
காதலொன்று கண்டேன்
தேடல் 31
“அத்தான் நேத்து மாதிரி ஆகாதுல..?” ஜீவனைத் தேக்கி அவள் கேட்ட கேள்வியில்,டாக்டரின் மனமும் பிசைந்திட,நண்பன் அளித்த விலாசத்தை தேடிக் கொண்டு போய் கதவைத் தட்டி அழைப்பு மணியை அழுத்த,அவளுக்கோ இதயம் தடதடத்து ஓடியது.
மறுமுறை ஒரு ஏமாற்றத்தை சந்திக்கும் திராணி அவளிடம் இல்லை.இம்முறையும் அவனைக் காணா விடின்,உயிர் மாண்டே போய் விடும்.
கதவைத் திறக்க யாரோ வருவது புரிய,அவளின் செவிகள் கூர்மையாகிட,அது அவனாய் இருக்க வேண்டும் என்கின்ற ஆயிரம் வேண்டுதல்கள் ஒற்றை நொடியில்.
ஒற்றை நொடி தான்!
அவளுக்கு அது ஜீவனின் பற்றுகோலுக்கான,பற்றுச் சீட்டாய் மாறியிருக்க,உயிர்க்கூட்டின் தவிப்பு துளியும் அடங்கிடவில்லை.
கதவு திறக்கும் சத்தத்தில் விழிகளை மூடிட,இமை நனைத்த கண்ணீரின் ஈரம் போதும்,அவன் மீதான ஆழியளவு நேசத்தை பறைசாற்றிட.
“வெயிட் வர்ரேன்..” சத்தமாய் கூறிக் கொண்டே கதவைத் திறந்திட,அவன் குரலே அவளை வெகுவாய் ஆட்டுவித்தது.
ஓரிரு வார்த்தைகள் ஜீவனை தாக்குமா..?
புயலாய் தாக்கி,புது அத்தியாயம் காட்டிற்று.
ஒருவனின் குரல்,உயிரில் கலக்குமா..?
உயிரில் கலந்து உயிரோசையென மாறிற்று.
விம்மி வெடித்த விம்மலுடன் அவள் விழிகளை திறக்க,கோர்த்திருந்த கண்ணீருக்குள் அவன் விம்பம் மங்கலாய்;தெளிவில்லாமல்.
அழுந்த விழிகளை மீள மூடித் திறந்ததில்,அவளின் கண்ணீர், கண்ணோடு அடங்கியும் கன்னத்தை தழுவியும் காணாமல் போக,மூடிடா விழிகளுக்குள் விழுந்த விம்பம்,மூச்சுக்காற்றை இழுத்து மூர்ச்சையாக்க பாத்திற்று.
“அத்..அத்..தான் உண்..ம தான..?” பேச்சும் மூச்சும் போட்டியிட,இல்லையென்று சொல்லி விடாதே என உயிரைத் தேக்கி அவள் கேட்டதில்,டாக்டரின் மனமும் தளர,”உண்ம தான் தென்றல்..” என்றான்,சற்றே தொய்ந்த குரலில்.
அவளால் டாக்டரின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை.
இமைகளின் தழுவல் நின்று போக,காதல் சூழ் விழிகளில்,அவன் விம்பத்துடன் கண்ணீரும் கோர்க்க முயல,சட்டென துடைத்துக் கொண்டவளுக்கு,கவனோ என்கின்ற எண்ணம் அகன்றபாடில்லை.
விழிகளை அழுந்த மூடியவளுக்கு,அது கனவாய் இருந்தாலும்,இந்த ஒற்றை நொடியை அகத்தில் அடைகாத்து ஆயுள் ரேகை வரை நாட்களாய் தள்ளிடும் சிந்தைக்குள் விழுந்தது,மனம்.
விழி மூடித்திறந்தவளோ,அவனைப் பார்த்திட,ஏக்கத்தை கொன்றிடாமல் அவன் நின்றிருக்க,உடைந்தே விட்டாள் முழுதாய்.
விழி மூடி இமை பிரிக்கும் நொடிகளில்,அவள் உயிர் எத்தனை முறை உருவிழந்து உயிர்த்தது என்று அவளுக்கே தெரியவில்லை.
ஆனால்,இப்பொழுது..
அவனின் உருவம் விழிகளில் நிரம்புகையில்..
ஏமாற்றாமல் அவன் அவள் கண் முன் நிற்கையில்..
ஜீவனின் ஆசுவாசம் கிட்டிய உணர்வு.இது போதும் அவளுக்கு.அவனின் இந்த தரிசனம் போதுமே போதும்,அவளுக்கு.
மரித்துப் போயிருந்த உணர்வுகளுடன் உயிரிழந்து கிடந்த உயிர்ப்பும் மறுஜென்மம் எடுத்திருக்க,இதுவரை உணர்ந்தே இரா உவகை உயிர் முழுவதும்.
அதுவோ,கண்ணீராய் மாறியிருந்தது.
தரையில் மடிந்து வாயைப் பொத்திக் கொண்டு,அவள் அழுது குலுங்கிட,யாரினது வார்த்தைகளும் அவளை சமப்படுத்தவில்லை.
அவளின் எத்தனை நாள் ஏக்கம் இது..?
எத்தனை இரவுகளின் வலி அது..?
எத்தனை ஏக்கங்களின் வேதனை இது..?
எத்தனை கண்ணீர்த் துளிகளுக்கான தவம் இது..?
நினைக்க நினைக்க,மனம் வெம்பி வெடிக்க,பார்த்திருந்த அனைவரினது மனமும் பாரமாகிற்று.
“அதான் வந்துட்டாருல..?அப்றம் ஏன் டி அழற..?” தோழியை வாரியணைத்து ஸ்ரீ ஆறுதல் சொல்ல,அவளுக்கு அழுகை அடங்கவில்லை.
“தெரி..ல டி” விம்மலுடன் மொழிந்தவளோ,ஒரு மூச்சு அழுது தீர்த்திட்டு நிமிரும் போதே,அனைவரின் கவனமும் அவனில் நிலைத்திட,ஒரு மூச்சு அழுது தீர்த்தவளோ,கண்ணீரைத் துடைத்தவாறு எழுந்து கொண்டாள்.
“நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேக்கனும்..” கூக்குரலிட்டு மனமோ கோபத்தில் கொக்கரிக்க,அவன் முன்னே வந்து நின்றவளோ,அசராமல் பார்த்தாள்,அவனை.
“எங்க போனீங்க..?” அத்தனை உரிமையாய் அவள் கேள்வி.கோபமும் கலந்தடித்தது அவளின் தொனியில்.
அவள் யோசித்திருக்க வேண்டும்,அவள் அழுது புலம்புகையில் அவன் சமாதானப்படுத்த துளியும் முயலாத பொழுதே,அவள் யோசித்திருக்க வேண்டும்.
மார்புக்கு குறுக்கே கையை கட்டியவாறு இருந்தவனோ,விழிகளை மறைத்திருந்த கூலர்ஸை கழற்றிட,அவள் முகத்தில் மட்டுமல்ல அனைவரின் முகத்திலும் அதிர்வு.
“எ..எதுக்கு இப்..இப்டி தெ..தெரியாத மாதிரி பாக்கறீங்க..?” நெஞ்சம் தடதடத்தது,அவளுக்கு.விழிகளில் ஒளி மொத்தமாய் மங்கிப் போயிருந்தது.
“யாரு நீங்கெல்லாம் அத சொல்லுங்க ஃபர்ஸ்டு..” எரிச்சலான முகபாவம் காண்பித்து அவன் வினவ,அவளுக்கு இன்னும் பதட்டம்.
“வெளயாடாதீங்க..” நடுங்கிய குரலில் சொல்ல,அவனோ அழுத்தமாய் பார்த்தான்.
“இடியட் அறிவில்ல..எதுக்கு கூட்டமா வந்து என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கீங்க..” கத்தியவனை மிரண்டு போய் பார்த்தாள்,அவள்.
“நா..நா..நா..” என்றவளுக்கு நா ஒத்துழைக்க மறுத்திட,அவனோ விழிகளால் கோபத்தை தெளித்து விட்டு,கண்ணில் கூலர்ஸை மாட்டி அலட்சியபாவம் காண்பித்தவாறே கதவை அடைத்து விட்டு வெளியேற,அவளின் பின்னூடு ஓடினாள்,அவள்.
டாக்டருக்கு ஏதோ தவறாய்ப் பட,அவள் அது எதையும் உணரும் நிலையில் இல்லை.சித்தம் மழுங்கிப் போயிருந்தது.
ஸ்ரீயோ எட்டி அவளின் கரத்தைப் பற்றி இருக்க,அதை விடுவிடுக்க முயன்று தோற்றவளின் விழிகளில் நீர் கட்டிக் கொண்டது.
“சம்திங் ராங்..” என்று டாக்டர் சத்தமாகவே உரைத்திட,இங்கு அவனோ வண்டியை உயர் வேகத்தில் கிளப்பி இருந்தான்.
●●●●●●●
எவ்வித உணர்வும் காட்டாது ஜீவனிழந்த விழிகளுடன் வானத்தை வெறித்தவாறு அமர்ந்து இருந்தவளைக் கண்டு நெற்றியை நீவிக் கொண்டான்,டாக்டர்.
அழுதழுதே களைத்துப் போயிருந்தாள்.சிந்திக்க மறந்து சித்தம் சதி செய்ய,நிகழும் நினைவும் அவன் வசமாகி நாழிகைகள் ஓடியிருக்க,மனமோ மொத்தமாய் மரத்துப் போயிருந்தது.
நடந்தது எதையும் ஏற்று கிரகித்து உள்வாங்கி ஆராயும் நிலையில் இல்லவே இல்லை,அவள்.கனங்களும் ரணங்களும் முழுதாய் நிறைந்து இருந்தாலும்,வாய் விட்டு கதற மனம் தவியாய் தவித்தாலும்,அத்தனையும் உள்ளுக்குள் அடைந்து நின்றது,அவளின் அனுமதியின்றி.
அவன் பின்னே ஓடப் பார்த்தவளை தடுத்து நிறுத்தியிருந்தாலும்,அவள் அவ்விடத்தை விட்டு அசைய மறுத்திருக்க,அவனின் முன் வீட்டில் இருந்தவர்கள் தான் அவர்களை உள்ளே அழைத்தது.
அதற்கும் மறுப்பு தெரிவித்து,அவள் அதே இடத்தில் இருக்க,யாருக்கும் அந்நிலையை எப்படி கையாள என்று தெரியாது அத்தனை குழப்பம்.
“அவரு வந்தா தான் நா வருவேன்..”அவள் அடம் பிடிக்க,அங்கு நிற்கவும் வழியில்லை.கடந்து செல்வோரின் பார்வை முழுவதும் அவர்களில் படிய,அவர்களும் என்ன தான் செய்வது..?
ஒன்று அவனுடன் பேச அவன் வர வேண்டும்.இல்லையென்றால்,அவன் வரும் வரை இவர்கள் காத்து நிற்க வேண்டும்.
முதலாவது நடந்திட வாய்ப்பு இல்லாதது போல் தோன்றிட,இரண்டாவது மட்டுமே வழியாய்.
அதுவும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தரிக்க வழியின்றி,அதன் நுழைவாயிலின் முன்னிருக்கும் பாதையில் வாகனத்தை நிறுத்தி அதில் அமர்ந்து இருந்தனர்.
அவன் கிளம்பிச் சென்று முழுதாய் நான்கு மணி நேரங்கள் கடந்திருக்க,அவர்களின் விழிகளோ அவனின் வாகனம் தெரிகிறதா என ஆராய்ந்து கொண்டேயிருந்தது.
“சித்து..அவன் இன்னிக்கி வருவானா..?” டாக்டர் காரை விட்டு இறங்கி வெளியே வந்து நிற்க,அவனுடன் இறங்கிய வாசு கேட்க,தெரியாது என்பது போல் அவன் உதடுகள் பிதுங்கின.
“அவன் ப்ளே பண்றானா..?”
“எனக்குன்னா அப்டி தோணல வாசு..ஏதோ ஆகியிருக்கு கண்டிப்பா..” தாடையைத் தடவியவாறு சிந்தித்தவனுக்கு ஒரு வித குழப்பம்.
தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த ஸ்ரீயிற்கு மனம் வெறுத்துப் போய் இருந்தது.அவனைக் காண்பதே பெரிய போராட்டம் ஆகிப் போயிருக்க,இதில் அடுத்த பிரச்சினை.
என்னவாயிற்று அவனுக்கு..?
அதுவும் தோழியையே வேற்றாளாய் கருதும் அளவுக்கு..?
சத்தியமாய் அவளுக்கு புரியவில்லை.
அடுத்து என்னவென்று புரியாத சூழ்நிலை.அதிலும் தென்றல்,எதுவுமே இல்லாதது போல்,வெறித்த பாவனையுடன் அமர்ந்து இருந்தது வேறு அத்தனை கனத்தை தந்தது.
நேரம் இரவு ஏழு மணியை எட்டியிருக்க,வாசுவோ கிளம்பலாம் எனக் கூறிக் கொண்டிருந்தான்.
“அவன் இன்னிக்கி வர மாட்டான்..அவன் வருவான்னு இங்கயே காத்துக் கெடக்குறதா..? போய் நாளக்கி காலலை வர்லாம்..”
“கொஞ்சம் இரு வாசு..பாக்கலாம்..” தடுத்தவனின் பார்வை தென்றலில் படிய,அவளை அதை உணரும் நிலையில் இல்லை.
சில நிமிடங்கள் கடந்து அவனின் வண்டி அவர்களைக் கடந்தது கூட அவளின் கருத்தில் பதியவில்லை.ஸ்ரீ அடிக்கடி அவளை தட்டி சுயத்துக்கு மீட்டாலும்,அவளறியாமலே வெறித்த பாவனைக்குள் விழுந்து இருந்தாள்.அத்தனை யோசனை,மனதில்.
“அக்கா நீங்க மெதுவா தென்றல கூட்டிட்டு வாங்க..நாங்க முன்னாடி போய் அந்தாளு கூட பேசுறோம்..” என்று ஆண்கள் இருவரும் முன்னே நடக்க,அவன் வந்துவிட்டதாய் கூறி அவர்களை கிளப்பினாலும்,அவளின் நடையில் அத்தனை தொய்வு.
அவனைப் பார்த்தாக வேண்டும் அவள் முரண்டு பிடிக்காதது பெண்கள் இருவருக்குமே புதுமை தான்.எதையோ இழந்த பாவனையுடன் இருந்தவளுக்கு அவளின் வார்த்தைகள் மட்டுமே நினைவில் வந்தன.
காதலுடன் அவனை சந்தித்தது வாழ்வில் ஒரே ஒரு தடவை தான்.அதன் பின் அவனை சந்தித்ததே இல்லை,அவள்.
அன்று அவன் சொன்ன வார்த்தைக்காக அவள் ஜீவனைப் பிடித்துக் கொண்டிருப்பது அவனுக்குமே தெரியாது போலும்.
அவளின் தந்தையிடம் அவன் திருமணத்தை மறுத்திருந்தாலும்,தன்னிடம் வந்து கூறட்டும் என அவள் காத்திருந்ததே,அவன் வருவான் என்கின்ற நம்பிக்கையில் தானே.
இப்போது..?
அவளுக்கு எதுவும் புரியவில்லை.
“ஒரே ஒரு வருஷம் வெயிட் பண்ணு..நா வந்துர்ரேன்..அப்றம் கல்யாணம் பண்ணிக்கலாம்..” நெற்றியில் மோதிய ஈர முடியை ஒதுக்கி,அவன் கூறியதை எப்படி அவளால் மறக்க இயலும்..?
நினைக்கையில் அழுகை தான் வந்தது,இப்போது.
இங்கோ,
வாசுவும் டாக்டரும் அமர்ந்து இருக்க,ஒற்றைக் கையால் தலையை துவட்டியவாறு வந்தமர்ந்தவனின் பார்வையில் அத்தனை அழுத்தம்.
அவனின் விழிகள் கூர்மையுடன் இருவரையும் அளவிட,வாசுவுக்கு அவனின் திமிரில் கோபம் தான் வந்தது.
அவனின் முகத்தில் இருந்து டாக்டருக்கு எதையும் கண்டறிய முடியாது போக,முதலில் பேசத் துவங்கியது டாக்டர் தான்.
“நா..” என்று அவன் துவங்கும் முன் இடை வெட்டினான்,அவன்.
“நீங்க யாரு..? எதுக்காக என்ன பாக்க வந்திருக்கீங்க..? என்ன விஷயம்..?” அவசரம் தெரிந்தது அவன் குரலில்.
உடனடியாக கிளம்பு என்று மறைமுகமாக உரைப்பது போல் இருக்க,அதில் கோபம் வந்தாலும் தன்னை நிதானப்படுத்த வேண்டிய கட்டாயம் டாக்டருக்கு.
“நா தென்றலோட அத்தான்..”
“தென்றல் யாரு..?”?சலிப்பாய் நெற்றியை நீவியவாறு கேட்டான்,அவன்.முகத்தில் அப்பட்டமான அலுப்பு தெரிந்தது.
“தென்றல் நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஓகே பண்ண பொண்ணு..?”
“ஸோ வாட்..?”நக்கலாய் வினவியவனின் பார்வையிலும் குரலிலும் அலட்சியம் தெறித்தது.
இருவருக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.அவனிடம் சிறு வித்தியாசங்கள் இருப்பது போல் தோன்றினாலும்,அதை என்னவென்று கூட கேட்க விடாமல் அவன் அலட்சியம் பாவம் காட்டிட,இருவருக்கும் கையறு நிலை தான்.
“நா சொல்றத கொஞ்சம் கேளுங்க..தென்றல்..”
“தென்றல்னு எனக்கு யாரயும் தெரியாது..ஸோ என் டைம வேஸ்ட் பண்ணாம கெளம்புங்க..” அவன் கடுகடுக்கும் போது அழைப்பும் வர,அலைபேசியை எடுத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தவனோ,அவர்களை வெளியேறுமாறு சைகை செய்து விட்டு அறைக்கதவை அறைந்து சாற்ற,இருவரின் முகமும் கறுத்தது.
“இவனயா அவ லவ் பண்ணுவான்..? சைக்..” என முணுமுணுத்த வாசுவை மீறி,ஓரிரு தடவை அறைக்கதவை தட்டினாலும்,அவன் திறவாது இருக்க,டாக்டரை இழுத்துக் கொண்டு வெளியே வந்தான்,வாசு.
“என்னாச்சு..?” தோழி வினவ,இதழ் குவித்து ஊதிய டாக்டரின் பார்வை தென்றலைத் தொட்டு,தோழியிடம் திரும்பியது.
“அவருக்கு தென்றல்னு யாரயும் தெரியாதாம்..”என்க,தோழியின் விழிகள் கவலையைத் தத்தெடுத்தது.
“அவருக்கு பழசு மறந்துருக்கும்..”
“பழசு மறந்து இருக்கும்னு எப்டி சொல்ற நீ..? அவன் இவள லவ் பண்ணி ஏமாத்துறதுக்கு இப்டி நடிக்கலாம்..அது தெரியாம நீ சும்மா அவன் பக்கம் பேசாத..” வாசு சீற,உறுதியாய் மறுத்தாள்,அவள்.
“இல்ல இல்ல அப்டி இருக்காது..”அவள் அவன் சார்பாய் பேச,வாசுவுக்கு அவ்வளவு கோபம்.
“தென்றல்னா அவன் யாருன்னெ தெரியாதுன்னு சொல்றான் மா..”டாக்டர் சலிப்புடன் சொல்ல,அதற்குள் அவனின் வீட்டுக்கு விரைந்தாள்,அவள்.
அவனோ,கதவை அடைக்கும் நோக்கில் கைப்பிடியில் கை வைத்திருக்க,மூச்சு வாங்க அவனின் முன்னே வந்து நின்றாள்,தோழி.
“யாரு..? உங்களுக்கும் திரும்ப சொல்லனுமா..? தென்றல்னு எனக்கு யாரயும் தெரியாது..” அவன் எகிற,இவளுக்கு குழப்பம்.
“தென்றல விடுங்க..இசை..இசைன்னு யாரயாச்சும் தெரியுமா..?” தோழியைப் பார்த்தவாறே வினவ,அதை கவனிக்காமல் தன் நினைவுகளில் லயித்து இருந்தாள்,அவள்.
அவள் யாழிசைத் தென்றல்!
“தெரியாது..” தலை சரித்து கழுத்தை வருடி அமர்த்தலாய் பார்த்து,முகத்தில் அடித்தாற் போல் கூறி விட்டு,கதவை அடைத்தான்,அவன்.
அவன் ஆர்யன் துருவேந்திரன்!
காதல் தேடும்.
2025.04.27
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Wow nice 🙂 eagerly waiting for next episode 😊
இந்த அத்தியாயத்திற்கு நான் கமெண்ட் போட்டேன்.. பதிவாகல போல.. அன்னைக்கு ஷாக் ஆனதுல அதை கவனிக்கல. சூப்பர் ட்விஸ்ட். ஆனா ஏத்துக்க தான் முடியல. அவன் எப்படி தெரியலைன்னு சொல்லுவான். ஆர்யா கிட்ட ஏதோ விஷயம் இருக்கு