
காதலொன்று கண்டேன்!
தேடல் 28
அன்றொரு நாள்!
வயிற்றைப் பிடித்து,உடலை குறுக்கியவாறு தரையோடு ஒட்டியிருந்தவனின் நெஞ்சில் எட்டி உதைத்தவனுக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது.
“செத்துரப் போறான் ஆரி..விடு..” பிடித்திழுக்க முயன்ற சத்யாவையும் உதறித் தள்ளி விட்டு மீண்டும் அடி வயிற்றில் ஒரு உதை விட,அவனுக்கு வலியில் கண்ணீர் கொட்டியது.
“டேய் விடுடா..” அவன் கத்தக் கத்த,பையனின் ஆக்ரோஷம் இன்னும் கூடியே ஒழிய துளியும் குறைந்திடவில்லை.
உக்கிரமான கோபத்துடன் ருத்ரதாண்டம் ஆடிக் கொண்டிருந்தவனைக் கண்டால்,சத்தியமாய் காண்பவர்கள் பயந்திருப்பர்.அவ்வளவு வெறி,அவன் விழிகளில்.
“ஆர்யா..” சத்யாவும் இன்னொருவனும் வந்து அவனின் பின்னே பிடித்திழுத்திட,அவர்களின் பிடியில் இருந்து திமிறியவனுக்கு உச்சகட்ட ஆத்திரம்.
“விட்ரா..விட்ரா என்ன..இந்த நாய அன்னிக்கே அடிச்சி கொன்னு இருந்தா இந்நேரம் இப்டி நடந்துருக்காது..விடுங்கடா என்ன..” உதறியவனின் பலத்தில் அவர்களும் மிரண்டிட,கையை எடுத்தே விட்டிருந்தான்,தோழன்.
அவ்வளவு சிவந்து கோபத்தில் துடித்தது அவன் முகம்.கோபம் என்பதை விட கொலைவெறி என்பதே பொருத்தம்.விட்டால் அடித்து கொன்று விடுவான்,கீழே கிடந்த சஞ்சய்யை.
தன் ஆத்திரம் மொத்தமும் தீரும் வரை,சஞ்சய்க்கு அடித்தோய,மூர்ச்சையாகிப் போனவனை எட்டி உதைத்து விட்டு அவன் அகல,ஓடிச் சென்று அவனின் கரத்தை ஆராய,நாடித் துடிப்பு இருந்ததும் தான் மூச்சே வந்தது,தோழனுக்கு.
தெரிந்தவர்கள் இருவரை அழைத்து,சஞ்சய்யை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வைத்தவனோ,பையனைப் பார்த்திட,அவனோ தலையை தாங்கியவாறு அமர்ந்து இருந்தான்,கரங்களால்.
முகமோ வெளுத்துப் போயிருக்க,அவனில் பெரும் பதட்டம்.
“ஒன்னும் ஆகாதுடா தங்கச்சிக்கு..” தோள் தட்டிச் சொன்னாலும்,அவள் கண் விழித்தாலே அமைதி கொள்ளும் அவன் மனம்.
ஆழ மூச்சிழுத்தவனோ,மருத்துவமனைக்கு விரைய,அங்கு மருந்தின் வீரியத்தில் அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க,கண்ணாடியூடு பார்த்தவனின் விழிகளில் வலி.
எதையும் உணராது மயக்கத்தில் இருந்தாள்,அவனிசை.
அதுவே,அவன் ஆழம் கீற,பார்வை அவளை விட்டு அசைய மறுத்தது.
சற்று முன்பு,கோபத்தில் ருத்ரதாண்டவம் ஆடியவன் இவன் தானா என்கின்ற சந்தேகமே வந்து விடக் கூடும்,அவனில் வியாபித்திருந்த தளர்வைக் காண்கையில்.
கசப்பாய் இதழ் விரித்தவனுக்கு,ஏனோ அவளை அப்படிக் காணும் தைரியம் இல்லை;இல்லவே இல்லை.
சில நொடிகள் கடந்திட, வந்தமர்ந்தவனை கலங்கிய விழிகளுடன் பார்த்திருந்தார்,அவளின் தந்தை.
அவனுக்கோ,அது கருத்தில் பதியவேயில்லை.நினைவில் அவள் மட்டும் தான்.
அவனின் அருகே நின்றிருந்த மித்ராவுக்கும் பையனை நினைத்து வியப்பு தான்.எப்படி அவனால் இப்படி காதலித்திட முடிகிறது..?
புரியவேயில்லை,அதன் பிண்ணனி.
“எத்தன பத்ரம் சொன்னேன்…கொஞ்சம் பத்ரமா இருந்துக்கலாமேடி..” அவன் மனம் அவளிடம் மௌனமாய் அரற்றிட,முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டான்.
அவளின் தந்தை,அவளின் வீட்டினருக்கு உரைத்திட முயல,அவரை அடக்கி இருந்தான்,கடும் சினத்துடன்.
“ஆளாளுக்குன்னு யார் கிட்டவும் சொல்லாதீங்க..மொதல்ல டாக்டர் பாத்துட்டு என்னன்னு சொல்லட்டும்..அது வர உங்க வீட்டாளுங்கள கூப்டாதீங்க..”
உறுதியாய் மறுத்து விட்டவனின் கட்டளைக்கு அவர் அடி பணிந்ததன் காரணம்,அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
மகளின் வாழ்க்கை விடயம் ஆயிற்றே.யாரிடமும் தெரியப்படுத்த முடியவில்லை,தந்தையனாவரால்.
எத்தனை ஆசையுடன் அவளைக் காண அவன் வந்தது.இடையில் விடுப்பு எடுத்து அவளுக்கே தெரியாமல்,அவளைக் காண அவன் வந்திருக்க,அவன் நினைத்திராதது அல்லவா நடந்தேறியிருந்தது..?
அவளின் அலுவகத்துக்கு அவளைத் தேடிப் போனவனோ,அவளை காணாது மித்ராவிடம் விசாரித்திட,அவளுக்கும் அது தெரிந்திருக்கவில்லை.
பதட்டத்துடன் அவளைத் தேடியவனுக்கு,ஒருவனின் முழியே சரியில்லாதது போல தோன்றிட,அவனைப் பிடித்து விசாரித்திடவும் தான் தெரிய வந்தது,சஞ்சயின் தோழன் அவனென்று.
சஞ்சய் அவளுடன் ஓரிருவரை உணவகத்துக்கு அழைத்துச் சென்றதாய் கூறுகையிலேயே,இவனுக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.
கல்லூரியைப் போன்று அவளிடம் அவன் வாலாட்டவில்லை என்றாலும்,அவளின் திமிரை அடக்கி தன் மனைவியாக்க வேண்டும் என்கின்ற வெறி அவனுக்குள் பல நாட்களாய் இருந்து வந்தது,பையன் உட்பட யாருக்கும் தெரியாது.
எத்தனையோ தடவை திருமணத்துக்கு விருப்பம் கேட்டும்,நாசூக்காய் மறுத்து அவனிடம் இருந்து விலகியே இருந்தாள்,பாவையவளும்.
அவனுக்கோ அவளின் விருப்பமின்மை மேலும் வன்மத்தை கிளப்ப,அவளிடம் அத்துமீறினால் நிச்சயம் அவளை தனக்குத் தான் கட்டிக் கொடுப்பார்கள் என தப்புக் கணக்கு போட்டிருந்தான்.
எப்படி இருந்தாலும்,
என்ன தான் நடந்தாலும்,அவளை அப்படியே ஏற்க,துளியும் மாறாமல் நேசிக்க,அவளை அவளாகவே காதலிக்க,ஒருவன் இருப்பது அவனுக்கு தெரிந்திருக்கும் சாத்தியமில்லை.
அவளை அழைத்துச் சென்று தனியாக பேச வேண்டும் என கெஞ்சிட,அவளும் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என சம்மதித்து இருக்க,அவள் பருகிய பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து இருந்தான்,வக்கிர புத்திக்காரன்.
அவளும் நம்பி அதை பருகிட,அதன் பின்னிருக்கும் கேவலமான காரணம் அவளுக்கு தெரிந்திருக்கவில்லையே.
போதையின் வீரியத்தில் எதுவும் புரியா நிலையில் அவள் இருக்க,வக்கிரத்துடன் அவளிடம் அத்து மீற முயல்கையில்,கதவை உடைத்துக் கொண்டு வந்த பையனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அவனை மீறி விழிகள் கலங்கியே விட்டன.சஞ்சயை எட்டி உதைத்து விட்டு,அவளை அள்ளி தன்னோடு சேர்த்துக் கொண்டவனை நிலையைச் சொல்ல,வார்த்தைகள் போதாது.
“ஒன்னுல்லடாமா..ஒன்னுல்ல..” அவளின் சிகை கோதி மென்மையாய் உரைத்திட்டான்,அவள் கருமணிகள் மெல்ல உருள்வதைக் கண்டு.
மித்ராவிடம் தன்னுடன் வந்த அதிதியுடன் பாவையவளை பார்க்கச் சொல்லி விட்டு,சஞ்சய்யை பிடித்து துவைத்தாலும்,அவன் ஆத்திரம் தீரவில்லை.
யாரினது கவனத்தையும் கவராமல்,அவளை தனக்கு தெரிந்த ஒருவரின் மருத்துவமனையில் சேர்த்திருந்தான்,அவர் நம்பிக்கைக்கு உரியவராக இருக்கவே.
அதன் பின்னர் அவளின் தந்தையிடம் மட்டும் விடயத்தை சொல்லியிருக்க,அவரோ என்னவென்கின்ற பதட்டத்துன் வந்திருந்தார்,மருத்துவமனைக்கு.
மெதுவாய் அவரிடமும் தனக்கு தெரிந்ததை அவன் உரைத்திட,மாரில் அடித்துக் கொண்டு அழுதவரை அவனின் அனல் விழிகள் மௌனமாக்கியது.
சஞ்சய்யை சத்யாவிடம் ஒப்படைக்கையிலேயே,அவனுக்கு விடயம் கேள்விப்பட,அவனுக்கும் கவலை.
இதோ,இப்பொழுது மருத்துவரின் வருகைக்காக அனைவரும் காத்துக் கிடக்க,அவளின் தந்தையின் விழிகளில் கண்ணீர்.
“இனிமே அவ வாழ்க்க என்னாகுறது..” அவர் புலம்பி அழ,இவனுக்கு கோபம்.
“எல்லாத்தயும் ஃபேஸ் பண்ணி தான் ஆகனும்..? கண்ட நாய் பண்ண தப்புக்கு இசையோட வாழ்க்க எதுக்கு வீணாகனும்..?சும்மா ஒளறாதீங்க”
“பேசறதுக்கு நல்லா இருக்கும் ..பின்ன கல்யாணம் காட்சின்னு..உண்மய சொன்னா யாரு கட்டிபாங்க..? வாயால நல்லா கருத்து சொல்லுவீங்க எல்லாரும்..நீயும் உன் பேச்சும்” அவருக்கு ஆத்திரம்.
“உங்க பொண்ண நா கட்டிகிட்டு கண் கலங்காம பாத்துக்குவேன்…சும்மா பொலம்பாதீங்க”
அழுத்தமாய் அவன் இதழ் வார்த்தைகளை உதிர்த்திட,அது சத்தியமாய் அது தகவல் தானே ஒழிய,வேண்டுகோள் இல்லை,அது.
அவரிடம் அவர் மகளைக் கேட்கிறோம் என்கின்ற எண்ணம் இல்லை,அவனுக்கு.
தன்னவளை திருமணம் செய்து கொள்வதை தகவலாகச் சொல்லியிருப்பான்,போலும்.
“புரிஞ்சி தான் பேசறியா..?” அவர் குரலில் வியப்பும் கூட.வேறு சூழ்நிலையில் இப்படிச் சொல்லியிருந்தால் அது வேறு.இது என்னவென்றால்..?
இவர்களின் உரையாடலை கேட்டவாறு இருந்த மித்ராவின்,இதழ்களில் அழகானதோர் புன்னகை.
“நல்லா புரிஞ்சு தான் பேசறேன்..எனக்கு உங்க பொண்ண கட்டிக்க போறேன்..என்ன நடந்து இருந்தாலும் அவங்கள நா பாத்துப்பேன்..அவ்ளோ தான்..” அகத்தின் பிடிவாதம் வார்த்தைகளில் தெறித்தது.
அவரோ இன்னும் நம்பவில்லை.சந்தேகத்துடன் தான் படிந்தது,அவர் பார்வை.
“காலேஜ் டைம்ல இருந்து உங்க பொண்ணு மேல எனக்கு விருப்பம்..”
“விருப்பம்னு வாழ்க்க கொடுக்க போறதா நெனப்போ..?”
“விருப்பம்னா லவ் தான்..” அமர்த்தலாய் மொழிந்தான்.
“வெறும் லவ் இல்ல மாமனாரே..டீப் லவ்..” ஒற்றைக் கண் சிமிட்டியவனிடம் பயத்தின் சாயல் கூட இல்லை.
“நா அவ அப்பா டா..” இருந்த கனமான சூழ்நிலை மறந்து போனது,அவருக்கு.
“இருக்கலாம்..பட் ஷீ ஈஸ் மைன்..” அத்தனை பிடிவாதம் அவன் வார்த்தைகளில்.
“அப்போவே வந்து பொண்ணு கேட்ருப்பேன்..நீங்க தான் வந்து ஸ்டேடஸ் அது இதுன்னு இழுப்பீங்களே அதான் இவ்ளோ நாள் பொறும காத்தேன்..இப்போ சிட்டுவேஷன் அமஞ்சிருச்சு..தட்ஸ் ஆல்..உங்க பொண்ண நா கட்டிக்கப் போறேன்..”
“ஓஹோ..அப்போ லவ் பண்ணதால வாழ்க்க கொடுக்குற நெனப்போ..?” அவன் குணம் பற்றித் தெரிந்திருக்க,அவருக்கு கேட்க நினைத்தது.
“திரும்ப திரும்ப எதுக்கு அத சொல்றீங்க..வாழ்க்க கொடுக்குற நெலமைல இசை இல்ல..கொடுக்குற எடத்துல நானும் இல்ல..உங்க பொண்ணு தான் மனசு வச்சு எனக்கு வாழ்க்க கொடுக்கனும்..அதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்” அதட்டினான்,அவன்.
“நா வேணான்னாலும் கட்டிப்பியா..?”
“உங்க கிட்ட நா விருப்பம் கேக்கவே இல்லயே..” அசட்டையாய் மொழிந்தவனை,திட்டக் கூட முடியவில்லை,அவரால்.
அவனின் திமிர் இரசிப்புத் தன்மையையே,விதைத்திட்டது.
என்ன காதல் இவனது..?
பிரமித்துப் போய் பார்த்திருந்தாள்,மித்ரா.
அதன் பின்னர்,அமைதியாகாவிட்டான்.அவனுக்கு எல்லாவற்றையும் விட,அவள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறாளோ என்கின்ற கவலை.
எது நடந்திருந்தாலும்,அவளை தன் காதல் நிச்சயம் மீட்டிடும் என நம்பியவனுக்கு,அவள் வலிகளை கடக்க வேண்டி வருமே என நினைக்கையில் தான் உள்ளம் கலங்கியது.
யோசனையுடன் நெற்றியை நீவியவாறு அவன் இருக்க,அவளை பரிசோதித்து விட்டு வெளியே வந்த மருத்துவரின் தவிப்புடன் பார்த்தன,அவன் விழிகள்.
“இசை கண் விழிச்சிட்டாங்களா டாக்டர்..?” தளர்ந்த குரலில் கேட்டான்.
என்ன நடந்தது என்பது அவனுக்கு தேவையில்லை.அவள் எப்படியிருக்கிறாள் என்பது மட்டுமே அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது.
எது நடந்து இருந்தாலும்,அவளின் கரம் கோர்ப்பது உறுதி.அதில் கிஞ்சிற்றும் மாற்றமில்லை.அப்படியிருக்கையில் அவளுக்காக இல்லாத பட்சத்தில்,நடந்தது எதையும் அறிய விரும்பவில்ல,பையன்.அந்த தைரியம் தனக்கில்லை என்று நினைத்து விட்டான்,போலும்.
“ஷீ ஈஸ் ஆல் ரைட்..” என்கவுமே பையனின் பதட்டம் தணிந்தது.
“ஷீ ஈஸ் ஸேப்..அவங்களுக்கு எதுவும் இல்ல..அட்டம்ப்ட் மட்டும் தான்…” என்ற மருத்துவரோ,அவளின் தந்தையின் புறம் திரும்பி,”அவங்க உங்க பொண்ணா தான் இருக்காங்க..”என்கவுமே,அவருக்கு மூச்சே வந்தது.
மருத்துவர் அதைத் தொடர்ந்து முன்னேற,அவருடன் வந்தான்,பையன்.
“டாக்டர்..”
“சொல்லுங்க ஆர்யா..”
“இது நடக்கும் போது இசை கான்ஷியஸா இல்ல தான..”
“மோஸ்ட் ப்ராபப்லி இருந்துருக்க மாட்டாங்க..”
“அப்போ எதுவும் ஞாபகம் இருக்காது தான..?”
“பெரும்பாலும் இருக்காது..” என்கவும் அவன் விழிகளில் நிம்மதி.அவனின் முகபாவம் கண்டு மெல்லிய புன்னகை கூட எழுந்தது,மருத்துவரின் இதழ்களில்.
நடந்தது எதுவும் அவளுக்கு தெரிய வேண்டாம் என நினைத்து விட்டான்,பையன்.தெரிந்தால்,அவளின் எதிர்வினை என்னவாய் இருக்கும் என்று அவனுக்கு ஊகிக்க முடியுமாய் இருந்ததே.
“இசைகு எதுவும் தெரியாது..யாரும் எதுவும் சொல்ல வேணாம்..சும்மா சாதாரணமான மயக்கம்னு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வந்ததா சொல்லுங்க..”
கட்டளை விதித்தவன்,அவள் கண் முன்னே வரவில்லை.தன்னைக் கண்டால்,அவள் ஏதேனும் யோசிக்க கூடும் என பயந்து.
தள்ளி நின்று பார்வையால் வருடினான்,அவளை.அவள் கண் விழிக்கும் வரை அவன் எழுந்து நகரவேயில்லை.
“அண்ணா வேணும்னா வந்து ஒரு தடவ பாருங்க..அவ அவ்ளோலாம் யோசிக்க மாட்டா..” அவனின் தவிப்பைக் கண்டு தாள மாட்டாமல் மித்ரா உரைத்திட,மறுப்பாய் தலையசைத்தவனின் இதழ்களில் வெறும் புன்னகை மட்டுமே.
மருந்தின் வீரியத்தில்,அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சமயம் அது.
உறக்கத்தில் இருந்தவளை,அவனின் நெடிய நிழல்,மெது மெதுவாய் நிறைத்தது.
நிழல் நிறைந்த வேகமே போதும்,அவனின் நடையின் தளர்வை உணர்த்த.
ஓசை எழுப்பாமல்,அவளருகே வந்து நின்று கொண்டான்,மார்புக்கு குறுக்கே கரங்களை கட்டியவாறு.
நுழைகையிலே,பரபரவென ஓடிய விழிகள் அவள் நிலையை ஆராய்ந்து முடித்திருக்க,இப்போது அவன் விழிகளில் சொல்லொண்ணா உணர்வுகள்.
இமைக்காத பார்வையில்,காதலை மீறிய தாய்மை.நேசத்தை மீறிய தவிப்பு.
“இசை!” அசைந்தன,அவனிதழ்கள்.அங்கு நிலவிய நிசப்தக் காற்றில் கலந்து அது அவள் செவி சேர,அவள் விழிகளில் மெல்லிய அசைவு.
இமைகள் அசைய பிரயத்தனப்பட,அதைக் கண்டு கொண்டவனின் இதழ்களில் சிறு கோட்டுப் புன்னகைப் பிரவாகம்.
விழிகள் அவளில் இருக்க,மௌனமாய் நின்றிருந்தவனுக்கு,வேறெதுவும் தேவையாகவும் இருந்திடவில்லை.
பார்வையில் வழிந்த காதலை,உரைத்திட நிச்சயம் வார்த்தைகள் இல்லை,அகராதியில்.
ஆழந்த நிசப்தம்!
இருவரின் மூச்சுக்காற்றின் ஓசை மட்டும் கேட்கும் நிசப்தம்.
நின்றிருந்தான் அவனும்,அவள் அண்மையில் சலிக்காமல்;கொஞ்சமும் அலுத்திடாமல்.
நின்றிருந்தான்,வெகு நேரம் பார்வையால் மட்டுமே வருடிய படி,அவளிடம் மௌனம் பேசிக் கொண்டு,நின்றிருந்தான் அவளின் அவனாய்!
நாழிகைகள் கரைந்திட்டன.
“சீக்ரமா வர்ரேன் என் கூட கூட்டிட்டுப் போக..அது வர பத்ரமா இருடி மா” மென்மையாய் அவன் வார்த்தைகள் அவள் செவியுரசிட,விரல்களோ அவள் கேசத்தை ஒரு முறை கோதி மீண்டன.
ஜீவனோடு அவன் உயிர்க்கூடு,அவள் வசம் இருக்க,தேகம் மட்டும் நகர்ந்திட்டது.
அவள் விழிக்கும் வரை இருந்தவனோ,அவளைப் பார்த்து விட்டு கிளம்புகையில் எதிர்ப்பட்டார்,அவளின் தந்தை.அவருடன் ஒரு வாலிபனும் இருக்க,இவனுக்கு எகிறியது.
அந்த இளைஞனோ,உள்ளே நுழைய,அவனின் தந்தையிடம் கடுகடுத்தான்,பையன்.
“எல்லார் கிட்டவும் என்னன்னு சொல்லி ஹாஸ்பிடல் கூட்டி வந்து இருக்கீங்க..?”
“ஐயா ராசா..சாதா மயக்கம்னு தான் சொன்னேன் போதுமா..நா பெத்த பொண்ண பாக்க உன் கிட்ட பர்மிஷன் வாங்க வேண்டி இருக்கு..”தலையில் அடித்துக் கொண்டு புலம்பினார்,அவர்.
“நீங்க பொண்ண பெத்ததே எனக்காகத் தான்..அப்போ பர்மிஷன் வாங்கத் தான் வேணும்..” ஏட்டிக்குப் போட்டியாய் பதில் சொல்லி விட்டு,அவன் நகர,அவனின் முதுகை வெறித்தவரின் இதழ்களில் மென்னகை.
●●●●●●●●
கன்னத்தை பிடித்தவாறு இருந்த டாக்டரைக் கண்டதும் தன்னிச்சையாய் பதட்டமாகினாள்,தென்றல்.
அவளுக்கு எதுவும் புரியவில்லை.அதுவும் அகல்யாவின் விழிகளில் தெரிந்த ஆக்ரோஷத்தில் அவள் மிரண்டு விட்டிருந்தாள்,ஒரு கணம்.
அவள் அதிர்ந்து விழிப்பதைக் கண்டு இன்னும் கோபம்,அகல்யாவுக்கு.
“ஏன் நீயும் முழிக்கிற..? எத்தன நாளா எங்கள ஏமாத்த ப்ளேன் பண்றீங்க..?” என்க,பதில் சொல்ல இயலாமல் தலைகுனிந்தனர்,இருவரும்.
டாக்டருக்கோ,தமக்கைக்கு எப்படி விடயம் தெரிந்தது என்று புரியாது போக,வாசுவைப் பார்த்தான்.
அவனோ,இல்லையென்று தலையசைத்திட,பதட்டத்துடன் நின்றிருந்த ஸ்ரீயே அனைத்தையும்உளறிக் கொட்டியிருந்தது.
அகல்யா அதட்டலுடன் கெஞ்சிட,மறுக்க இயலாமல் உண்மையை தெரிவித்திருக்க,அதுவே அவளின் கோபத்தின் முதன்மைக் காரணம்.
டாக்டரிடம் என்னவென்று விசாரித்திடாமல் அறைந்திருக்க,அவளுக்கு ஆத்திரம் அடங்க மறுத்தது.
“எவ்ளோ நம்புனேன் உங்க ரெண்டு பேரயும்..எதுக்குடா இப்டி எங்கள ஏமாத்துறீங்க..? அம்மாப்பா பத்தி யோசிச்சு பாத்தீங்களா..?”
“அதுவும் நீ..? எவனோ ஒருத்தன் வெயிட் பண்ணுன்னு சொன்னதுக்காக பைத்தியம் மாதிரி அவன் தான் வாழ்க்கன்னு நெனச்சி வெயிட் பண்ணிட்டு இருக்க..அவன் சரியானவனா இருந்தா இந்நேரத்துக்கு உன்ன தேடி வந்துருக்குனும் டி..அப்போ கூட எதுவும் சந்தேகம் வர்லியா உனக்கு..?அவன் எப்டி பட்டவனா இருக்கும்னு..” அவள் சீறி,”அக்கா வேணாம்கா..” கோபத்துடன் தடுத்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தது.
“என்ன ஏதுன்னு தெரியாத ஒருத்தனுக்காக நீ எல்லாரயும் கஷ்டப்படுத்தி கிட்டு இருக்க..வேணும்னா பாரு உன் முன்னாடி அவன் வந்து கொழந்த குட்டியோட நிப்பான்..அப்போ புரியும் எல்லாம்..” அவள் எகிற,தென்றலுக்கு இன்னும் அழுகை வலுத்தது.
அவள் எதுவும் பேசவில்லை.பேசாமல் காருக்குள் ஏறி அமர,மனமோ அவனைத் தேடிற்று.
அந்த பார்வை..
அந்த புன்னகை..
அந்த அழுத்தம்..
எதிலும்,துளியும் பொய் காண முடியாது,அவளால்.
காண்பதற்கு பொய் இருந்தாக வேண்டுமே.
எவ்வளவு உறுதியாகச் சொன்னான்,திரும்பி வருவேன் எனக்காக காத்திரு என்று.அந்த ஒற்றை வாக்கை இறுகப்பற்றி அவள் ஜீவனை கொண்டு செல்ல,அதற்குள் தான் எத்தனை வலிகளும் வேதனைகளும்..?
நினைக்கையில் அழுகை வர,விம்மி வெடித்த மனதை அடக்கிக் கொண்டு,விழி மூடி சாய்ந்து விட்டாள்,இருக்கையில்.
கரை தீட்டியிருந்த கண்ணீரைக் கண்டும் கரையாத,மனதுடன் வண்டியில் ஏறிய அகல்யாவின் பார்வை தம்பியை அனலுடன் தீண்டியது.
“இந்த கிறுக்கச்சி ஒன்னு கேட்டான்னா இந்த பைத்தியம் பண்ணுது பாரு..” திட்டியவளுக்கு இந்த விடயத்தை வீட்டில் சொல்லவும் மனமில்லை.
உள்ளுக்குள் புழுங்கியவாறு அவள் அமர்ந்திருக்க,இங்கோ டாக்டரின் விழிகள் தென்றல் மீது படிந்தது.
அதே நேரம்,
தன் முதலாளியை வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான்,ஆர்னவ்.
போகும் வழியில் அவனை விமான நிலையத்தில் விடச் சொல்லி கட்டளையிட்டிருக்க,அதை செய்து விட்டு தன் வீடு வந்திருந்தவனுக்கு,அவ்வளவு களைப்பு.
அவன் விதித்து விட்டுச் சென்றிருந்த கட்டளைகள் நினைக்கையில் இப்பொழுதே கண்ணைக் கட்ட அவனும் என்ன செய்வதாம்..?
பேசாமல் கிளம்பி இருந்தான்,முதலாளியின் வீட்டுக்கு.
காதல் தேடும்.
2025.04.26
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Very nice eagerly waiting for next episode 😊