
காதலொன்று கண்டேன்!
தேடல் 23
(I)
கோயில் மணியோசை செவியில் அலை மோதிட,விழி திறந்தவனின் இமைகள் ஒட்டிக் கொள்ள மறந்தன,சில நொடிகளுக்கு.தேகம் மொத்தமாய் சிலிர்த்து அடங்கிட,சிலிர்ப்பின் மிச்ச மீதிகள் இதயத்தில் குறுகுறுத்தது.
நின்று போன இமையடிப்பு இயல்பாகிட,இதழ்களின் கடையில் அவனை மீறி சிறு நெளிவு தோன்றிட,விழிகளிலும் அதே புன்னகை ஒளிர,அகத்தில் அப்படியொரு நெகிழ்வு.
மீசைக்கடியில் மிளிர்ந்து,கவர்ந்திழுத்ய புன்னகையை வழமையைப் போல் மீசையுடன் இதழ் கடித்து அடக்கியவனை காணாமல் தூணருகே நின்று கதைத்துக் கொண்டிருந்தனர்,அவனின் தாயுமானவரும் அவனின் அவளும்.
அவர்கள் தெரிந்தவர்கள் போல் புன்னகை முகமாக கதைத்துக் கொண்டிருக்க,அவ்வளவு தளர்வு அவனில்.அத்தனை தூரம் அவன் நெகிழ்ந்து போவான் என்று அவனே நினைத்திருக்க மாட்டான்.
சிறு சஞ்சலம்,அப்படியே அமிழ்ந்து போக,காதலில் அடைமழை புயலுடன் அடிக்கத் துவங்கியது,இதயத்தில்.
இதழ் வழியும் புன்னகையுடன் தாயுமானவரிடன் பேசிடும் அவளைக் காணக் காண தெவிட்டவில்லை,பையனுக்கு.
அவன் காதல் அவளுக்குத் தான் என அவன் நினைப்பில் இருக்க,அதே அவன் காதல் அவளுக்கு மட்டுமே மட்டும் தான்,என உயிரில் பதிந்த நொடி அதுவாகத் தான் இருக்கும்.
அவளைப் பிடித்துப் போயிருக்கிறது என்று பதிந்து வைத்திருந்தவனின் ஜீவனில்,அவளைத் தவிர இனி யாரையும் பிடித்துப் போகாது என்கின்ற பிடிவாதம் உறைந்து தீர்த்தது,அவர்களைக் கண்டதும்.
இலேசாக தலை சரித்து,கழுத்தை வருடி சிகை கோதியவாறு,அவர்களில் அருகே வந்திட,முதலில் அவனைக் கண்டது யாழவள் தான்.
“சீனியர்..” அவள் சிறு கோட்டுப் புன்னகையுடன் அவனை அழைத்திட,வேல் முருகனுக்கும் பையனை அவ்விடத்தில் கண்டதும் சிறு அதிர்வும் பல குழப்பங்களும்.
“அப்பு” என்று அவர் இழுக்க,இருவரையும் புரியாது பார்த்து வைத்தாள்,அவள்.அவளுக்கு அவனின் தாயுமானவரைத் தெரியும் என்றாலும்,அவரை யார் என்று தெரியாது.மனிதருக்கும் அப்படியே.
“நீங்க..?” என்று அவள் இழுக்க,அதற்குள் அவனே பதில் சொல்லியிருந்தான்.
“இது எங்கப்பா..” அவளிடம் அறிமுகப் படுத்தியவனோ,அவரிடம் திரும்பி,”யாழ் எங்க காலேஜ் ஜூனியர்..” என்க அவர் விழிகள் மினுமினுத்தது.
“நீயாமா அது..?” தன்னை மீறிய அதிர்வில் அவர் கேட்டு விட,யாழவளுக்கு எதுவும் புரியவில்லை.பையனுக்கோ,ஏதேனும் உளறி விடுவாரோ என்கின்ற பயம் பிடித்துக் கொண்டது.
“அது அன்னிக்கி சத்யா உனக்கு ஃபுட்பாலால அடிச்சத சொல்லிட்டு இருந்தான்..அதான்..” என்று தோழனை கோர்த்து சமாளித்தான்,கேடியவன்.
வேல் முருகனுக்கு அவன் கூறியது எதுவும் புரியாது இருந்திட,பார்வையால் அவரை அடக்கினான்,பையன்.நல்லவேளை அவனின் விழிமொழி அறிந்து அமைதியானது.
இருவரிடமும் பேசி விட்டு அவள் வெளியேற முயல,”யாரோட போற தனியாவா..?” கறாரான கேள்வி அவனிடம் இருந்து.
அவள் யாரோ ஒருத்தியாய் இருக்கும் போதே அவளுக்காக செய்தவன்,அவனின் அவளாய் மாறிய பின்பு,பேசாமல் இருந்து விடுவானா என்ன..?
“இல்ல சீனியர்..எல்லாருக்கும் இருக்காங்க..” அவள் கை காட்டிய திசையில் அவளுக்கென இரு பெண்கள் காத்துக் கொண்டிருக்க,அப்போதும் அவன் அமைதியடையவில்லை.
“எதுல போறீங்க..?”
“கார் வரும்..” என்றிட,அவனுக்குள் சுருக்கென்றது.அவளின் அளவுக்கு தாம் வசதியில்லையோ என்று உள்ளுக்குள் எண்ணமொன்று துளிர்த்திட,அவளுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.
“மாமாவோட கார் சீனியர்..நாங்கெல்லாம் பஸ் வாசிங்க தான்..” அவனுள் உண்டாகிய தகிப்பை புரிந்து கொண்டாற் போல்,தணித்து விட பையனுக்குள் சில்லென்ற உணர்வு.
அவளறியாமல் நடந்தேறி இருந்தாலும்,அது அவனை இன்னுமே அவள் வசம் வீழ்த்தியது.
இருவரிடமும் தலையசைத்து விட்டு அவள் நகர,அதன் பின்னர் வாய் மூடவில்லை,அவனின் தாயுமானவர்.
“இதான் அந்த பொண்ணா..?”
“எந்த பொண்ணு..?” பையன் அவ்வளவு சுலபமாய் இறங்கி வருவது போல் இல்லை.
“யாழ காணோம்னு அழுதழுது சொன்னியே அந்த பொண்ணு..” சிரிப்புடன் உரைத்தார்,அவர்.அவரின் பதிலில் அவனுக்கு வாய் மூட வேண்டிய நிலை.அவர் விழிகளில் தெறித்த நக்கலில்,அவனுக்கு சங்கடம்.
அன்று தனை மறந்து சிறு பிள்ளையாய் தன்னை புலம்ப வைத்தவளை எண்ணுகையில்,மனம் முழுவதும் குளிர்மை பரவிற்று.
“என்னடா பதில் சொல்ல மாட்டேங்குற..?”
“………………….”
“என்ன நடந்தாலும் உன் மகுடத்த மட்டும் கழட்ட மாட்டியே..நீ வாய தெறந்து எதுவும் சொல்லலனாலும் எனக்கும் கொஞ்சம் விஷயம் புரியும்..”
“…………………”
“அந்த பொண்ண எனக்கு முன்னாடியே தெர்யும்..”என்க,அவனுக்குள்ளும் அதே கேள்வி தான் குடைந்தவாறு இருந்தது.”எப்டிபா..?” கேட்க துருதுருத்த நாவை அடக்கிக் கொண்டான்,பிரயத்தனத்துடன்.
“அந்த பொண்ணு வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி தான் நம்ம கட இருக்கு..அடிக்கடி சாமான் வாங்க அங்க தான் வரும்..” அவள் வீடு அந்தப் பகுதியில் இருப்பது தெரிந்தாலும்,அவன் இவ்வளவு தூரம் யோசித்தது இல்லை.
“கலகலன்னு பேசிட்டே வரும் அவ வயசு பொண்ணுங்களோட..ரொம்ப நல்ல பொண்ணுபா..மொத நா பேசுனா அளவா பேசும்..இப்போ தான் கொஞ்சமா பேசுது..நானே பலமுற யோசிச்சு இருக்கேன்..இது மாதிரி நமக்கும் ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு..”
“……………………”
“இப்போ மனசுக்கு நிம்மதியா இருக்கு..உன் படிப்பு முடிய போகுது தான..சீக்கிரம் வேலய தேடி பொண்ண வீட்டுக்கு உன் பொண்டாட்டியா கூட்டிட்டு வர்ர வழிய பாரு..” அதட்டலாய்,அவர் தன் மனதை உரைத்து விட,அலட்சிய பாவனை காட்டினாலும்,அவனுள் முகிழ்த்திருந்த நிறைவை வரிக்க வார்த்தைகள் இல்லை,அரிச்சுவடியில்.
“ஆமா அந்த பையன என்ன பண்ண..?” சத்யா,நடந்தது அனைத்தையும் கூறியிருக்க,சஞ்சய்யை பையன் விட்டு வைத்திருக்க மாட்டான் என்று தெரியும்,தாயுமானவருக்கு.
அவனோ,அவரின் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.அவனின் அமைதியில் ஆயிரம் அர்த்தங்கள்.
தாயுமானவர் அறிந்திருக்கவில்லை,கையில் கட்டுடன் முகம் பெயர்ந்து போயிருக்க,சஞ்சய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதை.
●●●●●●●
ஒரு காதல்!
ஒரே ஒரு காதல்!
உயிரில் ஊடுருவி,உணர்வுகளுடன் உள்ளத்தில் உருவெடுக்க வைத்திடும் மாற்றங்கள் எண்ணிலடங்காதது.
ஒரு காதல் என்ன செய்திடும்..? என்று கேள்வி கேட்பின்,”ஒரு காதல் என்ன தான் செய்திடாது..?” என்பதைத் தான் பதிலாகத் தந்திடும்,பாடு படுத்தும் இந்தக் காதல்.
அதே கேள்வியை பையனிடம் கேட்டால்..?
இமைகளில் நின்று,இறுக்கங்களை கொன்று,இயல்புகளை மென்று தின்னும் இந்தக் காதல்!
இசைவின்றி இணைந்து,அசைவுடன் இயைந்து,இதயத்தில் இசையுடன் இம்சை மீட்டும் இந்தக் காதல்!
உணர்வுகளை தேய வைத்து,அதை உயிருடன் தோய்த்திட்டு,ஆழங்களில் ஆயிரம் கதை பேசும் இந்தக் காதல்!
காயங்கள் தீர்த்து,வண்ணச் சாயங்கள் சேர்த்து,வாழ்வில் மாயங்கள் மாயங்கள் கோர்த்து விடும் இந்தக் காதல்!
உணர்ந்திடா தன்னை உணர்த்தி,ஜீவனில் நிறைவை புகுத்தி,நிம்மதியின் வழித்தடத்தை மௌனமாய் காட்டி விடும் இந்தக் காதல்!
அவனிடம் கேள்வி கேட்டால்,இது போல் ஆயிரமாயிரம் விளக்கங்களை மொழிந்திடும் நிலையில் தான் அவனை வைத்திருந்தது,அவள் மீதான அவனின் ஆழ் கடல் காதல்.
அவனுமே நினைத்திருக்க மாட்டான்.தனக்குள் காதல் பூக்கும் என்று.பூத்தாலும்,புயலாய் மாறி மொத்தமாய் தனை தாக்கும் என்று.
இத்தனை இத்தனை என அத்தனை மாற்றங்கள்,அவனில்;அவன் ஜீவனில்;அவன் வாழ்வியலில்;அவன் இயல்புகளில்.
அவனியல்புகளின் உயிர்ப்பே,அவனின் காதலென்று ஆகி இருந்தது;அவனின் உயிரோசை அவளுக்கென மாறியிருந்தது.
சத்யாவே,அவனின் மாற்றங்களை கண்டு வியந்து உறைந்து நின்ற பொழுதுகள் ஏராளம்.பையன் எதையும் காட்டிக் கொள்ளாமல் கடந்த தடவைகள்,தாராளம்.
அவள் மீதான அவனின் காதல் பட்டவர்த்தனமாய் தெரிந்தாலும்,அவன் இன்னும் அதை வாய் வார்த்தையாய் ஒரு முறையேனும் ஒப்புக் கொண்டிருக்கவில்லை.
எத்தனை நாட்களுக்கு தான் அவனும் எதுவும் இல்லையென்று உரைத்துத் திரிவதாம்..?
அதுவும் மாறத் தானே வேண்டும்.
நூலகத்தில் அமர்ந்து இருந்தவனின் விழிகளோ,புத்தகத்தை ஆராய்ந்திடும் சாக்கில் அடிக்கடி அவளைத் தான் ஸ்பரிசித்துக் கொண்டிருந்தன.அவன் விழிகள் அவன் பேச்சைக் கேட்கவே இல்லை.
நூலகத்தில் இருவரும் அமர்ந்து இருக்க,அவன் மேசைக்கு முன்னே இருந்த மேசையில் நேரேதிராய்,அவள்.
“உன் காதல் என்னிடம் இல்லை..
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை..” என அவளிதழ்கள் மெதுவாய் அசைந்து இசைத்திட,பையனின் மனமோ,”அது தான் முழுசா கரச்சிட்டியே..” என அவளை விழிகளுக்குள் நிரப்பி பதில் சொல்லிற்று.
அவளுக்கு அவனின் பார்வை புரியவில்லை.புரிந்தாலும்,அவனின் எல்லாம் அவள் சந்தேகம் எல்லாம் கொள்ளவே மாட்டாள்.
சில நொடிகளுக்கு பின்னர்,அவன் அப்படியே தலை வைத்துப் படுத்திட,”ஆர்யா” என கேட்ட அழைப்பில் விழி திறந்திட,கலங்கிய விழிகளுடன் அவளைப் பார்த்திருந்தாள்,அதிதி.
அவளைக் கண்டதும் கோபம் வந்தது தான்.ஆயினும் கட்டுக்குள் வைத்திருந்தான்.எல்லாம்,யாழவளுக்காக தான்.
அதிதிக்கு பையனின் மீது விருப்பம் இருப்பது அவளுக்கு ஓரளவு தெரிந்திருக்க,அதைக் கருதி அவள் அகன்றிட,பையனுக்கு எகிறிற்று.
ஆழ மூச்சிழுத்தவனோ,அதிதியைப் பார்த்திட,அவள் கலங்கிய விழிகளை சிமிட்டிவாறு அவனைப் பார்த்திருக்க,அவனோ முன்பு போல் காய்ந்து விழவில்லை.
எல்லாம்,பாவியவளின் வார்த்தைகளால் தான்.”அவங்க அவங்களுக்கு அவங்க ஃபீலிங்ஸ் பெரிசு தான..நம்ம புடிக்கலனா பக்குவமா நாம ஹேன்ட்ல் பண்ணனும்..அது தான் சஞ்சய் விஷயத்தயும் அமைதியா ஹேன்ட்ல் பண்ணலாம்னு நெனச்சேன்..”
அவள் ஒருமுறை,சஞ்சயின் விடயத்தை கேட்டு திட்டுகையில் அவன் எறிந்து விழ,தன்மையாய் அவள் உரைத்த பதிலாலே,அதிதியின் விடயத்தில் அவனில் இத்தனை நிதானம்.
டம்ளரில் இருந்த காஃபியை மிடறு மிடறாய் விழுங்கியவனோ,அதிதி பேசட்டும் என அமைதி காத்திட,அவளோ கண்ணீரைத் துடைத்தவளாய் இருக்க,இருவரையும் புரியாது பார்த்திருந்தான்,பையனின் பக்கத்தில் அமர்ந்து இருந்த தோழன்.
“என்ன எறிஞ்சு விழாம இவள உக்கார வச்சு பொறுமாய யோசிச்சிகிட்டு இருக்கான்..” மனதுக்குள் நினைத்தவனோ,காஃபியை வாயில் வைத்து உறிஞ்சிட,பையனின் வார்த்தையில் புரையேறி,அது நாசி விழியே பீய்ச்சி அடித்தது.
“சொல்லுங்க அதிதி..” அவ்வளவு தான் பையன் உரைத்தது.அதற்கே நெஞ்சைப் பிடித்து இருமலை அடக்கும் நிலைக்கு வந்திருந்தான்,தோழன்.பின்னே,அவனில் இருந்து வெளிவரும் மரியாதையான அழைப்பு அவனுக்கு திகைப்பை தராதா என்ன..?
கண்ட நாளில் இருந்து அதிதிக்கு அவன் பொழியும் வசை மாரிகள் வரிசைகட்டி வந்து போக,அவனின் மரியாதையான அழைப்பில் அவளுக்குமே நெஞ்சு வலி வராத குறை தான்.
கத்துவான் என நினைத்திருக்க,அவனிடம் இருந்து இத்தகைய நிதானத்தை இருவரும் எதிர்ப்பார்த்து இருக்கவில்லை.
“என்ன திடீர்னு மரியாதயா பேசற ஆர்யா..?இதுக்கு முன்னாடி இப்டி பேச மாட்டியே..?”
“இதுக்கு முன்னாடி என் வாழ்க்கைல எந்த பொண்ணும் இருக்கல.. நா மரியாத கொடுத்தா தான் அவங்களுக்கும் மரியாத கெடக்கும்னு என்னயே யோசிக்க வச்சு பயப்பட வக்கிற அளவுக்கு..”
அழகாய் தடுமாற்றமின்றி,கோர்வையாய் முதன் முதலாய் அவன் காதலை அவன் மொழிந்திருக்க,தோழனும் அவன் வார்த்தைகளில் உறைந்து நின்றான்.அவன் வார்த்தைகளில் இவனுக்குள் எண்ணவலைகள்.
“அவள நா லவ் பண்றேன்..” என்று அவன் உரைத்து இருந்தாலும்,இத்தனை அழகாய் இருக்காது என்றே தோன்றிற்று.
“அப்போ சத்யா நீ லவ் பண்றன்னு சொன்னது உண்மயா..?”வழிந்த கண்ணீரைத் துடைத்தவாறு கேட்டாள்,அவள்.அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாய் இருந்தது.
ஒரு நொடி அமைதி காத்தான்,பையன்.”லவ்வா என்னான்னு தெரில..பட் அவங்க கூட இருந்தா தான் என் வாழ்க்க நல்லா இருக்கும்னு தோணுது..வேலய தேடிகிட்டு போய் பொண்ணு கேக்கலாம்னு இருக்கேன்..”அப்படியே,தன் மனதை கூறியிருக்க,அவளுக்கோ அழுகை.
“நீ என்ன லவ் பண்ணுவன்னு நெனச்சிட்டு இருந்தேன்..” விம்மிக் கொண்டு சொல்ல,முன்பிருந்தவன் என்றால் அவள் கன்னம் பெயர்ந்து இருக்கும்.
“நா தான் உங்க கிட்ட புடிக்கலன்னு எத்தன தடவ சொல்லி இருப்பேன்..”
“ஆனாலும் மனசு ஓரத்துல கொஞ்சம் நம்பிக்க இருந்துச்சு..நீ என் லவ்வ ஏத்துப்பன்னு..”
“நம்மள புடிச்சவங்க மேல எல்லாம் நமக்கு லவ் வராது அதிதி..அதே மாதிரி நமக்கு ஒருத்தர புடிச்சி இருக்குங்குறதுகாகவும் அவங்க மேல லவ் வராது..”
“…………………….”
“நாம லைஃப்ல எத்தனயோ பேர சந்திப்போம்.. கடந்து வருவோம்..ஆனா யாரோ ஒருத்தர் மேல தான் நமக்கு லவ் வரும்..அது புரியுதா உங்களுக்கு..?”
“………………..”
“யாழ் கிட்ட எனக்கு தோணுன ஃபீலிங் இது வர யார் கிட்டவும் தோணுனது இல்ல..இனிமே யார் கிட்டவும் அப்டி தோணாதுன்னு நா அடிச்சு சொல்லுவேன்..”
அவளிடம் அமைதி.அவன் சொல்வதை மறுக்கவும் அவளுக்கு வழியிருக்கவில்லை.
“அழகு அறிவு பணம் ஸ்டேட்டஸ் இதெல்லாத்தயும் தாண்டி நம்ம மனசு நெறய தேடும்..அது என்னன்னு நம்மளுக்கே சரியா தெரியாது..ஆனா நம்ம நெறய தேடல் நம்ம மனசுல இருக்கும்..மனச கொடஞ்சிகிட்டே கெடக்கும்”
“………………”
“அந்த தேடல் யார் கிட்ட மொத்தமா அடங்கிப் போய் இவங்க கூட இருந்தா போதும்ங்குற ஃபீல் நமக்கு வருதோ அது தான் நம்மளுக்கானவங்க..”
“……………….”
“யாழால நா என்ன ஃபீல் பண்றேன்னு என்னால சொல்ல முடியாது..அத ஃபீல் பண்ணதான் முடியும்..அப்டி இருக்கும் அந்த ஃபீல்..நோ வர்ட்ஸ்..ஆனா அவங்கள பாக்கும் போது எனக்குள்ள வர்ர நிம்மதிய சொல்ல வார்த்த இல்ல..”
“………………..”
“காடு மலயெல்லாம் தண்ணி இல்லாம அலஞ்சு திரிஞ்சிட்டு வீட்டுக்கு வரும் போது ஒரு நிம்மதி கெடக்கும்ல..அவ்ளோ அலஞ்சு திரிஞ்சாலும் அங்க வந்ததுக்கு அப்றம் எல்லாமே மறந்து போய் ப்ரசன்டயும் ஃப்யூச்சரயும் மட்டும் நாம யோசிப்போம்ல..யாழ பாக்கும் போது எனக்கும் அப்டி தான் இருக்கு..”
“………………..”
“சொல்ல முடியாத அளவு பாரமான பாஸ்ட்..சொல்லிக்கிற அளவு ப்ரசன்டும் இல்ல..ஆனா அவங்கள பாக்கும் போது இது எதுவும் கண்ணு முன்னாடி வர்ல..அவங்க கூட என் ப்யூச்சர் எப்டி இருக்கும்ங்குற தாட் மட்டுந்தான் மனசு முழுக்க நெறஞ்சி நிக்கிது..”
“………………..”
“இது லவ்வான்னு தெரில..இது என்ன ஃபீல்னும் புரில..ஆனா இது நா ஃபீல் பண்றதுல கொஞ்சமே கொஞ்சம் தான்..வன் பர்சன்ட் கூட இருக்காது..” மீசைக்கடியில் தேங்கிய புன்னகையுடன் மொழிந்தான்,ஆத்மார்த்தமாய்.
“இது மாதிரி உங்களுக்கு என் கிட்ட தோணி இருக்கா அதிதி..?” அவனின் பேச்சில் உறைந்து போயிரு்தவளோ,அவனின் கேள்விக்கு மறுப்பாய் தலையசைத்தாள்.
“உங்களுக்கு என் மேல இருக்குறது லவ்வான்னு நீங்களே யோசிச்சு பாருங்க..ஒருவேள அட்ராக்ஷன தான் லவ்வுன்னு நீங்க நெனச்சி கிட்டு இருக்கலாம்..அதுக்குன்னு உங்க ஃபீல தா தப்புன்னு சொல்ல வர்ல..எனக்கு உங்க மேல எந்த ஃபீலும் இல்லன்னு சொல்றேன்..”
பார்த்து பார்த்து,வார்த்தைகளை கோர்த்துப் பேசினான்.எல்லாம்,அவனின் அவளால் தான்.
“உங்களுக்கு ஒருத்தர் கண்டிப்பா பொறந்து தான் இருப்பாரு அதிதி..இதே மாதிரி நீங்களும் கண்டிப்பா அவர் கிட்ட ஃபீல் பண்ணிட்டு நீங்களும் டயலாக் பேசுவீங்க பாருங்க..” என்கவும்,கண்ணீருடன் மெல்லிய புன்னகை இதழ்களில்.
“இப்டி தன்மயா உங்க கிட்ட முன்னவே பேசியிருக்கனுமோ தெரில..என் தப்பு தான் பொறுமயா எடுத்து சொல்லாம விட்டது..” அவன் குற்றவுணர்வுடன் உரைத்திட,அவளுக்கு நம்ப முடியவில்லை,இது பையன் தானா என்று.
“நான் உங்களுக்கானவன் இல்ல அதிதி..அது உண்ம..புரிஞ்சுகொள்ள ட்ரை பண்ணுங்க..நா உங்க லைஃப்ல வெறும் பாஸிங் க்ளவுட் மட்டுந்தான்..உங்களுக்குன்னு இருக்குற ஆளு அது வேற..” அவன் கத்தியிருந்தால்,அவளும் கோபப்பட்டு இருப்பாள்.அவனின் அமைதியான வார்த்தைகள்,அவளை தள்ளி விட்டது,மௌனத்தில்.
“எனிவே சாரி..எல்லாத்துக்கும் உங்களுக்கு என் மேல ஃபீல் வர்ர மாதிரி நடந்துகிட்டதுக்கு..அது தெரிஞ்சு பொறுமயா எடுத்து சொல்லாம திட்டுனதுக்கு..பொண்ணுன்னு பாக்காம கண்ணு மண்ணு தெரியாத கோவத்துல கை நீட்டினதுக்கு..ரியலி சாரி..”
அவனுக்கே,அவனின் மரியாதையின்றி நடத்தைகளை நினைக்கையில் ஒரு மாதிரி ஆகிற்று,மனதில்.
“அதுல்லாம இன்னொரு விஷயம்..நா சொன்னத யாழ் கிட்ட சொல்லிராதீங்க..அன்ட் அவங்க மேல பர்சனல் வென்ஜன்ஸ் வச்சுக்க வேணாம்..என் ஃபீலுக்கு அவங்க மேல எந்த தப்பும் இல்ல..” தணிந்த குரலில் மொழிந்த பையன்,இருவருக்கும் புதிது.
●●●●●●●●
(II)
அவளின் அவனின் பெயர் டாக்டருக்கு தெரிந்து இருந்தாலும்,இப்படி ஒரு கோணத்தில் அவன் யோசிப்பது இதுவே முதல் தடவை.
“அப்போ அது தானா துருவ் மேல அவ்ளோ அக்கற..?” எண்ணியவனுக்கு,அவளின் காதலை நினைக்கையில் வியப்புத் தான்.
அதுவும் ஓய்வறை செல்ல ஓரிடத்தில் இறங்கிய பொழுது,வாண்டை தூக்கி வைத்திருந்தவளிடம் கேலியாய் கேட்டும் விட,கண்ணீரும் புன்னகையுமாய் அவள் ஆமோதிப்பாய் தலையசைத்திட,டாக்டருக்கு மனம் பாரமானது.
அவனுமே காதல் கொண்டவன் தான்.ஆனால்,இது போல் அவன் தன் காதலையும் கண்டதில்லை.
யோசனையுடன் நெற்றியை நீவியவாறு வண்டியில் ஏறிக் கொண்டவனின் மனதில் அஞ்சலியின் நினைப்பும் வந்து கனமாக்கியது.
இங்கோ,
முதலாளியின் அறைக்குள் பயந்த இதயத்துடன் நுழைந்தான்,ஆர்னவ்.
அவனின் கோப்பை எடுத்து வரச் சொல்லி அவனே அனுப்பி வைத்திருந்தாலும்,பயமாக இருந்தது.
பயத்துடன் உள்ளே வந்து,மேசையில் இருந்த அடுக்குகளில் தேட அங்கு அகப்படவில்லை.யோசனையுடன் மேசையில் இருந்த ட்ராயரை திறந்திட,அது முழுவதும் ஜிமிக்கிகள் குவிந்து கிடக்க,இவன் விழிகள் அதிர்ந்து விரிந்தன.
காதல் தேடும்.
2025.04.24
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Intersting waiting for next episode 😊
ஆர்யாவோட காதல் ரொம்ப அழகு .. தென்றல் காதல் அதை விட அழகு