Loading

காதலொன்று கண்டேன்!

 

தேடல் 27

 

டாக்டரோ, வாசுவிடம் இருந்து இப்படி ஒரு கேள்வியை நினைத்தும் பார்த்திராது இருக்க,வண்டியோ சடாரென நின்று போக,அதன் குலுக்கலில் கண் விழித்து இருந்தனர்,பெண்கள் மூவரும்.

 

“சித்து என்னடா..?” தூக்கக் கலக்கத்தில் அகல்யாவின் குரல் நலிந்து வந்திட,எதுவும் இல்லையென்று கூறிக் கொண்டு வண்டியைக் கிளப்பியவனோ,எதுவும் பேச வேண்டாமென்று சைகை காட்டியிருந்தான்,வாசுவிடம்.

 

அவளின் அவனின் விடயம் எப்படியென்றாலும்,அஞ்சலியைப் பற்றி தெரிய வந்திருக்க வாய்ப்பேயில்லேயே என மனம் குமைந்தது.

 

அவ்வெண்ணத்திலே வண்டியை செலுத்தியவனோ,இரவு உணவுக்காக வண்டியை நிறுத்தி இருந்தான்,ஓரிடத்தில்.

 

“இப்போ தான எட்டர..?அதுக்குள்ள எதுக்கு சாப்ட வண்டிய நிறுத்துன சித்து..”

 

“பசிக்கிது அகல்..அப்றமா பசிச்சா சாப்ட பார்சல் எடுத்துக்கலாம்..” அகல்யாவின் கேள்விக்கு பதில் மொழிந்தவனோ,பெண்கள் மூவருக்கும் உணவை எடுத்துக் கொடுத்து விட்டு,வாசுவை அழைத்துச் சென்றிருந்தான்,வெளியே.

 

“பசிக்குதுன்னு சொல்லிட்டு எதுக்கு இவனே சாப்டாம வெளில போறான்..” தலையில் அடித்துக் கொள்ளாத குறையாய் புலம்பினாள்,அகல்யா.

 

அவளின் பார்வை தனக்கு முன்னே அமர்ந்து உணவில் கவனமாக இருந்த தென்றலின் மீது படிய,அவளை ஆழம் பார்த்திடவே அழைத்தாள்,பெயர் சொல்லி.

 

“தென்றல்..”

 

“என்னக்கா..?”

 

“உனக்கு நெஜமாலுமே இந்தக் கல்யாணத்துல இஷ்டம் தான..? இல்ல எங்களுக்காக ஒத்துகிட்டு இருக்கியா..?” என்றதும்,அவள் விழிகளில் அதிர்வு தோன்றி மறைந்திட,கரங்கள் வேலை நிறுத்தம் செய்ததை தெளிவாகக் கண்டு கொண்டதில் ஒன்றே ஒன்று மட்டும் உறுதியாகிற்று,அவளுக்கு.

 

இருவருமே பேசிக் கொண்டு,தம்மிடம் இருந்து ஏதோ ஒன்றை மறைப்பது.

 

இங்கோ,

 

வாசுவின் வசவுகளை எல்லாம் அமைதியான நிர்மலமான முகத்துடன் வாங்கிக் கொண்டிருந்தான்,சித்தார்த்.டாக்டரின் வார்த்தைகள் அவன் செவியில் ஏறவே இல்லை.

 

“அஞ்சலி யாரு..?” முதலில் கேட்டிருக்க,நெற்றியைத் தடவிய டாக்டருக்கு,அதற்கு மேலும் பூட்டி வைத்திடத் தோன்றவில்லை.

 

“என்னோட எக்ஸ்..” என்றவனின் பார்வை,எங்கோ வெறித்திருந்தது.

 

“ம்ம்..எனக்கு எப்டி தெரியும்னு பாக்கறியா..?” அலட்சியமாய் கேட்டுக் கொண்டு,டாக்டரின் அலைபேசியை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்ட,லாக் உடைத்து அக்காளின் மகனுக்கு விளையாடக் கொடுத்த தன் மடத்தனத்தை முதன் முறையாய் நொந்து கொண்டான்,அவன்.

 

“துருவ் வெளயாடிட்டு உன் கிட்ட கொடுன்னு என் கிட்ட தந்தான்..உன் ஃபோன்ல டான்னு போட்டோ வந்து மெமரீஸ்னு காட்டிட்டு..” என்கவுமே,விழிகளை இறுக மூடிக் கொண்டான்,டாக்டர்.

 

“சரி உனக்கு எக்ஸ் இருந்தது ஓகே..நீ ஏன் அத யார் கிட்டவும் சொல்லல..?”

 

“அது முடிஞ்சு போன விஷயம் வாசு..இப்போ அதப் பத்தி பேசாத..நானே மூவ் ஆன் ஆகிட்டேன்..இந்தப் பேச்சு வேணாம்..” இறுக்கமாக கூறினான்,அவனை உறுத்து விழித்தவாறு.

 

“சரி அப்போ துருவ் யாரு..?”

 

“இவன் ஒருத்தன்..” உள்ளுக்குள் பொருமியவனுக்கு எப்படி சொல்வதென்கின்ற தயக்கம்.சொன்னாலும் புரிந்து கொள்வானா என்கின்ற குழப்பம்.

 

“அது தான் தென்றலுக்கு ஃபர்ஸ்ட் பாத்த மாப்பிள..மாமா கூட்டிட்டு வந்திருந்தாரு..அவரு தான்..”

 

“அப்போ தென்றலோட எக்ஸ் கரெக்டா..” என்க,அவனைப் பாராமல் மேலும் கீழும் தலையசைத்திருந்தான்,டாக்டர்.

 

அந்த பெயரைச் சொன்னதும் உடனடியாக ஏதேதோ கேள்விகள் கிளம்ப,அவற்றுக்கு விடை தேடி,எல்லாவற்றையும் கோர்த்துப் பார்த்தவனின் கண்கள் விரிந்தன.

 

“துருவ்..அவரோட சொந்த ஊரு..அது தான இது..ஸ்ரீ சொல்லியிருக்கா..அதுக்கு தான போறோம்..” பதட்டத்துடன் மொழிந்தவனின் முகத்தில் கலவரம்.

 

“ம்ம்ம்ம்ம்..”

 

“டேய் என்னடா சொல்ற..? உனக்கும் அந்த பொண்ணுக்கு கல்யாணம்னு ஒத்து கிட்டு இப்போ வீட்டாளுங்கள ஏமாத்திட்டு இங்க வர்ரீங்க..? என்ன தான் டா யோசிச்சு வச்சிருக்கீங்க..?கொழப்பாம சொல்லுடா..”

 

“இப்போதக்கி எதுவும் தெரிய வேணாம்..”

 

“அறஞ்சேன்னா கன்னம் பழுத்துரும் சித்து..அங்க உன் வீட்டாளுங்க எப்டி சந்தோஷமா இருக்காங்கன்னு தெரியுமா..?சித்தி கால் பண்ணி நீ ஒத்துகிட்டேங்குற சந்தோஷத்துல எங்கம்மா கிட்ட அழவே செஞ்சு இருக்காங்க..நீ என்னன்னா..?”

 

“என்ன மாதிரி தென்றலுக்கும் லவ் ஃபெயிலியர்..அதனால அவ என்ன நல்லா புரிஞ்சிப்பான்னு நெனச்சு தான் கல்யாணத்துக்கு ஓகே பண்ணேன்..எப்டியும் ஒரு அன்டர்ஸ்டான்டிங்க் இருக்கும்னு..”

 

“……………………”

 

“இன்ஃபாக்ட் எனக்கு அஞ்சலிக்கு அப்றம் யாரயும் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணல..ஆனா தென்றல கேட்டதும் ஓகேன்னு தோணுச்சு..என்ன மாதிரி அவளும் மூவ் ஆன் ஆகி வந்திருக்கான்னு நெனச்சு தான் ஒத்து கிட்டேன்..இல்ல அவள மூவ் ஆன் பண்ணி என் கூட வர வச்சிர்லாம்ங்குற தாட்ல தான் கல்யாணத்துக்கு சம்மதமும் சொன்னேன்..அந்த நம்பிக்கயும் இருந்துச்சு..இப்பவும் கொஞ்சமா இருக்கு..”

 

“………………….”

 

“ஆனா இப்போ அவ இன்னும், அதே பாய்ண்ட்ல தான் இருக்கா..அவ கொஞ்சம் கூட மூவ் ஆன் ஆகன மாதிரி எனக்கு தெரில..அவன் சொன்ன மாதிரி அவனுக்காக காத்து கிட்டு இருக்கா..எனக்கே லவ்வ பாத்து சம்டைம் அவன் கல்யாணம் பண்ணாம இருந்தா நல்லா இருக்கும்னு தோணும்..நார்மலா தெரிஞ்ச ஒருத்தன் மேல எப்டி இவளுக்கு இவ்ளோ லவ்னு ஷாக்காவும் இருக்கு..”

 

“…………………..”

 

“அவனுக்கு கல்யாணம் ஆயிருச்சுன்னு சொன்னாலும் அத நம்ப மாட்டேங்குறா..அதான் அவன் எங்கன்னு தேடி அவன் எப்டி இருக்கான்னு பாத்தா இவளால ஒரு முடிவுக்கு வரலாம்ல..அதான் கூட்டி வந்தேன்..அவ்ளோ தான்..”

 

“அவன் இன்னொரு கல்யாணம் பண்ணி இல்லன்னா..?”

 

“ரெண்டு பேரயும் சேத்து வச்சிட்டு நாம வெலகிக்க வேண்டியது தான்..நாம லவ் ஃபெயிலியர்னு எல்லாரயும் லவ் ஃபெயிலியர் ஆக்கனுமா என்ன..?”

 

“அப்போ என்ன கிழிக்கிறதுக்கு கல்யாணத்துக்கு ஒத்துகிட்டுச்சாம்..?” சூடு பரவியிருந்தது,அவனின் வார்த்தைகளில்.

 

“எல்லாம் என்ன பெத்தவரோடயும் அவளப் பெத்தவரோடயும் வேல தான்..”என்றவனோ,நடந்ததை சுருக்கமாக கூறி வைத்திட,யார் மீது குறை சொல்லவென்று தெரியவில்லை,வாசுவுக்கு.

 

“இது எதுவும் அகல்கு தெரியாது..அப்டியே மெய்ன்டெய்ன் பண்ணு..என்ன நடக்குதுன்னு பாப்போம்..யாருக்கு யாருன்னு கடவுள் முடிச்சு போட்டுத் தான வச்சி இருப்பாரு..ரொம்ப யோசிச்சா நமக்கு தான் ஸ்ட்ரெஸ் ஆகும்..விடு நடக்குறது நடக்கட்டும்..” பெருமூச்சுடன் உரைத்திட்ட,டாக்டருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல்,அமைதியானான் வாசு.

 

“எங்கடா போனீங்க ரெண்டு பேரும்..?” அகல்யாவின் கேள்விக்கு பொய் கூறி மழுப்பி சமாளித்து விட,உணவை முடித்துக் கொண்டு வெளியே வந்து வண்டியில் ஏறிக் கொண்டனர்.

 

டாக்டருக்கு மனதில் இருந்த பெரும் பாரம் அகன்ற நிம்மதி.யாருக்கும் தெரியாமல் அவன் சேமித்ததை வாசுவிடம் கொட்டியது,அழுத்தத்தை குறைத்து இருந்தது.

 

நினைத்தது போலவே,அவளின் அவனின் ஊரை அடைந்ததாயிற்று.ஊரின் எல்லையில் இருந்த பெயர்ப்பலகையை கண்டதுமே,அவளுக்குள் இனம் புரியா மகிழ்வு பரவின.

 

வீசும் குளிர்காற்றையும் தாண்டி,யன்னலுக்கு வெளியே தலையை நீட்டியவளின் செயல் தப்பவில்லை,ஆடவர் இருவரின் விழிகளில் இருந்தது.கோபம் இருந்தாலும்,அவள் நிலையில் இருந்து யோசிக்கையில் பாவமாகத் தான் தோன்றிற்று,வாசுவுக்கு.

 

ஆணாயினும் பெண்ணாயினும் சிலரால்,ஒரு சிலதை கடந்து வருவது அத்தனை சுலபமான விடயமாக இருப்பதில்லை.முக்கியமாக,காதல்!

 

ஒரு சிலரால் எப்போதும் அதைக் கடந்து வர முடியாது.அவர்கள் இடத்தில் வேறு யாரையும் யோசித்திடவும் இயலாது.

 

நடைமுறைக்கு பொருத்தமா இல்லையா என்று யோசிக்கும் பட்சத்தில்,உணர்வுகளின் குறுக்கீடு அவ்வெண்ணத்தை அமிழ்த்தி புதைத்திடும்.நிதர்சனம் என்பதைத் தாண்டி,அது அவர்களின் உயிருடன் ஒன்றிப் போன உணர்வுகள்.

 

அந்த உணர்வலைகளின் முன்,நிதர்சனங்களின் கோட்பாடுகள் நிர்மூலமாகிட,இயல்பான விதிமுறைகள் விலகித் தான் போகின்றன.அதில் எதையும் தவறு காண முடியாது.

 

அவரவர்க்கு அவர் அவரின் உணர்வுகள் பெரிது தான்,நுண்ணியதெனினும்.

 

விழி மூடிக் கொண்டான்,வாசு.அவளைக் காண்கையில் அவனும் பல திக்கில் யோசித்திட,அது தலை வலியைத் தந்திட்டது.

 

வண்டி நின்றதாயிற்று.

அகல்யாவுக்கு எதுவும் தெரியாவிடினும்,அவள் இறங்கிக் கொள்ளவில்லை.

 

“இவ ஃப்ரெண்ட பாத்துட்டு நாம ரெஸோர்ட்டுக்கு தான போறோம்..நாங்க கார்ல இருக்கோம்..” மகனை வைத்துக் கொண்டு அவள் சொல்ல,என்க வாசு அவளுக்கு துணையிருப்பதாய் இறங்கவில்லை.

 

அவனுக்கும் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ளும் தைரியமில்லை என்பதை விட,அதற்கு மனமில்லை என்பதே பொருத்தம்.

 

அவர்களை வற் புறுத்தாது கீழிறங்கிய டாக்டரின் விழிகள் அவ்விடத்தை சுற்றிச் சுழன்று அலசியது.அவ்வீட்டை சுற்றி பெரிதாய் வீடுகள் இல்லை.

 

நாற்புறமும் மதிலுடன் அமைக்கப்பட்டிருந்த வீடோ,நுழைவாயில் இருந்து நூறடி தொலைவில் இருந்தது.

 

கிராமமென்றும் நகரமென்றும் உரைத்திட முடியா ஊர் அது.சில இடங்களில் அருகருகே வீடுகள் இருந்தாலும்,மற்றைய இடங்களில் அப்படியல்ல.

 

அந்த இடத்தில் அந்த வீ்ட்டுடன் சேர்த்து மொத்தமே,பத்து வீடு தான்,அதுவும் அதிக இடைவெளிகளில்.ஆட்களும் ஆங்காங்கே நடமாடிக் கொண்டு தான் இருந்தனர்.

 

வீட்டுக்கு பக்கமாய்,உள்ளே செல்லும் ஒரு ஒற்றையடிப் பாதை.கம்பத்து விளக்கு அதை ஒளியூட்டிய வண்ணம் இருந்தது.

 

“இந்த வீடு தான..?”

 

“ஆமா..” என்றாள்,விழிகள் கலங்கிட.

 

“பேசாம இருந்துட்டு காலைல போலாமா..? இப்போவே பத்து மணி ஆயிடுச்சு..” கைக்கடிகாரத்தில் விழிகளை பதித்து டாக்டர் சொல்ல,முதலில் அதிர்ந்தாலும் அவன் கூற்றில் இருந்த உண்மையில் ஆமோதிப்பாய் தலையசைத்து இருந்தாள்,விழிகள் கலங்கிட.

 

அவள் ஒப்புக் கொண்டதும் டாக்டருக்கு ஒரு மாதிரி ஆகிற்று.”சரி வா..இப்போவோ போலாம்..” என்றவனோ,பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டவாறு முன்னே நடந்திட,அவளைப் பின் தொடர்ந்தவளின் கரமோ தோழியின் மணிக்கட்டை அழுத்தமாக பற்றியிருந்ததன.

 

இறுக்கமான பிடி என்றாலும் விரல்களில் மெல்லிய நடுக்கம் தெரிந்தது.தொண்டைக் குழி ஏறி இறங்கிட,விழிகளும் கலங்கிச் சிவந்திற்று.

 

சிறு நுழைவாயில் என்பதால்,அதை திறந்து உள் நுழைகையிலயே இதயம் மத்தளம் வாசிக்கத் துவங்கி விட்டிருந்தது.

 

“ரிலாக்ஸா இருடி..” என்னென்னவோ எண்ணங்கள்,மனதை மூழகடித்து அதில் பயந்திருந்தாள்,அவள்.ஆனாலும்,நம்பிக்கை இருந்தது.

 

ஆழமானதோர் நம்பிக்கை இருந்தது,தன்னை காத்திருக்கச் சொன்னவன் நிச்சயம் இன்னொரு திருமணம் செய்திருக்க மாட்டான் என்று.

 

எடுத்து வைத்திடும் ஒவ்வொரு அடிக்கும் அவள் தைரியம் தளர,அழைப்பு மணியை அழுத்தி விட்டு அவளைப் பார்த்த டாக்டருக்கு அவளின் நடுக்கும் புரிந்திட,இதழ்களில் மெல்லிய சிரிப்பு.

 

இதயம் தடதடவென்றிட,மூச்சு வாங்கியவாறு தோழியின் கரத்தை இறுகப் பற்றி,அழுத்தம் தந்து நின்றிருந்தவளின் தொண்டைக்குழி பதட்டத்தில் ஏறி இறங்க,விழிகளில் நீர்த்திரள்.

 

அவளின் தவிப்பு புரிந்தாற் போல்,கதவு திறக்கும் அரவம் கேட்டிட,எதிர் கொள்ள முடியாமல் மறு புறம் திரும்பியே நின்று விட்டாள் அவள்,நெஞ்சில் கை வைத்துக் கொண்டு.

 

எங்கே,அவனைக் கண்டால் அதீத மகிழ்வில் தனக்கு ஏதேனும் ஆகி விடுமோ என பயந்தாள்,அவள்.கன்னம் தொட்ட,கண்ணீரை துடைத்தவாறு விழி திறந்தவளோ,பட்டென திரும்பினாள்,பின்னிருந்த கேட்ட பேச்சுக்குரலில்.

 

அவள் மனம் ஏந்தியிருந்த ஏக்கங்களும் எதிர்ப்பார்ப்புக்களும் வற்றிப் போக,அவை அனைத்தும் கண்ணீருடன் கரை கடந்தது.

 

“மிஸ்டர்.துருவேந்திரன்”

 

“அப்டி யாருமே இல்லயே தம்பி..” தாடையை நீவிக் கொண்டு பதில் சொன்னார்,பெரியவர் ஒருவர்.வயது அறுபதைக் கடந்திருக்கும்.

 

அவளோ,ஒரு ஓரமாய் சென்று முகத்தை மூடிக் கொண்டு அழத் துவங்கிட,எதுவும் புரியாத நிலை தான் டாக்டருக்கு.

 

“இந்த வீடு தானா தென்றல்..? அதுக்கு உனக்கு கன்ஃபார்மா..?” என்க,அவள் கண்ணீருடன் தலையாட்ட,அதற்கு இசைந்து கொடுத்தாள்,தோழியும்.

 

“நாங்க இங்க குடி வந்து ஒரு வருஷம் தான் ஆகுது தம்பி..இந்த வீட்ல முன்ன இருந்தவங்க வீட்ட வித்துட்டு போய்ட்டாங்க..அவங்கள தான் தேடி வந்து இருக்கீங்களோ தெரியல..” உள்ளே வந்து அமரச் சொன்னவரிடம் மறுத்து,அவரிடம் விபரம் கேட்க அவரின் பதில் இதுவே.

 

“அவர பத்தி எதுவும் தெரியுமா..?”

 

“வீட்ட வாங்குனது என் பையன் தான்..அவன் ஃபாரின்ல இருக்கான்..கேக்கறதுன்னா நாளக்கி அவன் கிட்ட கேட்டு சொல்றேன்..உங்க நம்பர தாங்க தம்பி..” என்க,அவரிடம் மேலும் துருவ மனமின்றி தன் அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு,இருவரையும் அழைத்து வெளியே வந்தான்.

 

அழுதுழுது அவள் விழிகள் வீங்கியிருக்க,அவளுக்கு என்ன ஆறுதல் சொல்லிட என்று தெரியாமல்,அதை விடுத்து பேசாமல் வந்தவனுக்கு மனம் நெருடியது.

 

“ஒருவேள அவன் இவள ஏமாத்தறானோ..?” என்கின்ற எண்ணம் மனதில் முளைத்திட,அதை தனக்குள் மட்டும் வைத்துக் கொண்டான்.

 

வண்டியில் ஏறும் முன்,ஒற்றையடிப் பாதையில் ஒருவன் முதுகு காட்டி நின்றிருக்க,அவள் விழிகள் விரிந்தன.

 

விடுவிடுவென வேக நடையுடன் அவனை அணுகிட,அவளுக்கு தெரிந்தவன் தான்.அவனுடன் கண்டிருக்கிறாள்,ஓரிரு தடவை.

 

“தம்பி..” என்க,அவள் குரலில் அதிர்ந்து திரும்பியவனின் விழிகளே சொன்னது,அவளை இவ்விடம் எதிர்பாராதது.

 

“நீங்க எப்டி இருக்கீங்க..? என்ன இந்த பக்கம்..?” முயன்று தன்னை மீட்டவாறு வினவிட,அவளுக்கு அதில் ஒரு செயற்கைத தனம்.

 

“உங்க அண்ணா எங்க..?” சொல்லிவிடேன் என்கின்ற இறைஞ்சலில் கேட்டு விட,அவனுக்கு வார்த்தைகள் வரவில்லை.

 

“அண்ணாக்கு கல்யாணம் ஆயிடுச்சு நெனக்கிறேன் அக்கா..அவர் என் கூடவும் கான்டெக்ட்ல இல்ல” அவன் இழுத்துப் பிடித்து உரைத்திட,அவளுக்கு உலகமே தட்டாமாலை சுற்றியது.

 

“சும்மா வெளயாடாதீங்க தம்பி..” அவன் பேச்சை அவள் ஏற்பதாய் இல்லை.ஏற்பதற்கு கேட்பதாகவும் இல்லை.

 

அதற்கு மேல் தாமதியாமல் அவள் வந்திட,இங்கு அகல்யாவின் அறையை வாங்கி கன்னத்தை பொத்திக் கொண்டு நின்றிருந்தான்,டாக்டர்.

 

காதல் தேடும்.

 

2025.04.26

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
5
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ரெண்டும் வேற வேற கதை போல.. ஆனா ரெண்டுலயும் காதலை அழகா கவித்துவமா சொல்லியிருக்கீங்க