு எனக்கு தெர்யும்..பீ ரெடி ஃபார் இட்..”
அலுங்காமல் குலுங்காமல் குண்டைத் தூக்கிப் போட்டவனோ,விடுவிடுவென வெளியேற அவள் தான்,சமைந்து நின்றாள்.
தன் காரைக் கிளப்பிய டாக்டருக்கும் தன் நடத்தை உவப்பாய் தோன்றிடவில்லை.இவ்வளவு நாள் இல்லாமல்,சமீபமாய் அவள் மீது சிறு பிடிப்பும் ஈர்ப்பும்.
அது என்னவோ தெரியவில்லை.ஏனென்றும் புரியவில்லை,அவளைக் கட்டுவது என்கின்ற தீர்மானத்துக்கு வந்து விட்டிருந்தான்.
அவள் காதலைக் கண்டவனுக்கு,அது தனக்கு சொந்தமாக வேண்டும் என்கின்ற பேராசை எழுந்தது மறுப்பதற்கு உரிய விடயமல்ல.அது தான் இத்தனை அவசரமாக திருமண ஏற்பாட்டில் அவன் இறங்குவது.
எங்கே இன்னும் காலம் தாழ்த்தினால்,அவள் மனம் மாறிவிடக் கூடும் என்று பயந்தான் என்பதும் உண்மை.
திருமணம் செய்த பின் அவளை மாற்றி விட முடியும் என்று ஆழமான நம்பிக்கையும் இருந்தது.அவள் காதலைக் கண்டவனுக்கோ,அவளின் காதல் வேண்டுமே வேண்டுமென்கின்ற எண்ணம் எழ,அதில் பிழையில்லை தான்.
பிழையின்மைகளிலும் தவறு உண்டாகின்,காலம் வழு தீர்க்குமோ..?
மனித மனங்கள்,சுயநலத்தின் மறுவடிவங்கள்.
●●●●●●●
நான்கு நாட்களுக்கு பிறகு,
தன் வீட்டுக் கதவு தட்டப்பட,கதவைத் திறந்த பையனுக்கு வெளியில் நின்றிருந்த மித்ராவைக் கண்டதும் சிறு அதிர்வு தோன்றினாலும்,அதை வெளிக்காட்டாமல் மறைத்துக் கொண்டான்,கள்வன்.
“ப்ச்ச் எதுக்கு திரும்ப வந்து இருக்கீங்க..?”
“ப்ளீஸ் பத்து நிமிஷம் உங்க கூட பேசிட்டு போயிர்ரேன்..” என்று அவள் கெஞ்ச வேறு வழியின்றி அவன் உள்ளே வரச் சொல்ல,அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு,தன்னறைக்குள் நுழைந்தார்,வேல்முருகன்.
அவளுக்குமோ அவனின் பாராமுகத்தில் கோபம் வந்தது.தோழியின் வார்த்தைகளுக்காக,அனைத்தையும் அடக்கிக் கொண்டாள்,வெகு பிரயத்தனப்பட்டு.
காதல் தேடும்.
2025.04.29
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அடுத்து என்ன நடக்கும்?
Eagerly waiting for next episode 😊