
காதலொன்று கண்டேன்!
தேடல் 33
டாக்டரின் பார்வை தம்மீது படிவதை கவனித்த பையனோ,அலட்சியத்துடன் கடந்து விட்டிருக்க,அவர்கள் இருவரையும் கண்டதும் டாக்டருக்கு மனம் நெருடியது.
பையனைத் தேடி வந்தவனோ,அவர்கள் இருவரையும் பின் தொடர,ஒரு வீட்டின் முன்னே வண்டி நிற்க இருவரும் இறங்கிச் செல்வதை குறித்துக் கொண்டான்,அவன்.
வண்டியைத் திருப்பிக் கொண்டு பாவையவளைக் காண வந்தவனுக்கு,அவள் முகத்தில் தெரிந்த தவிப்பும் விழிகளில் வீற்றிருந்த நிம்மதியும் இனம் புரியா பயத்தை தருவித்தன.
அவனும் நம்பியிருந்தான்,இருவரையும் சேர்த்து வைத்திடலாம் என்று.ஆனால்,அந்தப் பெண்ணுடன் அவனைக் காண்கையில் அந்த நம்பிக்கை சிறுக சிறுக சிதைந்து போவது போல்.
“கடவுளே வில்லங்கமா எதுவுமே இருக்கக் கூடாது..” அவன் வேண்டிக் கொண்டு அவளை அழைத்து கொண்டு கிளம்பப் பார்த்திட,மித்ராவும் உடன் வருவதாகக் கூற,டாக்டரின் பார்வை தமக்கையை தொட்டது.
“துருவ வச்சிட்டு என்னால அலய முடியாது சித்து..நீங்க பொய்ட்டு வாங்க..பொய்ட்டு நல்ல செய்தியோட வாங்க..”புன்னகை முகமாய் வழியனுப்பியவளின் செயலில் டாக்டரின் மனம் இன்னுமே துணுக்குற்றது.
என்ன நினைத்தானோ தெரியவில்லை,இப்போதைக்கு அவளை அழைத்துச் செல்ல வேண்டாம் என்கின்ற முடிவை எடுத்தவனாய் கிளம்பிச் சென்றிருந்தான்,அவன் மட்டும் பையனை சந்திக்க.
அவனின் மறுப்பில் யாழவளின் முகம் கசங்கிப் போனாலும்,கண்டு கொள்ளவில்லை,டாக்டர்.
அன்றிரவு,
நெற்றியை அழுந்தத் தேய்த்தவாறு அமர்ந்து இருந்த,டாக்டருக்கு பைத்தியம் பிடிக்காத குறை தான்.
இன்னுமே,”டேடி” என அழைத்துக் கொண்டு அவனை வந்து கட்டிப்பிடித்த குழந்தையின் முகமும் அதை அணைத்துக் கொண்டவனின் உணர்வுகளும் அவனின் விழிகளை விட்டு அகலவில்லை.
அதுவும் நிறைமாத வயிற்றைப் பிடித்துக் கொண்டு இருவரையும் இன்னொருத்தி பார்த்திருந்ததும்,அவனுக்கு அபாயத்தையே உணர்த்தின.
முதலில் உறுத்தினாலும்,குழந்தையைக் கண்டதும் அது இன்னும் உறுதியாவது போல்.அவனின் சாயல் தெரிந்தது,குழந்தையில்.
யாரோ இருவர் என நினைத்தவனுக்கு,குழந்தையப் பார்த்த பின்பே சந்தேகம் வலுத்திட,ஒருவாறு சந்தித்துக் கேட்டிருந்தான்,அவனிடம் விடயத்தை.
“இது என்னோட பையன் தான்..எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..” அலட்டலின்றி அவன் கூறிய பதிலில் சத்தியமாய் இடிந்து போய் விட்டான்,டாக்டர்.
அதன் பின் அவனிடம் பேசாமல் கிளம்பி வந்தாலும்,இன்னும் அந்த அதிர்வில் இருந்து அவன் மீண்டபாடில்லை.
அதுவும் அவனுக்கே மனம் பிசைந்திட,இதில் யாழவளின் எதிர்வினையை நினைக்கையில் மனம் கலங்கிற்று.
அவனே அவளுக்கு நம்பிக்கை கொடுத்து விட்டிருக்க,இதில் இடியாய் வந்து விழுந்தது,அவன் கூறிட்ட வார்த்தைகள்.
என்னவாகுமோ என நினைக்கையில் அவனுக்கு பயமாகிற்று.அழுத்தத்தின் உச்சியில் அவள் மயங்கி விழுந்தது வேறு நினைவில் வந்து அவளிடம் கண்டறிந்ததை மொழிய,தடை விதிக்க என்ன செய்வதென்று புரியாமல் திணறி நின்றான்,இதுவரை இல்லாத அளவு.
அவளிடம் உண்மையை இதற்கு மேலும் மறைப்பதில் எந்த வித நன்மையும் இல்லையென்று தோன்றிட,கூறலாம் என்று முடிவெடுத்தவனின் தொண்டைக்குழி ஏறி இறங்கியது.
அவனுக்கே சத்தியமாய் ஒரு மாதிரி ஆகிப் போக,விடிய விடிய விழிந்திருந்தான்,அவளை நினைத்து கலங்கி.
அவள் மீது காதலா என்றால் நிச்சயம் இல்லை.ஆனால்,அவன் மீது அவள் கொண்டிருக்கும் காதலின் மீது அவனுக்கு இனம் புரியா பிடிப்பு.
சில சமயங்களில் பைத்தியக்காரத்தனமாகவோ,முட்டாள் தனமாகவோ தோன்றினாலும் அவள் காதல் மீது அவனுக்கு ஒரு பிடிப்பு;பிடிப்பை தாண்டிய ஓர் ஈர்ப்பு.அவள் காதலின் மீது மட்டும்.
இத்தனை காதலிக்க முடியுமா என அவனை பலமுறை அவள் வியக்க வைத்திருக்க,இன்னும் விதி அதற்கு வாய்ப்பளிக்கப் போவது அவனுக்கு தெரியாது.
●●●●●●●
உணவகத்தில் அமர்ந்து இருந்தவளுக்கு டாக்டரின் முகத்தைப் பார்க்கையில் அத்தனை பதட்டம்.அவன் இயல்பாக இல்லை,என்பதை அவன் முகமே உணர்த்தி விட,அதன் தாக்கம் அவளையும் படுத்தி எடுத்தது.
நேற்று பையனை சந்திக்க தன்னை அழைத்து வராததே,அவளுக்கு இனம் புரியா நெருடலைத் தந்திருக்க,இப்போது அவனின் இயல்பின்மை ஏதோ செய்தது.
“தென்றல்!”
“என்னத்தான்..?”
“மித்ரா லைட்டா என் கிட்ட சொன்னா..? ஆர்யாவ காலேஜ்கு அப்றம் ஒரே ஒரு தடவ தான் மீட் பண்ணி இருக்க..அப்றம் எப்டி அது இவ்ளோ தூரம் லவ்வா..?” அவனுக்கு அவளின் நேசத்தின் ஆழத்தை அறிய வேண்டியிருந்தது;இந்த வலி அவளை எத்தனை தூரம் குத்திக் கிழிக்கும் என்று கொஞ்சமேனும் தெரிய வேண்டியிருந்தது.
“தெரில” என்றவளுக்கு,கொட்டும் மழையில் அவள் நின்றிருக்க,அவன் வந்து பேசி விட்டுப் போனது நினைவில் வந்தது.
“அப்பாவுக்கு திரும்ப சிரீயஸ் ஆயிடுச்சு..ட்ரீட்மண்ட்டுக்கு வெளியூர் போறோம்..ஒரே ஒரு வருஷம் வெயிட் பண்ணு..நா வந்துர்ரேன்..அப்றம் கல்யாணம் பண்ணிக்கலாம்..அப்பா இந்த நெலமைல இருக்கும் போது என்னால மத்தவங்க முன்னாடி நிச்சயம் பண்ணிக்க முடியாது இசை..நீ என்ன நம்பற தான..?” அவன் கேட்டதும் இவள் சம்மதம் சொன்னதும் அப்படியே நிகழ் போலவே மனதில் பேரலையென எழுந்து நின்றது.
அதன் ஈர்ப்பில் இப்போதும் இதழ்களில் புன்னகை தவழ,அன்று அவள் சம்மதம் சொன்னதும் நினைவில் வந்து அதை இன்னும் விரியச் செய்திட,விழிகளில் அவனுக்கான காதல் அபரிமிதமாய்.
அவள் பதிலில் டாக்டர் கலங்கிப் போய் விட,குழந்தையுடன் உள்ளே வந்தவனை பரபரவென தழுவிய விழிகள்,அவனின் நலமறிந்து ஆசுவாசம் பெற்றன.
குழந்தையின் முகத்தைப் பார்த்தாள்.அவனின் சாயல் இருந்தாலும்,அதனால் எந்த வித சந்தேகத்தின் சங்கேதங்களும் இல்லை,அவள் வதனத்தில்.
டாக்டரும் நினைத்திருந்தான்,குழந்தையுடன் அவனைக் கண்டதும் அவள் அதிர்வாள் என்று.அவளோ,இயல்பாக இருந்து அவனை அதிர வைத்தாள்,அவள் காதல் கொண்டு.
ஒரு நொடி,டாக்டரின் மனதில் தனக்கும் இப்படி ஒரு காதல் கிடைத்தால் என்கின்ற எண்ணம் வந்து போக,தலையை உலுக்கிக் கொண்டு நிமிர்ந்தவனின் விழிகளில் வியப்பு நிறையவே.
பையனோ,இருவரையும் பார்த்தவாறு வந்தமர,அவளின் பார்வை அவனை விட்டு இம்மியும் நகரவில்லை.
சிறு தவிப்பு இழையோடினாலும்,ஏதேதோ உணர்வுகள்!
காதல் தாண்டி,காதலுடன் எத்தனையோ சங்கமங்கள்.அவனுக்கென மட்டுமே உயிர்த்த உணர்வலைகள் அழகாய்த் தெரிய,மூச்சு வாங்கிற்று டாக்டருக்கு.
“தென்றல்..”
“என்னத்தான்..” அவள் பார்வை,தவிப்புடன் பையனில் தான் இன்னுமும்.
“இது அவரோட கொழந்தயாம்..ஹீ ஈஸ் மேரீட்..” என்க,தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு.நம்ப மாட்டேன் என்கின்ற பாவம் விழிகளில்.
“வெளயாடாதீங்க அத்தான்..” டாக்டரிடம் சொன்னவளின் விழிகள் பையனை ஏறிட,அவனோ அழுத்தமாய் பார்த்தான்,அவளை.
“என் கொழந்தன்னு பாத்தாலே தெரிலியா..? எதுக்கு என் பின்னாடி வர்ரீங்க..?” கேட்டவனின் விழிகள் சிவந்து இருக்க,அவளுக்கு இன்னும் நம்ப முடியவில்லை.
“பொய் சொல்லாதீங்க..” என்றவளின் குரலில் அப்பட்டமான நடுக்கம்.
“நா எதுக்கு பொய் சொல்லனும்..? எதுக்கு உங்க கிட்ட பொய் சொல்லனும்..” தலையைப் பிடித்து முகத்தில் வலியைக் காண்பித்து பேசிட,இவளின் கவனம் முழுக்க அவனின் முகச் சுருங்கலில் தான்.
பதறி விட்டாள்,காதல் கொண்டவள்.
“என்னாச்சு என்ன பண்ணுது..?” திருமாணவன் என்று அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு மறந்து தான் போயிருந்தது.
“நத்திங்..அட்வான்டேஜ் எடுத்துக்குற வேணாம்..” சீறியவனின் பார்வை டாக்டரிடம் திரும்பியது.
“இவங்க யாரு ஃபர்ஸ்டு எதுக்காக என் கிட்ட வந்து ஹெல்ப்னு கேட்டு வர சொல்லி..பாவம்னு வந்தா இங்க வச்சி இரிட்டேட் பண்ணிட்டு இருக்கீங்க..” எகிறியவனோ விழிகளை மூடித் திறக்க,அவள் விழிகளில் கண்ணீர்.
அவனின் வார்த்தைகள் தந்த வலியையும் தாண்டி,அவன் வலியை அவள் பெரிதாய் உணர்ந்திட,அதை விட அழகான விளக்கம் ஏது காதலுக்கு..?
“அத்தான் பழச பேச வேணாம்..போலாம்..” என்றவளோ,இன்னும் அவனின் வார்த்தைகளை நம்பிடவில்லை.
“பொய் சொல்லாதீங்க..?”
“இந்தப் பொண்ணுக்கு பைத்தியமா புடிச்சி இருக்கு..?என் பையன என் பையன்னு சொல்லாம வேற யார் பையன்னு தான் சொல்றது..? புரியாதா இவங்களுக்கு..?”கிட்டத் தட்ட கத்தினான்,அவன்.
அவளோ ஏற்க முடியாமல் தவித்தாள்,அவனின் வார்த்தைகள்.
அவன்..திருமணம்..
குழந்தை..என யோசிக்கையில் பைத்தியம் பிடிக்காத குறை தான்,அவளுக்கு.
இல்லையென்றே,மனம் கூக்குரலிட,அவனை அடிபட்ட பார்வை பார்த்திட,அவன் முகமோ கோபத்தை வெளிப்படுத்தி நின்றது.
டாக்டருக்கு அவ்விடத்தில் இருப்பது உசிதமாய்த் தோன்றவில்லை.அவர்கள் பேசினால் மட்டுமே,ஒரு தீர்மானம் கிடைக்கும் என்கின்ற முடிவுக்கு வந்தவனோ,அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு வெளியேறியிருந்தான்,பாதிக்கதவுடன் கூடிய சிறு அறை போன்ற அமைப்பில் இருந்து.
“இது உங்க பையன் இல்ல தான..வேற யாரோடயோ” அவள் மறுமுறை கேட்கையில்,கண்களில் பூச்சி பறந்தது.
நடந்தது என்னவென்று அவள் சுதாரிக்கும் முன்னமே,கன்னத்தில் அவன் ஓங்கி அறைந்திருக்க,தலை கிறுகிறுத்தது,யாழவளுக்கு.
“ஒரு தடவ சொன்னா புரியாதா உனக்கு..?ச்சை..என்ன பொண்ணு நீ..அசிங்கமா இல்லியா இப்டி ஒரு கேள்விய கேக்க..? உன் புருஷன் கிட்ட இப்டி ஒரு கேள்விய கேட்டா அவன் சும்மா இருப்பானா..? நீ கேக்கற கேள்வி என் பொண்டாட்டிய அசிங்கப்படுத்தது..ச்சைக்”
“யாருன்னு தெரியாது..தெரியாதுன்னு சொல்றேன்..நீ என்னன்னா என் பின்னாடியே வர்ர..கல்யாணம் ஆனவன்னு தெரியுது தான..? அப்றம் எதுக்கு டார்ச்சர் பண்ற..? இடியட்ட்ட்ட்ட்ட்..”
“அந்த பைத்தியக்காரன் ஏதோ சொல்றான்..இங்க பாரு சத்தியமா நீ யாருன்னு எனக்கு தெரியாது..தயவு செஞ்சு திரும்ப இப்டி வராத..அசிங்கமா இருக்கு எனக்கு நீ கேக்கறத பாக்கும் போது..உனக்கே நீ கேக்கறது அசிங்கமா தெரில..எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு..இது என் பையன்..அத மட்டும் ஞாபகம் வச்சிக்கோ..”
ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தவனோ,அங்கிருந்த வெளியேற அவளை பிரம்மை பிடித்தவள் போல் அதிர்ந்து இருந்தாள்,அவன் தன் வார்த்தைகளுக்கு கற்பித்துக் கொண்ட அர்த்தங்களை எண்ணி.
அவன் பார்வையின் முன் தன் காதல் கடையிழிநிலையில் நின்றதாய் எண்ணியவளுக்கு தன் மீதே ஆத்திரம்.ஆத்திரத்தின் உச்சியில் அழுகையும் வரவில்லை.
நினைக்கவேயில்லை,அவளின் காதல் அவன் பார்வையில் இப்படி ஒரு கோணத்தை பெறும் என்று.அவன் உதிர்த்த வார்த்தைகளின் வீரியத்தில்,அவளுக்கு அழுகையும் வர மறுத்திட,மீண்டும் மீண்டும் அவனின் வார்த்தைகள் மட்டுமே மனதில் சுழன்றன.
“இல்ல இல்ல..அவரு பொய் சொல்றாரு..உன்ன டைவர்ட் பண்ண பாக்கறாரு..”தன்னை மீறி வழிந்த ஒற்றைத் துளிக் கண்ணீரை அவள் துடைத்துக் கொண்டு நிமிர்கையில்,உள்ளே வந்தான்,டாக்டர்.
அவன் கோபமாய் வெளியேறியதைக் கண்டவன் உள் நுழைகையில் கண்டது என்னவோ,வெறித்த தோற்றத்தில் இருந்தவளைத் தான்.
“தென்றல் என்னாச்சு..?” என்க,அவளோ எதுவும் கூறிடவில்லை.அவளிடம் எப்படி கேட்கவென்றும் டாக்டருக்கு புரியவில்லை.
மறுநாள் பொழுது விடியும் முன்பாகவே,அவளின் அறைக்கதவு தட்டப்பட,அங்கு முகத்தில் ரௌத்திரத்துடன் நின்றிருந்தான்,அவன்.
அவளைக் கண்டதும் கோபமாகியிருந்த பார்வை,பின்னிருந்த பெண்ணில் படிந்ததும் கனிவாகியதை உணர்ந்தவளின் மனம் சுருக்கென்றது.
நிறைமாத வயிற்றை தள்ளிக் கொண்டு,அவள் அவனின் கரத்தை உரிமையாய் பற்றிக் கொண்டு இருக்க,அவன் கூறிய பொழுது உள்ளிறங்காதது,அவர்களின் பற்றுதலில் அப்படியே ஆணியடித்தாற் போல் மண்டையில் உரைத்தது.
கதவுக்கு வெளியே எட்டிப் பார்த்த மித்ராவுக்கு தான்,அத்தனை அதிர்வு.ஆரி அவனின் காதல் அதிகாரம் அறிந்தது,அவளொருத்தி என்றிருக்க,இதயம் வெடித்துப் போன உணர்வு தான்.
“இது தான் என்னோட ஃவைப்..” என்று அவன் அறிமுகப்படுத்திட,அவளோ இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.
அவன் அழைத்ததன் பேரில் அவன் பின்னூடு நடந்தவளை புன்னகை முகத்துடன் பார்த்திருந்த பெண்ணிடம் பொய்யாக கூட சிரிக்க முடியவில்லை,அவளால்.செத்து விடும் உணர்வு.
அவனோ,அடிக்கடி அவளை தன் மனைவி என்று அவளுக்கு உணர்த்தியவாறே இருக்க,கொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் நிதர்சனம் புரிவது போல்.
“அவரு கொழந்த தான்..ஜாட அப்டியே இருக்கு..அவருக்கு தான் கூடப் பொறந்தவங்க சொந்த பந்தம்னு யாரும் இல்லியே..” தோழி அடக்கப்பட்ட சினத்துடன் உரைத்தது,வேறு ஆழம் தாக்கிற்று.
எல்லாம் போதும்.அவன் குடித்த காஃபி கப்பை முன்னே அமர்ந்திருந்த பெண்ணின் முன்னே அவன் நகர்த்தி வைத்திட,அவன் வார்த்தைகள் மின்னலடித்தன.
“உன்னோடது என்னோடதுன்னு எதுவும் இல்ல..நம்மளோடதுங்குற தாட் தான் முக்கியம்”அவனின் வார்த்தைள் அவளை கொன்று தின்ன,செத்தே விட்டால் உள்ளுக்குள்.
அவனின் உரிமையும் அக்கறையும் கவனிப்பும் அணுகலும்,அவளை வெகுவாய் பாதிக்க,அவனின் மனைவி தான் முன்னிலையில் இருப்பவள் என்று தனக்கு பதிய வைத்திட முயன்று தோற்றவளுக்கு ஜீவன் உடையும் வலி.
நிஜம் இல்லையென்றால்,இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டான் என்கின்ற எண்ணம் அவளை சுட்டுப் பொசுக்க,”டேடி” என்ற குழந்தையின் அழைப்பிலேயே,அவன் தனக்கானவன் இல்லை என்று அவள் மனம் ஏற்க,விம்மி வெடித்தது அழுகை.
காதல் தேடும்.
2025.04.28
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


என்னால தாங்கவே முடியல பா. ஆர்யா இப்படிலாம் பண்ணுவான்னு சொன்னா நானே நம்ப மாட்டேன். பாவம் தென்றல். அவனுக்கு கூட பிறந்தவங்க இருக்காங்க. அவன் அம்மாவோட பையன். ஒருவேளை இது அவங்க குடும்பமா. இன்ட்ரெஸ்டிங்கா போகுது
Enna solla ……. Eagerly waiting for next episode 😊